Saturday, January 28, 2006

சுட்ட அப்பளம்

A47ல் வந்து அடையாறு ஸிக்னலில் இறங்கி பத்து நிமிடமாக நடந்து வந்து கொண்டிருக்கிறேன். இன்னமும் வீடு வந்து சேரவில்லை. மற்ற பஸ்களில் ஏறினால் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள நிறுத்தத்தில் இறங்கலாம். இருந்தாலும், குறைந்த இடங்களிலேயே இந்தப் பஸ் நிற்பதனால் அண்ணாநகரிலில் நான் வேலை செய்யும் வங்கியிலிருந்து வீட்டிற்கு அரை மணியில் வந்து சேர முடிகின்றது.

நான் குடியிருக்கும் நேருநகர் 3ஆம் தெரு முனையில் இருக்கும் காலி மனையினைத் தாண்டி வரும் போது இன்றும் அந்த வாசனை அடித்தது. வாசனை என்று சொல்லலாமா? இல்லை. நாற்றம் என்றே சொல்லலாமா? எதோ ஒன்று. அப்பளம் சுடும் போது வருமே, அதே வாசனைதான். இப்போதெல்லாம் வீட்டில் அப்பளம், வடாம் செய்வதேயில்ல. அண்ணாவுக்கு கொலஸ்ட்ரால் என்று சொல்லி எண்ணெய்ச் செலவையும் கட்டுப்படுத்திவிட்டோம். சின்ன வயதில் அம்மா அடிக்கடி அப்பளம் பொரிப்பாள். சுடுவாள். அப்போது கூட எதுவும் தோன்றியதில்லை.

ஆனால், ஒரு வாரம் முன்பு, இதே வழியாக, சந்துருவுடன் நடந்து வரும் போது அவன் சொன்னது இந்த வழியில் வரும் ஒவ்வொரு முறையும் நினவுக்கு வருகின்றது.

"இந்த இடத்தில் பாம்புகள் நிறைய உள்ளன. அதனால்தான் இந்த வாசனை" என்றான் சந்துரு.

"அப்படியா! நான் கேள்விப்பட்டதே இல்லை. அப்கோர்ஸ் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் குவார்ட்டர்ஸ் பக்கம். அங்கேயெல்லாம் நாங்கள் பாம்பே பார்த்ததில்லை."

"நம்ம ஏரியாவிலே கூட இத்தனை நாளே இல்லை. இப்பத்தான் கொஞ்ச நாளா."

"சந்துரு, நாம யாராவது ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து இந்தப் புதரையெல்லாம் வெட்டிப் பாம்பை அடிச்சா என்ன?"

"நமக்கெதுக்கு இந்த வேலையெல்லாம். வேகன்ட் லான்ட் ஓனர், ட்ரெஸ் பாஸிங்னு சொல்லிக் கேஸ் போட்டுட்டான்னா; இரண்டாவது நாம வம்புக்குப் போகாத வரைக்கும் பாம்பு நம்மை ஒண்ணும் பண்ணாது. நாமளா வெணும்னே அதை அடிச்சா பாவம். அந்தப் பாவம் நம்மளோட போகாது. தலைமுறை, தலைமுறையா வருமாம்."

"இருந்தாலும் இந்தத் தெருவிலே எத்தனை குழந்தைங்க இங்கெல்லாம் வந்து விளையாடறாங்க. கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லையே!"

"கல்யாண். எனக்குத் தெரிஞ்சு ஆறு மாசமா இங்கே பாம்புகள் இருக்கு. இத்தனை நாள் இல்லாம இன்னிக்கி ஒண்ணும் ஆகாது. சும்மா கண்டதுக்கெல்லாம் பயப்படாதே."

சந்துருவின் வார்த்தைகளால் தற்காலிகமாக சமாதானம் ஏற்பட்டாலும், ஒவ்வொரு முறை இந்தத் தெருவைக் கடக்கும் போதும், ஒவ்வொரு முறை இந்த வாசனை வரும் போதும் எனக்கு மனக்கலக்கம் ஏற்படும்.

இன்று ஏதெனும் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். பொதுவாகவே, தெருவிளக்கு எரியவில்லை என்றாலோ, சாக்கடை அடைத்துக் கொண்டு விட்டது என்றாலோ, புகார் கொடுக்கக் கூடிய முதல் பொது சேவகனாக எங்கள் தெருவில் இருந்து வந்தேன். இந்தப் பாம்பு விவகாரத்தில், யாரிடம் போய், என்ன புகார் கொடுப்பது என்று தெரியவில்லை. பாம்பைக் கொல்வது வேறு தலைமுறை பாவம் என்று சந்துரு சொன்னதும் நினவுக்கு வந்தது.

என்னதான் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். இறுதியாக ஒரு யோசனை தோன்றியது. பாம்புப் பண்ணைக்குத் தொடர்பு கொண்டால் என்ன. அவர்கள் ஆட்களை அனுப்பி பிடித்துச் செல்வார்கள் அல்லவா என்று தோன்றியது. நாளை ஆபீஸிலிருந்து போன் செய்து விட வேண்டும். அப்படியே அவர்கள் ஒத்துக் கொண்டாலும், வந்து பிடித்துச் செல்லும் வரை பாதுகாப்பாக இருக்க என்ன செய்வது?

"நாய்கள் ஜாக்கிரதை" என்ற போர்டுகள் பார்த்திருப்பீர்கள். அதைப் போல "பாம்புகள் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்தால் என்ன? என்று தோன்றியது. சனிக்கிழமை காலை ஓய்வாக இருக்கும் போது "பாம்புகள் ஜாக்கிரதை" என்று ஒரு பெரிய அட்டையில் எழுதி, அந்த மனைக்கு அருகே உள்ள விளக்குக் கம்பத்தில் மாட்டி விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

வெள்ளிக் கிழமை மாலையின் சந்தடிகளை மீறி, அடையாறுக்குள் நுழைய மணி ஆறாகி விட்டது.

தெருவில் நுழையும்போதே மௌனமான பரபரப்பு ஒன்று தென்பட்டது. எதிரில் கணேசன் ஸ்கூட்டரில் வந்த்தார். என்னைப் பார்த்தவுடனே வேகத்தைக் குறைத்தார்.

"என்ன சார் கூட்டம்? ஏதாவது விசேஷம்?"

"அந்தக் கோரத்தை ஏன் சார் கேக்கறீங்க. நம்ம ப்ளாட்டுக்கு எதிரிலே இருக்கும் ஒர் சின்ன வீடு.

அங்கே புதுசா குடி வந்தாரே எலெட்ரிசிடி போர்டு ஏ.இ. அவரோட பொண்ணு தவறிடுச்சு"

"யாரு ரம்யாவா?"

"இல்ல சார். லதான்னுட்டு ஒரு சின்னக் குழந்தை. நாலு வயசிருக்கும். லதாக்குட்டின்னு சொல்வாங்களே. பாவம். மூணு மணிக்கு சைக்கிள் விளையாடிக்கிட்டே வந்துருக்கு போல இருக்கு. திடீர்னு ரோட்ல மய்க்கமா கிடக்கான்னனு பசங்க வந்து சொன்னாங்க. நம்ம செக்ரட்டரி, வாட்ச்மேன் எல்லோரும் ஒடிப் போய்ப் பார்த்தாங்க. அதுக்குள்ளே உடம்பு நீலமா மாறி, வாயிலே நுரை தள்ளிருச்சு. கட்டு விரியனோ. நல்ல பாம்போ தீண்டியிருக்கு போல இருக்கு. வி.எச்.எஸ்ஸ¤க்குத் தூக்கிட்டுப் போனாங்க. ஒண்ணும் பிரயோசனம் இல்லை. அப்படியே கே.கே.நகருக்குப் பாடியை அவங்க தாத்தா வீட்டுக்கு எடுத்திட்டுப் போயிட்டாங்க. விதி பாருங்க. எப்படி வருது."

"சரி வர்றேன் சார். பையனை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வரணும்"

நான் எதனைத் தடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அது நடந்தே விட்டது.

அபார்ட்மென்டில் நுழைந்த்தவுடன் ஒவ்வொருவரும் சோகமாய் தங்கள் அனுதாபங்களையும், அனுபவங்களையும் பறிமாறிக் கொண்டார்கள். எங்கள் வீட்டிலும் ஒரே அமைதிதான். டி.வி கூட ய¡ரும் போடவில்லை. இதே எண்ணங்களே நினைவுக்கு வரும் என்பதால், ஒன்பது மணிக்கே சீக்கிரமாய்ச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கையை விரித்தோம்.

அஞ்சு நிமிஷம் கூட ஆகியிருக்காது. காலிங் பெல் அடித்தது. வியூ பைண்டரில் எட்டிப் பார்த்தேன். விஜியும், அத்திம்பேரும் தெரிந்த்தனர்.

கதவைத் திறந்து, "வாங்கோ அத்திம்பேர்", என்றேன். களைப்பாய் நுழைந்தனர் இருவரும்.

"மாப்ளை வாங்கோ! என்னடி திடீர்னு" என்றாள் அம்மா.

"இல்லம்மா. மஹாபலிபுரம் போயிட்டு வர்றோம். நேரமாய்டுத்து. இங்கே தங்கிட்டு, கார்த்தால ஆத்துக்கு வர்றோம்னு போன் பண்ணிட்டோம்."

படுக்கைகள் மூலையில் ஒதுக்கப்ட்டன. அத்திம்பேருக்கு ஈஸிசேரைப் போட்டுவிட்டு, வேஷ்டி எடுத்துத் தர உள்ளே சென்றேன்.

"சாம்பார் கொஞ்சமா இருக்கு; நிமிஷத்லே அதைப் பெருக்கிடறேன். உருளக் கிழங்குக்கறியும் ஒடனே பண்ணிடறேன்."

"சாம்பார் இது போதும்மா. கறிகிறியெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஒரு நாலு அப்பளத்தச் சுட்டுப் போடு. எங்களுக்கு ஒண்ணும் அவ்வளாப் பசியில்லே." என்றாள் விஜி.

எங்கள் ப்ளாட்டில் பால்கனி பின்புறம். பால்கனிக்குச் சென்றாள் அம்மா. பக்கத்து வீட்டு சாந்தா மாமியிடம், பால்கனி வழியாகவே கிசுகிசுத்தார். பின்னர் புடவைத் தலைப்பில் என்னவோ மறைத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார்.

என்னவாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, அத்திம்பேரிடம் வேஷ்டியை நீட்டினேன்.

சில நிடங்களில் சமையலறையிலிருந்து, அப்பளம் சுடும் வாசனை வரத் தொடங்கியது.

-------000-------

- (சிமுலேஷன்)

Monday, January 23, 2006

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு.......

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு நெனைச்சிக்கோ..

ஓ.கே.

அந்த நம்பரை இரண்டாலே பெருக்கு.

உம்.

இப்போ வந்த விடையுடன் இரண்டைக் கூட்டு.

சரி.

இப்ப அஞ்சாலே பெருக்கு..

அப்புறம்.

வந்த விடையுடன் அஞ்சைக் கூட்டு.

பிறகு.

அதனை பத்தாலே பெருக்கு.

சரி.

வந்த விடையுடன் பத்தைக் கூட்டு.

அப்புறம்..

கடைசியா ஒரு விடை வந்ததல்லவா?

ஆமாம்.

அந்த விடையயும் மனசுக்குள்ளே வச்சுக்கோ. வர்றட்டா.. எல்லாம் சும்மா டைம் பாஸ¤க்குத்தான்.

Sunday, January 22, 2006

தமிழிசை

சுமார் பத்துப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன். குடும்பத்துடன் பழனி சென்றிருந்தோம். இரவு நேரத்தில் சுவாமி தரிசனம். சுவாமியைப் பள்ளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி. அப்போது யாரோயொருவர் வந்து என் அப்பாவிடம்,."நீ£ங்களும் கலந்து கொள்ள வருகின்றீர்களா?" என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். குடும்பத்துடன் அனவரும் சுவாமியின் பின்னே உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒர் ஓதுவார் காம்போதியில் ஒர் விருத்தம் பாடினார் பாருங்கள். 'மடையில் வாழை பாய' என்று நினைக்கிறேன். அந்த இரவில் சுருதி சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் காதில் வந்து விழுந்த காம்போதியை இன்னமும் மறக்க முடியவில்லை. அதுவே தமிழிசை பற்றிய எனது முதல் அனுபவம். அதன்பின் எத்தனையோ தமிழ்ப் பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் கவர்ந்துள்ளன. மனதைக் கவர்ந்த தமிழிசையை பதிவு செய்யும் எண்ணத்திலேதான் இந்தக் கட்டுரை. தமிழிசை என்று நான் சொன்னலும், அது தமிழிசைக் கச்சேரியைப் பற்றியே பெருமளவு இருக்கும். நான் ஒர் இசைவாணன்(musician) அல்ல; ஒர் இசை பற்றிய விபரங்கள் (musicology) அறியும் ஓர் ஆர்வலன் மட்டுமே. அந்தக் கோணத்திலேயே இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளேன்.

தொல்காப்பியர், சீத்தலைச்சாத்தனார், இளங்கோவடிகள், காரைக்காலம்மையார், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், அகத்தியர், திருமூலர் உள்ளிட்ட பதினெண் சித்தர்கள், பட்டினத்தார், ஆண்டாள் உள்ளிட்ட பனிரெண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், அருணகிரி நாதர், குமரகுருபரர், தாயுமானவர், முத்துதாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர், கவி குஞ்சர பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், மாயூரம் வேத நாயகம் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க அடிகளார், சுப்பிரமணிய பாரதியார், பாரதி தாசன், ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், இலட்சுமணப் பிள்ளை, பொன்னையா பிள்ளை, பாபனாசம் சிவன், தண்டபாணி தேசிகர், பெரியசாமித் தூரன் போன்ற எண்ணற்ற மாமனிதர்கள் தமிழிசைக்கு தங்கள் பங்கை ஆற்றியிருக்கிறார்கள். இருந்த போதும், வெகு காலத்திற்கு முந்தியவை என்பதாலும், மெட்டுப் போடாத காரணத்தாலும், போட்ட மெட்டைப் பரப்பப் போதிய சீடர்கள் இல்லாத காரணத்தாலும், ஏற்கெனவே சில பாடல்கள் மேடையிலே தமக்கென்று ஒர் இடத்தை பெற்றுவிட்ட காரணத்தாலும், மேலே குறிப்பிட்ட இந்த அருந்தமிழர்களின் பாடல்கள் அனைத்துமே, மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெறவில்லை.

"தமிழிசை பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களைக் கவர்கிறது; ஏன்?' என்று கேட்டால் விடை எளிது. மொழி புரிகின்றது. பொருள் புரிகின்றது. எனவே பாடலின் பொருளுடன் ஒன்றிப் பாடலை இரசிக்க முடிகின்றது. மொழி புரிகின்றது என்று சொன்னவுடனே, பாடல்களின் வரிகள் எளிமையானவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று புரிகின்றது அல்லவா? வரிகள் மட்டும் எளிமையாக இருந்தால் போதுமா? மெட்டும் மனதைக் கவர வேண்டுமல்லவா? இவையனைத்தும் கொண்டு தனது பாடல்களால், தமிழிசையுலகை ஆண்டவர்களில் பெரும்பங்கு வகித்தவர், தமிழ்த் தியாகைய்யர் என்றழைக்கப்பட்ட பாபனாசம் சிவன் அவர்கள்தான். அவரது பல்வேறு பாடல்கள் எல்லொரையும் கவர்ந்தவை. அவரது பெயர் பெற்ற சில பாடல்கள் வருமாறு:-

கருணாநிதியே தாயே - பௌளி
நம்பிக் கெட்டவர் எவரெய்யா - ஹிந்தோளம்
தேவி நீயே துணை - கீரவாணி
என்ன தவம் செய்தனை - காபி
பதுமநாபன் மருகா - நாகஸ்வராவளி
கா வா வா கந்தா வா வா - வராளி
நானொரு விளையாட்டு பொம்மையா - நவரஸகன்னடா
காபாலி, கருணை நிலவு பொழி - மோகனம்
கற்பகமே, கண் பாராய் - மத்யமாவதி

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மோகனத்தில் அமைந்துள்ள 'காபாலி, கருணை நிலவு பொழி' யாகும். இது வரை கேட்காதவர்கள் இதனைக் கேட்டுப் பார்க்க வேண்டும். சரணத்தில், சந்தத்துடன் மயிலைநாதன் பல்லக்கில் பவனி வரும் காட்சியை கண்முன்னே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார் பாருங்கள். சொல்லழகிலும், பொருளழகிலும் சிறந்த பாடல் இது என்றால் மிகையாகாது. அடுத்தபடியாக, 'என்ன தவம் செய்தனை' என்ற பாடல். இந்தப் பாடலைக் கேட்ட யாராவது அந்தக் குட்டிக் கண்ணனை மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாராமல் இருந்ததுண்டா?

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்கள் தமிழ்ப்பாடல்கள் பல இயற்றி மக்கள் மனதைக் கவர்ந்தவர். கானடா இராகத்தில், 'அலை பாயுதே கண்ணா', சிம்மேந்திரமத்யமத்தில், 'அசைந்தாடும் மயிலொன்று காண' மற்றும் மத்யமாவதியில்,' ஆடாது அசங்காது வா கண்ணா' போன்ற பலரும் விரும்பும் பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்தப் பாடல்களில் எதனைக் கச்சேரியில் பாடினாலும், இரசிகர்கள் உற்சாகத்துடன் எழுந்து கேட்பது நிச்சயம்.

அடுத்தபடியாக மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெற்று மக்கள் மனதைக் கவர்ந்த பாடல்களென்றால் அவை பெரியசாமித்தூரன் அவர்களது பாடல்களாகும். ஸாவேரியில் 'முருகா, முருகா', ப்ருந்தாவன ஸாரங்காவில், 'கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்' ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவையாகும். கேட்கக் கேட்கத் திகட்டாதவையாகும். பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் உடனுறை தேவியாம் திரிபுரசுந்தரி மேல் பாடப்பெற்ற, சுத்தஸாவேரியில் அமைந்த, 'தாயே திரிபுர சுந்தரி', பெரியசாமித்தூரன் அவர்களின் ஒரு அழகான பாடலாகும். இந்தப் பாடலை இந்த ஆலயத்திலேயே, யாரேனும் பாடக் கேட்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சியாகும்.

இராஜாஜியின் 'குறை ஒன்றுமில்லை; மறை மூர்த்தி கண்ணா', தற்காலத்தில் அனைவரும் விரும்பும் ஒரு பாடலாகும். ஆண்டவனை வேண்டும்போது, எதுவும் கேட்கத் தேவையில்லை; குறையொன்றுமில்லை என்று மனமுருக வேண்டினால் மட்டும் போதும் என்ற கருத்தே இங்கு அனவரையும் பெரிதும் கவர்கின்றது.

சேதுமாதவராவ் என்பார் 'சாந்தி நிலவ வேண்டும்" என்ற பாடலை இயற்றி, டி.கே.பட்டம்மாள் அவர்களை பாடுமாறு வேண்டிய போது, அவர்கள்தம் குரலிலே வந்த இந்தப் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்னெவென்று யாரேனும் யோசித்ததுண்டா? வார்த்தைகளின் எளிமையும், மெட்டின் கவர்ச்சியும், திலங் இராகத்தின் இனிமையும் சேர்ந்த ஒர் அரு¨மான சேர்க்கையே, வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகின்றது.

நீங்கள் நினைக்கலாம். ஏன் புகழ் பெற்ற கவிஞர்களது பாடல்கள், இசைக் கச்சேரிகளிலே பிரபலம் அடையவில்லையென்று. ஏனென்றால் அவர்கள் கவிஞர்கள்; அவர்கள் எழுதியவை கவிதைகள் மட்டுமே. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதைகளிலேயே எத்தனையோ வகைகள் உண்டு. பொருளை இரசிப்பதற்காக சில; உணர்ச்சியைத் தூண்ட சில; சந்தத்தை இரசிப்பதற்காக சில. எனவேதான், பாடலாக்கும் எண்ணத்தில் இயற்றப்படாத எந்தக் கவிதையையும் எளிதில் பாடலாக்க முடிவதில்லை.

பாடல்களில் பிரபலமானவை என்று எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் வாக்கியேயக்காரக்கள் எனப்படும் 'பாடலும் எழுதி, அதனைப் பாடவும் தெரிந்த' பாடகர்கள் எழுதிய பாடல்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் பாடலை எப்படிப் பாடினால் நன்றாக இருக்கும் என்றறிந்து அதற்குத் தக்கவாறு மெட்டமைத்திருப்பார்கள். ஆனால் கவிஞர்களுக்கோ அல்லது புலவர்களுக்கோ, இசை குறித்த அறிவு இல்லாமலிருந்திருப்பின், அதனைப் பாடல் எனப்படும் ஸாஹித்யமாக மாற்றத் தெரிந்திருக்காது. மற்றபடி இசை தெரிந்தவர்கள் அதற்கு மெட்டுப் போட்டுப் பிரபலப்படுத்துவது என்பது முடியும். ஆனால் கடின உழைப்பின் மூலம் நல்லதோர் மெட்டுப் போட்டு, புகழ் வாய்ந்த பிரபலம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலமே இது சாத்தியமாகக் கூடும். அவ்வாறு செய்யாமல், ஏன் இந்தக் கவிஞரது பாடலை (கவிதையை!) கச்சேரிகளில் பாடுவதில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதால் பலன் ஏதும் கிட்டாது.

அரியக்குடி இராமானுஜையங்கார் அவர்களே, கச்சசேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர் என்பது சங்கீத விபரங்கள் தெரிந்த அனவரும் அறிந்தவொன்றே. பலரும் தனிப்பாடல்கள் போல பாடி வந்த காலத்தில், அவரே, முதலில் வர்ணம், பிறகு கிருதிகள், இறுதியில் தில்லானா போன்ற ஒர் ஒழுங்குடன் பாடினால் கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்று கண்டுபிடித்து கச்சேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர். எனவே, தமிழில் பாடினாலும், இந்த வரிசையில் பாடினால் மட்டுமே நன்றாக இருக்கும். இது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கேட்க வருபர்களுக்கு 'வெரைட்டி' என்று சொல்லப்படும், ஒர் கலவை தேவை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். அது தமிழிசையாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த இசையாக இருந்தாலும் சரி.

சரி. இறுதியாகத் தமிழிசை வளர வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்னெவெண்று பார்க்கலாம்.

இசை நிகழ்ச்சி கேட்பவர்கள் செய்ய வேண்டியது:-
---------------------------------------------------------------
இசை (music) என்பது ஒர் கலை (art); கர்னாடக இசை மேடைக் கச்சேரி (concert) என்பது ஒர் நுண்கலை (fine-art). முதலாவதை எல்லோராலும் இரசிக்க முடியும். இரண்டாவதனை ஒரளவு விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இரசிக்க முடியும். இசைக் கச்சேரிகளில் ஆலாபனை, ஸ்வரப்ரயோகங்கள், நிரவல் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன். இவற்றையெல்லாம் இரசிக்க வேண்டுமென்றால், இரசிகர்கள் முதலில் தங்களது கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையார்வமுள்ள எவருக்கும் இது முடியும். ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும் போதும், அன்னியப்பட்டுப் போகாமல் புதியதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும்.

தமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். தமிழில் பாடினாலும், 'எது ஸ¤ரமாக ஒலிக்கிறது' என்றும் 'எது அபஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் காது கண்டு பிடிக்க, இந்தக் கேள்வி ஞானம் மிகவும் அவசியமாகும்.

தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்.

கேட்ட இசையினை, ஒத்த இரசனையுடைய நண்பர்களுடன் விவாதித்து குறிப்பிட்ட பாடலின் அழகை இரசிக்க வேண்டும். மேலும் பத்திரிகைகளிலும் வரும் சங்கீத விமர்சனங்களயும் படிக்க வேண்டும்.

தமிழிசை என்றாலும் தனக்கு எது தேவை என்று தெரிந்து அந்த சபை (forum) சென்று இரசிக்க வேண்டும். உதாரணமாக, திருப்புகழ் சபைதனிலே சென்று, கீர்த்தனைகள் தேடக் கூடாது. தேவாரம் ஓதப்படும் இடத்தில், பாசுரங்களை எதிர்பார்க்கக் கூடாது. பாடகர் அவர் கற்று வந்து கொடுக்கும் இசைக் கச்சேரிகளிலே, "ஏன் இந்தக் கவிஞரது பாடல் பாடப்படவில்லை?' என்று விவாதம் செய்யாமல், அவர்தம் இசையினை அலசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாடுபவர்கள் கவனிக்க வேண்டியது:-
----------------------------------------------
பாட்டு கற்றுக் கொள்ளும்போதே, ஆசிரியரிடம், தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கற்க வேண்டும். இல்லயெனில், ஒலி நாடாக்கள் துணை கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும்.

யாரும் வற்புறுத்தாமல் தானே வலிய வந்து, தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும். இவ்வாறு பாடும்போது, தமிழ்நாட்டின் இரசிகர்களுக்கும் தங்களுக்குமுள்ள இடைவெளி பெரிதும் குறைந்து வரும் என்பதனை உணர வேண்டும்.

ஏற்கெனெவே கூறியபடி அனவரையும் கவரும்படியான மெட்டில், சொல்லழகும், பொருளழகும் கொண்ட எளிமையான பாடல்களைத் தேர்வு செய்து பாட வேண்டும்.

புதிதாக ஒரு புகழ் பெற்ற கவிஞரின் ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டு அரங்கேற்றும் எண்ணம் இருந்தால், மெனக்கெட்டு உழைத்து அதனை வெற்றிப் பாடலாக்கும் முயற்சியில் இறங்கிய பின்னரே, அதனை மேடையேற்ற வேண்டும். அதனை விடுத்து அரை குறை முயற்சியுடன் இறங்கினால், அது அந்த புகழ் பெற்ற கவிஞரை அவமதிப்பது போலாகும்.

மொழி தெரிந்த தமிழ் இரசிகர்கள் முன்பு, தமிழிலே பாட இருப்பதனால், ஒரு முறைக்கு இரண்டு முறை, அட்சரங்களை சரி பார்த்து, சொல், பொருள் ஏதும் மாறிவிடாமல் பாட வேண்டும்

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்ய வேண்டியது:-
--------------------------------------------------------------
நிகழ்ச்சி அமைப்பளர்களுக்கு தமிழ் பொழிப் பற்றிருந்தால் மட்டும் போதாது. இசையின்பால் உண்மையான ஆர்வமும், ஓரளவு இசையறிவும் தேவை. இசையறிவு இல்லாமல், ஆர்வம் மட்டும் இருக்கும் பட்சத்தில், இசை ஞானம் கொண்ட நண்பர்களைச் சேர்த்து கொள்ளலாம்.

பாடகர்களிடம், நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் இத்தனை தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்க, இவர்களே சரியான உந்து சக்தி. இவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், பாடகர்கள் கண்டிப்பாக, தமிழ்ப்பாடல்கள் பாட முயற்சி செய்வார்கள். அப்போது, புதியதாய் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சியும், அதன் தாக்கத்தால் இசைக் கச்சேரிகளிலே, தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை பெருகும் நிகழ்தகவும் (probability) அதிகமாகக் கூடும்.

பள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும். போட்டியில் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலே அமைய வேண்டும். மாவட்ட அளவினிலே கூடப் போட்டிகள் நடத்தலாம். இதில் பங்கு பெறுவது என்பதனை மாணாக்கர்கள் ஒரு கௌரவமாகக் கருதும்படி, அதற்கான உயர்வு நிகழ்சிகளில் (promotion programs) ஈடுபட, வர்த்தக நிறுவனங்களின் துணையை நாட வேண்டும். இப்படியெல்லாம் முழுமுனைப்புடன் ஈடுபட்டால், வருங்காலத் தலைமுறையினர், தமிழில் பாடுவதனைப் பெருமையாகக் கருதுவர்.

Wednesday, January 11, 2006

கிறுக்கல்-01

புது யுகம்
--------
கப்பல் காரின் கண்ணாடி இறக்கிக்
காரித் துப்பினான்.
காதில் 'ப்ளூ டூத்'

- சிமுலேஷன்

Monday, January 09, 2006

"திசைகள்" புத்தாண்டு இதழில் தமிழிசை

"திசைகள்" புத்தாண்டு இதழ், இசைச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. இதில் தமிழிசை பற்றிய எனது கட்டுரையும் பிரசுரமானது குறித்து, ஆசிரியர் குழுவினற்கு மகிழ்ச்சி கலந்த நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்.

http://thisaigal.com/

- சிமுலேஷன்.