Wednesday, October 21, 2009
Saturday, October 17, 2009
சங்கீதச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன்

திரை இசையை படைத்த இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரைப் பற்றி, "திரை இசை அலைகள்" என்ற ஒரு முழுமையான படைப்பைத் தந்த கலைமாமணி வாமனன் எழுதிய இன்னமொரு சரித்திரப் புத்தகம் இது. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற இறவாத படங்களுக்கு சிறந்த முறையிலே இசை அமைத்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களது சரித்திரத்தினை 300 பக்கக்களில் சுவையாகச் சொல்லியிருக்கின்றார் வாமனன்.- ஆர்ய மாலா
- சிவகவி
- ஹரிதாஸ்
- ஜகதலப்ரதாபன்
- ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
- மந்திரி குமாரி
- தூக்குத் தூக்கி
- நான் பெற்ற செல்வம்
- மதுரை வீரன்
- அம்பிகாபதி
- ஆரவல்லி
- வணங்காமுடி
- உத்தமபுத்திரன்
- காதவராயன்
- சாரங்கதாரா
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- கப்பலோட்டிய தமிழன்
- அரசிளங்குமரி
- பட்டினத்தார்
- தியாகராஜ பாகவதர் நடித்துப் புகழ் பெற்ற "சிவகவி" என்ற திரைப்படத்தின் கதையினை எழுதியவர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.
- அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில் ஜி.ராமனாதன் அமைத்த அழகான பாடல் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும்.
- ஒரு குறிப்பிட்ட பாடல், படத்தின் உச்சக்கட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் இழுவை என்று யாரோ கூறிவிட, படத்தின் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் பாடலைக் கத்தரித்து விடலாம் என்று எண்ணத் தொடங்கினார். இசை அமைப்பாளரான ராமநாதனுக்கு தூக்கிவாரிப்போட்டதாம். அவர் மிகுந்த உற்சாகத்துடன் இசை அமைத்த் பாடல் அது. "படம் வெளியானதும் முதல் நாள் மட்டும் இந்தப் பாட்டு இருக்கட்டும். மக்களின் ரசனையைப் பார்த்துவிட்டு, பாடல் எடுபடவில்லை என்றால் அதை நீக்கி விடுவோம்" என்று சுந்தரத்திடம் பாடலுக்கு ஒரு நாள் வாய்தா வாங்கினார் ராமநாதன். படம் வெளியாகி பார்த்துவிட்டுச் சென்ற ரசிகர்கள் அனைவரும் முணுமுணுத்துக் கொண்டே சென்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் "மந்திரி குமாரி". பாடல் "வாராய்...நீ வாராய்.. போகும் இடம் வெகு தூரம் இல்லை நீ வாராய்" திருச்சி லோகனாதனின் அருமையான் குரலிலே வந்த அந்தப் பாடல் கத்திரியிட்மிருந்து மயிரிழையில் தப்பிய ஒரு படைப்பு.

- கைரோ ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் சிவாஜி கணேசனுக்கு சிறைந்த நடிகருக்கான் பதக்கம் கிடைத்ததென்றால், சிறந்த இசை அமைப்பாளர்ருக்கான விருது ஜி.ராமநாதனுக்கு வழங்கப்பட்டது (படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்). எகிப்து அதிபர் நாஸர் இந்தியா வந்த போது, ராமநாதன் அவர்களைப் பாராட்டும் வகையில், ஒரு வெள்ளி வீணையை அளித்து மகிழந்தாராம்.
- சிவாஜி. எம்.ஜி.ஆர் போல பாடகர்களில் அந்தக் காலகட்டத்தில் புகழ் அடைந்தவர்கள் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர். இந்த இருவரின் திரையிசை வாழக்கைக்கு பெரிதும் காரணமாக இருந்தவர் ஜி.ராமநாதன் அவர்களே.
- ராமநாதனின் மகள் சாயிதேவியின் மகள் உமாமகேஸ்வரியை மணந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர்.
- இந்தப் புததகத்தில் ராமநாதன் அவர்களது வாழ்க்கையை மட்டுமின்றி, அவர்தம் சம்பந்தப்பட்ட பலரது வாழ்க்கைச் சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளார். உதாரணம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பெரிதும் அடிபட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர். இவை தவிர பல அரிய அந்தக் காலத்துப் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
பதிப்பு: மணிவாசகர் பதிப்பகம், மதுரை
வெளியீடு: 2006
விலை: Rs.100.00
Thursday, October 15, 2009
சிமுலேஷன் கவிதைகள்
அவசரமாய் ஆட்டோவில் பறந்தாலும்,
படகுக் காரில் பவனி வந்தாலும் பாதியில் நிறுத்தித் துப்பு.
பன்றிக் காய்ச்சல் பரப்பு.
-----0-----
நாலு படமும் நாற்பது நாள் ஓடியது;
நடிகர் பொழப்பு நாறிப் போச்சு;
பாலபிஷேகம், பீரபிஷேகம்.
-----0-----
“‘கேக்கை எடுத்து முகத்தில் அடிப்பது கேவலமா இருக்கு!
ஆசிட் முட்டை அடித்து விளையாடலாமா?” கேட்டது,
சீரியல் பார்க்கும் சித்தியின் பேத்தி.
-----0-----
ஜாமூன், ஜாங்கிரி,
வறுவல், பொரியல், துவையல்.
எச்சில் இலைகள்.
-----0-----
நில்,
கவனி,
பிச்சை போடு,
செல்.
-----0-----
“கடை விரித்தேன்;
கொள்வாரில்லை”
விளம்பரம் செய்தாயா?
-----0-----
ஆழ்துளைக் கிணறுகள் வெட்ட,
அதில் விழும் குழந்தைகளை மீட்க
அமைச்சகம் ஒன்று அமைப்போமா?
ஆன்மீகத்திற்கு ஒரு முகம்
அனானியாய் எழுத ஒரு முகம்
குஜாலாய் எழுத ஒரு முகம்
கும்மியடிக்க ஒரு முகம்
அலுப்பாயிருக்குதமிழ் வலையுலகம்.
Tuesday, September 22, 2009
Saturday, September 12, 2009
ஸ்டண்ட் மாஸ்டரிடம் கற்றுக்கொண்ட சங்கீதம்
"மின்னல் கொடி" 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ரீநிவாசராவுடன் (போலீஸ் அதிகாரி), கே. டி. ருக்மணி (மின்னல் கொடி, மோகினி), பாட்சா (வில்லன்), கொக்கோ (காமெடி நண்பன்) ஆகியோர் நடித்தனர். மோகினி என்ற இளம்பெண் மின்னல் கொடி எனும் புரட்சிக்காரன் சாகும் தருவாயில் தன் கடமைகளை நிறைவேற்றுமாறு கேட்க, முகமூடி ஆணுடை தரித்து தொடர்ந்து மின்னல் கொடியாகி எதிரிகளை அழிக்கிறாள். தீயவர் அழிந்து காதலர் இணைவதோடு படம் சுபமே முடிகிறது.
பஸ்மாசூர மோகினி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்."பாக்ய லீலா" 1938 ஆம் ஆண்டு மீண்டும் கே. அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த வெளிவந்த இன்னொரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்திலும் பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ், எஸ்.ஆர்.பத்மா மற்றும் கே.டி.ருக்மிணி ஆகியோருடன் கதாநாயகனாய் நடித்தார். "ஜெய பாரதி" 1940 ஆம் ஆண்டு ராஜா யாக்னிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ், எம். ஏ. ராஜமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். "நண்பன்" 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அவர் இயக்கிய மற்றொரு படம் ஷாந்தா (1942). "வீர வனிதா" 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நனுபாய் பட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், சகாதேவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஜீவ ஜோதி" 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கே. முல்தணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஸ்ரீநிவாச ராவ் இயக்குநர், இசை வித்தகர் மட்டுமல்லாது ஒரு சிறந்த ஸ்டண்ட் கலைஞராகவும் இருந்து ஒரு பன்முககக் கலைஞராக விளங்கினார். துக்ளக் இதழில் தொடர் கட்டுரை எழுதிய முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள், ஸ்ரீநிவாச ராவின் ஸ்டண்ட் படங்கள் குறித்து விபரமாக் எழுதி இருந்ததாக ஞாபகம். என்னென்ன படங்கள் என்று நினவில்லை.
மெல்லிசையில் புலமை பெற்ற ஸ்ரீநிவாச ராவ், எம்.எஸ் அவர்களுக்குப் பல் வேறு ஹிந்துஸ்தானி பஜன்ஸ் சொல்லிக் கொடுத்துள்ளார். மேலும் பல்வேறு சூர்தாஸ் பஜன்ஸ்க்கும் இசையமைத்துள்ளார். இவருடைய பஜனனகளில் யாரும் கேள்விப்படாத பல புதுமையான மற்றும் இனிமையான் ராகங்களைப் பயன்படுத்தினார். உதாரணமாக, பட்தீப், கௌன்ஸி கானடா, பஞ்சம ராகேஸ்ரீ, மிஸ்ர பத்மாவதி ஸாரங், ஜயந்த மல்ஹார், மிஸ்ர ஜோகியா, திலக் காமாஜ் போன்ற இந்த இனிமயான ராகங்களில் அமைந்த பாடல்களின் அழகினை வார்த்தைளில் விவரிக்க முடியாது.
தனது இறுதி நாட்களில், மயிலை பாரதீய வித்யா பவனில் ஹிந்துஸ்தானி பஜன்ஸ் சொல்லிக் கொடுத்து வந்தார். டாக்டர். மாதங்கி ராமக்ருஷணன், தங்கம் அய்யா துரை, ஒய்.ஜி.சுந்தர் (தபலா) ஆகியோர் இவரிடம் பயின்றும், இசைத்தும் வந்தனர். சமீபத்தில் 1988-90 களில் நானும் இங்கே ஒரு உறுப்பினன். அப்போது ஸ்ரீநிவாச ராவ் அவர்களின் அருமை, பெருமையெல்லாம் தெரியவில்லை. வெகு நாட்களுக்கும் முன்பு, 90கள் என்று நினைக்கின்றேன் ஹிந்து நாளிதழில் அவரை பற்றி விரிவான் கட்டுரை ஒன்று வந்திருந்தது.அதையும் பத்திரப்படுத்தாமல் விட்டேன். சில நாட்களுக்கும் முன்பு முக்தா ஸ்ரீநிவாசன் அவர்களின் புத்தகம் படிக்கும்போது, ஸ்ரீநிவாச ராவ் அவர்களைப் பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்று தோன்றியதால் எழுந்த பதிவு இது. அவரை பற்றி மேலதிக விபரங்கள் ராண்டார் கை அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவரை எப்போதாவது பார்த்தால் கேட்க எண்ணியுள்ளேன். அது வரை, வலைப் பதிவர்கள் யாரேனும் மேலதிக விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் தெரிந்தால் / இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மேலும் 88-90களில் என்னுடன் பாரதீய வித்யாபவனில் ஸ்ரீநிவாச ராவ் அவர்களிடம் பஜன் கற்றுக் கொண்ட அலம்னிகளும் தங்களிடம் ஏதேனும் ஒலிப் பேழை இருந்து தகவல் தெரிவித்தால் தன்யனாவேன்.
ஸ்ரீநிவாச ராவ் அவர்கள் இசையமைத்த 'பட்தீப்' ராகத்தில் அமைந்த பஸ்வேஸ்வரவசன் அவர்களின் பஜன் ஒன்றினை நான் பாடி தரவேற்றம் செய்ய எண்ணியும், ராண்டர்கையையும், ஒய்.ஜி.சுந்தர் அவர்களையும் தொடர்பு கொண்டு ஸ்ரீநிவாசராவ் அவர்களது புகைப் படத்தையும் பெற்று இந்த இடுகையை முடிக்க வேண்டுமென்று வெகுநாட்களாக இந்த இடுகை முற்றுப் பெறாமலே இருந்தது. இரண்டு நோக்கங்களும் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்ததாலும் இதற்கு மேலும் தள்ளிப் போடக்கூடாதென்றெண்ணியதாலும் இன்று இந்த இடுகையை முடிவு செய்து வெளியிடுகின்றேன்.
புகைப்படமும், ஒலிப்பதிவும் கிடைக்கும்போது அவற்றைப் பின்னொரு நாளில் வலையேற்றுகின்றேன்.
- சிமுலேஷன்
Monday, August 03, 2009
கலக்கலா ஒரு கலாச்சாரம்
“என்ன கபிலன். கேள்விப்பட்டேன். அடுத்த வாரம் சென்னை போகப்போறதா...”
“ஆமா ஐயா. என்னுடைய ஆராய்ச்சியை முடிச்சுட்டேன். அடுத்து என்ன பண்ணப் போறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.”
“ஏன். உங்கள மாதிரி ஆட்களை எங்களோட கலிபோர்னியா யூனிவர்சிட்டிலே கொத்திக் கொண்டு போய்விட மாட்டோமா? இன்னமும் ரெண்டு நாள்லே உங்களோட பேசறேன் அது சம்பந்தமா. நீங்க இங்க இருந்த அஞ்சு வருஷதுல “தமிழர் பண்பாடு” பற்றி ஆராய்ச்சி பண்ணினது பெரிய விஷயம் இல்லை. ஆனா அத பத்தி சமயம் வரும்போதெல்லாம் இங்க இருக்கற மக்கள்ளுக்கெல்லாம் எடுத்துச் சொன்னீங்க பாருங்க. அது பெரிய விஷயம். அதுவும் சான்டாக்ளரால மட்டும் கிட்டத்தட்ட எழுவது நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கீங்க. எப்படி முடிஞ்சுது இதெல்லாம்?”
“ஐயா! உன்மையிலேயே நான் பண்ணின ஆராய்ச்சி பத்தி எல்லோரோடையும் பகிர்ந்துக்க்ணும்னு ஒரு ஆர்வம்தான். இந்த ஆராய்ச்சியிலே நான் படிச்சுத் தெரிஞ்சுகிட்டதைவிட, பட்டுத் தெரிஞ்சுகிட்டதுதான் அதிகம்.”
“அப்படியா! கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க கபிலன்.”
“ஐயா, என்னோட இந்த ஆராய்ச்சிக்கு ரொம்ம்பவுமே உதவியாய் இருந்ததுன்னா, அது என் குடும்பம்தான். தமிழர் பண்பாடு அப்படின்னு சொன்னா, அதுக்கு உதாரணமா எங்க குடும்பத்தப்பத்தி சொல்லலாம். அதாவது, “விருந்தோம்பல்”, “அடுத்தவங்களுக்கு உதவி செய்யுறது”, “சுற்றுபுறத்தை சுத்தமா வச்சிக்கிறது” அப்படின்னு பல உதாரணாம் சொல்லலாம்.
எங்க வீட்ல எந்த நேரத்துலே எந்த உறவுக்காரங்க வந்தாலும், சாப்பிடாமப் போக முடியாது. எங்கப்பா விட்டாலும் எங்கம்மா விட மாட்டாங்க. அதே மாதிரி, எங்க பாட்டி, பள்ளிக் கூடத்துக்குப் போனதில்லையே ஒழிய, எல்லா இதிகாசமும், இலக்கியமும் படிச்சவங்க. இலக்கியத்திலே பாதி எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அவங்கதான். ஒவ்வொரு வாரமும், சிவ்வயும், வெள்ளியும், அவங்க பூஜை பண்ணிட்டு, எனக்கும் என் தங்கைக்கும், எங்க சித்தப்பா பசங்களுக்கும் இதெல்லாம் அழகாச் சொல்லிக் கொடுப்பாங்க. என்னோட தங்கை பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டின்னு எந்தப் போட்டியாயிருந்தாலும் கலந்துகிட்டு பரிசு வாங்கிட்டு வத்துடுவா. அவ்வளவு ஆர்வம். எங்கப்பா வியாபரத்திலே நல்லா சம்பாதிகிறார். ஆனா ஊதரித்தனமா செலவு செய்யறது பிடிக்கவே பிடிக்காது. அதே சமயம், சம்பாதிக்கிறதுல ஒரு பங்கை தனம், தர்மத்துக்கும் செலவு பண்றதுக்குத் தயங்கவே மாட்டார்.”
“கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு கபிலன். நானும் அடுத்த மாசம் சென்னக்கு வருவேன். வந்தால் உங்களைக் கண்டிப்பா வந்து சந்திப்பேன். வாழ்த்துக்கள்.”
காத்தே பசிபிக் விமானம் சென்னையத் தொட்டபோது அதிகாலை மணி 2. விமான நிலையத்திற்கு யாரையும் வரவேண்டாமென்று சொன்னத்தும் நல்லதாகப்பட்டது கபிலனுக்கு. கஸ்டம்ஸ் சோதனைகள் முடிந்து வீட்டிற்கும் நுழைய காலை மணி ஆறாகி விட்டது.
“என்ன அப்பா. ஒரே அமக்களமா இருக்கு. அமெரிக்காவிலேர்ந்து வர்றது பெரிய விஷயமா?”
“கபிலா. இது உனக்காக மட்டுமில்லை. நம்ம ரித்திஷுக்குகாகவும் தான். அவனுக்கு இன்னிக்குப் பர்த்டே.”
“ஆஹா ரித்திஷ். வா...வா... பிறந்தநாள வாழ்த்திக்கள். எப்படிடா படிக்கிறே?”
“மாமா. அசையாதே. சுட்டுறுவேன்.”
“டேய் . என்னடா இது நிஜத் துப்பாக்கி மாதிரியே இருக்கு?”
“மாமா. இது தாத்தா எனக்கு நேத்திக்கு வாங்கிக் கொடுத்தாங்க.ஐநூறு ரூபாய். எனக்கு இன்னிக்கி பர்த்டே. என்னோட ஃப்ரண்ட்ஸுக்கெல்லாம் சாயங்காலம் பார்ட்டி. அவங்களுக்க்கெல்லாம் ரிடர்ன் கிஃப்ட் கொடுக்கணும். எதுனாச்சும் வாங்கிட்டு வந்திருக்கியா?”
“கொஞ்ச நேரம் பொறு. குளிச்சிட்டு வந்து கிஃப்டெல்லாம் எடுத்துத் தர்ரேன்.”
“கபிலா வாடா. எப்டிடா கண்ணு இருக்கே. பாத்து எத்தினி நாளாச்சு. குளிச்சிட்டு வந்து சாப்பிடு. குட்டித் தூக்கப் போடு. அப்புறமா கடைக்குப் போய், மெழுகுவர்த்தி. கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா, எல்லாம் வாங்கிட்டு வந்திடு”
“யாருக்கும்மா”
“எல்லாம் ரித்தீஷோட ஃப்ரண்ட்ஸுக்குத்தான். இன்னிக்கி சாயந்தரம் பர்த்டே பார்ட்டி இல்லியா?”
“கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா இதெல்லாம் ஒரே நேரதிலே பசங்க சாப்பிட்டா என்னவாகும்”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா. அவுங்களுக்கு இதெல்லாம் பழகிப் போயிருக்கும்”
“சரி. சரி. கோயிலுக்குப் போயிட்டு வந்தாச்சா?”
“இல்லைப்பா. இன்னம் இல்லை; இன்னிக்கி டீ.வியிலே நடிகை தயனநாரா பேசுனாங்க. அவங்களோட யார் வேணும்னாலும் பேசலாம். தாத்தா போன் போட்டுப் பேசிச்சு. கொஞ்ச நேரத்திலே ஒளிபரப்பாகப் போவுது.”
“அப்படியா! தாத்தா என்னம்மா பேசினார்?”
““என்ன பேசறது. அவருக்குக் கையே ஓடலை. லைன் கெடச்சதே பெரிய விஷயம். ஒங்களோட பேசணுன்னு ரொம்ப நாளா நெனைச்சேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” அப்படீன்னு சொல்லிட்டுப் போனை டொக்குன்னு வெச்சிட்டார்.”
“அப்படீன்னா சாயந்திரம் கோயிலுக்குப் போறோமா?”
“சாமி எங்கப்பா போகப் போகுது? அடுத்த வருஷம் பாத்துக்கலாம். பர்த்டே பார்ட்டிக்கு எற்பாடு பண்ணனும்லே.”
“அண்ணா, எப்படிண்ணா இருக்கே. நல்ல வேளை நீ இன்னிக்கி வந்தே. நாளைக்கு என்னை கார்லே எக்மோர் கொண்டு போய் விடறியா? அழகி போட்டி, செமி ஃபைனல்லே ஜெயிச்சுட்டேன். அடுத்தது ஃபைனல்ஸ்தான்.”
“என்னப்பா இது? என்னமோ அழகிப் போட்டி அது இதுங்றா”
“ஆமாம்ப்பா. இப்பவே மிஸ்.அண்ணாநகர் ஆகிட்டா. அடுத்து ஜெயிச்சா, மிஸ்.சென்னைதான். அப்புறம் நமக்கு எல்லாம் பெருமைதானே.”
“சரி.சரி. பாட்டி எங்கே? பாட்டியைப் பாக்கவேயில்லையே.”
“பாட்டி பாரு டீ.வி. ரூமுக்குள்ளே இருக்கு”
என்னது டீ.வி ரூமா? என்ன பாட்டி, ரொம்ப வேலையோ?
“ஆமாண்டா. நேத்திகே, “மொட்டுக்கள்” பாக்கலை. கரெக்டா எழு மணிக்கு உங்க சித்தப்பா வந்து கழுத்தறுத்துட்டான். நல்ல வேளை. மறுநாள் காலைலே மறு ஒளிபரப்புறான். “மொட்டுக்கள்” ரொம்ப சூப்பராப் போவுது. ஒரே சஸ்பென்ஸ். ராஜாவைக் கொலை பண்ணினது யாருன்னே தெரியலை. அவன் பொண்டாட்டி சந்தியா? இல்லை. அவளோட கள்ளக் காதலன் சாரதியா. இல்லை ராஜாவோட அண்ணன் மூர்த்தியா? யாருன்னே கண்டு பிடிக்க முடியலை.”
“அது சரி, எப்படி உங்க ராமாயணம். மகாபாரதம் எல்லம் போகுது. பெரியபுராணம் மனப்பாடம் பண்ணனும்னு சொல்லிக்கிட்டே இருப்பீகளே. முடிச்சிட்டீங்களா?”
“இல்லைடா. ரெண்டு சீரியல் பாக்கறதுக்குள்ளேயே களைப்பா ஆயிடுது. அதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது”
“கபிலா போன அடிக்குது பாரு. அமெரிக்காலேர்ந்துன்னு நெனைக்கிறேன்”
“கபிலா. நாந்தான் வீழி பேசறேன். சென்னை போய்ச் சேர்ந்தாச்சா? முக்கியமான விஷயம். கலிபோர்னியா யூனிவசிட்டிலே ஒரு இடல் உனக்காகப் பிடிச்சிட்டேன். அடுத்த மாசம் சேரனும். ஆனா, இன்னிக்கே உன்னோட சம்மதம் வேனும். வெளீநாட்டு மக்களுக்கு நம்ம பண்பாடு, கலாசாரம்னு சொல்லிக் கொடுத்த உங்களை விட நாங்க தயாரா இல்லை. என்ன சொல்லறே?””
“ஐயா. நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, என்னை மன்னிக்கணும். நான் இப்ப உள் நாட்டிலே பண்ண வேண்டிய வேலையே நெறைய இருக்கு.”
-----0-----
- சிமுலேஷன்
Friday, February 06, 2009
ரவி சுப்பிரமணியன்

எனது "ராகசிந்தாமணி" புத்தகத்தினைப் படித்துவிட்டு தொலைபேசியில் கருத்துக்களைக் கூறியவர்களில் ரவி சுப்பிரமணியமும் ஒருவர். நாலைந்து முறை பேசிய போதும், நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சென்ற வாரம்தான் கிடைத்தது. சாகித்ய அகாடமியின் விருது பெறுபவர்கள் பொதுவாகச் சற்றே பழுத்தவர்களாக இருப்பார்களென்று நான் எண்ணியிருந்த வேளையில், அதன் பரிந்துரைக் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் ரவி சுப்பிரமணியம் நடுத்தர வயதினராக இருந்தது சற்றே வியப்பை அளித்தது. கர்நாடக சங்கீதமும், பரத நாட்டியமும் கற்றிருக்கின்ரார் என்றபோது அதிகரித்த வியப்பு, சொந்த ஊர் கலைக்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தச் சேர்ந்த கும்பகோணம் என்றபோது புரிந்து அடங்கியது.
இலக்கியத்தில் பெரிதும் பரிச்சயம் கொண்ட ரவி சுப்பிரமணியம், சமீப காலமாக சிறு கதைகளும் புனையத் துவங்கியுள்ளார். கச் சமீபத்தில் கல்கி இதழில் வெளியான "அதுவும் தாத்தா சொன்னதுதான்" மற்றும் விகடனில் வெளியான " உப்பிலியும் உருத்திரங்கண்ணனாரும்" ஆகிய கதைகள் கர்நாடக சங்கீதத்தினை அடிநாதமாகக் கொண்டவை. இயல்பான இவரது நடையை வெகுவும் ரசித்தேன். தொண்ணூறுகளிலேயே தனது "ஒப்பனை முகங்கள்" தொகுப்பின் மூலம், நவீன தமிழ்க் கவிதை உலகில் தனது வருகையைப் புலப்படுத்தியவர். மேலும் "காத்திருப்பு" மற்றும் "காலாதீத இடைவெளி" ஆகிய கவிதை நூல்களுக்கும் இவரே ஆசிரியர். இவற்றியெல்லாம் நான் இனிமேல்தான் படித்துப் பார்க்க வேண்டும். முதல் கவிதைத் தொகுப்பே பரிசு பெற்றதாக அறிகின்றேன்.
இளையராஜா அவர்களுடன் நட்பு பாராட்டும் ரவி சுப்பிரமணியன், தம் கவிதைகளுக்கு அவரையே இசையமைக்கவும் வைத்திருக்கின்றார். "தேஷ்" ராகத்தில் அமைக்கப்பட்ட அந்தக் கவிதையை அழகுறப் பாடுகின்றார். பாடலின் வரிகளை விட, பாடலுக்கு அமைக்கப்பட்ட இசையினை விட, ஒவ்வொரு சொற்களுக்கும் எப்படி இந்த இசை ஏற்ற இறக்கங்களுடன் பொருந்தி வருகின்றது என்று அவர் விளக்கியது ரசிப்புத்தன்மையிலும் இவர் ஒரு வித்தகர் என்று தெளிவுபடுத்தியது. இந்திரா பார்த்தசாரதி, வைரமுத்து, கனிமொழி என்று பலருடனும் இவரது நட்பு வட்டம் படர்கின்றது. இலக்கியம், இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் புலமை பெற்றிருந்தாலும், ரவி சுப்பிரமணியத்தின் தனிச்சிறப்பு ஆவணப் படங்கள் எடுப்பதாகும். புகழ்பெற்ற தொலக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள இவர், கணக்கிலடங்கா ஆவணப் படங்கள் எடுத்துள்ளார்.
இவரது தொப்பியின் சமீபத்திய இறகு, "ஜெயகாந்தன்" குறித்த ஆவணப் படமாகும். "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்" என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தினை தயாரித்தது இசைஞானி இளையராஜா இலக்கியப்
பெருமன்றமாகும். இளையராஜாவே இதற்கு இசையும் அமைத்துள்ளார். ஓவியர் ஆதிமூலம் அவர்களின் படைப்புகள் அழகுறப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரவி சுப்பிரமணியத்தின் எண்ணம், எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படைப்பில், நேர்காணல் மற்றும் பின்னணிக் குரல் செய்திருப்பவரும் அவரே.
தனது புதுமையான மற்றும், புரட்சியான கருத்துக்களால் உலக வாசகர்களைக் கவர்ந்த ஜெயகாந்தன் அவர்களைப்பற்றிய ஒரு ஆவணப்படம் என்றால், அது நிச்சயம் தனிதன்மையுள்ளதாக இருக்க வேண்டுமென்ற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை
ரவி சுப்பிரமணியன் நிச்சயம் வீணாக்கவில்லை. படத்தினைப் பார்க்க உட்கார்ந்தால் எழுந்திருக்க இயலாதபடி, வெகு சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கின்றார். டெஸ்ட் மேட்ச் போலத் துவங்கும் இந்த ஆவணப் படம், முடிவினை நோக்கிச் செல்லச் செல்ல ஒரு நாள் அல்லது 20:20 கிரிக்கெட் போல வேகம் எடுத்துச் செல்கின்றது. "ராமன் நல்லவனா?", "கெட்ட பழக்கங்களை ஏன் நண்பர்களுக்கும் பழக்குகின்றீர்?", "இன்றைய காலகட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு தேவையா?" என்று மாறி மாறி ரவி சுப்பிரமணியன் கூக்ளி, பவுன்சர் என மாறி மாறிப் போட, ஜெயகாந்தன் (ஜெயசூர்யா போல) அடித்து ஆடுவதைப் பார்க்கப் பரவசமாக இருக்கின்றது.
ரவி சுப்பிரமணியன் அவர்கள் மென்மேலும் இது போன்ற நல்ல பல ஆவணப் படங்கள் எடுப்பாரென்றும், கலை உலகில் பல படைப்புகள் தருவாரென்றும் நம்புகின்றேன்.
- சிமுலேஷன்
Sunday, February 01, 2009
சமீபத்தில் படித்தவையும் மீள் வாசிப்பு செய்தவையும்
படித்ததில் பிடித்தது குறித்துக் குறிப்பிடுவேன். நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
- சிமுலேஷன்
Tuesday, January 06, 2009
இசை விழா - 2008-09
2. அசத்தும் அரங்கம்: அன்றும், இன்றும் கலைஞர்களையும் ரசிகர்களையும் கவரும் மியூசிக் அகாடெமியின் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் ஹால். மேலும் வேலட் பார்ர்க்கிங், மற்றும் வயதான ரசிகர்களைக் கையைப் பிடித்து இருக்கையில் அமர வைக்கத் தொண்டர்களை அமைத்துக் கொடுத்தது போன்ற value added service செய்து கொடுத்த மியூசிக் அகாடெமி.
3. ஹோம்லியான அரங்கம்: மயிலை லஸ்ஸில் தாத்தா கடையில் புத்தகங்கள் வாங்கிய பின், சட்டென்று நுழையத் தோதாக அமைந்த எளிமையான ஸ்ரீனிவாஸ ஸாஸ்திரி ஹால். போரடித்தால் கீழ்தளத்திலுள்ள ரானடே லைப்ரரி சென்று பேப்பர் படிக்கலாம்.
4. மீண்டும் வரத் தூண்டிய இடம்: மியூசிக் அகாடெமி வளாகத்தில் அமைக்கப் பெற்றுள்ள டிஜிட்டல் ஆடியோ லைப்ரரி. அமைத்துக் கொடுத்த் TAG நிறுவனத்திற்கு நன்றி.
5. மிஸ் பண்ணியது: நாரதகான சபாவின் வழமையான "ஞானாம்பிகா" கேண்டீன் மற்றும் அவர்களது கனிவான உபசரிப்புக்கள்.
6. ரசித்த கேண்டீன்: பார்த்தசாரதி சபாவின் கேண்டீன் மற்றும் அவர்களது சூடான போண்டா.
7. புதுமையான சேவை: சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனுக்கு "ஜோக்"காக எழுதியதை, இன்று நடைமுறையில் இலவச சேவையாக வழங்கிய Fortune நிறுவனத்தின் "கர்னாடிகா எக்ஸ்பிரஸ்" என்ற அரங்கங்களுக்கிடையேயான ஷட்டில் ஸர்வீஸ்.
8. மார்கழி பஜனை: மயிலாப்பூர் கபாலி கோவிலின் மாடவீதிகளில், மார்கழி மாத அதிகாலை வேளைகளில், அரைமணி இடைவெளிகளில் கிட்டத்தட்ட அரை டஜன் பஜனை கோஷ்டிகளைக் காணலாம். பாபநாசம் சிவன் அவர்களது புதல்வி ருக்மிணி ரமணி அவர்களின் குழுவில் கலந்து கொண்டது ஒரு் நாள் மட்டுமே.
9. ரசித்த இளம் ஆண் பாடகர்: கிட்டத்தட்ட மூன்று கச்சேரிகள் கேட்ட பின்னும் அலுக்காத அபிஷேக் ரகுராம். அகாடமியில் பாடிய 'காபி' ஏ க்ளாஸ். "பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருந்தது" என்று சொல்லத் தோன்றியது. ஒரு பாடலின் நடுவே,"பெங்களூரிலிருந்து நேற்றைய தினம் வந்திருக்கும் எனது நண்பருக்காக இந்தப் பாடலை டெடிகேட் செய்கின்றேன்" என்று அகாடெமி மேடையில் தைரியமாகச் சொன்னது மட்டும் கொஞ்சம் ஓவர்தான்.
10. ரசித்த இளம் பெண் பாடகர்: நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் புதல்வி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் ரசிகர்களை மகிழ்வித்தார்.
11. ரசித்த இரட்டையர்கள்: திருச்சூர் சகோதரர்கள் வாசிக்கும் எல்லாக் கச்சேரிகளுக்கும் மோகன் என்ற வித்வான் மட்டுமே மிருதங்கம் வாசிக்கின்றாரே என்று வியந்து நின்றபோது, அவரே இந்த இரட்டையரின் தந்தை என்று புரிந்தது. இருவரும் மாறி, மாறி ராகம் பாடுவதுவும், ஒருவர் ராகம் பாடும்போது, மற்றவர் கார்வை பிடிப்பவதுவும் சுகமாக இருந்தது.இளமையான இந்த இரட்டையரிடம், "எக்ஸ்க்யூஸ் மீ, எந்தக் காலேஜ்லே படிக்கறீங்க?" என்று கேட்கக் போக, இருவரும் C.A படித்து முடித்து ப்ராக்டீஸ் செய்வதாக அறிந்து அதிர்ச்சி. மூத்தவருக்குத் திருமணமும் ஆகிவிட்டதாம். பார்தசாரதி சபா, ப்ரும்மகான சபா, கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் என்று அவர்கள் பாடும் அரங்கிற்கெல்லாம் துரத்தித் துரத்திப் போய்க் கேட்டேன். பெத்தாச்சி அரங்கில், 6 மணிக்குத் துவங்க வேண்டிய கதக் நாட்டிய நிகழ்ச்சி தாமதமாக, ப்ரும்மகான சபாவின் பாலு, மேலும் நேரம் ஒதுக்கித் தந்தார். கிடைத்த வாய்ப்பினை நழுவ விடாமல் திருச்சூர் சகோதரர்கள் அடித்து ஆடிய, " ஜோக் (JOG)" ராகத்தில் அமைந்த RTP, ரசிகர்களுக்கு ஒரு புத்தாண்டுப் பரிசாகும்.

12. ரசித்த லெக்-டெம்: அகாடெமியில் நடைபெற்ற, ஸ்ரீராம் பரசுராம் அவர்களின் "கர்நாடக இசையில் ஹிந்துஸ்தானி ராகங்களின் பங்கு" குறித்த விரிவுரையும் விளக்கமும். Shriram, What a vocabulary, man!

(மேலே இஞ்சிக்குடி குழுவினர்: கீழே: ரசிகப்ரியா/சங்கீதப்ரியா அமைப்பபளர்கள்; சில பதிவர்களும் படத்தில் உண்டு. கண்டுபிடியுங்கள்)
13. ரசித்த லெக்-கான்: தினமும் 80000 ஹிட்ஸ்க்கு மேல் பெறும் sangeethapriya.com அமைப்பின் விருது வழங்கும் விழாவின் முடிவினிலே இடம் பெற்ற "மல்லாரி" குறித்த விரிவுரையும், நாதசுர இசை நிகழ்ச்சியும். வழங்கியது இஞ்சிக்குடி எம். சுப்பிரமணியன் குழுவினர், ராகசுதா அரங்கினில். சுபபந்துவராளியில் பிஸ்மில்லாகானனக் கண்டோம்.
14. ரசித்த நாட்டிய நாடகம்: Three Musketeers என்ற ஃப்ரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு "Man with Iron Mask" என்ற தலைப்பில் கலாக்ஷேத்ரா புகழ் ஸ்ரீஜித் க்ருஷ்ணா குழுவினர் நடத்திய நாட்டிய நாடகம். ஃப்ரெஞ்சு உடைகள் அணிந்து வந்த ஆண் கலைஞர்கள் ஆடிய பரதம் பிரமாதம். ஒப்பனை, அரங்க அமைப்பு, கோரியோக்ராபி, வேடப் பொருத்தம் என்ற வகையில் கெமிஸ்ட்ரி, ஃபிஸிக்ஸ், மேத் என்று எல்லாமே வேலை செய்தது. நாரத கான சபாவில் இருந்த அனவைரையும் கட்டிப் போட்ட இந்த நாட்டிய நாடகம் முடிந்தபின் மணி பார்த்தபோது, இரவு மணி பத்தரை. ஸ்ரீஜித்தின் எந்த நிகழ்ச்சியும் ஏமாற்றுவதில்லை.
15. ரசித்த மியூசிகல் என்ஸெம்பிள்: வயலின் எம்பார் கண்ணனைத் தளபதியாகக் கொண்ட, கடம் கார்த்திக்கின் "Heart பீட்" என்ற வாத்ய விருந்தா. எம்பாரின் "ஜோக்" இராக வாசிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பாரதீய வித்யாபவன் மெயின் ஹாலில் ஒரு முறையும், பார்த்தசாரதி சபாவில் ஒரு முறையும் கேட்டேன். வடமொழியில் ஆராய்ச்சி செய்துள்ள Dr.கார்த்திக் பாடியது பெரும்பாலும் தமிழில். கீ போர்ட் சத்யா வழக்கமான அசத்தல். அதே போல் ரிதம் பேடில் அருண்குமார் அபாரம். குறிப்பாக சந்தூர் ஒலிகளைக் கொணர்ந்தற்கு. கஞ்சிரா புருஷோத்தமன் சொல்லவே தெவையில்லை. இன்று கஞ்சிரா உலகில் அவரே ஆட்சி.
16. சமீபத்திய பிரசுரம்: "Do away with Thematic Concerts!" என்ற தலைப்பில் எழுதிய குறுங்கட்டுரை பிரசுரமானது Kutcherybuzz Newsletter மற்றும் Kutcherybuzzonline.comல்.

(இந்த வருடப் படம் கிடைக்காததால் போன வருடப் படம். ஞாநியும் ஒரு நடுவர்.)
17. சமீபத்திய மகிழ்ச்சி: போன வருடம் மூத்த மகன் ஆதித்யாவுடன் கலந்துகொண்டு "முத்ரா குவிஸ்"ஸில் பெற்றது இரண்டாம் பரிசு. இந்த முறை முதல் பரிசு பெற்றே தீர வேண்டும் என்று வந்த இடத்தில், தகுதிச் சுற்றில் பங்கு கொள்ள வந்தோர் மட்டுமே 50க்கும் மேல். தகுதிச் சுற்றில் தேறிய 12 பேர்களில் பெயரைக் குலுக்கிப் போட மனைவியும், நானும் ஒரே குழுவில் அமைந்தது எதிர்பாராத அதிசயம். இசைக் கலைஞர் Dr.ராதா பாஸ்கர், நடனக் கலைஞர் ரோஜா கண்ணன், தூர்தர்ஷன் புகழ் குவிஸ் மாஸ்டர் சுப்பிரமணியன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு வாய்ப்புகளை நழுவ விடாமல் பதிலளித்துத் தட்டிச் சென்றது முதல் பரிசு தலா ஆயிரம் ரூபாய்.
18. வெறுப்பேத்திய விஷயம்: Lec-dem என்ற பெயரில் மூத்த இசைவாணர்கள் (Musicologists, not Musicians) தங்களது சொந்தக் குரலில் பாடி எரிச்சல் மூட்டியது. பல பேருக்கு சிஷ்யர்கள் இருந்தும் பாடுவதற்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள மனம் வரவில்லை.
19. வியந்த நபர்: அகிரா என்ற ஜப்பானிய இளைஞர். நாரத கான சபாவினருகில் வசிக்கும் அகிராவை எல்லா சபாக்களிலுல் பார்க்கலாம். ஆம். இவர் ஒரு திறமையான புகைப்படக் கலைஞர். இந்திய இசைக் கலைஞர்களைப் புகைப்படம் பிடிப்பதே இவருக்குப் பிடித்த விஷயம். முத்ரா குவிஸ்ஸில், ஆடியன்ஸ் ரவுண்டில் கேட்ட கேள்விக்கு "கரகரப்ரியா" என்று தவறான விடையைச் சொன்னாலும், தனது மழலைச் சொல்லால் மனங்கவர்ந்து ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார்.

20. சமீபத்திய நட்பு: நாரதகான சபாவில் நிகழ்ச்சி துவங்குவதற்கு பத்து நிமிடம் முன்பாகவே வந்து அரங்கிற்கு வெளியே அமர்ந்திருந்த சாருஹாசனிடம் சும்மாப் பேச்சுக் கொடுக்க, அப்போது வந்த என் மாமனார் சந்திரஹாசன் அவர்களுடன் தான் பரமக்குடியில் ஒன்றாகப் பணிபுரிந்த நினைவலைகளைக் கூற, எளிமையாகப் பழகும் அவரின் நட்பு கிடைத்தது. வீட்டிற்குச் செல்ல கார் வரத் தாமதமானபடியால். எல்டாம்ஸ் ரோடிலுள்ள மணிரத்னம்-சுஹாசினி வீட்டில் சாருஹாசனை drop செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. டி.டி.கே சாலையிலிருந்து எல்டம்ஸ சாலைக்கிச் செல்ல இருந்த 5-10 நிமிடங்களில் பேசிய பேச்சுக்களில் அவர்தம் இசையார்வம் வெளிப்பட்டது. "பூச்சி ஸ்ரீநிவாசய்யரின் காபி ராகத் தில்லானாவை ஏன் யாரும் பாடுவதில்லை?" என்றெல்லாம் எளிமயாகப் பேசிக் கொண்டே வந்தார். மெயிலில் தொடர்பு கொண்டால் உடனடி பதில் உத்தரவாதம்.
- சிமுலேஷன்
Thursday, January 01, 2009
மார்கழி ராகம் - விமர்சனம் - Spoiler
எந்த ஆங்கிலப் புத்தாண்டு வருடப் பிறப்பிற்கும் புதிய சபதங்கள் ஏற்பதுவுமில்லை. கோயிலுக்கு செல்வதுவுமில்லை. ஆனால் விடுமுறை தினமாதலால், எதேனும் புதிய நிகழ்ச்சிகள் இருந்தால் தவறாமல் செல்வதுண்டு. இந்த வருடம் புத்தாண்டு விழாவினை முன்னிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, முதலிலும் முடிவிலும் தோன்றியது "மார்கழி ராகம்". சென்னையில் சத்யம் தியேட்டரில், மார்கழி ராகம் பார்க்க வந்திருந்த மயிலாப்பூர், மாம்பலம் மற்றும் மடிப்பாக்க மாமா, மாமிக்களை, மடியில் குண்டு வைத்திருக்கின்றார்களா என்று சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
அணமையில் மறைந்த ஒலிவித்தகர் எச்.ஸ்ரீதர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து படம் துவங்கியது. முதலில், பாம்பே ஜெயஸ்ரீயின் அமைதியான "ஸர்வ மங்கள மாங்கல்யே" என்ற ஸ்லோகத்தினைத் தொடர்ந்து மாயாமாளவககௌளையில் "மாயாதீத ஸ்வரூபிணி". அடுத்து வந்தது சுகமான நீலாம்பரியில் "அம்பா நீலாயதாஷி". இம்முறை நீல நிறப் புடவையில் வந்தார் ஜெயஸ்ரீ. மூன்றாவதாக ரீதிகௌளையில் "ஜனனீ நின்னுவினா". நல்ல உருக்கம்தான். ஆனால் வரிசையாக எல்லாப் பாடல்களுமே சவுக்க காலத்தில் பாடியபடியாலும், பி.சி.ஸ்ரீராமின் மங்கிய காமிரா வெளிச்சத்திலும் சற்றே தூக்கம் வந்தது. "ஜனனீ நின்னுவினா"வில், சரணத்தில் நிரவல் செய்து, "ஜனனீ"யில் ஸ்வரம் பாடினார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் செய்யப்பட்ட கைதட்டல்களைக் கேட்டபோது, சத்யம் தியேட்டரில் இருக்கின்றோமா இல்லை நாரத கான சபாவில் இருக்கின்றோமா என்று தோன்றியது. தனி ஆவர்த்தனம் இடம் பெற்றபோது, யாரேனும் எழுந்து போவார்களோ என்று பார்த்தேன். யாரும் எழுத்து போகவில்லை. எம்பார் கண்ணன் வயலின் வழக்கமான சுகத்துடன் வாசித்தார். மிருதங்கம் பட்றி சத்தீஷ் குமார். இவரும் நன்றாகவே வாசித்த போதிலும், சற்றே அதிகப்படியான "கும்கி"யோ என்று தோன்றியது.
தனி ஆவர்த்தனதில் திடீரென்று மிருதங்கத்தில் அருண் பிரகாஷும், கஞ்சிராவில் புருஷோத்தமனும் சேர்ந்து கொண்டு, 'தனி'யினை பரிமளிக்கச் செய்தார்கள். தனி முடிக்கும் போது, பல்லவியினை எடுத்துக் கொண்டு ரஜனி போல் எண்ட்ரி கொடுத்தார் டி.எம்.கிருஷ்ணா. பொதுவாகக் கச்சேரியின் பின் பகுதியில் பாட வேண்டிய "ஸாரமைன மாடலெந்தோ" என்ற பெஹாக் ராக ஜாவளியுடன் துவங்கினார். பின்னர் வராளி ராகத்தில் ராகம்-தானம்-பல்லவி.
சற்றே சிக்கலான வராளி RTPக்கு ஸ்ரீராம் குமாரின் வயலின் அருமையாக ஈடு கொடுத்தார். சாமா மற்றும் காபியில் ராகமாலிகையில் பாடிய ஸ்வரங்களைக் கேட்டுக் கொண்டெயிருக்கலாம் போல இருந்தது.அடுத்தபடியாக கிருஷ்ணா பாடியது கமாஸ் ராகத்தில் "சீத்தாபதி நாமன சுனா". கமாஸ் ராக உருப்படிக்குப் பின்னர், இம்முறை மீண்டும் ஜெயஸ்ரீ திரையில் தோன்றி, "வடரே சயனம்" என்ற முகுந்தாஷ்டகத்தினை தேஷ், பாகேஸ்ரீ மற்றும் காபி ராகங்களில் பாடினார். பின்னர், கிருஷ்ணா மத்யம ஸ்ருதியில், காபியில் "ஜெகதோதாரணா" பாடினார்.
ஜெயஸ்ரீ சுவானுபூதி என்ற பெயரில் பெரும்பாலான நேரங்களில் கண்ணை மூடிக் கொண்டிருந்தார். ஆனால், கிருஷ்ணாவோ, பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு நல்ல ஊக்கம் தந்து, அவர்களுடன் ஒரு நல்லதொரு interactionம் வைத்திருந்தார். அதனால் அவரை இன்னமும் ரசிக்க முடிந்தது.
ஜெயஸ்ரீ மற்றும் கிருஷ்ணா இருவருமே ஒவ்வொரு பாடலுக்கும் உடை மாற்றம் செய்திருந்தனர். ஆனால் எதுவுமே கண்ணைப் பறிக்காத வகையில் ரம்மியமாக இருந்தது. ஜெயஸ்ரீ செய்திருந்தது அவரின் வழக்கமான எளிமையானதொரு ஒப்பனை. கிருஷ்ணாவின் ராஜ குமாரன் போன்ற பட்டு ஜிப்பாக்களும், ஜரிகை அங்க வஸ்திர உடைகளும் அபாரம். இறுதியாக இருவரும் சேர்த்திசைத்த்து, பாரதியாரின் "வந்தே மாதரம்" அதற்கு அவர்கள் போட்டிருந்த வெண்ணிற உடைகள் மிகப் பொருத்தம்.

சமீபத்தி மறைந்த ஒலி வித்தகர் ஸ்ரீதர் அவர்களுக்கு எதனால் இத்தனை புகழ் என்று யாருக்கேனும் தோன்றினால், மார்கழி ராகம் பார்த்தால் விடை கிடைத்துவிடும். அப்படி ஒரு துல்லியமான ஒலி அமைப்பு. அதே போல், காமிராவைப் பற்றியும் சொல்லி கொண்டேயிருக்கலாம். குறிப்பாக கிருஷ்ணா ஸ்வரங்கள் பாடும்போது, காமிரா கட் செய்து செய்து காட்டுவது அருமையாக இருந்தது.
குறைகள் என்று சொல்ல எதுவும் தோன்றவில்லை. ஆனால் தொன்றிய சில சந்தேகங்கள்.
கஞ்சிராவுக்கு இடம் கொடுத்தவர்கள் கடத்திற்கு இடம் கொடுக்க மறந்ததேனோ?
எப்படியாவது ஒரு தில்லானாவினையும் நுழைத்திருக்கலாமே?
கர்னாடக இசை உலகில் ஒரு முழு நீளக் கச்சேரியை இது போன்று திரை வடிவில் காண்பிப்பது ஒரு புதிய பரிணாமம். இதனை இசை உலகின் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. குறிப்பாக வெளி நாட்டில் வாழும் இசை ரசிகர்கள் இப்படிப்பட்ட முயற்சிகளை வரவேற்பார்கள்.
Pictures Courtesy : http://www.margazhiraagam.com/
- சிமுலேஷன்
Thursday, November 20, 2008
தமிழ்த் திரையிசையில் ஸ்வராக்ஷரம்
ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஏழு ஸ்வரங்களே இராகங்களுக்கு ஆதாரமாகும். அக்ஷரம் என்றால், பாடலில் பொதியப்பட்டுள்ள வார்த்தைகளாகும்.
ஸ்வரங்களைக் கொண்டே அக்ஷரங்களைச் செய்தால் அதுவே ஸ்வராக்ஷரமாகும். இது ஒரு விதமான வார்த்தை விளையாட்டாகும்.
திருவாரூர் ராமசாமிப் பிள்ளை என்பார் எழுதிய மோஹன இராகத்தில் அமையப் பெற்ற "ஜகதீஸ்வரி... கிருபை புரி" என்ற பாடலில், "தாருக்குதவி செய்யும் அடுத்தாருக்குதவி செய்யும் தாய் உனைவிட வேருளதா? தாமதமின்றி வேதபுரி தாசனுக்கருந்த என்பதறிதா, பெரிதா, வரம் தா" என்று தைவதத்தை வைத்து ஜாலம் செய்திருப்பார்.
ஜி.என்.பி அவர்களது 'சதாபாலய", பிறகு,கேதாரத்தில் துவங்கி வலசி என்ற நவராகமலிகை வர்ணத்தில், பதஸரோஜ" என்ற இடம், ஹிந்தொள இராகத்தில் அமைந்த "ஸாமகான லோல", ஆனந்த பைரவியில் அமைந்த மற்றோரு "ஸாமகான" ஆகியவை ஸ்வராக்ஷரங்களுக்கு நல்ல உதாராணங்களாகும்.
திரையிசையில் இவ்வாறு ஸ்வரக்ஷரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாவென்று பார்த்தால், ஒரு சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றது.
அகத்தியர் என்ற படத்தில் வரும், "வென்றிடுவேன்... எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்", என்ற பாடலில் வரும் சில ஸ்வராக்ஷரங்கள்:-
மனிதா மத மனிதா - ம நீ தா... ம த... ம நீ தா
பாதக மனிதா - பா த க... பா நீ தா
சாகசமா - ஸ க ஸ மா
ஸ்வரக்ஷரம் அழகாக அமையப் பெற்ற ஓரிரு தமிழ்த் திரைப் பாடல்களில் ஒன்று, "உன்னால் முடியும் தம்பி" படத்தில் இடம் பெற்ற, "என்ன சமையலோ" என்ற பாடலாகும். இதில் ஸ்வராக்ஷரம் என்பது வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இடம் பெற்றிருப்பது ஒர் சிறப்பம்சமாகும்.
ஸ்வராக்ஷரம் என்றால் என்னவென்று இப்போது பிடிபட்டிருக்கும்.
இப்போது இந்த "என்ன சமையலோ" என்ற பாடலில் வரும் ஸ்வராக்ஷரங்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்.
- சிமுலேஷன்
Thursday, September 25, 2008
செம்மங்குடி மாமாவும் ஏர்போர்ட் கச்சேரியும்
(செம்மங்குடி, லால்குடி மற்றும் திருச்சி சங்கரன்)
"சங்கீதப் பிதாமகர்" என்றழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரை ரசிக்காத பாரம்பரிய கர்நாடக இசையின் இரசிகர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். தனது இடைவிடாத உழைப்பாலும், இசையோடு ஒன்றிப் பாடும் பாவத்தினாலும், எளிமையான வாழ்க்கையாலும் அனைவரின் நன்பதிப்பையும் பெற்றவர் செம்மங்குடி மாமா. குறிப்பாக, ஒரு காலத்தில் இசையுலகில் சிலர் முன்னே, பின்னே இருப்பது சகஜமாக இருந்த போதிலும், தனி மனித ஒழுக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர். தனது தந்தையார் கட்டளையிட்ட ஒரு காரணமாகவே தனது இறுதிநாள் வரை எந்த வெளிநாடுகளுக்கும் சென்றதில்லை அவர். இப்படி எந்த வெளிநாடுகளுக்கும் சென்றிருக்காத செம்மங்குடி அவர்கள் "ஏர்போர்ட் கச்சேரி" என்ற ஒரு கச்சேரி செய்ததாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இரயில் பயணங்களிலோ, இரயில் நிலையங்களிலோ கச்சேரி செய்யும் ஒரு வாய்ப்புள்ளது. அது எப்படி ஏர்போர்ட் கச்சேரி? எனக் குழம்பலாம். மேலும், இந்த ஏர்போர்ட் கச்சேரி எந்த ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? எதற்காக ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? போன்ற குழப்பமான தகவல்கள் உண்டு.
இந்தக் கச்சேரியில் லால்குடி ஜெயராமன் அவர்கள் வயலினும், திருச்சி சங்கரன் அவர்கள் மிருதங்கமும் வாசித்துள்ளதாகத் தெரிகின்றது. சமீபத்தில் 1971ல், மும்பையில் உள்ள ஷண்முகானந்தா ஹாலில் இந்தக் கச்சேரி நடைபெற்றதாகவும், கச்சேரியின்போது, அருகில் பறக்கும் ஆகாய விமானங்களின் சப்தங்கள் கேட்பதாகவும் ஒரு சிலர் சொல்கிறார்கள். இன்னம் சிலரோ, இல்லை இல்லை, இந்தக் கச்சேரி இன்னமும் சமீபத்தில் 1960ல் தாம்பரத்தில்தான் நடைபெற்றது என்றும் கூறுகின்றனர். கடைசியாகக் கிடைத்த தவலின்படி இது தாம்பரத்தில்தான் நடைபெற்றதாகத் திருச்சி சங்கரன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் கச்சேரி நடைபெற்ற இந்த இடத்தருகே ஆகாய விமானங்களின் வரத்து அதிகம் இருந்ததால், செம்மங்குடி மாமா கடுப்பானதாகச் சொல்கிறார்கள். ஒரு சமயத்தில், "வந்துட்டான் அசுரன்"னு அவர் சொல்வதைக் கேட்கும்போது, இது உண்மைதான் என்று புரிகின்றது.
இப்போது ஜெட் ஏர், கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர், கோ ஏர், இண்டிகோ, பாராமவுண்ட் என்று பல விமானக் கம்பெனிக்கள் இருப்பதால் விமானப் போக்குவரத்து அதிகம் இருக்கின்றது. சுமார் 30-40 ஆண்டுகள் முன்னாலே எப்படி விமான போக்குவரத்து அதிகமாக இருந்திருக்க முடியும் என்று சிலர் கேள்வி கேட்டபோது, கிடைத்த விளக்கம் என்னவென்றால், அந்த சமயத்தில் விமான நிலைய அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தக் கச்சேரி நடைபெற்ற நன்னாளில், வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதால், விமானப் போக்குவரத்து அதிகம் இருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த விஷயத்தை செம்மங்குடி மாமாவே இசைக் கல்லுரியில் ஒரு முறை சொன்னாராம்.
இந்தக் கச்சேரியில் கிட்டத்தட்ட 18 உருப்படிகள் பாடியுள்ளார். அருமையான இந்த நிகழ்ச்சியினை அவரே வெகுவாக இரசித்துப் பாடியிருப்பதாகத் தெரிகின்றது. ஏனென்றால் ஒரு இடத்தில், "இன்னிக்கிப் பாடிண்டே இருக்கலாம் போல இருக்கு" என்று சொல்கின்றார். இந்தக் கச்சேரியின் ஒரு சில பாடல்களை தரவேற்றலாம் என்றால், மிகப் பெரிய கோப்பாக உள்ளது. எனவே உண்மையிலேயே ஏர்போர்ட் கச்சேரி கேட்க ஆவலாக உள்ளவர்கள் இங்கே சென்று இரசியுங்கள். முடிந்தால் எந்தப் பாட்டில் "வந்துட்டான் அசுரன்"னு சொல்றார்னு என்பதனையும் சொல்லுங்கள்.
- சிமுலேஷன்



















































