Sunday, March 14, 2010

போலிச் சாமியாரும் வேண்டாம்; நல்ல சாமியாரும் வேண்டாம்

சமீப காலங்களில் வரும் போலிச்சாமியார்களைக் "குறி" வைத்து வரும் செய்திகளைப் படிக்கும் பலரும், இந்த மாதிரி ஆசாமிகளால், நல்ல சாமியார்களுக்கும் கெட்ட பெயர் என்று சொல்லி வருகின்றனர். நல்ல சாமியார் யார்? போலிச் சாமியார் யார்?" என்று கேட்டால், சுலபமாக "மாட்டிக் கொண்டவர் போலிச்சாமியார்", என்றும் "மாட்டிக் கொள்ளாதவர் நல்ல சாமியார்" என்றும் கூறிவிடலாம்.

போலியோ, அசலோ, மக்ககள் எதற்காக இவர்கள் பின்னே போகின்றனர்?  மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு சாமியார்கள், பீடாதிபதிகள், ஸ்வாமிஜிக்கள் தீர்வு தருவார்கள் என்றே செல்கின்றார்கள் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையிலேயே பிரச்னைகளுக்காக இவர்களிடம் செல்லும் மக்களின் விழுக்காடு மிகக் குறைவே என்று எண்ணுகின்றேன். அப்படியானால் பின்னர் பெரும்பான்மை மக்கள் எதற்காக இவர்கள் பின்னே செல்கின்றனர்?

உளவியலாளர் மாஸ்லோவ் அவர்களின் "தேவைகளின் படிநிலை" (Maslow's Hierarchy of Needs) தத்துவத்தின்படி மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்தபடியாக ஆசைப்படுவது, குழுவில் ஒட்டிக் கொள்ளும் குணமாகும். அந்தக் குழு 'லயன்ஸ் கிளப்'பாக இருக்கலாம்; "ரோட்டரி கிளப்'பாக இருக்கலாம்; "ஆசிரியர் கூட்டணி" யாக இருக்கலாம்; "அமைந்த கரை ஆட்டோ ஒட்டுநர் சங்கமா"க இருக்கலாம்; அல்லது கோயம்பேடு அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கமாக இருக்கலாம். அதிலும் அடிப்படை உறுப்பினராக மட்டும் இல்லாமல், ஏதேனும் ஒரு இணை, துணை, பொதுச் செயலாளராகவோ அல்லது செயல் குழு உறுப்பினராகவோ இருத்தல் சிறப்பு. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு அமைப்பிலும் உறுப்பினராக ஒரு தகுதி  வேண்டும். (ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், அழுகும் பொருள் வியாபாரி போன்று). இந்த மாதிரி எந்தத் தகுதியும் இல்லாத மனிதர்களை வரவேற்க இருக்கும் புகலிடங்கள் இரண்டே இரண்டு. ஒன்று அரசியல். மற்றொன்று ஆன்மிகம். நம்மில் பெரும்பாலான காமன் மேன்க்ளுக்கு, ஆசிட் வீச்சு, ஆட்டோ பயம் காரணமாக,  அரசியல் என்றாலே அலர்ஜியாகிவிடுகின்றது. எனவே எளிதான புகலிடம் ஆன்மீகம் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் எனப்படும் சாமியார்கள், ஸ்வாமிஜிக்கள், குருஜிக்கள் மற்றும் பீடாதிபதிகள்.

இந்த மாதிரி "மனிதர்களிடம்" போகப் போக, ஏற்படும் மாற்றங்கள்தான் என்னென்ன?

  • அலுவலகப் பணியில் ஈடுபட்டாலும், மனதில் எப்போது குருவையே நினைத்துக் கொண்டிருத்தல்.
  • தனது முன்னோர்கள் கும்பிட்ட தெய்வங்களைப் புறந்தள்ளிவிட்டு, குருஜி புகைப்படம் பொருந்திய "ஸ்டிக்கரை', க்ளாசட் தவிர, வீட்டு வாசப்படி, அலுவலக மேஜை, கார் கண்ணாடி, பர்ஸ், டெஸ்க் டாப் மானிட்டர் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஒட்டி "நான் இன்னார் சீடன்; நான் இன்ன குழு உறுப்பினன்" என்று பறை சாட்டிக் கொண்டிருத்தல்.
  • "தனது பையன் வெளிநாடு போக வேண்டுமா? எந்தத் தேதியிலே விசா அப்ளிகேஷன் வாங்க வேண்டும்? மகள் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' படிக்க வேண்டுமா" அல்லது 'இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி' படிக்க வேண்டுமா?" என்ற முடிவுகளை, குருஜிதான் எடுப்பார் என்று எண்ணிக் காத்திருத்தல்.
  • தனது குருஜியே, நாக்பூரிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும் ஜூனியர் மோஸ்ட ஊழியன் நவீனுக்கும் குருஜி என்று தெரியவந்தால் மற்ற பழைய  நண்பர்களைக் கத்தரித்து விட்டு, காபி இடைவேளை, உணவு இடைவேளை என்ற எல்லா நேரங்களிலும் அவனுடனே குருஜியின் மகிமை குறித்துப் பேசிப் பேசி புளகாங்கிதப்படுதல். (சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவர், மற்ற நண்பரிடம், முதல் நாள் ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு வந்ததாகச் சொல்ல, மற்ற நண்பர் அழத் தொடங்கிவிட்டார். என்னவென்று கேட்டதில், தான் அப்போதுதான் அந்தக் குருஜி பற்றி நினைத்தாகவும், அந்த சமயத்தில் இவர் ஆசிரமம் சென்று வந்ததாகச் சொன்னது 'என்னே ஒரு பகவத் சங்கல்பம்' என்று சிலாகித்தார்.)
  • அருமை மகளின் பள்ளி ஆண்டு விழாவுக்கு, அலுவலக வேலை காரணமாக வரமுடியாவிட்டாலும், மணநாளன்று, மனைவியுடன் 'கொஞ்ச' நேரம் செலவிட முடியாவிட்டாலும், குருஜியின் பிறந்த நாளுக்கு (80ஆவது அல்லது 90ஆவதாக இருக்கலாம்) வெளிநாட்டில் இருந்தாலும் சொந்த விடுமுறை எடுத்துக் கொண்டு, சொந்தச் செலவில் வருதல். 
  • தாம்பத்ய வாழ்க்கைப் பிரச்னை போன்ற அந்தரங்க பிரச்னைகளுக்குக் கூட, பத்து வயதில் பிரம்மச்சாரியாய் ஆசிரம வாழ்க்கையைத் துவங்கி, கிரகஸ்தாரம் என்றாலே என்னவென்று அறியாத பீடாதிபதியிடம் புத்திமதி கேட்டல்.   
  • சமூக நிகழ்ச்சிகளுக்கும், தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் முடிச்சுப் போட்டுப் பிறகு, மணிக்கணக்காக அந்த முடிச்சின் அழகுக்கு தனது குருவே காரணம் என்று வியந்து கொண்டிருப்பது.
  • வாழ்க்கையில் முடிவெடுக்க வேண்டிய முக்கியத் தருணங்களில், அனைத்தையும் பகவான் பாத்துக் கொள்வான் என்று பஜனை பண்ணிக் கொண்டிருப்பது. (2009ல் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், தங்கள் வேலை எந்நேரம் பறிபோகுமோ என்று அஞ்சி, மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த சமயம், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 'பிசினஸ் அனலிஸ்ட்' நண்பரொவர் (சொந்தக் காசில்) பத்து லட்ச ரூபாய் செலவில் இன்னோவா கார் ஒன்று வாங்கினார். எதற்கு இந்தச் செலவு இந்தச் சமயத்தில் என்று கேட்க அவர் சொன்னது. "எனது குருஜி நாடு முழுதும் பாத யாத்திரை (!) போகப் போகின்றார். அவருக்கு பைலட் கார் ஓட்டிச் செல்பராகத் தன்னைத் தேர்வு செய்திருப்பதாகவும், அதற்கு இந்தக் காரே ஏற்றது என்றும் கூறினார்!)
  • குருஜி ஏடாகூடமாக மாட்டிக் கொண்டுவிட்டாலும், மீசையில் மண் ஒட்டவில்லை ரேஞ்சுக்கு, 'அவர் மனித அவதாரம்தானே! எனவே மனிதக் கர்மாக்கள் படும் கஷ்டங்களையெல்லாம் அவரும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்" என்று சப்பைக் கட்டுக் கட்டுதல். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு. "காய்ச்ச மரம்தானே கல்லடி படும், வெளிநாட்டு சதி", போன்ற கிளிஷேக்கள்.

சாமியார்கள், குருஜிக்கள் நடத்தும் யோகப் பயிற்சி போன்றவைகளினால் உடல் நலம் முன்னேறினாலும், தியானப் பயிற்சி போன்றவைகளினால் மன அமைதி கிட்டினாலும், 'அரிது , அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று புகழப்பட்ட மானிட மூளையக் கழட்டிவிட்டு, நரஸ்துதி செய்யச் சொல்வதால் போலிச் சாமியாரும் வேண்டாம். நல்ல சாமியாரும் வேண்டாம்.

- சிமுலேஷன்