Monday, December 28, 2009

எம் தமிழர் செய்த படம்



திரைப்பட வரலாறு, காட்டுயிர் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் பங்களித்தவர் தியோடர் பாஸ்கரன். இவர் தமிழ் சினிமா குறித்து எழுதிய ஒரு புத்தகம், "எம் தமிழர் செய்த படம்". தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் முக்கிய பரிணாமங்கள் சிலவற்றின் மீது கவனத்தைச் செலுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது இப்புத்தகம்.

இது புத்தக வடிவம் என்று சொன்னாலும் கூட, குங்குமம், தீராநதி, மனோரமா இயர் புக், இந்தியா டுடே, தினமணி, காலச்சுவடு, புதிய பார்வை, கசடதபற ஆகிய இதழ்களில், தியோடர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பேயாகும். ஆகவே, முழுப்புத்தகம் படிக்கும்மோது ஓட்டம் சிறிது தடைப்டுகின்றது. இதனை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படித்தால், இந்தப் புத்தகத்தில் நல்ல பல சுவையான விஷயங்கள் இருப்பதனை ரசிக்கலாம். ஆவணப் படங்களின் தோற்றம், பிரிட்டிஷ் அரசும் தமிழ்த் திரையும், சினிமாவும் தணிக்கையும் ஆகிய தலைப்புகளில் அலசியுள்ளார். இது தவிர, தமிழ் சினிமாவில் பாத்திரப் பேச்சு, இலக்கியம், பாட்டு, திராவிட இயக்கத்தின் குரல், நாவல்களின் பங்கு, கலைப் படங்கள், சினிமா ரசனை, ஆபாசம்-வன்முறை உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்த தனது பார்வையயும் எடுத்து வைக்கின்றார்.

இப்புத்தகத்திலிருந்து சில சுவையான சில விஷயங்கள்:-

- திருச்சியில் வசித்து, ரயில்வேயில் டிராஃப்ட்ஸ்மேனாக வேலை பார்த்து வந்த சாமிக்கண்ணு வின்சென்ட்டிற்கு தொழில் நுணுக்கக் கருவிகளில் மிகுந்த ஈடுபாடு. 1905ல் திருச்சி ரயில் நிலையத்தில் டூபா என்ற பிரஞ்சுக்காரரைச் சந்தித்து, அவரிடமிருந்து சினிமாக் காட்சி சாதனங்களிப் பெற்று ஒரு exhibitor ஆக உருவாகின்றார். பின்னர் டாக்கி யுகத்தில், கோவையில் 'லைட் ஹவுஸ்', வெரைட்டி ஹால் முதலிய திரையரங்குகளைக் கட்டுகின்றார்.

- டூரிங் திரையரங்குகள் வந்த போது, டிக்கெட் என்ற்ய் எதுவும் கிடையாது. ஓரணா அல்லது இரண்டணா காசு கொடுத்து உள்ளே நுழையலாம். காசில்லாதவர்கள் அரிசி, ப்ருப்பு, புளி முதலியவற்றைக் கொடுத்து காட்சியைப் பார்க்கலாம். இப்படிச் சேர்ந்த பண்டங்களை அந்த வாரச் சந்தையில் ஒரு ஸ்பெஹல் கடை போட்டு விற்றுவிட்டு, காட்சியாளர் அடுத்த ஊருக்கு மூட்டை கட்டுவார்.

இது போன்ற சுவையான பல் வேறு விஷயங்களையும், எப்படி வேவ்வேறு மனிதர்கள் இந்தத் தமிழ்த் திரையுலகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்கள் என்பதனையும் "எம் தமிழர் செய்த படம்' அழகுற விளக்குகின்றது.


பதிப்பு: உயிர்மைப் பதிப்பகம்
விலை: Rs.100

- சிமுலேஷன்

Wednesday, December 23, 2009

புகைப்படப் புதிர்-7



இந்த இரண்டு படங்களுக்கிடையேயான ஒற்றுமைகள் என்னென்ன?

- சிமுலேஷன்

Monday, December 21, 2009

சென்னை இசை விழா 2009-2010

முதலில் சென்னை இசை விழாவிற்கென ஒரு தனிப்பதிவு தொடங்கி, இசை விமர்சனங்கள் எழுதலாமென நினைத்தாலும், அதற்கென நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு புகைப்படப் பதிவு மட்டுமே! புகைப்ப்டங்கள் மட்டும் அவ்வப்போது தரவேற்றம் செய்யும் எண்ணம்.

இந்த வருடத்திற்கான் நான் கேட்ட முதல் கச்சேரி சாகேத ராம். சிவகாமி பெத்தாச்சி அரங்கினில், ப்ரம்மகான சபா ஆதரவில்.


நாரதகான சபாவில் கலாக்ஷேத்ரா குழுவினரின் குழு நடனங்கள்.


குழு நடனத்தின் மற்றொரு காட்சி.


குழு நடனத்தின் மற்றுமொரு காட்சி. கலாக்ஷேத்ரா குழுவிலுள்ள ஆண்கள், பெண்களைப் போலல்லாமல், ஆண்களைப் போலவே ஆடுவார்கள். இந்த முறை, இந்தக் குழுவினர் சிறப்பாக தீம் எதனையும் எடுத்துக் கொள்ளாமல், எல்லா உருப்படிகளிலும் கொஞ்சம் கலந்து, நங்கநல்லூர் பஞ்சாம்ருதம் ஆக்கி விட்டார்கள்.

மியூசிக் அகாடெமியில் "ப்ருகதேசி" என்ற தலைப்பில் லெக்டெம் நடத்திய அனில் பேஹார்.


இந்த வருடத்தின் சங்கீதக் கலாநிதி வலையப்பட்டி ஆர்.சுப்பிரமணியன் அவர்கள், மியூசிக் அகாடெமி பப்புவுடன்.

இசைவல்லுனர் T.R.சுப்பிரமணியன்


இசைவல்லுனர் S.R.ஜானகிராமன்


மயிலை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற அபிஷேக் ரகுராம் கச்சேரி.

அதே மயிலை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ம்றுநாள் காலை 5.30 மணிக்கு நடைபெற்ற கணேஷ்-குமரேஷ் வயலினிசைக் கச்சேரி. நிகழ்ச்சிக்கான வெளிச்சமே இவ்வளவுதான். அதிகாலையில் அகல் விளக்கொளியில் நடைபெற்ற இந்தக் கச்சேரியினைக் கேட்டவர்கள் பெற்றது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

டாக்டர்.ரீதா ராஜா நடத்திய லெக்டெம்.

முதன்முறையாக மியூசிக் அகாடெமியில், கர்நாடக இசையின் கமலஹாசன் T.M.கிருஷ்ணா லெக்டெம் நடத்தியபோது அரங்கம் நிரம்பி வழிந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை.


சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் பாடிய குல்தீப் பய்.

"ஸரளி வரிசை முரளிகாச்சு; ஜண்டை வரிசை கொண்டைக்காச்சு" என்று சரணத்தில் துவக்கி, ஒரு வித்தியாசமான பாட்டு ஒன்று பாடினார். (ஊத்துகாடோ?)



என்னை கவர்ந்த இளம் பாடகர்கள் திருச்சூர் சகோதரர்கள். சுசரிதா RTP செம அசத்தல். மேலும் விவரங்களுக்கு லலிதாராமின் விரிவான் விமர்சனப் பதிவினைப் பார்க்கவும்.

மியூசிக் அகாடெமியின் முக்கிய இடமான கேண்டீன்.



பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் என்னக் கவர்ந்த பாலகன் ஒருவன்.

அப்புறம், இந்த சீசனில் சந்திப்போம் என்று எதிர்பார்த்த மூத்த பதிர்வர் ஒருவரை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். அவர்..............



V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V


- சிமுலேஷன்

Friday, December 18, 2009

ஒற்றன்-அசோகமித்திரன்



அசோகமித்திரன் என்ற ஆளுமையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவரது ஒற்றன் பற்றிப் பேசப்படுதல் கண்டுள்ளேன். ஒற்றன் என்ற தலைப்பினைக் கேட்டவுடன், ஒரு துப்பறியும் நாவலாக இருக்குமோ அல்லது ஒரு உளவாளியின் வாழ்க்கை வரலாறோ என்றெண்ணத் தோன்றினாலும், அசோகமித்திரன், இந்த மாதிரி வம்பு தும்புக்கெல்லாம் போகமாட்டரே என்று அழுத்தமாகப்பட்டது தவறாகவில்லை. (ஒரு முறை ஒரு கூட்டத்தில் சுந்தரராமசாமி பேசும் போது, "இவருடைய கதையில் வரும் அதிகபட்ச ஆயுதம் அரிவாள்மணைதான்" என்று சொன்னார். !!!).

இது புதினமா அல்லது அனுபவக் கட்டுரையா என்றெண்ணி முகவுரைக்குள் நுழையும்போது, இது ஒரு புனைகதை வடிவம் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இருப்பினும் படித்துப் பார்த்தால் பயண அனுபவமே என்று புரிந்து கொள்ளலாம். இதன் களம் - ஐக்கிய அமெரிக்கா.

ஐயோவா சிட்டியில் நடக்கும் உலக எழுத்தாளர்கள் பட்டறைக்கு அழைக்கப்படுகின்றார் அசோகமித்திரன். அமெரிக்காவில் அப்போது இருந்த ஏழு மாத வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கின்றார் இந்த ஒற்றனில். இதில் வரும் விவரிப்புகள் அமெரிக்க வாழ் வாசகர்களுக்கோ அல்லது அமெரிக்க அடிக்கடி சென்று வந்தவர்களுக்கோ, புதிதாக என்ன சொல்லிவிடப் போகின்றார் என்று முதலில் ஆயாசம் எற்படுத்தலாம். ஆனால், அசோகமித்திரனின் அனுபவங்கள் நடந்தது 197 74 ஐச் சேர்ந்த காலம் என்பதனை நினைவில் வைத்தால் மேலே படிக்க ஆர்வம் உண்டாகும். மேலும், அமெரிக்காவிலுள்ள கட்டடங்கள் பற்றிய வர்ணனையோ அல்லது, இயற்கை அழகின் வர்ணனையோவா முக்கியம்? மனிதர்கள் முக்கியம். மனிதர்களைப் பற்றிப் பேசுவது அ.மித்திரனுக்குக் கை வந்த கலை. இந்த ஏழு மாதங்களில் மட்டும் நிறையவே மனிதர்களைப் பார்க்கின்றார். (கறுப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணைப் பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்பப் படித்தவர்கள், படித்தவர்கள் போல பாவனை செய்பவர்கள். இது மாதிரி நிறைய.) ஒரு முறை Span பத்திரிக்கை ஐயோவா சிட்டி பயணம் குறித்து ஒரு கட்டுரை கேட்க, அ.மித்திரன் எழுதித் தந்ததை சிறுகதை என்ற பெயரில் பத்திரிக்கை வெளியிட்டுவிட்டது!. பயணம் செய்த பத்து வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்து எழுதிய இந்தத் தொகுப்பு 14 அத்தியாயஙள் கொன்டது. காலச் சுவடு பதிப்பு.

முகவுரை: (ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது, எல்லோரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். நான் மெத்தத் தெரிந்தவன் என்று எல்லோரும் என்னிடம் யோசனை கேட்க வரும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும். நான் ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்துதான் பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று அவர்களுக்குத் தெரியாது.)

1.விமான நிலையத்தில்: (எனக்கு முன்னால் நின்ற ஐரோப்பியனுக்கு மிகப் பெரிய உடல். அவன் முதுகில் உலக வரைபடத்தை தெளிவாக எழுத்திவிடலாம்....
ஐரோப்பிய மாது. அவளுடைய பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படம் என்றென்றைக்கும் அவளுக்கு வெட்கமூட்டும்... எந்த புகைப்படம் எடுத்தாலும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை. அது அழகாக மாற மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது.)

2.படகுப் பயணம்: அமெரிகா வந்த முதல் நாளே மார்க் ட்வெயினின் மிசிசிபி நதிக்குப் பயணம் செய்கிறார்கள். இறைச்சி இல்லாத உணவு என்று கேட்டு சீரில் ஃபுட் வாங்குகின்றார். அதில் பாலை ஊற்றி ஊற வைக்க 'பொத,பொத'வென்றாகிவிட்டது போலும். பல இடங்களில் இது, 'அமெரிக்கப் பொங்கலா'கின்றது அசோகமித்திரனுக்கு. படகுப் பயணத்தில் ஜானையும், வெண்டூராவையும் சந்திகின்றார். வெண்டூரா படகுப் பயணம் ஒத்துக் கொள்ளாமல் வாந்தி எடுக்க, ஜானும், அ.மித்திரனும் உதவுகிறார்கள்

3.கவிதை வாசிப்பு:
டெமாயின் நகரத்துப் பிரமுகர்கள் இறுநூறு பேர் சர்வதேச எழுத்தாளர்களின் கவிதை வாசிப்புக்குக் காத்திருக்க, ஒரு மணிநேரம் தாமதமாக வருகிறார்கள். உபயம் வழி தெரியாத ஜிம்மின் குளறுபடி. தான் கவிஞன் அல்லாததாலும், இந்த கவிதை வாசிப்பு நிகழ்ச்சி தனக்கு முன்னமே தெரியாததாலும், நிராதரவாக உணர்கிறார் அ.மி. ஆனால் விட மாட்டேங்கிறார்கள் அமைப்பாளர்கள். உடனே மூளையைக் குடைந்து, கடைந்து, ஞானக்கூத்தனின் "அன்று வேறு கிழமை"யை ஆங்கிலப்படுத்தி வாசிக்கிறார். கவிதை வேறொருவருடையது என்று கூறினாலும், பாராட்டித் தள்ளுகின்றார்கள் கூட்டத்தினர். மேலும் எல்லோரையும் 'பாட' வேறு சொல்கின்றார்கள்.
(உனக்குத் தெரியுமா? நான் பாட்டெதுவும் பாடவில்லை. எங்கள் தமிழ் மொழியின் 30 எழுத்துக்களைத்தான் நான் ராகம் போட்டுப் பாடினேன். அவன் வியப்படைந்ததாகத் தெரியவில்லை. "அப்படியா? நானல்லவா அப்படிச் சமாளித்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். நானும் எங்கள் மொழியின் எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்.)

4.பூண்டு: பட்டினி கிடக்குக் அசோகமித்திரனுக்கு காபி கூடக் குடிக்க முடியாமல் போய் விடுகின்றது பூண்டு வாசனை கொண்ட காபியால். பூண்டு புகழ் அறை நண்பனின் அம்மா இறந்த செய்தி கேட்டவுடன் ஆறுதல் தருகின்றார்.

(கறுப்புத் தோலும், கறுப்புத் தலைமைரும் நான் இந்திய நாட்டுக்காரன் என்பதை என் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. ஆனால் என் பெயரோ, கீழை நாட்டவர் என மேலை நாட்டவர் என இரு சாரார்க்கும் அடங்காத புதிராக இருந்தது.)

இதனாலதான் அ.மித்திரனின் ஒரிஜினல் பெயரான தியாகராஜனை ஜப்பான் நாட்டு கஜுகோ 'டகராஜனா'க்கிவிடுகின்றாள்.

5.இலாரியா: பன்மொழி வித்தகி இலாரியாவுடன் நட்பு பாராட்டுகின்றார். அவள் அறைக்கு வந்து மாக்ரோனி வேறு செய்து கொடுத்துவிட்டுப் போகின்றாள். தனது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு சுய பச்சாபத்துடன் அழுது கொண்டேயிருக்கும் இலாரியாவுக்குக் 'கட்டிப்புடி' வைத்தியம் செய்து ஆறுதல் சொல்கின்றார்.

6.வீழ்ச்சி: அயோவா சிட்டியில் உறைபனி பெய்த முதல் நாளிலேயே சறுக்கி விழுகின்றார். இதற்குப் அப்புறம் கே-மார்ட் ஷு (ஜோடுகள்) கதை ஒன்று பெரிதாக வருகின்றது. சுவாரசியமாக.

7. அந்த இன்னொரு பஸ் நிலையம்: போர்ட் காலின்ஸிலிருந்த்து பஸ் பிடித்து கிரீலிக்குச் செல்ல வேண்டும். அதிகாலையில் ஒரே ஒரு பஸ். ஆளும், அரவம், அசைவும் கிடையாத இடத்தில் வந்து காத்திருப்பது ஒரு சோதனைதான். பஸ்ஸுக்காகக் காத்திருந்து கடைசியில் பஸ் எனப்படும் ஒரு மினி லாரியில் ஏறி ஊருக்குச் செல்கிறார். அதுவரை நமக்கு, ஐயோ, பாவம் இந்த ஆளை விட்டுவிட்டுப் போயிடப் போறாங்களே", என்று தோன்றுகிறது உண்மைதான்.

8. கே-மார்ட் ஷூ: பனிக்காலத்திற்கென்று பிரத்யேகமாக கே-மார்டி சென்று ஜோடுகள்(ஷூக்கள்) வாங்குகின்றார். இந்த ஜோடுகளைப் போட்டுக் கொண்டு துடியாய்த் துடிக்கின்றார். இந்த அவதிப்படல்தான் ஒரு அத்தியாயம் எழுதும் அளவுக்கு. அப்புறம் பரம கஞ்சனான வெண்டூரா டைப் ரைட்டர் வாங்கி கஷ்டப்படும் படலமும் இங்கே வருகின்றது.

9. இப்போது நேரமில்லை: தனது ஆட்டோமேடிக் கடிகாரம் வேலை செய்வது நின்று விட்டதால் அமெரிக்காவில் அதனை ரிப்பேர் செய்ய முடியுமாவென்று பார்க்கும் அளவுக்கு அப்பாவி நம்ம அ.மி. இறுதியாக ஒரு கடைக்குச் சென்று 'பேனா கடிகாரம்" வாங்கி ஆச்சரியப்படுகின்றார். நான் கூட பி.யு.சி படிக்கும் போது ஒரு பேனா கடிகாரம் வாங்கி ஆனந்தப்பட்டது நினைவுக்கு வந்தது. அந்தப் பேனா கடிகாரத்தையும் தொலைத்து, பின்னர் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கின்றார்.

10. ஒற்றன்: "ஆஹா! எங்கே ஒற்றன்? எங்கே ஒற்றன்?" என்று நாம் தேடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பத்தாம் அத்தியாயத்தில்தான் ஒற்றன் வருகின்றான். அபே குபேக்னா என்ற எத்தியோப்பிய எழுத்தாளனின் விடா முயற்சியால் உருவான் நாவல்தான் ஒற்றன். இந்த மாதிரி அவே குபேக்னா என்று உண்மையாகவே ஒரு எழுத்தாளர் இருந்தாரா என்று கூகிளிட்டுப் பார்த்ததில், அது உண்மைதான் என்று தெரிய வருகின்றது. அவரது சில மேற்கோள்கள் புகழ் பெற்றவை என்றும் தெரிய வருகின்றது. அபே ரொம்பவும் சிரமப்பட்டு ஒரு சூட் தைக்கிறான். அதனை அணிந்த பின்பு மாசக்கணக்கில் கழட்டாமல், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அணிந்து கொண்டேயிருக்கின்றான். பல நாட்கள் பூட்டிய அறையினில் அஞ்ஞாத வாசம் போல இருந்து "ஒற்றன்" நாவலை முடிக்கின்றான். கஜுகோ, 'டகராஜன்' என்று அன்போடு அழைத்துப் பேசுவது அபேக்குப் பொறாமைத்தீயை மூட்டிவிட ஒருநாள் அ.மியை அடித்தே விடுகின்றான். ஒற்றன் என்ற தலைப்புக்குச் சொந்தமானவன் என்பதாலும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் அபே குபேக்னா ஒரு சுவையான மனிதாகத் தெரிகின்றான்.

11. மகா ஒற்றன்: அசோகமித்திரனின் வாழ்க்கையில் அபே குபேக்னா பிரவேசித்த அதே காலகட்டத்தில் வந்தவன்தான் பிராவோ. அவனைப்பற்றிக் கூறாமல் விடுவது நியாயமில்லை என்கிறார். குபேக்னா ஆப்பிரிக்கக் கண்டமென்றால், பிராவோ தென் அமெரிக்கக் கண்டம். இவன் நாவல் எழுது உத்தியே தனிதான். அசோகமித்திரனை அறைக்கு அழைத்து சென்று, ஒரு வரைபடம் போன்ற சார்ட் ஒன்றினைக் காட்டுகின்றான். இந்தச் சார்ட்தான் நாவலுக்கான டெம்ப்ளேட் போலும். பிராவோ அதனை விவரிக்கும் போது, நமக்கும் அதனைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற அடக்க முடியாத ஆவல் தோன்றுகின்றது. இந்த மாதிரி சார்ட் ஒன்று இருந்தால் நாமும் கூட நாவல் எழுத முயற்சித்துப் பார்க்கலாமே என்ற ஆசையும் எட்டிப் பார்கின்றது. பிராவோவின் நாவலின் தலைப்புதான் "மகா ஒற்றன்".

12. கண்ணாடி அறை: ஜிம் பார்க்கர் என்ற ஓவியனுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உளள சூசி வீட்டிற்கு செல்கிறார்கள். சூஸி வீட்டில் இருக்கும் விருந்தினர்களின் நடவடிக்கைகள் அசோகமித்திரனுக்கு ஆச்சரியம் ஏற்படுத்துகின்றது. திடீரென்று ஒரு இரவு சூஸியின் கணவன் அ.மிதான் சூஸியின் கள்ளக் காதலன் என்றெண்ணிச் சுட வருகின்றான். கண்ணாடி அறையினில் ஒளித்து வைக்கப்பட்டு காப்பாற்றப்படுகின்றார் அ.மி. (இனி இந்த நாட்டினில் இருக்கப் போகும் நான்கைந்து மாதங்களுக்கு எந்தப் பணக்காரக் குடிகாரனைப் பார்த்தாலும் அவன்தான் என்னைக் கொலை செய்யத் துடிக்கும் சூஸியின் கணவனோவென்று நடுங்கிக்கொண்டிருக்க வேண்டும்.)

13. அம்மாவின் பொய்கள்: அசோகமித்திரனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஞானக்கூத்தனின் "அம்மாவின் பொய்கள்" அவருக்குத் தெரியாமலேயே, விக்டோரியா குழுவினரால் நடித்துக் காட்டப்பட ஒரே ஆச்சரியம்.

14. ஏப்ரல் 27, 1974: பயிற்சிப் பட்டறையின் கடைசி நாள். ஒரு பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் போல இறுதி நாளில் பிரியும் சோகம் அனைவருக்கும். ஏன்? வபின்ஸ்கி, கஜுகோ போன்ற பலரையும் பிரியும் நமக்கும்தான்.

- சிமுலேஷன்

Thursday, December 17, 2009

அம்மையே அப்பா... ஒப்பிலா மணியே...

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!





ராகம்: தேஷ்

Saturday, December 12, 2009

இசை விழாவில் திருடர்கள்

சமீப காலங்களில், இசை விழா நடை பெறும் அரங்குகளில், ரசிகர்கள் இசையிலோ அல்லது நாட்டிய நிகழ்ச்சிகளிலோ தன்னை மறந்து முழ்கி இருக்கும் போது, சில விஷமிகள் அரங்கினுள் நுழைந்து, ரசிகர்களின் கைப்பை, செல் போன், காமிரா ஆகியவற்றினை ஆட்டையப் போட்டுவிடுகின்றார்களாம்.

எனவே நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனுமதி சீட்டு, அழைப்பிதழ் ஆகியவற்றை அரங்கினுள் நுழையும் போது சோதனை செய்யக் கேட்டுக் கொண்டால், அதனை சங்கடமாக நினைக்காமல், அமைப்பாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அதனைத் தங்களின் பாதுகாப்புக்காகவே செய்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீப காலங்களில், கலைஞர்கள், தங்களது ஒப்பனை அறையில், பல வித மதிப்பு மிக்க பொருட்களக் கோட்டை விட்டுள்ளதாகத் தெரிகின்றது. அரங்கினுள் பரிச்சயமில்லாத ஆடு திருடின கள்ளன் போன்ற முகங்கள் தெரிந்தால் உஷாராகவே இருக்கவும்.

இவ்வாறு நர்த்தகி.காமில் எழுதி ரசிகர்களுக்கும், கலஞர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் ஒரு சிறு கடிதம் எழுதியுள்ளார், மூத்த நாட்டியக் கலைஞர் வி.பி.தனஞ்செயன் அவர்கள்.

நிகழ்ச்சியின் நடுவே எழுந்து போபவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் சொல்கிறார். (தனியாவர்த்தனத்தின் போது யாரும் எழுந்து செல்லாமல் இருக்கவும், நிகழ்ச்சி முடியும் வரையிலும் அனைவரையும் உட்கார்த்தி வைக்கவும் உண்டான உத்தியோ?)

- சிமுலேஷன்

சாகேதராமன் - சிவகாமி பெத்தாச்சி அரங்கம் - ப்ரம்மகான சபா

நேற்று ப்ரும்மகான சபாவின் ஆதரவில் சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்ற லால்குடியின் சிஷ்யரும், விசாகா ஹரியின் சகோதரருமான சாகேதராமன் கச்சேரி குறித்த எனது பதிவு இந்த தனி வலையில்.

- சிமுலேஷன்

Tuesday, November 24, 2009

மறு ஒளிபரப்பு

ராகவனுக்கு படுக்க மணி பதினொன்று ஆகி விட்டது. மைதிலி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். தண்ணி குடித்து விட்டுப் படுக்கும் சமயம் செல் போன் அடித்தது. இந்த அகாலத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தார். விஜியிடமிருந்துதான் போன்.

"என்னம்மா? இந்த நேரத்திலே?"

"அப்பா; அம்மாவை ஒரு நிமிஷம் எழுப்புங்கோ."

"எதுக்கும்மா?"

"அப்ப்பா. கொஞ்சம் எழுப்புங்கோளேன்."

"மைதிலி; பாரு விஜி போன் பண்ணறா. எதோ ஒங்கிட்ட சொல்லணுமாம்"

"என்னடி விஜி; என்ன விஷயம்? எதுக்குப் போன் பண்னே?"

"அம்மா டி.வியை ஆன் பண்ணேன். தூர்தர்ஷ்ன் சானல் போடு"

"எதுக்கு?..."

"என்னடி இது? என்னோட டான்ஸ் வருது?..."

"ஆமாம்மா. இந்தக் குரங்கு டி.வி போட்டாத்தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சா. சேனல் மாத்திண்டே வரும்போது, திடீர்னு, "பாட்டி டான்ஸ், பாட்டி டான்ஸ்ன்னு" கத்த ஆரம்பிச்சுட்டா. சரின்னு உடனே ஒனக்குப் போன் பண்ணிச் சொல்லலாமேன்னுதான் பண்ணினேன்"

சமீபத்தில் எழுபதுகளில் தூர்தர்ஷனில் ஆடிய தனது டான்ஸை பார்த்துவிட்டு படுத்த மைதிலிக்குத் தூக்கம் வர வெகு நேரமாயிற்று.

- சிமுலேஷன்

வெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி

அந்தக் காலத்தில் உடம்பு ஜுரமாக இருந்தால், டாக்டர் சாமிக்கண்ணுவிடம் போவது பழக்கம். அவரிடம் போய் உட்கார்ந்தவுடன், "வெளிக்கி எப்படிப் போச்சு?" என்றெல்லாம் விபரமாக கேட்டுவிட்டு, மெஜரால் போன்ற மாத்திரைகள் கொடுப்பார். அதனைப் பொடி செய்து தேனில் குழைத்துத் தருவார் அம்மா. ஒரிரு நாட்களில் ஜுரம் சரியாகிவிடும். அதுவரை சாத்துக்குடி, ப்ரெட் என்று சற்று விசேஷக் கவனிப்பு நடக்கும். அதனால அப்பப்ப ஜுரம் வந்தால் கூட நன்றாக இருக்குமே என்று ஒரு நப்பாசை வரும்.

சாமிக்கண்ணு டாக்டரின் பையன் ஜெயசீலனுக்கும் கிட்டத்தட்ட எங்கள் வயசுதான். ஒரு முறை டாக்டர் வீட்டுக்குப் போயிருக்கும்போது அவருக்கு இரண்டாவதா ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிந்தோம். குழந்தையைக் காண எங்களுக்கு ரொம்ப ஆர்வம். ஜெயசீலனிடம், "தங்கச்சி பேர் என்ன?", என்று கேட்க, "வெக்கிலா" என்று சொன்னான். வித்தியாசமான பேராக இருக்கே என்று நினைத்த போது, என் அக்கா சொன்னாள். அவங்க எல்லாம் கிரிஸ்டியன்ஸ். இந்த மாதிரியெல்லாம் பேர் வெப்பாங்க என்றாள். நாங்களும் புரிந்து கொண்டு, அந்தப் பச்சைக் குழந்தை அருகே போய், "வெக்கிலா, வெக்கிலா, இங்க பாரு. வெக்கிலா சிரி" என்றெல்லாம் கொஞ்ச ஆரம்பித்தோம்.

அப்போது டாக்டரின் மனைவி வந்தார். அவர் சொன்னார், "அவளுக்கு இன்னமும் பேர் வெக்கலை. அடுத்த மாசம்தான் பேர் வெப்போம்." என்று. அப்போதுதான் உறைத்தது, அந்தப் பையன் தங்கச்சிக்குப் பேர் வெக்கிலை என்று சொல்லியிருக்கான் என்று.

- சிமுலேஷன்

Sunday, November 22, 2009

எம்.எஸ்.உதயமூர்த்தியும் தம்பிதுரையும்

80கள். சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. மேதினக் கூட்டம். சிறப்பு அழைப்பாளர்கள் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களும். எம்.எஸ்.உதயமூர்த்தி தனது உரையில் வழக்கம் போல் வாழ்க்கையின் வெற்றிக்கு உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை எப்படித் தேவை என்றும், எப்படி மக்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஊக்கம் தரும் உரை ஒன்றினை நிகழ்த்தினார்.

அடுத்து பேச வந்த தம்பிதுரை அவர்கள், "ஐயா சொன்னதை அப்படியே நம்ப வேண்டாம். எல்லாத்துக்கும் மேல தேவையானது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டத்தை நம்பணும். எனக்கு அந்த அதிர்ஷடம் இருந்தது. அதனாலதான் எங்கியோ இருந்த என்னை, இந்தியாவின் நாலாவது குடிமகனாக, எம்.ஜி.ஆர் உக்காத்தி வைச்சார்.", என்றார்.

- சிமுலேஷன்

ஆதித்யா-அனிருத்

ஆதித்யா- அம்மா, இவனைப் பாருங்கோ! என் கண்ணைக் குத்திட்டான்.

அம்மா - ஏண்டா அனிருத், அவன் கண்ணைக் குத்தினே?

அனிருத் - இல்ல அம்மா, கன்னத்லே அறையத்தான் போனேன்; நகந்துன்ட்டான்; அதனாலதான் கண்ணுலெ விரல் பட்டுருத்து.

--------------
அம்மா - அனிருத், அவன் உனக்கு அண்ணா. இனி மேல பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது. அண்ணான்னுதான் கூப்பிடணும், தெரியறதா?

அனிருத் - சரிம்மா.

ஆதித்யாவைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போய், "யேய். இனிமே நீயும் என்னைத் தம்பின்னுதான் கூப்பிடணும் தெரியுமா?

Saturday, November 21, 2009

பதிவர்களுக்கு மார்க் போட்டது யாரு?

க்ளாஸ்லே மொத்தம் நாப்பது பேரு! எல்லாரோட மார்க்கும் போட்டுருக்காங்க.

நம்மளோட மதிப்பெண்கள்

ஆங்கிலம் - 5
தமிழ் - 3
கணக்குக் - 0
விஞ்ஞானம் - 4
வரலாறு - 5
புவியியல் - 2
வணிகம் - 0
கணினி - 0
விளையாட்டு - 0

மொத்த மதிபெண்கள் - 19

ஒன்பது பேருக்கு மேல 54 மார்க் வாங்கி முதலிடம் பிடிக்கிறாங்க. ஆனா பத்து பேருக்கும் மேல ஒத்த இலக்க மதிபெண்கள்தான்தான்.

உங்களோட மார்க்கையும் பார்க்கணுமா? இங்கே போய்ப் பாருங்க.

http://spreadsheets.google.com/pub?key=poYMG16Cp6GAN3WCTwl72TQ&output=html&gid=0&single=true

Saturday, October 24, 2009

அக்கறை-100

தமிழ் வாசகர்களிடையே மிகவும் பிரபலமான "அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும்" வடிவமைத்தவரும், குமுதம் "அரசு" பதில்கள் தருபவரில் ஒருவருமான ஜ.ரா.சுந்தரேசன் என்ற பாக்யம் ராமஸ்வாமி "அக்கறை" என்ற குழுவினை நடத்தி வருகின்றார். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை, தனது அலுவலகத்தில் ஒத்த கருத்துடைய பத்திரிகையாளர், இதழாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஆன்மிக அன்பர்கள், சமூக சேவர்கர்கள் என பல்தரப்பட்ட மனிதர்களும் அளவளாவ ஏற்பாடு செய்துள்ளார். பாக்யம் ராமஸ்வாமியின் புதல்வர் (லோகேஷ் (?) இந்தக் கூட்டங்கள் அனைத்திற்கும் உறுதுணையாக உள்ளார்.

இந்தக் குழுவில் உள்ளவர்களில் சிலர், எழுத்தாளர்கள் ராணி மைந்தன், ஜே.எஸ்.ராகவன், அறந்தை மணியன், நகுபோலியன், இனியவன், லேனா தமிழ் வாணன், பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு-அகஸ்தியன்), திருப்பூர் கிருஷ்ணன், வாதூலன், தூர்தர்ஷன் நடராஜன், மானஸா (எஸ்.சந்திரமௌலி), விஸ்வபாலா (பாலா விஸ்வநாதன்), காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, சியாமளா சுவாமிநாதன், மெலட்டூர் நடராஜன், இசைக்கலைஞர்கள் கௌசல்யா சிவக்குமார், நகைச்சுவை நடிகர் எஸ்,வி.சேகர், நாடக நடிகர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி, பம்பாய் கண்ணன், திரைப்படத் தயாரிப்பாளர் கலைமாமணி எஸ்.எம்.உமர், மக்கள் தொடர்பு ஈ.வெ.ரா.மோகன் ஆகியோர்

நண்பர் மெலட்டூர் நடராஜன் அவர்களது அறிமுகத்தால் இந்தக் குழுவில் நானும் ஒரு அங்கமானேன். கூட்டங்களில் குழுவில் உள்ள அனைவரும் எந்தத் தலைப்பிலும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.

இந்த அக்கறை அமைப்பின் நூறாவது கூட்டமும் எட்டாவது ஆண்டு விழாவும், நேற்றைய தினம் (24.10.2009) காஸ்மாபோலிட்டன் க்ளப் பல்லவா ஹாலில் நடந்தது. பல் வேறு சுவையான நிகச்சிகள் நடைபெற்றன.

மங்களகரமான கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சியை துவக்கிய மாஸ்டர் "அஜீத்(?)"

"திரும்பிப் பார்க்கிறோம்" என்ற தலைப்பில் அக்கறையின் கடந்தகால கூட்டங்களை அசை போடுகிறார் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்யம் ராமஸ்வாமி)

நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவனும் திரும்பிப் பார்க்கின்றார்

ஜி.எஸ்.சுப்பிரமணியன் நடத்திய "செஞ்சுரி அடியுங்க" வினாடி வினா

"தமிழ்த் திரை - 100" என்ற தலைப்பிலே சுவையான வினாடி வினா நடத்திய அறந்தை மணியன்.

"தமிழ்த் திரை - 100" வினாடி வினாவில் பங்கு பெற்ற கூட்டத்தினர்

ஜி.எஸ்.சுப்பிரமணியன் நடத்திய மற்றுமொரு வேடிக்கை விளையாட்டு

பாக்யம் ராமஸ்வாமி எழுதிய "ஒரு கணவன்-ஒரு மனைவி -ஒருமுதுகு" என்ற நகைச்சுவை நாடகத்தை நடித்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியவர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி குழுவினர்.

எந்த ஒரு கூட்டத்தையும் காலத்தே முடிக்க அனவைரையும் பழக்கி, விழாவினைச் சுவையாகவும், விறுவிறுப்பாகவும் நடத்தி ஒரு மனதாக அனைவரது பாராட்டுதல்களையும் பெற்ற ராணி மைந்தன்

அக்கறை நண்பர்களுக்கு அளிக்கப்பட்ட அன்புப் பரிசு

விழாவின் சிறப்பு அம்சமான அக்கறை நண்பர்களின் முகவரி கையேடு.

ஒவ்வொரு உறுப்பினர்களின் புனை பெயர், ஆர்வம், முகவரி முதலான விவரங்கள நேர்த்தியாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதற்கான பாராட்டுதல்கள மீண்டும் பெறுபவர் ராணி மைந்தன்.

- சிமுலேஷன்

Wednesday, October 21, 2009