Monday, October 06, 2014

இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும் - நூல் விமர்சனம்
இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும்
(ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்)
மதிப்புரை - சுந்தரராமன் (சிமுலேஷன்)

இன்று மதிப்புரை.காமில் பிரசுரமானது

"என்னய்யா படம் எடுத்திருக்கான்? கதைலே பயங்கர ஓட்டை!" அப்படீன்னு யாரவது சொன்னால், உடனே "நீயாயிருந்தா எப்படி எடுத்திருப்பே?" என்று நண்பர்கள்  கேட்பது வழக்கம்.

"எனக்கு விமர்சனம் பண்ணத்தான் தெரியும். படம் எப்படி எடுக்கணும்னு எனக்கெப்படி தெரியும்?" என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்.

ஆனால், படத்தில் உள்ள பழுது என்ன என்பதனை சொல்வது மட்டுமல்லாமல், அதனை எப்படி நீக்குவது என்றும் சொல்லும்படியாக ஒரு தொகுப்பு வெளி வந்ததுள்ளது. பழுது நீக்கும் யோசனைகள் சொல்வபர் பி.ஆர்.மகாதேவன்.

இவர் எடுத்துக் கொண்டுள்ளவை, பத்திரிகைகளால் பாராட்டப்பட்டு ஓரளவு ஓடிய புகழ்பெற்ற எட்டு படங்கள். நந்தலாலா, அங்காடித்தெரு, ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், ஏழாம் அறிவு, எங்கேயும் எப்போதும், நான் கடவுள் ஆகிய எட்டு படங்களை பீஸ், பீஸாகக்  கிழித்திருக்கிறார் மகாதேவன். புத்தகத்தின், சிறப்பான நான்கு அம்சங்கள்:-

·          குறிப்பட்ட படங்களில் உள்ள  சிறப்புக்கள் - எடுத்து கொண்ட எட்டு படங்களுமே குறைகள் உள்ள படங்கள் என்று மகாதேவன் நினைக்கவில்லை. திறமை உள்ள இயக்குனர்கள் திரைக்கதையில் இன்னம் கொஞ்சம் மெனக் கெட்டிருக்க்கலாமெ என்று எண்ணுகின்றார். எனவே நிறைகளையும் அவ்வப்போது எடுத்துக் கூறத் தயங்கவில்லை. ஆனால் மகாதேவன் பட்டியலிடும் நிறைகள் வெகு சொற்பமே.

·          குறிப்பட்ட படங்களில் உள்ள குறைகள் – ‘ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்’ என்று மகாதேவன் உப தலைப்பு கொடுத்திருப்பதால், இவருக்கும் திரைத் துறையில் நுழைய வேண்டும் என்றுள்ள ஆர்வம் புரிகின்றது. இருந்த போதும் குறைகளைப் பற்றிக் கூறும் போது, தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை மனுஷன். ஒரு விமர்சகனுக்குண்டான நேர்மையுடன் தைரியமாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்கின்றார். நந்த லாலா, தெய்வத் திருமகள் போன்ற படங்கள் ஆங்கிலப் படங்களின் காப்பி என்று கூறுபவர், ஒரிஜினல் படத்திற்கு மரியாதை தராத தமிழ்ப் பட இயக்குனர்களைக் காய்ச்சுகின்றார்

·          குறைகளை நீக்கி எப்படிப் படம் எடுத்திருந்திருக்கலாம் என்ற யோசனைகள் - குறிப்பிட்ட படங்களில் குறிப்பிடட்ட சீனில் லாஜிக் எப்படி உதைக்கின்றது என்று விரிவாக எடுத்துரைக்கின்றார். படிக்கின்ற நமக்கும், 'அட, இவர் சொல்வது சரிதானே' என்று பல இடங்களில் உரைக்கின்றது.  எந்த இடங்களில் என்ன பழுது உள்ளது என்று கூறும் இவர், பழுது நீக்கக் கூறும் குறிப்பிட்ட யோசனைகளும் நன்றாகவே உள்ளன. 'ஆடுகளம்' திரைப்படத்தில் சேவல்கள் எப்படித் தயார் செய்யபடுகின்றன என்பதற்கு சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை’ என்று சொல்லுவது நியாயமாகவேபடுகின்றது. வெறுமனே உருண்டையை உருட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் போதாது' என்று சாடுகிறார்.  ‘விளம்பரத்தில் முந்தானையை விரிச்சு ஆட வேண்டுமென்றும், கண்ணைப் பறிக்கிற கலர்ல புடவை வேண்டும் என்றும் அண்ணாச்சி சொல்கிறார். இவையெல்லாம் ஒரு சாதாரண விளம்பர இயக்குனருக்குக் கூடத் தெரிந்த விஷயங்களே. அண்ணாச்சியின் வர்த்தகத் திறமை இதைவிடவும் ஆழமானது. கவுரவமானது’ என்று சொல்லும் போது மகாதேவன் எந்த மாதிரி விஷயங்கள் படங்களில் இடம் பெற வேண்டுமென்று நினைக்கின்றார் என்று புரிகின்றது.

ஒவ்வொரு படத்தைப் பற்றியும் குறைகளையும் அபத்தங்களையும் சொல்லி விட்டு, பின் தானே அந்த திரைக்கதையை எப்படி அமைத்திருப்பேன், என்னெவெல்லாம் மாற்றங்கள் செய்திருப்பேன் என்று ஒவ்வொரு படத்துக்கும் ஒரு புது திரைக்கதை ஒன்றை எழுதுகிறார். இவை பெரும்பாலும் இம்சையாகவே இருகின்றன. இது சங்கீத விமர்சனம் செய்யும் சுப்புடு கச்சேரி பண்ணுவது போல உள்ளது. குறிப்பாக 'அஞ்காடித் தெரு', மற்றும் 'அழகர்சாமியின் குதிரை' ஆகிய படங்களுக்குக் மாற்றாகக் கொடுக்கும் கதைகள் தலை சுற்ற வைக்கின்றன.      

·           குறிப்பிட்ட இடங்களை விமர்சனம் செய்யும்போது அடிக்கும் நக்கல் மற்றும் நையாண்டி-  இந்த நாலாவது அம்சத்திற்காகவே புத்தகத்தைப் படிக்க வெண்டும் போல உள்ளது. நான் ரசித்த சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

“ஐம்பது வயதான் நாயகன் விக் வைத்து, சட்டையை இன் பண்ணி, கையில் ஒரு நோட்புக்குடன் நடந்து போனால் கல்லூரி மாணவன் என்று புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் தமிழ் பார்வையாளர்களுக்கு உண்டு. கூடவே ஒரு ஜியாமென்டரி பாக்ஸ் இருந்தால் பள்ளி மாணவனாகி விடலாம். ஸிப்பர் பாட்டில் கையில் இருந்தால் எல்.கே.ஜி மாணவனாகி விடலாம். தமிழ் மக்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்.”

“செந்தில் முருகன் ஸ்டோர் தன பணியாளர்களை கொத்தடிமை போல் நடத்துவதான் படம் முழுவதும் வருகிறது. அண்ணாச்சியின் வலதுகரமான   கருங்க்காலிதான் படத்தில் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டும் இருக்கிறார். ஆனால் சம்பந்தமே இல்லாமல் கதாநாயகனுக்கும், நாயகிக்கும் எற்படும் கோர விபத்தை க்ளைமேக்ஸாக வைத்திருக்கிறார். பாம்புக்கும் கீரிக்கும் சண்டை என்றால் பாம்பு எப்படி தப்பிக்கிறது.... அல்லது கீரி எப்படி ஜெயிக்கிறது என்பதுதான்  க்ளைமேக்ஸாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாம்பின் மேல் ஒரு பாறாங்கல் விழுந்து அது இறந்து விடுகிறது என்று காட்டினால் அது அசட்டுத்தனம்.”

“ஒன்று, குழ்ந்தை மன வளர்ச்சி குன்றிய அப்பாவுடன் இருக்க வெண்டும்.....இல்லையென்றால் தாத்தாவுடன் இருக்க வேண்டும் என்று ஜார்ஜ் புஷ் போல் ஏன் ஒரு பிரச்னையை அணுக வெண்டும்?”

“பாட்டி வடை சுட்ட கதையில் காக்கா பேசியது என்று சொன்னால் காக்காய் எப்படிப் பேசுமென்று கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், பாட்டி சுட்டு வைத்த வடை காக்காய் கொத்திக் கொண்டு போகும்போது பணியாரமாக மாறிவிட்டதாகச் சொன்னால் கேள்வி வரத்தான் செய்யும். ஒவ்வொரு கதைக்கும் ஒரு தர்க்கம் இருக்கும். அந்தத் தர்க்கத்தை அந்தக் கதையிலேயே மீறினால் அது தவறுதான்.”

“அந்தப் புள்ளி மானுக்கு ரொம்பவும் பயமா இருந்துச்சாம். அதனால ஒரு புலியைத் துணைக்கு வான்னு கூப்பட்டுச்சாம் என்று கதை சொன்னால், ரெண்டு வயசுக் குழந்தை கூட, மண்டையில், 'ணங்' என்று குட்டி விடும்.”

மகாதேவனது ரிப்பேர்க்  கடைக்குச் சென்று வந்த பின்னர் அவர் சொல்வதை ஒத்துக் கொள்ளாமல், 'எதையும் அனுபவிக்கணும் ஆராயக் கூடாது" என்றெல்லாம் சிலர் விமர்சனம் வைக்கலாம். ஆனால் தமிழத் திரையுலகை அடுத்த கட்டத்த்ற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் நமக்கு பி.ஆர்.மகாதேவன்களும் அவர்களது விமர்சனங்களும் கட்டாயம் தேவை. அந்த விதத்தில் தமிழ் சினிமா ரசிர்கள் படிக்க வேண்டிய புத்தகம் மகாதேவனது 'இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும்'

புத்தகம்- இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும்
ஆசிரியர் - பி.ஆர்.மகாதேவன்
பதிப்பு  - நிழல் வெளியீடு
பதிப்பாண்டு - டிசம்பர் 2011
பக்கங்கள் - 160

விலை – Rs. 120    

- சிமுலேஷன்