
மின்சார இணைப்பு கொடுத்தவுடன் இசை மேடை சுழலத் தொடங்கியது. இசைத் தட்டினைப் போட்டு இயக்கியவுடன், ஒலியும் வரத் தொடங்கியது. ஆனால், இப்போது வேறு பிரச்னை. இந்த முறை எம்.எஸ் அவர்கள் எம்.டி.ராமனாதன் குரலில் ழ்.ழ்ழ்ழ்ழ் என்று முழங்கினார்கள். எல்லா இசைத்தட்டிலும் இதே பிரச்னை. மீண்டும் ஒரு மணி நேர கோவை பயணம். "என்ன செய்தீர்கள்?" என்று கடைக்காரர் கேட்டு பிறகு விழுந்து விழுந்து சிரித்தார். என்ன கூத்துவென்றால், இசைத்தட்டின் மேல் வைக்கும் முள்ளைப் பாதுகாக்க பித்தளையில் ஒரு கவசம் (protection guard) ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கவசத்தினை எடுக்காமல், அப்படியே இசைத்தட்டின் மேல் வைத்திருந்திருகின்றோம்.
இந்த மாதிரியான கூத்துக்கள் ஒய்ந்த பின் இசைத்தட்டுக்களை ஒவ்வொன்றாக ஓடவிட்டு இரசித்தோம். ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து வந்தபின் இசைத்தட்டுக்களை கேட்பது வாடிக்கையானது. நண்பர்களை அழைத்து வந்து 45 rpm ல் பாடிய பாலமுரளி கிருஷ்ணாவை 78 rpmல் ஒடவிட்டு கீச்சுக்குரலில் பாடவைப்பதும் ஒரே தமாஷாக இருக்கும்
எலெக்ரானிக் யுகத்தில், முன்னேறங்கள் ஏற்பட்டு, கேஸட் ப்ளேயர், சி.டி, டி.வி.டி, ப்ளூ ரே, என்று எத்தனையோ தொழில் நுட்பங்களப் பார்த்தாலும், முதன் முதலாக் ரேடியோ நிகழ்ச்சிகள் போல அல்லாமல் ரெகார்ட் ப்ளேயர் மூலம் எந்தப் பாட்டையும் எவ்வளவு முறையும் கேட்க முடியும் என்றபோது அடைந்த ஆச்சரியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை.
நாங்கள் வைத்திருந்த ரெகார்ட் ப்ளேயர் ரிப்பேராகி, சரி செய்ய ஆளில்லாமல் பின்னர் ஒரு நாள் அதனைத் தூக்கிப் போட்டோம். இசைத் தட்டு நினவலைகளை கேட்டுக் கேட்டு, மனைவிக்கும் அதனைக் கேட்கும் ஆசை வந்துவிட்டது. ஆனால் இசைத்தட்டுக்கள் இருந்ததே ஒழிய, ப்ளேயர் இல்லாத காரணத்தால்,ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.
இத்தனை நாட்கள் கழித்து, நேற்று மூர்மார்க்கெட்டில் ஒரு பழைய HMV Fiesta மாடல் ரெகார்ட் ப்ளேயரை 500 ரூபாய்க்கு வாங்கினேன். சுமார் 35 ஆண்டுகள் கழித்து, இசைத்தட்டுக்களைத் தூசி தட்டி எடுத்து மீண்டும் ஒட விட்டபோது, அடைந்த ஆனந்தம் மட்டற்றது.
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்". பதிவர்களே! விரைவில் எதிர்பாருங்கள் எமது இசைத்தட்டு ஒலிபரப்பினை.
- சிமுலேஷன்