Saturday, January 22, 2011

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 08 - சுத்த தன்யாசி

மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுக்கும் ராகங்களில் ஒன்று "சுத்த தன்யாசி". இது மேளகர்த்தா ராகமான நடபைரவியின் ஜன்யமாகும். இந்த ராகம் :உதய ரவிச்சந்திரிகா" என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: ஸ க2 ம1 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 ப ம1 க2 ஸ

முதலாவது "பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்ற பாடல். சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைக்கப்பட்ட பாடல். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. சிவாஜி, மற்றும் எம்.ஆர்.ராதா இருவரின் ஏட்ட்க்குப் போட்டிகும், அங்க சேஷ்டைக்களுக்காகவும் புகழ்பெற்றது.



அடுத்ததாக எம்ஜிஆர், சரோஜாதேவி இருவரும் நடித்த படகோட்டி படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற "தொட்டால் பூ மலரும்" என்ற சுத்தமான சுத்த தன்யாசிப் பாடல்.



எண்பதுகளில் இளையராஜாவின் ராஜாங்கம் துவன்கிய பின், அவர் சில ராகங்களில் எக்கச்சக்கப் பாடல்களில் இசையமைத்தார். உதாரணமாக ஹம்சத்வனி, கல்யாணி போன்றவை. இதே வரிசையில் வந்ததுதான் சுத்த தன்யாசியும். அவருக்குப் பிடித்த ராகம் என்றால் அவரே பாடவும் செய்து விடுவார். உதாராணம் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெரும் "விழியில் விழுந்து இதயம் கலந்து"



அடுத்தபடியாக நாம் கேட்க இருப்பது 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் வந்த 'பூவரசம் பூ பூத்தாச்சு" என்ற பாடல். பின்னணியில் இடல் பெறும் கூட்ஸ் வண்டியின் இசை ரசிக்கும்படியாக இருக்கும்.



மீண்டும் அதே படத்தில் இடம் பெறும் 'மாஞ்சோலைக் கிளிதானோ' என்ற பாடல் மூலம் இளையராஜா என்பதுகளில் சுத்த தன்யாசியின் மேலே எவ்வளவு காதலாக இருந்திருக்கின்றார் என்று தெரிந்து கொள்ளலாம்.



இப்போது கேட்க இருப்பது 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் இடம் பெறும் 'ஆயிரம் மலர்களே, மலருங்க: என்ற பாடல்.



அடுத்து, கல்லுக்குள் ஈரம்' படத்தில் இடம் பெறும் 'சிறு பொன்மணி அசையும்' என்ற பாடல்.



அடுத்து சோர்ந்து கிடப்பவர்களை தட்டியெழுப்பும் வண்ணம் அமைந்த "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு' என்ற 'உன்னால் முடியும் தம்பி' படப் பாடல்.



தமிழ்த் திரையிசையில் சுத்த தன்யாசியின் பட்டியல் மிகப் பெரியது. குறிப்பாக ராஜாவின் பங்கால். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். நேரம் கிடைக்குபோது இந்தப் பதிவில் மற்றைய சுத்த தன்யாசிப் பாடல்களை தரவேற்றுவேன்.

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்

வ.உ.சியும் வாலேஸ்வரனும்



இந்த மாத "அக்கறை" கூட்டத்துக்குச் சென்றபோது வ.உ.சி அவர்களின் பேரன் சிதம்பரநாதன் அவர்கள், வ.உ.சி அவர்களின் மற்றொரு பேரனாகிய செல்வராமனை அறிமுகப்படுத்தினார். வ.உ.சி அவர்களுக்கு ஏழு குழந்தைகள்.அவர்களில் கடைசியாகப் பிறந்தவரான 'வாலேஸ்வரன்' அவர்களின் புதல்வர்தான் செல்வராமன் அவர்கள்.

அவரை அறிமுகப்படுத்திய பின்பு, செல்வராமன் அவர்களின் அப்பாவான வாலேஸ்வரனுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்றும் சிதம்பரநாதன் கூறினார். சுவையாக இருந்தது அந்த விஷயம்.  சென்னையில் மயிலாப்பூரில் உள்ள சப்த சிவஸ்தலங்களான கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் ஆகிய பெயர்களில் ஒன்றான வாலீஸ்வரர் பெயரை வைத்திருப்பாரோ என்று எண்ணியிருந்த வேளையில், அவர் பெயர், வாலீஸ்வரன் அல்ல; வாலேஸ்வரன் என்று உரைத்தது.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வ.உ.சி அவர்கள், வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், சட்டம் பயின்ற அவர் வழக்கு மன்றம் ஏறாமலிருக்கும்படி அவரது ‘சன்னத்’தைப் பறித்தும் ஆங்கிலேய அரசாங்கம் அவருக்குத் தண்டனை அளித்தது. பின்னர் ஒரு நாள் அவரது சிறைத் தண்டனையைக் குறைத்தும் அவர் மீண்டும் வக்கீல் தொழிலில் ஈடுபடவும் வகை செய்து ஒரு ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் பெயர் "வாலஸ்". அவர் நினவாக வ.உ.சி அவர்கள் தனது கடைசிக் குழந்தைக்கு இட்ட பெயர்தான் "வாலேஸ்வரன்".
-      
             - சிமுலேஷன்

Saturday, January 15, 2011

நான் ரசித்த நன்றி நவிலல்

திருச்சி, கலைக்காவிரிக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பன்னாட்டு நாட்டியக் கருத்தரங்கின் நிறைவில் அக்கல்லூரியின் இசைத்துறை விரிவுரையாளர் நடராஜன் சற்றே வித்தியாசமாக நன்றி கூறினார். நான் மிகவும் ரசித்தேன் இதனை.  - சிமுலேஷன்

Saturday, January 01, 2011

ஒரு ரசிகனின் டிசம்பர் மாத டைரிக்குறிப்புகள்

இந்த வருடம் எந்த கச்சேரிக்கும் விமர்சனம் எழுதப் போறதில்லை. போன வருஷம் தனி வலைப்பதிவே துவங்கியும் ஒரு விமர்சனமும் உருப்படியா எழுத முடியலை. இருந்தாலும் டைரி மட்டும் எழுதத்தான் போறேன்.


5th Dec
• ஜயந்தி தன்னுடைய தற்போதைய இசைக்கான குருவான “வித்யா மற்றும் நித்யா” ஆகியோரின் கச்சேரிக்குப் போகவேண்டுமென்று சொன்னாள். கொட்டும் மழையில் சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் நடைபெற்ற “வித்யா மற்றும் நித்யா” கச்சேரிக்குச் சென்றோம்.

• மாலை 4.30 மணிக்குக் “கச்சேரி பஸ்”ஸின் வின்ஸெண்ட் டிசோசா, அவருடைய ஆபீசில் இசை விமர்சகர்களுக்கான ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார். வின்ஸெண்ட், ரேவதி மற்றும் நான் மட்டுமே ஆஜர். மூன்று பேரின் மீட்டிங் சுமார் முப்பது நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.


• மாலை 6 மணிக்கு எல்டாம்ஸ் ரோடு தத்வலோகாவில் அபிஷேக் ரகுராமின் கச்சேரி. நான் மட்டுமே சென்றேன். முன்வரிசையில் பி.எஸ்.நாராயணஸ்வாமி உட்கார்ந்திருந்தார். கொட்டும் மழையிலும் நல்ல கூட்டம். ஸ்யாமா ஸாஸ்திரிகள் சிறப்புக் கச்சேரியாம். பூச்சி ஸ்ரீனிவாசயங்காரின் “நின்னுகோரி” வர்ணம் தவிர, மற்ற உருப்படிகள் எல்லாமே ஸ்யாமா ஸாஸ்திரிகளுடையதுதான். அதில் ஸாஸ்திரிகளின் “தருணம் இதம்மா” என்ற தமிழ் உருப்படியும் அடக்கம். அபிஷேக் ரகுராமோ, நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர்களோ ஸ்யாமா ஸாஸ்திரிகள் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது எனக்கு ஏமாற்றமே. மேடையக் கவனித்த போது, அபிஷேக்கிலிருந்து அனைத்துக் கலைஞர்களுக்கும், தம்பூராக் கலைஞர் உட்பட, இரண்டிரண்டு மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன. என்ன காரணமோ?


15th Dec
• மியூசிக் அகாடெமியின் துவக்க விழா. கலந்து கொள்வதில் ஆர்வத்திற்கு ஒரு காரணம் என்னவென்றால், நிகழ்ச்சிக்கு எங்கள் நிறுவனதின் தலைவர் ஷிவ் நாடார்தான் சிறப்பு விருந்தினர். மேலும் ஷிவ்நாடார் பவுன்டேஷன் மியூசிக் அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது மற்றுமொரு முக்கியமான விஷயம். இது தவிர மியூசிக் அகாடெமியில் மாதாமாதம் HCL Monthly Concert ஸ்பான்ஸர் செய்வதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.



16th Dec
• அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வசிக்கும் கனிக்ஸ் எனப்படும் புரஃபசர் கன்னிகேஸ்வரன் எனது நண்பரும் கூட. அவருடைய லெக்டெம், மியூசிக் அகாடெமியில். தலைப்பு “வடநாட்டு துருபத் இசைமுறைக்கும், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் படைப்புகளுக்குமுண்டான ஒற்றுமைகள்”. ஜயந்தியும் நானும் சென்றோம். மனுஷருக்கு தீக்ஷிதர் குறித்த அனைத்து விஷயங்களும் அத்துபடி. ஒரிரு வருடங்கள் முன்பு ஹ்யூஸ்டன் நகரில் மீனாட்சி கோயிலில் கேட்ட லெக்டெமுடன் ஒப்பிட்டபோது, இந்த முறை ‘ஸ்லைடு ஷோ’ கொஞ்சம் சுமார்தான். ஆனாலும் விஷயத்துக்குப் பஞ்சமில்லை. ‘தீக்ஷிதர் வடநாட்டு சங்கீதத்தால் இன்ப்ளூயன்ஸ் ஆனதாகத்’ தனது உரையில், கனிக்ஸ் ஒரு போதும் சொல்லவேயில்லை. ஆனால் பேனலிஸ்டுகள் என்ற பெயரில், வேதவல்லி. டி..எம்.கிருஷ்ணா, வி.ஸ்ரீராம் ஆகியோர் அவர் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகச் சொல்லி வெட்டி விவாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீராம் ப்ளாக்கில் இது குறித்து எனது கருத்தினைப் பதிவு செய்தேன்.

18th Dec
• ஜயஸ்ரீயும், ராம்நாத்தும் அம்மாவை பந்துலராமாவின் அகாடெமி கச்சேரிக்கு அழைத்து சென்றார்கள்.

19th Dec
• ஸங்கீதப்ரியா மற்றும் ரசிகப்ரியா மடலாறக்குழுவில் நானும் ஒரு உறுப்பினன்தான். இந்தக் குழுக்களின் ஒருங்கிணைப்பளர்கள் “குளோபல் ரசிகாஸ் மீட்” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தி.நகர் ராமக்ருஷ்ணா பள்ளியில். நானும் பல வேறு சுவையான நிகழ்ச்சிகள் இருக்கும் என்ற எக்கச்சக்க எதிர்பார்ப்பில், தூங்கிக் கொண்டிருந்த ஆதித்யாவையும் எழுப்பி அழைத்துச் சென்றேன். அமைப்பாளர் அமெரிகாவிலிருந்த வந்தவர் என்ற காரணத்தால், எடுத்ததெற்கெல்லாம் அமெரிக்காவையும், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களையும், ரொனால்டு ரீகனையும் வேறு உதாரணம் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு ரசிகர் ஒருவர் ஆற்றிய சேவைக்கான வாழ்த்துப்பா பாடவேண்டி வந்த மற்றொருவர் இந்த வாய்ப்பு தனது வாழ்நாளில் கிடைத்ததில் பெரிதும் ‘தன்யனானேன்’ என்ற ரேஞ்சில் பேசினார். ரசிகர்கள் எல்லோரும் தங்களது கருத்துக்களையெல்லாம் கூறலாம் என்று கூறிவிட்டு, அந்த செஷனை ஒரு சில நிமிடங்களிலேயே முடித்துக் கொண்டு விட்டு, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரின் 5-6 வயதுப் பேத்தியின் கச்சேரி நடைபெறும் என்று அறிவித்தாளர்கள். அட. இதுக்குதானா இவ்வளவு பில்டப்பு. விசேஷம் என்னவென்றால், இந்தக் குழந்தையின் கச்சேரியினைக் கேட்க இவ்வளவு பிஸியான் சீசன் சமயத்தில் இசைப் பிரபலங்கள் பலரும் வந்து உட்கார்ந்திருந்ததுதான். ஆனால் ஆதித்யா, உஷாராக அரங்கினிலிருந்து வெளியேறி அருகிலிருந்த இன்போஸிஸ் அரங்கினில் நடைபெற்றுக் கொண்டிருந்த அக்ஷய் பத்மநாபன் கச்சேரிக்கு சென்றுவிட்டான். ஓரு சில நிமிடங்களில் அம்மாவும் நானும் இன்போஸிஸ் அரங்கினில் தஞ்சம் புகுந்தோம். அந்தோ பரிதாபம். எங்கள் குடும்பத்து மூவரையும் சேர்த்து அரங்கினில் மொத்தமே 11 பேர்தான். அதில் இருவர் அப்போதுதான் முதல் கச்சேரிக்கு வாசித்துவிட்டு வந்த பக்க வாத்தியக் கலைஞர்கள். தாட்சண்யத்திற்காக உட்கார்ந்திருப்பார்கள் போலும். இத்தனைக்கும் அன்று பாடிய அக்ஷய் பத்மனாபன் சிறந்த பாடகர்தான். நன்றாகவும்தான் பாடிக் கொண்டிருந்தார். கூட்டமே இல்லாத அரங்கினிலே பாடுவருக்கு மட்டுமல்ல, கேட்டுகொண்டிருக்கும் 11 பேர்களில் ஒருவராகிய நமக்கும்கூட டீமோடிவேஷன் ஏற்பட்டுவிடுவதில் ஆச்சரியம் இல்லை. பின்னே. அம்மாம் பெரிய அரங்கினிலே தனியாக இருந்தால் பயமாக வேறு இருக்காதா? இங்கே கூட்டம் எப்போதுமே இப்படித்தானா? அல்லது அன்று மட்டும்தான் இப்படியா? எதுவாயினும் முத்ரா பாஸ்கரும், ராதா பாஸ்கரும் காரணங்களைக் கண்டறியத் தருணம் இதே.
இன்றும் ஜயஸ்ரீயும், ராம்நாத்தும் அம்மாவை அகாடெமி கச்சேரிக்கு அழைத்து சென்றார்கள். மல்லாடி சகோதரர்கள் கச்சேரி.

21st Dec
• அகாடெமியில், புல்லாங்குழல் சிக்கில் மாலா சந்திரசேகரின் லெக்டெம் முடியும் தருவாயில் ஜயந்தியும், நானும் சென்றோம். லெக்டெம் முடிந்த பின் நடக்க இருக்கும் கலந்துரையாடலில், பிரச்னைக்குரிய விவாதங்களில் இறங்கப்போவதில்லை என்று மாலா உஷாராகவே சொன்ன போதும், சஷாங் மைக்கைப் பிடித்து அவரை வம்புக்கு இழுத்தார். நல்லவேளை நிகழ்ச்சியின் மட்டுறுத்துநராக இருந்த பப்பு வேணுகோபால்ராவ் விவாதம் முடிந்து விட்டதாக அறிவித்தார். மியூசிக் அகாடெமியின் காலை நேர லெக்டெம்கள் சிலருக்கு நல்ல “ஈகோ பூஸ்டராக” அமைகின்றது போலிருக்கின்றது.


• அடுத்தாக இடம் பெற்ற லெக்டெம், பத்மஸ்ரீ டாக்டர் பத்மா சுப்ரமணியன் அவர்களுடையது. “நாட்டியக் கலைக்குத் தஞ்சைப் பெரிய கோயில் ஆற்றிய பங்கு” என்பது அவரது சப்ஜெக்ட். இந்தத் தலைப்பில் பேசுவதற்கு அவரைவிடப் பொருத்தமான ஆள் வேறு யாரும் இல்லை. 60களில் தொல்லியல் துறையைச் சேர்ந்த கடைநிலை ஊழியரான பாலகிருஷ்ணன் என்பவர் கோபுரங்களில் வளர்ந்திருந்த அரச மரங்களை வெட்டச் சென்றாராம். அப்போது அங்கே கோபுரத்தில் புதிதாக ஒரு வாயிலைப் கண்டுபிடித்திருகின்றாராம். உள்ளே எட்டிப் பார்த்தால் அரிய வகை நாட்டியச் சிற்பங்கள். ஆனால் அங்கே யாரும் எளிதில் நுழையாதபடிக்கு வவ்வால் எச்சங்கள். ஏத்தனை வருடத்து எச்சங்கள் தெரியுமா? ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரம் வருடத்து எச்சங்கள். ஆமாம்? பல அடி உயரத்திற்கு ஆயிரம் வருடத்து வவ்வால் எச்சங்கள். அதனை அகற்றப் பணியாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள். பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பலரும் மயக்கமடைகின்றார்கள். சிலருக்கு ரத்தவாந்திகூட ஏற்படுகின்றது. எல்லாம் எச்சத்திலிருந்து வெளிப்பட்ட மீத்தேன் போன்ற வாயுக்களின் உபயம். பல்வேறு நபர்களின், பல மாதப் போரட்டத்திற்குப் பின், அழகிய பல சிற்பங்கள் கிடைக்கின்றன. எல்லாம் நாட்டியத்தின் ‘கரணங்களைக்” குறிப்பிடும் அரிய சிற்பஙள். மொத்தமுள்ள 108 கரணங்களில் 81 கரணங்களுக்கான சிற்பங்கள் அவை. இந்தச் சிற்பங்களை வைத்தே சுமார் 10 வருடங்கள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெறுகின்றார் பத்மா சுப்ரமணியன் அவர்கள்.

21st Dec
• மதியம் 1.45க்கு அகாடெமியில் ஷேர்தலை ரெங்கநாத ஷர்மாவின் கச்செரி. அம்மாவுடன் சென்றிருந்தேன். 2,00 மணியான பின்பும் கச்சேரி ஏனோ ஆரம்பிக்கவில்லை. அகாடெமியின் பங்சுவாலிட்டிக்கு என்னாச்சு? 2.05க்கு மைக்கில். ஷேர்தலை வந்து கொண்டிருப்பதாகத் தகவல். ஓரு வழியாக, 2.15க்குக் கச்சேரி தொடங்கியது. அதெப்படி இந்த மலையாளிகளுக்கு (யேசுதாஸ். காவலம், ஷேர்தலை…) மட்டும் இப்படிக் கருகருவென்று ஒரு தாடி. ஜயஸ்ரீக்காக அம்மா ‘த்யாராஜர் க்ருதிக்கள்’ புத்தகம் வாங்கினார்.

22nd Dec
• ஜயந்தியின் தோழி டாக்டர்.ப்ரியஸ்ரீ ராவ் “Textual Referece in Indian Classical Dance” என்ற தலைப்பில் அகாடெமியில் உரை நிகழ்த்துகின்றார். இந்திய நடனக்கலை குறித்தான நூல்கள் குறித்து ஏகப்பட்ட விஷயதானம் செய்கின்றார். ஆனால், ஸ்லைடு ஷோவில், ஏனோ மருந்துக்குக் கூட ஒரு படமும் இல்லை.



23rd Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவின் ஆதரவில், வித்யாபாரதி மண்டபத்தில், ஸ்ரீராம் பரசுராம் “Gamakas, Anuswaras - Oceans of Musical Possibilities” என்ற தலைப்பில் லெக்டெம் கொடுத்தார். அம்மாவும், நானும் சென்றோம். மாமாவும். மாமியும்கூட வந்தார்கள். ஸ்ரீராம் வடநாட்டு இசையும் அறிந்தவராதலால், நெறையவே பாடியும், வயலின் வாசித்தும் கமகங்களை விளக்கினார். 


நிகழ்ச்சியின் முடிவில் நடிகரும், நண்பருமான சாருஹாசனுடன் நாங்கள் அளவளாவினோம். மாமா, பரமக்குடியில் சந்திரஹாசனுடன் வேலை செய்ததை நினைவு கூர்ந்தார். பின்னர், தான வரைந்திருந்த ஓவியத்தைக் காட்ட, சாரு தான் சின்ன வயதில் குதிரை படம் வரைந்திருந்தாகவும், அது கழுதை போலத் தோன்றியதால், படத்தின் கீழே, ‘கழுதை’ எழுதிவிட்டதகவும் கூறினார். படத்தை வாங்கிப் பார்த்த ஆசிரியர், “உனக்கு என்ன பிக்காசோ என்று நினைப்பா? படம் வரைந்து, கீழெ கையெழுத்தும் போட்டிருக்கியே!” என்று பகடி செய்தாராம்.



• வலையப்பட்டி நாதாலயா ஆதரவில் அடையார் அனந்தபத்மநாபர் கோயிலில் நடபெற்ற சிக்கில் குருசரண் கச்சேரிக்கு அனிருத், ஜயந்தியுடன் சென்றிருந்தேன். 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கச்சேரி 7 மணி வரை ஆரம்பிக்கவில்லை. மிருதங்கம் திருவாரூர் பக்தவசலம் லேட்டாக வந்தார் போலிருகின்றது. அவரது சிஷ்யர்கள் மூவர் கலர், கலராக் குர்தா அணிந்து கொண்டு வந்து, சிக்கில் குருசரண் கேட்ச் கொடுத்தால், அதனைப் பிடிக்க வேண்டிய ஸ்லிப்ஸ் போல மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.


27th Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் நெய்வேலி சந்தானகோபாலனின் “மும்மூர்த்திகள் சங்கமம்” என்ற தலைப்பில் லெக்டெம். பாடுவதை விட, அதன் பொருளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பெரிதும் ஆர்வம் நெய்வேலிக்கு. சங்கீத மும்மூர்த்திகள் சந்தித்திருந்தால் என்னெவெல்லாம் பேசியிருந்திருப்பார்கள் என்ற ஒரு அழகான கற்பனை. ஏகப்பட்ட பாடல்களுக்கு பொருள் சொன்னார். செறிவான இந்தத் விஷயங்கள் 'ஓபரா' போன்ற நிகழ்ச்சிகள் நடத்தத் தோதான கருத்து. யாரேனும் முயற்சிக்கலாம்.



• அடுத்து நான் ஆவலுடன் காணச் சென்றிருந்த டாக்டர் கடம் கார்த்திக்கின் ‘என்ஸெம்பிள்’ நிகழ்ச்சி. பெரும்பாலான சமயங்களில் நாம் விரும்பி மீண்டும் செல்லும் நிகழ்ச்சியில் கதாநாயகர்கள் சொதப்பி விடுவார்கள். ஆனால் ஒருபோது கார்த்தி ஏமாற்றியதில்லை. நான் பெரிதும் விரும்பும் எம்பார் கண்ணன் மற்றும் கீபோர்ட் சத்தியநாராயணாவும் அந்தக் குழுவில் உணடு. மற்றைய கலஞர்கள் போல அல்லாமல், தன்க்குத் திருப்தி அளிக்கும் ஆடியோ செட்டிங்க்ஸ், ஆடியன்ஸுக்கும் திருப்தியாக இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்த கொண்ட பின்வே நிகழ்ச்சியினைத் துவங்குவார். அன்றைய தினம் மேடையிலே இருந்த எல்லா கலைஞர்களும் ஒருவருக்கொருவர் உறவினர்களாம். வயலின் எம்பாரும், கீபோர்ட சத்தியாவும் மாமன், மருமான்கள். அதே போல மோர்சிங் கிருஷ்ணனும், கஞ்சிரா சுந்தர் குமாரும் மாமன், மருமான்கள். மிருதங்கம் பூங்குளம் சுப்பிரமணியனும், தானும் “தெய்வ மச்சான்கள்” என்றும் குறிப்பிட்டார் கார்த்திக். புஜங்கினி என்ற புதிய ராகம் வாசித்தார்கள். எம்பாரின் பாகேஸ்ரீ கேட்கக் கேட்கத் திகட்டாதது. அதில் ஒரு சிறு பகுதியினை எனது வலைப்பதிவில் தரவேற்றினேன். கார்த்திக் கம்போஸ் செய்திருந்த “நடையும் நவரசமும்” என்ற நவரச கன்னடா ஐட்டம் அன்றைய ஸ்பெஷல்.


• இன்றைய தினம் நல்ல வேட்டை. நெய்வேலி, கடம் கார்த்திக் ஆகியோரின் இனிய நிகழ்ச்சிக்குப் பின்னர், மாலையில் தியாகப் ப்ரம்ம கான சபா ஆதரவில் தி.நகர் வாணிமஹால் வளாகத்தில் உள்ள ஓபுல் ரெட்டி அரங்கில் திருச்சூர் ப்ரதர்ஸின் கச்சேரி. நாரதகான சபாவில் இம்முறை காணாமற் போன ஞானானந்தா கேட்டரர்ஸ்ஸின் கேண்டீன் இங்கு வாணி மஹாலில். வழக்கப் போல நல்ல உணவுடன் நல்ல உபசாரமும் கூட. தியாகப் ப்ரம்ம கான சபாவின் லோகோவில் தியாகராஜர் முன்பு இரண்டு டம்ளர்கள். காபியா? காபி சாப்பிட்டுக் கொண்டேதான், ‘இந்த சௌக்யமுமனினே’ என்று பாடியிரிருப்பாரோ பாகவதர்? மேடையில் பாடும் கலைஞர்கள் பின்னே பெரிய பெரிய கூல் லெமன் ட்ரிங் படங்கள். பாடகர்களுக்கு ஆகாதே!

28th Dec
•  ஸ்ரீபார்த்தசாரதி சவாவில் 'Manodharma Sangeetham - An extension of Kalpita Sangitam' என்ற தலைப்பினில் குழு விவாதம். சசிகிரண்தான் மட்டுறுதுநர். ரவி கிரண், சுகுணா புருஷோத்தமன், M.B.வேதவல்லி, N.S.ஜெயலக்ஷ்மி ஆகியோருடன் கலந்துரையாடல். ஜெயலக்ஷ்மி விஷயமாகப் பேசினார். ஒவ்வொரு முறையும் அவர் பேசி முடித்தவுடன் பார்வையாளர்கள் கைதட்டினார்கள் என்றால் பாருங்கள்.
எனக்கு முன்னாடி வரிசையில்  ஒரு 50-60 வயது மதிக்கத் தக்க தம்பதி உட்கார்ந்திருந்தார்கள். கணவர் ஒரு பையில் கையைவிட்டு ப்ளாக்பெர்ரி உள்ளிட்ட “கிஸ்மோஸா”கள் ஒவ்வொன்றாக எடுத்து என்னமோ பண்ணிக் கொண்டேயிருந்தார்.  பிறகு தொழில்முறை நண்பருக்கு 40 டன் SAE 1018 கிரேடு ஸ்டீல் பாருக்கு ஆர்டர் கொடுத்தார். அஞ்சு நிமிஷத்தில் கிளம்பிச் சென்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 
• ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஐயர் ப்ரதர்ஸின் இரட்டை வீணைக் கச்சேரி அகாடெமியில் கேட்டேன். கூட யாரும் வரவில்லை.  
• பாரத் கலாச்சார் ஒய்.ஜி.பி ஆடிட்டோரியத்தில் சித்ரா விஸ்வேஸ்வரன் குழுவினரின் “சக்தி த்ரயீ” நாட்டிய நிகழ்ச்சி. ஜயந்தியும் ஆடுகின்றாள். எனவே மாமியும், அனிருத்தும் நானும் சென்றோம். இந்த நிகழ்ழ்ச்சிக்கு முதல் நிகழ்ச்சி, கன்யாகுமரியின் வயலின் கச்சேரி. சற்றே சீக்கிரமாக வந்ததால் அதனையும் சிறிது கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. திருப்பதியில் பாடப்படும், “வேங்கட ரமணா கோவிந்தா” என்ற ரேவதி ராகப் பாடலை, ஏழெட்டு ராகங்கள் கொண்ட ராகமாலிகையாக மாற்றி, விறுவிறுவென வாசித்து ஜாலங்கள் செய்தார். உடன் வாசித்த அவர்தம் சிஷ்யரும் நன்றாகவே ஈடு கொடுத்தார். சித்ரா விஸ்வேரன் குழுவினரின் “சக்தி த்ரயீ” வெகு நேர்த்தியாகக் கோரியோகிராபி செய்யப்பட்டு முதன்முறையாக அரங்கேறியது. வழக்கம் போல நடனமணிகளின் ஆடை வடிவமைப்பு சிம்ப்ளி சூப்பர்ப். மெயின் ஐட்டமான சக்தி த்ரயீயில், முப்பெருந்தேவியரின் அற்புதங்களை விளக்கும் காட்சிகள். அதற்கான பாடலை கம்போஸ் செய்து கொடுத்திருப்பவர், ராஜ்குமார் பாரதி. பாடலைல் தூய தமிழ் வார்த்தைகளைப் பாவித்திருந்தார் என்பதைத் தவிர, எதுகையோ, மோனையோ, சந்தமோ சற்றும் இல்லை. இருந்தபோதும், பாட்டின் மெட்டின் காரணமாகவும், கோரியோகிராபியின் காரணமாகவும், பாடலின் குறை பெரியதாகத் தெரியவில்லை. கடைசி உருப்படியான, ரசிகப்ரியா தில்லானா, எனது பேவரைட் தில்லானாவாகும். விஸ்வேஸ்வரனின் ஒப்பற்ற படைப்பு அது.



29th Dec
• ஜப்பானிய இசைக்கருவிகளில் புலமை பெற்றவரும், இந்திய இசையில் பெரிது ஆர்வம் கொண்டவரும், எனது நண்பருமான ப்ரொபஸர் டிம் ஹாஃப்மேன், அகாடெமியில், “இந்திய இசையில், ஜப்பானிய இசைக் கருவிகளான கோட்டொ, ஷாகுகாச்சி போன்றவற்றின் பங்கு” குறித்து உரை நிகழ்த்துகின்றார். கொடுக்கப்பட்ட நேரம் குறைவானதாலோ என்னவோ, மிகுந்த பதட்டத்துடனே உரையாடினார். சில வருடங்கள் முன்பு, மயிலை எம்.சி.டி.எம் பள்ளியில் இவர் நடத்திய லெக்டெமுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிகழ்ச்சி சுமாரகவே இருந்தது. இசைக் கச்சேரிகளின்போது மேடையிலுள்ள கலஞர்களை நிகழ்ச்சி நடக்கும்போதே வரைந்து அவர்களிடம் ஆட்டோகிராஃப் பெறும் எனது மாமனாருடன் (சுப்ரமணியன்) சென்று டிம் ஹாஃப்மேனுடன் போட்டொ எடுத்துக் கொண்டென். பேஸ்புக்கிலும் அதனைத் தரவேற்றினேன்.


30th Dec
• லலிதா ராம், பாரதி ராமசுப்பன் பற்றி சிலாக்கியமாய் விமர்சனம் எழுதியிருந்ததின் பேரில் அவர்தம் அகாடெமி 12 மணி கச்சேரிக்குச் சென்றேன். பாரதி ராமசுப்பன் ஏமாற்றவில்லை. நன்றாகவே பாடினார். லலிதா ராமுக்குத் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்.
• சாப்பிட்டுவிட்டு சிவகாமி பெத்கச்சி அரங்கினில், ஸ்ரீவல்சன் மேனன் கச்செரிக்குப் போக எண்ணி, சற்று சீக்கிரமாகவே போனதற்குக் கிடைத்த போனஸ், ஐயர் சகோரிகளின் கச்சேரி. அவர்களின் கல்யாணியும், இறுதியாகப் பாடின ராகேஸ்ரீ ராகத் தில்லானாவும் கேட்டேன். தில்லானா ஜோர்.
• ஐயர் சகோதரிகளளின் கச்சேரி முடிந்த பின், அடுத்தாக ஸ்ரீவல்சன் மேனன் அவர்களின் கச்சேரி. ஏற்கெனவே முன்பே ஒரு முறை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் கேட்ட குரல், இம்முறையும் ஏமாற்றவில்லை. இந்த சீசனில் கேட்ட நாலாவது கல்யாணியென்றாலும் திகட்டவில்லை.

31st Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் புஷ்பா ஆனந்தின் அபங் பஜனை. கிட்டத்தட்ட அருணா சாய்ராம் பாணியில் வாய்விட்டுப் பாடுகின்றார். அது போதாதென்று மைக் வேறு ஏனோ அலறுகின்றது. மைக் வால்யூமைக் குறைத்தால் நல்ல ட்யூன்களை ரசித்து கேட்கலாம்.  12 மணிக்கு அகாடெமியில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் சீடர் ஸ்வர்ணரேதஸ் கச்சேரி. ஒன்றும் சொல்லும்படி இல்லை.









• வழக்கம் போல இந்த வருடமும் புத்தாண்டு தினத்தை குடும்பத்துடன் மியூசிக் அகாடெமியில் கொண்டாடுவது என முடிவு செய்தோம். புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை செவ்வனே செய்திருந்தார் கர்னாடிகாவின் சசிகிரண். முதலில் ரமணியின் புல்லாங்குழலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பிறகு பந்துலராமா. அப்புறம் காயத்ரி வெங்கட்ராகவனின் கச்சேரி. அடுத்ததாக மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவின் பாட்டுக் கச்சேரி. மாயாமாளவகௌளையில் பாடின தேவதேவவும், தில்லானாவும் வித்யாசமாகவும், ரசிக்கும்படியும் இருந்தன. பிறகு சுபஸ்ரீ தணிக்காசலம் குழுவினரின் (சைந்தவி, வினயா, சித்ரவீணா கணேஷ், காயத்ரி) மெட்லீ. எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்யாவுடன் ஒரு சிறப்பு மெட்லீ. பிறகு புத்தாண்டு சரியாகத் துவங்கும் வேளையில் அனைத்துக் கலைஞர்களும் சேர்ந்திசை. அடுத்து மல்லாடி ச்கோதரர்கள் பாட, சூர்யப்ரகாஷ் நிறைவு செய்தார். குண்டேச்சா சகோதரர்களின் துருபத் இசையினைத் தொடர்ந்து, கடம் கார்த்திக்கின் கலக்கல் காமெடி. அடுத்து வந்தது சென்கோட்டை ஹரி குழுவினரின் ‘ஹரிநாம சங்கீர்த்தனம்’. அவருடைய ப்ருகாவுக்கு, குழுவில் யாரும் ஈடு கொடுக்க முடியவில்லை. மோண்டும் ஒரு முறை, விச்ராந்தியாகக் கேட்க வேண்டும். அடுத்து சூர்யப்ரகாஷ், துவங்க இருக்கும்போது, மணி இரண்டைத் தாண்டி விட்டது. வெளியே வந்து சங்கீதா கேட்டரர்ஸ் வழங்கிய கேசரியையும், புளியோதரையையும் சாப்பிட்டு வீடு வந்து சேர மணி விடியற்காலை 2.30.


வழக்கம் போல ஒரு கச்சேரிக்கும் டிக்கெட் எடுக்கவில்லை. எல்லாமே ஓசிக் கச்சேரிகள்தான். மொத்தத்தில்


கேட்டு ரசித்த கச்சேரிகள் – 11
இசையறிவை விருத்தி செய்ய லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன்ஸ் – 9
பார்த்து ரசித்த நாட்டிய நிகழ்ச்சி -1
கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் - 4




கச்சேரி பஸ் சங்கீத ஸ்பெஷல் நாளிதழுக்கு நான் அனுப்பிய சிறு கட்டுரைகள் பிரசுரமாயின. ஆன்லைன் வெர்ஷனிலும் இவற்றைக் காணலாம்.

-சிமுலேஷன்

Monday, December 27, 2010

இளகிய நெஞ்சம் கொண்டவர்கள் இதைக் கேட்க வேண்டாம்

நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ உங்கள் அன்புக்குரிய்வரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்பவரா? அல்லது இளகிய நெஞ்சம் கொண்டவரா? அடிக்கடி ஆழ்ந்த நினைவுகளில் மூழ்கி சோகப்படுபவரா? அப்படியானால் இந்த இசையினை நிங்கள் கேட்க வேண்டாம்.


    Get this widget |     Track details  | eSnips Social DNA    
                                                                                  இந்த இனிய பாகேஸ்ரீ ராகத்தினை வாசித்தவர் எம்பார் கண்ணன் அவர்கள். வாசித்த பொழுது கடம் கார்த்திக் குழுவினரின் “என்ஸெம்பிள்” நிகழ்ச்சி. இடம் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா. நாள் 27th Dec 2010.
சிமுலேஷன்

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது...


1.    1. மிருதங்கம், கடம், கஞ்சிரா எல்லாம் சேர்ந்து வாசிக்கும்போது கூட 'தனி ஆவர்த்தனம்'னு சொல்லறாங்களே! ஏன்?  

2. ஏன் ஒரு கச்சேரிலேகூட ‘மங்களம்’ மொதல்ல பாட மாட்டேங்கறாங்க?

3. சங்கீத முமோர்த்திகள் ஏன் ‘ஜம்பை’ ராகத்தில் ஒரு கீர்த்தனை கூடப் போடல்லே?

4. ‘தம்பூரா கண்ணன்’ ஏன் ‘ஸோலோ’ கச்சேரி செய்யறதில்லே?

5. Portable, Vennai, Portable Thamboor கண்டுபிடிச்சா மாதிரி Portable Flute, Portable Mohrsing ஏன் யாரும் கண்டுபிடிக்கல?

6. நேத்திக்குக் கச்சேரிலே காம்போதி ராகத்திலே வாசிச்ச ‘மல்லாரி’ சூப்பர்!

7. தனி ஆவர்த்தனத்தின் போது எல்லோரும் எந்திரிச்சுப் போயிடராங்களாமே. ஏன் மொதல் அயிட்டமா, தனி ஆவர்த்தனத்தை வச்சுக்கக் கூடாது?

8. பசி நேரத்திலே கேட்கக் கூடாத ராகம் எது? தாளம் எது? 
- காபி ராகம், அட தாளம்                                                                  

9. மரியாதையான ராகங்கள் எது?
- வலஜி, காம்மோஜி

10. மரியாதை இல்லாத ராகங்கள் எவை?
- அடாணா, கானடா, பேகடா

11. மூக்கைப் பிடிச்சுண்டு பாட வேண்டிய ராகம் எது?

- பீலூ

12. கடம் விதவான் மாதிரி, மிருதங்க வித்வானும் ஏன், மிருதங்கத்தைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க மாட்டேங்கறாரு?

- சிமுலேஷன்

Thursday, December 23, 2010

குற்றம் நடந்தது என்ன? - குறைவான விலையில் காய்கறிகள்

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அவரிடம் ஒரு கோப்பு சென்றது. அதில் அன்றைய தினம் ஐ.சி.எஸ் அதிகாரி எஸ்.ஏ.வெங்கட்ராமன், தனது மகளின் கல்யாணத்திற்கு காய்கறிகள் வாங்க, ஜெயில்களுக்கும், மாணவர்கள் விடுதிகளுக்கும் காய்கறி சப்ளை செய்யும் ஒருவரிடம், மார்க்கெட் விலையை விடக் குறைவான விலைக்கு, காய்கறிகளை வாங்கியதாகக் குற்றச்சாட்டு. இதை விசாரணை செய்ய ஒரு கமிஷன் அமைக்குமாறு நேரு உந்தரவிட்டார்.

கமிஷன் விசாரணையில் "காய்கறிக்கு நான் பணம் செலுத்தி விட்டேன்" என்று வெங்கட்ராமன் கூறினார். எனினும், குறைந்த விலைக்கு வாங்கியது அவரது ஊழல் எண்ணத்தை, அதாவது உத்தியோகத்தை, தனது தனி நன்மைக்குப் பயன்படுத்தும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதி, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் வெங்கட்ராமன் ஐ.சி.எஸ் ஜெயில் தண்டனை பெற்றார். ஜெயிலில் இருக்கும்போது, ஜெயில்களின் நடத்தை விதிகளுக்கான புத்தகத்தை முழுமையாகப் படித்து, புதிய அம்சங்களைச் சேர்த்தும், ஏற்கெனவே நடைமுறையிலிருந்த விதிமுறைகளைக் களைந்தும், புதிதாக ஒரு மேனுவலை உருவாக்கினார். நாடெங்கிலும் அது இன்றும் பின்பற்றப்படிகிறது.டது.



"வேலையில் நேர்மையான நீங்கள் காய்கறிக்கு டிஸ்கவுண்ட் பெற்றது சிறையிலடைக்கும் அளவுக்குப் பெரிய குற்றமா?" என்று அவரிடம் கேட்கப்பட, அதக்ற்குப் பதிலளித்த அவர், "எனது பதவியை உபயோகித்து பலனடைந்தது தவறுதான். அடைந்த பலன் எவ்வளவு என்பதைவிட, இது போல் பதவியை துஷ்பிரயோகம் செய்யும் மனநிலை, பிற்காலத்தில் பெரிய தவறுகளையும், ஊழலையும் செய்யும் தைரியம் எனக்கும் பிற அதிகாரிகளுக்கும் அளிக்கலாம்" என்று கூறினார்.

 
முருகன். ஐ.ஏ.எஸ் (ஓய்வு), துக்ளக்கில்



- சிமுலேஷன்

Wednesday, December 22, 2010

இசை விழா 2010 -11 - சில புதிர்கள் - ராகங்களைக் கண்டுபிடியுங்கள்

இசை விழா 2010 - 11 - சில புதிர்கள்

இங்கே 10 ராகங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடியுங்கள் முடிந்தால்.

  
1


 
2


 3


4



5


6


7


8


9


10

- சிமுலேஷன்

சபாஷ் சரியான போட்டி!

யதார்த்த வாழ்வில், எந்தச் சந்தர்ப்பத்துக்காகவும் யாரும் பாடுவதில்லை என்ற போதும், இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் என்றும் அபத்தங்களாய் ஒலித்ததில்லை. அதிலும் பாட்டுப்போட்டி நடத்தி ஒருவரை மற்றவர் வெல்லும் சாத்தியக்கூறு வெகு அரிதென்றாலும், திரையுலகில், பாட்டுப் போட்டிக்கள் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இத்தகைய பாட்டுப்போட்டிக்களில் இடம் பெரும் பாடல்கள் பெரும்ப்பாலும் அழியாப் புகழ் பெற்றவை. தமிழ்த் திரையுலகில் இடம் பெற்ற மறக்க முடியாத போட்டிப் பாடல்களைப் பார்போமா!

"வஞ்சிகோட்டை வாலிபன்" படத்தில் இடம் பெற்ற "கண்ணும் கண்ணும் கலந்து" என்ற நடனப் போட்டி மிகவும் புகழ் பெற்றது. பத்மினி மற்றும் வைஜயந்தி மாலா அவர்களின் நடனப் போட்டி மிகவும் சுவாரசியமானது.போட்டியின் இடையே வரும் பி.எஸ்.வீரப்பவின் "சபாஷ்! சரியான போட்டி!" என்ற வசனம் காலத்தால் அழிக்க முடியாதது. பத்மினி, வைஜயந்தி மாலா இருவருமே புகழ் பெற்ற கலைஞர்கள் என்பதானால், யாருமே தோல்வி அடையாதபடியாக காட்சி அமைக்கப் பெற்றிருக்கும்.



மீண்டும் பத்மினி ஒரு போட்டிப் பாடலில். இந்த முறை எம்.ஜி.ஆருடன் "மன்னாதி மன்னன்" படத்திற்காக. எம்.ஜி.ஆரின் நடனம் நல்லதொரு முயற்சி! இறுதியில் சிங்கம் படம் வேறு வரைந்து ஜெயித்தும் விடுகின்றார்.



"திருவிளையாடல்" படத்தில் இடம் பெற்ற டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய "ஒரு நாள் போதுமா?" பாடல். வடநாட்டிலிருந்து வந்த ஒரு இசைக் கலைஞர் பாடுவது போல அமைந்த இந்த புகழ் பெற்ற பாடல் பல ராகங்கள் அடங்கிய ஒரு அற்புதமான ராகமாலிகா ஆகும். பாடலின் பல்லவி 'மாண்டு' ராகத்தில் துவங்கும். சகிக்க முடியாதது பாலையா பின்னால், உசிலைமணி போன்ற ஒரு குடுமிக் கூட்டம் தேவையில்லாமல் தலையாட்டிக் கொண்டிருப்பது மட்டுமே. இந்த வடநாட்டுப் பாடகரைத் தோற்கடிக்கும் வண்ணம், சிவபெருமான் பாடுவதாக அமைந்த பாடல் டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் பாடிய "கௌரி மனோகரி" ராகத்தில் அமைந்த "பாட்டும் நானே" என்ற பாடல். டி.எம்.எஸ் அவர்கள் குரலில் நல்ல பாவத்துடன் அமைந்த அற்புதமான பாடல். இருந்த போதும் தட்டையான இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு "ஒரு நாள் போதுமா?" என்ற ராகமாலிகா பாடியவர் பயந்து ஓடிவிட்டார் என்பதை சங்கீதம் தெரிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.





அடுத்தாக "அகத்தியர்" படத்தில் இடம் பெரும் "வென்றிடுவேன்; எந்த நாட்டையும் வென்றிடுவேன்" என்ற பாடல். அகத்தியருக்கும், ராவணனுக்கும் நடக்கும் இந்தப் போட்டியில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும், டி.எம்.எஸ் அவர்களும் குரல் கொடுத்திருப்பார்கள். நாட்டை, பைரவி, தோடி, ஆரபி, ஷண்முகப்ரியா, தர்பார், ஹம்சத்வனி, வசந்தா, மோஹனம், மனோலயம், பாகேஸ்வரி, சாரங்கா, காம்போதி, கல்யாணி, சரஸ்வதி போன்ற எக்கச்சக்க ராகங்கள் இந்தப் பாடலில் இடம் பெரும். ஆனால் 'ஒருநாள் போதுமா?' பாடல் போல இயல்பாக இல்லாமல் வலிந்து புகுத்தப்பட்டது போல இருக்கும்.



"பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு நிகரானவன்" என்ற சுத்தமான சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடலை சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைந்திருக்கும். இருவதுமே ஓவர் ஆக்டிங் செய்தாலும், எல்லோராலும் ரசிக்கபடும்படியாக இருக்கும். குறிப்பாக, ஸ்வரம் பாடும் க்ளைமாக்ஸ் காட்சி.



"தாய் மூகம்பிகை" என்ற படத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி மற்றும் ராஜேஷ்வரி குரலில் "இசையரசி என்னாளும்" என்ற பாடல் 'சூர்யா' எனப்படும் 'சல்லாபம்' என்ற ராகப் பாடல். தாய் மூகாமிபிகையாக கேயார் விஜயா நடிக்க மனோரமா அவருடன் போட்டி போடுவதாக் அமைந்த பாடல். மூகாம்பிகையின் பக்தையான வாய் பேச முடியாத சரிதா, க்ளளைமேக்ஸில் எண்ட்ரீ கொடுப்பது நல்ல திருப்பம்.



"சிந்து பைரவி" படத்தில் பாடகரான சிவக்குமார் "மரி மரி நின்னே" என்ற தியாகராஜரின் பாடலை சாரமதி ராகத்தில் பாட (ஒரிஜினல் ராகம் தோடி), அதற்குப் பதிலடியாக, சுஹாசினி, அதே ராகத்தில் "பாடறியேன்.. படிப்பறியேன்" என்ற நாட்டுப்புறப் பாடலைப் பாடி, இறுதியில், மரி மரி நின்னேவையும் கலந்து பாடி கைதட்டலை அள்ளிச் செல்வார். இந்தப் பாடலில் சுஹாசினியின் முகபாவங்கள் குறிப்பிடும்படி இருக்கும்.





கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ அவர்கள் தமிழ்த் திரையில் பாடிய பாடல்களில் குறிப்பிடத் தகுந்தது "படையப்பா" படத்தில் இடம் பெற்ற "மின்சாரப்பூவே" என்ற பாடல். இது வெறும் பாட்டுப் போட்டியாக இல்லாமல், ரஜினி பாட, ரம்யா கிருஷ்ணன் ஆடும்படியாக அமைந்திருக்கும். ஹம்சாநந்தி ராகத்தில் அமைந்துள்ளது இது.



இவை தவிர, "இது நம்ம ஆளு" படத்தில் ஷோபனா, பாக்யராஜ் இருவரும் பாடும் "சங்கீதம் பாட ஞானம் உள்ளவர் வேண்டும்" என்ற பாடலில் பாடத் தெரியாத பாக்யராஜ் நன்றாகவே சமாளிப்பார். சுட்டி கிடக்கவில்லை.

மேற்கண்ட பாடல்களைத் தவிர, வேறேதும் பாடல்கள் விடுபட்டுப் போயிருந்தால், சுட்டியுடன் குறிப்பிடுங்கள். அவற்றையும் இணைக்கின்றேன்.

- சிமுலேஷன்

Monday, December 20, 2010

கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா?

நம்மில் பலருக்கு கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா என்ற எண்ணம் வருவது இயற்கை. இதற்குப் பெரிய காரணம் சோம்பல்தான். தேர்தல் சாவடிக்க்குச் சென்று, கால் கடுக்க வரிசையில் நின்று ஒட்டுப் போடுவதனால் என்ன பயன் என்றே பலரும் எண்ணுகின்றார்கள். அதற்குப் பதிலாக வீட்டிலிருந்தே, உட்கார்ந்த இடத்திலிரிருந்தே குறிப்பிட்ட தேதிக்குள், எந்த நேரத்தில் வேண்டுமானால் ஓட்டுப் போடலாம் என்றிருந்தால் எப்படி இருக்கும்?

ஆம். சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுக்க அப்படி ஒரு வசதி தமிழ்மணம் செய்து கொடுத்திருகின்றாரகள். வீட்டிலிருந்தே ஓட்டுப் போடலாம். அப்புறம் என்ன கவலை? கீழ்க்கண்ட என்னுடைய படைப்புகளையும் போட்டிக்காக இணைத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பிடித்தால் ஒட்டும் போடுங்கள்.

1. பிரிவு: நூல் விமர்சனம், அறிமுகம் - ஒற்றன்-அசோகமித்திரன்
2. பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் -  சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?. மேட்டுப்பாளையம், கல்லார்
3. பிரிவு: தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் - நாணயவியல் 

- சிமுலேஷன்

Saturday, December 11, 2010

இசை விழா 2010 -11 - சில புதிர்கள்

இந்த வருடத்திய (2010 - 11) இசை விழா ஆரம்பமாகிவிட்டது. அதனால் சங்கீத ஜாம்பவான்களைப் பற்றிய சில புதிர்களைப் பார்ப்போமா? ஒவ்வொரு படத்தொகுப்பிலும், ஒரு பிரபல சங்கீத மேதை ஒளிந்து கொண்டிருக்கின்றார். அவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாது, இந்தக் குறிப்பிட்ட படங்களிலிருந்து விடையினை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றும் சொல்ல வேண்டும்?


- சிமுலேஷன்

Saturday, December 04, 2010

கவிஞர் கண்ணதாசனும் களிமண்ணும்

தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞரின் பெயராலேயெ "கண்ணதாசன் சாலை" என்று அழைக்கபடுகிறது.)

வீட்டு சுவர்களில் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சுவிட்ச் பாயிண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுகளும் பொருத்தும் பழக்கம் அறிமுகமாகியிருந்த நேரம் அது. குளிப்பதற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண்டிருந்த கவிஞர், அப்போதுதான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த்தார்; பார்த்ததும் திகைத்தார்.

"இவ்வளவு தாழ்வாக சுவிட்ச் போர்டும், ப்ளக் பாயிண்ட்டும் இருந்தால் குழந்தைகள் தவழ்ந்து விளையாடும்போது, ப்ளக் பாயிண்ட்டுக்குள் விரலை விட்டுவிட்டால் அது குழந்தையின் உயிருக்கே அல்லவா உலை வைத்துவிடும்?" கவிஞர் உலவியபடியே சிந்தித்தார்.

தோட்டத்திலிருந்து கொஞ்சம் களிமண்ணை எடுத்து, தண்ணீர் விட்டுக் கலந்து நன்றாக உள்ளங்கையில் வைத்துக் குழைத்தார். பின்னர் அதை அப்படியே ப்ளக் பாயிண்டில் இருந்த ஓட்டைக்குள் திணிக்க முயன்றார்.

அவ்வளவுதான்...

"அம்மா" என்று ஒரு அலறல். கண்ணதாசன் அலறினார்.

மின்சாரம் 'சப்ளை'யாகிக் கொண்டிருந்த ப்ளக் பாயிண்ட், ஈரக் களிமண்ணை உள்வாங்கிக்கொண்டு, அதை உள்ளே திணித்த கவிஞருக்கு "ஷாக்" கொடுத்து தூக்கி எறிந்துவிட்டது.

கவிஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது, கவிஞர் ஹலில் மல்லாந்து மயங்கிக்கிடந்தார்.

நல்லவேளை! கவிஞரின் உயிருக்கொன்றும் ஆபத்து ஏற்படவில்லை.

சொல்லும் 'பொருளின்' மீது நொடியில் பாட்டெழுதும் புலமை பெற்ற அந்தப் பிறவிக் கலைஞருக்கு, மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்போது, அதில் தண்ணீர் பட்டால் "ஷாக்" அடிக்கும் என்ற சாதாரண விஷயம் அந்தச் சூழலில் ஞாபகம் வராதது ஆச்சரியம்தான்.

தகவல் - சுபாசுந்தரத்தின் "ஆல்பம்"

- சிமுலேஷன்

Friday, November 26, 2010

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதி

ராகசிந்தாமணி கிளப்பில் முன்பு ஒரு முறை "ஹேமவதி-தர்மவதி-நீதிமதி" ராகங்களுக்கிடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்த்தோம். இப்போது தமிழ்த் திரையிசையில் 'தர்மவதி' ராகத்தில் அமைந்த சில பாடல்களைப் பார்க்கலாம். அதற்கு முன்னால், தர்மவதி ராகத்தின் ஆரோகணம், அவரோகணம் என்னெவென்று பார்ப்போம்.

இராகம்:               மாயாமாளவ கௌளை
59ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்:     ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ

தர்மவதி ராகத்தினை தீக்ஷிதர் வழி வந்தவர்கள் 'தம்மவதி' என்றும் அழைப்பதுண்டு. ஆனால் "தர்மவதி வேறு; தம்மவதி வேறு", என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

முதலில் நாம் கேட்க வேண்டியது "உத்தரவின்றி உள்ளெ வா" படத்தில் எம்.எஸ்.வி இசையில் அமைந்த "காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ" என்ற பாடல். ஆனால் இந்த அருமையான பாடலுக்கு இணையத்தில் சுட்டி கிடக்கவில்லை. (யாராவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்). எனவே மேலே செல்வோம்.

"அவன் ஒரு சரித்திரம்" என்ற படத்தில் வரும் "அம்மானை, அழகு மிகு அம்மானை" என்ற பாடல். இசை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். நல்ல பாவத்துடன் பாடியுள்ளவர்கள், டி.எம்.எஸ் மற்றும் வாணி ஜெயராம்.  வாணி ஜெயராம் அவர்கள் திரையுலகிற்கு வந்த புதிதில் பாடிய பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று. சிவாஜியும். மஞ்சுளாவும் மிகுந்த ரொமான்ஸுடன் நடித்திருப்பார்கள்.


எம்.எஸ்.வி அவர்களுக்கு தர்மவதி ரொம்பவும் பிடிக்கும் போல இருக்கிறது. மீண்டும் இதே ராகத்தில், 'மன்மத லீலை' படத்தில், 'ஹலோ, மை டியர் ராங் நம்பர்" என்ற பாடல்.



அடுத்தாக எஸ்.பி.பியின் தேன் சிந்தும் குரலில் "இளஞ்சோலை பூத்ததா" என்ற பாடல். இடல் பெற்ற படம் "உனக்காகவே வாழ்கிறேன்". முன்பே ஒரு முறை குறிப்பிட்டது போல 'கோரியோகிராபி' மிகவும் சுமாராக இருந்தாலும், தர்மவதி ராகம் சொட்டி வரும் இந்தப் பாடலில்,  இடையிடையே வரும் புல்லாங்குழல், வேணை, வயலின் இசை, மிருதங்க ஒலி மற்றும் சலங்கை ஒலிகளும் அமர்க்களமாக இருக்கும்.



"இளஞ்சோலையில்' சிவகுமாரும், நதியாவும் சொதப்பியிருக்கும்போது, மம்முட்டியும், மதுபாலாவும் "அழகன்' படத்தில் ஒரு பாடலுக்கு வெகு நளினமாக ஆடியிருப்பர்கள். அது தர்மவதி ராகத்தில் அமைந்த "தத்திதோம்" என்ற பாடல்தான். பார்க்கலாமா?



அடுத்து நாம் பார்க்க இருப்பது, 'ரமணா" படத்தில் இடம் பெற்ற "வானவில்லே, வானவில்லே" என்ற பாடல். ஹரிஹரனும், சாதனா சர்கமும் பாடியது. சந்தோஷமும், குஷியும் குதித்து நடை போடும் அதே வேளையில், ஒரு வித மெல்லிய சோகமும் இழையோடுவது தர்மவதி ராகத்திற்குரிய சிறப்பு என்று நினைக்கின்றேன். அந்த உணர்ச்சிகளை இந்தப் பாடலில் தெளிவாகப் பார்க்கலாம்.



நிறைவாகப் பார்க்க இருப்பது "ஜென்டில்மேன்" படத்தில் இடம் பெற்ற "ஒட்டகத்தைக் கட்டிக்கோ" என்ற பாடல். ஏ.ஆர்.ரகமான் இசையில் அமைந்த 'ரிதம்முடன்' கூடிய தர்மவதி ராகத்தில் அமைந்த ஒரு அழகான் பாடல். இயக்குநர் சங்கரின் பிரம்மாண்டம், ரசிக்கத்தக்க நடனம், ஒப்பனை, இசை என்று ஒவ்வொருவரின் திறமைகளையும் ஒருங்கே கொண்டு வந்த பாடல்.




தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்