Saturday, October 24, 2009

அக்கறை-100

தமிழ் வாசகர்களிடையே மிகவும் பிரபலமான "அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும்" வடிவமைத்தவரும், குமுதம் "அரசு" பதில்கள் தருபவரில் ஒருவருமான ஜ.ரா.சுந்தரேசன் என்ற பாக்யம் ராமஸ்வாமி "அக்கறை" என்ற குழுவினை நடத்தி வருகின்றார். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை, தனது அலுவலகத்தில் ஒத்த கருத்துடைய பத்திரிகையாளர், இதழாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஆன்மிக அன்பர்கள், சமூக சேவர்கர்கள் என பல்தரப்பட்ட மனிதர்களும் அளவளாவ ஏற்பாடு செய்துள்ளார். பாக்யம் ராமஸ்வாமியின் புதல்வர் (லோகேஷ் (?) இந்தக் கூட்டங்கள் அனைத்திற்கும் உறுதுணையாக உள்ளார்.

இந்தக் குழுவில் உள்ளவர்களில் சிலர், எழுத்தாளர்கள் ராணி மைந்தன், ஜே.எஸ்.ராகவன், அறந்தை மணியன், நகுபோலியன், இனியவன், லேனா தமிழ் வாணன், பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு-அகஸ்தியன்), திருப்பூர் கிருஷ்ணன், வாதூலன், தூர்தர்ஷன் நடராஜன், மானஸா (எஸ்.சந்திரமௌலி), விஸ்வபாலா (பாலா விஸ்வநாதன்), காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, சியாமளா சுவாமிநாதன், மெலட்டூர் நடராஜன், இசைக்கலைஞர்கள் கௌசல்யா சிவக்குமார், நகைச்சுவை நடிகர் எஸ்,வி.சேகர், நாடக நடிகர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி, பம்பாய் கண்ணன், திரைப்படத் தயாரிப்பாளர் கலைமாமணி எஸ்.எம்.உமர், மக்கள் தொடர்பு ஈ.வெ.ரா.மோகன் ஆகியோர்

நண்பர் மெலட்டூர் நடராஜன் அவர்களது அறிமுகத்தால் இந்தக் குழுவில் நானும் ஒரு அங்கமானேன். கூட்டங்களில் குழுவில் உள்ள அனைவரும் எந்தத் தலைப்பிலும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.

இந்த அக்கறை அமைப்பின் நூறாவது கூட்டமும் எட்டாவது ஆண்டு விழாவும், நேற்றைய தினம் (24.10.2009) காஸ்மாபோலிட்டன் க்ளப் பல்லவா ஹாலில் நடந்தது. பல் வேறு சுவையான நிகச்சிகள் நடைபெற்றன.

மங்களகரமான கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சியை துவக்கிய மாஸ்டர் "அஜீத்(?)"

"திரும்பிப் பார்க்கிறோம்" என்ற தலைப்பில் அக்கறையின் கடந்தகால கூட்டங்களை அசை போடுகிறார் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்யம் ராமஸ்வாமி)

நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவனும் திரும்பிப் பார்க்கின்றார்

ஜி.எஸ்.சுப்பிரமணியன் நடத்திய "செஞ்சுரி அடியுங்க" வினாடி வினா

"தமிழ்த் திரை - 100" என்ற தலைப்பிலே சுவையான வினாடி வினா நடத்திய அறந்தை மணியன்.

"தமிழ்த் திரை - 100" வினாடி வினாவில் பங்கு பெற்ற கூட்டத்தினர்

ஜி.எஸ்.சுப்பிரமணியன் நடத்திய மற்றுமொரு வேடிக்கை விளையாட்டு

பாக்யம் ராமஸ்வாமி எழுதிய "ஒரு கணவன்-ஒரு மனைவி -ஒருமுதுகு" என்ற நகைச்சுவை நாடகத்தை நடித்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியவர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி குழுவினர்.

எந்த ஒரு கூட்டத்தையும் காலத்தே முடிக்க அனவைரையும் பழக்கி, விழாவினைச் சுவையாகவும், விறுவிறுப்பாகவும் நடத்தி ஒரு மனதாக அனைவரது பாராட்டுதல்களையும் பெற்ற ராணி மைந்தன்

அக்கறை நண்பர்களுக்கு அளிக்கப்பட்ட அன்புப் பரிசு

விழாவின் சிறப்பு அம்சமான அக்கறை நண்பர்களின் முகவரி கையேடு.

ஒவ்வொரு உறுப்பினர்களின் புனை பெயர், ஆர்வம், முகவரி முதலான விவரங்கள நேர்த்தியாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதற்கான பாராட்டுதல்கள மீண்டும் பெறுபவர் ராணி மைந்தன்.

- சிமுலேஷன்

Wednesday, October 21, 2009

Saturday, October 17, 2009

சங்கீதச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன்

கர்நாடக இசையை மக்கள் இசை ஆக்கிய சங்கீத மேதையின் அரிய சரித்திரம்



திரை இசையை படைத்த இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரைப் பற்றி, "திரை இசை அலைகள்" என்ற ஒரு முழுமையான படைப்பைத் தந்த கலைமாமணி வாமனன் எழுதிய இன்னமொரு சரித்திரப் புத்தகம் இது. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற இறவாத படங்களுக்கு சிறந்த முறையிலே இசை அமைத்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களது சரித்திரத்தினை 300 பக்கக்களில் சுவையாகச் சொல்லியிருக்கின்றார் வாமனன்.

ராமநாதன் அவர்களது குடும்பத்தில் அவருடைய அண்ணா சுந்தர பாகவதர் எப்படி தன் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவர பாடுபடுகின்றார் என்றும் எப்படி இந்தச் சகோதரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை அழகாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும் விவரிகின்றார் வாமனன்.

டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பாடகர்களின் திரை இசைக்கு அஸ்திவாரம் அமைத்தவர் ஜி.ராமநாதந்தான் என்பதை விறுவிறுப்போடு எழுதிருக்கின்றார்.

1940 ஒல் துவங்கிய ராமநாதனது திரையிச வாழ்க்கையில் கிட்டத்தட்ட 85 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவற்றில் குறிப்பிடத் தக்கவை:-
  • ஆர்ய மாலா
  • சிவகவி
  • ஹரிதாஸ்
  • ஜகதலப்ரதாபன்
  • ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
  • மந்திரி குமாரி
  • தூக்குத் தூக்கி
  • நான் பெற்ற செல்வம்
  • மதுரை வீரன்
  • அம்பிகாபதி
  • ஆரவல்லி
  • வணங்காமுடி
  • உத்தமபுத்திரன்
  • காதவராயன்
  • சாரங்கதாரா
  • வீரபாண்டிய கட்டபொம்மன்
  • கப்பலோட்டிய தமிழன்
  • அரசிளங்குமரி
  • பட்டினத்தார்
இந்தப் புத்தகத்திலிருந்து கிடைக்கபெற்ற சில சுவையான துக்கடாக்கள் (Trivia)

  • தியாகராஜ பாகவதர் நடித்துப் புகழ் பெற்ற "சிவகவி" என்ற திரைப்படத்தின் கதையினை எழுதியவர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.

  • அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில் ஜி.ராமனாதன் அமைத்த அழகான பாடல் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும்.

  • ஒரு குறிப்பிட்ட பாடல், படத்தின் உச்சக்கட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் இழுவை என்று யாரோ கூறிவிட, படத்தின் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் பாடலைக் கத்தரித்து விடலாம் என்று எண்ணத் தொடங்கினார். இசை அமைப்பாளரான ராமநாதனுக்கு தூக்கிவாரிப்போட்டதாம். அவர் மிகுந்த உற்சாகத்துடன் இசை அமைத்த் பாடல் அது. "படம் வெளியானதும் முதல் நாள் மட்டும் இந்தப் பாட்டு இருக்கட்டும். மக்களின் ரசனையைப் பார்த்துவிட்டு, பாடல் எடுபடவில்லை என்றால் அதை நீக்கி விடுவோம்" என்று சுந்தரத்திடம் பாடலுக்கு ஒரு நாள் வாய்தா வாங்கினார் ராமநாதன். படம் வெளியாகி பார்த்துவிட்டுச் சென்ற ரசிகர்கள் அனைவரும் முணுமுணுத்துக் கொண்டே சென்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் "மந்திரி குமாரி". பாடல் "வாராய்...நீ வாராய்.. போகும் இடம் வெகு தூரம் இல்லை நீ வாராய்" திருச்சி லோகனாதனின் அருமையான் குரலிலே வந்த அந்தப் பாடல் கத்திரியிட்மிருந்து மயிரிழையில் தப்பிய ஒரு படைப்பு.


  • கைரோ ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் சிவாஜி கணேசனுக்கு சிறைந்த நடிகருக்கான் பதக்கம் கிடைத்ததென்றால், சிறந்த இசை அமைப்பாளர்ருக்கான விருது ஜி.ராமநாதனுக்கு வழங்கப்பட்டது (படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்). எகிப்து அதிபர் நாஸர் இந்தியா வந்த போது, ராமநாதன் அவர்களைப் பாராட்டும் வகையில், ஒரு வெள்ளி வீணையை அளித்து மகிழந்தாராம்.

  • சிவாஜி. எம்.ஜி.ஆர் போல பாடகர்களில் அந்தக் காலகட்டத்தில் புகழ் அடைந்தவர்கள் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர். இந்த இருவரின் திரையிசை வாழக்கைக்கு பெரிதும் காரணமாக இருந்தவர் ஜி.ராமநாதன் அவர்களே.

  • ராமநாதனின் மகள் சாயிதேவியின் மகள் உமாமகேஸ்வரியை மணந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர்.

  • இந்தப் புததகத்தில் ராமநாதன் அவர்களது வாழ்க்கையை மட்டுமின்றி, அவர்தம் சம்பந்தப்பட்ட பலரது வாழ்க்கைச் சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளார். உதாரணம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பெரிதும் அடிபட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர். இவை தவிர பல அரிய அந்தக் காலத்துப் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

புத்தக ஆசிரியர்: வாமனன்
பதிப்பு: மணிவாசகர் பதிப்பகம், மதுரை
வெளியீடு: 2006
விலை: Rs.100.00

Thursday, October 15, 2009

சிமுலேஷன் கவிதைகள்

சிமுலேஷன் கவிதைகள்

வசரமாய் ஆட்டோவில் பறந்தாலும்,
படகுக் காரில் பவனி வந்தாலும் பாதியில் நிறுத்தித் துப்பு.
பன்றிக் காய்ச்சல் பரப்பு.
-----0-----

நாலு படமும் நாற்பது நாள் ஓடியது;
நடிகர் பொழப்பு நாறிப் போச்சு;
பாலபிஷேகம், பீரபிஷேகம்.
-----0-----

“‘கேக்கை எடுத்து முகத்தில் அடிப்பது கேவலமா இருக்கு!
ஆசிட் முட்டை அடித்து விளையாடலாமா?” கேட்டது,
சீரியல் பார்க்கும் சித்தியின் பேத்தி.
-----0-----

ஜாமூன், ஜாங்கிரி,
வறுவல், பொரியல், துவையல்.
எச்சில் இலைகள்.
-----0-----

நில்,
கவனி,
பிச்சை போடு,
செல்.
-----0-----

“கடை விரித்தேன்;
கொள்வாரில்லை”
விளம்பரம் செய்தாயா?
-----0-----

ழ்துளைக் கிணறுகள் வெட்ட,
அதில் விழும் குழந்தைகளை மீட்க
அமைச்சகம் ஒன்று அமைப்போமா?
-----0-----
றிவியலுக்கு ஒரு முகம்
ஆன்மீகத்திற்கு ஒரு முகம்
அனானியாய் எழுத ஒரு முகம்
குஜாலாய் எழுத ஒரு முகம்
கும்மியடிக்க ஒரு முகம்
அலுப்பாயிருக்குதமிழ் வலையுலகம்.
-----0-----
- சிமுலேஷன்