Sunday, July 31, 2011

ஃபலூடா பக்கங்கள்-03



இந்த வாரம் நிறையக் கேள்விகள் மனதில் தோன்றிவிட்டன. ஃபலூடா பக்கங்க்களைப் படிக்கும் யாராவது பதிலளித்தால் தேவலை

தமிழ்நாட்டுப் ப்ளாட்டினம் என்ன ஆச்சு?



கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு, "ஜியாக்ரபிகல் ஸர்வே ஆஃப் இண்டியா" அமைப்பு தனது ஆய்வுகளின் முடிவில், தமிழ்நாட்டில் கோவை மேட்டுப்பாளையத்திலும், மற்றும் நாமக்கல்லிலும் தங்கத்தினையும் விட விலை அதிகமான உலோகமான பிளாட்டினப் படிவுகள் எக்கச்சக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்களே! அது என்ன ஆச்சு? அதனை வெட்டியெடுப்பதற்க்காக ஏதேனும் திட்டங்கள் போடப்பட்டதா? மேலதிகத் தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

கடற்கரையில் பலூன் சுடுதல்


வெகுநாட்கள் கழித்து பெசண்ட் நகர் பீச் சென்றிருந்தோம். மக்கள் தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு, துப்பாக்கியினால் கலர், கலராகப் பலூன்களை குறி பார்த்து சுட்டுக் கொண்டிருந்தனர்.

என் பையன் கேட்டான், "அப்பா, இந்தத் துப்பாக்கி குண்டுகள் யார் மீதாவது தவறாகப் பட்டுவிட்டால் என்ன ஆகும்? "அவை குண்டுகள் இல்லை. காரீய ரவைகள்" என்று சொன்னேன்.

ரவைகள் பட்டு யாரும் சாகாவிட்டாலும், அவை குறி தவறி, வேகத்துடன் வந்து யாராவது கண்ணில் பட்டால் அதோ கதிதானே? சுற்றிலும் தடுப்புக்கள் ஏதுமில்லாத இந்தத் துப்பாக்கி விளையாட்டுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது? ஒரு வேளை இந்த மாதிரி எந்த சம்பவமும் நடக்கவில்லையோ?

மயிலாப்பூர் காக்கைகள்

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் நிறைய மரங்கள் உள்ளன. அதனால் நிறையப் பறவைகளும் உள்ளன. அதிகாலையில் இவை காச்சூ, மூச்சென்று கத்தி எல்லோரையும் எழுப்பிவிட்டு விடும். ஆனால், ஏழு மணிக்கு மேலே ஒரு பறவையையும் பார்க்க முடியாது. அவை இரை தேடக் கிளம்பிவிடும் போல. பின்னர் மாலை 6-7 மணி வாக்கில் மீண்டும் இவைகளின் சப்தம் கேட்கும். என்னுடைய கேள்விகள்:--

இந்த பறவைகள் இரை தேட தினமும் எவ்வளவு தூரம் செல்லும்?   மயிலாப்பூரிலுள்ள காக்கைகள், மாம்பலம் வரை செல்லுமா? அல்லது மாங்காடு வரைசெல்லுமா? ஒவ்வொரு நாளும் ஒரே திசையில் பறக்குமா? அல்லது தினமும் வெவ்வேறு திசைகளில் பறக்குமா? தினமும் இரை கிடக்குமா? இல்லை, சில நாட்கள் பட்டினியும் கிடக்குமா? பட்டினி  கிடந்து சாகவும் நேரிடுமா?

- சிமுலேஷன்

Tuesday, July 19, 2011

அபூர்வ ராகங்கள் அமெரிக்க வானோலியில்

நண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா (ஸ்ரீ ஸ்ரீ) அமெரிக்காவில் ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள தமிழர்களிடையே பிரபலமானவர். இட்ஸ்டிஃப் (Itsdiff) என்ற ரேடியோ ப்ரோக்ராமை வாராவாரம் புதன்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை நடத்துபவர்.

ஸ்ரீ ஸ்ரீயும் நானும் சேர்ந்து இன்று "தமிழ்த் திரையிசையில் அபூர்வ ராகங்கள்" என்ற நிகழ்ச்சியினை நடத்துகின்றோம். விபரங்கள் வருமாறு:-

July 9th 7. 30 am PST (8 PM IST) Very special program

Aboorva Raagangal in Tamil Film Music -Live

(இந்திய நேரப்படி புதன் இரவு – 8:00 )

Tamizh Radio - http://www.tamizhradio.com/


visit www.itsdiff.com for the weekly radio program archives - KZSU Stanford Radio 90.1 FM

Tune in to 90.1 FM or listen live via internet on Wed 6 - 9 am http://kzsulive.stanford.edu/
- சிமுலேஷன்

Saturday, July 16, 2011

பாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்



ம.வே.சிவக்குமாரின் புகழ்பெற்ற படைப்புக்களில் "வேடந்தாங்கல்", "அப்பாவும் சில ரிக்ஷாக்காரர்களும்", "வாத்யார்" போன்றவை புகழ் பெற்றவை.  வாத்யார் பற்றி ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதே வரிசையில் இடம் பெற்ற இன்னமொரு கதை "பாப்கார்ன் கனவுகள்". வேடந்தாங்கலைப் போலவே இதுவும் ஒரு நல்ல தலைப்பு. பாப்கார்ன் எங்கு சாப்பிடுவோம்? சினிமாத் தியேட்டர்களில்தானே? ஆம். இக்கதை "கனவுத் தொழிற்சாலையான" சினிமா உலகைக் களமாகக் கொண்டது. கல்கியில் தொடர்கதையாக வந்த "பாப்கார்ன் கனவுகள்' கதையினை, பூர்ணம் விசூவநாதன் அவர்கள் குழுவில் இருந்த குருகுலம் தியேட்டர்ஸ் எம்.பி.மூர்த்தி 95ல் நாடகமாக போட்டார்.

வங்கியில் வேலை பார்க்கும், சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மிடில் கிளாஸ் மாதவனான லட்சுமிநாராயணன்தான் கதாநாயகன். வங்கியில் நாடகம் போட்டுப் பொழுது போக்கிக் கொண்டிருக்கும் நாயகன், அடுத்த கட்டமாக சினிமா உலகிற்குள் கதாநாயகனாக நுழைய முயற்சிக்கின்றான். பொறுப்பில்ல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இவனை சுற்றதார் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள். இவனை   ஒரு நல்ல வழிக்குக் கொண்டு வந்து கரை சேர்க்கவேண்டுமென்று, "பாங்க் எக்ஸாம்" புத்தகமெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து பிரம்மப் பிரயத்தனம் எடுக்கும் மாமனாரை "தட்சன்" ரேஞ்சுக்குப் பார்க்கின்றான். ஆனால் மனைவி விஜயலக்ஷுமிக்குக் கணவனது நடவடிக்கைகள் எதுவுமே தப்பாகத் தெரியவில்லை.  அதுவே லக்ஷ்மி நாரயணனுக்குத் தெம்பு தருகின்றது. நாடகம்,சினிமா என்று பைத்தியமாகவே அலைகின்றான்.

பாங்க் உத்தியோகத்தில் இருந்து, நாடகம், சீரியல், சினிமா என்று உயிரை விடத் தயாராயிருந்த ம.வே.சிவக்குமாரின் சொந்த அனுபங்களே, பாப்கார்ன் கனவுகளில்  பாதிக்கு மேலே இருந்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அவரது மற்றைய கதைகள் போலவே நிகழ்காலத்திலேயே (லக்ஷ்மிநாரயணன் பதில் சொல்கின்றான்; பைக்கில் ஏறி செல்லுகின்றான் போன்று) எழுதப்பட்ட  கதை முதல்முறை அவரது கதையினை வாசிப்பவருக்குப் புதிராக இருக்கலாம்.

வேலை வெட்டி இல்லாமல், பொறுப்பிலாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை யாரேனும் பார்த்தால், "ஏதேனும் ஒரு இடத்தில் இவன் ஒழுங்காக வேலை செய்ய மாட்டானா?" என்று எல்லோரும் எரிச்சலடைவது இயற்கை. ஆனால், அப்படியெல்லாம், ஓவர் பில்டப் கொடுத்து, கிளிஷேயாக ஆக்காமல், நல்ல அரசாங்க வங்கியில், பொறுப்பான  வேலையில் இருக்கும் ஒருவன்கூட தனது நடவடிக்கைகளால், படிப்பவரது எரிச்சலைச் சம்பாதிக்க முடிகின்றது என்றால், அதுவே ஆசிரியர் மவேசியின் வெற்றி.

'பாப்கார்ன் கனவுகள்" - கொறித்துப் பார்க்கலாம்.

கதை - பாப்கார்ன் கனவுகள்
ஆசிரியர் - ம.வே.சிவக்குமார்
பதிப்பு - அல்லையன்ஸ் கம்பெனி - 2007
பக்கங்கள் - 176
விலை - Rs. 55/-

- சிமுலேஷன்

Thursday, July 14, 2011

இந்திய இசை மற்றும் நடனம் - குறுக்கெழுத்துப் புதிர்


"சமுத்ரா" ஜூன் மாத  இதழில் வெளியான இந்திய இசை மற்றும் நடனம்" குறித்தான எனது குறுக்கெழுத்துப் புதிர்.

- சிமுலேஷன்

ஃபலூடா பக்கங்கள்-02


காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் மத்திய அமைச்சாராகிவிட்டார். மிகவும் நல்ல விஷயம். இனிமேல் செய்தித் தொடர்பாளர் என்ற பெயரில் டி.வி.விவாதங்களில் கலந்து கொண்டு வழ,வழ,கொழ,கொழவென்று பேசி எரிச்சல் மூட்ட மாட்டார் என்று நம்புவோம்.


பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், டிவி விவாதங்களில், கலந்து கொண்டு, காரசாரமாகவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் விவாதம் செய்பவர்.  தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீத்தாராமனின் கணவர், ஆந்திராவைச் சார்ந்தவர். தற்போதைய பரபரப்பான டில்லி அரசியல் சூழ்நிலையில், நிர்மலா ஐந்து நாட்கள் விடுமுறையில் ஆந்திரா சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஏன் இந்த திடீர் ஆந்திர பயணம்' என்றால், "அவசர வேலை' என்கிறார். அந்த அவசர வேலை, ஆவக்காய் ஊறுகாய் போடுவது தான்.


மாங்காய் சீசனில் வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஆவக்காய் ஊறுகாய் போடுவது வழக்கமாம். அவர்களுடைய சொந்தக்காரர்கள் எத்தனை பேர் இருக்கின்றனரோ, அவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஊறுகாய் போடுவது வழக்கம். எனவே, வீட்டு பெண்கள் எங்கு இருந்தாலும், என்ன வேலையில் இருந்தாலும், அனைத்தையும் விட்டு விட்டு, மாங்காய் சீசனில் சொந்த ஊருக்கு வந்து விடுகின்றனர். சுத்த பத்தமான நிலையில் ஆவக்காய் ஊறுகாய் போடுகின்றனர். இதில், நிர்மலா சீத்தாராமனும் சேர்ந்து கொள்கிறார்.


ஒவ்வொரு முறையும் ஒரு ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்கலின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார். பிரதமர் நேரு அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். ஆனால் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் ஏற்றுக் கொள்கின்றார். லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணமேன்னவேன்றால், "இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம்? தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிரூந்தால் ராஜினாமா செய்வது நியாயம். விபத்துக்குத் தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது என்ன நியாயம்? அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்" என்று சொல்வது சரியா? இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஸாஸ்திரியின் செயல் சரியாவேன்று பின்னூட்டத்தில் கூறுங்கள்.


போன வாரம் நாரதகான சபாவில் "அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை"யின் சார்பில் இயக்குநர் மௌளிக்குப் பாராட்டு விழா நடந்தது. இந்த 2 மணி நேர விழாவில் பாக்கியம் ராமசாமி, கிரேசி மோகன், கு.ஞானசம்பந்தன், டி.வி.வரதராஜன் ஆகியோர் பேச்சுக்களைக் கேட்டு  சிரித்து, சிரித்து வயிறு வலித்தது என்றால் அது பொய்யில்லை.

மௌளி சிறுவனாக இருந்த்த போது அவரது மாமா, பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்றாராம். மாமா, ஒரு கையில் சிறுவன் மௌளியையும், மற்றொரு கையில் தனது பெண் மஹாலட்சுமியையும் பிடித்துக் கொண்டு செல்கின்றார். இருவருக்கும் பலூன் வாங்கிக் கொடுக்கின்றார். மஹாலட்சுமி, மௌளியைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பதால், சிறுவன் மௌளியே இரண்டு பலூன்களையும் பிடித்தபடி நடந்து வருகின்றான், இந்தச் சமயத்தில்  அவன் கையில் இருந்த ஒரு பலூன் கை தவறிப் பறந்து செல்ல, மௌளி கூறுகின்றான்.

 "மாமா, மாமா, மஹாலட்சுமியோட பலூன் பறந்து போச்சு...!"




இந்தியாவின் தேசியப் பறவையான மயிலினை யாரும் கொல்லக் கூடது எனகிறது சட்டம். ஆனால் இந்த மயில்களால் பெருத்த பயிர் சேதம் ஏற்படுவதால், கோபிச்செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் விஷம் வைத்துச் சாகடிக்கப்படுகின்றனவாம். மயில்கள் விவசாயிகளால் இவ்வாறு விஷம் வைத்துச் சாகடிக்கப்படுவது சகஜம்தான் என்றும், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே விஷயம் பெரிதுபடுத்தப்படுவதாகவுல கூறப்படிகின்றது. பயிர் சேதத்தைத் தவிர மயில்களின் இனப்பெருக்கத்தால், பாம்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாம். பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், எலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம். மயில்களுடன் சேர்ந்து கொண்டு, எலிகளும் வேறு பயிரகளுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கிறதாம். சென்னை போன்ற நகரங்களில் சிட்டுக் குருவிகளையே காண முடிவதில்லை என்று எல்லா ஊடகங்களிலும் கூறப்படுகின்றது. ஆனால், குயிலினங்கள் அதிகமாகி விட்டதோவென்று எண்ணுகின்றேன். யாராவது கவனித்தீர்களா? காலை 4 மணிக்கே குயில்கள் கூவி எழுப்பிவிடுவது போதாதென்று நடுப்பகலில் கூட இவை கத்திக் கொண்டிருக்கின்றன. என்ன காரணமென்று தெரியவில்லை.

2010 அக்டோபர் மாதம் இங்கிலாந்திலுள்ள Cambridge University Pressக்கு 35,174 புத்தகங்களுக்காக £1.275 மில்லியன் பெருமானமுள்ள ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த நிறுவந்த்தின் வரலாற்றிலேயே இதுதான் பெரிய ஆர்டராம். இன்வாய்ஸ் மட்டுமே 2,794 பக்கங்கள் உள்ளது. இந்த ஆர்டர் கொடுத்தது கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையமாகும்.




- சிமுலேஷன்

Sunday, July 03, 2011

அபூர்வ ராகங்கள்-07 - ரதிபதிப்ரியா - Rathipathipriya

ரதிபதிப்ரியா என்ற ராகமானது நடபைரவி ராகத்தின் ஜன்யமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:     S R2 G2 P N2 S

அவரோகணம்: S N2 P G2 R2 S

வெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது.

கனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய "ஜகஜனனீ" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத் தெரியாத தமிழர்களே இல்லை என்று சொல்லலாம். இந்தப் பாடலை ஸ்ரீராம் கங்காதரன் பாடுவதை இப்போது பார்க்கலாம்.



இதே ராகத்தில், இதே மெட்டினில், "சிவகவி" படத்தில் தியாகராஜ பாகவதர் பாடும் "மனம் கனிந்தே" என்ற பாடலை இங்கே கேளுங்கள்.



MMDயைய்ம், MKTயையும் விட்டால் நேராக இளையராஜா காலத்திற்குத்தான் வரவேண்டும், மீண்டும் ஒரு முறை ரதிபதிப்ரியாவினைக் கேட்க. ஆமாம். சிந்துபைரவியில் வரும் "ஆனந்த நடனம்" என்ற ஒரு சிறிய பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.



கல்கி அவர்கள் இயற்றி, எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற பாடல், "காற்றினிலே வரும் கீதம்", மீரா படாத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது என்று பெரும்பாலானோர் சொல்லுகின்றனர். சிலர் "இல்லை. இதில் அன்னிய ஸ்வர்ன்ங்கள் வருகின்றன. இது சிந்துபைரவியின் ஒரு வெர்ஷன்ட்தான்",  என்று சொல்லுகின்றனர். கேட்டுத்தான் பார்ப்போமே.



கர்நாடக இசையினில் ஏதும் கீர்த்தனைகள் இல்லாவிட்டாலும், எனது பேவரைட் ட்ரையோ (கடம் கார்த்திக், எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்தியா) இந்த ரதிபதிப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் ஆலாபனை செய்யத் தயங்கியதே இல்லை. அதில் ஒன்றினை இப்போது கேட்போம்.






மற்றைய அபூர்வ ராகங்கள் குறித்த எனது பதிவினை இங்கே பார்க்க்கலாம்/கேட்கலாம்.

- சிமுலேஷன்

ஃபலூடா பக்கங்கள்-01



பறவைகளுக்கும் தாகம் உண்டு

போட் கிளப் ரோடு அருகே ஆர்ச் பிஷப் மத்தியாஸ் அவின்யூ என்ற நிழற்சாலையில் ஒரு மரத்தினடியில் ப்ளூ கிராஸ் அமைப்பினர் வெயில் காலத்தில் பறவைகளுக்கென்று ஒரு நீர்த் தொட்டி வைத்துள்ளனர். என்ன ஒரு கரிசனமான ஒரு காரியம்.




தென்னந் தோப்பு தேவதையும் கேட்பரி நிறுவனமும்

ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வரும் "வயலும் வாழ்வும்; நிகழ்ச்சியினை பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். அரிய பல விஷயங்கள் சுவையாக இருக்கும். அதே போலத் தற்போது மக்கள் டி.வியில் மலரும் பூமி என்ற பகுதியில் "தென்னந் தோப்பு தேவதை" என்ற நிகழ்ச்சி ஒளீபரப்பாகின்றது. இதன் ஸ்பான்ஸர் யாரென்றால் Cadbury நிறுவனத்தினர். Cadbury நிருவந்துக்கும் க்கும் இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தால்,  இந்த வீடியோவில் இருக்கின்றது விடை.





ஞானி அங்கீகரித்த ஆபாசம்




சமீபத்தில் ஒரு எழுத்தாளர் புத்தகம் ஒன்றினைப் பரிசளித்தார். என் மேல் என்ன கடுப்போ தெரியவில்ல. "விருந்து"என்ற தலைப்பு கொண்ட நாவலை எழுதியவர் அலிடாலியா ராஜாமணி, ப்ரியாராஜ் என்ற பெயர்களில் எழுதி வரும் கட்டளை வெங்கட்ராமன் ராஜாமணி என்ற நபர்.   'கதை எப்படி?' என்று ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் "உவ்வே" ரகம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது வன்மம் கொண்டு எழுதப்பட்ட கதையென்றால் மிகையில்லை. இதில் நான் மிகவும் நொந்த விஷயம் என்னவென்றால், இந்த நாவலை மிகவும் சிலாகித்து "ஞாநி" முன்னுரை எழுதியிருப்பதுதான். ஞாநியின் மீதிருந்த மதிப்பு தடாலென்று இறங்கியது.

பற்கள் தேய்ந்த காரணம்

பல் மருத்துவரைப் பார்க்கச் சென்ற போது, "மேல்வரிசைப் பல்லின் விளிம்பு மட்டும் சற்றே தெய்ந்த்திருகின்றதே! ஒரு வேளை கால்ஷியப் பற்றாக் குறையாக இருக்குமோ?" என்றேன்.

"நகம் கடிக்கும் பழக்கம் உண்டோ" என்றார் டாக்டர்.

"அட. ஆமா."

- சிமுலேஷன்

Saturday, July 02, 2011

வாக்கிங் செல்லும் வயதானவர்களே! ஜாக்கிரதை!

முந்தாநேற்று, விடியற்காலையில் வாக்கிங் போவது என்று தீர்மானித்து, இரண்டாமவன் அனிருத்தும், நானும் ஆறு மணியளவில் (!) வீட்டைவிட்டு இறங்கினோம். நடக்கத் தொடங்கியவுடன், எதிர் வரிசையில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியினரைப் பார்த்தோம். அந்த வயதான மாமி நல்லபடியாக நடந்து வந்து கொண்டிருந்த போதிலும், மாமா சற்றுத் தயங்கித் தயங்கியே நடந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தார். ‘Something wrong, ஏதோ சரில்லை’, என்று பட்சி சொன்னதால், ரோட்டைக் கடந்து, அவர்களிடம் சென்றேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்றும், தலை சுற்றுகிறதாவென்றும் கேட்டுவிட்டு, வீட்டிலிருந்து சர்க்கரை கலந்த தண்ணீரோ அல்லது வெறும் தண்ணீரோ கொண்டு வந்து கொடுக்கட்டுமாவென்றும் கேட்டேன். அந்த மாமி, கூச்சப்பட்டுக் கொண்டு அதெல்லாம் வேண்டாமென்றும், ஒரு ஆட்டோ கிடைத்தால் நல்லபடியாக வீட்டுக்குச் சென்று விடுவோமென்றும் கூறினார். சரியென்று அவர்களுக்கு ஆட்டோ கூப்பிட முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த உயரமான மாமா தடாலென்று கீழே விழுந்தார். ஆனால் அவர், தலையைச் சற்றே தூக்கிக் கொண்டதால் பின் மண்டையில் அடி ஏதும் படவில்லை. ஸ்டாண்டிலிருந்த ஆட்டோக்காரர் உடனே வர, மாமாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, மாமியையும் ஏறிக் கொள்ளச் சொல்லி காளியப்பா மருத்துவமனைக்கு செல்லலாமென்று சொல்ல, மாமியோ வீட்டுக்குப் போய் பணம், மொபை போன் இன்ன பிற சாமன்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றார். இப்படி நாங்கள பேசிக் கொண்டிருக்கும்போதே, மாமா மயக்கநிலை அடைந்து, நாங்கள் பேசும் எந்த வார்த்தைக்கும் எதிர்வினை காட்டாது இருந்தார். மாமி மிகவும் பயந்து விட்டார். ‘மொபைல் என்னிடம் உள்ளது, போன் செய்து கொள்ளலாம், பணமும் என்னிடம் உள்ளது. நேரத்தை வீணடிக்க வேண்டம்’ என்று சொல்லி ஒரிரு நிமிடங்களில் காளியப்பா மருத்துவமனையினை அடைந்தோம். எனது பையனை நேராக மருத்துவமனைக்கு வரச் சொல்லி விட்டேன். மாமாவை ஓ.பி.யில் அட்மிட் செய்துவிட்டு, எனது பையனிடம் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களின் டெலிபோன் நம்பர் வாங்கி டயல் செய்யச் சொன்னேன். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் உடனே உதவிக்கு வந்தார். இதனிடையே ட்யூட்டி டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு, இரத்த நாளங்களில் ப்ளாக் உள்ளது என்றும், அவற்றை அகற்ற உடனடி ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றும் சொன்னார். இவர் ஏற்கெனவே இருதய நோயாளி. அதனால் அவரது குடும்ப டாக்டரிடம் காட்ட வேண்டுமென்று எண்ணுகின்றார். மேலும் தான் பொதுத் துறை நிற்வனமொன்றில் ஜி.எம் ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராததால் விஜயா மருந்த்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்கிறார். வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உடம்பு ஒத்துழைக்குமாவென்று தெரியவில்லை. மாமி தனது வீடு பக்கத்தில்ததன் உள்ளது என்றும், தெரிந்தவர்களிடம் விபரம் சோல்லி விட்டும், பணம், மொபைல் இன்ன பிற ஐட்டங்களை எடுத்துக் கொண்டு வந்து விடுவதாகவும் விரைந்தார். இப்போது ட்யூட்டி டாக்டர் என்னிடம் வந்து, “நீங்கள் எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவரை உடனே ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் (Vascular Surgeon) வந்து பரிசோதிக்க வேண்டும். கவனமாகக் கேளுங்கள். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்தான் வரவேண்டும். சாதாரண இருதய நிபுணர் (Cardilogist) பத்தாது” என்று சொல்லுகின்றார். நான் என்ன சொல்லுவது? என்ன முடிவு எடுப்பது? அவரை யார் என்றே எனக்குத் தெரியாது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்ததில் அவர் மகன பெங்களூரில் இருக்கின்றான் என்றும், பெண் கனடா நாட்டில் இருக்கின்றாள் என்றும் சொன்னார். ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து விட்டேன். அடுத்த பத்து நிமடங்களில் மாமி, தனது நண்பர்கள் சிலருடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு வேண்டியவர்கள் வந்து சேர்ந்ததாலும், எனக்கும் அலவலகத்திற்குக் கிளம்ப வேண்டியிருந்ததாலும், நான் விடை பெற்றுக் கொண்டேன். மாமி கைகளைப் பற்றி கொண்டு அழுதே விட்டார். “தெய்வம் போல வந்தீர்கள் என்றெல்லாம் சொல்லத் தொடங்கி விட்டார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.



அன்று மாலை மாமியிடமிருந்து போன் வந்தது. தங்களது குடும்ப இருதய நிபுணர் வந்து பார்த்து, அவரது அனுமதியின் பேரில் மாமாவை விஜயா மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதாகவும், அவர் அபாய நிலயில் தற்போது இல்லையென்று, ஆனால் ஸ்கேன் போன்ற ஆய்வுகள் செய்வதற்காக ஒரிரு நாட்கள் அங்கே இருக்கப் போவதாகவும் கூறினார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அனுபவ்த்திற்குப் பிறகு விடியற்காலையில் வாக்கிங் செல்வபர்களுக்குக், குறிப்பாக வயதானவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக் ஒரிரு அறிவுரைகள் சொல்ல விரும்புகின்றேன்.



- ஆள் நடமாட்டம் உள்ள தெருக்களிலேயே வாக்கிங் செல்லுங்கள். ஆள் அரவமற்ற தெருக்களில் செல்லாதீர்கள். ஒரு வேளை உங்களுக்கு மயக்கம் போன்ற பிரச்னைகள் வரும்போது, உதவிக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்.

- “வீட்டுக்குப் பக்கத்தில்தானே வாக்கிங் செல்கிறோம், எதற்கு சுமை?” என்றெண்ணி, மொபைல் போன் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அதிலும் ICE (In Case of Emergency) என்ற பெயரில்) அவசர, ஆபத்துக் காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் பெயரை கட்டாயம் சேமித்து வையுங்கள்.

- அருகில் சென்றாலும் நூறு ரூபாயேனும் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டி வரலாம்.

- ஆபத்துக்கு உதவ எத்தனையோ பேர் இருந்தாலும், வெட்கப்பட்டுக் கொண்டு பெரும்பாலோனோர் அதனை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. ஆபத்து நேரத்தில் அடுத்தவர் உதவியினை ஏற்றுக் கொள்வதில் தவறு ஏதுமில்லை.

- சர்க்கரை வியாதி உள்ளவர்ளுக்கு, சர்க்கரையின் அளவு குறையும் போது தலை சுற்றல், மயக்கம் வரலாம். ஒரு சாக்லேட்டோ, கேண்டியே பாக்கெட்டில் வைத்திருப்பது நலம்.

- இருதய நோயாளியாக இருக்கும் பட்சத்தில், ஆபத்து நேரத்தில் என்ன மருந்து குடிக்க வேண்டுமென்றும், வீட்டு முகவரியும் கொண்ட ஒரு அட்டையினை மேல் சட்டைப் பையில் வைத்திருப்பது மிகவிம் நல்லது.

- சிமுலேஷன்

டாக்டர்.ஹெச்.வி.ஹண்டே



சமீபத்தில் Win TVல் ஒரு அரசியல் கலந்துரையாடல் நடை பெற்றுக் கொண்டிருந்தத்து. காரசாரமாக ஒருவர் மத்திய அமைச்சர்களை விளாசிக் கொண்டிருந்தார். யாரென்று கவனித்ததில், எம்ஜியார் அமைச்சரவையில் சுகாதாரத்த துறை அமைச்சராக இருந்த Dr.H.V.Hande அவர்கள். அவர் இத்தனை காலமும் எங்கிருந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. என்னைக் கவர்ந்த  டீசண்டான ஒரு சில அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். ராஜாஜியின் சீடர்களில் ஒருவரான இவர், “மூதறிஞர் ராஜாஜி” என்ற புத்தகமும் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்றத்திகு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ஹண்டே, மருத்துவத் துறையிலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றார். ஹண்டே மருத்துவமனையின் பெயரில் இயங்கி வரும் வலைத்தளத்தில் அவரது மருத்துவ சேவைகள குறித்த விபரங்கள் இருக்கின்றதே தவிர, அரசியலில் அவரது பங்களிப்புக் குறித்து இணையத்தில் எந்த இடத்திலும் அவர் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் சமீபத்திய தேர்தலில், கொளத்துரில் ஸ்டாலினுக்குத் தண்ணி காட்டிய சைதை துரைசாமியைப் போல, 1981ல் அண்ணாநாகரில், கருணாநிதிக்குத் தண்ணி காட்டியவர் டாக்டர் ஹண்டே அவர்கள். 699 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டாலும் உச்சநீதி மன்றத்தில் இந்தத் தேர்தல் குறித்து வழக்கு தொடர்ந்த விபரம் இந்தத் தளத்தின் மூலம் அறிகின்றேன். சிவகங்கை வழக்குப் போல இந்த வழக்கும் “நிலுவையில்” உள்ளது என்று யாராவது சொன்னால் ஆச்சரியப்ப்பட மாட்டேன். கிட்டத்தட்ட 85 வயதை எட்டும் இந்த வயதிலும், ஹண்டே அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. யாரேனும் ஹண்டே பற்றிய விபரங்களைத் தொகுத்தால் நல்லது.

- சிமுலேஷன்

Friday, July 01, 2011

கண்ணாடிக்கு குட்பை

என் முதல் பையன் ஆதித்யாவுக்கு கண்ணாடி அணிவது என்பது அறவே பிடிக்காது, என்றாலும் வேறு வழியில்லாது வெகு நாட்களாக கண்ணாடி அணிந்து வந்துள்ளான். கண் எக்சர்ஸைஸ் செய்து பவரை  குறைந்தாலும், கண்ணாடி அணிவதை ஒரு போதும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாகத் தனது நண்பர்கள் பலரும் லேசர் ஆபரேஷன் செய்து கொண்டு கண்ணாடி அணிவதனையே விட்டுவிட்டார்கள் என்று சொல்லித் தானும் அப்படிப்பட்ட ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லி வந்தான். எங்களது வழமையான கண் டாக்டரிடம் கேட்ட போது, இதற்குச் சுமார் எண்பதாயிரம் செலவு செய்ய வேண்டி வரும்  என்று சொன்னதால், அவ்வளவு எல்லாம் செலவு செய்து இதுதேவையில்லை என்று எண்ணி முடிவினைத் தள்ளி போட்டோம். சமீபத்தில் எனது தங்கை பெண், வாசன் கண் மருத்துவமனையில் இதே மாதிரியான ஆபரேஷன் செய்து கொண்டு எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று feedback கொடுக்க நாங்களும் வாசன் கிளினிக்கை அணுகினோம். காலடி எடுத்து வைத்த முதல் நிமிடத்திலிருந்து நல்லதொரு ரிசப்ஷன். அத்தனை பணியாளர்ககுக்கும், வாடிக்கையாளர்களை எப்படி அணுக வேண்டுமென்ற நல்லதொரு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடாகத் தெரிகின்றது.
Zyoptix Laser Surgery என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை ஒரு Personalised treatment ஆகும். இரண்டு சிறப்பு மருத்துவர்கள் கண்களைச் சோதித்த பின், கண்ணை ஸ்கேன் பண்ணிக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள். இதற்குச் சுமார் 700 ரூபாய் ஆகின்றது. பின்னர் இந்த ஸ்கேன் ரிபோர்ட்டை ஆய்வு செய்து, நம் கண்கள் இந்த அறுவை சிகிச்சைக்கேற்றவைதானா என்று முடிவு செய்கிறார்கள். நமக்கு வசதியான நாளில், வசதியான நேரத்தில் ஆபரேஷன் தியேட்டர் காலியாக இருக்கும் பட்சத்தில் ஆபரேஷனை வைத்துக் கொள்ள சம்மதிகின்றார்கள்.  ஒவ்வொரு கண்ணுக்கும் பத்து நிமிடங்கள் என்று மொத்தம் இருபது நிமிடங்களில் ஆபரேஷன் முடிகின்றது. மற்றுமொரு இருபது-முப்பது நிமிடங்கள் அங்கே இருந்து அவர்களது அறிவுரைகளக் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சக்குச் சுமார் 36,000 ரூபாய் செலவாகின்றது. ஒரு வார காலம் டி.வி. கம்ப்யூட்டர், மொபைல் போன்ற போன்ற சாதனங்களைப் பார்க்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒய்வு எடுக்க வேண்டும். பின்னர் வாசன் விளம்பரத்தில் வருவது போல “கண்ணாடிக்குக் குட்பை” என்று தைரியமாகச் சொல்லலாம். எனது மகன் பெற்ற வெற்றியினக் கண்டு, எனது மனைவியும் zyoptix laser surgery செய்து கொள்ள வேண்டுமென்று விருப்பப்பட்டு அவளது விருப்பமும் சென்ற வாரம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. கண்ணாடி அணியாமல், எல்லோரையும் போலப் நாமும் பார்க்க முடியும் என்ற அவளது முப்பதாண்டு கால ஆசை நிறைவேறியுள்ள இந்த நேரத்தில், விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும், குறிப்பாக மருத்துவத்துறையின் ஜெட் வேக வளர்ச்சியையும் வியந்தோதுகின்றோம். நாங்கள் சென்றிருந்த நாளில் கிட்டத்தட்ட 10 பேருக்கு இதே ஆபரேஷன் நடைபெற்றது. வந்திருந்த ஒவ்வொருவரும், சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களிலிருந்து வந்தவர்கள என்று பார்க்கும் போது, மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதும் புலப்பட்டது.
-       - சிமுலேஷன்