Tuesday, November 04, 2014

தாயார் சாகேப் தெருவும், தாதாபாய் நௌரொஜியும்


கத்தார் ஏர்வேஸ் விமானம் மினம்பக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது மணி அதிகாலை 2.30. பாராசுட்டிளிருந்து குதிக்கத் தயாரானவர்கள் போல், ஸ்டொவ் செய்யப்பட்ட பெட்டிகளை எடுத்து கொண்டு குதிக்கத் தான பயணிகளை விமான நிலையம் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்க வைத்தது. பிஸினஸ் க்ளாஸ் பெருமகனார்கள் முதலில் இறங்க, 'கேட்டில் க்ளாஸ்' பயணிகள் பின் தொடர்ந்தனர்.    

எரோப்ரிட்ஜில் ஜருகண்டி சொல்லாத குறையாக ஒவ்வொருவராக மெதுவாக முன்னேறினர். காரணம், எரோப்ரிட்ஜின் முடிவில், ஏர்போர்ட் பணியாளர் அனைவருக்கும் படிவம் ஒன்றினை வழங்கிக் கொண்டிருந்தார். அதனால்தான் தள்ளு முள்ளு.

இமிக்ரேஷன் படிவம் தான் விமானம் திருப்பதி மேல் பறக்கும் போதே பில்லப் செய்து விட்டோமே, இது என்னடா புதுப படிவம் என்று பார்த்தால், "வெளிநாட்டிலிருந்து 'எபோலா' வைரஸ் இறக்குமதி செய்கின்றீர்களா என்று சோதனை செய்வதற்கான படிவம் அது. அதாவது ஆத்மா சோதனை. உங்களுக்கு காய்ச்சல், கீய்ச்சல் ஏதாவது இருக்கின்றதா என்று நீங்களே சொல்ல வெண்டும்.

ஒரிஜினல் படிவத்தினைப் போட்டோ காபி செய்த ஆசாமி 'என்லார்ஜ்'பட்டனுக்குப் பதிலாக, 'ரிடக் ஷன்' பட்டனை அமுக்கித் தொலைத்து விட்டார் போலும். அவ்வளவு பொடி எழுத்துக்கள். படிவத்தில் வெற்றுப் பரப்புதான் எண்பது சதவிகிதம். அபடிவத்தினை வாங்கியவர்கள் பலரும் அதனைப் பூர்த்தி செய்து கொண்டிருக்க, 'இது வேலைக்காகாது. நேர விரயம்' என்றெண்ணி படிவத்துடன் ஓட்டமாய் ஓடி வந்து க்யூவில் நின்றேன். இது 'எபோலா'வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு சில குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் மட்டும் பூர்த்தி செய்தால் போதும். ஆனால் எங்கேயாவது இமிக்ரேஷனில் பிரச்னை வந்து விடுமோ என்று பயந்து அனைத்துப் பயணிகளும் சின்சியராக பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.

க்யூவில் எனக்குப பின்னாடி நின்று கொண்டிருந்த நபர், "மெடிக்கல் ஆபீசர்' கையெழுத்து வாங்கி விட்டீர்களா?" என்று கேட்க அதிர்ச்சி. 'ஆஹா, வடை போச்சே' என்று சொல்லிக் கொண்டே வந்து மெடிக்கல் ஆபிசர்ரிடம் கையெழுத்து வாங்க மற்றொரு க்யூவில் நின்றேன். நாம் நிற்கும் க்யூதான்  நம்ம ஜாதகப்படி மெதுவாக நகருமே! எனக்கு முன்னாள் நின்று கொண்டிருந்த வெள்ளைக்கார அம்மணி, மெடிக்கல் ஆபிசரிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார். என்ன விஷயம் என்றால், படிவத்தில் எங்கு தங்கப் போகிறார், அந்த இடத்தில் தொலைபேசி எண் என்ன என்ற விபரங்களைத் தெரிவிக்கவில்லையாம். அவளோ, "எனக்கு எப்படித் தெரியும், அன்னை அழைத்துப் போய், தங்க வைப்பவர்களுக்குத்தான் அந்த விபரங்கள் தெரியும்" என்று விவாதித்துக் கொண்டிருந்தாள். அது அப்படி "எனக்கு மட்டும் எப்போதும் முன்னாடி இருக்கிறவன்/ள் 'குடம், குடமாய்...'?

ஒருவழியாக மெடிக்கல் ஆபிசரிடம் படிவத்தில் சீல் வாங்கிகே கொண்டு வந்து மீண்டும் இமிக்ரேஷன் க்யூவில் நின்றேன். எனது முறை வந்தது. படிவத்தினை, பாஸ்போர்ட்டில் வைத்துக் கொடுத்தேன். படிவத்தினை ஏறெடுத்தும் பார்க்காது, பாஸ்போர்ட்டில் சீல் அடித்துக் கொடுத்தார். பின்னர் கன்வேயர் பெல்டில் பெட்டிகளுக்காக ஒரு மணி நேரம் காத்திருந்து கஸ்டம்ஸ் கிளியரன்ஸும் முடித்து வெளியெ வந்தேன்.

ஒரு மாதமாக ஸ்டார்பக்ஸ் கருமாந்திரங்களைக் குடித்த கடுப்பு நீங்க, அதிகாலை நான்கு மணிக்கு சூடா பில்டர் காபி ஆர்டர் செய்தேன். காபியை வாயில் வைக்கும் அந்தத் தருணம், நாராயணனைப் பார்த்தேன். முதல் நாள்தான் சூடானில் இருந்த அவனுடன் சாட் செய்து கொண்டிருந்தேன். ஜுரமாக இருக்கிறது. மறுநாள் எப்படிப் பயணம் செய்வது என்று புரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தான். இப்போது பார்த்தான் இங்கே சங்கீதாவில்.

''என்னடா உடம்பு ஜுரம்னு சொல்லின்டிருந்தே. எப்படி டிராவல் பண்ணினே?"

"ஒரு பாராசிடமால் போட்டுட்டு ப்ளைட் ஏறியாச்சு. ஏழு மணி நேரத்லே     வந்திறங்கியாச்சு?"

"அது சரி; எபோலா பார்ம்லே டீடைல் எல்லாம் கேட்டிருப்பானே; அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் வேறெல்லாம் கேட்கறான்; வீட்டுக்கு
 வந்து வேற செக்கப் பண்ணுவானாம்மே?"

"பர்ர்ர்ர்!!!. அதுக்குத்தானே எப்போது கைவசம் ஒரு பேரும், ஒரு அட்ரசும் வெச்சிருக்கோம்.

பெயர் - தாதாபாய் நௌரோஜி, விலாசம் - நெம்பர் 10, தாயார் சாஹேப் தெரு"

"அடப்பாவிகளா! ரொம்பத்தான் வாத்யார் கதை படிச்சுக் கெட்டுப் போயிட்டாங்க"!
               
- சிமுலேஷன்