Tuesday, November 24, 2009

மறு ஒளிபரப்பு

ராகவனுக்கு படுக்க மணி பதினொன்று ஆகி விட்டது. மைதிலி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். தண்ணி குடித்து விட்டுப் படுக்கும் சமயம் செல் போன் அடித்தது. இந்த அகாலத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தார். விஜியிடமிருந்துதான் போன்.

"என்னம்மா? இந்த நேரத்திலே?"

"அப்பா; அம்மாவை ஒரு நிமிஷம் எழுப்புங்கோ."

"எதுக்கும்மா?"

"அப்ப்பா. கொஞ்சம் எழுப்புங்கோளேன்."

"மைதிலி; பாரு விஜி போன் பண்ணறா. எதோ ஒங்கிட்ட சொல்லணுமாம்"

"என்னடி விஜி; என்ன விஷயம்? எதுக்குப் போன் பண்னே?"

"அம்மா டி.வியை ஆன் பண்ணேன். தூர்தர்ஷ்ன் சானல் போடு"

"எதுக்கு?..."

"என்னடி இது? என்னோட டான்ஸ் வருது?..."

"ஆமாம்மா. இந்தக் குரங்கு டி.வி போட்டாத்தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சா. சேனல் மாத்திண்டே வரும்போது, திடீர்னு, "பாட்டி டான்ஸ், பாட்டி டான்ஸ்ன்னு" கத்த ஆரம்பிச்சுட்டா. சரின்னு உடனே ஒனக்குப் போன் பண்ணிச் சொல்லலாமேன்னுதான் பண்ணினேன்"

சமீபத்தில் எழுபதுகளில் தூர்தர்ஷனில் ஆடிய தனது டான்ஸை பார்த்துவிட்டு படுத்த மைதிலிக்குத் தூக்கம் வர வெகு நேரமாயிற்று.

- சிமுலேஷன்

0 comments: