Sunday, June 13, 2010

மேஜிக் செய்வது எப்படி?

என அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டியை இழுத்துக் கட்ட பச்சைப் பட்டை பெல்ட். ஆனால், எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இப்படிப்பட்ட மனிதரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம். இது எப்படி முடிந்தது? கூட்டத்தைக் கூட்ட மேஜிக், கீஜிக் ஏதாவது பண்ணினாரா? ஆமாம். மேஜிக்தான் பண்ணினார். பண்ணினது மட்டுமல்லாது அந்த மேஜிக்குகளை அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். அதனாலே அவர் மேலே எனக்குப் பெரிய அபிமானம். நானும் கைக்குள் காசை மறைய வைத்தல், கத்தியின்றி, சத்தமின்றி வாழைப் பழத்தினை வெட்டுதல், சீட்டுக் கட்டினில் எதிராளி எடுத்த சீட்டினைக் கண்டுபிடித்தல் பொன்ற எளிய மேஜிக்குகளையெலாம் கற்றுத் தேர்ந்து, உறவினர்கள் முன்னிலையில் அவர்களது கவனத்த ஈர்க்க முடிந்தது.

சிறிய வயதிலேயே மேஜிக் கற்றுக் கொண்டதற்குப் பலன்கள் பல இருந்தன. முடிந்த வரை எந்த ஒரு விஷயத்தையும் அறிவியல் பூர்வமாக அணுக முடிந்தது. குறிப்பாக சித்து விளையாட்டுகள் செய்து, மக்களை மந்தையாடுகளாக்கும் பாபாக்களை நம்ப மனம் மறுத்தது. அவர்களும் பி.சி.சர்க்கார் அல்லது பாக்யநாத் போன்று மேஜிக் கற்றுத் தேர்ந்து அதனை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்துவர்கள்தான் என்பது புரிந்தது.

மேஜிக்குகள் மேடையிலே செய்யப்படும் ஸ்டேஜ் மேஜிக், தெருக்களில் செய்யப்படும் ஸ்ட்ரீட் மேஜிக் என்று பல வகைகள் இருந்தாலும், நம் நாட்டிலே இவற்றையெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைகளிலே அடக்கி விடலாம். சீட்டுக் கட்டில் எதிராளி எடுத்த சீட்டினைப் பார்க்காமலே சொல்லுதல், கர்ச்சீப்பினிலிருந்து பூக்களையோ அல்லது புறாவையோ வரவழைத்தல், பெண்ணை படுக்க வைத்து பவர்ஸா கொண்டு அறுத்தல் போன்றவை இந்தச் சில வகைகள்.

சென்னையிலே மேஜிக் ஜேம்ஸ் என்ற பெயரைப் பல சுவர்களில் பார்க்கலாம். எனது பையனுக்கு இவர் பெயரைக் கேட்டாலே அலர்ஜி. ஆமாம் இருக்காதா பின்னே? பார்வையாளர்கள் மத்தியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தவனை மேடைக்கு அழைத்தவுடன், பரவசமாக ஓடியவனின் காற்சட்டை முன்னால் புனலை வைத்து, பார்வையாளர்கள் முன்னிலையில் உச்சா போவது போன்ற தோற்றமயக்கத்தினை ஏற்படுத்தியவர். அதுவும் ஒரு முறையல்ல, இரண்டு, மூன்று முறை. ஒவ்வொரு முறையும் ஆர்வக் கோளாறால் மேடை ஏறிப் பின்னர் முகம் சிவந்து திரும்பி வருவான்.

முன்பெல்லாம் இந்த மேஜிக் கலையினை யார் கற்றுத் தருவார்கள் என்பதே தெரியாது. நான் சிறுவனாக இருக்கும் போது "நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில்" வாங்கிய "மேஜிக் செய்வது எப்படி" என்ற புத்தகத்தில் செய்முறைகள் எல்லாம் ரொம்பவும் கரடு முரடாகக் கூறப்பட்டிருக்கும். "குன்றிமணித் தோலுடன், கண்டங்கத்திரிப் பூவும், வெள்ளைத் தாமரைத் தண்ணீரும், சீம்பாலும் விட்டரைத்து, அமாவாசையன்று வெயிலில் காயவைத்துப் பொடியாக்கி மீண்டும் வஸ்திரகாயம் செய்து கிடக்கும் பொடியினை பாதங்களில் பூசிக் கொண்டால், தண்ணிரின் மேல் நடக்க முடியும்." போன்ற விளக்கங்கள் கொஞ்சம் பயமுறுத்தும். நான் வசித்து வந்த மேட்டுப்பாளையத்தில் குன்றிமணி, வெள்ளைத் தாமரை இன்ன பிற சமாச்சாரங்கள் கிடைத்தாலும், அங்கு ஓடி வரும் பவானியாறு ஒரு கூழாங்கற்கள் அடங்கிய ஒரு காட்டாறு என்பதனால் தாண்ணீரின் மேல் நடக்கும் முயற்சி ஏதும் செய்து பார்க்கவில்லை. அதைப் போலவே, “செவ்வாழை மரத்தினுள் இரும்புக் கடப்பாரையை செருகி வைத்து 21ஆம் நாள் எடுத்துக் கடித்துச் சாப்பிட இயலும்”, போன்ற மேஜிக் குறிப்புகளையும் ஒரு போதும் செய்து பார்க்க மனம் வரவில்லை..

தற்போது சென்னை போன்ற இடங்களில் மேஜிக் கற்றுக் கொள்வது எளிதாக உள்ளது. போதாதென்றால், "மேஜிக் செய்வது எப்படி?" என்பதனை கண்ணொளி வடிவில் யூ-ட்யூப் போன்ற தளங்களில் எளிதாகப் பார்த்துப் புரிந்துகொள்ள முடிகின்றது.. இருபத்து நாலு மணி நேரமும் கம்ப்யூட்டரோ அல்லது டி.வியோ கதியென்று இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு மேஜிக் கலையினைக் கற்றுக் கொடுங்கள். அப்புறம் அவர்கள் ஆளுமையில் ஏற்படும் மாற்றஙளைப் பாருங்கள். கண்டிப்பாகக் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில், சில பலன்களாவது நிறைவேறும்.

* அறிவியல் உண்மைகள் பலவற்றில் அனுபவபூர்வமாக அறியும் வாய்ப்பு.

* சித்து விளையாட்டுக்கள் விளையாடும் போலிச் சாமியார்கள் பின்னால், மூளையை அடகு வைத்துப் போகாமல் இருத்தல்.

* கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும், தகவல் பறிமாற்றத்தில் முன்னேற்றம்.

* கூர்ந்து கவனிக்கும் மற்றும் உற்று நோக்கும் திறனை வளர்த்தல்.

* குடும்ப அங்கத்தினர்களோ, நெருங்கிய நண்பர்களோ கூடியிருக்கும் வேளையில் பொழுதினை இனிமையாகப் போகுதல்.

பதிவர்களே, மேஜிக் குறித்த உங்கள் அனுபவங்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- சிமுலேஷன்

வணக்கம், வந்தனம், நமோஸ்கார்

அன்புப் பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னையும் ஒரு நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுத்த  தமிழ்மணம் நிர்வாகதிற்கு முதற்கண் எனது நன்றிகள். இந்த நட்சத்திர வாரம் ஒரு நல்ல அனுபவம் கிட்டும் என்று மனதார நம்புகின்றேன்.


இந்த வாரத்தில் அலுவலகத்தில் ஆணி புடுங்கும் வேலை அதிகம் இருந்தாலும், நள்ளிரவிலும் முழித்துக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் பதிவிட்டு உங்களையெல்லாம் மகிழ்விக்கத் தயராக உள்ளேன்.

ஓகே. ஸ்டார்ட் மீசிக்.

- சிமுலேஷன்