Sunday, March 26, 2006

உபவாசக் குரங்குகளும் உன்னதத் திட்டமிடலும்



ஒரு நாள் குரங்குக் கூட்டம் ஒன்று உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தன. கூட்டத்திலுள்ள எல்லாக் குரங்குகளும் அதற்கு ஒத்துக் கொண்டன.

"உண்ணாவிரதம் முடிக்கும்போது ஏதேனும் சாப்பிட்டுத்தான் விரதத்தை முடிக்க வேண்டும். எனெவே, அதற்குத் தேவையான உணவை இப்போதே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்." என்றது தலைக் குரங்கு.

எல்லாக் குரங்குகளும் "ஆமாம்; ஆமாம்" என்றன.

குட்டிக் குரங்குக் கூட்டமொன்று உடனே தேடிச் சென்று, பழுத்த, சுவையான வாழைப் பழத்தார் ஒன்றினைக் கொண்டு வந்து சேர்த்தன.

"நான் நினைகின்றேன். அவரவர் பங்கை இப்போதே உண்ணாவிரதம் தொடங்கும் முன்னரே பிரித்துக் கொடுப்பது நல்லது. உண்ணாவிரதம் முடிந்த பின்பு எவ்வளவு களைப்பாக இருப்போம் தெரியுமா? அப்போது பிரித்துக் கொடுப்பது என்பது மிகவும் அலுப்பான வேலையாகும்" என்றது, தலையின் மனைவி.

எல்லாக் குரங்களும், இதுவல்லவா, யோசனை! என்று தங்கள் பங்கு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டன.

"நாம் ஏன், வாழப் பழத்தை உரித்துத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளக் கூடாது" என்றது ஒரு இளம் குரங்கு.

"ஆமாம்; ஆமாம். இதுவும் சரியான யோசனைதான் என்றது மற்றோர் குரங்கு.

"சரி; தோலை உரித்து வைத்துக் கொள்வோம். ஆனால் யாரும் விரதம் முடிவதற்குள் சாப்பிட்டு விடக்கூடாது" என்றது தலை.

சரி. மாலை விரதம் முடிந்ததவுடன் சாப்பிட வேண்டுமென்ற முடிவுடன், தோலை உரித்த பழத்துடன், தயார் நிலயில் இருந்தன குரங்குகள்.

ஒரே ஒரு குட்டிக் குரங்கு மட்டும், தனது அப்பாவிடம், "நான் வாழைப் பழத்தை சும்மா, வாயில் வைத்துக் கொள்கின்றேன். சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். சரியா ப்ளீஸ்?" என்று கேட்டது.

"நல்ல யோசனை. எல்லோரும் இதே மாதிரியே செய்யலாம். உண்ணாவிரதம் முடிந்தவுடன், பழத்தை கடித்துச் சாப்பிட எளிதான வழி இதுதான்" என்றது தலை.

பின்னர் எல்லாக் குரங்குகளும் வாழைப் பழத்தின் தோலை உரித்து, பழத்தை வாயில் வைத்துக் கொண்டன. இப்போது திரு, திருவென்று ஒவ்வொரு குரங்கும் மற்ற குரங்கை பார்த்து அசடு வழிந்தன.

அடுத்த சில நிமிடங்களிலேயே உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!!!

- 'தி ஹிண்டு'வின் 'யங் வேர்ல்ட்'டில் வந்த ஒரு கர்நாடக நாட்டுக் கதை

- சிமுலேஷன்

Monday, March 20, 2006

பரிமாற்றப் பகுப்பாய்வு-01



பரிமாற்றப் பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கின்றேன் என்று யாராவது சொன்னால் பயந்து விடாதீர்கள். நீங்களும், நானும் கூட செய்யலாம். வழக்கம் போல பரிமாற்றப் பகுப்பாய்வு என்றால் என்ன எண்டு முதலில் விளக்கம் தெரிந்து கொள்வோம்.

பரிமாற்றப் பகுப்பாய்வு என்பது ஆங்கிலத்தில் Transactional Analysis எனப்படுகின்றது. பரிமாற்றப் பகுப்பாய்வு என்பது மானுட நடைமுறைகளை அறிவதன் பொருட்டு, முறைபடுத்தி, வகைப்படுத்தப்பட்ட ஒரு அணுகுமுறையாகும்.

விரைவாகவே விஷயத்திற்கு வந்து விடுகின்றேன். மனித மனம் என்பது எளிதாகப் பிரித்து, பகுத்து அறியக் கூடிய மூன்று பகுதிகளாகக் கொண்டுள்ளது என்கிறனர் அறிவியல் அறிஞர்கள். இந்தப் பகுதிகளை ஆங்கிலத்தில் EGO STATES என்று கூறுகின்றோம். தமிழில் இதனை மனோநிலைகள் அல்லது மனோபாவம் என்று சொல்லலாம். இவை என்னவென்றால்

1. பெற்றோர் மனோபாவம்
2. குழந்தை மனோபாவம்
3. பக்குவ மனோபாவம்

1, பெற்றோர் மனோபாவம்: முதலில் பெற்றோர் மனோபாவம் என்றால் என்னவென்று பார்ப்போம். சிறு வயதில் நம்மை வளர்த்த பெற்றோர், ஆசிரியர்கள், மூத்தவர்கள், உறவினர்கள் ஆகியோர் எப்படிச் செயல்பட்டனரோ, அப்படியே இன்றும் நாம் செயல்படும் தன்மையை பெற்றோர் மனோபாவம் எனலாம். "இது நல்லது", "இது கெட்டது", "இதனைச் செய்யாதே", "அதனைச் செய்யாதே" என்பது அனைத்தும், இதனுள் அடங்கும் சட்ட திட்டங்கள், தர்ம நியாயங்கள், கலாச்சாரப் பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் பொன்றவன்றின் மொத்த வடிவமே பெற்றோர் மனோபவம் என்றும் கூறலாம். இதற்குக் கற்பிக்கப்பட்ட மனோபாவம் என்றும் பெயர் உண்டு.

2. குழந்தை மனோபாவம்: குழந்தைப் பருவத்தில் நாம் எப்படிச் செயல்பட்டோமோ, எண்ணினோமோ, உணர்ந்தோமோ. அப்படியே இன்றும் செயல்படுவதற்கு, குழந்தை மனோபாவம் எனலாம். தேவையின் அடிப்படையில் இயல்பாக இயங்கும் இயக்கங்கள், மற்றும் புறத் தூண்டுதல்களை எதிர்கொள்ளும் விதங்கள் அகியவற்றின் தொகுப்பினை குழந்தை மனோபாவம் என்றூ சொல்லலாம். இதற்கு உணர்ச்சி மனோபாவம் என்றும் பெயர் உண்டு.

3. பக்குவ மனோபாவம்: உணர்ச்சிகளுக்கு இடம் குடுக்காமல், விருப்பு. வெறுப்பின்றி , ஒரு கணிணியைப் போல், உண்மைகளை பகுத்தறிந்து நல்ல முடிவுகளை எடுக்கும் மனோபாவத்தைப் பக்குவ மனோபாவம் என்கின்றோம். இதனச் சிந்திக்கும் மனோபாவம் என்றும் கூறலாம்.

அடுத்த பாகத்தில், இந்த மனோபாவங்களின் உட்பிரிவுகளையும், உதாரணங்களையும், இன்னமுமே சுவாரசியமாகப் பார்க்கலாம்.

- தொடரும்

Tuesday, March 14, 2006

எட்டக எண் என்றால் என்ன?

இராம.கி அவர்கள் எழுதிய "புங்கம்" என்ற கட்டுரையில் சுத்திகரிப்பு ஆலை குறித்த சொல்லாடலில் எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு octane numberக்குச் சொல்லப்பட்ட "எட்டக எண்" ஆகும். மற்றவை வருமாறு:-

பாறைநெய் (petroleum)
நீர்ம எரிவளி (Liquid Petroleum Gas)
நடுவத் துளித்தெடுப்புகள் (middle distillates)
நெய்தை (naphtha)
கன்னெய் - கல்நெய் (petrol or gasoline)
மண்ணெய் (kerosene)
டீசல் - வளிநெய் (gas-oil).
துளித்தெடுத்தம் (distillation)
சூழ்அழுத்தத் துளித்தெடுப்பு (atmospheric distillation)
வெறுமத் துளித்தெடுத்தம் (vacuum distillation)
குறை அழுத்த துளித்தெத்தல் (distilled at low pressure)
பிரித்தெடுக்கும் செலுத்தங்கள் (separating processes)
வினையூக்கி மறுவாக்கம் (catalytic reforming)
பாறைநெய்ச் செலுத்தங்கள் (petroleum processes)
துளித்தெடுப்புக் கோபுரம் (distillation tower)
கொதிநிலை (boiling points)
பாய்மப் படுகை (fluidized bed)
வினையூக்கி உடைப்பு (catalytic cracking)
நீர்மம் (hydrogen)
நீர்ம உடைப்பு (hydrocracking) .
நீர்மக்கரியன்களே (hydrocarbons)
எட்டக எண் (octane number)
பிசுக்கைப் பொருள் (pitch)
கரிப்பிசுக்கு (coal-tar)
நடுவத் துளித்தெடுப்புகள்(middle distillates)
பிசுக்குமை (viscosity)
களிக்கரை (glycerol)
வெறியங்கள் (alcohol)
கொழுப்புக் காடி அத்துகள் (fatty acid esters)
பாய்மை (fluidity)
புதிரிகள் (problems)
புனைகள் (components)
செறிவைக் (concentration)
தெவிட்டுதல் (to saturate)
தெவிட்டாத காடி (unsaturated acid)
தெவிட்டாமை (unsaturation)
இரட்டைப்பிணை (double bond)

மேலும் அறிய...
(http://valavu.blogspot.com/2006/03/blog-post_114137405073613188.html)

Saturday, March 11, 2006

நிஜமல்ல... கதை



"வாங்க செல்வி. வாங்க. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுங்கம்மா"

"மேடம், எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது. ஆனா, நான் போன ஆறு மாசமாப் படற அவஸ்தை சொன்னாப் புரியாது".

"சொன்னாப் புரியாதுன்னு நீயா எப்படிம்மா சொல்ல முடியும்? என்ன கஷ்டப் படறீங்கன்னு, நீங்க வாய்விட்டுச் சொன்னாத்தான் புரியும். தயவு செய்து உங்க மனக்கஷ்டத்தை எல்லார் முன்னாடியும் கொட்டிருங்க. அப்பத்தான் உங்க மனச்சுமை குறையும்."

"மேடம், என்னோட கணவர், தினமும் என்னை சிகரெட்டால சுட்டு, இம்சை பண்ணறார்!."

"என்னது!. தினமும் சிகரெட்டால சுடுவாரா? என்னமோ டெய்லி காபி குடிக்கிற மாதிரி சொல்றீங்க!."

"ஆமாம். மேடம். ஒரு நாள் விடாம, தினமும் இந்தக் கொடுமை நடக்கும்"

"நேயர்களே. செல்விக்கு நடக்கிற இந்தக் கொடுமையைப் பார்த்தீங்களா. இந்த மாதிரி கொடுமை செல்விக்கு மாத்திரமல்ல. இந்த நாட்டிலே பல பெண்களுக்கு ஏற்பட்டுகிட்டிருக்கு. ஆனா, இந்த மாதிரி கொடுமை ஏன் நடக்கிறது? அவர்கள் கணவர்கள் ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? சரி, செல்வியின் கணவர் கிருஷ்ணனும் இங்க வந்திருக்கிறார். அவரையே கேப்போம்."

"வாங்க, கிருஷ்ணன், செல்வி சொல்றது உண்மையா? நீங்க அவங்களை சிகரெட்டால
சூடு வப்பிங்களாமே."

"ஆமாம்." கிருஷ்ணன் தலையக் கவிழ்ந்து கொள்கிறார்.

"என்ன கிருஷ்ணன். இப்படி செய்யிறதுக்கு ஒங்களுக்கு வெக்கமாயில்லையா? ஏன் இப்படிப் பண்ணறீங்க?"

"மேடம். எனக்கும் அதுதான் தெரியலை. என்னயும் அறியாமப் பண்ணிடறேன்."

"கிருஷ்ணன். நீங்க பேசுறது எனக்குப் புரியவேயில்லை. அறியாம எப்படி இந்த மாதிரிப் பண்ண முடியும்?... ஒரு நிமிஷம் இருங்க. கிருஷ்ணன் ஒரு போன் கால் வருது."

"ஹலோ"

"ஹலோ!. மேடம் நான் தாம்பரத்திலேர்ந்து ராஜகோபால் பேசறேன்."

"சொல்லுங்க ராஜகோபால்"

"மேடம், இந்தப் ப்ரொக்ராமை டி.வியிலே பார்த்துகிட்டு இருக்கேன். நான் செல்வி, கிருஷ்ணன் இவங்க பக்கத்து வீட்லதான் குடியிருக்கேன்."

"அப்படியா ராஜகோபால். இவங்களை உங்களுக்குத் தெரியுமா? இந்த விஷயமும் தெரியுமா?"

"நெறையவே தெரியும் மேடம். இவங்க இரண்டு பேரும் நல்லாவே பொய் சொல்லறாங்க. இவங்க சொல்றது போல எதுவுமே நடப்பதில்லை. இவங்க இரண்டு பேரும் அவங்க மூஞ்சி டிவியிலே தெரியுணும்னு இப்படி நாடகம் ஆடறாங்க. ஆமாம் நான் சொல்றது உண்மைதான் மேடம். எப்படி நடிக்கணும்னு இவங்க போனவாரம் வீட்ல பேசிக்கிட்டிருந்ததை நானும் கேட்டிக்கிட்டுதான் இருந்தேன். ஆனா அவங்க, தாங்க இந்த மாதிரி திட்டம் போட்டது யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சுக்கிட்டிருக்காங்க."

செல்வி விக்கி விக்கி அழுகின்றார்.

"ஓகே. ராஜகோபால். எங்களுக்குப் போன் பண்ணி உண்மையைச் சொன்னதுக்கு ரொம்பத் தாங்ஸ். நிகழ்ச்சியத் தொடர்ந்து கவனியுங்க"

"செல்வி எதுக்கு இப்படி அழறீங்க. ராஜகோபால் சொன்னது உண்மதானா?"

"ஆமாம் மேடம். உண்மைதான்"

"எதுக்காக இப்படிப் பண்ணிட்டீங்க"

"இல்லை மேடம். என்னோட வொய்புக்கு டி.வியிலே வரணும்னு, குறிப்பா சீரியல்லே வரணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக நாங்க என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துட்டோம். ஒரு சான்ஸ் கூட கெடைக்கல. ஏதாவது பிரச்னை அப்படீன்னு சொல்லிகிட்டு இங்க வந்தா. அட்லீஸ்ட் ஒரு இருபது நினிஷம் டி.வியிலே வரலாமேன்னுதான் இப்படித் திட்டம் போட்டோம்."

"மேடம், எங்களை மன்னிச்சிடுங்க. எங்க மூஞ்சியும் டி.வியிலே வரணும்னு ஒரு வெறியிலே இப்படிப் பண்ணிடோம்."

"ஹலோ"

"ஹலோ"

"மேடம் நான் பிலிம் இன்ஸ்ட்டிட்யூட் ஸ்டூடன்ட் கார்த்தி பேசறேன்"

"சொல்லுங்க கார்த்தி"

"மேடம். இப்ப டி.வியிலே வந்தாங்களே செல்வி. அவங்க அட்ரஸ் வேணும் மேடம்."

"எதுக்கு"

"அவங்க நடிப்பு நல்லா இருந்தது. இந்த மாதிரி இயல்பா நடிக்கிறவங்களைத்தான் நானும் ரொம்ப நாளாத் தேடிக்கிட்டுருந்தேன். அவங்க ஹஸ்பெண்டுக்கு ஆட்சேபணை இல்¨லன்னா, அவங்களை எங்கள் முதல் சினிமாவுக்கு ஹீரோயினா புக் பண்ண விரும்பறோம்."

செல்வியும், கிருஷ்னனும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைகின்றனர்.

"கார்த்தி சார், ரொம்ப தாங்ஸ். உங்களுக்கு எங்க ப்ரொக்ரோம் மூலமா ஒரு ஹீரோயின் கிடைச்சது எங்களுக்கு ஒரு பெருமை."

"நேயர்களே, செல்வி பாருங்க. என்ன ஒரு தன்னம்பிக்கை! தன்னுடைய முகம் டி.வியி§லா, சினிமாவிலோ தெரியணும்கிறதுக்காக எப்படி கஷ்டப்பட்டு ஐடியா போட்டுகிட்டு வந்திருக்காங்க! அதுக்கு அவங்க கணவர் கிருஷ்ணனும் முழு ஒத்துழைப்பும் கொடுத்திருக்கார். புது டைரக்டர் கார்த்தியோட அறிமுகமாகப் போகிற செல்விக்கு நம்ம சமூகம் வாழ்த்துகளைத் தெரிவிச்சே ஆகணும். சமூகம்னா யாருங்க? நீங்களும், நானும்தான். நாளைக்கு இன்னொரு நிஜத்துடன் சந்திப்போம்."

----0-----