கடலூர் சுப்ரமணியம் என்ற இசைக்கலைஞர் ஒரு வாக்கேயக்காரரும் கூட. அதாவது பாடல்களெல்லாம் இயற்றி, அதனைக் கச்சேரியில் பாடுவதிலும் புலமை பெற்றவர். 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்களை இயற்றிய ஒரு சிலரில் அவரும் ஒருவர். மோஹரஞ்சனி, ஹம்ஸவாகினி, த்வைத சிந்தாமணி, மனேஹம், மேச காந்தாரி, வர்ணப்ரியா, கதரமு போன்ற அபூர்வ ராகங்களிலும், மேலும் மற்றைய ராகங்களிலும் 500 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். பாடலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெயரைக் கொண்டு 'பாடலீச' என்ற முத்திரையை இவர்தம் கீர்த்தனைகளில் வைத்துள்ளார்.
கடலூர் சுப்ரமணியம் அவர்கள் எனது தந்தையாருடன் அண்ணமலைப் பல்கலைகழகத்தில் ஒன்றாகப் படித்தவர். இருவரும் சேர்ந்து ஒரு முறை "தலைகீழ் சங்கீதம்" என்ற புதுமையான நிகழ்ச்சி நடத்தினார்கள். பிறகு "Constantinople" என்ற பதத்தினை எடுத்துக் கொண்டு, அதனை RTP ஆகவும் பாடி கரகோஷம் வாங்கினார்களாம். இதனை அவரே தமது "இசைத் தென்றல்" என்ற புத்தகத்தில் எடுத்துக் குறியுள்ளார். கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கும் மேலான அந்தப் புத்தகத்தினை பார்க்கும்போது அப்பாவின் நினைவு வருகின்றது.








