Thursday, November 04, 2010

இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை

மற்ற எந்த இந்துப் பண்டிகைகளுக்கும் இல்லாத பல விசேஷங்கள் தீபாவளித் திருநாளுக்கு உண்டு. அவை என்னவென்றால்:

  • குழந்தைகளையும், பெரியவர்களையும் பரவசப்படுத்தும் பட்டாசுகளும், மத்தாப்புக்களும் தீபாவளிக்குப் பலநாடகள் முன்பிருந்தே வெடிக்கப்படும்.
  • நான்கைந்து நாட்கள் முன்பாகவே, இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்சணங்களும், பலகாரங்களும் செய்யப்படும். மற்ற பண்டிகைகள் போல பண்டிகை தினம் நைவேத்யம் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டுமென்ற கட்டாயம், தீபாவளிக்கு இல்லை. அடுப்படியிலிருந்து  அப்படியே சுடச்சுட எடுத்துச் சாப்பிடலாம்.
  • மற்ற பண்டிகைகளுக்கு புதுத் துணிமணிகள் எடுக்காவிட்டாலும், தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கியணிவது பலரின் வழக்கம்.
  • பல ஊர்களில் இருந்தாலும், தீபாவளியன்று குடும்பத்தினர் அனவரும் ஒன்று சேருவது  ஒரு குதூகலம்.
  • வீட்டிலுள்ள பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ தலைதீபாவளி என்றால் இரட்டிப்பு சந்தோஷம்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட தீபாவளித் திருநாள், மற்ற பண்டிகைகள் போல அல்லாமல் விடிய,விடிய கொண்டாடப்படும் பண்டிகை இது ஒன்றே.  தீபாவளியின் முதல் தினமும், மறுநாள் விடியற்காலையிலும், தீபாவளியன்ரின் இரவும் பெருத்த குதூகலத்துடன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களையொட்டி அமைந்துவிட்டால், இந்தக் கொண்டாட்டங்களை குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியும். அப்படியில்லாமல் வாரத்தின் மைய நாட்களில் வந்து விட்டால், உற்சாகம் சற்றே குறைந்து விடும். இதற்குப் பெரிய காரணம், வெளியூரில் இருக்கும் குடும்பத்தின் ஒரு அங்கத்தினருக்குக் கிடைக்கும் 'ஒரே ஒரு நாள்' விடுமுறையேயாகும். இந்த ஒரு நாள் விடுமுறையின் காரணமாக வெளியூரில் இரு்க்கும் நபர், தீபாவளியின் முதல் நாள் மட்டுமல்லாது, தீபாவளி தினத்தின் இரவிலும், அவர் ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்து கொண்டிருப்பார்.

இந்தியாவின் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் தீபாவளித் திருநாளைக்கு இரண்டி தினங்கள விடுமுறை அளித்தாலென்ன? உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்மஸ், தேங்ஸ் கிவ்விங் டே போன்ற பல முக்கிய தினங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்படுகின்றது. ஏன்? தமிழ்நாட்டிலேயே பொங்கல் திருநாளையொட்டி, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று தினங்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இவ்வாறு தீபாவளிக்கு ஒரு நாளைக்கும் மேல் விடுமுறை வேண்டும் என்று எனக்குத் தெரிந்து எந்த ஊடகத்திலும் கோரிக்கை வைக்கப்படவில்லை. இந்து அல்லாத Vincent Desouza of Mylapore Times மட்டுமே ஓரிரு வருடங்கள் முன்பு இது குறித்து மயிலாப்பூர் டைம்ஸில் கட்டுரை எழுதியதாக நினைவு.  இந்த இடுகை எழுதும் முன்னர் சற்றே கூகிள் செய்தபோது, முஸ்லிம்கள் பெரிதும் வாழும் மலேசியா நாட்டில்கூட தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக அறிந்துகொள்ள முடிகின்றது.


நாத்திகம் பேசும் நண்பர்கள்கூட தனது மனைவி வீட்டாருகாகவும், தமது குழந்தைகளின் குதூகலத்திற்காகவும், தமது கொள்கைகளத் தியாகம் செய்துகொண்டு தீபாவளித் திருநாளைக் குதூகலத்துடன் கொண்டாடி வரும் இந்த நாட்களில், "இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை" என்ற கோஷம் தவறாக ஒலிக்கவில்லை.


- சிமுலேஷன்