Saturday, February 27, 2010

அபூர்வ ராகங்கள்-05 - பட்தீப் (Patdeep)

பட்தீப் வட இந்திய இசையில் அடிக்கடி பாடப்படும் ராகம் என்றாலும், இந்த அழகான ராகம் தென்னிந்திய இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. 'பட்தீப்' ராகம் சில சமயங்களில் 'படதீப்' என்றும், 'பட்டதீப்' என்றும் உச்சரிக்கப்படுகின்றது. இந்த ராகம் 22ஆவது மேளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: N2 S G2 M1 P N2

அவரோகணம்: S N2 D2 P M1 G2 R2 S N

இதன் ஆரோகணம், அவரோகணம் நிஷாதத்தில் தொடங்கி, நிஷாதத்தில் முடிவதால், இதனை "நிஷாதாந்திய" ராகம் என்றும் சொல்லலாம்.

வட இந்திய இசையில் இந்த ராகம் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றது என்பதனை இங்கே கேட்கலாம்.

அப்புறம், நம்ம உன்னிகிருஷ்ணன் பட்தீப் ராகத்தில் ஒரு அஷ்டபதி பாடியிருக்கார். இங்கே போய் அந்த 8ஆவது பாட்டைக் கேட்கலாம். அதே மியூசிக் இண்டியா தளத்தில் பட்தீப் என்று தேட லால்குடி மற்றும் ஸ்ரீமதி ப்ரம்மானந்தம் அவர்களின் மீராபஜனும் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் பட்தீப்புக்கும் இந்த மீராபஜனுக்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. சிந்துபைரவியினை யாரோ புண்ணியவான் தவறாகப் பட்தீப் என்று tag பண்ணிவிட்டார்கள் போலத் தெரிகின்றது. விபரம் தெரிந்தவர்கள் நான் சொல்வது சரியா என்று சொல்ல வேண்டும்.

தமிழ்த் திரையுலகினை எடுத்துக் கொண்டால், ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு, என்று ஒரே ஒரு பாடல்தான் பட்தீப் ராகத்தில். அதுவும் 1956ஆம் ஆண்டு வெளிவந்த "ரம்பையின் காதல்' படத்தில் வந்த "சமரசம் உலாவுமிடமே" என்ற சுடுகாட்டினைப் பற்றிய ஒரு  அருமையான பாடல். அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் உணர்ச்சியுடன் பாடியது. ஒரிஜினல் பாடலின் சுட்டி கிடைக்கவில்லை. ஜெயா டி.வியில் பாலாஜி என்ற இளைஞர் பாடியதை இங்கே போட்டுள்ளேன். நல்ல முயற்சி!



பட்தீப் ராகத்தில் வேறு ஏதெனும் பாடல் தெரிந்தால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்தத் தொகுப்பினிலே சேர்த்து விடுகின்றேன்.

- சிமுலேஷன்