Sunday, January 30, 2011

மானசரோவர் – அசோகமித்திரன் – நூல் விமர்சனம்தமிழில் திரைப்படத்துறையைப் பின்னணியாகக் கொண்டு வந்த நாவல்களில் சுஜாதாவின் "கனவுத் தொழிற்சாலை" முதன்மையானது. அந்த அளவுக்கு திரைப்பட உலகின் விவரங்களை எடுத்துச் சொல்லாவிட்டாலும், இதே திரைப்படப் பின்னணியில் வந்த மற்றுமொரு நாவல்,

அசோகமித்திரனின் "மானசரோவர்". எண்பதுகளில் ‘சாவி’யில் தொடராக வெளி வந்ததாம் இது. திரையுலகின் கீழ் மட்டத்தில் இருக்கும் ஆனால் ஓரளவு செல்வாக்கு கொண்ட கோபால் என்ற ஸ்கிரிப்ட் ரைட்டருக்கும், சத்யன் குமார் என்ற புகழ் பெற்ற வடநாட்டு நடிகனுக்கும் உள்ள உறவு அல்லது நட்பு அல்லது தொடர்பு ஆகியவைதான் மானசரோவர் நாவலின் முக்கிய அம்சம். 'நத்தானியெல் வெஸ்ட்', 'டாக்டர் ஜிவாகோ' என்று படிக்கும் இருவரையும் அறிவுஜீவிகள் என்று சொல்லலாமாவென்று தெரியவில்லை. (சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையில் அருண் கோடர்ட் படிப்பது நினைவுக்கு வருகின்றது)


நாவலை எட்டுப் பாகங்களாகப் பிரித்து, அதில் ஒவ்வொரு பகுதியிலும் கோபாலும், சத்யன் குமாரும் மாறி, மாறி 'தன்மை' (1st person) நிலையிலிருந்து ‘கதைசொல்லி’களாக அமைத்திருப்பது சற்றே வித்தியாசமான பாணி. கிட்டத்தட்ட 200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் சுமார் 25 பாத்திரங்களுக்கு மேலே வந்து போகின்றார்கள். ஆனாலும் அதில் முக்கியமானவர்கள், கோபால்ஜி என்றழைக்கபடும் கோபால், யூசுப் என்ற சத்யன் குமார், கோபாலின் மனைவி ஜம்பகம், புகையிலைச் சித்தர், ஜெயசந்திரிகா என்ற நடிகை, சியாமளா என்ற துணை நடிகை, கோபாலின் பெண் காமாட்சி, அவரின் பையன் ராஜா, ஆகியோர் மட்டுமே.

பிரிவினைக்கு முன் பெஷாவரிலிருந்து பம்பாய் வந்தவன் நடிகன் சத்யன் குமார். பெற்றோர்களையும் உறவினர்களையும் பிரிந்து வந்தவனுக்கு, பெற்றவர்களிடம் பாசம் காட்டியதேயில்லையே என்ற குற்ற உணர்வு எப்போதும் கொண்ட சத்யன் குமாருக்கு, போட்டிகள் நிறைந்த யதார்த்த உலகம் வெறுப்பளிக்கின்றது. அந்த சமயத்தில் கோபால் ஆதர்ச நண்பனாகத் தெரிகின்றான். மேலுன் தான் மதிக்கும் மெஹர் பாபா போலவும், கோபால் தோற்றமளிப்பதால் அவனை கோபால்ஜி என்றும் மரியாதையுடன் அழைக்கின்றான். கோபாலுக்கு ஒரு சமயம குடும்பத்தில் பெரிதும் இக்கட்டான தருணம் ஏற்படுகின்றது. அதனை இங்கே விரிவாக விவரித்தால் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும், எனபதனால் அவற்றை இங்கே தவிர்கின்றேன்.

கோபால் யாரும் கண்காணாத இடத்திற்குச் சென்று விடுகின்றான். அவன் வீட்டை தன்னந்தனியனாகக் காலி செய்யும் கட்டம்,பச்சாதாபத்தினை ஏற்படுத்தும் கட்டமாகும். புகழ்பெற்ற நடிகனுக்கே உண்டான பிஸி ஷெட்யூலிலும், கோபால்ஜியைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருக்கின்றான் சத்யன் குமார். அவனக் கண்டுபிடிக்கவேண்டுமென்று மெனக்கெடுகின்றான். அது எதற்கு எனபதுதான் 'மானசரோவர்' என்ற தலைப்பை நியாயப்படுத்தும் விஷயமாகும்.

இந்த நாவலில் வரும் சத்யன் குமாரும், கோபால்ஜியும் 1ste personல் பேசிக்கொண்டேயிருப்பது என்னவோ, பாலகுமாரன் நாவல்களில் வரும் நாயகர்களைச் சித்திரிப்பது போலத் தோன்றுகின்றது. தொலைக்காட்சி மெகாத் தொடர்கள் போல அனாவசியக் காட்சிகளையும், பாத்திரங்களையும் (ஜவர்ஹர்லால் நேருவின் மரணம் இன்ன பிற) வலிந்து புகுத்தியிருப்பது போல எனக்கு முதலில் தோன்றியது. குறிப்பாக எனக்கு இந்த சித்தர் முதலான பாத்திரங்கள் வேறு எரிச்சலைத் தந்தன. அதுவும் சித்தர்கள் என்றாலே, புகையிலை, கஞ்சா, அபினி கேஸ் போலவும், ஆனால் அவர்களுக்கு மட்டும் உலகில் நடக்கும் சூழ்ச்சுமங்கள் எல்லாம் ஞானக்கண்ணால் தெரியும் என்று பில்டப் கொடுப்பதும். ஆனால் வாசகர்களுக்கு கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் யதார்த்தமாகக் காண்பிக்க வேண்டுமென்றால் இவையனைத்தும் அவசியமென்று அசோகமித்திரன் நினைத்திருக்கக்கூடும்.

சிறந்த படைப்பினை வாசித்தாலோ, கேட்டோலோ, பார்த்தாலோ அது வாசகர்களின் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணி, அவர்களை ஒரிரு நாடகளாகவாவது தூங்க விடாமல் செய்ய வேண்டும். அந்த பாத்திரங்களை வாசகர்கள் வெகு காலத்திற்கு மறக்கக் கூடாது. அந்த வகையில் ‘மானசரோவர்’ படித்து முடித்த வாசகர்களை, வெகு காலம் வரை கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் மறக்க முடியாமல் செய்ததில் அசோகமித்திரன் வெற்றி பெற்றே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஜம்பகம், சியாமளா முதலானோர், ‘நல்லவர்களா? கெட்டவர்களா?’ என்ற கேள்விக்கும் விடை கிடைக்காது என்ற காரணத்தால் அவர்களையும் கட்டாயம் மறக்க மாட்டார்கள்.

புத்தகம்: மானசரோவர்
ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
பதிப்பாண்டு: 2006 (முந்தயவை 1989, 1999)
பக்கங்கள்: 208
விலை: Rs. 90

- சிமுலேஷன்

Friday, January 28, 2011

மஹாராஜபுரம் குளோன்ஸ்

மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
மஹாராஜபுரம் சந்தானம்

மஹாராஜபுரம் ராமசந்திரன்

மஹாராஜபுரம் ஸ்ரீனிவாசன்
 
மஹாராஜபுரம் கணேஷ்

- சிமுலேஷன்


Sunday, January 23, 2011

ஒரு சின்ன புதிர் (குவிஸ்)


1. சூல் கொண்ட மேகம் போல் பொழிந்தவன் செய்த சிலேடை என்ன?

விடை: காளமேகப் புலவர் துப்பாக்கிக்கும் ஓலைச் சுருளுக்கும் உள்ள சிலேடையை வைத்து ஒரு பாடல் எழுதியுள்ளார்.2. என்னாளும் பொன்னாளகட்டும் என்று எழுதுவது எந்தப் புத்தகத்தில்?

விடை: எ.எஸ். பஞ்சாபகேச ஐயரின் காநாம்ருத போதினி


3. ஸ்ரீ தியாக ப்ரம்ம கான சபா (வாணி மஹால் லோகோ) விலுள்ள் சத்குரு தியாகராஜர் சௌக்யமாய்ப் பாடும் பாடல் என்ன? அல்லது என்ன ராகம்?

விடை: சத்குரு தியாகையர் முன்பாக இரண்டு டம்ளர்கள் இருப்பதால் அவர் காபி சாப்பிட்டுவிட்டு, காபி ராகத்தில் "இந்த சவுக்யமு" பாடியிருப்பார் என்பது என் அபிப்ராயம். ஹி ஹி.


4. நடுநாயகமாய் அமர்ந்திருப்பவர் யார்? தென்னாங்கூர் சென்று தேடண்டாம்?

விடை: சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள்.

5. யாதரத்னம் பொன்னுசாமி கம்பெனிக்கும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

விடை: யாதரத்னம் பொன்னுசாமி கம்பெனியில் எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடிக்கத் துவங்கினார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிவாஜி கணேசன் அவர்கள் முதன் முதலில் நடிக்கத் துவங்கினார்.

Saturday, January 22, 2011

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 08 - சுத்த தன்யாசி

மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுக்கும் ராகங்களில் ஒன்று "சுத்த தன்யாசி". இது மேளகர்த்தா ராகமான நடபைரவியின் ஜன்யமாகும். இந்த ராகம் :உதய ரவிச்சந்திரிகா" என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: ஸ க2 ம1 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 ப ம1 க2 ஸ

முதலாவது "பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்ற பாடல். சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைக்கப்பட்ட பாடல். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. சிவாஜி, மற்றும் எம்.ஆர்.ராதா இருவரின் ஏட்ட்க்குப் போட்டிகும், அங்க சேஷ்டைக்களுக்காகவும் புகழ்பெற்றது.அடுத்ததாக எம்ஜிஆர், சரோஜாதேவி இருவரும் நடித்த படகோட்டி படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற "தொட்டால் பூ மலரும்" என்ற சுத்தமான சுத்த தன்யாசிப் பாடல்.எண்பதுகளில் இளையராஜாவின் ராஜாங்கம் துவன்கிய பின், அவர் சில ராகங்களில் எக்கச்சக்கப் பாடல்களில் இசையமைத்தார். உதாரணமாக ஹம்சத்வனி, கல்யாணி போன்றவை. இதே வரிசையில் வந்ததுதான் சுத்த தன்யாசியும். அவருக்குப் பிடித்த ராகம் என்றால் அவரே பாடவும் செய்து விடுவார். உதாராணம் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெரும் "விழியில் விழுந்து இதயம் கலந்து"அடுத்தபடியாக நாம் கேட்க இருப்பது 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் வந்த 'பூவரசம் பூ பூத்தாச்சு" என்ற பாடல். பின்னணியில் இடல் பெறும் கூட்ஸ் வண்டியின் இசை ரசிக்கும்படியாக இருக்கும்.மீண்டும் அதே படத்தில் இடம் பெறும் 'மாஞ்சோலைக் கிளிதானோ' என்ற பாடல் மூலம் இளையராஜா என்பதுகளில் சுத்த தன்யாசியின் மேலே எவ்வளவு காதலாக இருந்திருக்கின்றார் என்று தெரிந்து கொள்ளலாம்.இப்போது கேட்க இருப்பது 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் இடம் பெறும் 'ஆயிரம் மலர்களே, மலருங்க: என்ற பாடல்.அடுத்து, கல்லுக்குள் ஈரம்' படத்தில் இடம் பெறும் 'சிறு பொன்மணி அசையும்' என்ற பாடல்.அடுத்து சோர்ந்து கிடப்பவர்களை தட்டியெழுப்பும் வண்ணம் அமைந்த "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு' என்ற 'உன்னால் முடியும் தம்பி' படப் பாடல்.தமிழ்த் திரையிசையில் சுத்த தன்யாசியின் பட்டியல் மிகப் பெரியது. குறிப்பாக ராஜாவின் பங்கால். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். நேரம் கிடைக்குபோது இந்தப் பதிவில் மற்றைய சுத்த தன்யாசிப் பாடல்களை தரவேற்றுவேன்.

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்

வ.உ.சியும் வாலேஸ்வரனும்இந்த மாத "அக்கறை" கூட்டத்துக்குச் சென்றபோது வ.உ.சி அவர்களின் பேரன் சிதம்பரநாதன் அவர்கள், வ.உ.சி அவர்களின் மற்றொரு பேரனாகிய செல்வராமனை அறிமுகப்படுத்தினார். வ.உ.சி அவர்களுக்கு ஏழு குழந்தைகள்.அவர்களில் கடைசியாகப் பிறந்தவரான 'வாலேஸ்வரன்' அவர்களின் புதல்வர்தான் செல்வராமன் அவர்கள்.

அவரை அறிமுகப்படுத்திய பின்பு, செல்வராமன் அவர்களின் அப்பாவான வாலேஸ்வரனுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்றும் சிதம்பரநாதன் கூறினார். சுவையாக இருந்தது அந்த விஷயம்.  சென்னையில் மயிலாப்பூரில் உள்ள சப்த சிவஸ்தலங்களான கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் ஆகிய பெயர்களில் ஒன்றான வாலீஸ்வரர் பெயரை வைத்திருப்பாரோ என்று எண்ணியிருந்த வேளையில், அவர் பெயர், வாலீஸ்வரன் அல்ல; வாலேஸ்வரன் என்று உரைத்தது.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வ.உ.சி அவர்கள், வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், சட்டம் பயின்ற அவர் வழக்கு மன்றம் ஏறாமலிருக்கும்படி அவரது ‘சன்னத்’தைப் பறித்தும் ஆங்கிலேய அரசாங்கம் அவருக்குத் தண்டனை அளித்தது. பின்னர் ஒரு நாள் அவரது சிறைத் தண்டனையைக் குறைத்தும் அவர் மீண்டும் வக்கீல் தொழிலில் ஈடுபடவும் வகை செய்து ஒரு ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் பெயர் "வாலஸ்". அவர் நினவாக வ.உ.சி அவர்கள் தனது கடைசிக் குழந்தைக்கு இட்ட பெயர்தான் "வாலேஸ்வரன்".
-      
             - சிமுலேஷன்

Saturday, January 15, 2011

நான் ரசித்த நன்றி நவிலல்

திருச்சி, கலைக்காவிரிக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பன்னாட்டு நாட்டியக் கருத்தரங்கின் நிறைவில் அக்கல்லூரியின் இசைத்துறை விரிவுரையாளர் நடராஜன் சற்றே வித்தியாசமாக நன்றி கூறினார். நான் மிகவும் ரசித்தேன் இதனை.  - சிமுலேஷன்

Saturday, January 01, 2011

ஒரு ரசிகனின் டிசம்பர் மாத டைரிக்குறிப்புகள்

இந்த வருடம் எந்த கச்சேரிக்கும் விமர்சனம் எழுதப் போறதில்லை. போன வருஷம் தனி வலைப்பதிவே துவங்கியும் ஒரு விமர்சனமும் உருப்படியா எழுத முடியலை. இருந்தாலும் டைரி மட்டும் எழுதத்தான் போறேன்.


5th Dec
• ஜயந்தி தன்னுடைய தற்போதைய இசைக்கான குருவான “வித்யா மற்றும் நித்யா” ஆகியோரின் கச்சேரிக்குப் போகவேண்டுமென்று சொன்னாள். கொட்டும் மழையில் சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் நடைபெற்ற “வித்யா மற்றும் நித்யா” கச்சேரிக்குச் சென்றோம்.

• மாலை 4.30 மணிக்குக் “கச்சேரி பஸ்”ஸின் வின்ஸெண்ட் டிசோசா, அவருடைய ஆபீசில் இசை விமர்சகர்களுக்கான ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார். வின்ஸெண்ட், ரேவதி மற்றும் நான் மட்டுமே ஆஜர். மூன்று பேரின் மீட்டிங் சுமார் முப்பது நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.


• மாலை 6 மணிக்கு எல்டாம்ஸ் ரோடு தத்வலோகாவில் அபிஷேக் ரகுராமின் கச்சேரி. நான் மட்டுமே சென்றேன். முன்வரிசையில் பி.எஸ்.நாராயணஸ்வாமி உட்கார்ந்திருந்தார். கொட்டும் மழையிலும் நல்ல கூட்டம். ஸ்யாமா ஸாஸ்திரிகள் சிறப்புக் கச்சேரியாம். பூச்சி ஸ்ரீனிவாசயங்காரின் “நின்னுகோரி” வர்ணம் தவிர, மற்ற உருப்படிகள் எல்லாமே ஸ்யாமா ஸாஸ்திரிகளுடையதுதான். அதில் ஸாஸ்திரிகளின் “தருணம் இதம்மா” என்ற தமிழ் உருப்படியும் அடக்கம். அபிஷேக் ரகுராமோ, நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர்களோ ஸ்யாமா ஸாஸ்திரிகள் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது எனக்கு ஏமாற்றமே. மேடையக் கவனித்த போது, அபிஷேக்கிலிருந்து அனைத்துக் கலைஞர்களுக்கும், தம்பூராக் கலைஞர் உட்பட, இரண்டிரண்டு மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன. என்ன காரணமோ?


15th Dec
• மியூசிக் அகாடெமியின் துவக்க விழா. கலந்து கொள்வதில் ஆர்வத்திற்கு ஒரு காரணம் என்னவென்றால், நிகழ்ச்சிக்கு எங்கள் நிறுவனதின் தலைவர் ஷிவ் நாடார்தான் சிறப்பு விருந்தினர். மேலும் ஷிவ்நாடார் பவுன்டேஷன் மியூசிக் அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது மற்றுமொரு முக்கியமான விஷயம். இது தவிர மியூசிக் அகாடெமியில் மாதாமாதம் HCL Monthly Concert ஸ்பான்ஸர் செய்வதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.16th Dec
• அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வசிக்கும் கனிக்ஸ் எனப்படும் புரஃபசர் கன்னிகேஸ்வரன் எனது நண்பரும் கூட. அவருடைய லெக்டெம், மியூசிக் அகாடெமியில். தலைப்பு “வடநாட்டு துருபத் இசைமுறைக்கும், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் படைப்புகளுக்குமுண்டான ஒற்றுமைகள்”. ஜயந்தியும் நானும் சென்றோம். மனுஷருக்கு தீக்ஷிதர் குறித்த அனைத்து விஷயங்களும் அத்துபடி. ஒரிரு வருடங்கள் முன்பு ஹ்யூஸ்டன் நகரில் மீனாட்சி கோயிலில் கேட்ட லெக்டெமுடன் ஒப்பிட்டபோது, இந்த முறை ‘ஸ்லைடு ஷோ’ கொஞ்சம் சுமார்தான். ஆனாலும் விஷயத்துக்குப் பஞ்சமில்லை. ‘தீக்ஷிதர் வடநாட்டு சங்கீதத்தால் இன்ப்ளூயன்ஸ் ஆனதாகத்’ தனது உரையில், கனிக்ஸ் ஒரு போதும் சொல்லவேயில்லை. ஆனால் பேனலிஸ்டுகள் என்ற பெயரில், வேதவல்லி. டி..எம்.கிருஷ்ணா, வி.ஸ்ரீராம் ஆகியோர் அவர் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகச் சொல்லி வெட்டி விவாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீராம் ப்ளாக்கில் இது குறித்து எனது கருத்தினைப் பதிவு செய்தேன்.

18th Dec
• ஜயஸ்ரீயும், ராம்நாத்தும் அம்மாவை பந்துலராமாவின் அகாடெமி கச்சேரிக்கு அழைத்து சென்றார்கள்.

19th Dec
• ஸங்கீதப்ரியா மற்றும் ரசிகப்ரியா மடலாறக்குழுவில் நானும் ஒரு உறுப்பினன்தான். இந்தக் குழுக்களின் ஒருங்கிணைப்பளர்கள் “குளோபல் ரசிகாஸ் மீட்” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தி.நகர் ராமக்ருஷ்ணா பள்ளியில். நானும் பல வேறு சுவையான நிகழ்ச்சிகள் இருக்கும் என்ற எக்கச்சக்க எதிர்பார்ப்பில், தூங்கிக் கொண்டிருந்த ஆதித்யாவையும் எழுப்பி அழைத்துச் சென்றேன். அமைப்பாளர் அமெரிகாவிலிருந்த வந்தவர் என்ற காரணத்தால், எடுத்ததெற்கெல்லாம் அமெரிக்காவையும், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களையும், ரொனால்டு ரீகனையும் வேறு உதாரணம் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு ரசிகர் ஒருவர் ஆற்றிய சேவைக்கான வாழ்த்துப்பா பாடவேண்டி வந்த மற்றொருவர் இந்த வாய்ப்பு தனது வாழ்நாளில் கிடைத்ததில் பெரிதும் ‘தன்யனானேன்’ என்ற ரேஞ்சில் பேசினார். ரசிகர்கள் எல்லோரும் தங்களது கருத்துக்களையெல்லாம் கூறலாம் என்று கூறிவிட்டு, அந்த செஷனை ஒரு சில நிமிடங்களிலேயே முடித்துக் கொண்டு விட்டு, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரின் 5-6 வயதுப் பேத்தியின் கச்சேரி நடைபெறும் என்று அறிவித்தாளர்கள். அட. இதுக்குதானா இவ்வளவு பில்டப்பு. விசேஷம் என்னவென்றால், இந்தக் குழந்தையின் கச்சேரியினைக் கேட்க இவ்வளவு பிஸியான் சீசன் சமயத்தில் இசைப் பிரபலங்கள் பலரும் வந்து உட்கார்ந்திருந்ததுதான். ஆனால் ஆதித்யா, உஷாராக அரங்கினிலிருந்து வெளியேறி அருகிலிருந்த இன்போஸிஸ் அரங்கினில் நடைபெற்றுக் கொண்டிருந்த அக்ஷய் பத்மநாபன் கச்சேரிக்கு சென்றுவிட்டான். ஓரு சில நிமிடங்களில் அம்மாவும் நானும் இன்போஸிஸ் அரங்கினில் தஞ்சம் புகுந்தோம். அந்தோ பரிதாபம். எங்கள் குடும்பத்து மூவரையும் சேர்த்து அரங்கினில் மொத்தமே 11 பேர்தான். அதில் இருவர் அப்போதுதான் முதல் கச்சேரிக்கு வாசித்துவிட்டு வந்த பக்க வாத்தியக் கலைஞர்கள். தாட்சண்யத்திற்காக உட்கார்ந்திருப்பார்கள் போலும். இத்தனைக்கும் அன்று பாடிய அக்ஷய் பத்மனாபன் சிறந்த பாடகர்தான். நன்றாகவும்தான் பாடிக் கொண்டிருந்தார். கூட்டமே இல்லாத அரங்கினிலே பாடுவருக்கு மட்டுமல்ல, கேட்டுகொண்டிருக்கும் 11 பேர்களில் ஒருவராகிய நமக்கும்கூட டீமோடிவேஷன் ஏற்பட்டுவிடுவதில் ஆச்சரியம் இல்லை. பின்னே. அம்மாம் பெரிய அரங்கினிலே தனியாக இருந்தால் பயமாக வேறு இருக்காதா? இங்கே கூட்டம் எப்போதுமே இப்படித்தானா? அல்லது அன்று மட்டும்தான் இப்படியா? எதுவாயினும் முத்ரா பாஸ்கரும், ராதா பாஸ்கரும் காரணங்களைக் கண்டறியத் தருணம் இதே.
இன்றும் ஜயஸ்ரீயும், ராம்நாத்தும் அம்மாவை அகாடெமி கச்சேரிக்கு அழைத்து சென்றார்கள். மல்லாடி சகோதரர்கள் கச்சேரி.

21st Dec
• அகாடெமியில், புல்லாங்குழல் சிக்கில் மாலா சந்திரசேகரின் லெக்டெம் முடியும் தருவாயில் ஜயந்தியும், நானும் சென்றோம். லெக்டெம் முடிந்த பின் நடக்க இருக்கும் கலந்துரையாடலில், பிரச்னைக்குரிய விவாதங்களில் இறங்கப்போவதில்லை என்று மாலா உஷாராகவே சொன்ன போதும், சஷாங் மைக்கைப் பிடித்து அவரை வம்புக்கு இழுத்தார். நல்லவேளை நிகழ்ச்சியின் மட்டுறுத்துநராக இருந்த பப்பு வேணுகோபால்ராவ் விவாதம் முடிந்து விட்டதாக அறிவித்தார். மியூசிக் அகாடெமியின் காலை நேர லெக்டெம்கள் சிலருக்கு நல்ல “ஈகோ பூஸ்டராக” அமைகின்றது போலிருக்கின்றது.


• அடுத்தாக இடம் பெற்ற லெக்டெம், பத்மஸ்ரீ டாக்டர் பத்மா சுப்ரமணியன் அவர்களுடையது. “நாட்டியக் கலைக்குத் தஞ்சைப் பெரிய கோயில் ஆற்றிய பங்கு” என்பது அவரது சப்ஜெக்ட். இந்தத் தலைப்பில் பேசுவதற்கு அவரைவிடப் பொருத்தமான ஆள் வேறு யாரும் இல்லை. 60களில் தொல்லியல் துறையைச் சேர்ந்த கடைநிலை ஊழியரான பாலகிருஷ்ணன் என்பவர் கோபுரங்களில் வளர்ந்திருந்த அரச மரங்களை வெட்டச் சென்றாராம். அப்போது அங்கே கோபுரத்தில் புதிதாக ஒரு வாயிலைப் கண்டுபிடித்திருகின்றாராம். உள்ளே எட்டிப் பார்த்தால் அரிய வகை நாட்டியச் சிற்பங்கள். ஆனால் அங்கே யாரும் எளிதில் நுழையாதபடிக்கு வவ்வால் எச்சங்கள். ஏத்தனை வருடத்து எச்சங்கள் தெரியுமா? ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரம் வருடத்து எச்சங்கள். ஆமாம்? பல அடி உயரத்திற்கு ஆயிரம் வருடத்து வவ்வால் எச்சங்கள். அதனை அகற்றப் பணியாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள். பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பலரும் மயக்கமடைகின்றார்கள். சிலருக்கு ரத்தவாந்திகூட ஏற்படுகின்றது. எல்லாம் எச்சத்திலிருந்து வெளிப்பட்ட மீத்தேன் போன்ற வாயுக்களின் உபயம். பல்வேறு நபர்களின், பல மாதப் போரட்டத்திற்குப் பின், அழகிய பல சிற்பங்கள் கிடைக்கின்றன. எல்லாம் நாட்டியத்தின் ‘கரணங்களைக்” குறிப்பிடும் அரிய சிற்பஙள். மொத்தமுள்ள 108 கரணங்களில் 81 கரணங்களுக்கான சிற்பங்கள் அவை. இந்தச் சிற்பங்களை வைத்தே சுமார் 10 வருடங்கள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெறுகின்றார் பத்மா சுப்ரமணியன் அவர்கள்.

21st Dec
• மதியம் 1.45க்கு அகாடெமியில் ஷேர்தலை ரெங்கநாத ஷர்மாவின் கச்செரி. அம்மாவுடன் சென்றிருந்தேன். 2,00 மணியான பின்பும் கச்சேரி ஏனோ ஆரம்பிக்கவில்லை. அகாடெமியின் பங்சுவாலிட்டிக்கு என்னாச்சு? 2.05க்கு மைக்கில். ஷேர்தலை வந்து கொண்டிருப்பதாகத் தகவல். ஓரு வழியாக, 2.15க்குக் கச்சேரி தொடங்கியது. அதெப்படி இந்த மலையாளிகளுக்கு (யேசுதாஸ். காவலம், ஷேர்தலை…) மட்டும் இப்படிக் கருகருவென்று ஒரு தாடி. ஜயஸ்ரீக்காக அம்மா ‘த்யாராஜர் க்ருதிக்கள்’ புத்தகம் வாங்கினார்.

22nd Dec
• ஜயந்தியின் தோழி டாக்டர்.ப்ரியஸ்ரீ ராவ் “Textual Referece in Indian Classical Dance” என்ற தலைப்பில் அகாடெமியில் உரை நிகழ்த்துகின்றார். இந்திய நடனக்கலை குறித்தான நூல்கள் குறித்து ஏகப்பட்ட விஷயதானம் செய்கின்றார். ஆனால், ஸ்லைடு ஷோவில், ஏனோ மருந்துக்குக் கூட ஒரு படமும் இல்லை.23rd Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவின் ஆதரவில், வித்யாபாரதி மண்டபத்தில், ஸ்ரீராம் பரசுராம் “Gamakas, Anuswaras - Oceans of Musical Possibilities” என்ற தலைப்பில் லெக்டெம் கொடுத்தார். அம்மாவும், நானும் சென்றோம். மாமாவும். மாமியும்கூட வந்தார்கள். ஸ்ரீராம் வடநாட்டு இசையும் அறிந்தவராதலால், நெறையவே பாடியும், வயலின் வாசித்தும் கமகங்களை விளக்கினார். 


நிகழ்ச்சியின் முடிவில் நடிகரும், நண்பருமான சாருஹாசனுடன் நாங்கள் அளவளாவினோம். மாமா, பரமக்குடியில் சந்திரஹாசனுடன் வேலை செய்ததை நினைவு கூர்ந்தார். பின்னர், தான வரைந்திருந்த ஓவியத்தைக் காட்ட, சாரு தான் சின்ன வயதில் குதிரை படம் வரைந்திருந்தாகவும், அது கழுதை போலத் தோன்றியதால், படத்தின் கீழே, ‘கழுதை’ எழுதிவிட்டதகவும் கூறினார். படத்தை வாங்கிப் பார்த்த ஆசிரியர், “உனக்கு என்ன பிக்காசோ என்று நினைப்பா? படம் வரைந்து, கீழெ கையெழுத்தும் போட்டிருக்கியே!” என்று பகடி செய்தாராம்.• வலையப்பட்டி நாதாலயா ஆதரவில் அடையார் அனந்தபத்மநாபர் கோயிலில் நடபெற்ற சிக்கில் குருசரண் கச்சேரிக்கு அனிருத், ஜயந்தியுடன் சென்றிருந்தேன். 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கச்சேரி 7 மணி வரை ஆரம்பிக்கவில்லை. மிருதங்கம் திருவாரூர் பக்தவசலம் லேட்டாக வந்தார் போலிருகின்றது. அவரது சிஷ்யர்கள் மூவர் கலர், கலராக் குர்தா அணிந்து கொண்டு வந்து, சிக்கில் குருசரண் கேட்ச் கொடுத்தால், அதனைப் பிடிக்க வேண்டிய ஸ்லிப்ஸ் போல மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.


27th Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் நெய்வேலி சந்தானகோபாலனின் “மும்மூர்த்திகள் சங்கமம்” என்ற தலைப்பில் லெக்டெம். பாடுவதை விட, அதன் பொருளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பெரிதும் ஆர்வம் நெய்வேலிக்கு. சங்கீத மும்மூர்த்திகள் சந்தித்திருந்தால் என்னெவெல்லாம் பேசியிருந்திருப்பார்கள் என்ற ஒரு அழகான கற்பனை. ஏகப்பட்ட பாடல்களுக்கு பொருள் சொன்னார். செறிவான இந்தத் விஷயங்கள் 'ஓபரா' போன்ற நிகழ்ச்சிகள் நடத்தத் தோதான கருத்து. யாரேனும் முயற்சிக்கலாம்.• அடுத்து நான் ஆவலுடன் காணச் சென்றிருந்த டாக்டர் கடம் கார்த்திக்கின் ‘என்ஸெம்பிள்’ நிகழ்ச்சி. பெரும்பாலான சமயங்களில் நாம் விரும்பி மீண்டும் செல்லும் நிகழ்ச்சியில் கதாநாயகர்கள் சொதப்பி விடுவார்கள். ஆனால் ஒருபோது கார்த்தி ஏமாற்றியதில்லை. நான் பெரிதும் விரும்பும் எம்பார் கண்ணன் மற்றும் கீபோர்ட் சத்தியநாராயணாவும் அந்தக் குழுவில் உணடு. மற்றைய கலஞர்கள் போல அல்லாமல், தன்க்குத் திருப்தி அளிக்கும் ஆடியோ செட்டிங்க்ஸ், ஆடியன்ஸுக்கும் திருப்தியாக இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்த கொண்ட பின்வே நிகழ்ச்சியினைத் துவங்குவார். அன்றைய தினம் மேடையிலே இருந்த எல்லா கலைஞர்களும் ஒருவருக்கொருவர் உறவினர்களாம். வயலின் எம்பாரும், கீபோர்ட சத்தியாவும் மாமன், மருமான்கள். அதே போல மோர்சிங் கிருஷ்ணனும், கஞ்சிரா சுந்தர் குமாரும் மாமன், மருமான்கள். மிருதங்கம் பூங்குளம் சுப்பிரமணியனும், தானும் “தெய்வ மச்சான்கள்” என்றும் குறிப்பிட்டார் கார்த்திக். புஜங்கினி என்ற புதிய ராகம் வாசித்தார்கள். எம்பாரின் பாகேஸ்ரீ கேட்கக் கேட்கத் திகட்டாதது. அதில் ஒரு சிறு பகுதியினை எனது வலைப்பதிவில் தரவேற்றினேன். கார்த்திக் கம்போஸ் செய்திருந்த “நடையும் நவரசமும்” என்ற நவரச கன்னடா ஐட்டம் அன்றைய ஸ்பெஷல்.


• இன்றைய தினம் நல்ல வேட்டை. நெய்வேலி, கடம் கார்த்திக் ஆகியோரின் இனிய நிகழ்ச்சிக்குப் பின்னர், மாலையில் தியாகப் ப்ரம்ம கான சபா ஆதரவில் தி.நகர் வாணிமஹால் வளாகத்தில் உள்ள ஓபுல் ரெட்டி அரங்கில் திருச்சூர் ப்ரதர்ஸின் கச்சேரி. நாரதகான சபாவில் இம்முறை காணாமற் போன ஞானானந்தா கேட்டரர்ஸ்ஸின் கேண்டீன் இங்கு வாணி மஹாலில். வழக்கப் போல நல்ல உணவுடன் நல்ல உபசாரமும் கூட. தியாகப் ப்ரம்ம கான சபாவின் லோகோவில் தியாகராஜர் முன்பு இரண்டு டம்ளர்கள். காபியா? காபி சாப்பிட்டுக் கொண்டேதான், ‘இந்த சௌக்யமுமனினே’ என்று பாடியிரிருப்பாரோ பாகவதர்? மேடையில் பாடும் கலைஞர்கள் பின்னே பெரிய பெரிய கூல் லெமன் ட்ரிங் படங்கள். பாடகர்களுக்கு ஆகாதே!

28th Dec
•  ஸ்ரீபார்த்தசாரதி சவாவில் 'Manodharma Sangeetham - An extension of Kalpita Sangitam' என்ற தலைப்பினில் குழு விவாதம். சசிகிரண்தான் மட்டுறுதுநர். ரவி கிரண், சுகுணா புருஷோத்தமன், M.B.வேதவல்லி, N.S.ஜெயலக்ஷ்மி ஆகியோருடன் கலந்துரையாடல். ஜெயலக்ஷ்மி விஷயமாகப் பேசினார். ஒவ்வொரு முறையும் அவர் பேசி முடித்தவுடன் பார்வையாளர்கள் கைதட்டினார்கள் என்றால் பாருங்கள்.
எனக்கு முன்னாடி வரிசையில்  ஒரு 50-60 வயது மதிக்கத் தக்க தம்பதி உட்கார்ந்திருந்தார்கள். கணவர் ஒரு பையில் கையைவிட்டு ப்ளாக்பெர்ரி உள்ளிட்ட “கிஸ்மோஸா”கள் ஒவ்வொன்றாக எடுத்து என்னமோ பண்ணிக் கொண்டேயிருந்தார்.  பிறகு தொழில்முறை நண்பருக்கு 40 டன் SAE 1018 கிரேடு ஸ்டீல் பாருக்கு ஆர்டர் கொடுத்தார். அஞ்சு நிமிஷத்தில் கிளம்பிச் சென்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 
• ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஐயர் ப்ரதர்ஸின் இரட்டை வீணைக் கச்சேரி அகாடெமியில் கேட்டேன். கூட யாரும் வரவில்லை.  
• பாரத் கலாச்சார் ஒய்.ஜி.பி ஆடிட்டோரியத்தில் சித்ரா விஸ்வேஸ்வரன் குழுவினரின் “சக்தி த்ரயீ” நாட்டிய நிகழ்ச்சி. ஜயந்தியும் ஆடுகின்றாள். எனவே மாமியும், அனிருத்தும் நானும் சென்றோம். இந்த நிகழ்ழ்ச்சிக்கு முதல் நிகழ்ச்சி, கன்யாகுமரியின் வயலின் கச்சேரி. சற்றே சீக்கிரமாக வந்ததால் அதனையும் சிறிது கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. திருப்பதியில் பாடப்படும், “வேங்கட ரமணா கோவிந்தா” என்ற ரேவதி ராகப் பாடலை, ஏழெட்டு ராகங்கள் கொண்ட ராகமாலிகையாக மாற்றி, விறுவிறுவென வாசித்து ஜாலங்கள் செய்தார். உடன் வாசித்த அவர்தம் சிஷ்யரும் நன்றாகவே ஈடு கொடுத்தார். சித்ரா விஸ்வேரன் குழுவினரின் “சக்தி த்ரயீ” வெகு நேர்த்தியாகக் கோரியோகிராபி செய்யப்பட்டு முதன்முறையாக அரங்கேறியது. வழக்கம் போல நடனமணிகளின் ஆடை வடிவமைப்பு சிம்ப்ளி சூப்பர்ப். மெயின் ஐட்டமான சக்தி த்ரயீயில், முப்பெருந்தேவியரின் அற்புதங்களை விளக்கும் காட்சிகள். அதற்கான பாடலை கம்போஸ் செய்து கொடுத்திருப்பவர், ராஜ்குமார் பாரதி. பாடலைல் தூய தமிழ் வார்த்தைகளைப் பாவித்திருந்தார் என்பதைத் தவிர, எதுகையோ, மோனையோ, சந்தமோ சற்றும் இல்லை. இருந்தபோதும், பாட்டின் மெட்டின் காரணமாகவும், கோரியோகிராபியின் காரணமாகவும், பாடலின் குறை பெரியதாகத் தெரியவில்லை. கடைசி உருப்படியான, ரசிகப்ரியா தில்லானா, எனது பேவரைட் தில்லானாவாகும். விஸ்வேஸ்வரனின் ஒப்பற்ற படைப்பு அது.29th Dec
• ஜப்பானிய இசைக்கருவிகளில் புலமை பெற்றவரும், இந்திய இசையில் பெரிது ஆர்வம் கொண்டவரும், எனது நண்பருமான ப்ரொபஸர் டிம் ஹாஃப்மேன், அகாடெமியில், “இந்திய இசையில், ஜப்பானிய இசைக் கருவிகளான கோட்டொ, ஷாகுகாச்சி போன்றவற்றின் பங்கு” குறித்து உரை நிகழ்த்துகின்றார். கொடுக்கப்பட்ட நேரம் குறைவானதாலோ என்னவோ, மிகுந்த பதட்டத்துடனே உரையாடினார். சில வருடங்கள் முன்பு, மயிலை எம்.சி.டி.எம் பள்ளியில் இவர் நடத்திய லெக்டெமுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிகழ்ச்சி சுமாரகவே இருந்தது. இசைக் கச்சேரிகளின்போது மேடையிலுள்ள கலஞர்களை நிகழ்ச்சி நடக்கும்போதே வரைந்து அவர்களிடம் ஆட்டோகிராஃப் பெறும் எனது மாமனாருடன் (சுப்ரமணியன்) சென்று டிம் ஹாஃப்மேனுடன் போட்டொ எடுத்துக் கொண்டென். பேஸ்புக்கிலும் அதனைத் தரவேற்றினேன்.


30th Dec
• லலிதா ராம், பாரதி ராமசுப்பன் பற்றி சிலாக்கியமாய் விமர்சனம் எழுதியிருந்ததின் பேரில் அவர்தம் அகாடெமி 12 மணி கச்சேரிக்குச் சென்றேன். பாரதி ராமசுப்பன் ஏமாற்றவில்லை. நன்றாகவே பாடினார். லலிதா ராமுக்குத் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்.
• சாப்பிட்டுவிட்டு சிவகாமி பெத்கச்சி அரங்கினில், ஸ்ரீவல்சன் மேனன் கச்செரிக்குப் போக எண்ணி, சற்று சீக்கிரமாகவே போனதற்குக் கிடைத்த போனஸ், ஐயர் சகோரிகளின் கச்சேரி. அவர்களின் கல்யாணியும், இறுதியாகப் பாடின ராகேஸ்ரீ ராகத் தில்லானாவும் கேட்டேன். தில்லானா ஜோர்.
• ஐயர் சகோதரிகளளின் கச்சேரி முடிந்த பின், அடுத்தாக ஸ்ரீவல்சன் மேனன் அவர்களின் கச்சேரி. ஏற்கெனவே முன்பே ஒரு முறை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் கேட்ட குரல், இம்முறையும் ஏமாற்றவில்லை. இந்த சீசனில் கேட்ட நாலாவது கல்யாணியென்றாலும் திகட்டவில்லை.

31st Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் புஷ்பா ஆனந்தின் அபங் பஜனை. கிட்டத்தட்ட அருணா சாய்ராம் பாணியில் வாய்விட்டுப் பாடுகின்றார். அது போதாதென்று மைக் வேறு ஏனோ அலறுகின்றது. மைக் வால்யூமைக் குறைத்தால் நல்ல ட்யூன்களை ரசித்து கேட்கலாம்.  12 மணிக்கு அகாடெமியில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் சீடர் ஸ்வர்ணரேதஸ் கச்சேரி. ஒன்றும் சொல்லும்படி இல்லை.

• வழக்கம் போல இந்த வருடமும் புத்தாண்டு தினத்தை குடும்பத்துடன் மியூசிக் அகாடெமியில் கொண்டாடுவது என முடிவு செய்தோம். புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை செவ்வனே செய்திருந்தார் கர்னாடிகாவின் சசிகிரண். முதலில் ரமணியின் புல்லாங்குழலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பிறகு பந்துலராமா. அப்புறம் காயத்ரி வெங்கட்ராகவனின் கச்சேரி. அடுத்ததாக மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவின் பாட்டுக் கச்சேரி. மாயாமாளவகௌளையில் பாடின தேவதேவவும், தில்லானாவும் வித்யாசமாகவும், ரசிக்கும்படியும் இருந்தன. பிறகு சுபஸ்ரீ தணிக்காசலம் குழுவினரின் (சைந்தவி, வினயா, சித்ரவீணா கணேஷ், காயத்ரி) மெட்லீ. எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்யாவுடன் ஒரு சிறப்பு மெட்லீ. பிறகு புத்தாண்டு சரியாகத் துவங்கும் வேளையில் அனைத்துக் கலைஞர்களும் சேர்ந்திசை. அடுத்து மல்லாடி ச்கோதரர்கள் பாட, சூர்யப்ரகாஷ் நிறைவு செய்தார். குண்டேச்சா சகோதரர்களின் துருபத் இசையினைத் தொடர்ந்து, கடம் கார்த்திக்கின் கலக்கல் காமெடி. அடுத்து வந்தது சென்கோட்டை ஹரி குழுவினரின் ‘ஹரிநாம சங்கீர்த்தனம்’. அவருடைய ப்ருகாவுக்கு, குழுவில் யாரும் ஈடு கொடுக்க முடியவில்லை. மோண்டும் ஒரு முறை, விச்ராந்தியாகக் கேட்க வேண்டும். அடுத்து சூர்யப்ரகாஷ், துவங்க இருக்கும்போது, மணி இரண்டைத் தாண்டி விட்டது. வெளியே வந்து சங்கீதா கேட்டரர்ஸ் வழங்கிய கேசரியையும், புளியோதரையையும் சாப்பிட்டு வீடு வந்து சேர மணி விடியற்காலை 2.30.


வழக்கம் போல ஒரு கச்சேரிக்கும் டிக்கெட் எடுக்கவில்லை. எல்லாமே ஓசிக் கச்சேரிகள்தான். மொத்தத்தில்


கேட்டு ரசித்த கச்சேரிகள் – 11
இசையறிவை விருத்தி செய்ய லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன்ஸ் – 9
பார்த்து ரசித்த நாட்டிய நிகழ்ச்சி -1
கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் - 4
கச்சேரி பஸ் சங்கீத ஸ்பெஷல் நாளிதழுக்கு நான் அனுப்பிய சிறு கட்டுரைகள் பிரசுரமாயின. ஆன்லைன் வெர்ஷனிலும் இவற்றைக் காணலாம்.

-சிமுலேஷன்