Showing posts with label கர்நாடக இசை. Show all posts
Showing posts with label கர்நாடக இசை. Show all posts

Saturday, December 24, 2016

விமர்சகர்



வெகு நாட்களுக்கப்புறம், கல்யாணராமனுக்கு இன்றைக்குத்தான் கொஞ்சம் டென்ஷன்  இல்லாமல் இருந்தது. இந்த மாதத்தில் மட்டும் நான்கு கச்சேரிகள் செய்து விட்டார். குசும்பனின் விமர்சனங்கள்தான் அவரை இப்போதெல்லாம் டென்ஷன் ஆக்குகின்றன. குசும்பன் போன்ற விமர்சகர்கள் இல்லாத, சாதாரண ரசிகர்கள் இல்லாத பள்ளி மாணவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் கச்சேரி, இன்று அனந்த கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில்.

இந்தக் குசும்பன் பெயருக்கேத்த மாதிரி நிறையாக குசும்ம்பு பிடித்தவர்தான். அவருடைய விமர்சனங்கள் ரொம்பவே காரசாரமாகவும், விவரமாகவும், நக்கலாகவும் இருக்கும். சும்மா மற்றவர்கள் மாதிரி கேண்டீன் எப்படி இருந்தது, பாடகர் என்ன புடவை கட்டிக்க கொண்டு வந்தார், என்றெல்லாம் எழுதி பக்கங்களை நிரப்ப மாட்டார். டெக்கனிகளாகப் பின்னிப் பெடலெடுத்து விடுவார். இந்த மாதிரித்தான் கல்யாணராமனின் கடந்த நான்கு கச்சேரிக்களையும் பின்னிக் கிழித்து விட்டார்.

இந்தக் குசும்பன் யாரென்று தெரிந்து வைத்துக் கொண்டாலாவது கொஞ்சம் மஸ்கா அடித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் புனைபெயரில் எழுதும் குசும்பன் யாரென்று எந்தக் கச்சேரியிலும்  பார்த்துக் கண்டு பிடிக்க முடியவில்லை.

போன முறை, ஆலாபனைகளைப் பாராட்டி எழுதியிருந்தாலும், ஸ்வர பிரயோகங்களில் தவறு செய்து, ஸ்ரீ ராகத்தினை மத்யமாவதியாக மாற்றி விட்டதை சுட்டிக் காட்டியியிருந்தார். அப்புறம் உச்சரிப்புப் பிழையெல்லாம் வேறு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். விமர்சனம் சரியாக இருந்தாலும், அதனை ஜீரணம் செய்யும் பக்குவம் இல்லாத கல்யாணராமனுக்கு இன்று பள்ளி மாணவர்களிடையே கச்சேரி செய்யும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி.

வெகு நாட்கள் கழித்து கல்யாணராமன், நிம்மதியாகக் கல்யாணியில் ஆலாபனையை ஆரம்பிக்க, நோட்டுப் புத்தகத்தை எடுத்து விமர்சனம்  எழுத ஆரம்பித்தான், பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் குசும்பன் என்ற குமரேஷ்.

- சிமுலேஷன்
  
 

Thursday, December 29, 2011

சீசன் சபேசன்

"ஹலோ ரவி, எப்படியிருகே" குரல் கேட்டுத் திரும்பினேன்.

கேட்ட குரல் சபேசனுடையது. சபேசன் கிராமத்தில் எனது பள்ளி நண்பன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லாததால் அத்துடன் படிப்ப நிறுத்திக் கொண்டவன். கல்லூரிப் படிப்பு முடித்தவர்களுக்கே வேலை கிடைப்பது திண்டாட்டமாக இருக்கும் போது இவன் என்ன செய்யப் போகின்றான் என்று நான் கவலைப்பட்டதுண்டு.

"டேய் சபேசா. நான் சென்னையில்தான் வேலையாக இருக்கேன். நீ எப்ப சேன்னைக்கு வந்தே? இப்ப என்ன பண்றே?"

"ரவி. நம்ம கிராமம்தான் தெரியுமே. அங்க பிழைக்க பெரிசா வழி ஒண்ணும் இல்லே. அதனால இங்கே வந்துட்டேன். நிரந்த்தரமா வேலை ஒண்ணும் கெடைக்கல. சீசனுக்க்குத் தகுந்த்தாப் போலே ஒரு தொழில் செய்யறேன்"/

"என்னட  சொல்றே? புரியலையேடா"

"இப்ப பள்ளிக் கூடம் தொறக்கற சீசன் இல்லையா? ஒரு குழந்தை ஸ்கூலுக்கூப் போறதுன்னு தெரிஞ்சவுடனே, அதனோட அம்மா, அப்பாவை சினேகம் புடிச்சு, குழந்தையோட புத்தகங்க்களுக்கு பைண்ட் பண்றது, புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தர்றது, இது மாதிரி பண்ணிப் பிழைப்பை நடத்தறேன்.   எதோ காலம் ஓடறது. இப்ப கூட பைண்டிங் பண்ணத்தான் போயிட்டிருக்கேன். அவசரமாப் போறேன். அப்புறமாப் பாக்க்கலாமா, வரட்டா" என்று ஓட்டமும் நடையுமாகச் சென்று விட்டான்.

சபேசனை அதன் பின் அவ்வப்போது சந்திப்பதுண்டு. சீசனுக்குத் தகுந்தாற் போல் தொழில் செய்வதாக அவன் சொன்னது உண்மைதான். ஒரு மாம்பழ சீசனில் அதனை ஓரிடத்திலிருந்திலிருந்து வாங்கி மற்றொரு இடத்த்க்கு அனுப்புவதை மேல்பார்வை பார்ப்பது செய்வதாக ஒரு முறை கூறினான். ஓரளவு சுமாராக வண்டி ஓட்ட முடிகிறது என்றும் சொன்னான்.

எங்கள் ஆபிசர் வெங்கடேசன் ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார்.

"என் அக்கா பெண் அமெரிக்காவிலிருந்து வந்து டிசம்பர் சீசனில் சென்னையீல் கச்சேரி செய்கின்றாள்.. நீங்களெல்லாம் குடும்பத்தோடு அவசியம் வர வேண்டும்" என்று  வேண்டுகோள் விடுத்தார்.

சங்கீதக் கச்சேரிகளில் பெரிதும் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூப்பிட்டிருப்பது
ஆபீசராயிற்றே என்று அன்று குறித்த நேரத்திற்கும்  முன்பாகவே அகாடெமி வாசலில் ஆஜாராகி விட்டோம். அங்கே பார்த்தால் படு பிசியாக சபேசன்.  

"என்னடா இது ஆச்சரியமா இருக்கு! உனக்குக் கூட சங்கீதத்லேயெல்லாம் இண்ட்ரஸ்ட் வந்து விட்டதா?"

""ரவி இது என்ன மாசம்? என்ன சீசன்? டிசம்பர் சங்கீத சீசன் இல்லையா? நாந்தான் சொன்னேனே, சீசனை ஒட்டித்தான் நம்ம பிழைப்புன்னு."

"சரி. கொஞ்சம் புரியும்படியா சொல்லு."

"சங்கீத சீசன்லே பாட்டு, டான்ஸ் கச்சேரிகளுக்கு ரசிகர்களைப் பிடிச்சுக் கொண்டு வருவதுதான் என்னோட வேலை இப்ப."

"என்னடா ஒளர்றே? ரசிகர்களை பிடிச்சுக்க் கொண்டு வர்றதா? அது எப்படி முடியும்?

"ஆமாம்பா. எல்லா ரசிகர்காளும் தங்களுக்குப் பிடிச்ச பாடகர்கள் பாடறதைக் கேட்க ஓடீடறாங்க. அதுனால பல சபாக்கள்லே காத்து வாங்குது. அந்த மாதிரி இடத்லே   ரசிகர்களை பிடிச்சுக் கொண்டு வருவது என் பொறுப்பு."

"யார் உனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்தது?"

"யாரு? வெளி நாட்டிலேர்ந்து வர்ற பாடாகர்கள்தான். அவர்களுக்குப் பணம் பெரிசில்லை. அங்கீகாரம் தான் முக்கியம். எக்கச்சக்கமாக செலவு செய்து கொண்டு அமெரிக்காவிலேர்ந்தும், ஆஸ்ட்ரேலியாவிலேர்ந்தும் வந்து பாடும்போது, சபாவிலே ஒரு ஏழெட்டுப் பேர் மாத்திரம் இருந்தாங்கன்னா  எப்படி இருக்கும்? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் வரக் கூடாதுன்னுதான் ரசிகர்களை கொண்டு வந்து சேக்கறதை இந்த சீசன் சமயத்திலே தேர்ந்த்தெடுத்திருக்கேன். "

"முந்தி அரசிய்யல் கூட்டங்களுக்கு ஆள் சப்ளை பண்ணிட்டிருந்தேன். ஆனால் அரசிய்யல்வாதிகள் சமாச்சாரம்தான் தெரியுமே. இந்த வேளியூர்ப் பாடகர்கள் அப்படியில்லே. ப்ராம்டா பணம் கொடுத்துடுவாங்க. நம்ம ரசிகர்களும் உண்மையான ரசிகர்கள் என்பதால், பாடகர், ரசிகர் இரண்டு பேருக்குமே திருப்தி. ரசிகர்கள் எந்த இடத்திலே "பலே" போடணுமோ, எந்த இடத்திலே கை தட்டணுமோ, அதேல்ல்லாம் கரெக்டாச் செய்வாங்க."

சீசன் சபேசன் பிழைக்கத் தெரிந்தவன்தான்.

- சிமுலேஷன்

Friday, January 28, 2011

மஹாராஜபுரம் குளோன்ஸ்

மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
மஹாராஜபுரம் சந்தானம்

மஹாராஜபுரம் ராமசந்திரன்

மஹாராஜபுரம் ஸ்ரீனிவாசன்
 
மஹாராஜபுரம் கணேஷ்

- சிமுலேஷன்






Saturday, January 01, 2011

ஒரு ரசிகனின் டிசம்பர் மாத டைரிக்குறிப்புகள்

இந்த வருடம் எந்த கச்சேரிக்கும் விமர்சனம் எழுதப் போறதில்லை. போன வருஷம் தனி வலைப்பதிவே துவங்கியும் ஒரு விமர்சனமும் உருப்படியா எழுத முடியலை. இருந்தாலும் டைரி மட்டும் எழுதத்தான் போறேன்.


5th Dec
• ஜயந்தி தன்னுடைய தற்போதைய இசைக்கான குருவான “வித்யா மற்றும் நித்யா” ஆகியோரின் கச்சேரிக்குப் போகவேண்டுமென்று சொன்னாள். கொட்டும் மழையில் சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் நடைபெற்ற “வித்யா மற்றும் நித்யா” கச்சேரிக்குச் சென்றோம்.

• மாலை 4.30 மணிக்குக் “கச்சேரி பஸ்”ஸின் வின்ஸெண்ட் டிசோசா, அவருடைய ஆபீசில் இசை விமர்சகர்களுக்கான ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார். வின்ஸெண்ட், ரேவதி மற்றும் நான் மட்டுமே ஆஜர். மூன்று பேரின் மீட்டிங் சுமார் முப்பது நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.


• மாலை 6 மணிக்கு எல்டாம்ஸ் ரோடு தத்வலோகாவில் அபிஷேக் ரகுராமின் கச்சேரி. நான் மட்டுமே சென்றேன். முன்வரிசையில் பி.எஸ்.நாராயணஸ்வாமி உட்கார்ந்திருந்தார். கொட்டும் மழையிலும் நல்ல கூட்டம். ஸ்யாமா ஸாஸ்திரிகள் சிறப்புக் கச்சேரியாம். பூச்சி ஸ்ரீனிவாசயங்காரின் “நின்னுகோரி” வர்ணம் தவிர, மற்ற உருப்படிகள் எல்லாமே ஸ்யாமா ஸாஸ்திரிகளுடையதுதான். அதில் ஸாஸ்திரிகளின் “தருணம் இதம்மா” என்ற தமிழ் உருப்படியும் அடக்கம். அபிஷேக் ரகுராமோ, நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர்களோ ஸ்யாமா ஸாஸ்திரிகள் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது எனக்கு ஏமாற்றமே. மேடையக் கவனித்த போது, அபிஷேக்கிலிருந்து அனைத்துக் கலைஞர்களுக்கும், தம்பூராக் கலைஞர் உட்பட, இரண்டிரண்டு மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன. என்ன காரணமோ?


15th Dec
• மியூசிக் அகாடெமியின் துவக்க விழா. கலந்து கொள்வதில் ஆர்வத்திற்கு ஒரு காரணம் என்னவென்றால், நிகழ்ச்சிக்கு எங்கள் நிறுவனதின் தலைவர் ஷிவ் நாடார்தான் சிறப்பு விருந்தினர். மேலும் ஷிவ்நாடார் பவுன்டேஷன் மியூசிக் அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது மற்றுமொரு முக்கியமான விஷயம். இது தவிர மியூசிக் அகாடெமியில் மாதாமாதம் HCL Monthly Concert ஸ்பான்ஸர் செய்வதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.



16th Dec
• அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வசிக்கும் கனிக்ஸ் எனப்படும் புரஃபசர் கன்னிகேஸ்வரன் எனது நண்பரும் கூட. அவருடைய லெக்டெம், மியூசிக் அகாடெமியில். தலைப்பு “வடநாட்டு துருபத் இசைமுறைக்கும், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் படைப்புகளுக்குமுண்டான ஒற்றுமைகள்”. ஜயந்தியும் நானும் சென்றோம். மனுஷருக்கு தீக்ஷிதர் குறித்த அனைத்து விஷயங்களும் அத்துபடி. ஒரிரு வருடங்கள் முன்பு ஹ்யூஸ்டன் நகரில் மீனாட்சி கோயிலில் கேட்ட லெக்டெமுடன் ஒப்பிட்டபோது, இந்த முறை ‘ஸ்லைடு ஷோ’ கொஞ்சம் சுமார்தான். ஆனாலும் விஷயத்துக்குப் பஞ்சமில்லை. ‘தீக்ஷிதர் வடநாட்டு சங்கீதத்தால் இன்ப்ளூயன்ஸ் ஆனதாகத்’ தனது உரையில், கனிக்ஸ் ஒரு போதும் சொல்லவேயில்லை. ஆனால் பேனலிஸ்டுகள் என்ற பெயரில், வேதவல்லி. டி..எம்.கிருஷ்ணா, வி.ஸ்ரீராம் ஆகியோர் அவர் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகச் சொல்லி வெட்டி விவாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீராம் ப்ளாக்கில் இது குறித்து எனது கருத்தினைப் பதிவு செய்தேன்.

18th Dec
• ஜயஸ்ரீயும், ராம்நாத்தும் அம்மாவை பந்துலராமாவின் அகாடெமி கச்சேரிக்கு அழைத்து சென்றார்கள்.

19th Dec
• ஸங்கீதப்ரியா மற்றும் ரசிகப்ரியா மடலாறக்குழுவில் நானும் ஒரு உறுப்பினன்தான். இந்தக் குழுக்களின் ஒருங்கிணைப்பளர்கள் “குளோபல் ரசிகாஸ் மீட்” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தி.நகர் ராமக்ருஷ்ணா பள்ளியில். நானும் பல வேறு சுவையான நிகழ்ச்சிகள் இருக்கும் என்ற எக்கச்சக்க எதிர்பார்ப்பில், தூங்கிக் கொண்டிருந்த ஆதித்யாவையும் எழுப்பி அழைத்துச் சென்றேன். அமைப்பாளர் அமெரிகாவிலிருந்த வந்தவர் என்ற காரணத்தால், எடுத்ததெற்கெல்லாம் அமெரிக்காவையும், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களையும், ரொனால்டு ரீகனையும் வேறு உதாரணம் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு ரசிகர் ஒருவர் ஆற்றிய சேவைக்கான வாழ்த்துப்பா பாடவேண்டி வந்த மற்றொருவர் இந்த வாய்ப்பு தனது வாழ்நாளில் கிடைத்ததில் பெரிதும் ‘தன்யனானேன்’ என்ற ரேஞ்சில் பேசினார். ரசிகர்கள் எல்லோரும் தங்களது கருத்துக்களையெல்லாம் கூறலாம் என்று கூறிவிட்டு, அந்த செஷனை ஒரு சில நிமிடங்களிலேயே முடித்துக் கொண்டு விட்டு, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரின் 5-6 வயதுப் பேத்தியின் கச்சேரி நடைபெறும் என்று அறிவித்தாளர்கள். அட. இதுக்குதானா இவ்வளவு பில்டப்பு. விசேஷம் என்னவென்றால், இந்தக் குழந்தையின் கச்சேரியினைக் கேட்க இவ்வளவு பிஸியான் சீசன் சமயத்தில் இசைப் பிரபலங்கள் பலரும் வந்து உட்கார்ந்திருந்ததுதான். ஆனால் ஆதித்யா, உஷாராக அரங்கினிலிருந்து வெளியேறி அருகிலிருந்த இன்போஸிஸ் அரங்கினில் நடைபெற்றுக் கொண்டிருந்த அக்ஷய் பத்மநாபன் கச்சேரிக்கு சென்றுவிட்டான். ஓரு சில நிமிடங்களில் அம்மாவும் நானும் இன்போஸிஸ் அரங்கினில் தஞ்சம் புகுந்தோம். அந்தோ பரிதாபம். எங்கள் குடும்பத்து மூவரையும் சேர்த்து அரங்கினில் மொத்தமே 11 பேர்தான். அதில் இருவர் அப்போதுதான் முதல் கச்சேரிக்கு வாசித்துவிட்டு வந்த பக்க வாத்தியக் கலைஞர்கள். தாட்சண்யத்திற்காக உட்கார்ந்திருப்பார்கள் போலும். இத்தனைக்கும் அன்று பாடிய அக்ஷய் பத்மனாபன் சிறந்த பாடகர்தான். நன்றாகவும்தான் பாடிக் கொண்டிருந்தார். கூட்டமே இல்லாத அரங்கினிலே பாடுவருக்கு மட்டுமல்ல, கேட்டுகொண்டிருக்கும் 11 பேர்களில் ஒருவராகிய நமக்கும்கூட டீமோடிவேஷன் ஏற்பட்டுவிடுவதில் ஆச்சரியம் இல்லை. பின்னே. அம்மாம் பெரிய அரங்கினிலே தனியாக இருந்தால் பயமாக வேறு இருக்காதா? இங்கே கூட்டம் எப்போதுமே இப்படித்தானா? அல்லது அன்று மட்டும்தான் இப்படியா? எதுவாயினும் முத்ரா பாஸ்கரும், ராதா பாஸ்கரும் காரணங்களைக் கண்டறியத் தருணம் இதே.
இன்றும் ஜயஸ்ரீயும், ராம்நாத்தும் அம்மாவை அகாடெமி கச்சேரிக்கு அழைத்து சென்றார்கள். மல்லாடி சகோதரர்கள் கச்சேரி.

21st Dec
• அகாடெமியில், புல்லாங்குழல் சிக்கில் மாலா சந்திரசேகரின் லெக்டெம் முடியும் தருவாயில் ஜயந்தியும், நானும் சென்றோம். லெக்டெம் முடிந்த பின் நடக்க இருக்கும் கலந்துரையாடலில், பிரச்னைக்குரிய விவாதங்களில் இறங்கப்போவதில்லை என்று மாலா உஷாராகவே சொன்ன போதும், சஷாங் மைக்கைப் பிடித்து அவரை வம்புக்கு இழுத்தார். நல்லவேளை நிகழ்ச்சியின் மட்டுறுத்துநராக இருந்த பப்பு வேணுகோபால்ராவ் விவாதம் முடிந்து விட்டதாக அறிவித்தார். மியூசிக் அகாடெமியின் காலை நேர லெக்டெம்கள் சிலருக்கு நல்ல “ஈகோ பூஸ்டராக” அமைகின்றது போலிருக்கின்றது.


• அடுத்தாக இடம் பெற்ற லெக்டெம், பத்மஸ்ரீ டாக்டர் பத்மா சுப்ரமணியன் அவர்களுடையது. “நாட்டியக் கலைக்குத் தஞ்சைப் பெரிய கோயில் ஆற்றிய பங்கு” என்பது அவரது சப்ஜெக்ட். இந்தத் தலைப்பில் பேசுவதற்கு அவரைவிடப் பொருத்தமான ஆள் வேறு யாரும் இல்லை. 60களில் தொல்லியல் துறையைச் சேர்ந்த கடைநிலை ஊழியரான பாலகிருஷ்ணன் என்பவர் கோபுரங்களில் வளர்ந்திருந்த அரச மரங்களை வெட்டச் சென்றாராம். அப்போது அங்கே கோபுரத்தில் புதிதாக ஒரு வாயிலைப் கண்டுபிடித்திருகின்றாராம். உள்ளே எட்டிப் பார்த்தால் அரிய வகை நாட்டியச் சிற்பங்கள். ஆனால் அங்கே யாரும் எளிதில் நுழையாதபடிக்கு வவ்வால் எச்சங்கள். ஏத்தனை வருடத்து எச்சங்கள் தெரியுமா? ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரம் வருடத்து எச்சங்கள். ஆமாம்? பல அடி உயரத்திற்கு ஆயிரம் வருடத்து வவ்வால் எச்சங்கள். அதனை அகற்றப் பணியாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள். பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பலரும் மயக்கமடைகின்றார்கள். சிலருக்கு ரத்தவாந்திகூட ஏற்படுகின்றது. எல்லாம் எச்சத்திலிருந்து வெளிப்பட்ட மீத்தேன் போன்ற வாயுக்களின் உபயம். பல்வேறு நபர்களின், பல மாதப் போரட்டத்திற்குப் பின், அழகிய பல சிற்பங்கள் கிடைக்கின்றன. எல்லாம் நாட்டியத்தின் ‘கரணங்களைக்” குறிப்பிடும் அரிய சிற்பஙள். மொத்தமுள்ள 108 கரணங்களில் 81 கரணங்களுக்கான சிற்பங்கள் அவை. இந்தச் சிற்பங்களை வைத்தே சுமார் 10 வருடங்கள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெறுகின்றார் பத்மா சுப்ரமணியன் அவர்கள்.

21st Dec
• மதியம் 1.45க்கு அகாடெமியில் ஷேர்தலை ரெங்கநாத ஷர்மாவின் கச்செரி. அம்மாவுடன் சென்றிருந்தேன். 2,00 மணியான பின்பும் கச்சேரி ஏனோ ஆரம்பிக்கவில்லை. அகாடெமியின் பங்சுவாலிட்டிக்கு என்னாச்சு? 2.05க்கு மைக்கில். ஷேர்தலை வந்து கொண்டிருப்பதாகத் தகவல். ஓரு வழியாக, 2.15க்குக் கச்சேரி தொடங்கியது. அதெப்படி இந்த மலையாளிகளுக்கு (யேசுதாஸ். காவலம், ஷேர்தலை…) மட்டும் இப்படிக் கருகருவென்று ஒரு தாடி. ஜயஸ்ரீக்காக அம்மா ‘த்யாராஜர் க்ருதிக்கள்’ புத்தகம் வாங்கினார்.

22nd Dec
• ஜயந்தியின் தோழி டாக்டர்.ப்ரியஸ்ரீ ராவ் “Textual Referece in Indian Classical Dance” என்ற தலைப்பில் அகாடெமியில் உரை நிகழ்த்துகின்றார். இந்திய நடனக்கலை குறித்தான நூல்கள் குறித்து ஏகப்பட்ட விஷயதானம் செய்கின்றார். ஆனால், ஸ்லைடு ஷோவில், ஏனோ மருந்துக்குக் கூட ஒரு படமும் இல்லை.



23rd Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவின் ஆதரவில், வித்யாபாரதி மண்டபத்தில், ஸ்ரீராம் பரசுராம் “Gamakas, Anuswaras - Oceans of Musical Possibilities” என்ற தலைப்பில் லெக்டெம் கொடுத்தார். அம்மாவும், நானும் சென்றோம். மாமாவும். மாமியும்கூட வந்தார்கள். ஸ்ரீராம் வடநாட்டு இசையும் அறிந்தவராதலால், நெறையவே பாடியும், வயலின் வாசித்தும் கமகங்களை விளக்கினார். 


நிகழ்ச்சியின் முடிவில் நடிகரும், நண்பருமான சாருஹாசனுடன் நாங்கள் அளவளாவினோம். மாமா, பரமக்குடியில் சந்திரஹாசனுடன் வேலை செய்ததை நினைவு கூர்ந்தார். பின்னர், தான வரைந்திருந்த ஓவியத்தைக் காட்ட, சாரு தான் சின்ன வயதில் குதிரை படம் வரைந்திருந்தாகவும், அது கழுதை போலத் தோன்றியதால், படத்தின் கீழே, ‘கழுதை’ எழுதிவிட்டதகவும் கூறினார். படத்தை வாங்கிப் பார்த்த ஆசிரியர், “உனக்கு என்ன பிக்காசோ என்று நினைப்பா? படம் வரைந்து, கீழெ கையெழுத்தும் போட்டிருக்கியே!” என்று பகடி செய்தாராம்.



• வலையப்பட்டி நாதாலயா ஆதரவில் அடையார் அனந்தபத்மநாபர் கோயிலில் நடபெற்ற சிக்கில் குருசரண் கச்சேரிக்கு அனிருத், ஜயந்தியுடன் சென்றிருந்தேன். 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கச்சேரி 7 மணி வரை ஆரம்பிக்கவில்லை. மிருதங்கம் திருவாரூர் பக்தவசலம் லேட்டாக வந்தார் போலிருகின்றது. அவரது சிஷ்யர்கள் மூவர் கலர், கலராக் குர்தா அணிந்து கொண்டு வந்து, சிக்கில் குருசரண் கேட்ச் கொடுத்தால், அதனைப் பிடிக்க வேண்டிய ஸ்லிப்ஸ் போல மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.


27th Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் நெய்வேலி சந்தானகோபாலனின் “மும்மூர்த்திகள் சங்கமம்” என்ற தலைப்பில் லெக்டெம். பாடுவதை விட, அதன் பொருளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பெரிதும் ஆர்வம் நெய்வேலிக்கு. சங்கீத மும்மூர்த்திகள் சந்தித்திருந்தால் என்னெவெல்லாம் பேசியிருந்திருப்பார்கள் என்ற ஒரு அழகான கற்பனை. ஏகப்பட்ட பாடல்களுக்கு பொருள் சொன்னார். செறிவான இந்தத் விஷயங்கள் 'ஓபரா' போன்ற நிகழ்ச்சிகள் நடத்தத் தோதான கருத்து. யாரேனும் முயற்சிக்கலாம்.



• அடுத்து நான் ஆவலுடன் காணச் சென்றிருந்த டாக்டர் கடம் கார்த்திக்கின் ‘என்ஸெம்பிள்’ நிகழ்ச்சி. பெரும்பாலான சமயங்களில் நாம் விரும்பி மீண்டும் செல்லும் நிகழ்ச்சியில் கதாநாயகர்கள் சொதப்பி விடுவார்கள். ஆனால் ஒருபோது கார்த்தி ஏமாற்றியதில்லை. நான் பெரிதும் விரும்பும் எம்பார் கண்ணன் மற்றும் கீபோர்ட் சத்தியநாராயணாவும் அந்தக் குழுவில் உணடு. மற்றைய கலஞர்கள் போல அல்லாமல், தன்க்குத் திருப்தி அளிக்கும் ஆடியோ செட்டிங்க்ஸ், ஆடியன்ஸுக்கும் திருப்தியாக இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்த கொண்ட பின்வே நிகழ்ச்சியினைத் துவங்குவார். அன்றைய தினம் மேடையிலே இருந்த எல்லா கலைஞர்களும் ஒருவருக்கொருவர் உறவினர்களாம். வயலின் எம்பாரும், கீபோர்ட சத்தியாவும் மாமன், மருமான்கள். அதே போல மோர்சிங் கிருஷ்ணனும், கஞ்சிரா சுந்தர் குமாரும் மாமன், மருமான்கள். மிருதங்கம் பூங்குளம் சுப்பிரமணியனும், தானும் “தெய்வ மச்சான்கள்” என்றும் குறிப்பிட்டார் கார்த்திக். புஜங்கினி என்ற புதிய ராகம் வாசித்தார்கள். எம்பாரின் பாகேஸ்ரீ கேட்கக் கேட்கத் திகட்டாதது. அதில் ஒரு சிறு பகுதியினை எனது வலைப்பதிவில் தரவேற்றினேன். கார்த்திக் கம்போஸ் செய்திருந்த “நடையும் நவரசமும்” என்ற நவரச கன்னடா ஐட்டம் அன்றைய ஸ்பெஷல்.


• இன்றைய தினம் நல்ல வேட்டை. நெய்வேலி, கடம் கார்த்திக் ஆகியோரின் இனிய நிகழ்ச்சிக்குப் பின்னர், மாலையில் தியாகப் ப்ரம்ம கான சபா ஆதரவில் தி.நகர் வாணிமஹால் வளாகத்தில் உள்ள ஓபுல் ரெட்டி அரங்கில் திருச்சூர் ப்ரதர்ஸின் கச்சேரி. நாரதகான சபாவில் இம்முறை காணாமற் போன ஞானானந்தா கேட்டரர்ஸ்ஸின் கேண்டீன் இங்கு வாணி மஹாலில். வழக்கப் போல நல்ல உணவுடன் நல்ல உபசாரமும் கூட. தியாகப் ப்ரம்ம கான சபாவின் லோகோவில் தியாகராஜர் முன்பு இரண்டு டம்ளர்கள். காபியா? காபி சாப்பிட்டுக் கொண்டேதான், ‘இந்த சௌக்யமுமனினே’ என்று பாடியிரிருப்பாரோ பாகவதர்? மேடையில் பாடும் கலைஞர்கள் பின்னே பெரிய பெரிய கூல் லெமன் ட்ரிங் படங்கள். பாடகர்களுக்கு ஆகாதே!

28th Dec
•  ஸ்ரீபார்த்தசாரதி சவாவில் 'Manodharma Sangeetham - An extension of Kalpita Sangitam' என்ற தலைப்பினில் குழு விவாதம். சசிகிரண்தான் மட்டுறுதுநர். ரவி கிரண், சுகுணா புருஷோத்தமன், M.B.வேதவல்லி, N.S.ஜெயலக்ஷ்மி ஆகியோருடன் கலந்துரையாடல். ஜெயலக்ஷ்மி விஷயமாகப் பேசினார். ஒவ்வொரு முறையும் அவர் பேசி முடித்தவுடன் பார்வையாளர்கள் கைதட்டினார்கள் என்றால் பாருங்கள்.
எனக்கு முன்னாடி வரிசையில்  ஒரு 50-60 வயது மதிக்கத் தக்க தம்பதி உட்கார்ந்திருந்தார்கள். கணவர் ஒரு பையில் கையைவிட்டு ப்ளாக்பெர்ரி உள்ளிட்ட “கிஸ்மோஸா”கள் ஒவ்வொன்றாக எடுத்து என்னமோ பண்ணிக் கொண்டேயிருந்தார்.  பிறகு தொழில்முறை நண்பருக்கு 40 டன் SAE 1018 கிரேடு ஸ்டீல் பாருக்கு ஆர்டர் கொடுத்தார். அஞ்சு நிமிஷத்தில் கிளம்பிச் சென்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 
• ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஐயர் ப்ரதர்ஸின் இரட்டை வீணைக் கச்சேரி அகாடெமியில் கேட்டேன். கூட யாரும் வரவில்லை.  
• பாரத் கலாச்சார் ஒய்.ஜி.பி ஆடிட்டோரியத்தில் சித்ரா விஸ்வேஸ்வரன் குழுவினரின் “சக்தி த்ரயீ” நாட்டிய நிகழ்ச்சி. ஜயந்தியும் ஆடுகின்றாள். எனவே மாமியும், அனிருத்தும் நானும் சென்றோம். இந்த நிகழ்ழ்ச்சிக்கு முதல் நிகழ்ச்சி, கன்யாகுமரியின் வயலின் கச்சேரி. சற்றே சீக்கிரமாக வந்ததால் அதனையும் சிறிது கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. திருப்பதியில் பாடப்படும், “வேங்கட ரமணா கோவிந்தா” என்ற ரேவதி ராகப் பாடலை, ஏழெட்டு ராகங்கள் கொண்ட ராகமாலிகையாக மாற்றி, விறுவிறுவென வாசித்து ஜாலங்கள் செய்தார். உடன் வாசித்த அவர்தம் சிஷ்யரும் நன்றாகவே ஈடு கொடுத்தார். சித்ரா விஸ்வேரன் குழுவினரின் “சக்தி த்ரயீ” வெகு நேர்த்தியாகக் கோரியோகிராபி செய்யப்பட்டு முதன்முறையாக அரங்கேறியது. வழக்கம் போல நடனமணிகளின் ஆடை வடிவமைப்பு சிம்ப்ளி சூப்பர்ப். மெயின் ஐட்டமான சக்தி த்ரயீயில், முப்பெருந்தேவியரின் அற்புதங்களை விளக்கும் காட்சிகள். அதற்கான பாடலை கம்போஸ் செய்து கொடுத்திருப்பவர், ராஜ்குமார் பாரதி. பாடலைல் தூய தமிழ் வார்த்தைகளைப் பாவித்திருந்தார் என்பதைத் தவிர, எதுகையோ, மோனையோ, சந்தமோ சற்றும் இல்லை. இருந்தபோதும், பாட்டின் மெட்டின் காரணமாகவும், கோரியோகிராபியின் காரணமாகவும், பாடலின் குறை பெரியதாகத் தெரியவில்லை. கடைசி உருப்படியான, ரசிகப்ரியா தில்லானா, எனது பேவரைட் தில்லானாவாகும். விஸ்வேஸ்வரனின் ஒப்பற்ற படைப்பு அது.



29th Dec
• ஜப்பானிய இசைக்கருவிகளில் புலமை பெற்றவரும், இந்திய இசையில் பெரிது ஆர்வம் கொண்டவரும், எனது நண்பருமான ப்ரொபஸர் டிம் ஹாஃப்மேன், அகாடெமியில், “இந்திய இசையில், ஜப்பானிய இசைக் கருவிகளான கோட்டொ, ஷாகுகாச்சி போன்றவற்றின் பங்கு” குறித்து உரை நிகழ்த்துகின்றார். கொடுக்கப்பட்ட நேரம் குறைவானதாலோ என்னவோ, மிகுந்த பதட்டத்துடனே உரையாடினார். சில வருடங்கள் முன்பு, மயிலை எம்.சி.டி.எம் பள்ளியில் இவர் நடத்திய லெக்டெமுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிகழ்ச்சி சுமாரகவே இருந்தது. இசைக் கச்சேரிகளின்போது மேடையிலுள்ள கலஞர்களை நிகழ்ச்சி நடக்கும்போதே வரைந்து அவர்களிடம் ஆட்டோகிராஃப் பெறும் எனது மாமனாருடன் (சுப்ரமணியன்) சென்று டிம் ஹாஃப்மேனுடன் போட்டொ எடுத்துக் கொண்டென். பேஸ்புக்கிலும் அதனைத் தரவேற்றினேன்.


30th Dec
• லலிதா ராம், பாரதி ராமசுப்பன் பற்றி சிலாக்கியமாய் விமர்சனம் எழுதியிருந்ததின் பேரில் அவர்தம் அகாடெமி 12 மணி கச்சேரிக்குச் சென்றேன். பாரதி ராமசுப்பன் ஏமாற்றவில்லை. நன்றாகவே பாடினார். லலிதா ராமுக்குத் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்.
• சாப்பிட்டுவிட்டு சிவகாமி பெத்கச்சி அரங்கினில், ஸ்ரீவல்சன் மேனன் கச்செரிக்குப் போக எண்ணி, சற்று சீக்கிரமாகவே போனதற்குக் கிடைத்த போனஸ், ஐயர் சகோரிகளின் கச்சேரி. அவர்களின் கல்யாணியும், இறுதியாகப் பாடின ராகேஸ்ரீ ராகத் தில்லானாவும் கேட்டேன். தில்லானா ஜோர்.
• ஐயர் சகோதரிகளளின் கச்சேரி முடிந்த பின், அடுத்தாக ஸ்ரீவல்சன் மேனன் அவர்களின் கச்சேரி. ஏற்கெனவே முன்பே ஒரு முறை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் கேட்ட குரல், இம்முறையும் ஏமாற்றவில்லை. இந்த சீசனில் கேட்ட நாலாவது கல்யாணியென்றாலும் திகட்டவில்லை.

31st Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் புஷ்பா ஆனந்தின் அபங் பஜனை. கிட்டத்தட்ட அருணா சாய்ராம் பாணியில் வாய்விட்டுப் பாடுகின்றார். அது போதாதென்று மைக் வேறு ஏனோ அலறுகின்றது. மைக் வால்யூமைக் குறைத்தால் நல்ல ட்யூன்களை ரசித்து கேட்கலாம்.  12 மணிக்கு அகாடெமியில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் சீடர் ஸ்வர்ணரேதஸ் கச்சேரி. ஒன்றும் சொல்லும்படி இல்லை.









• வழக்கம் போல இந்த வருடமும் புத்தாண்டு தினத்தை குடும்பத்துடன் மியூசிக் அகாடெமியில் கொண்டாடுவது என முடிவு செய்தோம். புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை செவ்வனே செய்திருந்தார் கர்னாடிகாவின் சசிகிரண். முதலில் ரமணியின் புல்லாங்குழலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பிறகு பந்துலராமா. அப்புறம் காயத்ரி வெங்கட்ராகவனின் கச்சேரி. அடுத்ததாக மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவின் பாட்டுக் கச்சேரி. மாயாமாளவகௌளையில் பாடின தேவதேவவும், தில்லானாவும் வித்யாசமாகவும், ரசிக்கும்படியும் இருந்தன. பிறகு சுபஸ்ரீ தணிக்காசலம் குழுவினரின் (சைந்தவி, வினயா, சித்ரவீணா கணேஷ், காயத்ரி) மெட்லீ. எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்யாவுடன் ஒரு சிறப்பு மெட்லீ. பிறகு புத்தாண்டு சரியாகத் துவங்கும் வேளையில் அனைத்துக் கலைஞர்களும் சேர்ந்திசை. அடுத்து மல்லாடி ச்கோதரர்கள் பாட, சூர்யப்ரகாஷ் நிறைவு செய்தார். குண்டேச்சா சகோதரர்களின் துருபத் இசையினைத் தொடர்ந்து, கடம் கார்த்திக்கின் கலக்கல் காமெடி. அடுத்து வந்தது சென்கோட்டை ஹரி குழுவினரின் ‘ஹரிநாம சங்கீர்த்தனம்’. அவருடைய ப்ருகாவுக்கு, குழுவில் யாரும் ஈடு கொடுக்க முடியவில்லை. மோண்டும் ஒரு முறை, விச்ராந்தியாகக் கேட்க வேண்டும். அடுத்து சூர்யப்ரகாஷ், துவங்க இருக்கும்போது, மணி இரண்டைத் தாண்டி விட்டது. வெளியே வந்து சங்கீதா கேட்டரர்ஸ் வழங்கிய கேசரியையும், புளியோதரையையும் சாப்பிட்டு வீடு வந்து சேர மணி விடியற்காலை 2.30.


வழக்கம் போல ஒரு கச்சேரிக்கும் டிக்கெட் எடுக்கவில்லை. எல்லாமே ஓசிக் கச்சேரிகள்தான். மொத்தத்தில்


கேட்டு ரசித்த கச்சேரிகள் – 11
இசையறிவை விருத்தி செய்ய லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன்ஸ் – 9
பார்த்து ரசித்த நாட்டிய நிகழ்ச்சி -1
கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் - 4




கச்சேரி பஸ் சங்கீத ஸ்பெஷல் நாளிதழுக்கு நான் அனுப்பிய சிறு கட்டுரைகள் பிரசுரமாயின. ஆன்லைன் வெர்ஷனிலும் இவற்றைக் காணலாம்.

-சிமுலேஷன்

Saturday, June 19, 2010

இசையுலக இருவர்கள்

காரைக்குடி சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட சுப்பராம ஐயர் மற்றும் சாம்பசிவ ஐயர். சங்கீத நாடக அகாடெமி துவக்கப்பட்ட 1952 ஆம் வருடமே அந்த அகாடெமி விருதினைப் பெற்றவர்கள்.
மைசூர் அரண்மனையில் ஆஸ்தான வித்வான்களாக விளங்கிய வீணை சேஷண்ணா மற்றும் வீணை சுப்பண்ணா. ஸ்வரஜதி, பதம், ஜாவளி மற்றும் தில்லானாக்கள் பல இயற்றியவர்கள்.
திருவீழிமிழலை சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட சுப்பிரமணிய பிள்ளை மற்றும் நடராஜ சுந்தரம் பிள்ளை.
ஒரே குருவிடம் பயின்ற ஸ்ரீநிவாச ஐயர் மற்றும் சிவசுப்ரமணிய ஐயர் இருவரும் உண்மையிலேயே உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. ஆலத்தூர் சகோதரர்கள் என்ற பெயரில் புகழ் பெற்ற இவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்.
வீணை தனம்மாளிடம் பயின்ற ப்ருந்தா-முக்தா சகோதரிகள். க்ஷேத்ரஞ்கரின் பதங்களையும், ஜாவளிகளையும் பாடுவதில் புலமை பெற்றவர்கள். 1976ஆம் ஆண்டு ப்ருந்தா அவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்றார். 
திரையிசையிலும், மேடைகளிலும் தேச விடுதலைப் பாடல்களை பாடிப் புகழ் பெற்ற அக்கா-தம்பி, D.K.பட்டம்மாள் மற்றும் அவர் சகோதரர் D.K.ஜெயராமன். இருவருமே சங்கீத கலாநிதி விருது பெற்ற கலைஞர்கள்.
புகழ்பெற்ற டைகர் வரதாச்சாரியாரரிடம் பயின்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைத் துறைத் தலைவர்களாக இருந்த B.V.ராமன் மற்றும் B.V.லட்சுமணன் சகோதரர்கள்.
M.P.N சேதுராமன் மற்றும் M.P.N பொன்னுசாமி இருவரும் MPN சகோதரர்கள் என்றழைக்கப்பட்டனர். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?" என்ற பாடலில் இடம் பெரும் இவர்களது நாதஸ்வர இசை உலகப் புகழ் பெற்றது.
செம்பனார் கோயில் சகோதரர்கள் என்ற சம்பந்தம் மற்றும் ராஜண்ணா இருவரும் தருமபுரம், திருவாடுதுறை, திருபனந்தாள் ஆதீனங்களில் ஆஸ்தான வித்வானகளாக முப்பது வருடங்களுக்கும் மேல் விளங்கியவர்கள்.
திருப்பாம்பரம் சகோதரர்கள் என்றழைக்கப்படும் T.K.S.ஸ்வாமிநாதன் மற்றும் T.K.S.மீனாக்ஷிசுந்தரம்.

கேரளத்துத் திருச்சூரில் பிறந்தாலும், பம்பாயில் பல காலம் வாழ்ந்ததால் பம்பாய் சகோதரிகள் என்றழைக்கப்பட்ட C.சரோஜா மற்றும் C.லலிதா. T.K.கோவிந்தராவ அவர்களிடம் பயின்றவர்கள்.
சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி மற்றும் ராஜலக்ஷ்மி என்ற சூலமங்கலம் சகோதரிகள். பாடிய கந்த சஷ்டி கவசம் உலகப் புகழ்பெற்றது.பல பழைய தமிழ்த் திரைபடங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்கள்.
ராதா மாற்றும் ஜெயலக்ஷ்மி என்ற இந்த உடன் பிறவா சகோதரிகள் (கஸின்ஸ்) "ராதா ஜெயலக்ஷ்மி" என்ற ஒற்றைப் பெயராலேயே அழைக்கப்பட்டனர். 1981 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடெமி விருது பெற்றவர்கள். ஐம்பதுகளில் தமிழ்திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியவர்கள்.இசையமைப்பாளர்களும்கூட.
வயலின் உலகில் தனக்கென்று முத்திரை பதித்த லால்குடி ஜெயராமன் மற்றும் ஸ்ரீமதி ப்ரம்மானந்தம்.

சிக்கில் சகோதரிகள் என்றழைக்கப்படும் சிக்கில் குஞ்சுமணி மற்றும் நீலா இருவரும் பத்மஷ்ரி, கலைமாமணி மற்றும் சங்கீத நாடக அகாடெமி விருது பெற்றவர்கள். புல்லாங்குழல் உலகில் தனிக்கொடி நாட்டிய பெண் கலைஞர்களில் மூத்த கலைஞர்கள் இவர்கள்.

வயலின் கலைஞரான டி.என்.கிருஷ்ணன் அவர்கள் சங்கீத நாடக அகாடெமி விருது, சங்கீத கலாநிதி விருது, பத்மஸ்ரீ் மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்ற மூத்த கலைஞர். இவரது சகோதரியான் என்.ராஜம் அவர்களும் தனது சகோதரர் போலவே சங்கீத நாடக அகாடெமி விருது, பத்மஸ்ரீ் மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்றவர்.

யாழ்ப்பாணத்தில் விரிவுரையாளாராக பணிபுரிந்து வந்த லக்ஷ்மிநாராயணன் என்ற இசைக்கலைஞருக்கு பிறந்த எல்.சுப்பிரமணியன், எல்.வைத்தியநாதன் மற்றும் எல்.சங்கர் சகோதரர்கள். உலகப் புகழ் பெற்ற இந்தச் சகோதரர்கள், தென்னிந்திய, வட இந்திய, மேற்கத்திய மற்றும் கீழை நாட்டு சங்கீதம் என்ற பல்வேறு பரிணமங்களில் தங்களது இசைப்புலமையை தெரியப்படுத்தியவர்கள். பல இந்திய மற்றும் மேலைநாட்டுத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.
புகழ்பெற்ற வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் அவர்களது புதல்வர் லால்குடி.ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் புதல்வி லால்குடி விஜயலக்ஷ்மி.
புகழ் பெற்ற மூத்த வயலின் கலஞர் எம்.எஸ்.அனந்தராமன் அவர்களின் புதல்வர்கள் எம்.ஏ.கிருஷ்ணஸ்வாமி மற்றும் எம்.ஏ.சுந்தரேசன் அவர்கள்.


நாப்பது ஆண்டுகளுக்கு மேலாக புல்லாங்க்குழல் இசைத்து வரும் ரகு மற்றும் ப் சகோதரர்கள்.
தங்களது பத்தாவது வயதிற்கு முன்னரே, நூறு முறைகள் மேடை ஏறிய இளம் வயலின் மேதைகள் கணேஷ் மற்றும் குமரேஷ். 1983 ஆண் ஆண்டு இவர்களது நிகழ்ச்சியினைத் தொலக்காட்சியில் பார்த்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவரகள் உடனடியாக இவர்களை தமிழக அரசின் ஆஸ்தான வித்வான்களாக நியமித்தார்.

ஹைதராபாத் சகோதரர்கள் என்றழைக்கபடும் டி.சேஷாச்சாரி மற்றும் டி.ராகவாச்சாரி அவர்கள் ஆலத்தூர் சகோதரகள் பாணியில் பாடக்கூடியவர்கள். சேஷாச்சாரி அவர்கள் ஆல் இண்டிய ரேடியோவில் பணி புரிய, ராகவாச்சாரி அவர்களோ நேஷனல் மினரல் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் பணி புரிகின்றார்.

ருத்ரபட்டினம் சகோதரர்கள் என்றழைக்கப்படும் தியாகராஜன் மற்றும் தாரநாதன் இருவரும் கல்வியிலும் சிறந்தவர்கள். கணிததில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள தாரநாதன் அவர்கள் தூர்தர்ஷனில் பணி புரிய, வேதியியலில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றுள்ள சாரநாதன் அவர்கள் விஞ்ஞானியாகப் பணி புரிகின்றார்.

ஆலத்தூர் சகோதரர்கள் பாணியில் பாடி வரும் ஹைதரபாத் சகோதரிகள் என்ற லலிதா மற்றும் ஹரிப்ரியா இருவரும், ஆல் இண்டியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனின் மூத்த கலைஞர்கள். கைதராபாத்/ செகந்திராபாத் இசைக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களும்கூட.

ராதா ஜெயலக்ஷ்மி அவர்களின் பிரதான் சிஷ்யைகளான ஷன்முகப்ரியா மற்றும் ஹரிப்ரியா இருவரும் ப்ரியா சகோதரிகள் என்றழக்கப்டுகின்றனர்.

பத்து வருடங்களுக்கு மேலாக வயலின் வாசித்து ரசிகர்களை மகிழ்வித்த ரஞ்சனி மற்றும் காயத்ரி சகோதரிகள் இருவரும் சமீப காலமாக வாய்ப்பட்டுப் பாடி மகிழ்வித்து வருகின்றார்கள்.


மாம்பலம் சகோதரிகள் என்றழைக்கப்படும் விஜயலக்ஷ்மி மற்றும் சித்ரா. இவர்களது கசேரிக்குப் பெரும்பாலான நேரங்களில் டாக்டர்.ஹேமலதா அவர்கள் வயலின் வாசிப்பது பார்க்கலாம். ஏனென்றால் அவரும் இவர்களது ஒரு சகோதரியே.

மல்லாடி ஸ்ரீராம்பிரசாத் மற்றும் மல்லாடி ரவிக்குமார், இருவரும் மல்லாடி சகோதரர்கள் என்றழைக்கபடுகின்றனர். பினாகபாணி, வோலேடி, நேதுநூரி போன்ற ஜாம்பவான்களிடம் பயின்றவர்கள்.

வயலின் சகோதரிகள் என்ற பெயரெடுத்த டாக்டர்.லலிதா மற்றும் நந்தினி. டாக்டர்.எல்.சுப்பிரமணியம் சகோதரர்களின் அக்கா பெண்களான இந்தக் கலைஞர்கள் தங்கள் மாமாக்கள் போலவே மேற்கத்திய இசை மற்றும் கீழைநாட்டு இசையிலும் வல்லவர்கள்.

மீண்டும் ஒரு வயலின் சகோதரிகள். அக்கரை சகோதரிகள் என்றழைக்கபடும் அக்கரை சுபலக்ஷ்மி மற்றும் அக்கரை ஸ்வர்ணலதா. அக்கரை ஸ்வாமிநாதன் அவர்களின் புதல்விகளான இவர்கள் வாய்ப்பாட்டிலும் கச்ச்செரிகள் பல நிகழ்த்துகின்றனர்.

கோட்டுவாத்யம் நாராயண ஐயங்கார் பேரன்களும், சித்ர வீணை ரவிகிரண் அவர்களின் சகோதரர்களுமான் சஷிகிரண் மற்றும் கணேஷ் இருவரும் கர்னாடிகா சகோதரர்கள் என்றழைக்கபடுகின்றனர். பாமரர்களும் அறியும் வண்ணம், கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்த பல விதியாசமான நிகழ்ச்சிகளையும், போட்டிகளையும் நடத்துபவர்கள்.

மைசூரில் பிறந்து வளர்ந்த நாகராஜ் மற்றும் டாக்டர்.மஞ்சுநாத் இருவரும் மைசூர் சகோதரர்கள் என்றழைக்கப்டுகின்றனர். வயலின் உலகில் இவர்கள் தங்களுகென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளனர்.

சிறு வயதிலேயே சின்மயானந்தா ஸ்வாமிகளின் ஆசிகள் பெற்ற உமா மற்றும் ராதிகா இருவரும் சின்மயா சகோதரிகள் என்றே அழைக்கப்படுகின்றனர். மதுரை சேஷகோபாலன் மற்றும் நெய்வேலி சந்தானகோபாலன் அக்கியோரிடம் சங்கீதம் பயின்று வருகின்றார்கள்.

சங்கீதத்த்தில் முதுகலைப் பட்ட்டதாரிகளான ரூபா மற்றும் தீபா இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். இருவரும் காசரவல்லி சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

மாயவரம் சகோதரிகள் என்ரழைக்கப்படும் உமா மற்றும் கீதா, இருவரும் லால்குடி ஜெயராமன், மகாராஜபுரம் சந்தானம் மற்றும் கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் சங்கீதம் பயின்றவர்கள்.

சரலயா சகோதரிகள் என்றழைக்கபடும் கவிதா மற்றும் திரிவேணி இருவரும் வாய்ப்பாட்டு மட்டுமின்றி நாட்டியத்திலும் வல்லாவர்கள்.

புவனா மற்றும் லலிதா இருவரும் சாத்தூர் சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

ரமா மற்றும் கீதா இருவரும் செருகுடி சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர். டி.ஆர்.சுப்பிரமணியன் அவர்களிடம் தற்போது சங்கீதம் கற்று வருகிறார்கள்.



திருச்சூர் மோகன் என்ற மிருதங்கக் கலைஞரின் புதல்வர்கள் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ராம்குமார் இருவரும் திருச்சூர் சகோதரகள் என்றழைக்கப்டுகின்றார்கள். இருவரும் ஆடிட்டர் தொழில் செய்பவர்கள்.

சிவரஞ்சனி, நளினகாந்தி என்ற ராகங்களின் பெயரைக் கொண்ட இந்த சகோதரிகள் ராகம் சகோதரிகள் என்ற பெயரிலேயே அழைக்கப்ப்டுகின்றனர்.

குடந்தை சகோதரிகள் என்றுஅழைக்கப்படுகின்ற பாமா கண்ணன் மற்றும் மஞ்சுளா.

பைரவி மற்றும் மாளவி சகோதரிகள்.


பிரபல நாதஸ்வரக் கலைஞரான டாக்டர்.ஷேக் சின்ன மௌலானா அவர்களின் பேரன்களான காசிம் மற்றும் பாபு, தாத்தாவின் வழியிலேயெ நாதஸ்வரக் கலைஞர்களாகப் பரிமளித்து வருகின்றார்கள்.

நாதஸ்வரக் கலைஞர்களான மோகன்தாஸ் மற்றும் வசந்தகுமார் இருவரும் மூத்த செம்பனார்கோயில் சகோதரர்கள் வழி வந்தவர்கள். இவர்களும் செம்பனார்கோயில் சகோதரர்கள் என்றேயழைக்கப்டுகின்றனர்.



மேண்டலின் என்ற மேற்கத்திய இசைக் கருவியினை கர்நாடக இசைக்கு அறிமுகப்படுத்தி அதில் அகில உலகப் புகழ்பெற்ற மேண்டலின் ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜேஷ்.


ராம்நாத் ஐயர் மற்றும் கோபிநாத் ஐயர் இருவரும் ஐயர் சகோதர்கள் என்றழைக்கப்டுகின்றார்கள். ஆஸ்டிரேலியாவில் வசிக்கும் இவர்கள் பிரபல வீணைக் கலைஞர் பிச்சுமணி அவர்களின் சீடர்கள்.

ஸ்ரீஉஷா மற்றும் ஸ்ரீஷா இருவரும் மேண்டோலின் சகோதரிகள் என்றழக்கப்படுகின்றனர்.தற்போது பிரபல் வயலின் கலைஞர் கன்னியாகுமரி அவர்களிடம் பயின்று வருகின்றனர்.



மங்களூரில் வசிக்கும் லாவண்யா மற்றும் சுபலக்ஷ்மி இருவரும் ஸாக்ஸபோன் வாசிக்கும் பெண் கலைஞர்கள். இருவரும் ஸாக்ஸபோன் சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

வட இந்திய இசையில் வல்லவர்களான உமாகாந்த் குண்டேச்சா மற்றும் ரமாகாந் குண்டேச்சா இருவரும் குண்டேச்சா சகோதரகள் என்றழைக்கப்படுகிறார்கள்.

டொரொன்டோ நகரில் வசித்து வரும் அஸ்வின் ஐயர் மற்றும் ரோகின் ஐயர் இருவரும் டொரொன்டோ சகோதரர்கள் என்றழைக்கபடுகின்றனர். பிரபல கலைஞர் எஸ்.ஆர்.ஜானகிராமன் அவர்களிடம் இசை பயின்று வருகின்றனர்.

சமீப காலமாகப் பாடிவரும் பாவனா மற்றும் ஸ்வாதி இருவரும் சிவசுப்பிரமணியம் சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

விடுபட்டவர்கள் பெயர் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்

- சிமுலேஷன்