Thursday, March 11, 2010

ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-03 (Allied Ragas) -ஆரபி, தேவகாந்தாரி

முன்னுரை-01

முன்னுரை-02

"ராமகிருஷ்ணன் சார் ஜிலேபி வங்கிண்டு வந்திருக்கார் பாரு. எல்லாருக்கும் டப்பாவை பாஸ் பண்ணுடீ"

"ஆஹா. இது ஒண்னும் ஜிலேபி இல்லையே. ஜாங்கிரின்னா இது. ஆனா என்ன? ரொம்ப நன்னா தேனாட்டம் இருக்கு."

"ஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் என்ன வித்தியாசம் மாமா?"


"ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். நம்ம ஆரபியும், தேவகாந்தாரியும் போல. ஜிலேபி மைதா மாவுலே செய்யறது. ஜாங்கிரி உளுந்து மாவுலே செய்யறது."

"சாப்பாட்டு ராமன்களா. போதும் ஜிலேபி, ஜாங்கிரி டிஸ்கஷன். அல்லைட் ராகங்களைப்பத்தி எப்பப் பேசப்போறீங்க?"

"சரிதான். எங்க விட்டேன் டிஸ்கஷனை? ஸ்வரங்களைப் பத்திப் பேசிண்டிருந்தேன். கன்டினியூ பண்ணலாமா?"

"சார். இலவசக் கொத்தனார் சொல்ற மாதிரி ஸ்வரம், கைசிக நிஷாதம், காகலிக நிஷாதம் அப்படீன்னெல்லாம் சொல்லிப் பயமுறுத்த வேண்டாம். எங்களை மாதிரி பாமர மக்களுக்கும் புரியறா மாதிரி சொல்லணும்."

"பாமர மக்களாவே இருப்போம். ஆனா ஒசத்தியான விஷயத்தைப் பத்தி மட்டும் சுளுவாத் தெரிஞ்சுக்கணும்னா முடியறா கதையா என்ன? கொஞ்சம் முயற்சி பண்ணி, கொஞ்ச கொஞ்சமா புது விஷயமும் தெரிஞ்சுண்டாத்தான் எதையும் ஆழமாப் புரிஞ்சுக்க முடியும். கொஞ்ச நேரம் முன்னாடி ஜிலேபிக்கும், ஜாங்கிரிக்கும் என்ன வித்தியாசம்ன்னு பாத்தோம். ஒண்ணுதுக்கு மைதா மாவு, இன்னொண்ணுக்கு உளுந்து மாவு அப்படீன்னு சொன்னவுடனே எல்லாருக்கும் புரிஞ்சுது. "எனக்கு மைதா மாவு, உளுந்து மாவு அப்படின்னாப் புரியாது. இன்னமும் கொஞ்சம் சுலபமாப் புரியற மாதிரி சொல்லுங்க"ன்னு இப்ப யாராவது சொன்னா என்னத்தச் சொல்ல முடியும்? அதனாலதான் சொல்லறேன். ராகங்களுக்கிடையே வித்தியாசம், ஒத்துமை எல்லாம் தெரிஞ்சுக்கணும்னா, கொஞ்சம் அடிப்படை விஷயங்களையும் தெரிஞ்சு கொண்டாகணும்."

"ஓகே. ஓகே. சிமுலேஷன் சார். ரொம்ப நேரமா இன்ட்ரோ அப்படீ, இப்பாடீன்னே பீடிகை பலமா ஓடறது. சீக்கிரம் சப்ஜெக்டுக்கு வாங்கோ. பதிவர்கள் எல்லாம் வேற வெயிட்டிங்"

"ஒலிகளைப் பலவித ஃப்ரீக்வன்சிகளுக்குத் தகுந்தாற்போல் "ஸ, ரி, க, ம, ப, த, நி" எனப்படும் ஏழு (ஸப்த) ஸ்வரங்களாப் பிரிச்சு வச்சிருக்கோம். இதைத்தான் "ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்" என்று கூறுகிறோம். இந்த சப்த ஸ்வரங்களில் ஸட்ஜம், பஞ்சமம் தவிர மத்ததுக்கெல்லாம் உட்பிரிவுகளும் உண்டு. (சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம் என்பது போல்) ஒரு இந்திய ராகம்னு எடுத்துக் கொண்டால் (ஹிந்துஸ்தானி அல்லது கர்னாடிக்) இந்த ஸ்வரங்களைப் அடிப்படையாகக் கொண்டுதான் அமையும். இந்த ஏழு ஸ்வரங்களையும் ஒரு முறை ஏறு வரிசையிலும், அடுத்தாக இறங்கு வரிசையிலும் பாடினால் ஒரு ஸ்வர வரிசை எனப்படும் ஸ்கேல் கிடைக்கின்றது . ஏறு வரிசயினை ஆரோகணம் என்றூம், இறங்கு வரிசையினை அவரோகணம் என்றும் சொல்லுவோம்."

"பாலாஜி. என்ன புரிஞ்சுதா? புரிஞ்சுதுன்னா எல்லாருக்கும் ஒரு ரீ-கேப் கொடு பார்க்கலாம்."

"ஸ,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு ஸ்வரங்களில் மூணோ அல்லது எழு ஸ்வரங்களோ கொண்டு ஏறு வரிசையில் இருப்பது ஆரோகணம், இதுவே இறங்கு வரிசையில் இருந்தால் அவரோகணம். ஒரு ஆரோகணமும் ஒரு அவரோகணமும் கொண்டு அமையப்பட்டுள்ளது ஸ்வரவரிசை அல்லது ஸ்கேல். இந்த ஸ்கேல் எனப்படும் ஸ்வர வரிசைகள்தான் பல்வேறு ராகங்களுக்கும் ஆதாரம்."

 (ஸப்த ஸ்வரங்களின் மொத்த அமைப்பு)

"க க க போ! ஒரு ஸ்கேல் 7+7=14 ஸ்வரங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். அல்லது மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட ஸ்வரங்களைக் கொண்டாதாவும் இருக்கலாம். மேலும் இந்த ஸ்வரங்களின் வரிசையும் (ஆர்டர்) மாறி வரலாம். இந்த மாதிரி பெர்முடேஷன் மற்றும் காம்பினேஷன்களினால் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ராகங்களுக்கு மேலே கிடைக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ராகத்துக்கும் உண்டான ஸ்வரவரிசைகள் தனித்துமானவைகள் (Unique). ஒரு ராகத்துக்குண்டான ஸ்வரவரிசை வேறே ராகத்துக்கு வரவே வராது. சில ராகங்களுக்கிடையேயான ஸ்வர வரிசை, சிறிய அளவில் மட்டுமே வித்தியாசப்படுவதால் அவற்றை இனம் கண்டுபிடிப்பது கஷ்டம். அவை ஒரே ராகம் போலவே கேட்கின்றன. இந்த ராகங்களைத்தான் ஒத்த ராகங்கள் (allied ragas) என்று சொல்லுகின்றோம்."

"இப்ப நாம் முதல்ல சங்கராபரணம் ராகத்தை எடுத்துக்கலாம். அதனுடைய ஸ்கேல், ஸட்ஜம், சதுஸ்ரிதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், ஷட்ஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம். இது அப்படியே இறங்கு வரிசையிலும் வரும். இதே மாதிரி கல்யாணி ராகத்துக்குப் பார்த்தால், அதெ ஸ்கேல்ல சுத்த மத்யமத்திற்குப் பதிலா, ப்ரதி மத்யமம் வரும். இந்த மாதிரி ஒரே ஸ்கேலாக இருந்து , சுத்த மத்யமத்திற்குப் பதிலா, ப்ரதி மத்யமம் வந்தால் அந்த ராகங்கள் ஒன்று போலக் கேட்காது. கல்யாணி போன்ற ப்ரதி மத்யமம் வரும் ராகங்களை, ப்ரதி மத்யம ராகங்கள் என்று சொல்லுவோம். இப்பப் படத்தைப் பார்த்தால் இந்த ரெண்டு ராகங்களின் ஸ்வர்ங்களுக்கிடையே எப்படி வித்தியாசம் வரும் என்று சொல்ல முடியும்."

  (சங்கராபரணம் மற்றும் கல்யாணி ராகங்களின் ஸ்வர வரிசை)

"மனசிலாயி மாமா. ஒரே ஒரு சம்சயம். நான் சொல்றது கரெக்டான்னு சொல்லுங்கோ. பாடகர் மெதுவாக ஆலாபனை பண்ணும்போது, ஸ, ரி, க அப்படீன்னு பாடும்போது அடுத்ததா "ம"வைத் (மத்யமம்) தாண்டும்போது அது சுத்த மத்யமா அல்லது ப்ரதி மத்யமா என்று கண்டுபிடித்து விட்டால், அவர் பாடும் ராகம் சங்கராபரணமா அல்லது கல்யாணியான்னு கண்டுபிடிச்சடலாம்தானே! சரியா?"

"இல்லடா கோந்தே!. இங்கதான் நம்ம இந்திய சங்கீதத்துக்கும், மேற்கத்திய சங்கீதத்துக்கும் வித்தியாசம் இருக்கு.  "ஸட்ஜம், சதுஸ்ரிதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், ஷட்ஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம்" இந்த ஸ்கேலை நாம சங்கராபரணம்னு சொன்னா, மேற்கத்திய இசையில் இதை மேஜர் ஸ்கேல் அப்படீன்னு சொல்வாங்க. இந்த மாதிரி ஒரு ஸ்வரவரிசை அல்லது ஸ்கேலை ஆதாராமாகக் கொண்ட ராகங்களை swara based ragas என்று சொன்னாலும், நம்ம இந்திய ராகங்கள் தனக்கே தனக்குன்னு இருக்கற ஸ்வரூபத்தைக் காமிக்கறதால இவற்றை swaroopa based ragas என்று சொல்வதுதான் முறையாகும். அதாவது மத்யமத்திற்கு வருவதற்கு முன்னாலேயே ஸட்ஜம், சதுஸ்ரிதி ரிஷபம், அந்தர காந்தாரம், இவற்றில் கமகங்கள் எனப்படும் அசைவுகள் மூலம் வித்தியாசம் காட்டலாம். காட்டலாம் என்ன காட்டலாம்? காட்ட வேண்டும். கண்டிப்பாகக் காட்ட வேண்டும். பாடகர் ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்த பத்தாவது நொடியிலேயே அது சங்கராபரணமா அல்லது கல்யாணியா என்று ரசிகர்களுக்குப் புரிய வேண்டும். புரிய வைக்கிற மாதிரி பாட வேண்டும்."

"அப்படீன்னா, எனக்குப் பாடகர் என்ன ஸ்வரங்கள் பாடறார்ன்னு புரிஞ்சாலும், அது என்ன ராகம்னு உடனே கண்டுபிடிக்க முடியாதா?"

"ஒரளவு சரி. ஸ்வரங்கள் கண்டிப்பா உதவி செய்யும். ஆனா உடனே ஒரு ராகத்தை கண்டுபிடிக்கணும்னா, அதனுடைய ஸ்வரூபம் புரியணும்."

''அது எப்படீ"
"அதுக்கு நெறையக் கேட்க வேண்டும், இன்னம் சில டெக்னிக் இங்கே இருக்கு." 

"இப்ப இவ்வளவு இண்ட்ரோக்கு அப்பறம், மொதல் செட் ஆஃப் அல்லைட் ராகாஸ் பத்திச் சொல்லப் போறேன். அதாவது ஆரபி மற்றும் தேவகாந்தாரி ராகங்கள்"

"மொதல்ல ரெண்டு ராகத்துக்குமுண்டான ஸ்கேல் சொல்லுங்கோ."  

(ஆரபி மற்றும் தேவகாந்தாரி ராகங்களின் ஸ்வர வரிசை)

"அக்ஷயா, ஆரபிக்கும், தேவகாந்தாரிக்கும் என்ன வித்தியாசம்னு மேலே உள்ள படத்தைப் பாத்துச் சொல்ல முடியுமா?

"ஓயெஸ். இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கு. ஆனா தேவகாந்தாரிலே, அவரோகணத்திலே (இறங்கு வரிசையிலே) ஒரு 'கைசிக நிஷாதம்" கூடுதலா இருக்கு"

"கரெக்ட். ஆனா மேற்கத்திய இசையாக இருந்தால் இந்த வித்தியாசம் மட்டும் போது. நம்ம ராகங்கள்தான் swaroopa based ragaன்னு சொல்லிட்டேனே. அதனால கூடுதல் வித்தியாசங்கள் உண்டு. ஆக மொத்தம் வித்தியாசங்கள் என்னென்னெவென்றால்:-
 1. தேவகாந்தாரியிலே அவரோகணத்திலே. கூடுதலா ஒரு "கைசிக நிஷாதம்", உண்டு. ஆரபியிலே இது கிடையாது
 2. இந்தக் கைசிக நிஷாதம் தைவதத்திற்கு அப்புறம் வரவேண்டும். அதாவது ஸ,நி2,த,நி1 என்று.
 3. ஆரபியிலே கமகம் எனப்படும் அசைவுகள் அவ்வளவாக வராது. ஸ்வரங்கள் சற்றே flaஆக் வரும். ஆனால், தேவகாந்தாரியிலே அழகழகாக கமகங்கள் வரும். 
 4. ஆரபி, வீர ரசம் நிறைந்த ராகம். தேவகாந்தாரி, கருணை ரசம் நிறைந்த ராகம்."
"இந்த வித்தியாசங்கள் எல்லாம் மனசிலே நன்னாப் பிடிபடணும்னா நெறையக் கேக்கணும். ஆரம்பத்திலே சொன்னேனே. வருன், கிரண் ரெண்டு பேரும் யார் யார்னு கண்டுபிடிக்கணும்னா அவங்களோட நெறையப் பழகணும்னு சொன்னா மாதிரி."

"சரி. நான் ரெடி. ஆரபி, தேவகாந்தாரி ராகப் பாடல்களைக் கேட்க. லிஸ்ட் கொடுக்க முடியுமா?"'

"மொதல்லே கர்னாடிக்லே சொல்றேன். நோட் பண்ணிக்கோங்கோ.

ஆரபி
 1. சாதிஞ்சனே ஓ மனஸா - தியாகராஜர்
 2. நாத சுதா ரஸா - தியாகராஜர்
 3. ஸ்ரீ சரஸ்வதி - முத்துசாமி தீக்ஷிதர்
 4. துர்கா லக்ஷ்மி சரஸ்வதி - பாபநாசம் சிவன்
 5. ஜூதா முராரே - தியாகராஜர்
 6. ஆரபிமானம் - தரங்கம்பாடி பஞ்சநத ஐயர்
தேவகாந்தாரி
 1. ஸ்ரீரசாகர சயனா - தியாகராஜர்
 2. கொலுவையுன்னாடெ - தியாகராஜர்
 3. வினராதா ந மனவி - தியாகராஜர்
 4. எந்நேரமும் - கோபாலகிருஷ்ண பாரதி 
 5. ஸ்வாமிக்கிச் சரி - மானம்புச்சாவடி வெங்கடசுப்பையர்
 6. ராம ராம பாஹி - ஸ்வாதித் திருநாள்"
"சரி. அப்புறம் நம்மைப் போலக் கோஷ்டிகளுக்கு சினிமாப் பாட்டும் சொல்லுங்கோ. விரும்பினாலும் விரும்பவிட்டாலும் அதுதானே காதிலே விழர்றது."

"ஒகே. சினிமாப் பாட்டு இதோ:-

ஆரபி
 1. ஏரிக்கரையின் மேலே போறவளே - முதலாளி
 2. கண்ணிலே குடியிருந்து - இமயம்
 3. கண்ணே கண் வளராய் - ஞான சௌந்தரி
தேவ காந்தாரி

 1. வேதம் நூறுப்ரயம் நூறு மனிதர் - துக்காராம்"
"சரி. நாளக்கு சாயந்திரம் மத்த அல்லைட் ராகங்களைப் பாப்போமா?"

- தொடரும்

- சிமுலேஷன் 


   
   


அலெக்சாந்தரும் ஆறுமுகனும்

"அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்பது வழக்கம். அதே போல "அலெக்சாந்தருக்கும் ஆறுமுகனுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டால், 'இருக்கு சம்பந்தம்' என்று சொல்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.  சமீபத்தில் நாரதகான சபா மினி அரங்கில் 'நாட்டியரங்கம்' சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடனமணி ஸ்ரீலதா வினோத், "முருகன்" என்ற தலைப்பில் நாட்டியம் குறித்த லெக்-டெம் நிகழ்த்தினார். அப்போது, அலெக்சாந்தருக்கும் ஆருமுகனுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்துப் பேசினார். ஆறுமுகன் என்றால் ஆரு? சாட்சாத் நம்ம ஊர் முருகனேதான்.1937ல் நடைபெற்ற 'ஆல் இன்டியா ஒரியன்டல் கான்ஃபரன்ஸ்'சில் திரு.கோபாலப் பிள்ளை என்பவர் மேற்கண்ட தலைப்பில் விரிவாக பேசியுள்ளாராம். அப்போது கூறப்பட்ட கருத்துக்கள் என்னவென்றால்:-

 1. பெர்சிய மற்றும் அரேபிய மொழிகளில், அலெக்சாந்தர், "இஸ்காந்தர்" என்று அழைக்கப்பட்டார். முருகரோ, இந்தியாவில் "ஸ்கந்தா" என்று தொழப்பட்டார். (பெயர் உச்சரிப்பு ஒற்றுமையைக் கவனிக்கவும்).
 2. அலெக்சாந்தர் ஒரு படைத்தலைவர். முருகப்பெருமானும் "சேனாபதி" என்றழைக்கப்பட்ட படைத்தலைவர் ஆகும்.
 3. அலெக்சாந்தரின் கையில் இருக்கும் ஆயுதம் லான்ஸ் எனப்படும் "வேல்" ஆகும். முருகனின் கையில் உள்ள ஆயுதம் "வேலாயுதம்" என்பது அனைவரும் அறிந்ததே.
 4. அலெக்சாந்தரின் போர் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு "டேரியஸ்" என்ற எதிரியை அழைத்ததாகும். முருகப் பெருமானின் முக்கிய வதம் "தாரகாசுரன்" என்ற அரக்கனை அழித்ததாகும். (பெர்சிய மொழியில் டேரியஸ் என்றாலும், வட மொழியில் தாரகா என்றாலும் "காப்பவன்" என்ற பொருள் ஒன்றே.)
 5. அலெக்சாந்தர் பாக்டீரியா நாட்டு இளவரசியான "ரோக்சேனா"வை மணந்தார். முருகரோ, "தேவசேனா"வை மணந்தார். (பெயர் உச்சரிப்பு ஒற்றுமையைக் கவனிக்கவும்).
 6. இந்தியாவின் மிகப் பெரிய பேரரசரான சந்திர குப்த மௌரியர், அலெக்சாந்தரை, தான் வணங்கும் தெய்வங்களுல் ஒன்றாக வைத்து வழிபட்டார். முருகப் பெருமானது வாகனம் மயில். மயிலின் வடமொழிப் பெயர் "மோர்" அல்லது "மௌர்யா". மௌரியர்களது அரசுச் சின்னங்களில் குறிபிடத் தகுந்தது மயிலாகும்.
இதனைத் தவிர மேலும் பல ஒற்றுமைகளை, கோபாலப் பிள்ளை தனது ஆராய்ச்சியில் கூறியுள்ளார். எனது சிற்றறிவுக்குப் புரியவில்லை. யாரேனும் மேலதிகத் தகவல்கள் எளிமையாகத் தந்தால் தன்யனாவேன்.
- சிமுலேஷன்