Friday, June 18, 2010

கல்யாணச் சாப்பாடு போடவா?


"கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்" என்கிறது பழமொழி. வீடு கட்டுவதற்கு நிகரான ஒரு பெரிய நிகழ்வு, கல்யாணம் என்பது. இன்றைய தினம் ஒரு நடுத்தரக் குடும்பத்தினை எடுத்து கொண்டால், பெண்ணைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் திருமணத்திற்காகக் குறைந்தபட்சம் 8 முதல் 10 லட்சங்கள் வரை செலவழிக்கின்றார்கள். இந்தச் செலவுகளில், பெண்ணுக்குகுப் போடப்படும் தங்க நகைகளுக்கு ஏற்படும் செலவுகளுக்கு அடுத்தபடியான மிகப் பெரிய செலவு, சாப்பாட்டுச் செலவாகும். பெரும்பாலோனோர் இதற்கு மட்டுமே கிட்டத்தட்டை 3 முதல் 4 லட்சங்கள் வரை செலவழிக்கின்றார்கள். 2 அல்லது 3 நாடகள் நடக்கும் கல்யாணமாக இருந்தால் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புச் சடங்கு, மறுநாள் திருமணம், ரிசப்ஷன், அதற்கு அடுத்த நாள் கட்டுச்சாதக் கூடை வரை இந்தச் சாப்பாட்டுச் செலவு தொடரும்.

ஒவ்வொரு வேளை சாப்பாட்டின்போதும், ஒன்றுக்கும் மேற்பட்ட இனிப்புக்களும் 20க்கும் மேற்பட்ட பதார்த்தங்களும் பறிமாறப்படும். எதற்காக இப்படி செலவு செய்ய வேண்டும்? கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடிவதில் தப்பில்லைதான். ஆசையாய் வளர்த்த ஒரே செல்ல மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்புவது பெற்றோர்களின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் அது பயனுள்ள முறையில் செலவிடப்பட வேண்டும். மாறாக பெரும்பாலான நேரங்களில் சாப்பிட வேண்டிய பதார்த்தங்கள் குப்பைத் தொட்டிக்குப் போகும்போது மனதை நெருடுகின்றது.

திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கு சில மணி நேரம் முன்பு பஜ்ஜி வகையறாக்கள் பறிமாறப்படும். இன்னம் சில மணி நேரங்களில் இரவு விருந்தில் பாதாம் கீர் உட்பட வெஜிடபுள் புலவு, குருமா, தோசை ஐட்டங்கள் என்று தடல்புடலாக இருக்கும். இத்தனையும் சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆவதற்குள் மறுநாள் காலை டிபன் செய்யப் போனால், அங்கே இட்லி, பொங்கல், வடை, சுடச்சுட வார்த்த தோசை, அப்புறம் அசோகா அல்வா என்று மீண்டும் வயிற்றை நிரப்புவார்கள். மீண்டும் சில மணி நேரங்களில் உண்மையான கல்யாணச் சாப்பாடு. இரவு ரிசப்ஷன் முடிந்து மீண்டும் ஒரு தடபுடலான சாப்பாடு. இத்தனை சாப்பிட்டலும், கடைசியில் அனைவரும் விரும்புவது மறுநாள் கட்டுசாதக் கூடையன்று போடப்படும் வத்தக் குழம்பு சாதம்தான்.

"சாப்பாடு பலே", "பேஷ், பேஷ்", "அட்டகாசம். அமர்க்களம்", "சமையல் மாமாவின் கார்டு கொடுங்கோ", என்றெல்லாம் வந்திருந்தோர் பாராட்டிப் பேசும்போது பெண்ணைப் பெற்றவர்களுக்குப் பெருமையும், திருப்தியும் உண்டாவது இயற்கைதான். இருந்தாலும், இத்தகைய விருந்துகளில் சாப்பிடப்படாமல் எறியப்படும் உணவு வகைகளை யாரேனும் உற்று நோக்கினால், ரத்தக் கண்ணீரே வரும். அதிலும், டயபடீஸ் உள்ள பெருசுகள், தாங்கள் சாப்பிட மாட்டோம் என்று தெரிந்த பின்னரும், இனிப்பு வகையறாக்கள் பறிமாரப்படும்போது "வேண்டாம்" என்று தடுப்பதில்லை. ஒரு முழு ஜிலேபியோ அல்லது ஒரு முழு பாதுஷாவோ தொடப்படாமல் அப்படியே குப்பைத் தொட்டிக்குப் போகும். விசு கூட ஒரு படத்தில் இதனைத் தத்ரூபமாகக் காட்டியிருப்பார்.

"எதற்காக இத்தனை வகைகள் பறிமாருகின்றீர்கள்? ஏன் இவ்வளவு ஆடம்பரம்?" என்று எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்கும்போது அவர்களிடமிருந்து வந்த பதில் என்னவென்றால், "சமையல் காண்டிராக்டர்தான் இந்த மெனுவினை சிபாரிசு செய்தது. இந்த மெனுவுக்குக் குறைவாக ஆர்டர் எடுத்துக் கொள்வதில்லை, என்கிறார்கள். "நாங்கள் என்ன செய்ய முடியும்?", என்றும் சொல்கிறார்கள். ஒரு கல்யாண சாப்பாட்டிற்கு 20 அல்லது 25 ஐட்டங்கள் பறிமாறினால்தானே அதற்கு 150 முதல் 200 ரூபாய் வரை கறக்க முடியும். அதனால்தானோ என்னவோ, இந்தச் சமையல் காண்டிராக்டர்கள் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டது போல, அவர்கள் வைப்பதுதான் மெனு, அவர்கள் வைப்பதுதான் ரேட்டு, என்று செயல்படுகிறார்கள். "உங்கள் பட்ஜெட் என்ன? அதற்கேற்ற மெனுவைச் சொல்லுகிறேன்", என்று சொல்லும் சமையல் காண்டிராக்டர்கள் இன்று மிகக் குறைவே.

இன்றைய ஆடம்பர உலகில், சிம்பிளான மெனுவுடன் கூடிய சாப்பாடு போட வேண்டுமென்று சொன்னால் யாரும் கேட்கப் போவதில்லை, பெண்ணைப் பெற்றவர்கள் உட்பட. (1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில், எந்த ஒரு திருமணத்திலும் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட வேண்டும் என்று ஒர் சட்டம் போடப்பட்டு அந்தச் சட்டம் அமலுக்கும் வந்த விஷயம் இன்றைய தலைமுறை அறியாத ஒரு காமெடி).

உணவுப் பொருட்கள் வீணாகக் குப்பையில் போகாமலிருக்க, ஒவ்வொரு திருமண மண்டபங்களின் உணவுக் கூடங்களிலும் "உணவுப் பொருட்களை வீணாக்காதீர்" என்று எழுதச் சொல்லி அரசாங்க ஆணை பிறப்பித்தால் விழிப்புணர்வு ஏற்படுமா? எதிர்பார்த்த பலன் இருக்குமா? அல்லது இதை விட மேலான யோசனை உங்களுக்கு தெரிந்தால்தான் சொல்லுங்களேன்.


- சிமுலேஷன்