Friday, December 18, 2009

ஒற்றன்-அசோகமித்திரன்அசோகமித்திரன் என்ற ஆளுமையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவரது ஒற்றன் பற்றிப் பேசப்படுதல் கண்டுள்ளேன். ஒற்றன் என்ற தலைப்பினைக் கேட்டவுடன், ஒரு துப்பறியும் நாவலாக இருக்குமோ அல்லது ஒரு உளவாளியின் வாழ்க்கை வரலாறோ என்றெண்ணத் தோன்றினாலும், அசோகமித்திரன், இந்த மாதிரி வம்பு தும்புக்கெல்லாம் போகமாட்டரே என்று அழுத்தமாகப்பட்டது தவறாகவில்லை. (ஒரு முறை ஒரு கூட்டத்தில் சுந்தரராமசாமி பேசும் போது, "இவருடைய கதையில் வரும் அதிகபட்ச ஆயுதம் அரிவாள்மணைதான்" என்று சொன்னார். !!!).

இது புதினமா அல்லது அனுபவக் கட்டுரையா என்றெண்ணி முகவுரைக்குள் நுழையும்போது, இது ஒரு புனைகதை வடிவம் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இருப்பினும் படித்துப் பார்த்தால் பயண அனுபவமே என்று புரிந்து கொள்ளலாம். இதன் களம் - ஐக்கிய அமெரிக்கா.

ஐயோவா சிட்டியில் நடக்கும் உலக எழுத்தாளர்கள் பட்டறைக்கு அழைக்கப்படுகின்றார் அசோகமித்திரன். அமெரிக்காவில் அப்போது இருந்த ஏழு மாத வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கின்றார் இந்த ஒற்றனில். இதில் வரும் விவரிப்புகள் அமெரிக்க வாழ் வாசகர்களுக்கோ அல்லது அமெரிக்க அடிக்கடி சென்று வந்தவர்களுக்கோ, புதிதாக என்ன சொல்லிவிடப் போகின்றார் என்று முதலில் ஆயாசம் எற்படுத்தலாம். ஆனால், அசோகமித்திரனின் அனுபவங்கள் நடந்தது 197 74 ஐச் சேர்ந்த காலம் என்பதனை நினைவில் வைத்தால் மேலே படிக்க ஆர்வம் உண்டாகும். மேலும், அமெரிக்காவிலுள்ள கட்டடங்கள் பற்றிய வர்ணனையோ அல்லது, இயற்கை அழகின் வர்ணனையோவா முக்கியம்? மனிதர்கள் முக்கியம். மனிதர்களைப் பற்றிப் பேசுவது அ.மித்திரனுக்குக் கை வந்த கலை. இந்த ஏழு மாதங்களில் மட்டும் நிறையவே மனிதர்களைப் பார்க்கின்றார். (கறுப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணைப் பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்பப் படித்தவர்கள், படித்தவர்கள் போல பாவனை செய்பவர்கள். இது மாதிரி நிறைய.) ஒரு முறை Span பத்திரிக்கை ஐயோவா சிட்டி பயணம் குறித்து ஒரு கட்டுரை கேட்க, அ.மித்திரன் எழுதித் தந்ததை சிறுகதை என்ற பெயரில் பத்திரிக்கை வெளியிட்டுவிட்டது!. பயணம் செய்த பத்து வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்து எழுதிய இந்தத் தொகுப்பு 14 அத்தியாயஙள் கொன்டது. காலச் சுவடு பதிப்பு.

முகவுரை: (ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது, எல்லோரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். நான் மெத்தத் தெரிந்தவன் என்று எல்லோரும் என்னிடம் யோசனை கேட்க வரும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும். நான் ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்துதான் பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று அவர்களுக்குத் தெரியாது.)

1.விமான நிலையத்தில்: (எனக்கு முன்னால் நின்ற ஐரோப்பியனுக்கு மிகப் பெரிய உடல். அவன் முதுகில் உலக வரைபடத்தை தெளிவாக எழுத்திவிடலாம்....
ஐரோப்பிய மாது. அவளுடைய பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படம் என்றென்றைக்கும் அவளுக்கு வெட்கமூட்டும்... எந்த புகைப்படம் எடுத்தாலும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை. அது அழகாக மாற மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது.)

2.படகுப் பயணம்: அமெரிகா வந்த முதல் நாளே மார்க் ட்வெயினின் மிசிசிபி நதிக்குப் பயணம் செய்கிறார்கள். இறைச்சி இல்லாத உணவு என்று கேட்டு சீரில் ஃபுட் வாங்குகின்றார். அதில் பாலை ஊற்றி ஊற வைக்க 'பொத,பொத'வென்றாகிவிட்டது போலும். பல இடங்களில் இது, 'அமெரிக்கப் பொங்கலா'கின்றது அசோகமித்திரனுக்கு. படகுப் பயணத்தில் ஜானையும், வெண்டூராவையும் சந்திகின்றார். வெண்டூரா படகுப் பயணம் ஒத்துக் கொள்ளாமல் வாந்தி எடுக்க, ஜானும், அ.மித்திரனும் உதவுகிறார்கள்

3.கவிதை வாசிப்பு:
டெமாயின் நகரத்துப் பிரமுகர்கள் இறுநூறு பேர் சர்வதேச எழுத்தாளர்களின் கவிதை வாசிப்புக்குக் காத்திருக்க, ஒரு மணிநேரம் தாமதமாக வருகிறார்கள். உபயம் வழி தெரியாத ஜிம்மின் குளறுபடி. தான் கவிஞன் அல்லாததாலும், இந்த கவிதை வாசிப்பு நிகழ்ச்சி தனக்கு முன்னமே தெரியாததாலும், நிராதரவாக உணர்கிறார் அ.மி. ஆனால் விட மாட்டேங்கிறார்கள் அமைப்பாளர்கள். உடனே மூளையைக் குடைந்து, கடைந்து, ஞானக்கூத்தனின் "அன்று வேறு கிழமை"யை ஆங்கிலப்படுத்தி வாசிக்கிறார். கவிதை வேறொருவருடையது என்று கூறினாலும், பாராட்டித் தள்ளுகின்றார்கள் கூட்டத்தினர். மேலும் எல்லோரையும் 'பாட' வேறு சொல்கின்றார்கள்.
(உனக்குத் தெரியுமா? நான் பாட்டெதுவும் பாடவில்லை. எங்கள் தமிழ் மொழியின் 30 எழுத்துக்களைத்தான் நான் ராகம் போட்டுப் பாடினேன். அவன் வியப்படைந்ததாகத் தெரியவில்லை. "அப்படியா? நானல்லவா அப்படிச் சமாளித்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். நானும் எங்கள் மொழியின் எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்.)

4.பூண்டு: பட்டினி கிடக்குக் அசோகமித்திரனுக்கு காபி கூடக் குடிக்க முடியாமல் போய் விடுகின்றது பூண்டு வாசனை கொண்ட காபியால். பூண்டு புகழ் அறை நண்பனின் அம்மா இறந்த செய்தி கேட்டவுடன் ஆறுதல் தருகின்றார்.

(கறுப்புத் தோலும், கறுப்புத் தலைமைரும் நான் இந்திய நாட்டுக்காரன் என்பதை என் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. ஆனால் என் பெயரோ, கீழை நாட்டவர் என மேலை நாட்டவர் என இரு சாரார்க்கும் அடங்காத புதிராக இருந்தது.)

இதனாலதான் அ.மித்திரனின் ஒரிஜினல் பெயரான தியாகராஜனை ஜப்பான் நாட்டு கஜுகோ 'டகராஜனா'க்கிவிடுகின்றாள்.

5.இலாரியா: பன்மொழி வித்தகி இலாரியாவுடன் நட்பு பாராட்டுகின்றார். அவள் அறைக்கு வந்து மாக்ரோனி வேறு செய்து கொடுத்துவிட்டுப் போகின்றாள். தனது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு சுய பச்சாபத்துடன் அழுது கொண்டேயிருக்கும் இலாரியாவுக்குக் 'கட்டிப்புடி' வைத்தியம் செய்து ஆறுதல் சொல்கின்றார்.

6.வீழ்ச்சி: அயோவா சிட்டியில் உறைபனி பெய்த முதல் நாளிலேயே சறுக்கி விழுகின்றார். இதற்குப் அப்புறம் கே-மார்ட் ஷு (ஜோடுகள்) கதை ஒன்று பெரிதாக வருகின்றது. சுவாரசியமாக.

7. அந்த இன்னொரு பஸ் நிலையம்: போர்ட் காலின்ஸிலிருந்த்து பஸ் பிடித்து கிரீலிக்குச் செல்ல வேண்டும். அதிகாலையில் ஒரே ஒரு பஸ். ஆளும், அரவம், அசைவும் கிடையாத இடத்தில் வந்து காத்திருப்பது ஒரு சோதனைதான். பஸ்ஸுக்காகக் காத்திருந்து கடைசியில் பஸ் எனப்படும் ஒரு மினி லாரியில் ஏறி ஊருக்குச் செல்கிறார். அதுவரை நமக்கு, ஐயோ, பாவம் இந்த ஆளை விட்டுவிட்டுப் போயிடப் போறாங்களே", என்று தோன்றுகிறது உண்மைதான்.

8. கே-மார்ட் ஷூ: பனிக்காலத்திற்கென்று பிரத்யேகமாக கே-மார்டி சென்று ஜோடுகள்(ஷூக்கள்) வாங்குகின்றார். இந்த ஜோடுகளைப் போட்டுக் கொண்டு துடியாய்த் துடிக்கின்றார். இந்த அவதிப்படல்தான் ஒரு அத்தியாயம் எழுதும் அளவுக்கு. அப்புறம் பரம கஞ்சனான வெண்டூரா டைப் ரைட்டர் வாங்கி கஷ்டப்படும் படலமும் இங்கே வருகின்றது.

9. இப்போது நேரமில்லை: தனது ஆட்டோமேடிக் கடிகாரம் வேலை செய்வது நின்று விட்டதால் அமெரிக்காவில் அதனை ரிப்பேர் செய்ய முடியுமாவென்று பார்க்கும் அளவுக்கு அப்பாவி நம்ம அ.மி. இறுதியாக ஒரு கடைக்குச் சென்று 'பேனா கடிகாரம்" வாங்கி ஆச்சரியப்படுகின்றார். நான் கூட பி.யு.சி படிக்கும் போது ஒரு பேனா கடிகாரம் வாங்கி ஆனந்தப்பட்டது நினைவுக்கு வந்தது. அந்தப் பேனா கடிகாரத்தையும் தொலைத்து, பின்னர் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கின்றார்.

10. ஒற்றன்: "ஆஹா! எங்கே ஒற்றன்? எங்கே ஒற்றன்?" என்று நாம் தேடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பத்தாம் அத்தியாயத்தில்தான் ஒற்றன் வருகின்றான். அபே குபேக்னா என்ற எத்தியோப்பிய எழுத்தாளனின் விடா முயற்சியால் உருவான் நாவல்தான் ஒற்றன். இந்த மாதிரி அவே குபேக்னா என்று உண்மையாகவே ஒரு எழுத்தாளர் இருந்தாரா என்று கூகிளிட்டுப் பார்த்ததில், அது உண்மைதான் என்று தெரிய வருகின்றது. அவரது சில மேற்கோள்கள் புகழ் பெற்றவை என்றும் தெரிய வருகின்றது. அபே ரொம்பவும் சிரமப்பட்டு ஒரு சூட் தைக்கிறான். அதனை அணிந்த பின்பு மாசக்கணக்கில் கழட்டாமல், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அணிந்து கொண்டேயிருக்கின்றான். பல நாட்கள் பூட்டிய அறையினில் அஞ்ஞாத வாசம் போல இருந்து "ஒற்றன்" நாவலை முடிக்கின்றான். கஜுகோ, 'டகராஜன்' என்று அன்போடு அழைத்துப் பேசுவது அபேக்குப் பொறாமைத்தீயை மூட்டிவிட ஒருநாள் அ.மியை அடித்தே விடுகின்றான். ஒற்றன் என்ற தலைப்புக்குச் சொந்தமானவன் என்பதாலும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் அபே குபேக்னா ஒரு சுவையான மனிதாகத் தெரிகின்றான்.

11. மகா ஒற்றன்: அசோகமித்திரனின் வாழ்க்கையில் அபே குபேக்னா பிரவேசித்த அதே காலகட்டத்தில் வந்தவன்தான் பிராவோ. அவனைப்பற்றிக் கூறாமல் விடுவது நியாயமில்லை என்கிறார். குபேக்னா ஆப்பிரிக்கக் கண்டமென்றால், பிராவோ தென் அமெரிக்கக் கண்டம். இவன் நாவல் எழுது உத்தியே தனிதான். அசோகமித்திரனை அறைக்கு அழைத்து சென்று, ஒரு வரைபடம் போன்ற சார்ட் ஒன்றினைக் காட்டுகின்றான். இந்தச் சார்ட்தான் நாவலுக்கான டெம்ப்ளேட் போலும். பிராவோ அதனை விவரிக்கும் போது, நமக்கும் அதனைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற அடக்க முடியாத ஆவல் தோன்றுகின்றது. இந்த மாதிரி சார்ட் ஒன்று இருந்தால் நாமும் கூட நாவல் எழுத முயற்சித்துப் பார்க்கலாமே என்ற ஆசையும் எட்டிப் பார்கின்றது. பிராவோவின் நாவலின் தலைப்புதான் "மகா ஒற்றன்".

12. கண்ணாடி அறை: ஜிம் பார்க்கர் என்ற ஓவியனுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உளள சூசி வீட்டிற்கு செல்கிறார்கள். சூஸி வீட்டில் இருக்கும் விருந்தினர்களின் நடவடிக்கைகள் அசோகமித்திரனுக்கு ஆச்சரியம் ஏற்படுத்துகின்றது. திடீரென்று ஒரு இரவு சூஸியின் கணவன் அ.மிதான் சூஸியின் கள்ளக் காதலன் என்றெண்ணிச் சுட வருகின்றான். கண்ணாடி அறையினில் ஒளித்து வைக்கப்பட்டு காப்பாற்றப்படுகின்றார் அ.மி. (இனி இந்த நாட்டினில் இருக்கப் போகும் நான்கைந்து மாதங்களுக்கு எந்தப் பணக்காரக் குடிகாரனைப் பார்த்தாலும் அவன்தான் என்னைக் கொலை செய்யத் துடிக்கும் சூஸியின் கணவனோவென்று நடுங்கிக்கொண்டிருக்க வேண்டும்.)

13. அம்மாவின் பொய்கள்: அசோகமித்திரனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஞானக்கூத்தனின் "அம்மாவின் பொய்கள்" அவருக்குத் தெரியாமலேயே, விக்டோரியா குழுவினரால் நடித்துக் காட்டப்பட ஒரே ஆச்சரியம்.

14. ஏப்ரல் 27, 1974: பயிற்சிப் பட்டறையின் கடைசி நாள். ஒரு பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் போல இறுதி நாளில் பிரியும் சோகம் அனைவருக்கும். ஏன்? வபின்ஸ்கி, கஜுகோ போன்ற பலரையும் பிரியும் நமக்கும்தான்.

- சிமுலேஷன்

1 comments:

Geetha Sambasivam said...

சரியாகச் சொல்வதெனில் 72/73 ஆம் வருஷம் ஐயோவாவுக்குச் சென்றார் அசோகமித்திரன்! :) 73 கடைசியில் அல்லது 74 ஆரம்பத்தில் திரும்பி இருக்க வேண்டும். ஏனெனில் 74 ஆம் வருஷம் நாங்கள் ராஜஸ்தான் மாற்றல் ஆகிச் சென்றபோது அவர் சென்னை தியாகராயநகர் வீட்டில் இருந்தார். அங்கு சென்று தான் அவரைப் பார்த்து விடைபெற்றுச் சென்றோம்.