Thursday, March 04, 2010

அபூர்வ ராகங்கள்-06 - சல்லாபம் (aka) சூர்யா (Sallabam or Surya)

'சல்லாபம்' என்ற ராகம் 'சூர்யா' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ராகம் 14ஆவது மேளகர்த்தா ராகமான 'வகுளாபரணம்' என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும்.இதன் ஆரோகணம் அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:     S G3 M1 D1 N2 S

அவரோகணம்: S N2 D1 M1 G3 S
 
சல்லாபம் கிட்டத்தட்ட ஹிந்தோளம் என்ற ராகத்தினை ஒத்திருப்பது போலத் தோன்றும். ஆனால் ஹிந்தோளத்தில் சாதாரண காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபத்திலோ, அந்தர காந்தாரம் இடம் பெறுகின்றது.
 
முதலாவதாக டாக்டர்.கடம் கார்த்திக் இயற்றிய சல்லாப ராக உருப்படியினைப் பார்ப்போம். கீ போர்ட் சத்யாவும் வாசிக்கின்றார்.



அடுத்தபடியாக முன்னொரு பதிவில் ரஸிகப்ரியா பாடி, நம் மனதையெல்லாம் கொள்ளைகொண்ட காவலம் ஸ்ரீகுமார் அவர்கள் பாடிய சல்லாபம் ராகத்தில் அமைந்த பஜன் கேட்போம்.



இப்போது கிஷோர் பல்லே என்ற இளைஞர் இயற்றி, ஸ்ரீநிதி என்ற இளைஞி பாடிய "சுந்தரவதனா சூர்யநயனா" என்ற பாடலைக் கேளுங்கள்.



தமிழ்த் திரைப்படப்பாடல்களை எடுத்துக் கொண்டால், நினைவுக்குத் தெரிந்து சல்லாப ராகத்தில் முதன்முதலாக பாடல் போட்டது நம்ம இளையராஜா அவர்கள்தான். ஆம். 'தாய் மூகாம்பிகை' என்ற படத்தில் அமைந்த 'இசையரசி என்னாளும்" என்றப் போட்டிப் பாடலாகும். முதன் முதலாகக இந்தப் பாடலைக் கேட்பவாராக இருந்தால் பாடலின் கிளைமேக்ஸினை காணத் தவறாதீர்கள்.



சமீப காலங்களில் வந்த சல்லாப ராகப் பாடல் வித்யாசாகர் இசையமைத்த சந்திரமுகி படத்தில் வரும் 'ரா ரா சரசுக்கு ரா' என்ற பாடலாகும். கேட்போமா? இடையே வரும் ஸ்வரபேதங்களை கண்டுகொள்ள வேண்டாம்.



சல்லாப ராகம் இப்போது மனதில் நன்றாக பிடிபட்டதா? அடுத்த பதிவில் சந்திப்போமா?

- சிமுலேஷன்