Saturday, June 19, 2010

இசையுலக இருவர்கள்

காரைக்குடி சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட சுப்பராம ஐயர் மற்றும் சாம்பசிவ ஐயர். சங்கீத நாடக அகாடெமி துவக்கப்பட்ட 1952 ஆம் வருடமே அந்த அகாடெமி விருதினைப் பெற்றவர்கள்.
மைசூர் அரண்மனையில் ஆஸ்தான வித்வான்களாக விளங்கிய வீணை சேஷண்ணா மற்றும் வீணை சுப்பண்ணா. ஸ்வரஜதி, பதம், ஜாவளி மற்றும் தில்லானாக்கள் பல இயற்றியவர்கள்.
திருவீழிமிழலை சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட சுப்பிரமணிய பிள்ளை மற்றும் நடராஜ சுந்தரம் பிள்ளை.
ஒரே குருவிடம் பயின்ற ஸ்ரீநிவாச ஐயர் மற்றும் சிவசுப்ரமணிய ஐயர் இருவரும் உண்மையிலேயே உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. ஆலத்தூர் சகோதரர்கள் என்ற பெயரில் புகழ் பெற்ற இவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்.
வீணை தனம்மாளிடம் பயின்ற ப்ருந்தா-முக்தா சகோதரிகள். க்ஷேத்ரஞ்கரின் பதங்களையும், ஜாவளிகளையும் பாடுவதில் புலமை பெற்றவர்கள். 1976ஆம் ஆண்டு ப்ருந்தா அவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்றார். 
திரையிசையிலும், மேடைகளிலும் தேச விடுதலைப் பாடல்களை பாடிப் புகழ் பெற்ற அக்கா-தம்பி, D.K.பட்டம்மாள் மற்றும் அவர் சகோதரர் D.K.ஜெயராமன். இருவருமே சங்கீத கலாநிதி விருது பெற்ற கலைஞர்கள்.
புகழ்பெற்ற டைகர் வரதாச்சாரியாரரிடம் பயின்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைத் துறைத் தலைவர்களாக இருந்த B.V.ராமன் மற்றும் B.V.லட்சுமணன் சகோதரர்கள்.
M.P.N சேதுராமன் மற்றும் M.P.N பொன்னுசாமி இருவரும் MPN சகோதரர்கள் என்றழைக்கப்பட்டனர். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?" என்ற பாடலில் இடம் பெரும் இவர்களது நாதஸ்வர இசை உலகப் புகழ் பெற்றது.
செம்பனார் கோயில் சகோதரர்கள் என்ற சம்பந்தம் மற்றும் ராஜண்ணா இருவரும் தருமபுரம், திருவாடுதுறை, திருபனந்தாள் ஆதீனங்களில் ஆஸ்தான வித்வானகளாக முப்பது வருடங்களுக்கும் மேல் விளங்கியவர்கள்.
திருப்பாம்பரம் சகோதரர்கள் என்றழைக்கப்படும் T.K.S.ஸ்வாமிநாதன் மற்றும் T.K.S.மீனாக்ஷிசுந்தரம்.

கேரளத்துத் திருச்சூரில் பிறந்தாலும், பம்பாயில் பல காலம் வாழ்ந்ததால் பம்பாய் சகோதரிகள் என்றழைக்கப்பட்ட C.சரோஜா மற்றும் C.லலிதா. T.K.கோவிந்தராவ அவர்களிடம் பயின்றவர்கள்.
சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி மற்றும் ராஜலக்ஷ்மி என்ற சூலமங்கலம் சகோதரிகள். பாடிய கந்த சஷ்டி கவசம் உலகப் புகழ்பெற்றது.பல பழைய தமிழ்த் திரைபடங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்கள்.
ராதா மாற்றும் ஜெயலக்ஷ்மி என்ற இந்த உடன் பிறவா சகோதரிகள் (கஸின்ஸ்) "ராதா ஜெயலக்ஷ்மி" என்ற ஒற்றைப் பெயராலேயே அழைக்கப்பட்டனர். 1981 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடெமி விருது பெற்றவர்கள். ஐம்பதுகளில் தமிழ்திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியவர்கள்.இசையமைப்பாளர்களும்கூட.
வயலின் உலகில் தனக்கென்று முத்திரை பதித்த லால்குடி ஜெயராமன் மற்றும் ஸ்ரீமதி ப்ரம்மானந்தம்.

சிக்கில் சகோதரிகள் என்றழைக்கப்படும் சிக்கில் குஞ்சுமணி மற்றும் நீலா இருவரும் பத்மஷ்ரி, கலைமாமணி மற்றும் சங்கீத நாடக அகாடெமி விருது பெற்றவர்கள். புல்லாங்குழல் உலகில் தனிக்கொடி நாட்டிய பெண் கலைஞர்களில் மூத்த கலைஞர்கள் இவர்கள்.

வயலின் கலைஞரான டி.என்.கிருஷ்ணன் அவர்கள் சங்கீத நாடக அகாடெமி விருது, சங்கீத கலாநிதி விருது, பத்மஸ்ரீ் மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்ற மூத்த கலைஞர். இவரது சகோதரியான் என்.ராஜம் அவர்களும் தனது சகோதரர் போலவே சங்கீத நாடக அகாடெமி விருது, பத்மஸ்ரீ் மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்றவர்.

யாழ்ப்பாணத்தில் விரிவுரையாளாராக பணிபுரிந்து வந்த லக்ஷ்மிநாராயணன் என்ற இசைக்கலைஞருக்கு பிறந்த எல்.சுப்பிரமணியன், எல்.வைத்தியநாதன் மற்றும் எல்.சங்கர் சகோதரர்கள். உலகப் புகழ் பெற்ற இந்தச் சகோதரர்கள், தென்னிந்திய, வட இந்திய, மேற்கத்திய மற்றும் கீழை நாட்டு சங்கீதம் என்ற பல்வேறு பரிணமங்களில் தங்களது இசைப்புலமையை தெரியப்படுத்தியவர்கள். பல இந்திய மற்றும் மேலைநாட்டுத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.
புகழ்பெற்ற வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் அவர்களது புதல்வர் லால்குடி.ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் புதல்வி லால்குடி விஜயலக்ஷ்மி.
புகழ் பெற்ற மூத்த வயலின் கலஞர் எம்.எஸ்.அனந்தராமன் அவர்களின் புதல்வர்கள் எம்.ஏ.கிருஷ்ணஸ்வாமி மற்றும் எம்.ஏ.சுந்தரேசன் அவர்கள்.


நாப்பது ஆண்டுகளுக்கு மேலாக புல்லாங்க்குழல் இசைத்து வரும் ரகு மற்றும் ப் சகோதரர்கள்.
தங்களது பத்தாவது வயதிற்கு முன்னரே, நூறு முறைகள் மேடை ஏறிய இளம் வயலின் மேதைகள் கணேஷ் மற்றும் குமரேஷ். 1983 ஆண் ஆண்டு இவர்களது நிகழ்ச்சியினைத் தொலக்காட்சியில் பார்த்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவரகள் உடனடியாக இவர்களை தமிழக அரசின் ஆஸ்தான வித்வான்களாக நியமித்தார்.

ஹைதராபாத் சகோதரர்கள் என்றழைக்கபடும் டி.சேஷாச்சாரி மற்றும் டி.ராகவாச்சாரி அவர்கள் ஆலத்தூர் சகோதரகள் பாணியில் பாடக்கூடியவர்கள். சேஷாச்சாரி அவர்கள் ஆல் இண்டிய ரேடியோவில் பணி புரிய, ராகவாச்சாரி அவர்களோ நேஷனல் மினரல் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் பணி புரிகின்றார்.

ருத்ரபட்டினம் சகோதரர்கள் என்றழைக்கப்படும் தியாகராஜன் மற்றும் தாரநாதன் இருவரும் கல்வியிலும் சிறந்தவர்கள். கணிததில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள தாரநாதன் அவர்கள் தூர்தர்ஷனில் பணி புரிய, வேதியியலில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றுள்ள சாரநாதன் அவர்கள் விஞ்ஞானியாகப் பணி புரிகின்றார்.

ஆலத்தூர் சகோதரர்கள் பாணியில் பாடி வரும் ஹைதரபாத் சகோதரிகள் என்ற லலிதா மற்றும் ஹரிப்ரியா இருவரும், ஆல் இண்டியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனின் மூத்த கலைஞர்கள். கைதராபாத்/ செகந்திராபாத் இசைக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களும்கூட.

ராதா ஜெயலக்ஷ்மி அவர்களின் பிரதான் சிஷ்யைகளான ஷன்முகப்ரியா மற்றும் ஹரிப்ரியா இருவரும் ப்ரியா சகோதரிகள் என்றழக்கப்டுகின்றனர்.

பத்து வருடங்களுக்கு மேலாக வயலின் வாசித்து ரசிகர்களை மகிழ்வித்த ரஞ்சனி மற்றும் காயத்ரி சகோதரிகள் இருவரும் சமீப காலமாக வாய்ப்பட்டுப் பாடி மகிழ்வித்து வருகின்றார்கள்.


மாம்பலம் சகோதரிகள் என்றழைக்கப்படும் விஜயலக்ஷ்மி மற்றும் சித்ரா. இவர்களது கசேரிக்குப் பெரும்பாலான நேரங்களில் டாக்டர்.ஹேமலதா அவர்கள் வயலின் வாசிப்பது பார்க்கலாம். ஏனென்றால் அவரும் இவர்களது ஒரு சகோதரியே.

மல்லாடி ஸ்ரீராம்பிரசாத் மற்றும் மல்லாடி ரவிக்குமார், இருவரும் மல்லாடி சகோதரர்கள் என்றழைக்கபடுகின்றனர். பினாகபாணி, வோலேடி, நேதுநூரி போன்ற ஜாம்பவான்களிடம் பயின்றவர்கள்.

வயலின் சகோதரிகள் என்ற பெயரெடுத்த டாக்டர்.லலிதா மற்றும் நந்தினி. டாக்டர்.எல்.சுப்பிரமணியம் சகோதரர்களின் அக்கா பெண்களான இந்தக் கலைஞர்கள் தங்கள் மாமாக்கள் போலவே மேற்கத்திய இசை மற்றும் கீழைநாட்டு இசையிலும் வல்லவர்கள்.

மீண்டும் ஒரு வயலின் சகோதரிகள். அக்கரை சகோதரிகள் என்றழைக்கபடும் அக்கரை சுபலக்ஷ்மி மற்றும் அக்கரை ஸ்வர்ணலதா. அக்கரை ஸ்வாமிநாதன் அவர்களின் புதல்விகளான இவர்கள் வாய்ப்பாட்டிலும் கச்ச்செரிகள் பல நிகழ்த்துகின்றனர்.

கோட்டுவாத்யம் நாராயண ஐயங்கார் பேரன்களும், சித்ர வீணை ரவிகிரண் அவர்களின் சகோதரர்களுமான் சஷிகிரண் மற்றும் கணேஷ் இருவரும் கர்னாடிகா சகோதரர்கள் என்றழைக்கபடுகின்றனர். பாமரர்களும் அறியும் வண்ணம், கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்த பல விதியாசமான நிகழ்ச்சிகளையும், போட்டிகளையும் நடத்துபவர்கள்.

மைசூரில் பிறந்து வளர்ந்த நாகராஜ் மற்றும் டாக்டர்.மஞ்சுநாத் இருவரும் மைசூர் சகோதரர்கள் என்றழைக்கப்டுகின்றனர். வயலின் உலகில் இவர்கள் தங்களுகென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளனர்.

சிறு வயதிலேயே சின்மயானந்தா ஸ்வாமிகளின் ஆசிகள் பெற்ற உமா மற்றும் ராதிகா இருவரும் சின்மயா சகோதரிகள் என்றே அழைக்கப்படுகின்றனர். மதுரை சேஷகோபாலன் மற்றும் நெய்வேலி சந்தானகோபாலன் அக்கியோரிடம் சங்கீதம் பயின்று வருகின்றார்கள்.

சங்கீதத்த்தில் முதுகலைப் பட்ட்டதாரிகளான ரூபா மற்றும் தீபா இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். இருவரும் காசரவல்லி சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

மாயவரம் சகோதரிகள் என்ரழைக்கப்படும் உமா மற்றும் கீதா, இருவரும் லால்குடி ஜெயராமன், மகாராஜபுரம் சந்தானம் மற்றும் கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் சங்கீதம் பயின்றவர்கள்.

சரலயா சகோதரிகள் என்றழைக்கபடும் கவிதா மற்றும் திரிவேணி இருவரும் வாய்ப்பாட்டு மட்டுமின்றி நாட்டியத்திலும் வல்லாவர்கள்.

புவனா மற்றும் லலிதா இருவரும் சாத்தூர் சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

ரமா மற்றும் கீதா இருவரும் செருகுடி சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர். டி.ஆர்.சுப்பிரமணியன் அவர்களிடம் தற்போது சங்கீதம் கற்று வருகிறார்கள்.



திருச்சூர் மோகன் என்ற மிருதங்கக் கலைஞரின் புதல்வர்கள் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ராம்குமார் இருவரும் திருச்சூர் சகோதரகள் என்றழைக்கப்டுகின்றார்கள். இருவரும் ஆடிட்டர் தொழில் செய்பவர்கள்.

சிவரஞ்சனி, நளினகாந்தி என்ற ராகங்களின் பெயரைக் கொண்ட இந்த சகோதரிகள் ராகம் சகோதரிகள் என்ற பெயரிலேயே அழைக்கப்ப்டுகின்றனர்.

குடந்தை சகோதரிகள் என்றுஅழைக்கப்படுகின்ற பாமா கண்ணன் மற்றும் மஞ்சுளா.

பைரவி மற்றும் மாளவி சகோதரிகள்.


பிரபல நாதஸ்வரக் கலைஞரான டாக்டர்.ஷேக் சின்ன மௌலானா அவர்களின் பேரன்களான காசிம் மற்றும் பாபு, தாத்தாவின் வழியிலேயெ நாதஸ்வரக் கலைஞர்களாகப் பரிமளித்து வருகின்றார்கள்.

நாதஸ்வரக் கலைஞர்களான மோகன்தாஸ் மற்றும் வசந்தகுமார் இருவரும் மூத்த செம்பனார்கோயில் சகோதரர்கள் வழி வந்தவர்கள். இவர்களும் செம்பனார்கோயில் சகோதரர்கள் என்றேயழைக்கப்டுகின்றனர்.



மேண்டலின் என்ற மேற்கத்திய இசைக் கருவியினை கர்நாடக இசைக்கு அறிமுகப்படுத்தி அதில் அகில உலகப் புகழ்பெற்ற மேண்டலின் ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜேஷ்.


ராம்நாத் ஐயர் மற்றும் கோபிநாத் ஐயர் இருவரும் ஐயர் சகோதர்கள் என்றழைக்கப்டுகின்றார்கள். ஆஸ்டிரேலியாவில் வசிக்கும் இவர்கள் பிரபல வீணைக் கலைஞர் பிச்சுமணி அவர்களின் சீடர்கள்.

ஸ்ரீஉஷா மற்றும் ஸ்ரீஷா இருவரும் மேண்டோலின் சகோதரிகள் என்றழக்கப்படுகின்றனர்.தற்போது பிரபல் வயலின் கலைஞர் கன்னியாகுமரி அவர்களிடம் பயின்று வருகின்றனர்.



மங்களூரில் வசிக்கும் லாவண்யா மற்றும் சுபலக்ஷ்மி இருவரும் ஸாக்ஸபோன் வாசிக்கும் பெண் கலைஞர்கள். இருவரும் ஸாக்ஸபோன் சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

வட இந்திய இசையில் வல்லவர்களான உமாகாந்த் குண்டேச்சா மற்றும் ரமாகாந் குண்டேச்சா இருவரும் குண்டேச்சா சகோதரகள் என்றழைக்கப்படுகிறார்கள்.

டொரொன்டோ நகரில் வசித்து வரும் அஸ்வின் ஐயர் மற்றும் ரோகின் ஐயர் இருவரும் டொரொன்டோ சகோதரர்கள் என்றழைக்கபடுகின்றனர். பிரபல கலைஞர் எஸ்.ஆர்.ஜானகிராமன் அவர்களிடம் இசை பயின்று வருகின்றனர்.

சமீப காலமாகப் பாடிவரும் பாவனா மற்றும் ஸ்வாதி இருவரும் சிவசுப்பிரமணியம் சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

விடுபட்டவர்கள் பெயர் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்

- சிமுலேஷன்

Friday, June 18, 2010

கல்யாணச் சாப்பாடு போடவா?


"கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்" என்கிறது பழமொழி. வீடு கட்டுவதற்கு நிகரான ஒரு பெரிய நிகழ்வு, கல்யாணம் என்பது. இன்றைய தினம் ஒரு நடுத்தரக் குடும்பத்தினை எடுத்து கொண்டால், பெண்ணைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் திருமணத்திற்காகக் குறைந்தபட்சம் 8 முதல் 10 லட்சங்கள் வரை செலவழிக்கின்றார்கள். இந்தச் செலவுகளில், பெண்ணுக்குகுப் போடப்படும் தங்க நகைகளுக்கு ஏற்படும் செலவுகளுக்கு அடுத்தபடியான மிகப் பெரிய செலவு, சாப்பாட்டுச் செலவாகும். பெரும்பாலோனோர் இதற்கு மட்டுமே கிட்டத்தட்டை 3 முதல் 4 லட்சங்கள் வரை செலவழிக்கின்றார்கள். 2 அல்லது 3 நாடகள் நடக்கும் கல்யாணமாக இருந்தால் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புச் சடங்கு, மறுநாள் திருமணம், ரிசப்ஷன், அதற்கு அடுத்த நாள் கட்டுச்சாதக் கூடை வரை இந்தச் சாப்பாட்டுச் செலவு தொடரும்.

ஒவ்வொரு வேளை சாப்பாட்டின்போதும், ஒன்றுக்கும் மேற்பட்ட இனிப்புக்களும் 20க்கும் மேற்பட்ட பதார்த்தங்களும் பறிமாறப்படும். எதற்காக இப்படி செலவு செய்ய வேண்டும்? கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடிவதில் தப்பில்லைதான். ஆசையாய் வளர்த்த ஒரே செல்ல மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்புவது பெற்றோர்களின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் அது பயனுள்ள முறையில் செலவிடப்பட வேண்டும். மாறாக பெரும்பாலான நேரங்களில் சாப்பிட வேண்டிய பதார்த்தங்கள் குப்பைத் தொட்டிக்குப் போகும்போது மனதை நெருடுகின்றது.

திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கு சில மணி நேரம் முன்பு பஜ்ஜி வகையறாக்கள் பறிமாறப்படும். இன்னம் சில மணி நேரங்களில் இரவு விருந்தில் பாதாம் கீர் உட்பட வெஜிடபுள் புலவு, குருமா, தோசை ஐட்டங்கள் என்று தடல்புடலாக இருக்கும். இத்தனையும் சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆவதற்குள் மறுநாள் காலை டிபன் செய்யப் போனால், அங்கே இட்லி, பொங்கல், வடை, சுடச்சுட வார்த்த தோசை, அப்புறம் அசோகா அல்வா என்று மீண்டும் வயிற்றை நிரப்புவார்கள். மீண்டும் சில மணி நேரங்களில் உண்மையான கல்யாணச் சாப்பாடு. இரவு ரிசப்ஷன் முடிந்து மீண்டும் ஒரு தடபுடலான சாப்பாடு. இத்தனை சாப்பிட்டலும், கடைசியில் அனைவரும் விரும்புவது மறுநாள் கட்டுசாதக் கூடையன்று போடப்படும் வத்தக் குழம்பு சாதம்தான்.

"சாப்பாடு பலே", "பேஷ், பேஷ்", "அட்டகாசம். அமர்க்களம்", "சமையல் மாமாவின் கார்டு கொடுங்கோ", என்றெல்லாம் வந்திருந்தோர் பாராட்டிப் பேசும்போது பெண்ணைப் பெற்றவர்களுக்குப் பெருமையும், திருப்தியும் உண்டாவது இயற்கைதான். இருந்தாலும், இத்தகைய விருந்துகளில் சாப்பிடப்படாமல் எறியப்படும் உணவு வகைகளை யாரேனும் உற்று நோக்கினால், ரத்தக் கண்ணீரே வரும். அதிலும், டயபடீஸ் உள்ள பெருசுகள், தாங்கள் சாப்பிட மாட்டோம் என்று தெரிந்த பின்னரும், இனிப்பு வகையறாக்கள் பறிமாரப்படும்போது "வேண்டாம்" என்று தடுப்பதில்லை. ஒரு முழு ஜிலேபியோ அல்லது ஒரு முழு பாதுஷாவோ தொடப்படாமல் அப்படியே குப்பைத் தொட்டிக்குப் போகும். விசு கூட ஒரு படத்தில் இதனைத் தத்ரூபமாகக் காட்டியிருப்பார்.

"எதற்காக இத்தனை வகைகள் பறிமாருகின்றீர்கள்? ஏன் இவ்வளவு ஆடம்பரம்?" என்று எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்கும்போது அவர்களிடமிருந்து வந்த பதில் என்னவென்றால், "சமையல் காண்டிராக்டர்தான் இந்த மெனுவினை சிபாரிசு செய்தது. இந்த மெனுவுக்குக் குறைவாக ஆர்டர் எடுத்துக் கொள்வதில்லை, என்கிறார்கள். "நாங்கள் என்ன செய்ய முடியும்?", என்றும் சொல்கிறார்கள். ஒரு கல்யாண சாப்பாட்டிற்கு 20 அல்லது 25 ஐட்டங்கள் பறிமாறினால்தானே அதற்கு 150 முதல் 200 ரூபாய் வரை கறக்க முடியும். அதனால்தானோ என்னவோ, இந்தச் சமையல் காண்டிராக்டர்கள் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டது போல, அவர்கள் வைப்பதுதான் மெனு, அவர்கள் வைப்பதுதான் ரேட்டு, என்று செயல்படுகிறார்கள். "உங்கள் பட்ஜெட் என்ன? அதற்கேற்ற மெனுவைச் சொல்லுகிறேன்", என்று சொல்லும் சமையல் காண்டிராக்டர்கள் இன்று மிகக் குறைவே.

இன்றைய ஆடம்பர உலகில், சிம்பிளான மெனுவுடன் கூடிய சாப்பாடு போட வேண்டுமென்று சொன்னால் யாரும் கேட்கப் போவதில்லை, பெண்ணைப் பெற்றவர்கள் உட்பட. (1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில், எந்த ஒரு திருமணத்திலும் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட வேண்டும் என்று ஒர் சட்டம் போடப்பட்டு அந்தச் சட்டம் அமலுக்கும் வந்த விஷயம் இன்றைய தலைமுறை அறியாத ஒரு காமெடி).

உணவுப் பொருட்கள் வீணாகக் குப்பையில் போகாமலிருக்க, ஒவ்வொரு திருமண மண்டபங்களின் உணவுக் கூடங்களிலும் "உணவுப் பொருட்களை வீணாக்காதீர்" என்று எழுதச் சொல்லி அரசாங்க ஆணை பிறப்பித்தால் விழிப்புணர்வு ஏற்படுமா? எதிர்பார்த்த பலன் இருக்குமா? அல்லது இதை விட மேலான யோசனை உங்களுக்கு தெரிந்தால்தான் சொல்லுங்களேன்.


- சிமுலேஷன்

Tuesday, June 15, 2010

அபூர்வ ராகங்கள்

நாம் அன்றாடம் கேள்விப்ப்டும் கல்யாணி, காம்போதி போன்ற ராகங்கள தவிர, சில் ராகங்கள் வெகு அரிதாக பயன்படுத்தப்படுகின்றன.இவற்றை அபூர்வ ராகங்கள் என்று சொல்லலாம். இந்த அபூர்வ ராகங்களில் சிலவற்றினைப்பற்றி முன்பு எனது பதிவிகளில் எழுதியிருக்கின்றேன். இந்த நட்சத்திர வாரத்தில் அவற்றை மீள் பதிவாக இடுவதற்குப் பதிலாக, ஒரு பதிவின் கீழ் இற்றைப்படுத்தினாலென்னவென்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு.

ஸ்ரோதஸ்வனி என்ற அபூர்வ ராகமானது, கீரவாணி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். சரியான பெயர் ஸ்ரோதஸ்வனியா அல்லது ஸ்ரோதஸ்வினியா என்று தெரியவில்லை. இந்த அபூர்வ ராகம், கர்னாடக இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்த ராகம், நினைவுக்குத் தெரிந்து இரண்டு பாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரோதஸ்வினி ராகத்தினைப் பற்றிய எனது பதிவு இங்கே.

சாவித்ரி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். இந்த ராகத்தில் கர்நாடக இசையில் பாடல்கள் ஏதும் அமைந்ததாகத் தெரியவில்லை. தமிழ்த் திரையிசையில் சாவித்ரி ராகத்தில் அமைந்த பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணி நாலே பாடல்கள்தான் உள்ளன. சாவித்ரி ராகம் குறித்து இங்கே எழுதியுள்ளேன்.

மஹதி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. இது ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்ய ராகமாகும். இந்த ஆரோகணம், அவரோகணத்தினைப் பார்த்தால் வெறும் நான்கே நான்கு ஸ்வரங்கள் தான் உள்ளன. நாலு ஸ்வரங்களை வைத்துக் கொண்டு எப்படி ஒரு ராகம் இருக்க முடியும்? அதில் எப்படிப் பாட முடியும்? என்று கேட்டால், சங்கீத மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவால் மட்டுமே இது முடியும் என்றுதான் சொல்லலாம். ஆம். இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியது இப்போதல்ல. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் முன்பு. மஹதி ராகத்தினப் பற்றிய எனது பதிவு இங்கே.

ஜோக் என்ற ராகம் வட இந்திய இசையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், கர்நாடக இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 34ஆவது மேளகர்த்தா ராகமான வாகதீஸ்வரியின் ஜன்ய ராகமாகும். ஜோக் ராகமானது சிதார் மேதை பண்டிட் ரவி சங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ராகமாகும். இந்தப் பதிவினில் ஜோ ராகத்தினைபற்றி எழுதியுள்ளேன்.

பட்தீப் வட இந்திய இசையில் அடிக்கடி பாடப்படும் ராகம் என்றாலும், இந்த அழகான ராகம் தென்னிந்திய இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. 'பட்தீப்' ராகம் சில சமயங்களில் 'படதீப்' என்றும், 'பட்டதீப்' என்றும் உச்சரிக்கப்படுகின்றது. இந்த ராகம் 22ஆவது மேளகர்த்தா ராகமான கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமாகும். பட்தீப் ராகம் குறித்தான எனது பதிவு இங்கே.

சல்லாபம் என்ற ராகம் சூர்யா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ராகம் 14ஆவது மேளகர்த்தா ராகமான 'வகுளாபரணம்' என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும். சல்லாபம் கிட்டத்தட்ட ஹிந்தோளம் என்ற ராகத்தினை ஒத்திருப்பது போலத் தோன்றும். ஆனால் ஹிந்தோளத்தில் சாதாரண காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபத்திலோ, அந்தர காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபம் ராகம் பற்றி இந்தப் பதிவினில் எழுதியுள்ளேன்.

அபூர்வ ராகங்களைக் கேட்டு மகிழுங்கள்.
- சிமுலேஷன்

Monday, June 14, 2010

பேச்சுக் கலையினை வளர்க்கும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் க்ளப்


1924ஆம் வருடம், கலிபோர்னியா மாநிலத்திலுள்ள 'ஸாண்டா அனா' என்ற இடத்திலுள்ள YMCA அமைப்பில் வேலை செய்து வந்த 'ரால்ஃப் ஸ்மெட்லி' என்ற நபருக்கு ஒரு கவலை. அங்கு வரும் பெரும்பாலோனோருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு பேச்சுக் கலை சரியாக வரவில்லையே என்ற கவலை. இதற்காக ஒரு பயிற்சியினை ஆரம்பித்தால் என்னவென்று யோசிக்கின்றார். பேச்சுத் திறனையும், தலைமைப் பண்புகளையும் வளர்க்கும் நோக்கத்தில் "டோஸ்ட் மாஸ்டர்ஸ் க்ளப்" என்ற புதியதொரு மன்றத்தினைத் துவக்குகின்றார். சுமார் 86 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட டோஸ்ட் மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பு, இன்று 106 நாடுகளில் 12,500 மன்றங்கள் மூலம் 2,50,000 உறுப்பினர்களுக்குச் சேவை புரிந்து வருகின்றது.

இந்த மன்றங்கள் நிறுவனங்களில் இருந்து செயல்பட்டு, அங்கு பணிபுரிபவர்களுக்கு மட்டுமே அனுமதியென்றால் "கார்ப்பரேட் க்ளப்" எனவும், பொது இடங்களில் அமைந்து, 18 வயதிற்கு மேற்பட்ட யாரை வேண்டுமென்றாலும் சேர அனுமதியளித்தால் "கம்யூனிட்டி க்ளப்" எனவும் அழைக்கப்படுகின்றன. இன்றைய தினம் இந்தியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட டோஸ்ட் மாஸ்டர்ஸ் க்ளப்கள் உள்ளன. சென்னையிலேயே TCS, HCL, Cognizant, Ford, Caterpillar, CSC, Dow, Flex, Paypal, Satyam, Sysbix, Systec போன்ற நிறுவனங்களில் டோஸ்ட்மாஸ்டரஸ், "கார்ப்பரேட் க்ளப்களாக" இயங்கி வருகின்றன். இவை தவிர, சென்னை டோஸ்ட்மாஸ்டர்ஸ், மெட்ராஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ், மெட்லி டோஸ்ட்மாஸ்டர்ஸ், வேர்ட்ஸ்மித் டோஸ்ட்மாஸ்டர்ஸ் போன்ற "கம்யூனிட்டி க்ளப்கள்" முறையே எழும்பூர், தி.நகர், அடையார், அண்ணாநகர் பகுதிகளில் அமைந்து பொது உறுப்பினர்களுக்குச் சேவை புரிந்து வருகின்றன.

இந்த க்ளப்கள் செயல்படும் விதம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், அதன் கூட்டங்களில் பணி புரியும் பங்காளிகள் (ரோல் ப்ளேயர்ஸ்) பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.

1. ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் (Sergeant at Arms) எனப்படும் ஆயத்த நடை முறையாளர். ஒரு படைக்கு ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கிறதா என்று எப்பொதும் பார்த்து வைத்திருக்கும் 'ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ்' போல டோஸ்ட் மாஸ்டர்ஸ் கூட்டத்திற்குத் தேவையான பொருட்களும், இடமும் தயார் நிலையில் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டியதும், நிகழ்ச்சி நிரலில் இருக்கும் எல்லோரும் குறித்த நேரத்தில் வந்து விட்டார்களா என்ற் பார்ப்பதும் இவர் கடமை. குறித்த நேரத்தில் கூட்டத்தைத் துவக்குபவரும் இவரே. உலகின் எந்த மூலையில் கூட்டம் நடந்தாலும், மூன்று முக்கிய விதிகளை பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் கூட்டத்தின் துவக்கத்தில் சொல்ல வேண்டும்.

முதல் விதி: உறுப்பினர்கள மற்றும் விருந்தினர்களின் ஆடை (Dress Code) குறித்தது. கூட்டத்திற்ககு வரும் அனைவரும் சம்பிரதாய உடையில் (Formal Dress) வரவேண்டும்.

இரண்டாம் விதி: கூட்டத்தின் அமைதி (Code of Silence) குறித்தது. கூட்டத்தில் கலந்து கொள்வோர் அனைவரும் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அல்லது சைலண்ட் மோடில் வைக்க வேண்டும். யார் மேடையில் பேசிக் கொண்டிருந்தாலும் இடையிலே எழுந்து செல்லக் கூடாது. ஒருவருக்கொருவர் தகவல் பறிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால், துண்டுத் தாளில் எழுதி, அடுத்து உட்கார்ந்து இருப்பவரிடம் கொடுத்தனுப்ப வேண்டும்.

மூன்றாம் விதி: தவிர்க்க வேண்டிய தலைப்புகள்க  (Taboo Topics) குறித்தது. பாலியல் (Sex), மதம் (Religion), அரசியல் (Politcs) போன்ற பிரச்னை தரும் 3 தலைப்புகளில் யாரும் பேசக் கூடாது.

மேற்கண்ட மூன்று விதிகளையும் கூட்டத்தினருக்கு விளக்கிய பின், ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நபரை அறிமுகப்படுத்துவார்.

2. தலைவர்: க்ளப்பின் தலைவரே கூட்டதிற்குப் பெரும்பாலும் தலைமை தாங்குவார். இல்லையென்றால் க்ளப்பின் உப தலைவர் தலைமை தாங்குவார். இவர் க்ளப்பின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு பொதுவான உரை நிகழ்த்திவிட்டு, க்ளப்பின் புதிய அங்கத்தினர்களை அறிமுகப்படுத்துவார். பின்னர் புதிய விருந்தினர்கள் எவரேனும் வந்திருந்தால் அவர்கள் தங்களைப் பற்றிய அறிமுகல் செய்து கொள்ளச் செய்யச் சொல்லுவார். புதியவர்கள் அறிமுகம் முடிந்தவுடன், தலைவர் ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்துவார். அவர்தான் 'டோஸ்ட்மாஸ்டர் ஆஃப் த டே' எனப்படும் கூட்டத்தின் தொகுப்பாளர். (Master of Ceremony).

3. டோஸ்ட்மாஸ்டர் ஆஃப் த டே (TMOD) எனப்படும் கூட்டத்தின் தொகுப்பாளர்.  TMOD தான் கூட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிப்பவர். பல சுவையான கதைகளும், துணுக்குகளும் சொல்லி கூட்டத்தின் சுவாரசியம் கெடாமல் பாதுகாப்பவர். இவரும் க்ளப் உறுப்பினர்களில் ஒருவர்தான். ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டத்தின் தொகுப்பளர் யார் என்று முடிவு செய்யப்பட்டு விட்டு அவர் தயார்நிலையில் வருவார். இவர் சற்றே பகட்டான உடை அணிந்து வந்து அனவரது கவனத்தையும் கவருபரும் கூட. ஒவ்வொரு கூட்டமும், ஒரு 'பொது மதிப்பீட்டாளரால்' (General Evaluator) மதிப்பீடு செய்யப்படும். பொது மதிப்பீட்டாளரை TMOD அறிமுகப்படுத்துவார். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு "கூட்டத்திற்குண்டான கருத்தும்" (Theme of the Day) "கூட்டதிற்குண்டான வார்த்தையையும்" (Word of the Day) அறிமுகம் செய்வது இவரே. இவற்றை பேச்சாளர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும், பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.

4. பொது மதிப்பீட்டாளர் (General Evaluator). இவரும் உறுப்பினர்களில் ஒருவரே. கூட்டத்திற்குக் கூட்டம் ஒரு உறுப்பினர் இந்த வேலையைச் செய்வார். கூட்டம் துவங்கியது முதம் இறுதி வரை கூட்டம் எப்படி நடந்தது என்று கூட்டத்தின் முடிவில் நிறை-குறைகளை அழகுறப் பட்டியலிட்டுச் சொல்லுவார். இவர் குறிப்பிட்டுள்ள குறைகள் அடுத்த கூட்டத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வது அனைவரின் கடமையுமாகும். இவருக்கு உதவி செய்வதற்கென்று மூவர் அடங்கிய குழு ஒன்று உண்டு. அவர்களது பணி வருமாறு:-

5. நேரக் குறிப்பளர் (Timer): உலகின் எந்த மூலையில் கூட்டம் நடந்தாலும், அதன் நீளம் 2 மணி நேரம் மட்டுமே. ஒவ்வொரு பேச்சாளருக்கும் அவர் பேச வேண்டிய மணித்துளிகள் ஏற்கனெவே முடிவு செய்யப்பட்டிருக்கும். இந்த நேர வரையறை பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல. மதிப்பீட்டளர்களுக்குமுண்டு. பேச்சாளர்களும், மதிப்பீட்டாளர்களும் குறைந்த பட்ச நேரம் பேசாமலிருந்தாலோ, அதிக பட்ச நேரத்தை மீறிப் பேசினாலோ தகுதியிழப்புச் செய்யப்படுவார்கள். நேரக் குறிப்பாளரிடம் நேரம் காட்டும் விளக்குகள் அடங்கிய கருவி (Timer Device) ஒன்றும் உண்டு. இதன் துணை கொண்ம்டு பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகளை முறையே ஒளிர வைத்து பேசுபவருக்கு நேரத்தைக் குறிப்பால் உணர்த்துவார். கூட்டத்தின் முடிவில் யார், யார் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்றும், பார்வையாளர்களின் வாக்குகளுக்கு யார், யார் தகுதி பெற்றார்கள் என்றும் தனது அறிக்கையில் தெரிவிப்பார்.

6. இலக்கணவாணர் (Grammarian): ஒவ்வொரு பேச்சாளரும், Theme of the Day ஐயும், Word of the Day ஐயையும் எவ்வளவு முறை பயன்படுத்தினார்கள் என்று தனது அறிக்கையில் தெரிவிப்பார். மேலும் பேச்சின்போது, பயன் படுத்தப்பட்ட அழகிய சொல்லாடல்களையும், (good usage of English), இலக்கணப் பிழைகளையும் சுட்டிக் காட்டுவார். இதன் மூலம் பேச்சாளர் மட்டுமின்றி, அனைவரும், தவறுகளை திருத்திக் கொள்வதும், நல்ல வார்த்தைகளைப் பேச்சின் போது பயன்படுத்தும் எண்ணமும் ஏற்படுகின்றது.

7.  அ-உ-எண்ணி (Ah-Counter): ஒவ்வொரு பேச்சாளரும், சரியான ஒத்திகை செய்து வரவில்லையென்றாலோ, வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்படுவது சகஜம். இதனை மறைப்பதற்காக சில நிரப்பு வார்த்தைகள் (Filler Words) கொண்டு சமாளிப்பதுவும் வழக்கம். தமிழிம் சிலர் பேசும் போது "வந்து, வந்து", "கேட்டியா? கேட்டியா?" போன்ற வார்த்தைகளை ஒவ்வொரு வாக்கியத்திலும் காரணமின்றிப் பலமுறை பயன்படுத்துவார்கள். கல்லூரி விரிவுரையாளர்கள் இந்த மாதிரி நிரப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது, மாணவர்கள் கூர்ந்து கவனித்து எத்தனை முறை "வந்து" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் என்று குறிப்பெடுப்பது அனவரும் அறிந்ததே. 50 முறையோ அல்லது 100 முறையோ தாண்டும்போது கடைசிப் பெஞ்சு ஓவென்று ஆர்ப்பரிக்கும். அ-உ எண்ணியின் வேலையும் இதுதான். பேச்சாளர் எத்தன முறை நிரப்பு வார்த்தைகளப் பயன்படுத்தினார் என்றும், எத்தனை முறை பேசாமல் மவுனம் சாதித்தார் என்றும் தனது அறிக்கையில் கூறுவார்.

பங்காளிகளின் வேலை என்னென என்று பார்த்தோம். இப்போது ஒரு மாமூலான கூட்டம் எப்படி நடக்கும் என்று பார்ப்போம். ஒவ்வொரு கூட்டமும் மூன்று முக்கியமான அங்கங்கள் கொண்டவை.

1. தயாரிக்கப்பட்ட பேச்சுக்கள் (Prepared Speeches):  இந்த நிகழ்வில், 3 அல்லது 4 உறுப்பினர்கள், தங்களது தயாரிக்கப்பட்ட பேச்சுக்களை நிகழ்த்துவார்கள். ஒவ்வொரு பேச்சும் 5-7 நிமிடங்கள் இருக்கும். புதிதாகச் சேர்ந்த உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் Competent Communicator Manualல் குறிப்பிட்டபடி 10 ப்ராஜெக்டுக்கள் செய்ய வேண்டும். இவற்றை முடிக்க 6 மாதங்கள் ஆகலாம். ஒவ்வொரு ப்ராஜெக்ட்டுக்கும் தனித்தனியான் நோக்கங்கள் உண்டு. உதாரணமாக் ஒரு ப்ராஜெக்ட்டில் உடல் மொழிக்கு (Body Language) முக்கியத்துவம் கொடுக்கப்படும். மற்றொன்றில், ஒலி மொழி வேறுபாட்டிற்கு (Vocal Variety) முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒவ்வொரு ப்ராஜெக்ட்டின் நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும், உறுப்பினர்கள் நோக்கம் மாறாமலிருக்கும் பட்சத்தில், அவருக்குப் பிடித்த தலப்பில் பேசலாம். தவிர்க்கப்பட வேண்டிய தலைப்புகளையும் நினவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பேச்சையும் மூத்த டோஸ்ட்மாஸ்டர் ஒருவர் கூர்ந்து கவனித்து, அந்தப் பேச்சும எவ்வாறு இருந்தது? அதன் நிறை-குறைகள் என்னென்ன? என்று தனது மதிப்புரையில் குறிப்பிடுவார்.

2. உடனடிப் பேச்சுக்கள் (Impromptu Speeches or Table Topics): கூட்டத்தின் இரண்டாவது அங்கம், "உடனடிப் பேச்சுக்கள்" எனப்படும் ஒரு சுவையான நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியினை நடத்த Table Topic Master (TT Master) என்ற ஒரு பாத்திரத்தினை முன்பே முடிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் ஏற்று நடத்துவார். அவர் பல தலைப்புகளை எடுத்து வந்திருப்பர். பார்வையாளர்களிலிருந்து உறுப்பினரையோ அல்லது ஒரு விருந்தினரையோ அழைத்து அவருக்கு ஒரு தலைப்புக் கொடுப்பார். தலைப்பைப் பெற்ற நபர் 30 வினாடிகள் மட்டுமே யோசித்துப் பேச்சைத் துவக்க வேண்டும். பேச வேண்டிய நேரம் 1-30-2.30 நிமிடங்களுக்கு மட்டுமே. 1.30 நிமிடங்களுக்குக் குறைவாகவோ அல்லது 2.30 நிமிடங்களுக்கு அதிகமாகவோ பேசுபவர்கள் தகுதியிழப்புச் செய்யப்படுவார்கள். கேட்பதற்கு எளிதாகத் தோன்றும் இந்த நிகழ்வு, உண்மையிலேயே அவ்வளவு எளிதல்ல. ஆனால், பழகப் பழக இதுவும் எளிதில் கைகூடும்.  

இந்த இரண்டு நிகழ்வுகளும் முடிந்த பிறகு, நேரக் குறிப்பாளர் தகுதியிழந்த பேச்சாளர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் பெயர்களைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பார். பார்வையாளர்கள் தகுதி பெற்ற பேச்சாளர்களில் தங்களைக் கவர்ந்த தயாரிக்கப்பட்ட  பேச்சாளர் (Best Prepared Speech) மற்றும் உடனடிப் பேச்சாளர் (Best Table Topic Speech) யார் என்றும் வாக்களிப்பாரகள்.

3. மதிப்புரை (Evaluations): கூட்டத்தின் பிரதான அம்சமே மதிப்புரைகளாகும். பொது மதிப்பீட்டாளர் ஒவ்வொரு பேச்சையும் கூர்ந்து கவனித்த மூத்த டோஸ்ட்மாஸ்டரை குறிப்பிட்ட பேச்சாளரின் பேச்சுக்கு (கவனிக்கவும். பேச்சாளருக்கு அல்ல; அவரது அன்றைய பேச்சுக்கு மட்டுமே) மதிப்புரை வழங்கச் சொல்வார். பேச்சாளருக்கு இந்த மதிப்புரை பெரிதும் நன்மை பயக்கக்கூடியதாகும். பார்வையாளர்கள் இந்த மதிப்பீட்டாளர்களில் தங்களைக் கவர்ந்தவர்கள் (Best Evaluator) யார் என்றம் மீண்டும் ஒரு முறை வாக்களிப்பார்கள். 

நேரக் குறிப்பாளர், இலக்கணவாணர், அ-உ எண்ணி ஆகியோரும் தத்தம் அறிக்கைகளை வாசிப்பார்கள். இறுதியாக பொது மதிப்பீட்டாளர் கூட்டட்த்தின் பொதுவான நிறை-குறைகளைப் பட்டியலிடுவார். இதில் கூட்டம் சரியான நேரத்திற்குத் துவங்கப்பட்டதா? வந்திருந்த விருந்தினர்கள சரியாக வரவேற்கப்பட்டார்களா? கூட்டம் நடந்த இடம் தயார்நிலையில் இருந்ததா? போன்ற நுணுக்கமான விவரங்களும் தெரிவிக்கப்படும். 

மூன்று அங்கங்களும் முடிந்த நிலையில், டோஸ்ட்மாஸ்டர் ஆஃப் த டே, வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி, தலைவரிடம் மேடையை ஒப்படைப்பார். தலைவர், விருந்தினர்கள கூட்டத்தினால் பயனடைந்திருந்தால், அவர்களது கருத்தைச் சொல்லுமாறு கேட்பார். பின்னர் அன்றைய கூட்டத்தின் சிறந்த தயாரிக்கப்பட்ட பேச்சாளர், சிறந்த உடனடிப் பேச்சாளர், சிறந்த மதிப்பீட்டாளர் ஆகியோர் பெயர்களை அறிவித்து அவர்களைக் கவுரவிப்பார். வேறு ஏதும் நடவடிக்கைகள் இல்லாதபட்சத்தில் கூட்டத்தினை அடுத்த வாரம் வரை ஒத்தி வைப்பார்.

பேச்சுக் கலை (ஆங்கிலத்தில் மட்டுமே) மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்க உதவி செய்ய்ம் டோஸ்டமாஸ்டர்ஸ் மன்றம் வருடம் இரு முறை போட்டிகளையும் நடத்துகிறது. இவை முறையே க்ளப், ஏரியா, டிஸ்ட்ரிக்ட், டிவிஷன் என்ற பல நிலைகளில் நடத்தப்பட்டு, இறுதிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறும். இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான போட்டியாளரின் செலவுகளை அந்தந்த  க்ளப், ஏரியா, டிஸ்ட்ரிக்ட், டிவிஷன் ஏற்றுக் கொள்ளும்.

அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பெரிதும் பிரபலமடைந்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் க்ளப், கடந்த ஒரிரு வருடங்களாக, இந்தியாவிலும், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் பேராதரவுடன் இயங்கி வருகின்றன. சென்னையில் இந்த மன்றத்தில் உறுப்பினராக விருப்பம் இருந்தாலோ, மேலதிக விபரங்கள் தேவைப்பட்டாலோ என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

- சிமுலேஷன்

Sunday, June 13, 2010

மேஜிக் செய்வது எப்படி?

என அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டியை இழுத்துக் கட்ட பச்சைப் பட்டை பெல்ட். ஆனால், எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இப்படிப்பட்ட மனிதரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம். இது எப்படி முடிந்தது? கூட்டத்தைக் கூட்ட மேஜிக், கீஜிக் ஏதாவது பண்ணினாரா? ஆமாம். மேஜிக்தான் பண்ணினார். பண்ணினது மட்டுமல்லாது அந்த மேஜிக்குகளை அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். அதனாலே அவர் மேலே எனக்குப் பெரிய அபிமானம். நானும் கைக்குள் காசை மறைய வைத்தல், கத்தியின்றி, சத்தமின்றி வாழைப் பழத்தினை வெட்டுதல், சீட்டுக் கட்டினில் எதிராளி எடுத்த சீட்டினைக் கண்டுபிடித்தல் பொன்ற எளிய மேஜிக்குகளையெலாம் கற்றுத் தேர்ந்து, உறவினர்கள் முன்னிலையில் அவர்களது கவனத்த ஈர்க்க முடிந்தது.

சிறிய வயதிலேயே மேஜிக் கற்றுக் கொண்டதற்குப் பலன்கள் பல இருந்தன. முடிந்த வரை எந்த ஒரு விஷயத்தையும் அறிவியல் பூர்வமாக அணுக முடிந்தது. குறிப்பாக சித்து விளையாட்டுகள் செய்து, மக்களை மந்தையாடுகளாக்கும் பாபாக்களை நம்ப மனம் மறுத்தது. அவர்களும் பி.சி.சர்க்கார் அல்லது பாக்யநாத் போன்று மேஜிக் கற்றுத் தேர்ந்து அதனை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்துவர்கள்தான் என்பது புரிந்தது.

மேஜிக்குகள் மேடையிலே செய்யப்படும் ஸ்டேஜ் மேஜிக், தெருக்களில் செய்யப்படும் ஸ்ட்ரீட் மேஜிக் என்று பல வகைகள் இருந்தாலும், நம் நாட்டிலே இவற்றையெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைகளிலே அடக்கி விடலாம். சீட்டுக் கட்டில் எதிராளி எடுத்த சீட்டினைப் பார்க்காமலே சொல்லுதல், கர்ச்சீப்பினிலிருந்து பூக்களையோ அல்லது புறாவையோ வரவழைத்தல், பெண்ணை படுக்க வைத்து பவர்ஸா கொண்டு அறுத்தல் போன்றவை இந்தச் சில வகைகள்.

சென்னையிலே மேஜிக் ஜேம்ஸ் என்ற பெயரைப் பல சுவர்களில் பார்க்கலாம். எனது பையனுக்கு இவர் பெயரைக் கேட்டாலே அலர்ஜி. ஆமாம் இருக்காதா பின்னே? பார்வையாளர்கள் மத்தியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தவனை மேடைக்கு அழைத்தவுடன், பரவசமாக ஓடியவனின் காற்சட்டை முன்னால் புனலை வைத்து, பார்வையாளர்கள் முன்னிலையில் உச்சா போவது போன்ற தோற்றமயக்கத்தினை ஏற்படுத்தியவர். அதுவும் ஒரு முறையல்ல, இரண்டு, மூன்று முறை. ஒவ்வொரு முறையும் ஆர்வக் கோளாறால் மேடை ஏறிப் பின்னர் முகம் சிவந்து திரும்பி வருவான்.

முன்பெல்லாம் இந்த மேஜிக் கலையினை யார் கற்றுத் தருவார்கள் என்பதே தெரியாது. நான் சிறுவனாக இருக்கும் போது "நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில்" வாங்கிய "மேஜிக் செய்வது எப்படி" என்ற புத்தகத்தில் செய்முறைகள் எல்லாம் ரொம்பவும் கரடு முரடாகக் கூறப்பட்டிருக்கும். "குன்றிமணித் தோலுடன், கண்டங்கத்திரிப் பூவும், வெள்ளைத் தாமரைத் தண்ணீரும், சீம்பாலும் விட்டரைத்து, அமாவாசையன்று வெயிலில் காயவைத்துப் பொடியாக்கி மீண்டும் வஸ்திரகாயம் செய்து கிடக்கும் பொடியினை பாதங்களில் பூசிக் கொண்டால், தண்ணிரின் மேல் நடக்க முடியும்." போன்ற விளக்கங்கள் கொஞ்சம் பயமுறுத்தும். நான் வசித்து வந்த மேட்டுப்பாளையத்தில் குன்றிமணி, வெள்ளைத் தாமரை இன்ன பிற சமாச்சாரங்கள் கிடைத்தாலும், அங்கு ஓடி வரும் பவானியாறு ஒரு கூழாங்கற்கள் அடங்கிய ஒரு காட்டாறு என்பதனால் தாண்ணீரின் மேல் நடக்கும் முயற்சி ஏதும் செய்து பார்க்கவில்லை. அதைப் போலவே, “செவ்வாழை மரத்தினுள் இரும்புக் கடப்பாரையை செருகி வைத்து 21ஆம் நாள் எடுத்துக் கடித்துச் சாப்பிட இயலும்”, போன்ற மேஜிக் குறிப்புகளையும் ஒரு போதும் செய்து பார்க்க மனம் வரவில்லை..

தற்போது சென்னை போன்ற இடங்களில் மேஜிக் கற்றுக் கொள்வது எளிதாக உள்ளது. போதாதென்றால், "மேஜிக் செய்வது எப்படி?" என்பதனை கண்ணொளி வடிவில் யூ-ட்யூப் போன்ற தளங்களில் எளிதாகப் பார்த்துப் புரிந்துகொள்ள முடிகின்றது.. இருபத்து நாலு மணி நேரமும் கம்ப்யூட்டரோ அல்லது டி.வியோ கதியென்று இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு மேஜிக் கலையினைக் கற்றுக் கொடுங்கள். அப்புறம் அவர்கள் ஆளுமையில் ஏற்படும் மாற்றஙளைப் பாருங்கள். கண்டிப்பாகக் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில், சில பலன்களாவது நிறைவேறும்.

* அறிவியல் உண்மைகள் பலவற்றில் அனுபவபூர்வமாக அறியும் வாய்ப்பு.

* சித்து விளையாட்டுக்கள் விளையாடும் போலிச் சாமியார்கள் பின்னால், மூளையை அடகு வைத்துப் போகாமல் இருத்தல்.

* கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும், தகவல் பறிமாற்றத்தில் முன்னேற்றம்.

* கூர்ந்து கவனிக்கும் மற்றும் உற்று நோக்கும் திறனை வளர்த்தல்.

* குடும்ப அங்கத்தினர்களோ, நெருங்கிய நண்பர்களோ கூடியிருக்கும் வேளையில் பொழுதினை இனிமையாகப் போகுதல்.

பதிவர்களே, மேஜிக் குறித்த உங்கள் அனுபவங்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- சிமுலேஷன்

வணக்கம், வந்தனம், நமோஸ்கார்

அன்புப் பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னையும் ஒரு நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுத்த  தமிழ்மணம் நிர்வாகதிற்கு முதற்கண் எனது நன்றிகள். இந்த நட்சத்திர வாரம் ஒரு நல்ல அனுபவம் கிட்டும் என்று மனதார நம்புகின்றேன்.


இந்த வாரத்தில் அலுவலகத்தில் ஆணி புடுங்கும் வேலை அதிகம் இருந்தாலும், நள்ளிரவிலும் முழித்துக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் பதிவிட்டு உங்களையெல்லாம் மகிழ்விக்கத் தயராக உள்ளேன்.

ஓகே. ஸ்டார்ட் மீசிக்.

- சிமுலேஷன்

Wednesday, June 02, 2010

அலுப்பாயிருக்கு தமிழ் வலையுலகம்

அறிவியலுக்கு ஒரு முகம்

ஆன்மீகத்திற்கு ஒரு முகம்


அனானியாய் எழுத ஒரு முகம்


குஜாலாய் எழுத ஒரு முகம்


கும்மியடிக்க ஒரு முகம்


அலுப்பாயிருக்கு தமிழ் வலையுலகம்


- சிமுலேஷன்

Monday, May 10, 2010

புலிக்கலைஞன் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் நாவலுக்கு ஒரு "ஒற்றன்" என்றால், அவரது சிறுகதைக்கு ஒரு "புலிக்க்கலஞன்" என்று சொல்லலாம். அசோகமித்திரன் ஒரு ஸ்டுடியோக் கம்பெனியில் வேலை செய்தவர் என்று அறிந்ததாலும், 1973ல் எழுதப்பட்ட இந்தக் கதையின் களமும் ஒரு ஸ்டுடியோவே என்பதாலும், இது ஒரு முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக இருக்க முடியாதென்பதும், அனுபவம் கலந்த புனைவாகவே இருக்க முடியும் என்பதும் புலனாகிறது.

கதை இலாகாவில் ஒரு முக்கியப் புள்ளியாகிய சர்மாவும், இவரும் ஒரு நாள் ஸ்டுடியோவில் தனியே அமர்ந்திருக்கும்போதுதான் "டகர் பாயிட் காதர்" வருகின்றான். வெள்ளை என்ற ஏஜெண்ட் சொல்லி அனுப்பியதாகச் சொல்லி வந்து வேலை கேட்கின்றான். அவனுக்குக் கொடுப்பதற்கு தோதாக ஒரு பாத்திரமும் இல்லை என்று திருப்பி அனுப்ப எண்ணுகிறார்கள். ஆனால் அவன் இடத்தைக் காலி பண்ணுவதாக இல்லை.


"டகர் பாய்ட் வரும்க; என் பேரே டகர் பாய்ட் காதர்தானுங்க" என்கிறான் காதர். கதையின் பெயர் "புலிக்க்கலைஞன்" என்றிருப்பதால், "டகர் பாய்ட்" என்றால் "டைகர் ஃபைட்" என்று புரிந்துகொள்ள முடிகின்றது. டகர் பாய்ட்டிலே சுவாரசியம் செலுத்தாமலே இருப்பவர்களை எப்படியாவது இம்ப்ரஸ் செய்ய எண்ணுகின்றான் காதர்.


தான் கொண்டு வந்திருந்த துணிப்பையிலிருந்து, புலித்தலை ஒன்றினை எடுத்துத் தலையில் மாட்டிக் கொள்கிறான். அதற்கப்புறம் அவன் செய்யும் சாகசங்களை விலாவாரியாக விவரிக்கின்றார் அசோகமித்திரன். அங்கேதான் அ.மி ஒரு கை தேர்ந்த கதை சொல்லி என்று புரிய வைக்கின்றார்.


புலிக்கலைஞனின் சாகசங்களால் கவரப்பட்ட சர்மாவும், மற்றவர்களும் அவனுக்கு ஒர் வாய்ப்பு கொடுப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் கதையில் ஒர் இடைச்செருகல் செய்யத் தீர்மனிக்கிறார்கள்.சில நாட்கள் கழித்து காதர் கொடுத்திருந்த விலாசத்திற்குக் ஒர் கடிதமும் போடுகிறார்கள். ஆனால் கடிதம் திரும்பி வந்து விடுகின்றது. எங்கு தேடியும் அவன் அகப்படவில்லை. அவன் அகப்பட்டிருந்தாலும் பயன் இருந்திருக்காது. கமர்சியல் சினிமாவின் காரணிகள் அப்படி.


இந்தக் கதையில் புலிக்கலைஞனான டகர் பாய்ட் காதர்தான் கதாநாயகன். அனால் வில்லன்கள் என்று யாருமே இல்லை. சிறுகதைகளின் இலக்கணப்படி முதல் பாராவிலேயே வாசகர்களின் கவனத்தைக் கவரும் வண்ணம் அதிரடி வாக்கியங்கள் ஏதுமில்ல. ஆனால், வாசகனுக்குத் தனது கூர்ந்த கவனிப்பின் மூலம், புலிக்கலைஞன் என்றால் எப்படி இருப்பானென்றும், இந்த மாதிரி விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமென்றும் புரிய வைப்பதில் வெற்றி பெற்றுவிடுகின்றார் அசோகமித்திரன்.


- சிமுலேஷன்

Friday, April 23, 2010

சாப்பிட வாங்க ! சென்னையில் இப்போ விலை கம்மிதான்

சென்னையில் உலகத் தரத்தில் பல உணவகங்கள் வந்து விட்டதாம். அதிலும் இப்போ கோடை விடுமுறையை முன்னிட்டு விலையும் ரொம்ப ரொம்ப மலிவாம். எங்கே என்னென்ன ரேட்டு தெரியுமா?

  1. க்ரீன் பார்க் - தாலி மீல்ஸ் - Rs.149
  2. நியூ யார்க்கர் - லஞ்ச் பஃபே - Rs.172
  3. பெராரி - பென்ஸ் பார்க் டுலிப் - ஓவர்நைட் பெஸ்டிவல் - Rs.199
  4. க்ரீன் சில்லீஸ்- அம்பிகா - மிட்நைட் பபே - Rs.200
  5. டுலிப்ஸ் - க்ரீன் பார்க் - மிட்நைட் பிரியாணி - Rs.235
  6. ஷோகன் - சீன உணவு - Rs.250
  7. காரைக்குடி - க்ரேட் சீன விருந்து - Rs.250
  8. கோலி ஸ்மோக் ரெஸ்ட்டாரென்ட்- சிசிலிங் லஞ்ச் - Rs.275
  9. நியூ தந்தூர் தடக்கா - Rs.279
  10. மெயின் ஸ்ட்ரீட் - தி ரெஸிடென்ஸி டவர்ஸ் - மிட்நைட் பபே - Rs.400
  11. சதர்ன் அரோமாஸ் - தி ரெஸிடென்ஸி டவர்ஸ் - சன்டே பைட்ஸ்- Rs.450
  12. பாட் உண்வகம் - ட்ராடோரியா லஞ்ச் - Rs.599
  13. பியானோ ரெஸ்ட்டாரென்ட் - சவேரா - மீல் டீல் லஞ்ச் - Rs.625
  14. கேரமல் - ஏசியானா - சன்டே ப்ரஞ்ச் - Rs.799 
  15. பாப்ரிகா கஃபே - கோர்ட்யார்ட் - பைசாகி விழா உணவு - Rs.845
  16. ஸீஸன்ஸ்- அக்கார்ட் மெட்ரொபாலிடன் - சன்டே ப்ரஞ்ச் - Rs.895
  17. ரெயின்போ- ரெயின்ட்ரீ - சன்டே ப்ரஞ்ச் - Rs.900
  18. கார்டன் கபே - ரேடிசன் ஜி,ஆர்.டி - சன்டே ப்ரஞ்ச் (நீச்சலுடன்) - 984
  19. சிலான்ட்ரோ - லெ ராயல் மெரிடியன் - சன்டே ப்ரஞ்ச் - Rs.1100
  20. தக்ஷின் - பார்க் ஷெரட்டன் - சன்டே ப்ரஞ்ச் - Rs.1100
  21. ஷாங்காய் க்ளப் - ஷோளா ஷெரட்டன் - சன்டே ப்ரஞ்ச் - Rs.1000
  22. காபுசினோ - ஷெரட்டன் பார்க் - ஜாஸ் வீக் என்ட் ப்ரஞ்ச்- Rs.1500
  23. லோட்டஸ் - த பார்க் - சன்டே ப்ரஞ்ச் - Rs.1687
இவையெல்லாமே ஒரு ஆளுக்குத்தானாம். வரிகள் தனி. 

மக்களே எஞ்சாய் தி வீக் என்ட்!

- சிமுலேஷன்

Saturday, April 10, 2010

வாத்தியார் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்


சுஜாதா, ஆதவன் ஆகியயோர் அளவுக்கு இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அதே நடையில், "மத்யமர்" கதைகள் கொடுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் ம.வே.சிவக்குமார் மீது ஒரு நல்ல மதிப்பீடு உண்டு. அவரது "அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும்", "பாப்கார்ன் கனவுகள்". "வேடந்தாங்கல்" ஆகிய புதினங்களும், தினமணிக்கதிரில் வந்த நல்ல பல சிறுகதைகளும் மனதைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

கிழக்குப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த "வாத்தியார்" சிறுகதைத் தொகுதியில் 19 சிறுகதைகள் உள்ளன. இந்தத் தொகுப்பின் இறுதியில் வரும் "வாத்தியார்", சற்றே பெரிய சிறுகதை. "வாத்தியார்", புனைவா, அல்லது அனுபவமா என்று கேட்டால், இது அசோகமித்திரனின் "ஒற்றன்" போன்ற ஒரு அனுபவம் கலந்த புனைவு என்று கூறலாம். கதையின் நாயகனான வாத்தியார் யார் என்றால், பள்ளி ஆசிரியரோ, பாட்டு வாத்தியாரோ அல்லது கார்யம் பண்ணி வைக்க வந்த வாத்தியாரோ அல்ல. அந்தக் கால சினிமா ரசிகர்களுக்கும், தமிழர்களுக்கும் "வாத்தியார்" என்ற பெயரில் பெரிதும் பரிச்சயம் ஆன எம்.ஜி.ஆர் தான்.

கதையின் களம், மாம்பலம் எனப்படும் தி.நகர் மட்டுமே. கிருஷ்ணவேணி தியேட்டர், கிரசண்ட் பார்க் தெரு, தணிக்காசலம் முதலித் தெரு, ஆர்க்காடு முதலி தெரு என்று எனக்கு மிகவும் பழக்கப்பட்ட இடங்களில் கதையைப் பயணிக்கச் செய்வதன் மூலம், பல இடங்களில் "ஸேம் பிஞ்ச்" அடிக்கவைக்கின்றார் ம.வே.சி. நான் 76ஆம் வருடம் கோடை விடுமுறைக்கு மாமா வீட்டுக்கு வந்த போது, அவர் இருந்த வீட்டுக்கு எதிர் வீடாக இருந்த எம்.ஜி.ஆர் வீடுதான் கதையின் முக்கியக் களம் என்ற போது (மீண்டும் ஸேம் பிஞ்ச்)சுவாரசியம் மேலும் கூடியது.

பள்ளி விடுமுறைக்கு திவாகரின் குடும்பம், நெய்வேலியிலிருந்து சென்னை வந்து, பணக்கார மாமா வீட்டில் வந்து கொட்டம் அடிக்குமிடத்தில் கதை துவங்குகின்றது. "விக்கிரம சிங்கா. தோல்வியை ஒப்புக் கொள். மலர்புரி நாட்டுக்கு இனி நானே அரசன்" என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி குச்சிச் சண்டை போடுகிறார்கள் கஸின்ஸ். சீட்டுக் கட்டு ஆடுகிறார்கள். ஐஸ் க்ரீம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை என எல்லோரும் கூடிக் குதூகலிகிறார்கள்.

இந்த விடுமுறை நாட்களிலேயே, பணக்கார மாமா கிரகப்ரவேசம் செய்து புது வீட்டிற்கு போகிறார். சேட்டிடமிருந்து வீடு வாங்கிய பிரபலங்களில் ஒருவர் மாமா. மற்றொருவர் மக்கள் திலகம். ஆர்க்காடு முதலித் தெருவில் வாத்தியார் வீட்டிற்கு அடுத்த வீடான மாமாவின் புதிய வீட்டுக்குச் செல்லும் போது எல்லோரும் எம்.ஜி.ஆர் என்று 'ஆ'வென்றிருக்க, நம்ம திவாகருக்கு மட்டும் அவர் மேல் ஒரு ஈர்ப்பும் வரவில்லை. மாறாக ஒரு வித குரோதமே வருகின்றது. அந்தக் காலத்தில் கீழ்த்தட்டு மக்களைப் பெரிது கவர்ந்தவர் எம்.ஜி.ஆரென்றால், நடுத்தர மக்களின் நாயகன் சிவாஜிதான். மேலும் இருவரும் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நட்சத்திரங்களென்பதால் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு சிவாஜி விரோதி. சிவாஜி ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் விரோதி. சமயம் கிடைக்கும் போதெல்லாம் தாக்கிக் கொண்டேயிருப்பார்கள். வாத்தியார் கதை நாயகன் திவாகரும் சிவாஜி ரசிகன்தான். மேலும் வாத்தியார் வீட்டில் நடக்கும் ஷூட்டிங்கில், தனது கண்ணால் அந்தக் காட்சியையும் பார்த்து விடுகின்றான். ஆம். அவனது கனவுக் கன்னியான மஞ்சுளா (ஸேபி) வேறு வாத்தியாருடன் நடிப்பது ஆத்திரத்தைக் கிளப்புகிறது. "அழகிய தமிழ் மகள் இவள்; இரு விழிகளில் எழுதிய மடல்" என்று வாத்தியார் மஞ்சுளா இடுப்பை வளைத்துப் பிடித்து ஆட, திவாகரும் அவனது கஸின் வேம்புவும், தங்கள் வீட்டிலிருந்து "கம்-செப்டம்பர்" இசையை பலமாக ஒலிக்க வைக்கிறார்கள். சின்னவர் வீட்டிலிருந்து ஆட்கள் வந்து புகார் சொல்ல, மாமி குழந்தைகளை சப்போர்ட செய்து, அவர்களைத் திருப்பி அனுப்ப, ஷூட்டிங் கேன்சல் ஆகின்றது.

மறுநாள் காலை, எம்.ஜி.ஆர் தனது வீட்டில் நுழைய இருக்கும்போது, பக்கத்து வீட்டிலிருந்து, மஞ்சுளா பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத திவாகர் செய்யும் காரியம், "டேய் கிழவா" என்று கத்திவிடுவது. எம்.ஜி.ஆர் "யார் கத்தியது?" என்று பார்த்துவிடுகின்றார். கண்ணாடி போட்ட பையனைத் தூக்கி வரச் சொல்கிறார் வாத்தியார். ஒரு த்ரில்லரைப் போல, அடுத்து என்ன நடக்குமோ என்று வாசகர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றார் ம.வே.சி.

காலச்சக்கரம் ஓடி, திவாகர் வங்கி உத்யோகம் பெற்று, ஒரு நாள் வேலை மாற்றல் பெற்று வருவது 'ராமாவரம்' கிளைக்கு. அவனுக்கு மீண்டும் எம்.ஜி.ஆரைத் தரிசிக்க ஒரு வாய்ப்பு. இம்முறை அவர் முதல் அமைச்சர். பிறகு சில நாட்களில் அப்போலோ, ப்ரூக்ளின் என்று மருத்துவ சிகிச்சை. தமிழ்நாடே அவருக்காக பிரார்த்தனை செய்கின்றது. தொகுதியில் இல்லாமலே, வெளிநாட்டிலிருந்துகொண்டு படுத்துக் கொண்டே ஜெயிகின்றார் மக்கள் திலகம். எப்படி மக்கள் இந்த ஆளுமைக்காக உருகிறார்கள் என்று கொஞ்சம், கொஞ்சமாக சற்றே வியப்பு  ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது திவாகருக்கு.

ஒரு நாள் ராமாவரத்தில் ரோட்டில் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அருகில் வந்து தன்னையும் மதித்து சைகை மொழியில் அறிவுரை சொன்ன எம்.ஜி.ஆரைப் பார்த்து முதன் முறையாக ஆடிப் போகின்றான் திவாகர். எப்பேர்ப்பட்ட மனிதர் இவர் என்று வியந்தோதுகின்றான். இவரையா நாம், "டேய், கிழவா" என்று அறியாமையில் சொன்னோம் என்று கலங்கி நிற்கின்றான்.

ம.வே.சியின் "வாத்தியார்" சற்றே புனைவு கலந்து, பெரிதும் நினைவலைகள் கொண்ட எளிமயான நடையில் அமைந்த, மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய கதை. எனக்கு மிகவும் பரிச்சயமான களம் என்பதால் என்னைப் பெரிதும் கவர்ந்தது. மத்யமர் கதை படிக்கும் மற்றைய வாசகர்களையும் கவரும் என்றே நினைக்கின்றேன். "வாத்தியாரிடமிருந்து நாயகன் திவாகர் மட்டுமல்ல. வாசகர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கு" என்று கதைத் தலைப்பின் மூலம் ம.வே.சி சொல்லமல் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

- சிமுலேஷன்

Tuesday, March 30, 2010

சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

"சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?" என்பது உள்ளிட்ட சில கேள்விகள் வைத்திருந்தேன் எனது பதிவில் முன்பொரு முறை. அதனை மீள் பதிவு செய்கின்றேன் இப்போது. எனது பழைய பதிவுகளிலிருந்தோ அல்லது கூகிளாண்டவர் துணைகொண்டோ பதில்களைக் கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

- சிமுலேஷன்

1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சில கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-

2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?

3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?

5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?

6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?

7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது எப்படி வந்தது?

8. தேவகுசுமம் என்பது என்ன?

9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

Friday, March 19, 2010

ஊஞ்சல் - சுஜாதா - நாடகம் - நூல் விமர்சனம்



சிறுகதைகளிலும், நெடுங்கதைகளிலும் எப்படி தனக்கென்று ஒரு முத்திரை பதித்தாரோ, அப்படியே தமிழ் நாடகங்களிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் சுஜாதா. சமூக அவலங்கள், யதார்த்தம், எள்ளல், நகைச்சுவை, சோகம் என பலதரப்பட்ட விஷயங்களையும் அவர் நாடகங்களில் காணலாம்.

அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று "ஊஞ்சல்" ஆகும். இதே நாடகம் பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை நடிக்கப்பட்டது. இந்த நாடகத்தினைப் படிக்கும்போது, தனக்கு ஒரு நல்ல பாத்திரம் இருப்பதாக நினைத்து பூர்ணம் விஸ்வநாதன் இந்த நாடகத்தை ஏற்று நடித்தாரா, இல்லை, பூர்ணத்தை மனதில் வைத்து, சுஜாதா நாடகம் எழுதினாரா என்று தெரியாது. அவ்வளவு நல்ல பாத்திரப் பொருத்தம்.

ஐம்பத்தெட்டு வயதுடைய வரதராஜன்தான் கதையின் நாயகர். அவருடைய மகள் கல்யாணியின் சம்பளத்தில் ஜீவனம் ஓடிக் கொண்டிருக்கிறது. மனைவியிடம் அவ்வப்போது பாட்டு வாங்கிக் கொண்டிருகின்றார். தற்காலத்தால் உதானீசப்படுத்தபடும் ஒரு பழங்காலத்து மனிதர் அவர். தனது புரோட்டோடைப் ஒருநாள் உலகத்தையே புரட்டிப் போட்டுவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு கனவுலக மனிதர். ஆனால், கையில் காசில்லை. கால் பாக்கட் சிகரெட்டுக்குக் கூட, கல்யாணியின் கையை எதிர்பார்த்திருப்பவர். இந்த லட்சணத்தில் மகளுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்? தன்னிடம் கை கட்டி  வேலை பார்த்த மதிவதனம் அவருக்கென்று ஒரு வேலை போட்டுக் கொடுத்தவுடன், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு நிம்மதி ஏற்படுகின்றது. ஆனால் அந்த நிம்மதி அதிக நேரம் நீடிப்பதில்லை.  

எப்போதும் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு பழமைக்கால நினவுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கின்றார். இந்த ஊஞ்சலும் அவரும் ஒன்றுதான் என்பது சுஜாதா இறுதிக் காட்சியில் தெரியப்ப்டுத்துகின்றார்.

சிறுகதைகளிலேயே பேச்சுத் தமிழைப் பயன்படுத்துபவர், நாடகம் என்றால் கேட்கவே வேண்டாம்.

"அப்பா: ஆமா...நீ பாங்க்கிலே வேலை பாக்கிறே! இவன் ஐ.ஐ.டியில் இருக்கான். எப்படிக் காதல் உண்டாச்சு? கில்லாடிரா நீ!"


"நேரா வந்து வுயுந்தான்யா..."

"பாவம் டைவரு. எவ்வளளோ சாலாக்காத்தான் ப்ரேக் போட்டாரு."

பேச்சுத் தமிழ் தவிர, பங்க்சுவேஷன்ஸும் அங்கங்கே தேவையான அளவில் இருந்து, படிப்பவர்களுக்கு என்ன சூழ்நிலை என்பதனை எளிதில் புரிய வைக்கும். மேலும் அடைப்புக் குறிக்குள் காட்சியில்  என்ன நடக்கின்றது என்பதனையும் விளக்குகிறார். இந்த அடைப்புக்குறிக் குறிப்புகளைப் படிக்கும்போது, மேடையிலே ஏற்ற வேண்டிய நாடகத்துக்கான ஸ்க்ரிப்ட்தான் இது என்று தெரிகின்றது. 

வரதாராஜன், அவரது மனைவி, மகள் கல்யாணி, கிரி, மதிவதனன், என்று கிட்டத்தட்ட எல்லாப் பாத்திரங்களுமே, நாடகம் தானே இது என்றுப் பேசிப் பேசி அறுக்காமல், சொல்லின் செல்வர்களாக அளவாகப் பேசுகின்றார்கள். எனவே சுஜாதாவின் சிறுகதையினை எப்படி ரசிக்கின்றோமோ அப்படியே, இந்த ஊஞ்சல் நாடகத்தினையும் ரசிக்க முடிகின்றது. வரதராஜன் தற்கால நிலைமையும், முடிவும் படிப்பவர்ககள் மனதை அசைக்கும் என்பது உண்மை. அதுவே சுஜாதாவின் வெற்றி.


தலைப்பு:    ஊஞ்சல்  / உங்களில் ஒரு கணேஷ் 
பதிப்பாண்டு: 1989 
வெளியீடு:   விசா பப்ளிகேஷன்ஸ் 
விலை:      Rs.55

- சிமுலேஷன்
     

Thursday, March 18, 2010

பாலங்கள் - சிவசங்கரி - நூல் விமர்சனம்


சிவசங்கரி அவர்கள் எழுதிய "பாலங்கள்" நாவலுக்கு என் அம்மா கோவை வானொலியில் வாசித்த சிறு நூல் விமர்சனம். (ஒலிபரப்பானது 1984 ஆம் ஆண்டாக இருக்கலாமென்று நினைக்கின்றேன்).

Get this widget | Track details | eSnips Social DNA





பதிவர் "ஆர்வி" கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த ஒலிபரப்பின் ட்ரான்ஸ்க்ரிப்ட்டினையும் இங்கு பதிவிடுகின்றேன்.

- சிமுலேஷன்

Monday, March 15, 2010

யார் எழுத்து? ஒரு புதிர்

தமிழ் எழுத்துக்களை ஆழ்ந்து படிப்பவரா நீங்கள்? உங்களுக்காக ஒரு புதிர். "யார் எழுத்துக்கள் இவை?" என்று கூறுங்கள். ஐந்து விடைகளையும் சரியாகக் கண்டுபிடிக்கிறவர்களே வெற்றி பெற்றவர்கள்.

1. "நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!" என்று மிகச் சிறு வயதிலிருந்தே பிரகடனப்படுத்தத் தொடங்கிவிட்டான் பரசு. அவனுடைய அக்காவும், அண்ணாவும் குழந்தையாயிருந்தபோது சப்பியது கட்டை விரலை; ஆனால் பரசு பாம்பு விரல், மோதிரவிரல் இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு சப்பினான். அவனுடைய அக்காவும், அண்ணாவும் சற்றே உரக்க அதட்டினால் போதும். விசித்து விசித்து அழத் தொடங்கி விடுவார்கள். ஆனால், பரசு சரியான கல்லுளி மங்கனாக இருந்தான்."

2. "நூறு ரூபாய் முன்பணமும் கொடுத்துவிட்டுச் சென்றார் குமாரவேலுப் பணிக்கர். ஒரு மாத காலத்தில் படத்தை முடித்துத் தந்துவிடவேண்டும் என்பது பேச்சு. சுப்பையா ஆசாரி ஒப்புக் கொண்டார். சரியான சான்ஸ் அடித்துவிட்டது. சீதையின் முழு உருவப் படம். முன்பணம் ஐநூறு ரூபாய் வேறு. திருப்தியாக இருந்தால், மேலும் ஒரேடியாக இருபது படத்துக்கு ஆர்டர். மனசில் குதூகலம் பொங்கி வழிந்தது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் முக்கிய சந்திப்புகளில் தொங்கப் போகின்றது. நாடகத் திரை போல ஒரு படம். கூடிக் கூடிப் பார்க்க மாட்டார்களா ஜனங்கள்? "சீதை மார்க் சீயக்காய் தூள்" என்ற கொட்டை எழுத்துகள் கண்களைக் கவ்வினாலும் படத்தின் அடிப்பக்கம், வலது கோடியில் 'சுப்பையா ஆசாரி' என்ற பெயர் புலப்படாமலா போகிவிடும்?"

3. "அந்த விளக்குக்குப் பக்கத்தில் நிறுத்தடா" என்றார் கந்தசாமிப்பிள்ளை. வண்டி நின்றது, இருவரும் இறங்கினார்கள்.
கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பலபளப்பான் ஒற்றை ரூபாய் நோட்டு  ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.
கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!
"என்னடா, பெரியவரைப் பார்த்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது?" என்று அதட்டினார் கந்தசாமிப்பிள்ளை.
"அப்படி சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?" என்றார் கடவுள்."

4. "மழை பெய்யத் துவங்கியதும் சில ஆண்கள் வேட்டியை மடித்துக் கொண்டு தெருவில் இறங்கி வேண்டுமென்றே அலைவதைப் பார்த்திருக்கிறாள். "மழையிலே நனையிற மாதிரி சுகம் உலகத்துல எதுவும் இல்லை" என்று அவர்கள் உரக்க அழுத்தந்திருத்தமாய்ப் பேசுவதைக் கேட்டு வியந்திருக்கிறாள். அப்படி அலைபவர்களை உற்றுப் பார்த்திருக்கிறாள். அவர்கள் மழையை அனுபவிப்பதாய் சொல்லுகிறார்களே தவிர, ஒரு பொழுதும் மழையை அனுபவிக்கவில்லை என்பது வெகு சீக்கிரம் புரிந்து விட்டது. மழைக்கு எதிரே ஒரு முரட்டுத்தனம் காட்ட அவர்கள் முயல்கிறார்கள். மழை பூமியில் ஒரு முரட்டுத்தனம் காட்ட, பதிலுக்கு மழையை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறார்கள். அதனால்தான் தெருவில் இறங்கி முன்னும் பின்னும் அலைந்து தன் பலத்தைக் காட்டிக் கொள்கிறார்கள். மழையை அப்படி வரவேற்கக் கூடாது. எதிர்த்து உரக்கக் கூச்சலிடக் கூடாது. ராஜா வர, அவரரெதிரே கம்பு சுழற்றலாம். அது வரவேற்புதான். ஆனாலும், இரண்டு புறமும் உப்பரிகையில் நின்றுகொண்டு, அரசர் மீது பூ தூவுவது எத்தனை அழகு." 

5. "அப்பா: ஆமா... நீ பேங்கிலே வேலை பாக்கிறே! இவன் ஐ.ஐ.டியில் இருக்கான். எப்படிக் காதல் உண்டாச்சு? கில்லடிரா நீ!
கிரி: காதல்னு சொல்ல முடியாதுப்பா. இவ பாங்குலே கம்ப்யூட்டரஸேஷன் பண்றாங்க. அதுக்கு ட்ரெயினிங் ஐ.ஐ.டியில் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. என் தலையெழுத்து இவளுக்கு கம்ப்யூட்டர்னா என்னன்னு சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இவ கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே எங்கேயோ சந்தடி சாக்கில் காத்ல் மாதிரி குன்ஸா ஒண்ணு புறப்பட்டுச்சு."

- சிமுலேஷன்

Sunday, March 14, 2010

போலிச் சாமியாரும் வேண்டாம்; நல்ல சாமியாரும் வேண்டாம்

சமீப காலங்களில் வரும் போலிச்சாமியார்களைக் "குறி" வைத்து வரும் செய்திகளைப் படிக்கும் பலரும், இந்த மாதிரி ஆசாமிகளால், நல்ல சாமியார்களுக்கும் கெட்ட பெயர் என்று சொல்லி வருகின்றனர். நல்ல சாமியார் யார்? போலிச் சாமியார் யார்?" என்று கேட்டால், சுலபமாக "மாட்டிக் கொண்டவர் போலிச்சாமியார்", என்றும் "மாட்டிக் கொள்ளாதவர் நல்ல சாமியார்" என்றும் கூறிவிடலாம்.

போலியோ, அசலோ, மக்ககள் எதற்காக இவர்கள் பின்னே போகின்றனர்?  மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு சாமியார்கள், பீடாதிபதிகள், ஸ்வாமிஜிக்கள் தீர்வு தருவார்கள் என்றே செல்கின்றார்கள் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையிலேயே பிரச்னைகளுக்காக இவர்களிடம் செல்லும் மக்களின் விழுக்காடு மிகக் குறைவே என்று எண்ணுகின்றேன். அப்படியானால் பின்னர் பெரும்பான்மை மக்கள் எதற்காக இவர்கள் பின்னே செல்கின்றனர்?

உளவியலாளர் மாஸ்லோவ் அவர்களின் "தேவைகளின் படிநிலை" (Maslow's Hierarchy of Needs) தத்துவத்தின்படி மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்தபடியாக ஆசைப்படுவது, குழுவில் ஒட்டிக் கொள்ளும் குணமாகும். அந்தக் குழு 'லயன்ஸ் கிளப்'பாக இருக்கலாம்; "ரோட்டரி கிளப்'பாக இருக்கலாம்; "ஆசிரியர் கூட்டணி" யாக இருக்கலாம்; "அமைந்த கரை ஆட்டோ ஒட்டுநர் சங்கமா"க இருக்கலாம்; அல்லது கோயம்பேடு அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கமாக இருக்கலாம். அதிலும் அடிப்படை உறுப்பினராக மட்டும் இல்லாமல், ஏதேனும் ஒரு இணை, துணை, பொதுச் செயலாளராகவோ அல்லது செயல் குழு உறுப்பினராகவோ இருத்தல் சிறப்பு. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு அமைப்பிலும் உறுப்பினராக ஒரு தகுதி  வேண்டும். (ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், அழுகும் பொருள் வியாபாரி போன்று). இந்த மாதிரி எந்தத் தகுதியும் இல்லாத மனிதர்களை வரவேற்க இருக்கும் புகலிடங்கள் இரண்டே இரண்டு. ஒன்று அரசியல். மற்றொன்று ஆன்மிகம். நம்மில் பெரும்பாலான காமன் மேன்க்ளுக்கு, ஆசிட் வீச்சு, ஆட்டோ பயம் காரணமாக,  அரசியல் என்றாலே அலர்ஜியாகிவிடுகின்றது. எனவே எளிதான புகலிடம் ஆன்மீகம் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் எனப்படும் சாமியார்கள், ஸ்வாமிஜிக்கள், குருஜிக்கள் மற்றும் பீடாதிபதிகள்.

இந்த மாதிரி "மனிதர்களிடம்" போகப் போக, ஏற்படும் மாற்றங்கள்தான் என்னென்ன?

  • அலுவலகப் பணியில் ஈடுபட்டாலும், மனதில் எப்போது குருவையே நினைத்துக் கொண்டிருத்தல்.
  • தனது முன்னோர்கள் கும்பிட்ட தெய்வங்களைப் புறந்தள்ளிவிட்டு, குருஜி புகைப்படம் பொருந்திய "ஸ்டிக்கரை', க்ளாசட் தவிர, வீட்டு வாசப்படி, அலுவலக மேஜை, கார் கண்ணாடி, பர்ஸ், டெஸ்க் டாப் மானிட்டர் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஒட்டி "நான் இன்னார் சீடன்; நான் இன்ன குழு உறுப்பினன்" என்று பறை சாட்டிக் கொண்டிருத்தல்.
  • "தனது பையன் வெளிநாடு போக வேண்டுமா? எந்தத் தேதியிலே விசா அப்ளிகேஷன் வாங்க வேண்டும்? மகள் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' படிக்க வேண்டுமா" அல்லது 'இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி' படிக்க வேண்டுமா?" என்ற முடிவுகளை, குருஜிதான் எடுப்பார் என்று எண்ணிக் காத்திருத்தல்.
  • தனது குருஜியே, நாக்பூரிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும் ஜூனியர் மோஸ்ட ஊழியன் நவீனுக்கும் குருஜி என்று தெரியவந்தால் மற்ற பழைய  நண்பர்களைக் கத்தரித்து விட்டு, காபி இடைவேளை, உணவு இடைவேளை என்ற எல்லா நேரங்களிலும் அவனுடனே குருஜியின் மகிமை குறித்துப் பேசிப் பேசி புளகாங்கிதப்படுதல். (சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவர், மற்ற நண்பரிடம், முதல் நாள் ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு வந்ததாகச் சொல்ல, மற்ற நண்பர் அழத் தொடங்கிவிட்டார். என்னவென்று கேட்டதில், தான் அப்போதுதான் அந்தக் குருஜி பற்றி நினைத்தாகவும், அந்த சமயத்தில் இவர் ஆசிரமம் சென்று வந்ததாகச் சொன்னது 'என்னே ஒரு பகவத் சங்கல்பம்' என்று சிலாகித்தார்.)
  • அருமை மகளின் பள்ளி ஆண்டு விழாவுக்கு, அலுவலக வேலை காரணமாக வரமுடியாவிட்டாலும், மணநாளன்று, மனைவியுடன் 'கொஞ்ச' நேரம் செலவிட முடியாவிட்டாலும், குருஜியின் பிறந்த நாளுக்கு (80ஆவது அல்லது 90ஆவதாக இருக்கலாம்) வெளிநாட்டில் இருந்தாலும் சொந்த விடுமுறை எடுத்துக் கொண்டு, சொந்தச் செலவில் வருதல். 
  • தாம்பத்ய வாழ்க்கைப் பிரச்னை போன்ற அந்தரங்க பிரச்னைகளுக்குக் கூட, பத்து வயதில் பிரம்மச்சாரியாய் ஆசிரம வாழ்க்கையைத் துவங்கி, கிரகஸ்தாரம் என்றாலே என்னவென்று அறியாத பீடாதிபதியிடம் புத்திமதி கேட்டல்.   
  • சமூக நிகழ்ச்சிகளுக்கும், தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் முடிச்சுப் போட்டுப் பிறகு, மணிக்கணக்காக அந்த முடிச்சின் அழகுக்கு தனது குருவே காரணம் என்று வியந்து கொண்டிருப்பது.
  • வாழ்க்கையில் முடிவெடுக்க வேண்டிய முக்கியத் தருணங்களில், அனைத்தையும் பகவான் பாத்துக் கொள்வான் என்று பஜனை பண்ணிக் கொண்டிருப்பது. (2009ல் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், தங்கள் வேலை எந்நேரம் பறிபோகுமோ என்று அஞ்சி, மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த சமயம், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 'பிசினஸ் அனலிஸ்ட்' நண்பரொவர் (சொந்தக் காசில்) பத்து லட்ச ரூபாய் செலவில் இன்னோவா கார் ஒன்று வாங்கினார். எதற்கு இந்தச் செலவு இந்தச் சமயத்தில் என்று கேட்க அவர் சொன்னது. "எனது குருஜி நாடு முழுதும் பாத யாத்திரை (!) போகப் போகின்றார். அவருக்கு பைலட் கார் ஓட்டிச் செல்பராகத் தன்னைத் தேர்வு செய்திருப்பதாகவும், அதற்கு இந்தக் காரே ஏற்றது என்றும் கூறினார்!)
  • குருஜி ஏடாகூடமாக மாட்டிக் கொண்டுவிட்டாலும், மீசையில் மண் ஒட்டவில்லை ரேஞ்சுக்கு, 'அவர் மனித அவதாரம்தானே! எனவே மனிதக் கர்மாக்கள் படும் கஷ்டங்களையெல்லாம் அவரும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்" என்று சப்பைக் கட்டுக் கட்டுதல். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு. "காய்ச்ச மரம்தானே கல்லடி படும், வெளிநாட்டு சதி", போன்ற கிளிஷேக்கள்.

சாமியார்கள், குருஜிக்கள் நடத்தும் யோகப் பயிற்சி போன்றவைகளினால் உடல் நலம் முன்னேறினாலும், தியானப் பயிற்சி போன்றவைகளினால் மன அமைதி கிட்டினாலும், 'அரிது , அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று புகழப்பட்ட மானிட மூளையக் கழட்டிவிட்டு, நரஸ்துதி செய்யச் சொல்வதால் போலிச் சாமியாரும் வேண்டாம். நல்ல சாமியாரும் வேண்டாம்.

- சிமுலேஷன்