Sunday, June 20, 2010

தமிழிசை - ஒரு மீள் மீள் பதிவு

சுமார் பத்துப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன். குடும்பத்துடன் பழனி சென்றிருந்தோம். இரவு நேரத்தில் சுவாமி தரிசனம். சுவாமியைப் பள்ளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி. அப்போது யாரோயொருவர் வந்து என் அப்பாவிடம்,."நீங்களும் கலந்து கொள்ள வருகின்றீர்களா?" என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். குடும்பத்துடன் அனவரும் சுவாமியின் பின்னே உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒர் ஓதுவார் காம்போதியில் ஒர் விருத்தம் பாடினார் பாருங்கள். 'மடையில் வாழை பாய' என்று நினைக்கிறேன். அந்த இரவில் சுருதி சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் காதில் வந்து விழுந்த காம்போதியை இன்னமும் மறக்க முடியவில்லை. அதுவே தமிழிசை பற்றிய எனது முதல் அனுபவம். அதன்பின் எத்தனையோ தமிழ்ப் பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் கவர்ந்துள்ளன. மனதைக் கவர்ந்த தமிழிசையை பதிவு செய்யும் எண்ணத்திலேதான் இந்தக் கட்டுரை. தமிழிசை என்று நான் சொன்னலும், அது தமிழிசைக் கச்சேரியைப் பற்றியே பெருமளவு இருக்கும். நான் ஒர் இசைவாணன்(musician) அல்ல; ஒர் இசை பற்றிய விபரங்கள் (musicology) அறியும் ஓர் ஆர்வலன் மட்டுமே. அந்தக் கோணத்திலேயே இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளேன்.

தொல்காப்பியர், சீத்தலைச்சாத்தனார், இளங்கோவடிகள், காரைக்காலம்மையார், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், அகத்தியர், திருமூலர் உள்ளிட்ட பதினெண் சித்தர்கள், பட்டினத்தார், ஆண்டாள் உள்ளிட்ட பனிரெண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், அருணகிரி நாதர், குமரகுருபரர், தாயுமானவர், முத்துதாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர், கவி குஞ்சர பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், மாயூரம் வேத நாயகம் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க அடிகளார், சுப்பிரமணிய பாரதியார், பாரதி தாசன், ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், இலட்சுமணப் பிள்ளை, பொன்னையா பிள்ளை, பாபனாசம் சிவன், தண்டபாணி தேசிகர், பெரியசாமித் தூரன் போன்ற எண்ணற்ற மாமனிதர்கள் தமிழிசைக்கு தங்கள் பங்கை ஆற்றியிருக்கிறார்கள். இருந்த போதும், வெகு காலத்திற்கு முந்தியவை என்பதாலும், மெட்டுப் போடாத காரணத்தாலும், போட்ட மெட்டைப் பரப்பப் போதிய சீடர்கள் இல்லாத காரணத்தாலும், ஏற்கெனவே சில பாடல்கள் மேடையிலே தமக்கென்று ஒர் இடத்தை பெற்றுவிட்ட காரணத்தாலும், மேலே குறிப்பிட்ட இந்த அருந்தமிழர்களின் பாடல்கள் அனைத்துமே, மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெறவில்லை.

"தமிழிசை பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களைக் கவர்கிறது; ஏன்?' என்று கேட்டால் விடை எளிது. மொழி புரிகின்றது. பொருள் புரிகின்றது. எனவே பாடலின் பொருளுடன் ஒன்றிப் பாடலை இரசிக்க முடிகின்றது. மொழி புரிகின்றது என்று சொன்னவுடனே, பாடல்களின் வரிகள் எளிமையானவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று புரிகின்றது அல்லவா? வரிகள் மட்டும் எளிமையாக இருந்தால் போதுமா? மெட்டும் மனதைக் கவர வேண்டுமல்லவா? இவையனைத்தும் கொண்டு தனது பாடல்களால், தமிழிசையுலகை ஆண்டவர்களில் பெரும்பங்கு வகித்தவர், தமிழ்த் தியாகைய்யர் என்றழைக்கப்பட்ட பாபனாசம் சிவன் அவர்கள்தான். அவரது பல்வேறு பாடல்கள் எல்லொரையும் கவர்ந்தவை. அவரது பெயர் பெற்ற சில பாடல்கள் வருமாறு:-

கருணாநிதியே தாயே - பௌளி
நம்பிக் கெட்டவர் எவரெய்யா - ஹிந்தோளம்
தேவி நீயே துணை - கீரவாணி
என்ன தவம் செய்தனை - காபி
பதுமநாபன் மருகா - நாகஸ்வராவளி
கா வா வா கந்தா வா வா - வராளி
நானொரு விளையாட்டு பொம்மையா - நவரஸகன்னடா
காபாலி, கருணை நிலவு பொழி - மோகனம்
கற்பகமே, கண் பாராய் - மத்யமாவதி

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மோகனத்தில் அமைந்துள்ள 'காபாலி, கருணை நிலவு பொழி' யாகும். இது வரை கேட்காதவர்கள் இதனைக் கேட்டுப் பார்க்க வேண்டும். சரணத்தில், சந்தத்துடன் மயிலைநாதன் பல்லக்கில் பவனி வரும் காட்சியை கண்முன்னே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார் பாருங்கள். சொல்லழகிலும், பொருளழகிலும் சிறந்த பாடல் இது என்றால் மிகையாகாது. அடுத்தபடியாக, 'என்ன தவம் செய்தனை' என்ற பாடல். இந்தப் பாடலைக் கேட்ட யாராவது அந்தக் குட்டிக் கண்ணனை மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாராமல் இருந்ததுண்டா?

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்கள் தமிழ்ப்பாடல்கள் பல இயற்றி மக்கள் மனதைக் கவர்ந்தவர். கானடா இராகத்தில், 'அலை பாயுதே கண்ணா', சிம்மேந்திரமத்யமத்தில், 'அசைந்தாடும் மயிலொன்று காண' மற்றும் மத்யமாவதியில்,' ஆடாது அசங்காது வா கண்ணா' போன்ற பலரும் விரும்பும் பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்தப் பாடல்களில் எதனைக் கச்சேரியில் பாடினாலும், இரசிகர்கள் உற்சாகத்துடன் எழுந்து கேட்பது நிச்சயம்.

அடுத்தபடியாக மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெற்று மக்கள் மனதைக் கவர்ந்த பாடல்களென்றால் அவை பெரியசாமித்தூரன் அவர்களது பாடல்களாகும். ஸாவேரியில் 'முருகா, முருகா', ப்ருந்தாவன ஸாரங்காவில், 'கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்' ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவையாகும். கேட்கக் கேட்கத் திகட்டாதவையாகும். பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் உடனுறை தேவியாம் திரிபுரசுந்தரி மேல் பாடப்பெற்ற, சுத்தஸாவேரியில் அமைந்த, 'தாயே திரிபுர சுந்தரி', பெரியசாமித்தூரன் அவர்களின் ஒரு அழகான பாடலாகும். இந்தப் பாடலை இந்த ஆலயத்திலேயே, யாரேனும் பாடக் கேட்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சியாகும்.

இராஜாஜியின் 'குறை ஒன்றுமில்லை; மறை மூர்த்தி கண்ணா', தற்காலத்தில் அனைவரும் விரும்பும் ஒரு பாடலாகும். ஆண்டவனை வேண்டும்போது, எதுவும் கேட்கத் தேவையில்லை; குறையொன்றுமில்லை என்று மனமுருக வேண்டினால் மட்டும் போதும் என்ற கருத்தே இங்கு அனவரையும் பெரிதும் கவர்கின்றது.

சேதுமாதவராவ் என்பார் 'சாந்தி நிலவ வேண்டும்" என்ற பாடலை இயற்றி, டி.கே.பட்டம்மாள் அவர்களை பாடுமாறு வேண்டிய போது, அவர்கள்தம் குரலிலே வந்த இந்தப் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்னெவென்று யாரேனும் யோசித்ததுண்டா? வார்த்தைகளின் எளிமையும், மெட்டின் கவர்ச்சியும், திலங் இராகத்தின் இனிமையும் சேர்ந்த ஒர் அருமையான சேர்க்கையே, வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகின்றது.

நீங்கள் நினைக்கலாம். ஏன் புகழ் பெற்ற கவிஞர்களது பாடல்கள், இசைக் கச்சேரிகளிலே பிரபலம் அடையவில்லையென்று. ஏனென்றால் அவர்கள் கவிஞர்கள்; அவர்கள் எழுதியவை கவிதைகள் மட்டுமே. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதைகளிலேயே எத்தனையோ வகைகள் உண்டு. பொருளை இரசிப்பதற்காக சில; உணர்ச்சியைத் தூண்ட சில; சந்தத்தை இரசிப்பதற்காக சில. எனவேதான், பாடலாக்கும் எண்ணத்தில் இயற்றப்படாத எந்தக் கவிதையையும் எளிதில் பாடலாக்க முடிவதில்லை.
பாடல்களில் பிரபலமானவை என்று எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் வாக்கியேயக்காரக்கள் எனப்படும் 'பாடலும் எழுதி, அதனைப் பாடவும் தெரிந்த' பாடகர்கள் எழுதிய பாடல்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் பாடலை எப்படிப் பாடினால் நன்றாக இருக்கும் என்றறிந்து அதற்குத் தக்கவாறு மெட்டமைத்திருப்பார்கள். ஆனால் கவிஞர்களுக்கோ அல்லது புலவர்களுக்கோ, இசை குறித்த அறிவு இல்லாமலிருந்திருப்பின், அதனைப் பாடல் எனப்படும் ஸாஹித்யமாக மாற்றத் தெரிந்திருக்காது. மற்றபடி இசை தெரிந்தவர்கள் அதற்கு மெட்டுப் போட்டுப் பிரபலப்படுத்துவது என்பது முடியும். ஆனால் கடின உழைப்பின் மூலம் நல்லதோர் மெட்டுப் போட்டு, புகழ் வாய்ந்த பிரபலம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலமே இது சாத்தியமாகக் கூடும். அவ்வாறு செய்யாமல், ஏன் இந்தக் கவிஞரது பாடலை (கவிதையை!) கச்சேரிகளில் பாடுவதில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதால் பலன் ஏதும் கிட்டாது.

அரியக்குடி இராமானுஜையங்கார் அவர்களே, கச்சசேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர் என்பது சங்கீத விபரங்கள் தெரிந்த அனவரும் அறிந்தவொன்றே. பலரும் தனிப்பாடல்கள் போல பாடி வந்த காலத்தில், அவரே, முதலில் வர்ணம், பிறகு கிருதிகள், இறுதியில் தில்லானா போன்ற ஒர் ஒழுங்குடன் பாடினால் கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்று கண்டுபிடித்து கச்சேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர். எனவே, தமிழில் பாடினாலும், இந்த வரிசையில் பாடினால் மட்டுமே நன்றாக இருக்கும். இது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கேட்க வருபர்களுக்கு 'வெரைட்டி' என்று சொல்லப்படும், ஒர் கலவை தேவை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். அது தமிழிசையாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த இசையாக இருந்தாலும் சரி.

சரி. இறுதியாகத் தமிழிசை வளர வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்னெவெண்று பார்க்கலாம்.

இசை நிகழ்ச்சி கேட்பவர்கள் செய்ய வேண்டியது

இசை (music) என்பது ஒர் கலை (art); கர்னாடக இசை மேடைக் கச்சேரி (concert) என்பது ஒர் நுண்கலை (fine-art). முதலாவதை எல்லோராலும் இரசிக்க முடியும். இரண்டாவதனை ஒரளவு விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இரசிக்க முடியும். இசைக் கச்சேரிகளில் ஆலாபனை, ஸ்வரப்ரயோகங்கள், நிரவல் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன். இவற்றையெல்லாம் இரசிக்க வேண்டுமென்றால், இரசிகர்கள் முதலில் தங்களது கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையார்வமுள்ள எவருக்கும் இது முடியும். ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும் போதும், அன்னியப்பட்டுப் போகாமல் புதியதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும்.

தமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். தமிழில் பாடினாலும், 'எது ஸுஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் 'எது அபஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் காது கண்டு பிடிக்க, இந்தக் கேள்வி ஞானம் மிகவும் அவசியமாகும். தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்.

கேட்ட இசையினை, ஒத்த இரசனையுடைய நண்பர்களுடன் விவாதித்து குறிப்பிட்ட பாடலின் அழகை இரசிக்க வேண்டும். மேலும் பத்திரிகைகளிலும் வரும் சங்கீத விமர்சனங்களயும் படிக்க வேண்டும்.

தமிழிசை என்றாலும் தனக்கு எது தேவை என்று தெரிந்து அந்த சபை (forum) சென்று இரசிக்க வேண்டும். உதாரணமாக, திருப்புகழ் சபைதனிலே சென்று, கீர்த்தனைகள் தேடக் கூடாது. தேவாரம் ஓதப்படும் இடத்தில், பாசுரங்களை எதிர்பார்க்கக் கூடாது. பாடகர் அவர் கற்று வந்து கொடுக்கும் இசைக் கச்சேரிகளிலே, "ஏன் இந்தக் கவிஞரது பாடல் பாடப்படவில்லை?' என்று விவாதம் செய்யாமல், அவர்தம் இசையினை அலசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாடுபவர்கள் கவனிக்க வேண்டியது:

பாட்டு கற்றுக் கொள்ளும்போதே, ஆசிரியரிடம், தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கற்க வேண்டும். இல்லயெனில், ஒலி நாடாக்கள் துணை கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும். யாரும் வற்புறுத்தாமல் தானே வலிய வந்து, தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும். இவ்வாறு பாடும்போது, தமிழ்நாட்டின் இரசிகர்களுக்கும் தங்களுக்குமுள்ள இடைவெளி பெரிதும் குறைந்து வரும் என்பதனை உணர வேண்டும். ஏற்கெனெவே கூறியபடி அனவரையும் கவரும்படியான மெட்டில், சொல்லழகும், பொருளழகும் கொண்ட எளிமையான பாடல்களைத் தேர்வு செய்து பாட வேண்டும். புதிதாக ஒரு புகழ் பெற்ற கவிஞரின் ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டு அரங்கேற்றும் எண்ணம் இருந்தால், மெனக்கெட்டு உழைத்து அதனை வெற்றிப் பாடலாக்கும் முயற்சியில் இறங்கிய பின்னரே, அதனை மேடையேற்ற வேண்டும். அதனை விடுத்து அரை குறை முயற்சியுடன் இறங்கினால், அது அந்த புகழ் பெற்ற கவிஞரை அவமதிப்பது போலாகும்.
மொழி தெரிந்த தமிழ் இரசிகர்கள் முன்பு, தமிழிலே பாட இருப்பதனால், ஒரு முறைக்கு இரண்டு முறை, அட்சரங்களை சரி பார்த்து, சொல், பொருள் ஏதும் மாறிவிடாமல் பாட வேண்டும்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்ய வேண்டியது:

நிகழ்ச்சி அமைப்பளர்களுக்கு தமிழ் பொழிப் பற்றிருந்தால் மட்டும் போதாது. இசையின்பால் உண்மையான ஆர்வமும், ஓரளவு இசையறிவும் தேவை. இசையறிவு இல்லாமல், ஆர்வம் மட்டும் இருக்கும் பட்சத்தில், இசை ஞானம் கொண்ட நண்பர்களைச் சேர்த்து கொள்ளலாம்.
பாடகர்களிடம், நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் இத்தனை தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்க, இவர்களே சரியான உந்து சக்தி. இவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், பாடகர்கள் கண்டிப்பாக, தமிழ்ப்பாடல்கள் பாட முயற்சி செய்வார்கள். அப்போது, புதியதாய் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சியும், அதன் தாக்கத்தால் இசைக் கச்சேரிகளிலே, தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை பெருகும் நிகழ்தகவும் (probability) அதிகமாகக் கூடும்.

பள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும். போட்டியில் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலே அமைய வேண்டும். மாவட்ட அளவினிலே கூடப் போட்டிகள் நடத்தலாம். இதில் பங்கு பெறுவது என்பதனை மாணாக்கர்கள் ஒரு கௌரவமாகக் கருதும்படி, அதற்கான உயர்வு நிகழ்சிகளில் (promotion programs) ஈடுபட, வர்த்தக நிறுவனங்களின் துணையை நாட வேண்டும். இப்படியெல்லாம் முழுமுனைப்புடன் ஈடுபட்டால், வருங்காலத் தலைமுறையினர், தமிழில் பாடுவதனைப் பெருமையாகக் கருதுவர்.

- சிமுலேஷன்

இந்தப் பதிவு ஒரு மீள் பதிவு. எனவே இந்தப் பதிவிற்கு முன்பு வந்த பின்னூட்டங்களையும் இங்கு பதிகின்றேன். ஏற்கெனெவே பின்னூட்டமிட்டவர்களுக்கும், இந்தப் பதிவில் பின்னூட்டமிட இருக்கின்ற்வர்களுக்கும் நன்றி!


          ஓகை said...
பதிவுக்கு நன்றி சிமுலேஷன்.  Krishna (#24094743) said... அருமையான அலசல் சிமுலேஷன் அவர்களே. 'constructive criticism' என்பதன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. விஷயம் தெரிந்தவர் என்பது கண்கூடு.  மதுரையம்பதி said... ஸிமுலேஷன், அருமையான பதிவு. நன்றி enRenRum-anbudan.BALA said... சிமுலேஷன், //சிமுலேஷன், இன்று மட்டுமே பல முறை உங்கள் பதிவை படித்து விட்டேன். மிக அருமையான பதிவு. இப்பதிவினைத் தந்தமைக்கு நன்றி. // Ditto ! A fantastic analysis, Your knowledge and tolerance come out nicely !  SK said... ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். தேர்ந்த ஒரு இசைஅறிஞரால் எழுதப்பட்ட ஒன்று. உங்கள் கருத்துகள் அனைத்துடனும் ஒன்றுகிறேன். ஒரே ஒரு குறை! "தாயே யசோதா" உங்கள் பதிவில் இடம் பெறவில்லையே என்பதே அது! :)) பூவை. செங்குட்டுவனும் சில நல்ல பாடல்களை அளித்திருக்கிறார். 'என்ன கவி பாடினாலும்' எனும் அடாணா ராகப் பாடலை மதுரை சோமுவும், 'கபாலி'யை மதுரை மணி ஐயரும் பாடக் கேட்கணும்! மிக நல்ல பதிவு ஐயா! மதுமிதா said... நன்றி அருமையான பதிவு. அசைந்தாடும் மயிலொன்று கண்டால் என்று இருக்க வேண்டும். அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும். அவருடையது அனைத்துமே அருமையான பாடல்கள் . "மகர குண்டலங்கள் ஆடவும் அதற்கேற்ப மகுடம் ஒளிவீசவும்..... எனத் தொடர்ந்து வரும் வரிகள். அய்யோ பிறகு எல்லா பாடலும் சொல்ல ஆரம்பித்துவிடுவேன். இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.  Anonymous said... // சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். // முக்கியமான பதிவாக கருதுகிறேன் - நன்றிகள் பலப்பல. இதில் சின்னச்சின்ன செய்திகளை எடுத்துக்கொண்டு கொஞ்சம் விரிவாக எழுதலாமே...! எனக்குப்பிடித்த வேறு சில தமிழ்ப்பாடல்கள்: - சாபாபதிக்கு வேறு தெய்வம் - வருவாரோ, வரம் தருவாரோ - கொஞ்சி கொஞ்சி வா குமரா - காண வேண்டாமே, இரு கண் - காண கண் கோடி வேண்டும் - ஏன் பள்ளி கொண்டீரய்யா // சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். // முக்கியமான பதிவாக கருதுகிறேன் - நன்றிகள் பலப்பல. இதில் சின்னச்சின்ன செய்திகளை எடுத்துக்கொண்டு கொஞ்சம் விரிவாக எழுதலாமே...! எனக்குப்பிடித்த வேறு சில தமிழ்ப்பாடல்கள்: - சாபாபதிக்கு வேறு தெய்வம் - வருவாரோ, வரம் தருவாரோ - கொஞ்சி கொஞ்சி வா குமரா - காண வேண்டாமே, இரு கண் - காண கண் கோடி வேண்டும் - ஏன் பள்ளி கொண்டீரய்யா தி. ரா. ச.(T.R.C.) said... good analysis and unbiased version   kannabiran, RAVI SHANKAR (KRS) said... சரியான நேரத்தில் ஒரு மீள் பதிவு! நன்றி சிமுலேஷன்! தமிழிசை பற்றி மொழி உந்துதலால், வெறுமனே உணர்ச்சிப்பூர்வமாக பேசிக் கொண்டிருப்பது வேறு! சிவன் மற்றும் இன்ன பிற பாடல் ஆசிரியர்கள் போல் செயலில் இறங்குவது வேறு! "யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே, ஐயன் கருணையைப் பாடு, முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு!" கவிதைக்கும் பாடலுக்கும் அழகாக வேறுபடுத்திக் காட்டி உள்ளீர்கள்! ஒரு வேண்டுகோள்: மார்கழியில் உங்கள் இசைப் பதிவுகள் மேலும் தர வேண்டுகிறேன்! Hariharan # 26491540 said... //தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்// //தமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். // //பள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும்// சிமுலேஷன், மிக நேர்த்தியான அலசல். இது நடக்க தமிழகத்தின் சூழலில் பல மாற்றங்கள் வரவேண்டும். மேற்கூறியவற்றை நடைமுறை வாழ்வில் சிமுலேட் செய்ய சகிப்புத்தன்மை அடிப்படையில் அதிகப்படுத்தப்பட வேண்டும். கேள்வி ஞானம் என்கிற அறிவுக்கு ஹிந்தி கூடாது, தெலுங்கு கூடாது, இதர மொழிகள் கூடாது என்று எதெடுத்தாலும் கூடாது என்று போடுகின்ற கொள்கைக் கூப்பாடுகள் குறைந்து ஆக்கமான வழிகளில் தமிழ்ச் சமூகத்தினை வழிநடத்த சகிப்புத்தன்மை வேண்டும். இசை தனிமனித வழிபாட்டுக்கானது அல்ல. தெய்வங்களின் மீதான பல்வேறு ஆராதனைகளே இசையின் அடிப்படை. தெய்வமே இல்லை என்று கொள்கையோடு ஆட்சி அதிகாரம் இருக்கும் சூழலில் இம்மாதிரியான தெய்வீகத்தன்மை பேசும் நுண்கலைகள் நொடித்துப் போவது அதிர்ச்சி தரவில்லை எனக்கு. பள்ளிகள் அளவில் சிறுபான்மையினரது சமயப் பாடல்கள் முன்னுரிமை தரப்படக் கட்டாயங்கள் பிறக்கும். ஊத்துக்காடு ராமசுப்பையர் பாடல்கள் ஜேசுதாஸ் பாடினாலோ, இல்லை பித்துக்குளி முருகதாஸ் பாடினாலோ சுகானுபவமாக இருப்பதற்குச் சொல்லும் அது புரிதலும் எத்துணை முக்கியமோ அத்துணைக்கும் பாடுபொருளான கண்ணனைத் தெய்வமாக ஏற்றுக்கொள்கின்ற மனமும். இந்த தெய்வத்தினை ஏற்றுக்கொள்ளும் மனம் இல்லாத நபர்களால் தமிழிசையை வளர்க்க இயலாது. இந்தியப் பாரம்பர்ய இசையும் இந்து தெய்வமும் பிரித்துப்பார்க்க முடியாதது. இறைமீது நம்பிக்கை இல்லாமல் கல் என்கிற கொள்கையுடையவர்கள் கல்மாதிரியான கடினத்தன்மையோடு அணுகக்கூடிய விஷயமாக இசை எப்போதும் இருக்காது. அன்புடன், ஹரிஹரன்   Simulation said... 'மார்கழி மகோத்ற்ஸ்வம்' என்ற நிகழிச்சியினை, சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் ஜெயா தொலைக்காட்சியின் ஆதரவுடன் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாகவும் திறம்படவும் நடத்தி வருகின்றார். செட்டி நாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடை பெற்று வரும் இந்நிகழ்ச்சியில், கடந்த வெள்ளியன்று நடைபெற்ற சஞ்சய் சுப்பிரமணியத்தின் கச்சேரியில், அவர் இராமலிங்க அடிகளின் திருவருட்பாக்கள் மட்டுமே கொண்ட இரண்டரை மணி நேரக் கச்சேரி (தீம் கான்செர்ட்) ஒன்றினை அருமையாகச் செய்தார். அவர்தம் நிகழ்ச்சி அருமையாக இருந்த போதினும், எனக்குத் தோன்றியது என்னவென்றால்... ஹிந்துஸ்தானிக் கச்சேரியினை, வடநாட்டுத் 'தாளி' என்று கொண்டால், பலமொழிகளில் பாடப்படும், தென்னக இசை எனப்படும் கர்னாடக இசைக் கச்செரியினை, பருப்பில் ஆரம்பித்து, பாயசம் வரை பறிமாறப்படும் தென்னிந்திய சாப்பாடு என்று கொள்ளலாம். இந்த மாதிரி வெரைட்டி எதிர்பார்த்து வந்த இரசிகர்களுக்கு, அருட்பாக்கள் மட்டுமே பாடப்படும், தீம் கான்செர்ட்ஸ், அலுப்பது நிச்சயமே. ஆமாம். சமையல்காரர் என்னதான் சுவையாகச் சமைத்திருந்தாலும், உங்கள் பந்தியிலே, வெண்டைக்காய் வறுவல், வெண்டைக்காய்ப் பச்சடி, வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டக்காய் சாம்பார் என்று சர்வம் வெண்டை மயமாக வந்தால், அடுத்தது வெண்டைப் பாயசமும் வந்துவிடுமோ, என்றவொரு அலுப்பும், அச்சமும் வாராதா? "கேட்க வருபர்களுக்கு 'வெரைட்டி' என்று சொல்லப்படும், ஒர் கலவை தேவை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். அது தமிழிசையாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த இசையாக இருந்தாலும் சரி." இதன் தொடர்ச்சியாக, வெரைட்டி தரும் 'கச்சேரி பத்ததி' (Concert Format) பற்றி விரைவில் எழுதுகின்றேன். - சிமுலேஷன்

தந்தையர் தினம் - ஒரு பதிவஞ்சலி

சில மாதங்கள் முன்பு, என் அப்பாவின் (1922-1986) அரிய புகைப்படங்களை ஒரு வலைப்பூவில் தரவேற்றினேன். தமிழ்மண நடசத்திர வாரம் மற்றும் தந்தையர் தினம் ஒருங்கே வரும் இந்நாளில் அதனை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

- சிமுலேஷன்

நூல் விமர்சனங்கள்



கீழ்க்கண்ட நூல்களுக்கு நான் எழுதிய விமர்சனங்களை இந்தச் சுட்டியில் காணலாம். 


  • புலிக்கலைஞன் - அசோகமித்திரன்


  • வாத்தியார் - ம.வே.சிவக்குமார்


  • ஊஞ்சல் - சுஜாதா 


  • பாலங்கள் - சிவசங்கரி


  • வாய்மையே சில சமயம் வெல்லும் - சுஜாதா


  • எங்கும் நிறை நாதப்ரம்மம் - சங்கர் வெங்கட்ராமன்


  • எம் தமிழர் செய்த படம்- தியோடர் பாஸ்கரன்


  • ஒற்றன்-அசோகமித்திரன்


  • சங்கீதச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன் - வாமனன்

- சிமுலேஷன்

 


 

 

 

 


 

Saturday, June 19, 2010

இசையுலக இருவர்கள்

காரைக்குடி சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட சுப்பராம ஐயர் மற்றும் சாம்பசிவ ஐயர். சங்கீத நாடக அகாடெமி துவக்கப்பட்ட 1952 ஆம் வருடமே அந்த அகாடெமி விருதினைப் பெற்றவர்கள்.
மைசூர் அரண்மனையில் ஆஸ்தான வித்வான்களாக விளங்கிய வீணை சேஷண்ணா மற்றும் வீணை சுப்பண்ணா. ஸ்வரஜதி, பதம், ஜாவளி மற்றும் தில்லானாக்கள் பல இயற்றியவர்கள்.
திருவீழிமிழலை சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட சுப்பிரமணிய பிள்ளை மற்றும் நடராஜ சுந்தரம் பிள்ளை.
ஒரே குருவிடம் பயின்ற ஸ்ரீநிவாச ஐயர் மற்றும் சிவசுப்ரமணிய ஐயர் இருவரும் உண்மையிலேயே உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. ஆலத்தூர் சகோதரர்கள் என்ற பெயரில் புகழ் பெற்ற இவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்.
வீணை தனம்மாளிடம் பயின்ற ப்ருந்தா-முக்தா சகோதரிகள். க்ஷேத்ரஞ்கரின் பதங்களையும், ஜாவளிகளையும் பாடுவதில் புலமை பெற்றவர்கள். 1976ஆம் ஆண்டு ப்ருந்தா அவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்றார். 
திரையிசையிலும், மேடைகளிலும் தேச விடுதலைப் பாடல்களை பாடிப் புகழ் பெற்ற அக்கா-தம்பி, D.K.பட்டம்மாள் மற்றும் அவர் சகோதரர் D.K.ஜெயராமன். இருவருமே சங்கீத கலாநிதி விருது பெற்ற கலைஞர்கள்.
புகழ்பெற்ற டைகர் வரதாச்சாரியாரரிடம் பயின்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைத் துறைத் தலைவர்களாக இருந்த B.V.ராமன் மற்றும் B.V.லட்சுமணன் சகோதரர்கள்.
M.P.N சேதுராமன் மற்றும் M.P.N பொன்னுசாமி இருவரும் MPN சகோதரர்கள் என்றழைக்கப்பட்டனர். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?" என்ற பாடலில் இடம் பெரும் இவர்களது நாதஸ்வர இசை உலகப் புகழ் பெற்றது.
செம்பனார் கோயில் சகோதரர்கள் என்ற சம்பந்தம் மற்றும் ராஜண்ணா இருவரும் தருமபுரம், திருவாடுதுறை, திருபனந்தாள் ஆதீனங்களில் ஆஸ்தான வித்வானகளாக முப்பது வருடங்களுக்கும் மேல் விளங்கியவர்கள்.
திருப்பாம்பரம் சகோதரர்கள் என்றழைக்கப்படும் T.K.S.ஸ்வாமிநாதன் மற்றும் T.K.S.மீனாக்ஷிசுந்தரம்.

கேரளத்துத் திருச்சூரில் பிறந்தாலும், பம்பாயில் பல காலம் வாழ்ந்ததால் பம்பாய் சகோதரிகள் என்றழைக்கப்பட்ட C.சரோஜா மற்றும் C.லலிதா. T.K.கோவிந்தராவ அவர்களிடம் பயின்றவர்கள்.
சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி மற்றும் ராஜலக்ஷ்மி என்ற சூலமங்கலம் சகோதரிகள். பாடிய கந்த சஷ்டி கவசம் உலகப் புகழ்பெற்றது.பல பழைய தமிழ்த் திரைபடங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்கள்.
ராதா மாற்றும் ஜெயலக்ஷ்மி என்ற இந்த உடன் பிறவா சகோதரிகள் (கஸின்ஸ்) "ராதா ஜெயலக்ஷ்மி" என்ற ஒற்றைப் பெயராலேயே அழைக்கப்பட்டனர். 1981 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடெமி விருது பெற்றவர்கள். ஐம்பதுகளில் தமிழ்திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியவர்கள்.இசையமைப்பாளர்களும்கூட.
வயலின் உலகில் தனக்கென்று முத்திரை பதித்த லால்குடி ஜெயராமன் மற்றும் ஸ்ரீமதி ப்ரம்மானந்தம்.

சிக்கில் சகோதரிகள் என்றழைக்கப்படும் சிக்கில் குஞ்சுமணி மற்றும் நீலா இருவரும் பத்மஷ்ரி, கலைமாமணி மற்றும் சங்கீத நாடக அகாடெமி விருது பெற்றவர்கள். புல்லாங்குழல் உலகில் தனிக்கொடி நாட்டிய பெண் கலைஞர்களில் மூத்த கலைஞர்கள் இவர்கள்.

வயலின் கலைஞரான டி.என்.கிருஷ்ணன் அவர்கள் சங்கீத நாடக அகாடெமி விருது, சங்கீத கலாநிதி விருது, பத்மஸ்ரீ் மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்ற மூத்த கலைஞர். இவரது சகோதரியான் என்.ராஜம் அவர்களும் தனது சகோதரர் போலவே சங்கீத நாடக அகாடெமி விருது, பத்மஸ்ரீ் மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்றவர்.

யாழ்ப்பாணத்தில் விரிவுரையாளாராக பணிபுரிந்து வந்த லக்ஷ்மிநாராயணன் என்ற இசைக்கலைஞருக்கு பிறந்த எல்.சுப்பிரமணியன், எல்.வைத்தியநாதன் மற்றும் எல்.சங்கர் சகோதரர்கள். உலகப் புகழ் பெற்ற இந்தச் சகோதரர்கள், தென்னிந்திய, வட இந்திய, மேற்கத்திய மற்றும் கீழை நாட்டு சங்கீதம் என்ற பல்வேறு பரிணமங்களில் தங்களது இசைப்புலமையை தெரியப்படுத்தியவர்கள். பல இந்திய மற்றும் மேலைநாட்டுத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.
புகழ்பெற்ற வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் அவர்களது புதல்வர் லால்குடி.ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் புதல்வி லால்குடி விஜயலக்ஷ்மி.
புகழ் பெற்ற மூத்த வயலின் கலஞர் எம்.எஸ்.அனந்தராமன் அவர்களின் புதல்வர்கள் எம்.ஏ.கிருஷ்ணஸ்வாமி மற்றும் எம்.ஏ.சுந்தரேசன் அவர்கள்.


நாப்பது ஆண்டுகளுக்கு மேலாக புல்லாங்க்குழல் இசைத்து வரும் ரகு மற்றும் ப் சகோதரர்கள்.
தங்களது பத்தாவது வயதிற்கு முன்னரே, நூறு முறைகள் மேடை ஏறிய இளம் வயலின் மேதைகள் கணேஷ் மற்றும் குமரேஷ். 1983 ஆண் ஆண்டு இவர்களது நிகழ்ச்சியினைத் தொலக்காட்சியில் பார்த்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவரகள் உடனடியாக இவர்களை தமிழக அரசின் ஆஸ்தான வித்வான்களாக நியமித்தார்.

ஹைதராபாத் சகோதரர்கள் என்றழைக்கபடும் டி.சேஷாச்சாரி மற்றும் டி.ராகவாச்சாரி அவர்கள் ஆலத்தூர் சகோதரகள் பாணியில் பாடக்கூடியவர்கள். சேஷாச்சாரி அவர்கள் ஆல் இண்டிய ரேடியோவில் பணி புரிய, ராகவாச்சாரி அவர்களோ நேஷனல் மினரல் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் பணி புரிகின்றார்.

ருத்ரபட்டினம் சகோதரர்கள் என்றழைக்கப்படும் தியாகராஜன் மற்றும் தாரநாதன் இருவரும் கல்வியிலும் சிறந்தவர்கள். கணிததில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள தாரநாதன் அவர்கள் தூர்தர்ஷனில் பணி புரிய, வேதியியலில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றுள்ள சாரநாதன் அவர்கள் விஞ்ஞானியாகப் பணி புரிகின்றார்.

ஆலத்தூர் சகோதரர்கள் பாணியில் பாடி வரும் ஹைதரபாத் சகோதரிகள் என்ற லலிதா மற்றும் ஹரிப்ரியா இருவரும், ஆல் இண்டியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனின் மூத்த கலைஞர்கள். கைதராபாத்/ செகந்திராபாத் இசைக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களும்கூட.

ராதா ஜெயலக்ஷ்மி அவர்களின் பிரதான் சிஷ்யைகளான ஷன்முகப்ரியா மற்றும் ஹரிப்ரியா இருவரும் ப்ரியா சகோதரிகள் என்றழக்கப்டுகின்றனர்.

பத்து வருடங்களுக்கு மேலாக வயலின் வாசித்து ரசிகர்களை மகிழ்வித்த ரஞ்சனி மற்றும் காயத்ரி சகோதரிகள் இருவரும் சமீப காலமாக வாய்ப்பட்டுப் பாடி மகிழ்வித்து வருகின்றார்கள்.


மாம்பலம் சகோதரிகள் என்றழைக்கப்படும் விஜயலக்ஷ்மி மற்றும் சித்ரா. இவர்களது கசேரிக்குப் பெரும்பாலான நேரங்களில் டாக்டர்.ஹேமலதா அவர்கள் வயலின் வாசிப்பது பார்க்கலாம். ஏனென்றால் அவரும் இவர்களது ஒரு சகோதரியே.

மல்லாடி ஸ்ரீராம்பிரசாத் மற்றும் மல்லாடி ரவிக்குமார், இருவரும் மல்லாடி சகோதரர்கள் என்றழைக்கபடுகின்றனர். பினாகபாணி, வோலேடி, நேதுநூரி போன்ற ஜாம்பவான்களிடம் பயின்றவர்கள்.

வயலின் சகோதரிகள் என்ற பெயரெடுத்த டாக்டர்.லலிதா மற்றும் நந்தினி. டாக்டர்.எல்.சுப்பிரமணியம் சகோதரர்களின் அக்கா பெண்களான இந்தக் கலைஞர்கள் தங்கள் மாமாக்கள் போலவே மேற்கத்திய இசை மற்றும் கீழைநாட்டு இசையிலும் வல்லவர்கள்.

மீண்டும் ஒரு வயலின் சகோதரிகள். அக்கரை சகோதரிகள் என்றழைக்கபடும் அக்கரை சுபலக்ஷ்மி மற்றும் அக்கரை ஸ்வர்ணலதா. அக்கரை ஸ்வாமிநாதன் அவர்களின் புதல்விகளான இவர்கள் வாய்ப்பாட்டிலும் கச்ச்செரிகள் பல நிகழ்த்துகின்றனர்.

கோட்டுவாத்யம் நாராயண ஐயங்கார் பேரன்களும், சித்ர வீணை ரவிகிரண் அவர்களின் சகோதரர்களுமான் சஷிகிரண் மற்றும் கணேஷ் இருவரும் கர்னாடிகா சகோதரர்கள் என்றழைக்கபடுகின்றனர். பாமரர்களும் அறியும் வண்ணம், கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்த பல விதியாசமான நிகழ்ச்சிகளையும், போட்டிகளையும் நடத்துபவர்கள்.

மைசூரில் பிறந்து வளர்ந்த நாகராஜ் மற்றும் டாக்டர்.மஞ்சுநாத் இருவரும் மைசூர் சகோதரர்கள் என்றழைக்கப்டுகின்றனர். வயலின் உலகில் இவர்கள் தங்களுகென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளனர்.

சிறு வயதிலேயே சின்மயானந்தா ஸ்வாமிகளின் ஆசிகள் பெற்ற உமா மற்றும் ராதிகா இருவரும் சின்மயா சகோதரிகள் என்றே அழைக்கப்படுகின்றனர். மதுரை சேஷகோபாலன் மற்றும் நெய்வேலி சந்தானகோபாலன் அக்கியோரிடம் சங்கீதம் பயின்று வருகின்றார்கள்.

சங்கீதத்த்தில் முதுகலைப் பட்ட்டதாரிகளான ரூபா மற்றும் தீபா இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். இருவரும் காசரவல்லி சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

மாயவரம் சகோதரிகள் என்ரழைக்கப்படும் உமா மற்றும் கீதா, இருவரும் லால்குடி ஜெயராமன், மகாராஜபுரம் சந்தானம் மற்றும் கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் சங்கீதம் பயின்றவர்கள்.

சரலயா சகோதரிகள் என்றழைக்கபடும் கவிதா மற்றும் திரிவேணி இருவரும் வாய்ப்பாட்டு மட்டுமின்றி நாட்டியத்திலும் வல்லாவர்கள்.

புவனா மற்றும் லலிதா இருவரும் சாத்தூர் சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

ரமா மற்றும் கீதா இருவரும் செருகுடி சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர். டி.ஆர்.சுப்பிரமணியன் அவர்களிடம் தற்போது சங்கீதம் கற்று வருகிறார்கள்.



திருச்சூர் மோகன் என்ற மிருதங்கக் கலைஞரின் புதல்வர்கள் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ராம்குமார் இருவரும் திருச்சூர் சகோதரகள் என்றழைக்கப்டுகின்றார்கள். இருவரும் ஆடிட்டர் தொழில் செய்பவர்கள்.

சிவரஞ்சனி, நளினகாந்தி என்ற ராகங்களின் பெயரைக் கொண்ட இந்த சகோதரிகள் ராகம் சகோதரிகள் என்ற பெயரிலேயே அழைக்கப்ப்டுகின்றனர்.

குடந்தை சகோதரிகள் என்றுஅழைக்கப்படுகின்ற பாமா கண்ணன் மற்றும் மஞ்சுளா.

பைரவி மற்றும் மாளவி சகோதரிகள்.


பிரபல நாதஸ்வரக் கலைஞரான டாக்டர்.ஷேக் சின்ன மௌலானா அவர்களின் பேரன்களான காசிம் மற்றும் பாபு, தாத்தாவின் வழியிலேயெ நாதஸ்வரக் கலைஞர்களாகப் பரிமளித்து வருகின்றார்கள்.

நாதஸ்வரக் கலைஞர்களான மோகன்தாஸ் மற்றும் வசந்தகுமார் இருவரும் மூத்த செம்பனார்கோயில் சகோதரர்கள் வழி வந்தவர்கள். இவர்களும் செம்பனார்கோயில் சகோதரர்கள் என்றேயழைக்கப்டுகின்றனர்.



மேண்டலின் என்ற மேற்கத்திய இசைக் கருவியினை கர்நாடக இசைக்கு அறிமுகப்படுத்தி அதில் அகில உலகப் புகழ்பெற்ற மேண்டலின் ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜேஷ்.


ராம்நாத் ஐயர் மற்றும் கோபிநாத் ஐயர் இருவரும் ஐயர் சகோதர்கள் என்றழைக்கப்டுகின்றார்கள். ஆஸ்டிரேலியாவில் வசிக்கும் இவர்கள் பிரபல வீணைக் கலைஞர் பிச்சுமணி அவர்களின் சீடர்கள்.

ஸ்ரீஉஷா மற்றும் ஸ்ரீஷா இருவரும் மேண்டோலின் சகோதரிகள் என்றழக்கப்படுகின்றனர்.தற்போது பிரபல் வயலின் கலைஞர் கன்னியாகுமரி அவர்களிடம் பயின்று வருகின்றனர்.



மங்களூரில் வசிக்கும் லாவண்யா மற்றும் சுபலக்ஷ்மி இருவரும் ஸாக்ஸபோன் வாசிக்கும் பெண் கலைஞர்கள். இருவரும் ஸாக்ஸபோன் சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

வட இந்திய இசையில் வல்லவர்களான உமாகாந்த் குண்டேச்சா மற்றும் ரமாகாந் குண்டேச்சா இருவரும் குண்டேச்சா சகோதரகள் என்றழைக்கப்படுகிறார்கள்.

டொரொன்டோ நகரில் வசித்து வரும் அஸ்வின் ஐயர் மற்றும் ரோகின் ஐயர் இருவரும் டொரொன்டோ சகோதரர்கள் என்றழைக்கபடுகின்றனர். பிரபல கலைஞர் எஸ்.ஆர்.ஜானகிராமன் அவர்களிடம் இசை பயின்று வருகின்றனர்.

சமீப காலமாகப் பாடிவரும் பாவனா மற்றும் ஸ்வாதி இருவரும் சிவசுப்பிரமணியம் சகோதரிகள் என்றழைக்கப்டுகின்றனர்.

விடுபட்டவர்கள் பெயர் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்

- சிமுலேஷன்