Saturday, October 24, 2015

என் பெயர் விஸ்மயா - 1 - (குறு நாவல்)

என் பெயர் விஸ்மயா
(சி.சுந்தரராமன்)

"விசூ.. சீக்கிரம் ட்ரெஸ் பண்ணிண்டு வாடா.. கோயிலுக்கு வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துரலாம்...."

"அம்மா.. இங்கே உள்ளே வா..  எனக்கு இதை  எப்படி போடறதுன்னே தெரியலே!"

"என்னடி இது பெரிய விஷயமா? கவுனைப் போடற மாதிரியே போடு"

"அம்மா... இது அவுறாதுதானே? எனக்கு என்னமோ போல் இருக்கு"

"ஒண்ணும் அவுறாதுடா... சீக்கிரம் ஜாக்கெட்டையும் மாட்டு".

"அடியே. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. பட்டுப் பாவாடை, பட்டுச் சட்டை.. தேவதை மாதிரி இருக்கடி. சீக்கிரம் போய் தாத்தா, பாட்டிக்கு நமஸ்காரம் பண்ணு. அப்பாவோட ஸ்கூட்டர்லே கிளம்பு. நானும் ரவியும் மொபெட்லே வர்றோம்."

வசுமதிக்குக்ப் பெண்ணை நினைத்துப் பெருமை பிடிபடவில்ல. ருக்மிணிப் பாட்டி மாதிரி சுருட்டையான முடி. வட்ட முகம். பொம்மை மாதிரிதான் இருக்கிறாள். அதிலும் இந்த ட்ரஸில். தானும் வேலைக்குப் போவது எவ்வளவு நல்லதாகப் போயிற்று. இல்லேன்னா இப்படி பத்தாவது பிறந்த நாளுக்கெல்லாம் பட்டுப் பாவாடையெல்லாம் நினைச்சுத்தான் பாக்க முடியுமா?"

"ஏய். விஸு. இது என்னடி ஜாக்கெட் கை இப்படி இருக்கு?"

"இதாண்டா பப் வெச்ச ஜாக்கெட். அம்மா ஸ்பெஷலா டெய்லர்கிட்டே தெக்கச் சொல்லியிருக்கான்னு நெனைக்கறேன்."

விஸ்மயா தாத்தா, பாட்டிக்கு நமஸ்காரம் செய்தாள். பாட்டி அப்பாவைக் கூப்பிட்டாள்.

"டே. அனந்தா…. கொழந்தய ஜாக்கிரதையா ஸ்கூட்டர்லே கூட்டிண்டு போ. பாவடை எல்லாம் போட்டின்ருக்கா. சரியா ஒக்காரத் தெரியாது!"

அனந்தராமன் விஸ்மயாவை கண் கொட்டாமல் பார்த்தான். தன் பெண் என்று இல்லை. விஸ்மயா உண்மையாகவே கொள்ளை அழகுதான். இன்னிக்கி பர்த்டே பேபி வேற. கேக்கணுமா. வசுமதியின் பட்டுப் பாவாடை செலக்ஷனைப் பார்த்து வியப்போ வியப்பு. நம்ம ரேஞ்சுலே இருக்ற யாரும் பத்து வயசுக் கொழந்தைகளுக்குப் பட்டுப் பாவாடையெல்லாம் எடுத்ததே இல்ல. வசுமதியின் சாமர்த்தியத்தினாலும், ரசனையாலும்தான் இதெல்லாம் முடிகிறது. மஞ்சள் நிறப் பட்டுப் பாவாடை, மஞ்சள் நிற ஜாக்கெட்டில் மாம்பழம் போல ஜொலித்தாள் விஸ்மயா. குழந்தையை பத்திரமாக கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போயிட்டு வரணுமே என்று கவலைப்பட்டான் அனந்தராமன்.

"அப்பா,..அப்பா, கொஞ்சம் நிறுத்து. சந்தர் மாமா கையை ஆட்டறார். நிறுத்தச் சொல்றார் போல இருக்கு."

"டே….. அனந்தா….. என்னடா. பாத்தும் பாக்காத மாதிரியே போற! கொழ்ந்தை சொன்னாத்தான் நிறுத்துவியாடா?"

"அதெல்லாம் இல்லடா; நிச்சியமாவே உன்னைச் சரியாப் பாக்கல."

"என்னடி விஸு. பட்டுப் பாவாடை சொக்கா எல்ல்லாம் அமக்களப்படறது"

"மாமா. எனக்கு இன்னிக்கி ஹாப்பி பர்த்டே  மாமா.."

"இருடி.. கோந்தே. இதப் பிடி…. மேனி ஹப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே”…. பர்சைத் திறந்து இருபது ரூபாய்த் தாளை விஸ்மயாவின் கையில் திணித்தார் சந்தர் மாமா.

"இந்தாங்க மாமா. சாக்லேட்...."

கோயில் நடை சாத்தி விடப் பொகிறார்கள் என்று ஸ்கூ ட்டரை விரட்டினான் அனத்தராமன். வசுமதியும், ரவியும் அதற்குள் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். வசுமதி பக்கத்தில் கொண்டை போட்டுக் கொண்டு, பெரிய கண்ணாடி அணிந்த மாமி.

"ராஜி, இவதான் என் பொண்ணூ விஸ்மயா. இன்னிக்கி பர்த்டே. அர்ச்சனை பண்ணலாம்னுட்டு வந்தோம்."

"ஹாய். ஹாப்பி பர்த்டே. ட்ரெஸ் சூ ப்பர் செலக்ஷன். பாவாடை மஞ்சளும் இல்லை. ஆரஞ்சும் இல்ல. சும்மா மாம்பழக் கலர்லே தகதகங்க்றது. நீயே செலக்ஷன் பண்ணினியா?"
"ராஜி, அவளுக்கு என்னடி தெரியும்? நானும், மாமியாரும்தான் போன வாரம் நல்லிலே போய் வாங்கினோம். பப் கை மாமியாரோட ஐடியாதான். எப்டி இருக்கு?

"சூப்பர்!.... விஸ்மயா அதிர்ஷ்டக்காரிதாதனடி. உன்ன மாதிரி ஒரு அம்மா கிடைக்க. அப்புறம்.... திருஷ்டி சுத்தி போடச் சொல்லு. ஸ்கூல்ல யாரும் பட்டுப் பாவாடையெல்லாம் போட்டுண்டு வர மாட்டா. எல்லாம் சீட்டிப் பாவாடைலேதான் வருவா. ஒரு கண்ணு மாதிரி இருக்காது."

பிறந்த நாள் அன்றைக்கு மட்டும் யூனிபார்ம் போடத் தேவையில்லை. எந்த ட்ரெஸ்ஸும் போடலாம். விஸ்மயா ஸ்கூலுக்குச் சென்றவுடன், கிளாஸ்மேட்ஸ் எல்லோரும் "ஹாப்பி பர்த்டே" பாடினார்கள். கிளாஸ் டீச்சர் வந்தவுடன் மறுபடியும் ஒரு முறை. வழக்கமாக இது மாதிரியெல்லாம் நடக்காது. பட்டுப் பாவாடை போட்டு வந்த மாணவிக்குத் தனி மரியாதை தர வெண்டும் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.

முதல் இரண்டு பீரியட் முடிந்தவுடன் கிளாஸ் டீச்சர் ஆண்டு விழா ஒத்திகைக்காக ஒவ்வொரு குரூப்பையும் பிரித்து அனுப்பினார். ரெட் ஹவுஸ், க்ரீன் ஹவுஸ், எல்லோ ஹவுஸ், ப்ளூ ஹவுஸ் எல்லோரும் பிரிந்து செல்லத் துவங்கினார்கள்.

"ஏய். விஸ்மயா!. நீ எங்க ப்ளூ ஹவுஸ்தானே? அப்புறம் எப்படி மஞ்சள் கலர் ட்ரெஸ் போட்டிருக்கே?

"அதுவா? எனக்கு பர்த்டே அதனாலதான்!"

"அதனாலென்ன? நீ ப்ளூ கலர் பாவாடை வாங்கியிருக்கலாமில்லே?"


"கரெக்ட். அகிலா சொல்வது கரெக்ட். எனக்குப் ப்ளுதானே பிடிச்ச கலர். சீட்டிப் பாவாடை வாங்கினாலும் ப்ளூ கலர்லேதானே வாங்கணும்னு நெனச்சோம். ஆனா அம்மா மஞ்சக் கலர்லே பட்டுப் பாவாடையல்லவா வாங்கியிருக்கா. மறுபடியும் ப்ளு கலர் பாவாடை வேணும்னு கேட்டா திட்டுத் தானே விழும்!

என் பெயர் விஸ்மயா - 2

என் பெயர் விஸ்மயா - 3

என் பெயர் விஸ்மயா - 4

0 comments: