Wednesday, October 04, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்களுக்குக்கூட 'ஸரிகமபதநிஸா' என்ற பாலபாடம் புரியும். கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளும் எவரும், 'ஸரிகமபதநிஸா-ஸாநிதபமகரிஸா' என்ற ஸ்வரங்களுடன் துவங்கும் மாயாமாளவ கௌளை இராக சரளி வரிசையிலிருந்து தொடங்காமலிருக்க முடியாது. மாயாமாளவ கௌளை இராகத்திலுள்ள ஸ்வரங்களில் ஒரே ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ஸ்வரங்கள் இல்லாமலிருப்பதனால், இந்த இராகத்தினை எவரும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். கமகம் ஏதுமின்றி, ஆரோகண, அவரோகங்களைப் பாடினாலே, இராகத்தின் சாயல் வெளிப்படும். அதனாலேயே சங்கீதப் பிதாமகர் எனப்படும், ஸ்ரீ புரந்தர தாசர் இந்த எளிய இராகத்தில், ஆரம்பப் பாடங்களான சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம் ஆகியவற்றை முதன் முதலாக அமைத்தார்.

உண்மையிலேயே மாளவ கௌளை எனப்படும், இந்த இராகத்திற்கு, 'மாயா' என்ற ப்ரி·பிக்ஸ் சேர்க்கப்பட்டது, மேளகர்த்தா இராகப் பட்டியலில், வரிசை எண் கண்டுபிடிக்கப் பயன்படும் 'கடபயாதி' சூத்திரத்திற்காகத்தான். அப்படியானால் இது ஒரு மேளகர்த்தா இராகம் என்று இந்நேரம் கண்டு பிடித்திருப்பீர்கள்.

பரஸ், நாதநாமக்ரியா என்ற இராகங்கள் மாயாமாளவ கௌளையின் ஒன்றுவிட்ட சகோதரிகள்தான். இந்த முக்கிய இராகத்திலிருந்து கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட ஜன்ய இராகங்கள் பிறந்திருப்பதாக அறிகின்றோம். அவற்றில் சில, கௌளை, மலஹரி, பௌளி, லலிதா, வசந்தா, பிந்து மாலினி, ஜகன் மோகினி, சாவேரி ஆகியவையாகும். ஹிந்துஸ்தானியில் 'பைரவ்' எனப்படும் இராகம்கூட மாயாமாளவ கௌளையினை ஒத்ததாகும்.

திருத்தணி முருகன் அருள் பெற்று, முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய, 'ஸ்ரீநாதாதி குருகுஹோ' என்ற கீர்த்தனை, மாயாமாளவ கௌளையில் அமைந்த ஒரு நல்ல பாடலாகும். மேலும், தியாகையரின், 'மேரு ஸமான', 'துளசி தள' மற்றும் ஸ்வாதி திருநாளின் 'தேவ தேவ கலயாமிதே' ஆகியவையும் மிகவும் புகழ் பெற்ற பாடல்களாகும்.

இளையராஜா அவர்கள் பல பாடல்களில் இந்த இராகத்தினைப் பயன்படுத்தியுள்ளார். அது சோக ரசமாகட்டும், அல்லது மகிழ்ச்சியான தருணமாகட்டும். 'மஞ்சள் நிலாவுக்கு இன்று முதலிரவு', 'அந்திவரும் நேரம்'. 'மதுர மரிக்கொழுந்து வாசம்', 'பூவ எடுத்து ஒரு மால' என்று தொடரும் இந்தப் பட்டியல், இதற்கு எடுத்துக்காட்டாகும். 'மஞ்சள் நிலாவுக்கு' என்ற இந்தப் பாடலின் பின்னணி இசையில் வரும் புகைவண்டியின் ஓசை, மிகவும் இயற்கையாக இழைந்து வரும். 'சிவசம்போ' என்று இளமை ததும்பப் பாடிய எம்.எஸ்.வி அவர்களுக்கு 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா' மாயாமாளவ கௌளையில் அமைந்த ஒரு மாணிக்கமாகும். முகாரி இராகம் என்று பாடலில் வந்தாலும், டி.ஆரின் 'கடவுள் வாழும் கோவிலிலே' என்ற பாடலும் மாயாமாளவ கௌளைக்கு சிறந்த உதாரணமாகும்.

இராகம்: மாயாமாளவ கௌளை
15ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்
01. அலைமகள் மலைமகள் - நவராத்திரி*
02. அல்லா உன் ஆணைப்படி - சந்திரலேகா
03. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு*
04. அந்தப்புரத்தில் ஒரு மகராணி - தீபம்*
05. ஆறடி சுவருதான் - இது நம்ம பூமி
06. அரும்பு அரும்பா சரம் தொடுத்து - சின்னத் தாயி
07. அழகான பொண்ணு நான் - அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
08. சின்னச் குயிலே குயிலே - மனசெல்லாம்
09. என் இதயம் இதயம் நீயே நீயே ராசாத்தி - இளையவன்
10. என் தாயெனும் கோயிலில் - அரண்மணைக் கிளி
11. எனக்கென யாரிங்கே - இவன்
12. எங்கே நான் காண்பேன் - சாதனை
13. என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட - சக்களத்தி*
14. கோவிந்தா வரதா ஸ்ரீஹரி கோபாலா - துக்காராம்
15. இதோ இதோ என் நெஞ்சிலே - வட்டத்துக்குள் சதுரம்*
16. இளம் காதல் வீணை - வெள்ளைப் புறா ஒன்று
17. இள மனதினில் - மஞ்சள் நிலா
18. கடவுள் வாழும் கோவிலிலே - ஒரு தலை ராகம்*
19. காதல் கவிதைகள் - கோபுர வாசலிலே
20. காதல் மகராணி - காதல் பரிசு
21. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - ஆலய மணி*
22. கண் பாரும் தேவி - கொக்கரக்கோ
23. கனவா இது உண்மையா - அறுவடை நாள்
24. கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும்
25. காட்டுக் குயிலே - இதயத்தைத் திருடாதே
26. கொட்டு களி கொட்டு - சின்னவர்
27. குயிலப் புடிச்சி கூண்டிலடிச்சி - சின்னத் தம்பி*
28. மச்சி மன்னாரு - என்னுயிர்த் தோழன்
29. மதுர மரிக் கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்*
30. மனதில் உறுதி வேண்டும் - மனதில் உறுதி வேண்டும்
31. மானின் இரு கண்கள் கொண்ட - மாப்பிள்ளை
32. மஞ்சள் நிலவுக்கு இன்று ஒரே சுகம் - முதல் இரவு*
33. மாரியம்மா மாரியம்மா - கரகாட்டக்காரன்
34. மாசறு பொன்னே வருக - தேவர் மகன்
35. மூக்குத்திப் பூ மேலே காத்து - மௌன கீதங்கள்*
36. நண்டூருது நரியூருது - பைரவி*
37. நன்றி சொல்லவே எனக்கு - உடன் பிறப்பு
38. நீ நினைத்த நேரமெல்லாம் - பெண்ணை நம்புங்கள்
39. நீயே கதியம்மா - சின்ன துரை
40. நிலவே நீயொரு சேதி சொல்லாயோ - பட்டினத்தார்
41. நீயான தங்கமே - ராஜ கோபுரம்
42. ஓணபுத்தட்டு புல்லாக்கு வாங்கித் தாரேன் - சின்ன ஜமீன்
43. பூப்போலே ஒன் புன்னகையில் - கவரி மான்*
44. பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோவில் கிழககாலே*
45. ராம நாமன் ஒரு வேதமே - ஸ்ரீ ராகவெந்திரர்*
46. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் - முள்ளும் மலரும்
47. ராசாத்தி ராசாத்தி - கண்ணா உன்னைத் தேடுகிறேன்
48. சாமிகளே சாமிகளே சொந்தக் கதை - என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்
49. சரிகமபதனி என்னும் - ராக பந்தங்கள்
50. சிவ சம்போ - நினைத்தாலே இனிக்கும்
51. சிவகாமி நினைப்பினிலே - கிளி பேச்சு கேட்கவா
52. சொல்லடி அபிராமி - ஆதி பராசக்தி
53. சொல்லால் அடித்த சுந்தரி - சின்னக் கவுண்டர்
54. சொர்க்கத்தில் நிக்க நிக்க - ராஜஸ்தான்
55. தாயுண்டு தந்தையுண்டு - கோவில் காளை
56. தென்னங் கீற்றும் தென்றல் காற்றும் - முடிவல்ல ஆரம்பம்*
57. துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்
58. உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி - பணக்காரன்
59. உன் எண்ணம் எங்கே எங்கே - தம்பி பொண்டாட்டி
60. உயிரே உயிரே உருகுதே - ஒருவர் வாழும் ஆலயம்
61. வானம் இடி இடிக்க - உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
62. வத்திக் குச்சி பத்திகாதுடா - தீனா
63. வயசு வந்த வாலிபனுக்கு - என் மன வானில்
64. விழிகளில் கோடி அபிநயம் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

வழக்கம் போல, நட்சத்திரக் குறியிட்ட பாடல்களைப் பதிவு செய்து கேட்டு வருகிறீர்களென்று நம்புகின்றேன். இப்போது இந்தப் பதிவுக்குண்டான கேள்வி.

"கௌளை" என்று முடியும் இராகங்களின் (குறைந்தபட்சம் நான்கு) பெயர்களைக் கூறவும்.

- சிமுலேஷன்

11 comments:

மு.கார்த்திகேயன் said...

சிமுலேஷன், இந்த மாதிரி ராகம் பத்தி நிறைய தெரிஞ்சுக்கனும்னு நினச்சேன்.. உங்க பதிவு ரொம்ப பயனுள்ளதா இருக்கு..

வைசா said...

நல்ல பாடல்கள்.

// "கௌளை" என்று முடியும் இராகங்களின் (குறைந்தபட்சம் நான்கு) பெயர்களைக் கூறவும். //

ரீதிகௌளை
கேதாரகௌளை
கன்னடகௌளை
நாராயணகௌளை
கௌளை

போதுமா?

வைசா

Simulation said...

நன்றி கார்த்திகேயன்

பாராட்டுக்கள் வைசா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரொம்ப நல்ல பதிவு சிமுலேஷன் அவர்களே!

'கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்' பாட்டை நீங்க சொல்லணுமேன்னு பதிவைப் படிக்க ஆரம்பிக்கும் முன்னே நினைச்சேன்.

நீங்க சொல்லிட்டீங்க! பல பேர் அதை இன்னும் முகாரி-ன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க!

அடுத்த பதிவின் ராகம் என்னவோ? வெயிட்டிங்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக்க பயனுள்ள பதிவு!
தொடர்ந்து படித்துப் படியெடுத்து வைக்கிறேன் தொடரவும்.
இங்கே நடந்த சஞ்சய் சுப்பிரமணியத்தின் படங்கள் இவ்வாரம்; என்பதிவிலிடுகிறேன். பாருங்கள்
11 - 11- 2006 சனி; பம்பாய் ஜெயஸ்ரீ யின் கச்சேரி; பாரிஸ் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது.
யோகன் பாரிஸ்

இலவசக்கொத்தனார் said...

34. மாசறு பொன்னே நட்சத்திர குறியீடு போடுமளவுக்கு சுத்தமான மாயாமாளவகௌளை இல்லையா?

அருமையான பாட்டுக்கள் சிமுலேஷன்.

Simulation said...

ரவி, யோகன், இலவசம் வருகைக்கு நன்றி.

"34. மாசறு பொன்னே நட்சத்திர குறியீடு போடுமளவுக்கு சுத்தமான மாயாமாளவகௌளை இல்லையா?"

வெகு நாட்களுக்கு முன்னே சேகரிக்கப்பட்ட பாடல்கள் என்பதனால், சில பாடல்களை உடனடியாக நினைவுகூற முடியவில்லை. அதனால் விடுபட்டிருக்கலாம்.

- சிமுலேஷன்

மதுமிதா said...

நன்றி சிமுலேஷன்

முழு நூலாக இருக்கிறதா. என்றால்
எங்கே கிடைக்கும்.

'மஞ்சள் நிலாவுக்கு இன்று'
பாடலை கவனியுங்கள். அடுத்த சொல் மாற்ற வேண்டியிருக்கு

43. பூப்போலே உன் புன்னகையில்
என்று இருக்கணும்.

27. ம் கொஞ்சம் பாருங்க

Anonymous said...

இந்த ராகத்தில் 'தினமணி வம்ச' பாடலை மஹாராஜபுரம் பாடக் கேட்க வேண்டுமே!

பூங்கதேவே தாழ் திறவாய் - பாடலும் இந்த ராகம் தானே?

Dr.S.Soundarapandian said...

Super!Very useful!

Eruvadi N.Subramanian said...

சரலி வரிசை ராகமும் இந்த பாடல்களின் ராகமும் ( மெட்டும் ) ஒத்து போறமாதிரி ஒன்றிரண்டு வரிகள் சொல்லுங்களேன்
ஏர்வாடி சுப்பிரமணியன்