Friday, February 19, 2010

அபூர்வ ராகங்கள்-04-ஜோக் (Jog)

ஜோக் என்ற ராகம் வட இந்திய இசையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், கர்நாடக இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 34ஆவது மேளகர்த்தா ராகமான வாகதீஸ்வரியின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:      S G3 M1 P N2 S

அவரோகணம்:  S N2 P M1 G3 R3 S

இந்த ராகம் பிரிவுணர்ச்சியினைப் பிரதிபலிக்கும் ஒரு ராகமாகும். ஜோக் என்றால் மானுட சக்தி, தெய்வீக சக்தியுடன் இணையும் ஒரு கூடல் (யோக) என்றும் கூறலாம். காஷ்மீரத்து இசைக் கருவியான சந்தூர் எனப்படும் இசைகருவியில் இந்த ராகத்தினை வாசிக்கக் கேட்க, ஆனந்தப் பரவச நிலை ஏற்படும்.

ஜோக் ராகமானது சிதார் மேதை பண்டிட் ரவி சங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ராகமாகும். முதலில் பண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில் இந்த ராகத்தினை வாசிப்பதை கேட்போமே.



அடுத்தபடியாக எஸ்.காயத்ரி சதாசிவ ப்ருமேந்திராவின் "ஸ்மரவாரம் வாரம்’ என்ற பாடலைப் பாடுவதை இங்கே கேட்போம்.

இந்த உருப்படிகளையெல்லாம்விட, எனக்கு மிகவும் பிடித்தது, கடம் கார்த்திக் குழுவினரின் ஜோக்தான். எம்பார் கண்ணன், கீ போர்ட் சத்யா ஆகியோருடன் வாசிக்கும் ஜோக் ராக உருப்படியினை நேரிலும் கேட்டிருக்கின்றேன். நீங்களும் கேளுங்களேன்.



தமிழ்த் திரைப் பாடல்களில் ஜோக் ராகத்தில் அமைந்த பாடல்கள் என்னென்ன?

1. இசை பாடு நீ - இசை பாடும் தென்றல்
2. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி

இந்தத் தமிழ்த் திரைப்பாடல்களின் சுட்டிகள் கிடைக்கவில்லை.

திரைப்பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல் என்றால் அது ஒரு மலையாளப் படப்பாடலாகும். அது என்னெவென்று இந்நேரம் கண்டுபிடித்திருபீர்களே? ஆமாம். "ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா" என்ற அருமையான படம்தான் அது. "ப்ரம்மதவனம் வேண்டும்" என்ற அந்தப் பாடல் ஜேஸுதாஸின் ஒரு அழகிய படைப்பு. பாடுவதற்கு கடினமான பாடல். ஆனால் கேட்பதற்கு சுகமான பாடல். கேளுங்கள் இப்போது.



- சிமுலேஷன்