Saturday, March 26, 2011

சுதந்தர பூமி - இந்திரா பார்த்தசாரதி - நூல் விமர்சனம்அரசியல்வாதிகளின் நிஜ முகங்களை அப்பட்டமாக எழுத்தில் பதிவு செய்வதில் இந்திரா பார்த்தசாரதி என்றுமே தயங்கியதில்லை. அவரது புனைவுகளில் கூட, ஊடாடியிருக்கும் நிஜங்களைக் கண்டுபிடித்துப் படிப்பது சுவாரசியமானதாக இருக்கும். அப்படியிருக்க, அரசியல் பின்னணியைக் களமாகக் கொண்ட "சுதந்தர பூமி", நாவல் அரசியல் விரும்பும் வாசகர்களைக் கவருவதில் வியப்பேதுமில்லை.

சுதந்தர பூமி டெல்லி அரசியலில் உள்ள அரசியல் தரகர்கள் பற்றியும் அங்கு நடைபெறும்  உள்ளடி வேலைகள் பற்றியும் குறித்துப் பேசும் நாவல். தமிழ்நாட்டிலிருந்து பிழைப்பிற்காக டெல்லி செல்லும்  முகுந்தன், ப்ரொஃபஸர் மிஸ்ராவைச் சந்திக்கிறான். தனது அரசியல் அபிலாஷைகளுக்கு, இந்தத் தமிழ் இளைஞன் நன்கு பயன்படுவான் என்று அவரது அரசியல் மூளைக்குப் புரிய வெகு நேரமாவதில்லை. அரசியல் சதுரங்கத்தில் மிஸ்ரா, எப்படிப் படிப்படியாகக் காய் நகர்த்துகின்றார் என்பதே கதை.

முகுந்தனின் அரசியல் வாழ்க்கை 'காபி' போடுவதில் ஆரம்பித்து காபினெட்டில் இடம் பெறுவது வரை செல்கிறது.  இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக வரும் முக்கியப் பாத்திரம், டாக்டர் சரளா பார்க்கவா என்ற 'எதற்கும் துணிந்த' பெண்மணி. ஒரு சமயம இவர் செய்யும்போராட்டங்களைப் பார்க்கும்போது மம்தா பானர்ஜி போன்ற அரசியல்வாதிகளை நினவூட்டினாலூம், நீரா ராடியா போன்றவர்களின் நினவு வருவதும் தவிர்க்க முடியவில்லை. ப்ரொஃபஸர் மிஸ்ராவுக்கு பிரதமரிடம் நல்ல செல்வாக்கு. பிரதமர் ஒரு பெண்மணி என்று குறிப்பிடப்படுள்ளதால் இது, இந்திரா காந்தி காலத்தைச் சேர்ந்த கதை என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு சமயம் மிஸ்ராவும், முகுந்தனும் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்ய அங்கு லோக்கல் அரசியல்வாதிகளுடன் நடக்கும் விவாதத்தில் "உண்மைத் தமிழன்" யார் என்ற விவாதம் சூடு பிடிக்கின்றது. இந்த இடத்தில், மிஸ்ரா மூலம், ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி எட்டிப் பார்த்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நன்றாகவே அடிக்கடி நக்கல் அடிக்கின்றார். மலேஷியாவுக்குப் போய்விட்டு வந்திருக்கும் ஒரு மந்திரியை, " அயல்நாடு சென்று வெற்றி சூடிவரும் தமிழரே வருக, வருக" என்று போஸ்டர் அடித்து வரவேற்பதனைக் கண்ட மிஸ்ரா, "வெற்றி சூடி வரும் என்றால் என்ன அர்த்தம்? மலேஷியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏதாவது சண்டையா?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். காரிக்கண்ணன் மற்றும் இருங்கோவேள் என்ற இரண்டு பாத்திரங்களைப் படிக்கும் போது "சோ"வின் எழுத்து நினவுக்கு வருகின்றது. அப்படி ஒரு நையாண்டி.

டெல்லித் தமிழன் முகுந்தன், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தமிழ் வெறி போல் வடநாட்டில் இல்லை" என்று சொல்லும்போது, மிஸ்ரா, "நீங்கள் தமிழைப் போற்றுவது போல், அங்கு பசுவைப் போற்றுகிறார்கள்" என்று ஸேம் ஸைடு கோல் போடத் தயங்குவதில்லை.

இ.பாவுக்கு அண்ணாதுரை பற்றி நல்ல அபிப்ராயம் போலிருக்கிறது. (ஞானி வீட்டு "கேணி" சந்திப்பில்கூட  இ.பா, அண்ணாவப் பற்றி சிலாக்கியமாகத்தான் பேசினார்). அண்ணா இறந்த நாளன்று, அவரது சமாதியில் மக்கள் பிரார்த்தனை செய்ய வந்திருப்பது அறிந்த்த மிஸ்ரா, ஆச்சரியப்படுகின்றார். பெரியார் ராமசாமி பற்றிப் பேசும்போது, "ஐ நோ...ஐ நோ... அவர் தமிழ்நாட்டின் 'டான் க்வீக்ஸாட்' என்று எனக்குத் தெரியும்" என்று மிஸ்ரா சொல்லும்போது, இ.பா தனக்கு  மனதில் பட்டதைச் சொல்ல என்றுமே தயங்கியதில்லை என்று புரிந்து கொள்ள முடிகின்றது. இதே மாதிரி கருத்தினை இ.பா வேறு ஒரு இடத்திலும் ("இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்)  சொல்லத் தயங்கியதில்லை.

 காபினெட்டில் இடம் பெற்ற முந்தன்ம் பிரமரின் மனதிலும் நன்றாகவே இடம் பெற்று விடுகின்றான். பிரமர் அவனை அழைத்து, "தமிழ்நாட்டைப் பற்றி ஒரு முக்கியமான தகவல் வத்திருக்கிறது. நீங்கள் இப்பொழுது தமிழ்நாடு செல்வது மிகவும் அவசியமாகிறது. நீங்கள் மேல்நாடு சென்று பங்களாதேஷ் பற்றிச் சொற்பொழிவு
ஆற்ற வேண்டுமென்பதுதான் என் விருப்பம். ஆனால், தங்களை முஜிபுர் ரஹ்மான் என்று நினைத்துக் கொண்டு, செய்கின்ற அக்கிரமத்துக்க்கெல்லாம் கொள்கை முலாம் பூசி ஏமாற்றுபவர்கள அவர்களுக்குரிய இடத்தில்  வைக்க வேண்டுமென்பது என் கருத்து." என்று சொல்லி அவனை தமிழ்நாட்டுக்குச் செல்லும்படி பணிக்கிறார். அவனும் தமிழ்நாட்டுக் செல்ல சம்மதிப்பதாக முடிகின்றது கதை.

சுதந்தர பூமியின் கதாநாயகனான முகுந்தன் உட்பட யாருமே இங்கு பலவீனங்கள் அற்ற உத்தமர்கள் இல்லை. ஒரு நாவலுக்குரிய க்ளைமேக்ஸ் ஏதுமில்லை இல்லாத காரணத்தால், இ.பா ஒரு புதினம் என்று எழுத வேண்டியதை விட, தான் கேள்விப்பட்ட சம்பவங்களையும், நபர்களையும்  பற்றித் தன் வாழ்நாளிலேயே பதிவு செய்யும் வண்ணம் புனைவு கலந்த புதினம் ஒன்று எழுதியுள்ளார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. டெல்லியில் பலகாலம் இருந்ததாலும், பல்வேறு பிரமுகர்களின் பரிச்சயம் கிடைத்தாலும், எந்த விஷயத்தையும் சுவாரசியமாகச் சொல்ல முடியுமமென்ற காரணத்தினாலும்  இ.பாவுக்கு இது சாத்தியமாயிருக்கின்றது.

இது சுதந்தர பூமி மட்டுமல்ல, "தந்திர பூமியும்" கூட.

பெயர்         - சுதந்தர பூமி
ஆசிரியர் - இந்திரா பார்த்தசாரதி
பதிப்பு         - கிழக்குப் பதிப்பகம்
ஆண்டு      - 1973,1978,1993,2006
பக்கங்கள் - 256
விலை         - Rs. 100

- சிமுலேஷன்