Saturday, August 19, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெரும்பாலும், மனதிற்கு இனிமையான ஒரு கர்னாடக இராகங்களில் அமைந்திருப்பதனைக் கவனிக்கலாம். இப்படி இராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்களை ஒப்பு நோக்கும் முயற்சியாக, "தமிழ்த் திரையிசையில் இராகங்கள்" என்ற தலைப்பிலே, ஒரு தொடர் எழுத எண்ணியுள்ளேன். இராகங்களைப் பற்றிய புரிதல், எந்தவொரு இசையினையும் மேலும் இரசிக்கத் தூண்டுமென்பதே, இதன் நோக்கம்.

இராகம்: கானடா
இது கரஹரப்ரியா என்ற மேளகர்த்தா (72 தாய் இராகங்களில் ஒன்று) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமகும்

ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை):
ஸ ரி2 க2 ம1 த2 நி2 ஸ

அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை):
ஸ நி2 ஸ த1 ப ம1 ப க2 ம1 ரி2 ஸ

கானடா இராகம், எந்த ஒரு நேரத்திற்கும் பாட இசைந்தது. பக்தி இரசனையினைத் தூண்டக்கூடியது. ஆலாபனைக்கு உகந்த இந்த இராகம், இராகமாலிகைகளில் பெரிதும் கையாளப்படுகின்றது. 'தர்பாரி கானடா' எனப்படும் வட இந்திய இராகத்திற்கும்,கானடா இராகத்திற்கும் தொடர்பு உண்டு. தொடரின் நோக்கம் கருதி இந்த இசை இலக்கணங்களுக்குள்,
தற்போது மேலும் இறங்கப் போவதில்லை,

பாடல் - திரைப்படம்
01. அலை பாயுதே கண்ணா - அலை பாயுதே
02. அந்தோ புவி மேல் அடிமையாக - மச்ச ரேகை
03. அழகு தெய்வம் மெல்ல மெல்ல - பேசும் தெய்வம்
04. கனவுகளே ஆயிரம் கனவுகளே - நீதிக்குத் தலை வணங்கு
05. கேள்வியின் நாயகனே - அபூர்வ ராகங்கள்
06. கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு - கொஞ்சும் சலங்கை
07. மனக்கோவில் தன்னில் வாழும் - காவேரி
08. மன்னவா மன்னவா, மன்னாதி மன்னன் - வால்டேர் வெற்றிவேல்
09. மோகனாங்க வதனி உன்னைக் காணும் - மனோன்மணி
10. முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே - உத்தம புத்திரன்
11. நாணிச் சிவந்தன கண்கள் - கர்ணன் (இந்தப் பகுதி மட்டும்)
12. நடராஜனா இல்லை சிவகாமியா - பாட்டும் பரதமும்
13. பெண்ணின் பெருமையே பெருமை - மிஸ்ஸியம்மா
14. பொன்னென்பேன் - போலீஸ்காரன் மகள்
15. பூமாலை வாங்கி வந்தான் - சிந்து பைரவி
16. புது வெள்ளை மழை பொழிகின்றது - ரோஜா
17. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான்
18. வானம்பாடிகள் போலே - கள்வனின் காதலி

சிந்துபைரவியின் "பூமாலை வாங்கி வந்தான்" பாடலை இங்கே கேட்கலாம்.இந்தப் பாடல்களையெல்லாம் ஒருங்கே பதிவு செய்து கேட்டுக் கொண்டேயிருந்தால், கானடா இராகம் உங்களுக்கு எளிதில் பிடிபட்டுவிடும்.

விரைவில் அடுத்த இராகத்துடன்...

- சிமுலேஷன்

27 comments:

tamil said...

தங்கள் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

Simulation said...

நன்றி, ஷன்முகி.

- சிமுலேஷன்

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய சிமுலேஷன் அய்யா,

நன்றிகளும் பாராட்டுகளும்.

1.
கர்ணனின் ''நாணிச் சிவந்தன...திருக்கரமே'' வரையில் கானடாதான் என்று புரிந்துள்ளேன். சரிதானா?

2.
திருவிளையாடலின் 'ஒருநாள் போதுமா'வில், 'கானடா என் பாட்டு தேனடா இசைத் தெய்வம் நானடா'வும் கானடாவாக இருக்கலாம் என்ற அபிப்ராயம் உண்டு. சரிதானா?

அன்புடன்
ஆசாத்

இலவசக்கொத்தனார் said...

சிமுலேஷன், நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். மிக ஆவலுடன் இந்தத் தொடரைப் படிப்பேன். 'பொன்னென்பேன் சிறு பூவென்பேன்' தர்பாரி கானடா இல்லையா?

Unknown said...

மிக்க நல்ல முயற்சி. என் நல் வாழ்த்துக்கள், தங்கள் முயற்சி தொடர...அன்புடன் ஹரிஹரன், மும்பை

Simulation said...

ஆசாத்,

வருகைக்கு நன்றி. உங்களின் புரிதல்கள் இரண்டுமே சரிதான்.

ஒரு வருடம் முன்பு, சென்னை வரும்போது சந்திக்க எண்ணினீர்கள். ஆனால் நான் வெளியூர் சென்றதால் சந்த்திக்க முடியவில்லை. அடுத்த முறை உங்களை சென்னையில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

இலவசக் கொத்தனார்,

நீங்கள் சொன்னபடி, "பொன்னென்பேன்" தர்பாரி கானடாதான். சுட்டிக் காட்டியதற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

ஹரிஹரன்ஸ்,

வாழ்த்துகளுக்கு நன்றி.

- சிமுலேஷன்

கால்கரி சிவா said...

ஆஹா.. நல்ல பதிவு. அடுத்து என்ன மோகனமா?

G.Ragavan said...

நல்ல முயற்சி. தொடரட்டும்.

தென்ன மரத்தோப்புக்குள்ளே பாட்டு முல்லை மலரோட ஜெராக்ஸ். அதுனால ரெண்டு பாட்டுலயும் ஒரே ராகம் இருக்குறது சரிதான். :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிமுலேசியன் !
தெரிந்தவர் யாராவது இதைச் செய்யமாட்டார்களா?? எனப் பல நாள் எதிர் பார்த்தேன்.தொடரவும் . தியாகராச பகவதர் காலப் பாட்டில் இருந்து எதையும் தவறவிடாது போடவும். பதிவிடும் போது எனக்கு நினைவூட்டல் ஒன்று என் மின்னஞ்சலுக்குப் போடவும்; அப்பப்போ தெரியாததைக் கேட்பேன். என் சந்தேகத்தையும் அன்புடன் தீர்க்கவும். பிரபல தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனையின் தமிழாக்கம் தருவீர்களா?? உ-ம்- மோக்சமு கலதா- சாருமதி!; ராம கதாசுத- மத்யமாவதி.இன்னும் பல . பலரிடம் கேட்டேன் கிடைக்கவில்லை.
யோகன் பாரிஸ்
nada.johanadarajah@bakernet.com

கோவை ரவீ said...

அற்புதமான பதிவு தொடரட்டும் உங்கள் சேவை.

ஜயராமன் said...

பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு!

என் லிஸ்ட் பாட்டு எல்லாமே இருக்கு!

கொஞ்சம் பாட்டையும் லிங்க் கொடுத்தால் கேட்க வசதியாக இருக்கும்.

தன்யாசி பாட்டுகளை எழுதிவிட்டீர்களா என்பது தெரியவில்லை. லிஸ்ட் போடுங்கள். எனக்கு பிடித்த பாட்டுகள் வருகிறதா என்று பார்க்கிறேன்.

நன்றி

Simulation said...

கால்கரி சிவா, ஜிரா, யோகன், கோவை ரவீ, ஜயராமன் பதிவைப் படித்துப் பின்னூட்டியதற்கு நன்றிகள்.

யோகன், நீங்கள் கேட்ட பாடற்பொருள் விரைவில்.

- சிமுலேஷன்

Simulation said...

பாடல்: மோஷமுக'லதா
இராகம்: ஸாரமதி
தாளம்: ஆதி

மோஷமுக'லதா பு'விலோ ஜீவந்-
முக்துலு கா'நி வாரலகு (மோ)

ஸாக்ஷத்கார நீ ஸத்'ப'க்தி
ஸங்கீ'த ஜ்ஞாந விஹீனுலகு

ப்ராணாநல ஸம்யோக' முவல்ல
ப்ரணவ நாத'மு ஸப்தஸ்வரமுலை பரக'
வீணாவாத'ந லோலுடௌ' சிவமநோ-
வித' மெறுக'ரு த்யாக'ராஜ விநுத
-----------------------------------
பொருள்:

இப்புவியில் ஜீவன் முக்தருக்கன்றி மற்றவர்க்கு மோக்ஷம் கிடைக்குமா?

எப்பொழுதும் பிரத்யட்ச சித்தமான உருவத்தை உடையவனே! உன்னிடம் பக்தியும், ஸங்கீத ஞானமும் இல்லாதவர்களுக்கு

(மோக்ஷம் உண்டா?)

பிராணவாயு, நெருப்பு ஆகியவற்றின் சேர்க்கையினால், பிரணவநாதம் ஸப்தஸ்வரங்களாகப் பெருக, வீணை வாசிப்பதின் மூலம்

நாதோபாசனை செய்யும் சிவபெருமானின் மனப்போக்கை அறியாதவர்களுக்கு (மோக்ஷம் உண்டா?)
-----------------------------------

பாடல்: ராம கதா
இராகம்: மத்யமாவதீ
தாளம்: தேசாதி

ராம கதா, ஸுதா'ரஸ பாநமொக
ராஜ்யமு சேஸுநே

பா'மாமணி ஜாநகி ஸௌமித்ரி
ப'ரதாது லதோ பூ'மி வெலெயு ஸ்ரீ

த'ர்மாத்'யகி ல ப லத'மே மநஸா
தைர்'யானந்த' ஸௌக் யநிகேதநமே
கர்மப'ந்த' ஜ்வலநாப்' தி'நாவமே
கலிஹரமே த்யாக' ராஜ விநுதுட'கு
-----------------------------------
பொருள்:

ஸ்ரீராமனின் திவ்ய சரிதமாகிய அமிருதபானமே ஒர் அரசாட்சி புரியும்.
பெண்களுல் இரத்தினமாகிய சீதாதேவி, இலஷ்மணன், பரதன் முதலியோருடன் கூடி இப்பூமியில் விளங்கும்

(அது) தர்மம் முதலிய நான்குவகை புருஷர்த்த்ங்களை அளிக்கவல்லது. தைரியம், ஆனந்தம், சுகம் இவற்றின் உறைவிடம்,

பழவினைகளினால் ஏற்படும் தாபங்களாகிற சமுத்திரத்தக் கடக்க உதவும் நாவாய், கலியுகத்தின் பாவங்களைப் போக்கடிப்பது.
-----------------------------------

SP.VR. SUBBIAH said...

யாராவது எழுதமாட்டார்களா என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்த விஷயம்
பாராட்டுக்கள் நண்பரே - கல்யாணி ராகத்திற்கு ஒரு பதிவு சீக்கிரம் போடுங்கள்
'மன்னவன் வந்தானடி' பாட்டு அந்த ராகத்தில் அமைந்த பாடல்தான் என்று நினைக்கிறேன்

ஓகை said...

சிமுலாஷன், இந்த பதிவிற்கு இவ்வளவு வரவெற்பு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்கள் பாட்டுப் பட்டியலில் ரத்தினங்களுக்கு மத்தியில் வைரமாய் ஜொலிக்கிறது பாருங்கள் முல்லை மலர் மேலே....

அர்தமுள்ள இந்துமதம் என்ன சொன்னது.... என்ற பாடலும் உங்கள் பட்டியலில் சேர்க்கத் தக்கது.

அலை பாயுதே வை ஒரு திரைப்பட பாடலாக்கிய மணிரத்தினத்துக்கு நன்றி.

Simulation said...

சுப்பையா அவர்களே, பின்னூட்டத்திற்கு நன்றி. 60க்கும் மேற்பட்ட "கல்யாணி" இராகப் பாடல்கள் கொண்ட பதிவு நாளை வெளியிடுவேன். கொஞ்சம் இசையியல் குறித்தான சமாச்சாரங்களும் இருக்கும்.

- சிமுலேஷன்

வந்தியத்தேவன் said...

என்ன சமையலோ - படம் உன்னால் முடியும் தம்பியும் கல்யாணி ராகம் என நினைக்கிறேன். இசை இளையராஜா.

niranjhankumar said...

a good job. carry on!

Thaya said...

ஏன் அந்த ஆர்வம் தரும் கட்டுரை தொடரவில்லை? தொடரவும், ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம்.நன்றியும் பாராட்டுக்களும்
தயா

பாரதிய நவீன இளவரசன் said...

நேற்று இரவு உறங்கப்போகுமுன் சூர்யன் FMல்...தர்பாரி கானடா ராகத்தில் வந்த சில பாடல்களை ஒலிபரப்பினார்கள்; வழக்கம்போல டைமர் செட் பண்ணிவிட்டுப் படுத்தேன்.
வித்யாசாகர் இசையில்...வில்லன் படத்தில் வரும் ஒரு பாடல்..."ஒரே மனம்..." அடுத்து அவரது இசையிலேயே வந்த மற்றோரு பாடல்; படம் - கர்ணா, "மலரே மௌனமா...". இதனைத் தொடர்ந்து இளையராஜா இசையில் "கல்யாணத் தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா..." (மௌனம் சம்மதம்) மற்றும் "ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ..." (அரங்கேற்ற வேளை) பாடலும் ஒலிபரப்பானது. அப்புறம்.."இசை மேடையில் இன்பவேளையில் சுகராகம் பொழியும் ..." என்ற பாடல் (மோகன்-சசிகலா டான்ஸ் ஆடியது/இளமைக் காலங்கள் படத்தில் என்று நினைவு). இந்தப்பாடலும் அந்த ராகம்தானா.. எனக்கு விளங்கவில்லை. கடைசியாக...கே.வி.மகாதேவன் இசையில் "சின்னஞ் சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா..." என்ற அந்தக்காலப் பாடல். ஐயா உங்களுக்கு ஒரு கேள்வி...காக்கிச் சட்டை படத்தில் கமல்-அம்பிகா டான்ஸ் ஆடுவார்களே..'பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்.." என்ற பாடலும் தர்பாரி கானடா ராகம்தானா? P.சுசீலா பாடிய "ஏ தென்றலே.. புதுராகம் பாட வா..." (தென்றலே என்னைத் தொடு) என்ற மெலடிவகை சோகப் பாடலும் தர்பாரி கானடாவா?

நுள்ளான் said...

மிகவும் பயனுள்ள தகவல்கள். இத்தனை காலமும் தேடினேன் இராக ஒழுங்கில் வகைப்படுத்துவதற்கு. இன்று ஓரளவேனும் கிடைத்ததே என்ற சந்தோஷம். முடித்தால் அடுத்ததாக காபி இராகத்தில் வரும் பாடல்களை நிரல் படுத்த முடியுமா அன்பரே.

நுள்ளான் said...

மிகவும் பயனுள்ள தகவல்கள். இத்தனை காலமும் தேடினேன் இராக ஒழுங்கில் வகைப்படுத்துவதற்கு. இன்று ஓரளவேனும் கிடைத்ததே என்ற சந்தோஷம். முடித்தால் அடுத்ததாக காபி இராகத்தில் வரும் பாடல்களை நிரல் படுத்த முடியுமா அன்பரே.

அன்புடன்
மயூரன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிமுலேசன்!
நான் கேட்ட இரு கீர்த்தனைகளுக்கும்
தமிழாக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி!
அச்சுப் பிரதி ஆக்கி விட்டேன்.
வெகு நாளாக உங்களைக் காணவில்லை.
அடுத்து நேரம் கிடைக்கையில், 'பந்துரீதி கோலு- ஹம்சானந்தம்' தமிழாக்கம் தரவும்.

Simulation said...

சிந்துபைரவியின் "பூமாலை வாங்கி வந்தான்" பாடலுக்கான வீடியோ இணைப்பு கொடுத்துள்ளேன்.

- சிம்ம்லேஷன்

SwamiNathan said...

பொன்னென்பேன் - போலீஸ்காரன் மகள்

Indha pattu "Dharbari Kannada" endru Vidwan G.S. Mani avargal solli kettu irukkirean

vjseelan said...

நன்றி நன்றி நன்றி.

சிவகுருநாதன் said...

பூமாலை வாங்கி வந்தான் சிந்துபைரவி படத்தில் உள்ள பாடல் தர்பாரி கானடா ஆயிற்றே
அதைதான் உணவில் சேர்க்காதீர்கள்...