Thursday, September 07, 2006

புத்திசாலிப் பன்றிகளும்...பராமரிப்புப் பணிகளும்...

உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் பதிவு பிடிக்குமோ அல்லது புரியுமோ தெரியாது. விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன் பேர்வழி என்ற பெயரில் கட்டுரை எழுத வேண்டுமென்ற அல்ப ஆசை ஏற்படுவது அனவருக்கும் இயற்கையே. அந்த வகையில் இதுவும் ஒரு பதிவுதான்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் முதலீட்டில் சுமார் 40-45% பங்கு, அங்குள்ள பைப்லைன் எனப்படும் குழாய்களிலேயெ செலவழிக்கப்படுகின்றது. இந்தக் குழாய்கள் அரை அங்குல விட்டத்திலிருந்து, ஐம்பது அங்குல விட்டம் (diameter) வரை இருக்கும். இவை திரவ மற்றும் வாயு நிலையிலுள்ள பெட்ரோலியப் பொருட்களை, ஆலையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்கின்றன. மேலும் ஆலையின் இறுதி விளை பொருட்களான (finished products) எல்.பி.ஜி, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை ஆலையிலிருந்து சந்தைக்கு எடுத்து செல்வதிலும் இந்தக் குழாய்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிலநேரம், நாடு விட்டு நாடு செல்லும் (cross country) குழாய்களையும் நீங்கள் நேரில் பார்த்திருக்காவிட்டாலும், சில ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், நரம்பு மண்டலம் போன்று இந்த எண்ணெய்க் குழாய் வலை (pipeline network) செயல்படுகின்றது என்றால் மிகையாகாது.

மிகுந்த முதலீட்டில் பதிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் இந்தக் குழாய்கள், கணிசமான காலம் உழைக்க வேண்டும். அப்படி இல்லாமல், ஏதேனும், பாதிப்பு ஏற்பட்டு, கசிவும் ஏற்பட்டாலோ, எண்ணெய் மற்றும் வாயு நிறுவனங்களுக்கு மிகுந்த இழப்பு ஏற்படும். மேலும் பாதுகாப்பு (safety) மற்றும் சுற்றுச் சூழல் (environment) குறித்த பிரச்னைகளும் ஏற்படும். எனவே, இந்தக் குழாய்கள், சேதம் ஏதேனும் ஏற்படாமல், அவற்றிகென வரையறுக்கப்பட்ட அளவுகளுக்குள் (specifications) இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளும் வகையில் பராமரிப்புப் பணிகளை (maintenance) இந்த நிறுவனங்கள் செய்ய வேண்டும். அந்த முயற்சியில் ஒன்றுதான், பன்றிகளைப் (pig) பயன்படுத்தும் பணியாகும்.


பன்றி என்றால் உண்மையான உயிருள்ள பன்றி என்று நினைத்துவிட வேண்டாம். பன்றி எனப்படுவது குழாய்களுக்குள் பயணம் செய்யும் ஒரு வகை சாதனம் அல்லது கருவியாகும். இதில் பல வகைகள் உண்டு. முதலாவதாக சாதாரணமாக குழாய்க்குள் இடைவெளி இல்லாமல் பயணம் செய்யும் சரியான விட்டம் கொண்ட ஒரு ரப்பர் பந்து. இது குழாயின் அளவிற்கேற்ப பல அளவுகளில் இருக்கும். இவை பெரும்பாலும், ஒரு குழாயில் வெவ்வேறு திரவங்களை கடத்தப் பயபடுகின்றன. உதாரணமாக, கெரசினுக்கும், டீசலுக்கும் ஒரே குழாய் இருக்கும். ஒரே குழாயில் முதலில், கெரசினும், அடுத்ததாக பன்றி எனப்படும் இந்த ரப்பர் பந்தும், அதனையடுத்து, டீசலும் பயணம் செய்யும். இந்தப் பன்றியினைச் செலுத்துவதற்கும், முடிவில் சேகரிப்பதற்கும் ஏதுவாக, குழாய் வடிவங்களில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

வெகுகாலம் மெற்கண்டபடி, ஒரு பிரித்தாளும் ஊடகமாகவே (interface medium) இருந்த பன்றியில் எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களினால், புத்திசாலிப் பன்றிகள் (intelligent pigs) வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிசாலிப் பன்றிகளில் குழாய்களின் விட்டத்தை அளக்கவும், குழாயின் சுற்றுச் சுவரின் தடிமன் (wall thickness) போன்ற பல்வேறு பரிணாமங்களை அளக்கும் சென்ஸர்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு முறை குழாயின் ஒரு முனையிலிருந்து ஏவி விட்டால் (pig launch), மறு முனை சென்றடவதற்குள், குழாயின் பல்வேறு பரிணாமம் குறித்த தகவல்களையும், பராமரிப்பு பொறியாளருக்கு தந்து விடுகின்றது. இந்தத் தகவலுக்கேற்ப, முன்னெச்செரிப் பராமரிப்புப் பணிகள் (preventive maintenance) மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கணிசமான சேதங்கள் தவிர்க்கப்படலாம்.

அடுத்த முறை, சென்னை தண்டயார்பேட்டை, கொருக்குப் பேட்டை அல்லது மும்பை செம்பூர் போன்ற பகுதிகளில் செல்லும்போது, பெட்ரோலியக் குழாய்களின் அருகில் மேய்ந்து அசிங்கம் பண்ணிக் கொண்டிருக்கும் பன்றிக்கூட்டம் ஒன்றினைப் பார்க்கும்போது, அந்தக் குழாய்க்குள்ளே ஒரு புத்திசாலிப் பன்றி ஒன்றும் சென்று பராமரிப்பு செய்துகொண்டிருக்கலாம் எனபதனையும் நினைவில் வையுங்கள்.

(ப்ளாகரில் உள்ள பிரச்னை காரண்மாக இதற்குண்டான் படங்களை வலையேற்ற முடியவில்லை)

- சிமுலேஷன்