Friday, February 17, 2006

விடையவன் விடைகள்

1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில்
சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சில
கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-

2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?

3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று
சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?

5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?

6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?

7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது
எப்படி வந்தது?

8. தேவகுசுமம் என்பது என்ன?

9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

(மரத்தடியில் ஏற்கெனெவே நான் பிரசுரித்த மேற்காணும் கேள்விகளை எனது இந்தப் பதிவில் மீண்டும் பிரசுரம் செய்கின்றேன்)

இழிது இழிது ஈயெனெ இரத்தல் இழிது; அதனினும் இழிது.....

நியூயார்க் 'பென்' (Penn) ஸ்டேஷனில், ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகளில், "தட்டு ஏந்துபவர்களை ஊக்குவிக்காதீர்கள்; அவர்களைக் கவனித்துக் கொள்ள தொண்டு நிறுவனங்கள் உள்ளன" (Do not encourage pan-handlers; Charities are there to take care of them), என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். இந்த அமெரிக்கவாசிகள், மாதா மாதம் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, டாலர்களை நன்கொடையாகக் கொடுத்து விட்டுக் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆனால், நம்ம பாடு கஷ்டம்தான். அது போன்ற ஒழுங்குடன் உருப்படியாக அமைப்புகள் ஏதும் இருக்காது. எங்கு திரும்பினாலும், பிச்சைக்கார்கள் மயம்தான். கோவில் வாசலில் பிச்சை, ஹோட்டல் வாசலில் பிச்சை, டிராபிக் சிக்னலில் பிச்சை. அவர்களுக்குப் பிச்சை போடாவிட்டால், மனித நேயம் இல்லாத மனிதனா நீ என்று மனசாட்சி கேள்வி கேட்க ஆரம்பித்து விடும். போடுவது ஒரு ரூபாயோ, ஐம்பது பைசாவோ பிச்சை இட்டாலோ, பிச்சைக்காரர்களை ஊக்குவித்து ஒரு சோம்பேறிச் சமுதாயத்தை வளர்க்க நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறோமோ என்ற ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும்.

டிராபிக் சிக்னலில், பாதுகாப்பு விதிகளை மீறி, வண்டிகளுக்கு நடுவே பூந்து புறப்பட்டுப் பிச்சையெடுப்பவர்களைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வரும். ஒரு வாரக் கடைசியில் குடும்பத்துடன், ஹோட்டலுக்குச் சென்று ஒரு பிடி பிடித்துவிட்டு, வெளியே வந்தவுடன், உடனே ஹோட்டல் வாசலில், நாலைந்து கைகள் நீளும். இதில் எந்தக் கை உண்மையிலேயே தானம் பெறத் தகுதியான கை என்று உங்களுக்குத் தெரியாது. உண்மையாலுமே பசியால் வாடும் பார்ட்டியாக இருக்கலாம். அல்லது, உழைக்காமலே சோம்பேறித்தனமாகவே உட்கார்ந்து சாப்பிடப் பிறந்த ஜென்மமாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரும் முறையும், பிச்சை போடக் கூடாது என்று முடிவு செய்து, பின்னர், அவர்களின் பாவப்பட்ட முகங்களப் பார்த்தவுடன், பிச்சை போட்டு விடுவது வழக்கம்.

கமல் நடித்த 'பேசும் படம்' என்ற ஒரு படத்தில் ஒரு பிச்சைக்காரனது பாத்திரம் வரும். இறுதியில்தான் தெரியும், கோஷ்டி, படு வெயிட்டான பார்ட்டி ஒன்று என்று. இது போல, புகழ் பெற்ற கோவில்களின் வாசல்களில், பிச்சை எடுப்பதையே வாழ்நாள் முழுவதும், முழுநேரத் தொழிலாகக் கொண்டோர் பல பேரைப் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கு ஒருக்காலமும் உதவி செய்வதில்லை என்று தீர்மானித்ததுண்டு. ஆனால் இதே கோவில் வாசல்களில், உண்மையிலேயே பரிதாபத்துக்குரிய சிலரைப் பார்க்கலாம். அவர்களுக்கு உதவி செய்யாமலிருக்க மனசு வராது.

பெரும்பாலான மதங்கள், தானம் கொடுப்பதை, (பிச்சை போடுவதை) ஊக்குவிக்கின்றன. ஆனால் அது, அந்தக் காலத்துக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம்.தற்காலத்தில் இது சரியா? தெரியவில்லை. பசியோடு வந்து பிச்சை கேட்கும் ஒரு சிறுவனிடம், "ஏண்டா, உழைத்துச் சம்பாதிக்க மாட்டேங்கிறாய்? நான் வேலை வாங்கித் தரட்டா?", என்று சில பேர் ப்ளேடு போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

"போடுவது ஐம்பது பைசாவோ அல்லது ஒரு ரூபாயோ. இதற்காகவென்று ஒரு பதிவு வேறு தேவையா?" என்று நீங்கள்கூடக் கேட்கலாம். பிரச்னை அதுவல்ல. பிச்சைக்காரர்களை ஊக்குவிக்கலாமா அல்லது கூடாதா என்பதுதான் இங்கு வாதம். உங்கள் கருத்து என்னெவென்று சொல்லுங்கள்.