Friday, February 06, 2009

ரவி சுப்பிரமணியன்



எனது "ராகசிந்தாமணி" புத்தகத்தினைப் படித்துவிட்டு தொலைபேசியில் கருத்துக்களைக் கூறியவர்களில் ரவி சுப்பிரமணியமும் ஒருவர். நாலைந்து முறை பேசிய போதும், நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சென்ற வாரம்தான் கிடைத்தது. சாகித்ய அகாடமியின் விருது பெறுபவர்கள் பொதுவாகச் சற்றே பழுத்தவர்களாக இருப்பார்களென்று நான் எண்ணியிருந்த வேளையில், அதன் பரிந்துரைக் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் ரவி சுப்பிரமணியம் நடுத்தர வயதினராக இருந்தது சற்றே வியப்பை அளித்தது. கர்நாடக சங்கீதமும், பரத நாட்டியமும் கற்றிருக்கின்ரார் என்றபோது அதிகரித்த வியப்பு, சொந்த ஊர் கலைக்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தச் சேர்ந்த கும்பகோணம் என்றபோது புரிந்து அடங்கியது.

இலக்கியத்தில் பெரிதும் பரிச்சயம் கொண்ட ரவி சுப்பிரமணியம், சமீப காலமாக சிறு கதைகளும் புனையத் துவங்கியுள்ளார். கச் சமீபத்தில் கல்கி இதழில் வெளியான "அதுவும் தாத்தா சொன்னதுதான்" மற்றும் விகடனில் வெளியான " உப்பிலியும் உருத்திரங்கண்ணனாரும்" ஆகிய கதைகள் கர்நாடக சங்கீதத்தினை அடிநாதமாகக் கொண்டவை. இயல்பான இவரது நடையை வெகுவும் ரசித்தேன். தொண்ணூறுகளிலேயே தனது "ஒப்பனை முகங்கள்" தொகுப்பின் மூலம், நவீன தமிழ்க் கவிதை உலகில் தனது வருகையைப் புலப்படுத்தியவர். மேலும் "காத்திருப்பு" மற்றும் "காலாதீத இடைவெளி" ஆகிய கவிதை நூல்களுக்கும் இவரே ஆசிரியர். இவற்றியெல்லாம் நான் இனிமேல்தான் படித்துப் பார்க்க வேண்டும். முதல் கவிதைத் தொகுப்பே பரிசு பெற்றதாக அறிகின்றேன்.

இளையராஜா அவர்களுடன் நட்பு பாராட்டும் ரவி சுப்பிரமணியன், தம் கவிதைகளுக்கு அவரையே இசையமைக்கவும் வைத்திருக்கின்றார். "தேஷ்" ராகத்தில் அமைக்கப்பட்ட அந்தக் கவிதையை அழகுறப் பாடுகின்றார். பாடலின் வரிகளை விட, பாடலுக்கு அமைக்கப்பட்ட இசையினை விட, ஒவ்வொரு சொற்களுக்கும் எப்படி இந்த இசை ஏற்ற இறக்கங்களுடன் பொருந்தி வருகின்றது என்று அவர் விளக்கியது ரசிப்புத்தன்மையிலும் இவர் ஒரு வித்தகர் என்று தெளிவுபடுத்தியது. இந்திரா பார்த்தசாரதி, வைரமுத்து, கனிமொழி என்று பலருடனும் இவரது நட்பு வட்டம் படர்கின்றது. இலக்கியம், இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் புலமை பெற்றிருந்தாலும், ரவி சுப்பிரமணியத்தின் தனிச்சிறப்பு ஆவணப் படங்கள் எடுப்பதாகும். புகழ்பெற்ற தொலக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள இவர், கணக்கிலடங்கா ஆவணப் படங்கள் எடுத்துள்ளார்.

இவரது தொப்பியின் சமீபத்திய இறகு, "ஜெயகாந்தன்" குறித்த ஆவணப் படமாகும். "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்" என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தினை தயாரித்தது இசைஞானி இளையராஜா இலக்கியப்
பெருமன்றமாகும். இளையராஜாவே இதற்கு இசையும் அமைத்துள்ளார். ஓவியர் ஆதிமூலம் அவர்களின் படைப்புகள் அழகுறப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரவி சுப்பிரமணியத்தின் எண்ணம், எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படைப்பில், நேர்காணல் மற்றும் பின்னணிக் குரல் செய்திருப்பவரும் அவரே.

தனது புதுமையான மற்றும், புரட்சியான கருத்துக்களால் உலக வாசகர்களைக் கவர்ந்த ஜெயகாந்தன் அவர்களைப்பற்றிய ஒரு ஆவணப்படம் என்றால், அது நிச்சயம் தனிதன்மையுள்ளதாக இருக்க வேண்டுமென்ற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை
ரவி சுப்பிரமணியன் நிச்சயம் வீணாக்கவில்லை. படத்தினைப் பார்க்க உட்கார்ந்தால் எழுந்திருக்க இயலாதபடி, வெகு சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கின்றார். டெஸ்ட் மேட்ச் போலத் துவங்கும் இந்த ஆவணப் படம், முடிவினை நோக்கிச் செல்லச் செல்ல ஒரு நாள் அல்லது 20:20 கிரிக்கெட் போல வேகம் எடுத்துச் செல்கின்றது. "ராமன் நல்லவனா?", "கெட்ட பழக்கங்களை ஏன் நண்பர்களுக்கும் பழக்குகின்றீர்?", "இன்றைய காலகட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு தேவையா?" என்று மாறி மாறி ரவி சுப்பிரமணியன் கூக்ளி, பவுன்சர் என மாறி மாறிப் போட, ஜெயகாந்தன் (ஜெயசூர்யா போல) அடித்து ஆடுவதைப் பார்க்கப் பரவசமாக இருக்கின்றது.

ரவி சுப்பிரமணியன் அவர்கள் மென்மேலும் இது போன்ற நல்ல பல ஆவணப் படங்கள் எடுப்பாரென்றும், கலை உலகில் பல படைப்புகள் தருவாரென்றும் நம்புகின்றேன்.

- சிமுலேஷன்

Sunday, February 01, 2009

சமீபத்தில் படித்தவையும் மீள் வாசிப்பு செய்தவையும்

சமீபத்தில் படித்த மற்றும் மீள் வாசிப்பு செய்த புத்தகங்களுக்காக இந்த இடுகை.

படித்ததில் பிடித்தது குறித்துக் குறிப்பிடுவேன். நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

- சிமுலேஷன்