Thursday, December 29, 2011

சீசன் சபேசன்

"ஹலோ ரவி, எப்படியிருகே" குரல் கேட்டுத் திரும்பினேன்.

கேட்ட குரல் சபேசனுடையது. சபேசன் கிராமத்தில் எனது பள்ளி நண்பன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லாததால் அத்துடன் படிப்ப நிறுத்திக் கொண்டவன். கல்லூரிப் படிப்பு முடித்தவர்களுக்கே வேலை கிடைப்பது திண்டாட்டமாக இருக்கும் போது இவன் என்ன செய்யப் போகின்றான் என்று நான் கவலைப்பட்டதுண்டு.

"டேய் சபேசா. நான் சென்னையில்தான் வேலையாக இருக்கேன். நீ எப்ப சேன்னைக்கு வந்தே? இப்ப என்ன பண்றே?"

"ரவி. நம்ம கிராமம்தான் தெரியுமே. அங்க பிழைக்க பெரிசா வழி ஒண்ணும் இல்லே. அதனால இங்கே வந்துட்டேன். நிரந்த்தரமா வேலை ஒண்ணும் கெடைக்கல. சீசனுக்க்குத் தகுந்த்தாப் போலே ஒரு தொழில் செய்யறேன்"/

"என்னட  சொல்றே? புரியலையேடா"

"இப்ப பள்ளிக் கூடம் தொறக்கற சீசன் இல்லையா? ஒரு குழந்தை ஸ்கூலுக்கூப் போறதுன்னு தெரிஞ்சவுடனே, அதனோட அம்மா, அப்பாவை சினேகம் புடிச்சு, குழந்தையோட புத்தகங்க்களுக்கு பைண்ட் பண்றது, புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தர்றது, இது மாதிரி பண்ணிப் பிழைப்பை நடத்தறேன்.   எதோ காலம் ஓடறது. இப்ப கூட பைண்டிங் பண்ணத்தான் போயிட்டிருக்கேன். அவசரமாப் போறேன். அப்புறமாப் பாக்க்கலாமா, வரட்டா" என்று ஓட்டமும் நடையுமாகச் சென்று விட்டான்.

சபேசனை அதன் பின் அவ்வப்போது சந்திப்பதுண்டு. சீசனுக்குத் தகுந்தாற் போல் தொழில் செய்வதாக அவன் சொன்னது உண்மைதான். ஒரு மாம்பழ சீசனில் அதனை ஓரிடத்திலிருந்திலிருந்து வாங்கி மற்றொரு இடத்த்க்கு அனுப்புவதை மேல்பார்வை பார்ப்பது செய்வதாக ஒரு முறை கூறினான். ஓரளவு சுமாராக வண்டி ஓட்ட முடிகிறது என்றும் சொன்னான்.

எங்கள் ஆபிசர் வெங்கடேசன் ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார்.

"என் அக்கா பெண் அமெரிக்காவிலிருந்து வந்து டிசம்பர் சீசனில் சென்னையீல் கச்சேரி செய்கின்றாள்.. நீங்களெல்லாம் குடும்பத்தோடு அவசியம் வர வேண்டும்" என்று  வேண்டுகோள் விடுத்தார்.

சங்கீதக் கச்சேரிகளில் பெரிதும் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூப்பிட்டிருப்பது
ஆபீசராயிற்றே என்று அன்று குறித்த நேரத்திற்கும்  முன்பாகவே அகாடெமி வாசலில் ஆஜாராகி விட்டோம். அங்கே பார்த்தால் படு பிசியாக சபேசன்.  

"என்னடா இது ஆச்சரியமா இருக்கு! உனக்குக் கூட சங்கீதத்லேயெல்லாம் இண்ட்ரஸ்ட் வந்து விட்டதா?"

""ரவி இது என்ன மாசம்? என்ன சீசன்? டிசம்பர் சங்கீத சீசன் இல்லையா? நாந்தான் சொன்னேனே, சீசனை ஒட்டித்தான் நம்ம பிழைப்புன்னு."

"சரி. கொஞ்சம் புரியும்படியா சொல்லு."

"சங்கீத சீசன்லே பாட்டு, டான்ஸ் கச்சேரிகளுக்கு ரசிகர்களைப் பிடிச்சுக் கொண்டு வருவதுதான் என்னோட வேலை இப்ப."

"என்னடா ஒளர்றே? ரசிகர்களை பிடிச்சுக்க் கொண்டு வர்றதா? அது எப்படி முடியும்?

"ஆமாம்பா. எல்லா ரசிகர்காளும் தங்களுக்குப் பிடிச்ச பாடகர்கள் பாடறதைக் கேட்க ஓடீடறாங்க. அதுனால பல சபாக்கள்லே காத்து வாங்குது. அந்த மாதிரி இடத்லே   ரசிகர்களை பிடிச்சுக் கொண்டு வருவது என் பொறுப்பு."

"யார் உனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்தது?"

"யாரு? வெளி நாட்டிலேர்ந்து வர்ற பாடாகர்கள்தான். அவர்களுக்குப் பணம் பெரிசில்லை. அங்கீகாரம் தான் முக்கியம். எக்கச்சக்கமாக செலவு செய்து கொண்டு அமெரிக்காவிலேர்ந்தும், ஆஸ்ட்ரேலியாவிலேர்ந்தும் வந்து பாடும்போது, சபாவிலே ஒரு ஏழெட்டுப் பேர் மாத்திரம் இருந்தாங்கன்னா  எப்படி இருக்கும்? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் வரக் கூடாதுன்னுதான் ரசிகர்களை கொண்டு வந்து சேக்கறதை இந்த சீசன் சமயத்திலே தேர்ந்த்தெடுத்திருக்கேன். "

"முந்தி அரசிய்யல் கூட்டங்களுக்கு ஆள் சப்ளை பண்ணிட்டிருந்தேன். ஆனால் அரசிய்யல்வாதிகள் சமாச்சாரம்தான் தெரியுமே. இந்த வேளியூர்ப் பாடகர்கள் அப்படியில்லே. ப்ராம்டா பணம் கொடுத்துடுவாங்க. நம்ம ரசிகர்களும் உண்மையான ரசிகர்கள் என்பதால், பாடகர், ரசிகர் இரண்டு பேருக்குமே திருப்தி. ரசிகர்கள் எந்த இடத்திலே "பலே" போடணுமோ, எந்த இடத்திலே கை தட்டணுமோ, அதேல்ல்லாம் கரெக்டாச் செய்வாங்க."

சீசன் சபேசன் பிழைக்கத் தெரிந்தவன்தான்.

- சிமுலேஷன்