Saturday, August 07, 2010

சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன் - நூல் விமர்சனம்தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பல ஆண்டுகளாகப் பாதித்து வருவது திரையுலகமாகும். அது விடுதலைப் புரட்சியாக இருக்கட்டும் அல்லது சமுதாயப் புரட்சியாக இருக்கட்டும். பல்வேறு தளங்களில் திரையுலகம் தனது பங்கையளித்துள்ளது என்றால் உண்மையில்லாமலில்லை. ஆனால் அது ஆற்றிய நன்மைகளை விட ஆற்றிய சீரழிவுகள்தான் அதிகம் என்று பொங்கியெழுந்து தைரியமாகத் தன் கருத்துக்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தவர் ஜெயகாந்தன்.  சினிமாவுலகத்தின் மீதான பெருங்கோபத்தினை தனது "சினிமாவுக்குப் போன சித்தாளு" கதையின் மூலம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

செல்லமுத்து சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண ரிக்சாக்காரன். சிங்காரம் போல 'திருக்கூஸ்' எல்லாம் பண்ணும் கெட்டிக்காரன் அல்ல. ரிக்சா ஓட்டுவதும் சினிமா பார்ப்பதுவும் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. சினிமா பார்த்தே வந்த 'பசி'யால் கிராமத்துக்கு ஓடிப் போய் அவனுக்காகவே வளர்ந்திருந்த கம்சலையைக் கட்டிக்கொண்டு, பட்டணம் வருகின்றான். தனக்குத் தெரிந்திருந்த ஒரே பொழுதுபோக்கான சினிமாவுக்குப் கூட்டிச் சென்று அவளையும் சினிமாப் பைத்தியமாக்க்கி விடுகின்றான். கம்சலையோ சினிமாப் பைத்தியம் மட்டுமல்லாது, வாத்தியார் பைத்தியமுமாகவும் ஆகிவிடுகின்றாள். வாத்தியாரையே இருபத்து நாலு மணி நேரமும் நினக்கும் அளவுக்கு. அது எந்த அளவுக்கு முத்தி விடுகின்றது என்று தெரியும்போது செல்லமுத்து மட்டுமல்ல, வாசகர்களும் அதிர்ச்சிகுள்ளாகின்றனர். வாத்தியார் படமாயிரு்ந்தாலும் சரி, வேறு எந்தப் படமாயிருந்தாலும் பார்க்கக் கூடாது என்று கண்டிசனாச் சொல்லிவிடுகின்றான் செல்லமுத்து. ஒரு மாதம் பொறுத்திருந்த கம்சலைக்கு வாத்தியாரின் புதுப்படம் வெளியானவுடன் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "கோடியில் ஒருவர்" படம் பார்க்கச் சென்ற அனுபவம் அவளது வாழ்க்கையை எப்படி சீரழித்து விடுகின்றது என்பதுதான் மீதிக்கதை.

மெட்ராஸ் பாஷை ஆகட்டும், அக்ரஹாரத்து பாஷையாகட்டும். சிறந்த நேட்டிவிட்டியுடன் எழுதுவதில் ஜெயகாந்தனை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. விறுவிறுபான நடையில் எழுதப்பட்ட நடை. விளிம்பு நிலை மாந்தர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தன்னை மறந்து ஏதோவொரு கதாநாயகன் பின்னாலோ அல்லது கட்சிக்காரன் பின்னாலோ வாழ்க்கையத் தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை கம்சலை மூலமாகத் தெரிவிக்கும் அதே ஜெயகாந்தன், 'எல்லை தாண்டுவது முறையல்ல; நமக்கும் வாழ்க்கை நெறிமுறைகள் உண்டு', என்பதனை செல்லமுத்து மூலம் தெரிவிக்கத் தவறவில்லை.    

இருவர் படம் எடுத்த மணிரத்தினம் அந்த இருவர்களைப் பற்றிப் பெரிதாக எதிர்மறைக் கருத்துக்கள் ஏதும் வைக்காவிடாலும், அந்தப் படம் குறிப்பிட்ட இருவரைப் பற்றிய படம் அல்ல என்று தற்காப்பாகக் கூறியிருந்ததாக ஞாபகம். ஆனால் ஜெயகாந்தன் எம்.ஜி.ஆர் என்ற பெயரை நேரிடையாகக் குறிப்பிடாவிட்டாலும், வாய்க்கு ஒரு முறை வாத்தியார், வாத்தியார் என்று குறிப்பிடுகின்றார். அதுவும் எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்தில் இப்படி தைரியமாக அவரை எதிர்மறையாகக் குறிப்பிட்டு ஒரு கதை எழுத பெரும் தைரியம்தான் வேண்டும்.எம்.ஜி.ஆர் இதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்? ஒருவேளை அனாவசியப் பப்ளிசிட்டி கொடுக்காமல் அடக்கி வாசிக்கலாமென்று வாத்தியார் நினைத்திருக்கக் கூடும்.

முன்னுரையில் இந்தக் கதைக்கு வெளி வந்த எதிர்ப்புக்களையும்,அந்த எதிர்ப்புக்கள் இலக்கிய சம்பந்தமுடைய கருத்துக்கள் அல்ல என்பதால் அவற்றுக்குச் சமாதனமோ, பதிலோ கூற வேண்டுவது தன் பொறுப்பல்ல என்று ஜெயகாந்தன் கூறுகின்றார்.

முடிவாக இந்தக் கதையின் நோக்கத்தை அறிந்து கொள்ள ஜெயகாந்தன் முன்னுரையில் கூறியிருக்கும் மேலும் சில கருத்துக்களைப் இங்கு பதிய வேண்டியிருக்கின்றது.

"அறியாமையும், பேதமையும் கொண்ட மக்கள் இவர்களால் சுயாபிமானமிழந்து திரிகிறார்கள். அவர்களின் அறிவும், மனமும், ரசனையும், ஒழுக்கமு சிதைந்து போவதற்கு நமது சினிமாக்களும் அது சம்பந்தப்பட்ட நடிக, டைரக்டர், தயாரிப்பாளர்களும் பெஉம் பொறுப்பு வகிக்கிறார்கள். "பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல்" என்ற ஓட்டை வாதங்களையே இவர்கள் ஓயாமல் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய "பொழுதுபோக்கும்", "கொஞ்சம் நேரம் மக்ழ்ந்திருந்தலும்" ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்றும், இதில் சிக்காமல் உயர்வு காண வேண்டும் என்றும் ஒரு சிலருக்கேனும் தோன்றுகிறபோது அதற்காவது மரியாதை தர வேண்டாமா? என்கிற பதைப்புதான் என்னை இக்கதையை எழுதத் தூண்டியது".  

"இந்தக் கேவலமான் சினிமாத்தனம் பதிரிகைகளையும், எழுத்தாளர்களின் படைப்புகளையும், படித்த நகரத்து இளைஞர்களையும் சமூகத்தின் மேல் தரத்து மனிதர்களையும் முற்றாகப் பிடித்திருக்கிறது. என்ற காரணத்தினாலேயே, குறைவான நாசத்துக்கு ஆளாயிருக்கும் நகரத்துக் கூலிக்கார வர்க்கத்திலிருந்து  ஒருத்தியை நான் தேர்ந்தெடுத்தேன்."

பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை

பதிப்பாண்டு : முதற் பதிப்பு 1972 - ஏழாம் பதிப்பு - 2002
விலை: Rs.35