Thursday, December 16, 2021

ஃபலூடா பக்கங்கள்-04

காய்கறித் தோட்டம் 



காய்கறித் தோட்டம் - மு. அருணாச்சலம் அவர்கள் எழுதியது  - சக்தி காரியாலயம்- முதல் பதிப்பு - 1945  - ஐந்தாம் பதிப்பு - 1966  விலை - 5  ரூபாய். இந்தப் புத்தகம் நான் பள்ளியிறுதி வகுப்பு படிக்கும் போது (1978) கலந்து கொண்ட பேச்சுப் போட்டியில் பரிசாகக் கிடைக்கப் பெற்றது.

கடந்த இரண்டு வருஷமாக மொட்டை மாடியில் வளர்த்த ஐம்பதுக்கும் மேற்பட்ட செடிகளை , சில மரங்களை புது வீட்டில் வைக்க முடியாத காரணத்தால், உறவினருக்கு தானம் செய்து விட்டு வந்தேன். 

ஹனி கோம்பு புத்தக அலமாரி

சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் மகர் வாங்கி வைத்திருந்த ஹனி கோம்பு புத்தக அலமாரி எனக்குத் தள்ளப்பட்டது. இதில் புத்தகங்கள் எப்படி வைப்பது என்று சரியான யோசனை சொல்லும் நபருக்கு எனது நூலகத்தில் பழுப்பேறின புத்தகம் ஒன்று பரிசாக அளிக்கப்படும். 

உற்பத்தித்   திறன்



கடந்த இரண்டு வருடங்களாக எனது உற்பத்தித்   திறன்  அதிகரித்துள்ளதுக்குக் காரணம், டிவி பார்ப்பதை நிறுத்தியதுதான். டிவி பார்ப்பது நிறுத்தியத்துக்குக் காரணம் டாட்டா ஸ்கை, டாட்டா இண்டிகா, ஜியோ போன்ற சர்வீசுகள்தான். ஏனென்றால், இந்தக் காலத்தில் டிவி பார்க்க வேண்டுமென்றால் ரெண்டு ரிமோட்டு உபயோகிக்கணுமாம். அதுவும் டிவி மேல கீழே, சைடிலேன்னு எல்லா இடத்திலும் மெனு வருவது பார்க்க அன்ஸகிக்கப்பிள். ரெண்டு ரிமோட்டு நமக்கெல்லாம் சரிப்பட்டு வராது. 

மீண்டும் புத்தக அலமாரி

(இவை எங்கள் நூலகத்தில் மூன்றில் ஒரு பங்கு)

சமீபத்தில் வீடு மாறினோமென்று சொன்னேன் அல்லவா? அப்போது சாமான்களை எடுத்து வைக்க விஜயகாந்த் பையன் மாதிரி ஒரு இளைஞன் வந்திருந்தான். ஐம்பது அறுபது கிலோ பெறுமானமுள்ள சாமான்களை அனாயசமாக ஏற்றி இறக்குவதை பார்க்க ஒரே ஆச்சர்யம். ஒவ்வொரு அறையாக காலி செய்து கொண்டு வந்தவனுக்கு எங்களது புத்தக அலமாரியைப் பாத்தவுடன் ஷாக். "இவ்வளவு புத்தகங்கள் யாரு படிக்கிறா" என்று கேட்க, மகர் உஷாராக "எங்க அப்பாதான் இதெல்லாம் வாங்கியிருக்காங்க.." என்று பதிலளித்தார். "படிக்கிறார்" என்று சொல்லவில்லை. 

இவையெல்லாம் என்ன?

  • ஓசாமஅசா      
  • கரப்பான் பூச்சி நகைக்குமோ? 
  • தத்தக்கா புத்தக்கா
  • மெயின் காட் கேட் 
  • குயிங்க் 
இவையெல்லாம் என்ன? எனது நூலகத்தில் இருக்கும் சில தமிழ்ப் புத்தகங்களின் பெயர்கள்தான் இவை. 

 டோடோவின் ரஃப் நோட்டு

இணையத்தில் சில நல்ல கவிதைகளை "டோடோவின் ரஃப் நோட்டு" என்ற தளத்தில் படிக்கலாம். இங்கே ஓரிரு சாம்பிள்கள். 


வாழ்வில் எதிர்ப்ப‌டும்

ச‌ம்ப‌வ‌ங்க‌ள்

ம‌ட்டும‌ல்ல‌

நாம் அம‌ர்ந்து

காத்திருக்கும்

பேருந்தின் ஓட்டுன‌ர்

வ‌ரும் திசையும்

ம‌ருந்து க‌டைக்கார‌ர்

மாத்திரை வெட்டும்

திசையும் கூட‌

யூகிக்க‌ முடியாது.

--------------------------

ஒன்றாக‌ப் ப‌டித்த‌ ந‌ண்ப‌ர்க‌ள்

ப‌ல‌ கால‌ம் க‌ழித்து

சேர்ந்து குடித்த‌ன‌ர்..

ஹாஸ்ட‌ல் நாட்க‌ளில்

ச‌க‌ட்டு மேனிக்கு

அடித்துப் பின்னிய

வார்ட‌ன் ஜார்ஜ் ப‌ற்றி

திட்டிய‌ப‌டியே

குடித்த‌ன‌ர்..

ச‌ற்று யோசித்து சொன்னான்

ஊரிலிருந்து வ‌ந்த‌ ஒருவ‌ன்..

இல்ல‌டா.. ஜார்ஜ் உட‌ம்புக்கு

முடியாம‌ கிட‌ந்து

யாரும் கூட‌ இல்லாம‌லேயே

செத்தாராம் என்று..

ஒரு க‌ண‌ம் யோசித்து

என்ன‌ இருந்தாலும் ஜார்ஜ்

ந‌ல்ல‌வ‌ன்டா..

இது ஜார்ஜுக்காக‌டா

என்று‌ அடுத்த‌

கிளாஸ் ஊற்ற‌ப்பட்ட‌து.

--------------------------------------


- சிமுலேஷன்

Saturday, March 28, 2020

ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம்





ஜெயலலிதா  மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் 
--------------------------------------------------------------------------------------------------

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் ஒரு முழு நீளப் புத்தகம் எழுதியிருக்கின்றார் என்ற சேதி வந்தே போதே, அதனைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டேன்.... ஜெயலலிதா, உயிருடன் இருக்கும் போதே இந்த புத்தகம் கொண்டு வர முயற்சி எடுத்து, கோர்ட்டில் தடை வாங்கப்பட்டப் புத்தகம்..... அதனாலேயே இந்தப் புத்தகம் வாங்க வேண்டுமென்ற ஆவல் இன்னமும் மிகுந்தது....  அவர் மறைவுக்குப் பின்னர் 2018 ல்  வெளியான இந்தப் புத்தகத்தை எப்போது வாங்கினேன் என்று தெரியவில்லை.... இப்போதுதான் கரோனா வைரஸ் புண்ணியத்தில் ஓரிரு நாட்கள் முன்பு படித்து முடித்தேன்..... இந்தக் காலகட்டத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படிக்க முடிவதில்லை,,,,. சோசியல் மீடியா அந்தளவுக்கு  பாதிப்பு ஏற்படுத்துகின்றது..... ஆனால் இந்த முறை எடுத்த புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு வெறியுடன் படித்து முடித்தேன். 

இந்தப் புத்தகத்தில் அப்படி என்னென்ன இருக்கின்றன என்று சொன்னால், அவை ஒரு மிகப் பெரிய பட்டியலாக இருக்கும்..... ஜெயலலிதாவின் அப்பழுக்கற்ற ஆங்கிலம், அவரது நிறைவேறாத காதல், எம்.ஜி.ஆருடன் அவருக்கு இருந்த சிக்கலான உறவு, சசிகலாவுடனான அவரது தோழமை இவையெல்லாம் இங்கே பேசப்பட்டிருக்கின்றன....... அது தவிர, அவரது ஆணவம், மூர்க்கமான கோபம், எதிரிப்பை மன்னிக்காத பழி வாங்கும் குணம், அவரது தனிமை உறவு, அடிமனத்தின் கோபம்,  பட்ட அவமானங்கள் ஆகியவையும் விரிவாக்கப் பேசப்பட்டிருக்கின்றன...... ஆண் சார்ந்த அரசியலில் ஒரு பெண் உயர்நிலைக்கு வருவது எத்தனை சிரமம் என்பது இந்த நூலை வாசித்த பின்னர் அனைவரும் உணர முடியும்..... ஜெயலலிதாவின் முன்னாள் தோழிகள் சாந்தினி, ஸ்ரீமதி ஆகியோர், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவுக்குப் பல காலஅந்தரங்க காரியதரிசியாக இருந்த சோலை, பத்திரிகையாளர் சோ ராமசாமி போன்ற பலரை மேற்கோள் காட்டி பல சுவாரசியமான விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  

இருபது வயது முதல் முப்பது வயதுக்குள்ள ஒவ்வொரு வாசகரும் ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என்று இந்த நூலின் மூலம் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்..... ஆனால், எழுபதுகளிருந்து அரசியலில் ஆர்வம் காட்டி  வரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட என்னைப் போன்ற கூட்டாளிகளுக்கு இந்தப் புத்தகம், அவ்வளவு நிறைவு அளிக்காது என்றே நம்புகின்றேன்..... காரணங்கள் பல....  இதற்கு ஆசிரியர் வாஸந்தி என்ன செய்திருக்கலாம்?

- ஆசிரியர் வாஸந்தி அவர்கள் ஜெயலலிதாவின் பால்ய கால நண்பர்களிடமிருந்து பல விபரங்கள் கேட்டுப் பெற்றதாக எழுதியுள்ளார்..... அவர்கள் பெயர்களையும் எழுதியுள்ளார்... ஆனால் அரசியல்வாதிகளின் பெயரைக் கூரும்போது, அவர்களிடம் பேட்டி எடுத்தாரா அல்லது அந்த அரசியல்வாதிகள் சொன்ன பத்திரிகைகள் வழி வந்த விஷயங்களை ஆதாரமாக எடுக்கொண்டாரா என்று தெரியவில்லை.... உதாரணமாக ஆர்.ஏ.ம்.வீரப்பன், சோலை போன்றவர்களிடமிருந்து பர்ஸ்ட் ஹேண்ட் இன்பர்மேஷன் பெற்றாரா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. 

- அடுத்தகாக ஜெயலலிதா அவர்களின் அரசியல் பயணம் 1989 ல் ஆரம்பித்து 2016  வரை என நீண்ட நெடிய வரலாறு கொண்டது......  இதில் ஆறு  முறை (1991, 2001, 2002, 2011, 2015, 2016) முதலமைச்சராக இருந்திருக்கிறார்..... இதற்கேற்ப அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டிருந்தால் (Chapterization) படிக்க இலகுவாக இருந்திக்கும்..... இப்படி செய்யாத காரணத்தினால், நாம் படிக்கும்போது இப்போது ஜெயலலிதா முதல்வரா? அல்லது எதிர்க்கட்சியா என்று புரியாமல் குழம்பிவிடுகின்றோம்..... குறிப்பாக இறுதி அத்தியாயங்களில் என்ன வழக்கு, எப்போது வருகிறது, எதில் ஜெயிக்கிறார், எதில் தோற்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாதபடி அப்படி ஒரு குழப்பம் ஏற்படுகின்றது. 

- மற்ற அல்ல அரசியல்வாதிகளையும் போலவே, ஜெயலலிதா எல்லா எதிர்க்கட்சிகளுடனும் கூட்டு வைத்திருக்கின்றார்.... எந்தக் கால கட்டத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டு வைத்திருந்தார் என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை....  அதனை ஆசிரியர் இன்னமும் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். 

- இரண்டு பாகங்கள் கொண்ட இந்த வரலாறை காலச்சுவடு ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறது..... மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள்...... ஆனால் எந்த ஒரு அத்தியாயத்திற்கும் தலைப்பே இல்லை..... தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அந்த அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கியமான விஷயம் என்னெவென்று பிடிபட்டிருக்கும்.

- ஜெயலலிதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த உறவு, சோபன் பாபுக்கும் இடையே இருந்த உறவு பற்றியெல்லாம் (ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால்) ஓரளவு வெளிப்படையாகவே எழுதிய ஆசிரியர் சில விஷயங்களையெல்லாம் அவசர கதியில் எழுதியிருப்பதாகத் தெரிகின்றது..... சில இடங்களில் ஆழ்ந்து எழுதவில்லையே என்று தெரிகின்றது.... இல்லை இது எடிட்டரின் குறையோ... அறியேன்...... உதாரணமாக, கருணாநிதிக்கு அடுத்தபடியாக எதிரியாயாக எண்ணிக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனை மீண்டும் ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் என்ற விளக்கம் கொடுக்க முடியவில்லை. நெடுந் செழியன் உள்ளிட்ட நால்வர் அணி மேல் இருந்த சினம், வெறுப்புக் கருத்துக்கள் பற்றிய விபரங்கள் போன்ற இல்லை.  திருநாவுக்கரசு அவ்வப்போது மட்டுமே வந்து போகின்றார். அவரது பங்களிப்பு என்ன, ஏன் பிறகு விரோதம் போராடினார் இவையெல்லாம் தெரிவதில்லை. 

- பத்திரிகை உலகம் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த வன்மம் பற்றி பத்திரிகையாளரான வாஸந்திக்கு பெருத்த கோபம் இருந்ததை பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றார். ஆனால் நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளுக்கு கூட ஆதரவு தெரிவிக்கின்றாரே என்ற அசூயை  வராமலில்லை. 

- அடுத்த பதிப்பு என்று ஒன்று காலச்சுவடு கொண்டு வந்தால் கண்டிப்பாக ஒரு பிற்சேர்க்கை அகராதி என்ற ஒண்றினைச் சேர்க்க வேண்டும். இதில் காலவரிசைப்படி (Chronological  order) வாழ்க்கை நிகழ்வுகள் பட்டியலிடப்பட வேண்டும். எந்தெந்த ஆண்டுகளில் முதலைவராக இருந்தார், எந்தெந்த ஆண்டுகளில் எதிரிக்கட்சித் தலைவராக இருந்தார், எப்போது யாருடன் கூடு வைத்தார் போன்ற விபரங்கள் பட்டியலாக இட்டால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.  

எடிட்டிங்கில் பல குறைகள் இருந்தாலும் எழுத்தாளர் வாஸந்தியின் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது. அதிலும் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு ஆளுமையின் வரலாற்றினை, அதுவும் பல்வேறு சென்சிடிவ் விஷயங்களை இணைத்து, அவர் உயிரோடு இருந்த கால கட்டத்திலேயே எழுவது என்பது ஒரு மாபெரும் தீரச் செயல் என்றே கூற வேண்டும்..... வாழ்க்கை வரலாறு என்றாலே காக்காய் பிடித்தல், ஜால்றா அடித்தல், என்று படித்து பழகி விட்ட தமிழ் வாசகர்களுக்கும் வாஸந்தி அவர்கள் எழுதியுள்ள "ஜெயலலிதா - மனமும் மாயையும்" ஒரு வித்தியாசமான அனுபவத்தினைத் தரும்.                 
  
நூல்                                     - ஜெயலலிதா மனமும் மாயையும்
ஆசிரியர்                           - வாஸந்தி   
பதிப்பகம்                         - காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் 
முதல் பதிப்பு                   - ஜனவரி 2018 
திருத்தப்பட்ட பதிப்பு    - ஜுலை 2018 
பக்கங்கள்                        - 342  

- சிமுலேஷன் 




Tuesday, January 14, 2020

கதை விமர்சனங்களுக்கான காணொளிப் பதிவுகள்

பலப் பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதும் வலைப்பதிவு இது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு இந்த வலைத்தளத்தில் நூல் விமர்சனம் செய்துள்ளேன். அட்டேன்க்ஷன் டெபிசியன்ஷி சின்ரோம் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்த நூல் விமர்சனங்களையே வீடியோ முறைகள் செய்தாலென்ன என்ற எண்ணத்தில் பிறந்ததுதான் "நூல்வி" என்றதொரு சேனல் ஐந்து நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் ஒவ்வொரு வீடியோவும். செய்வதாகத் திட்டம். இதுவரை இடம் பெற்றுள்ள நூல் விமர்சனங்கள் வருமாறு:-

1 . அசோகமித்திரனின் நாவலுக்கு ஒரு "ஒற்றன்" என்றால், அவரது சிறுகதைக்கு ஒரு "புலிக்க்கலஞன்" என்று சொல்லலாம். அசோகமித்திரன் ஒரு ஸ்டுடியோக் கம்பெனியில் வேலை செய்தவர் என்று அறிந்ததாலும், 1973ல் எழுதப்பட்ட இந்தக் கதையின் களமும் ஒரு ஸ்டுடியோவே என்பதாலும், இது ஒரு முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக இருக்க முடியாதென்பதும், அனுபவம் கலந்த புனைவாகவே இருக்க முடியும் என்பதும் புலனாகிறது.


2. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், வாழ்க்கையை சுவாரசியமாக்கிய விஷயங்கள் பல இருந்தன. அவை காசு செலவில்லாத மிக எளிமையானவை. அவற்றில் ஒன்றுதான், வார இதழகளில் வரும் தொடர்கதைகளை வழி மேல் விழி வைத்துப் படிப்பது. எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த சுஜாதாவின், “கரையெல்லாம் செண்பகப்பூ” படிக்கக் குடும்பமெல்லாம் போட்டி போடும். க்ரைம், விஞ்ஞானம் என்று தன்னை முத்திரை குத்தி விடக் கூடாது என்ற வகையில், கவிதை, சரித்திரம், இலக்கியம், போன்ற மற்ற பல பரிமாணங்களில் வலம் வந்தவர், நாட்டுப்புறப் பாடல்களுடன் ஊடாடி வந்த ஒரு அருமையான கதையினையும்  கிராமத்துச் சூழ்நிலையில் தந்தார். கிராமத்துச் சூழ்நிலை என்றாலும் அமானுஷ்யம், மர்மம், கிளுகிளுப்பு ஆகியவற்றிற்கு பஞ்சம் வைக்கவில்லை வாத்தியார்.



3. அரசியல்வாதிகளின் நிஜ முகங்களை அப்பட்டமாக எழுத்தில் பதிவு செய்வதில் இந்திரா பார்த்தசாரதி என்றுமே தயங்கியதில்லை. அவரது புனைவுகளில் கூட, ஊடாடியிருக்கும் நிஜங்களைக் கண்டுபிடித்துப் படிப்பது சுவாரசியமானதாக இருக்கும். அப்படியிருக்க, அரசியல் பின்னணியைக் களமாகக் கொண்ட "சுதந்தர பூமி", நாவல் அரசியல் விரும்பும் வாசகர்களைக் கவருவதில் வியப்பேதுமில்லை. சுதந்தர பூமி டெல்லி அரசியலில் உள்ள அரசியல் தரகர்கள் பற்றியும் அங்கு நடைபெறும்  உள்ளடி வேலைகள் பற்றியும் குறித்துப் பேசும் நாவல். 



4. ம.வே.சிவக்குமாரின் புகழ்பெற்ற படைப்புக்களில் "வேடந்தாங்கல்", "அப்பாவும் சில ரிக்ஷாக்காரர்களும்", "வாத்யார்" போன்றவை புகழ் பெற்றவை. இதே வரிசையில் இடம் பெற்ற இன்னமொரு கதை "பாப்கார்ன் கனவுகள்". பாப்கார்ன் எங்கு சாப்பிடுவோம்? சினிமாத் தியேட்டர்களில்தானே? ஆம். இக்கதை "கனவுத் தொழிற்சாலையான" சினிமா உலகைக் களமாகக் கொண்டது.



உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்.
நன்றி.
- சிமுலேஷன் சுந்தர்

Saturday, June 10, 2017

how did I celebrate my wife's birthday

Please come here after some time.

Saturday, December 24, 2016

விமர்சகர்



வெகு நாட்களுக்கப்புறம், கல்யாணராமனுக்கு இன்றைக்குத்தான் கொஞ்சம் டென்ஷன்  இல்லாமல் இருந்தது. இந்த மாதத்தில் மட்டும் நான்கு கச்சேரிகள் செய்து விட்டார். குசும்பனின் விமர்சனங்கள்தான் அவரை இப்போதெல்லாம் டென்ஷன் ஆக்குகின்றன. குசும்பன் போன்ற விமர்சகர்கள் இல்லாத, சாதாரண ரசிகர்கள் இல்லாத பள்ளி மாணவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் கச்சேரி, இன்று அனந்த கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில்.

இந்தக் குசும்பன் பெயருக்கேத்த மாதிரி நிறையாக குசும்ம்பு பிடித்தவர்தான். அவருடைய விமர்சனங்கள் ரொம்பவே காரசாரமாகவும், விவரமாகவும், நக்கலாகவும் இருக்கும். சும்மா மற்றவர்கள் மாதிரி கேண்டீன் எப்படி இருந்தது, பாடகர் என்ன புடவை கட்டிக்க கொண்டு வந்தார், என்றெல்லாம் எழுதி பக்கங்களை நிரப்ப மாட்டார். டெக்கனிகளாகப் பின்னிப் பெடலெடுத்து விடுவார். இந்த மாதிரித்தான் கல்யாணராமனின் கடந்த நான்கு கச்சேரிக்களையும் பின்னிக் கிழித்து விட்டார்.

இந்தக் குசும்பன் யாரென்று தெரிந்து வைத்துக் கொண்டாலாவது கொஞ்சம் மஸ்கா அடித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் புனைபெயரில் எழுதும் குசும்பன் யாரென்று எந்தக் கச்சேரியிலும்  பார்த்துக் கண்டு பிடிக்க முடியவில்லை.

போன முறை, ஆலாபனைகளைப் பாராட்டி எழுதியிருந்தாலும், ஸ்வர பிரயோகங்களில் தவறு செய்து, ஸ்ரீ ராகத்தினை மத்யமாவதியாக மாற்றி விட்டதை சுட்டிக் காட்டியியிருந்தார். அப்புறம் உச்சரிப்புப் பிழையெல்லாம் வேறு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். விமர்சனம் சரியாக இருந்தாலும், அதனை ஜீரணம் செய்யும் பக்குவம் இல்லாத கல்யாணராமனுக்கு இன்று பள்ளி மாணவர்களிடையே கச்சேரி செய்யும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி.

வெகு நாட்கள் கழித்து கல்யாணராமன், நிம்மதியாகக் கல்யாணியில் ஆலாபனையை ஆரம்பிக்க, நோட்டுப் புத்தகத்தை எடுத்து விமர்சனம்  எழுத ஆரம்பித்தான், பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் குசும்பன் என்ற குமரேஷ்.

- சிமுலேஷன்
  
 

Sunday, July 24, 2016

அமானுஷ்யன்



அது ஒரு சனிக்கிழமை மாலை! மனைவியையும், அம்மாவையும் கபாலி கோயில் வாசலில் இறக்கிவிட்டு விட்டு வாகனத்தை நிறுத்த, வாகான இடம் தேடினேன். அதிஷ்டவசமாக, அந்த பிச்சுப்பிள்ளை தெரு எனப்படும் குட்டிச் சந்தில், காரை நிறுத்த இடம் கிடைத்தது. காரை விட்டு இறங்கலாமென நினைக்கையிலேதான் அந்த ஆளைப் பார்த்தேன். பார்த்தேன் என்றால் நேருக்கு நேர் அல்ல…..காரின் ரியர்-வியூ மிர்ரர் வழியாகத்தான் பார்த்தேன். நல்ல ஆறடி உயரம்…. தடியான தேகம்…. இன்சர்ட் செய்யப்பட்ட சட்டை. ஐம்பது வயது இருக்கலாம்.
என்னுடைய காரின் பின்பகுதியில் சந்தேகமான முறையில் சாய்ந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். டாஸ்மாக் கேஸாக இருக்குமோவென நினைத்தேன். எதுவோ, என்னவோ, அவர் அப்படி சாய்ந்து நின்று கொண்டிருந்தது, சற்று சந்தேகமாகவே இருந்தது…. சரி…, இன்னிக்கு ஏதோ பிரச்னையில் மாட்டப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டேன். மொபைல் போனை எடுத்து, ரியர்வியூ மிர்ரர் வழியாகப் பார்த்துக் கொண்டேவாராத ஒரு காலை எடுத்துக் பேசுவது போல பாவலா செய்தேன்.
சில நிமிடங்களில் அந்த ஆசாமி, என் காரை விட்டு அந்தப் பக்கமாகச் சென்று நின்றார். கொஞ்சம் நிம்மதி கிடைத்தது எனக்கு. சரி காரை விட்டு இறங்கலாம் என்று எத்தனிக்கையில், அந்த ஆள் மீண்டும் எனது காரின் கதவருகே வந்தார்....இல்லை. இல்லை…. வந்து கத்த ஆரம்பித்தார்.
"சார்.. ஒங்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கா? நீங்க உண்மையிலேயே மனுஷன்தானா?”
ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
"என்ன சார்? என்ன ப்ராபளம்? எதுக்கு கத்தறீங்க?"
"சார், ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க!.... நான் ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி மயக்கம் போடப் போனேன்…. கீழே விழாம இருக்க, ஒங்க கார் மேலே சாஞ்சு நின்னேன்….ஆனா, நீங்களோ கொஞ்சம் கூடக்  கண்டுக்கல.  உங்களை மாதிரி யாரையும் பாத்ததில்லே
"சார். நானே ஒரு போன் கால்ல பிசியா இருந்தேன். உங்களை எங்க நான் பாத்தேன்?"
அவர் ஒரு நிமிஷம் முறைத்துப் பார்த்தார்.
"இது நல்லதுக்கில்ல…. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்"
கிட்டத்தட்ட சாபமாகவே சொன்னார்.
சரியான கேஸு போலிருக்கு….இந்த ஆளுடன் வாக்குவாதம் பண்ணுவது எந்த வித பிரயோசனமும் இல்லை. சரிதான் கோயிலுக்குப் போகலாமென எண்ணினேன்.
அப்போதுதான் பார்த்தேன். அந்த ஆளுக்கு வேர்வை ஊத்திக் கொண்டிருப்பதை. கொஞ்சம் படபடப்பாக வேறு மூசசு வாங்கிக் கொண்டிருந்தார்…. அவர் ஒரு சர்க்கரை நோயாளியாகவோ, அல்லது இருதய நோயாளியாகவோ இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே திரும்பப் போனேன் அவரிடம்.
"சார்…. ஒங்களுக்கு இப்படி வேர்த்து ஊத்துதுஎன்னமோ கஷ்டப்படறீங்க போலிருக்கு….. தப்பா எடுத்துக்கலேன்னா, ஒங்களை வீட்லே கொண்டு போய் விட்டுர்றேன்…. ஒங்க பேர், அட்ரஸ் கொடுக்க முடியுமா?"
"பரவாயில்ல. என் பேர் பி.க்யூ.எஸ்.எஸ். ஆர். ராவ்!...என்னைக் கூட்டிட்டுப் போக வீட்லேந்து ஆள் வர்றாங்ககவலைப்படாதீங்க"
ஆஹா!....பி.க்யூ.எஸ்.எஸ். ஆர். ராவ்!.... இந்தப் பேரைச் சொல்லிச் சொல்லியே இவருக்கு மயக்கம் வந்திருக்குமோ!
"சரி. போகட்டும்…..நான் ஒங்களுக்கு ஒரு ட்ரிங்க் வாங்கி தர்றேன். சரியா?"  
"தேவையே இல்ல….நீங்க எதுக்க்காக எனக்கு ட்ரிங்க் வாங்கித் தரணும்?"
"சார். நான் எதுவும் பெருசாப் பண்ணறேன்னு சொல்லல. நீங்க மயக்கமா இருக்கீங்க.   ஒரு ட்ரிங்க் குடிச்சாத் தேவலை."
"நான் பாத்துக்கறேன்…. நீங்க போங்க வேலையாய் பாத்துகிட்டு."
"ப்ளீஸ். சொன்னா கேளுங்க.. "
பேசிப் பேசி கிட்டத்தட்ட எனக்கே மயக்கம் வரும் போல இருந்தது. கடைசியாக என் கையில் ஒரு இருபது ரூபாய் நோட்டைத் திணித்தார்.
ஒடம்பு நல்லாட்டாலும், ஜம்பத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லைன்னு நினைத்துக் கொண்டே பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து தெற்குமாட வீதிக்கு ஓடினேன். ஓடிப் போய் ஒரு டெட்ராபேக் ட்ரிங்க் வாங்கினேன். ஐந்து நிமிடத்திற்குள் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தேன்!...ஆனால் அங்கே என் அருமை நண்பர் மாயம்!
எங்கேடா என் நண்பர், என்று பார்த்தால், சந்தின் ஒரு ஓரமாக, ஒரு சிறிய வீட்டின் முன்னால், ஒரு ஈஸிசேரில் கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வீட்டுக்காரர் ஈஸிசேர் கொடுத்து உதவியிருக்கிறார் போல. கண்கள் மூடியிருந்தாலும், அவரது வாய் என்னவோ மூணு,முணுத்துக் கொண்டிருந்தது.
மனுஷர் கண்ணைத் திறப்பதாகத் தெரியவில்லை. கையால் தட்டி எழுப்பினேன். விழித்துப் பார்த்து, "என்ன" என்றார்.
"சார். ட்ரிங்க்.... ஒங்களுக்கு..."
"என்ன ட்ரிங்க்? எனக்கு எதுக்கு?
"சார்… ஞாபகம் இல்லையா? இப்பத்தான் 10 நிமிஷம் முன்னாடி பணம் கொடுத்தீங்க"
அடுத்தது அவர் சொன்னதுதான் தூக்கி வாரிப்போட்டது!
"சார். நான் இப்ப... இன்னும் 30 நிமிஷத்திலே சாகப் போறேன். இப்ப 'விஷ்ணு சஹஸ்ரநாமம்' சொல்லிட்டிருக்கேன்…. ப்ளீஸ். என்னை விடுங்க."
என்னது. முப்பது நிமிஷத்திலே சாகப் போறாரா? இந்த ஆள் என்ன சொல்றார்?
சூரிய அஸ்தமனமாகிக் கொண்டிருந்த அந்த நேரம்விளக்குகள் எரியாத இருள் குவிந்திருந்த அந்த இடம், எல்லாமே எனக்கு ரொம்பக் குழப்பமாக இருந்தது. இந்த மாதிரி, முப்பது நிமிஷத்திலே சாகப் போற ஒரு மனுஷனப் பாக்கறது இதுதான் முதல் முறை. அவருடைய மூளைக்கு ரத்தம் சரியாகப் போகவில்லை போலிருக்கு. அதனால்தானோ இப்படியெல்லாம் ஒளறிக்கிட்டே இருக்காரே என்னமோ? நான் குழப்பத்தில் இருந்தாலும், என்னுடைய மூளை வேலை செய்தது.
"சார் இப்ப நீங்க இந்த இந்த ட்ரிங்கைக் குடிங்க. இதை நான் என் காசுல வாங்கலை. நீங்கதான் பணம் கொடுத்தீங்க!"
தயக்கத்துடன் வாங்கினார் டிரிங்கை. மட,மடவெனக் குடித்தார்.
"சரி…, நீங்க கொடுத்ததை குடிச்ச்சுட்டேன். இப்ப என்னை நிம்மதியா சாக விடுங்க…. நாளைக்கு காலைல என்னோட   போட்டொ பேப்பர்ல வரும்…. பாத்துக்குங்க!"
"சரி…. இப்ப நான் ஒங்கள வீட்லே மட்டும் கொண்டு போய் விட்டுடறேன்."
"சார், என்ன நிம்மதியா சாக விட மாட்டீங்களா? இப்ப ஒங்களுக்கு என்னதான் வேணும்?... என்ன ஏன் இப்படித் தொந்தரவு பண்றீங்க?"
இந்த முறை அவர் உரக்கவே கத்திவிட்டார்….தெருவிலுள்ள அனைவரது பார்வையும் என் மீது.
சரி. இப்ப இடத்தக் காலி பண்ணிவிட்டு கபாலீஸ்வரரைப் பார்க்கப் போலாமென முடிவு செய்தேன். கோயிலுக்குச் சென்று என் நண்பருக்காகவும் பிரார்த்தனை செய்தேன். அன்று இரவு நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டேன்! எப்படா பேப்பர் வருமென்று காத்துக் கொண்டிருந்தேன். பேப்பர் வந்தவுடன் முதலில் ஆபிச்சுரி காலத்தை மேய்ந்தேன். ஒவ்வொரு பேராகப்பார்த்துக் கொண்டே வந்தேன். ரங்கா ராவ்’, ‘ராமா ராவ் என இரண்டு ராவ் பெயர்கள் இருந்ததே தவிர, என் நண்பர் பெயர் இல்லை.
சற்று நிம்மதி அடைந்தவனாக, முதல் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்!... இரண்டாம் பக்கத்தைப் புரட்டினவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. உண்மையில் ஆச்சர்யம் அல்ல!...அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு பெரிய புகைப்படம்! ஆம்! நீங்கள் நினைத்தது சரிதான். அது பி.க்யூ.எஸ்.எஸ்.ஆர்.ராவேதான். அதுவும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்  பக்கத்தில். புகைப்படத்துக்குக் கீழே எழுதியிருந்தது.
"நேற்று மாலை, புது டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்சசி ஒன்றில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இந்தியாவின் தலைசிறந்த பாரா-நார்மல் சயிண்டிஸ்ட் பி.க்யூ.எஸ்.எஸ்.ஆர்.ராவ் அவர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார்.”
அப்ப நேற்று நான் பார்த்தது!


Saturday, July 02, 2016

மோப்பத் குழையும் அனிச்சம்

Wednesday, May 11, 2016

ஆரஞ்சு மிட்டாய் ஆராவமுதன்

எம்.எல்.ஏவாக இருந்த ஆராவமுதன் ஆடி அமாவாசையன்று அதிர்ஷ்டம் அடித்து, அமைச்சரானார். கவர்னர் மாளிகையில் பதவியேற்ற மறு நாளே குல தெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்குப் பயணித்தார். ஆராவமுதன் அமைச்சராகி விட்டார் என்றதுமே பாரியூர் பரபரப்பாகி விட்டது. அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழாவுக்கு எற்பாடு செய்து விட்டார்கள். 

பள்ளியின் ப்யூன் முதல் தலைமை ஆசிரியர் வரை பாராட்டு விழாவில் பரவசமாய் இருந்தார்கள். அதிலும் தமிழ் ஆசிரியர் தங்கதுரைக்கு ஒரே மகிழ்ச்சி.  ஆம். அவர்தான் மூன்றண்டுகள் ஆராவமுதனுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர். அவர் பத்தாம் வகுப்பில் ஆசிரியராக இருந்த போது நடந்த நிகழ்ச்சி, நினைவுக்கு வந்தது. அதனைப் பற்றி மேடையில் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டுமென்று எண்ணினார்.

"ஆசிரியர்களே! மாணவர்களே! இங்கே நம்மிடையே அமர்ந்துள்ள அமைச்சர் ஆராவமுதன் நம் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தலைமைப் பண்புகள் நிரம்பியவராக இருந்தவர். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு நாள், நான் ஒரு கண்ணாடி பாட்டில் முழுவதும் மிட்டாய் நிரப்பி வகுப்புக்குக் கொண்டு வந்து அலமாரியில் வைத்தேன். மாணவர்களிடம் "இந்த சீல் செய்த பாட்டிலில் எத்தனை மிட்டாய் இருக்கின்றது என்று நாளைக்குள் சரியாக கணித்துச் சொல்பவர்தான் மாணவர் தலைவர். மற்றபடி மாணவர் தலைவர் பதவிக்கு தேர்தல் எதுவும் கிடையாதுஎன்றேன். மாணவர்களும் அதற்கு ஒத்துக் கொண்டு ஆளாளுக்கு வாய்க்கு வந்த எண்ணைச் சொன்னர்கள். ஆனால் ஆராவமுதன் மட்டுமே மிகச் சரியாக 135 என்று சொன்னார். அவனுடைய ஊகத்தையும், மிகச் சரியாக கணிக்கும் திறனையும் கண்டு வியந்து போனேன். அன்று வகுப்புக்கு மாணவர் தலைவரான ஆராவமுதன், பள்ளிக்கும் மாணவர் தலைவரானார்."

பாராட்டு விழாவில் தமிழ் ஆசிரியர், தலைமை ஆசிரியர் என ஒவ்வொருவராகப் புகழ்ந்து கொண்டே போனார்கள்.

சென்னை வரும் வழியில் ஆராவமுதன் மனைவி கேட்டார்.

"அது எப்படிங்க, ஸ்கூல்ல இருக்கும் போதுபாட்டில்ல இருக்கிற மிட்டாய கரெக்டா கண்டு பிடிச்சீங்க? தமிழ் வாத்யார் கேட்ட கேள்விங்கரதுனால  திருக்குறள் அதிகாரம் 135ன்னு கெஸ்பண்ணீங்களா?"


"அடியே! திருக்குறள்ல 133 அதிக்கரம் தானடி! 135 அதிகாரம் கிடையாது! நான் கண்டு பிடிச்சது ரொம்ப சிம்பிள். தமிழ் வாத்யார் வாங்கிட்டு வந்த பாட்டில் மாதிரியே ஒண்ணு புதுசா வாங்கி, அவர் வாங்கின அதே ஆரஞ்சு மிட்டாயப் போட்டு ரொப்பி, சீல் பண்ணி, கிளாசுக்கு எடுத்துகிட்டு போனேன். யாரும் பாக்காதப்ப  பாட்டிலை மாத்திட்டேன். நான் ரொப்பின பாட்டில்ல எவ்வளவு மிட்டாய் இருக்கும்னு எனக்குத் தெரியாதா?"


- சிமுலேஷன்

Wednesday, May 04, 2016

யாருக்கு ஓட்டுப்போடலாம்? - சுஜாதா சொன்ன யோசனைகள் சரிதானா?


ஐ.டி கார்டு இல்லையென்றாலும் வோட்டுப் போடலாம்... போட வேண்டும். யாருக்கு என்று என்னைக் கேட்டாலும், கீழ்க்காணும் காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

·         இருப்பதற்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள்.
//படித்த மற்றும் இளைய அரசியல்வாதிகள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ததற்கு சமீபத்தில் பல ஆதாரங்கள் உள்ளன. படிப்புக்கும், வயதுக்கும் ஊழல் செய்வதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.//
·         சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டி.வி-யில் பார்த்தால் போதாது, முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள். 
//வெளியிலிருந்து விதைக்கப்பட்டவர் தொகுதிக்கு எதுவும் செய்ய மாட்டார். உள்ளூர்க்காரர்தான் விழுந்து, விழுந்து வேலை செய்வார் என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை.//
·         உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி, மக்கள், டிரைவர், வேலைக்காரி, அல்சேஷன் எல்லோருக்கும் சொல்லலாம். 

//அரசியல் பேசுவது என்றாலே அலர்ஜியாக ஓடும் குடும்பத்தாரும் சுற்றுப்பட்டவர்களிடமும் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்று சொல்லக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.//
·         உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்குப் போடுங்கள். முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்தபட்சமாவது ஆதரிக்க வேண்டியவர்கள். மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் மேனகா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி, மார்கரெட் ஆல்வா, மாயாவதி, ஏன்... பூலான்தேவி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அலங்காரத்துக்கு நிற்கும் சினிமா நடிகைகளைத் தவிர்க்கவும். பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகாவிலாவது டெபுடி அசிஸ்டெண்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்துத் தொலைப்பார்கள்.

//சொர்ணாக்காவாக இருந்தாலும் பரவாயில்லையா?//
·        
சுயேச்சை வேட்பாளர்களுக்குப் போடாதீர்கள். வேஸ்ட்.

//வேஸ்ட் என்றால் என்ன? வெற்றி வாய்ப்புக் குறைவானவர்களா? தகுதியான வேட்பாளர்களாக இருந்து வெற்றி வாய்ப்புக் குறைவாக இருக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வோட்டுப் போடக் கூடாதா?//

http://www.vikatan.com/news/miscellaneous/63527-for-whom-do-we-vote-writer-sujathas-suggestion.art

சிமுலேஷன்