Sunday, April 15, 2012

85 வயது ராஜமாணிக்கத்தின் பாடல்கள்

ஓரிரு வருடங்கள் முன்பு, மார்கழி மாதம் முதல் நாள், விடியற் காலை 5 மணியளவில் பூஜை மணி சத்தம் கேட்டு எழுந்தேன். மணியோசையுடன் தெள்ளு தமிழில் அழகான பாட்டு!

யார் என்று எட்டிப் பார்க்க, எங்கள் அபார்ட்மெண்டில் காவல் வேலை செய்யும் ராஜமாணிக்கம்தான் அது. குளித்து விட்டு, அழகாக விபூதி இட்டுக் கொண்டு வாசலில் உள்ள ஒரு மரத்தினடியில் சாமி படம் ஒன்றினை வைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல் தங்கு தடையில்லாமல் வேறு பாடிக் கொண்டிருந்தார்.

மறுநாளும் அதே போல். அவரது பாட்டைக் கேட்கவும், அடுத்தடுத்த நாட்களில் அவர் செய்யும் பூஜையினைப் பார்க்கவுமே விடியற் காலையிலேயே எழுந்து விட்டேன். இது மார்கழி மாதம் முழுவது தொடரும் போல என்று எண்ணியிருந்த போது, ஓரிரு நாட்களுக்குப் பிறகு எதனையும் கேட்க முடியவில்லை. என்னெவென்று கூப்பிட்டு விசாரித்ததில், எங்கள் அபார்ட்மெண்ட்டில் குடியிருந்த மற்றொரு நபர், இவரைக் கூப்பிட்டு இந்த விடியற்காலை பூஜை சமாச்சாரமெல்லாம் கூடாது என்று கூறி விட்டார்களாம். அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் தனது பூஜைகளை நிறுத்திக் கொண்டார். எனக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

அவர் என்ன பாடல் பாடினார் என்று தெரியவில்லை. ஆனால் 85 வயது கொண்ட அவர், மனப்பாடமாக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப் பாடியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் பாடிய பாடல்களை எழுதியது யாராக வேறு இருக்கும் அன்று ஆவல் வேறு. அவர் பற்றிய தகவல்களையும், அவர்தம் பாடல்களையும் ஆவணைப்படுத்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஓரிரு வருடங்களுக்கு முன்னாலேயே இதற்கான முயற்சி எடுத்தாலும், இப்போதுதான் ஒரிரு வாரங்களுக்கு முன்பாக அது சாத்தியமாயிற்று.

அவரது பேட்டியும், அவர் பாடிய பாடல்களும் இங்கே:-







- சிமுலேஷன்

Saturday, April 07, 2012

மாசில் வீணையும் மாலை மதியமும்....


மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே.

இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

மாசில் - சுர இலக்கணங்களில் சிறிதும் வழுவாது இலக்கணம் முழுதும் நிரம்பச் சொல்லைமிழற்றும் இயல்புடைய . மாலைமதியம் - மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி . பௌர்ணிமை மதியைக் குறித்தது . வீசுதென்றல் - மெல்லிதாய் வீசுகின்றதென்றல் ; வீங்கு - பெருகிய . இளவேனில் - சித்திரை , வைகாசி மாதங்கள் . மூசு வண்டு - ( மாலைநேரத்தே மலரும் நீர்ப்பூக்களிடத்தே மொய்க்கின்ற ) வண்டுகள் . அறை - ஒலிக்கின்ற . பொய்கை - அகழ்வாரின்றித் தானே தோன்றிய நீர்நிலை . ஈசன் எந்தை , இருபெயரொட்டு . தலைவனாகிய என் தந்தை . இணையடி - இரண்டு திருவடிகள் . திருவடிநீழல் ஐம்புலன்களுக்கும் விருந்துதரும் இயற்கையின்பத்தை ஒத்தது என்றார் ;

வீணை , செவி . மதியம் , கண்கள் . தென்றல் , மூக்கு . வண்டு அறை பொய்கை, வாய் . வேனில் மெய் . இவ்வாறு முறையே ஐந்து புலன்களுக்கும் இன்பந்தருவனவாய இயற்கைச் சூழலை ஒத்து நீற்றறையில் திருவடி நீழலை எண்ணிய அப்பர்சுவாமிகளுக்குத் தண்மையைத் தந்தது ஆதலின் திருவடிநீழல் அளிக்கும் இன்பத்தோடு ஒப்பிட்டார் .

 

திருநாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை - பாடல் எண் - 1

ராகம் - மலயமாருதம்

மெட்டமைத்தவர் - நெய்வேலி கணேஷ்

 - சிமுலேஷன்

Friday, April 06, 2012

குயிலாய் இருக்கும் - அபிராமி அந்தாதி


குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

 விளக்கம் : கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான் மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய். அழகிய தாமரை மீது அன்னமாய் அமர்ந்திருக்கின்றாய். அன்னையின் திருக்கோலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவில் காணக்கிடைக்கின்றன... அன்னையானவள் மதுரையில் குயிலாகவும், கயிலையில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞான ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும் விளங்குகின்றாள் எனப் பெரியோர்கள் பகர்வார்கள். அதையேத்தான் அழகிய பாடலாக அபிராமிப் பட்டர் பாடுகின்றார்.

மதுரை மாநகரில் இன்னிசை பாடும் குயிலாக இருப்பவள், இமயத்தில் அழகிய நடனமாடும் மயிலாகவும் காட்சியளிப்பதாகப் பட்டர் பாடும் போது அவள் நம் அகக் கண்களில் அவ்வழகிய வடிவில் தென்படுகின்றாள் அல்லவா? "அன்று" "கயிலாயருக்கு" "இமவான் அளித்த கனங்குழையே" முன்பொருநாள் கயிலைநாதன் சிவபெருமானுக்கு மலையரசன் இமவான் மணம் முடித்துக் கொடுத்த பெருங்குண்டலங்களைக் காதில் அணிந்த அபிராமி அன்னையே.... "கடம்பாடவியிடை " "குயிலாய் இருக்கும்" கடம்பவனமாகிய மதுரையில் குயிலாய் இருக்கின்றாய்... "இமயாசலத்திடை" "கோலவியன் மயிலாய் இருக்கும்" இமயத்தில் அழகிய மயிலாய் இருக்கின்றாய். "விசும்பில்" "வந்து உதித்த வெயிலாய் இருக்கும்" விரிந்த ஆகாயத்தில் வந்து உதித்த கதிரவனாய் இருக்கின்றாய் "கமலத்தின் மீது அன்னமாம்" அழகிய தாமரை மீது அன்னப் பறவையாக இருக்கின்றாய்.

 



அபிராமி அந்தாதி - பாடல் - 99


பாடலுக்கு மெட்டுப் போட்டவர் - திரு. அலெப்பி வெங்கடேசன்.

ராகம் - ஜசம்ஹோதினி

- சிமுலேஷன்

Monday, April 02, 2012

சினிமா நிஜமா? - லெனின் - நூல் விமர்சனம்


"என் தாத்தா அகர்சிங் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திரர். அவர் மனைவி ஆந்திராவைச் சேர்ந்த ஆதியம்மா. அவர் மகன் பீம்சிங். தாத்தாவின் வழியிலே மகனுக்கும் 'சிங்' ஒட்டிக் கொண்டது. என் தாய், அதாவது பீம்சிங்கின் மனைவி சோனாபாய் காவிரி வளம் கொழித்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சோனாபாயின் தந்தையோ ராகவாச்சாரி என்கிற தமிழ் ஐயங்கார். தாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். மொழிகளும், இனங்களும், எல்லைகளும், நிறங்களும், கலாசாரங்களும் சங்கமித்ததின் 'கரு' நான். இப்போதைக்கு நான் தமிழன்... எல்லாவற்றுக்கும் மேலாக நான் மானுடன்." இப்படித்தான் தன்னைப் பற்றி "சினிமா நிஜமா" என்ற நூலின் பின்னட்டையில் அறிமுகம் செய்து கொள்கிறார் புகழ் பெற்ற எடிட்டரும் இயக்குநருமான பி.லெனின்.

நக்கீரன் இதழில் வெளிவந்த இவரது கட்டுரைகள் "சினிமா நிஜமா?" என்ற் தலைப்பில் நூலாக வந்துள்ளது. சுய அறிமுகத்தில் செய்து கொண்டது போலவே, சினிமா சம்பத்தப்பட்ட சகல தொழிலாளர்கள் குறித்தும், அவர்களது பிரச்னைகள் குறித்தும் பரிவுணர்ச்சியுடன் மிகுந்த கவலையுடன் இந்தக் கட்டுரைகளில் உரத்துச் சிந்திக்கின்றார். இந்தத் தொழிலின் கடைநிலை ஊழியர்களான் டச்சப் பாய்ஸ், லைட் பாய்ஸ், புரடக்ஷன் பாய்ஸ், செட் அஸிஸ்டெண்ட் ஆகியோரைப் பற்றியெல்லாம் அவரது அன்புள்ளம் ஆழ யோசிக்கிறது என்பதற்கு அடையாளமே இந்தக் கட்டுரைகளின் சாரம்.

கனவுத் தொழிற்சாலை மனிதர்களை பற்றிய சுவாரசியமான இந்தக் கட்டுரைகளிலிருந்து சாம்பிளுக்கு ஒரே ஒரு கட்டுரையை மட்டும் இங்கு பார்ப்போம்.

 ---------0--------------

 சினிமா படப்பிடிப்புத் தளத்தை வாசகர்கள் பார்த்திருக்ககூடும். 60 அடி உயரத்தில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் ஆன கூரையுடன், காற்று கூடப் புக முடியாத அமைப்புக் கொண்டது. பெரும்பாலான படப்பிடிப்புத் தளங்கள் இவ்வாறுதான் இருக்கும். இதனுயரத்தில் அதாவது 60 அடி உயரத்தில் நின்று கொண்டுதான் லைட் பாய்ஸ் (பாய்கள் என்றாலும் பெரும்பாலும் வயதானவர்கள்) சினிமா நட்சத்திரங்கள் மேல் வெளிச்சங்கள் அடித்துக் கொண்டு இருப்பார்கள். இந்த உயர்ந்த கூரை மீது ஏறிய லைட்பாய்கள் காலை 9 மணி கால்ஷீட் ஆரம்பித்து, மதியம் டைரக்டர் லஞ்ச் பிரேக் அறிவித்தவுடன்தான் கீழே இறங்குவார்கள். அதுவரை இவர்கள் சஞ்சாரமெல்லாம் இந்த இருட்டு மற்றும் புழுக்கமான மேற்கூரையின் மேல்தான். இடையிடயே தங்களுக்குத் தேவையான தண்ணீர், தேனீர் போன்றவைகளை இவர்கள் மேலே இருந்து கம்பிக் கயிறு கட்டி கீழே இருந்து இழுத்துக் கொள்வார்கள். அன்று இரு தெலுங்கு ப்ட ஷூட்டிங்...! அந்தப் படத்தின் கதாநாயகி காணும் கனவுப் பாடலை இயக்குநர் கொஞ்ச்ம் வித்தியாசமாக...? கற்பனை செய்திருந்தார். கதாநாயகன், கதாநாயகியை சுற்றிலும் ஏராளமான இனிப்புப் பலகாரங்கள். படபிடிப்பு தளம் முழுக்க அடுக்கப்பட்டு இருந்தன. ஏராளமான ஜாங்கிரி வகைகள், மைசூர் பாகு, அதிரசம், குலோப் ஜாமூன் என்று ஒரு லாலா கடையே அங்கு பரப்பப்ட்டு இருந்தது. இந்த இனிப்பு வகைகளுக்கு இடையே கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப் புரண்டு காதலித்துக் கொண்டு இருந்தார்கள். இது என்ன கனவோ...? இயக்குநர்களுக்கு இந்தக் 'கெட்ட கனவுகள்' எங்கிருந்துதான் வந்ததோ, இந்திய கமர்ஷியல் சினிமா டைரக்டர்களுக்கெல்லாம் ஒரே மாதிரி. நாயகனும், நாயகியும் ஊட்டி மலையின் அடிவாரத்தில் பாடினாலும், மலை மீது இருந்து நீர் வீழ்ச்சி போல ஆப்பிள்களும், ஆரஞ்சு பழங்களும் உருண்டு வரும்.

இப்படிப்போன்ற கனவுக் காட்சிகளள மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை இத்தைகய இயக்குநர்கள் கவனிக்கிறார்களா? கணக்கில் எடுத்துக் கொள்கின்றார்களா? எனபது ஒரு புரியாத புதிர். நான் விசாரித்த வரையில் மக்கள் இத்தைகய கனவுகளைக் கண்டு அருவருப்பே அடைகிறார்கள். ஆப்பிள் தின்பதற்காக ஆசைப்பட்டு கடையில் விசாரித்த போது, விலை கட்டுபடியாகமல் போன நிகழ்ச்சிகள்தான் அவர்களுக்கு ஞாபகத்திற்கு வருகின்றது...! இயக்குநர்களைப் பொறுத்த வரையில் பெரிய தயாரிப்பாளர்கள் கிடைத்தால் லாரி, லாரியா பூக்களைக் கொட்டுவது, அதைவிடப் பெரிய நிறுவனம் கிடைத்தால் லாரி, லாரியாக சாத்துக்குடி, அதற்கும் மேலே ஆப்பிள்களாக கதாநாயகி மேலே வருகிறது. இன்னும் சண்டைக் காட்சி என்றால் ஏராளமான முட்டைகள் உடைய வேண்டும். காய்கறிகள் பறக்க வேண்டும். இது போலத்தான் அந்தத் தெலுங்குப் படப்பிடிப்பிலும் (இதில் தெலுங்கு, தமிழ் வித்தியாசமில்லை)இனிப்பு வகைகள் கலர் கலராக... படப்பிடிப்புத் தளத்தின் மேலே இருந்து பார்த்த லைட் பாய்களுக்கு இது கண்ணண உறுத்தியது. நாக்கில் எச்சில் ஊறியது... விளைவு...! கொஞ்சம் கொஞ்சமாக ஜாங்கிரிகளும், பாதுஷாக்களும் கயிற்றின் வழியாக மேலே ஏறிக் கொண்டு இருந்தன. இதைச் சிறிது நேரத்துக்குள் மேனேஜர் ஒருவர் பார்த்து விட்டார். உடனே பரபரப்பானார். வேக, வேகமாக வெளியேறினார். சிறிது நேரத்திற்குள் இரண்டு, மூன்று வேர் கையில் 'மருந்து தெளிக்கும் பம்புடன்' உள்ளே வந்தார்கள். இருக்கிற இனிப்புப் பலகாரங்கள் அனைத்தின் மேலும் வேக வேகமாகப் 'பூச்சி மருந்து' அடிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் வண்ண வண்ணமான் அந்த இனிப்பு வகைகளின் மேல் ஈ கூட மொய்க்காத காரநெடி சூழ்த்து கொள்ள... அவன் பாடினான்... அவள் ஆடினாள்... நீங்கள் பார்த்த திரைப்படங்களில், சாப்பாட்டு அறையின் மேஜைகளில் அடுக்கடுக்காய் இருக்கும் பழ வகைகளிலும், தின்பண்டங்களிலும் உங்களின் புலன்களுக்கு எட்டாத பூச்சி மருந்தின் நெடி பரவியிருக்கிறது. உங்களுக்கு அந்தப் பழங்கள் நிஜம்... எங்களுக்கு அவை பழங்கள் அல்ல, விஷங்கள் என்பது நிஜம்...சில மனிதர்களைப் போலவே!

 நூல் பெயர்" சினிமா நிஜமா? ஆசிரியர்: B.லெனின் பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பு: 2002 பக்கங்கள்: 224 விலை: Rs. 75.00 - சிமுலேஷன்