Thursday, December 16, 2021

ஃபலூடா பக்கங்கள்-04

காய்கறித் தோட்டம் 



காய்கறித் தோட்டம் - மு. அருணாச்சலம் அவர்கள் எழுதியது  - சக்தி காரியாலயம்- முதல் பதிப்பு - 1945  - ஐந்தாம் பதிப்பு - 1966  விலை - 5  ரூபாய். இந்தப் புத்தகம் நான் பள்ளியிறுதி வகுப்பு படிக்கும் போது (1978) கலந்து கொண்ட பேச்சுப் போட்டியில் பரிசாகக் கிடைக்கப் பெற்றது.

கடந்த இரண்டு வருஷமாக மொட்டை மாடியில் வளர்த்த ஐம்பதுக்கும் மேற்பட்ட செடிகளை , சில மரங்களை புது வீட்டில் வைக்க முடியாத காரணத்தால், உறவினருக்கு தானம் செய்து விட்டு வந்தேன். 

ஹனி கோம்பு புத்தக அலமாரி

சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் மகர் வாங்கி வைத்திருந்த ஹனி கோம்பு புத்தக அலமாரி எனக்குத் தள்ளப்பட்டது. இதில் புத்தகங்கள் எப்படி வைப்பது என்று சரியான யோசனை சொல்லும் நபருக்கு எனது நூலகத்தில் பழுப்பேறின புத்தகம் ஒன்று பரிசாக அளிக்கப்படும். 

உற்பத்தித்   திறன்



கடந்த இரண்டு வருடங்களாக எனது உற்பத்தித்   திறன்  அதிகரித்துள்ளதுக்குக் காரணம், டிவி பார்ப்பதை நிறுத்தியதுதான். டிவி பார்ப்பது நிறுத்தியத்துக்குக் காரணம் டாட்டா ஸ்கை, டாட்டா இண்டிகா, ஜியோ போன்ற சர்வீசுகள்தான். ஏனென்றால், இந்தக் காலத்தில் டிவி பார்க்க வேண்டுமென்றால் ரெண்டு ரிமோட்டு உபயோகிக்கணுமாம். அதுவும் டிவி மேல கீழே, சைடிலேன்னு எல்லா இடத்திலும் மெனு வருவது பார்க்க அன்ஸகிக்கப்பிள். ரெண்டு ரிமோட்டு நமக்கெல்லாம் சரிப்பட்டு வராது. 

மீண்டும் புத்தக அலமாரி

(இவை எங்கள் நூலகத்தில் மூன்றில் ஒரு பங்கு)

சமீபத்தில் வீடு மாறினோமென்று சொன்னேன் அல்லவா? அப்போது சாமான்களை எடுத்து வைக்க விஜயகாந்த் பையன் மாதிரி ஒரு இளைஞன் வந்திருந்தான். ஐம்பது அறுபது கிலோ பெறுமானமுள்ள சாமான்களை அனாயசமாக ஏற்றி இறக்குவதை பார்க்க ஒரே ஆச்சர்யம். ஒவ்வொரு அறையாக காலி செய்து கொண்டு வந்தவனுக்கு எங்களது புத்தக அலமாரியைப் பாத்தவுடன் ஷாக். "இவ்வளவு புத்தகங்கள் யாரு படிக்கிறா" என்று கேட்க, மகர் உஷாராக "எங்க அப்பாதான் இதெல்லாம் வாங்கியிருக்காங்க.." என்று பதிலளித்தார். "படிக்கிறார்" என்று சொல்லவில்லை. 

இவையெல்லாம் என்ன?

  • ஓசாமஅசா      
  • கரப்பான் பூச்சி நகைக்குமோ? 
  • தத்தக்கா புத்தக்கா
  • மெயின் காட் கேட் 
  • குயிங்க் 
இவையெல்லாம் என்ன? எனது நூலகத்தில் இருக்கும் சில தமிழ்ப் புத்தகங்களின் பெயர்கள்தான் இவை. 

 டோடோவின் ரஃப் நோட்டு

இணையத்தில் சில நல்ல கவிதைகளை "டோடோவின் ரஃப் நோட்டு" என்ற தளத்தில் படிக்கலாம். இங்கே ஓரிரு சாம்பிள்கள். 


வாழ்வில் எதிர்ப்ப‌டும்

ச‌ம்ப‌வ‌ங்க‌ள்

ம‌ட்டும‌ல்ல‌

நாம் அம‌ர்ந்து

காத்திருக்கும்

பேருந்தின் ஓட்டுன‌ர்

வ‌ரும் திசையும்

ம‌ருந்து க‌டைக்கார‌ர்

மாத்திரை வெட்டும்

திசையும் கூட‌

யூகிக்க‌ முடியாது.

--------------------------

ஒன்றாக‌ப் ப‌டித்த‌ ந‌ண்ப‌ர்க‌ள்

ப‌ல‌ கால‌ம் க‌ழித்து

சேர்ந்து குடித்த‌ன‌ர்..

ஹாஸ்ட‌ல் நாட்க‌ளில்

ச‌க‌ட்டு மேனிக்கு

அடித்துப் பின்னிய

வார்ட‌ன் ஜார்ஜ் ப‌ற்றி

திட்டிய‌ப‌டியே

குடித்த‌ன‌ர்..

ச‌ற்று யோசித்து சொன்னான்

ஊரிலிருந்து வ‌ந்த‌ ஒருவ‌ன்..

இல்ல‌டா.. ஜார்ஜ் உட‌ம்புக்கு

முடியாம‌ கிட‌ந்து

யாரும் கூட‌ இல்லாம‌லேயே

செத்தாராம் என்று..

ஒரு க‌ண‌ம் யோசித்து

என்ன‌ இருந்தாலும் ஜார்ஜ்

ந‌ல்ல‌வ‌ன்டா..

இது ஜார்ஜுக்காக‌டா

என்று‌ அடுத்த‌

கிளாஸ் ஊற்ற‌ப்பட்ட‌து.

--------------------------------------


- சிமுலேஷன்