Saturday, December 24, 2016

விமர்சகர்



வெகு நாட்களுக்கப்புறம், கல்யாணராமனுக்கு இன்றைக்குத்தான் கொஞ்சம் டென்ஷன்  இல்லாமல் இருந்தது. இந்த மாதத்தில் மட்டும் நான்கு கச்சேரிகள் செய்து விட்டார். குசும்பனின் விமர்சனங்கள்தான் அவரை இப்போதெல்லாம் டென்ஷன் ஆக்குகின்றன. குசும்பன் போன்ற விமர்சகர்கள் இல்லாத, சாதாரண ரசிகர்கள் இல்லாத பள்ளி மாணவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் கச்சேரி, இன்று அனந்த கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில்.

இந்தக் குசும்பன் பெயருக்கேத்த மாதிரி நிறையாக குசும்ம்பு பிடித்தவர்தான். அவருடைய விமர்சனங்கள் ரொம்பவே காரசாரமாகவும், விவரமாகவும், நக்கலாகவும் இருக்கும். சும்மா மற்றவர்கள் மாதிரி கேண்டீன் எப்படி இருந்தது, பாடகர் என்ன புடவை கட்டிக்க கொண்டு வந்தார், என்றெல்லாம் எழுதி பக்கங்களை நிரப்ப மாட்டார். டெக்கனிகளாகப் பின்னிப் பெடலெடுத்து விடுவார். இந்த மாதிரித்தான் கல்யாணராமனின் கடந்த நான்கு கச்சேரிக்களையும் பின்னிக் கிழித்து விட்டார்.

இந்தக் குசும்பன் யாரென்று தெரிந்து வைத்துக் கொண்டாலாவது கொஞ்சம் மஸ்கா அடித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் புனைபெயரில் எழுதும் குசும்பன் யாரென்று எந்தக் கச்சேரியிலும்  பார்த்துக் கண்டு பிடிக்க முடியவில்லை.

போன முறை, ஆலாபனைகளைப் பாராட்டி எழுதியிருந்தாலும், ஸ்வர பிரயோகங்களில் தவறு செய்து, ஸ்ரீ ராகத்தினை மத்யமாவதியாக மாற்றி விட்டதை சுட்டிக் காட்டியியிருந்தார். அப்புறம் உச்சரிப்புப் பிழையெல்லாம் வேறு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். விமர்சனம் சரியாக இருந்தாலும், அதனை ஜீரணம் செய்யும் பக்குவம் இல்லாத கல்யாணராமனுக்கு இன்று பள்ளி மாணவர்களிடையே கச்சேரி செய்யும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி.

வெகு நாட்கள் கழித்து கல்யாணராமன், நிம்மதியாகக் கல்யாணியில் ஆலாபனையை ஆரம்பிக்க, நோட்டுப் புத்தகத்தை எடுத்து விமர்சனம்  எழுத ஆரம்பித்தான், பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் குசும்பன் என்ற குமரேஷ்.

- சிமுலேஷன்