Tuesday, March 30, 2010

சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

"சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?" என்பது உள்ளிட்ட சில கேள்விகள் வைத்திருந்தேன் எனது பதிவில் முன்பொரு முறை. அதனை மீள் பதிவு செய்கின்றேன் இப்போது. எனது பழைய பதிவுகளிலிருந்தோ அல்லது கூகிளாண்டவர் துணைகொண்டோ பதில்களைக் கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

- சிமுலேஷன்

1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சில கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-

2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?

3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?

5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?

6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?

7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது எப்படி வந்தது?

8. தேவகுசுமம் என்பது என்ன?

9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

Friday, March 19, 2010

ஊஞ்சல் - சுஜாதா - நாடகம் - நூல் விமர்சனம்



சிறுகதைகளிலும், நெடுங்கதைகளிலும் எப்படி தனக்கென்று ஒரு முத்திரை பதித்தாரோ, அப்படியே தமிழ் நாடகங்களிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் சுஜாதா. சமூக அவலங்கள், யதார்த்தம், எள்ளல், நகைச்சுவை, சோகம் என பலதரப்பட்ட விஷயங்களையும் அவர் நாடகங்களில் காணலாம்.

அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று "ஊஞ்சல்" ஆகும். இதே நாடகம் பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை நடிக்கப்பட்டது. இந்த நாடகத்தினைப் படிக்கும்போது, தனக்கு ஒரு நல்ல பாத்திரம் இருப்பதாக நினைத்து பூர்ணம் விஸ்வநாதன் இந்த நாடகத்தை ஏற்று நடித்தாரா, இல்லை, பூர்ணத்தை மனதில் வைத்து, சுஜாதா நாடகம் எழுதினாரா என்று தெரியாது. அவ்வளவு நல்ல பாத்திரப் பொருத்தம்.

ஐம்பத்தெட்டு வயதுடைய வரதராஜன்தான் கதையின் நாயகர். அவருடைய மகள் கல்யாணியின் சம்பளத்தில் ஜீவனம் ஓடிக் கொண்டிருக்கிறது. மனைவியிடம் அவ்வப்போது பாட்டு வாங்கிக் கொண்டிருகின்றார். தற்காலத்தால் உதானீசப்படுத்தபடும் ஒரு பழங்காலத்து மனிதர் அவர். தனது புரோட்டோடைப் ஒருநாள் உலகத்தையே புரட்டிப் போட்டுவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு கனவுலக மனிதர். ஆனால், கையில் காசில்லை. கால் பாக்கட் சிகரெட்டுக்குக் கூட, கல்யாணியின் கையை எதிர்பார்த்திருப்பவர். இந்த லட்சணத்தில் மகளுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்? தன்னிடம் கை கட்டி  வேலை பார்த்த மதிவதனம் அவருக்கென்று ஒரு வேலை போட்டுக் கொடுத்தவுடன், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு நிம்மதி ஏற்படுகின்றது. ஆனால் அந்த நிம்மதி அதிக நேரம் நீடிப்பதில்லை.  

எப்போதும் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு பழமைக்கால நினவுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கின்றார். இந்த ஊஞ்சலும் அவரும் ஒன்றுதான் என்பது சுஜாதா இறுதிக் காட்சியில் தெரியப்ப்டுத்துகின்றார்.

சிறுகதைகளிலேயே பேச்சுத் தமிழைப் பயன்படுத்துபவர், நாடகம் என்றால் கேட்கவே வேண்டாம்.

"அப்பா: ஆமா...நீ பாங்க்கிலே வேலை பாக்கிறே! இவன் ஐ.ஐ.டியில் இருக்கான். எப்படிக் காதல் உண்டாச்சு? கில்லாடிரா நீ!"


"நேரா வந்து வுயுந்தான்யா..."

"பாவம் டைவரு. எவ்வளளோ சாலாக்காத்தான் ப்ரேக் போட்டாரு."

பேச்சுத் தமிழ் தவிர, பங்க்சுவேஷன்ஸும் அங்கங்கே தேவையான அளவில் இருந்து, படிப்பவர்களுக்கு என்ன சூழ்நிலை என்பதனை எளிதில் புரிய வைக்கும். மேலும் அடைப்புக் குறிக்குள் காட்சியில்  என்ன நடக்கின்றது என்பதனையும் விளக்குகிறார். இந்த அடைப்புக்குறிக் குறிப்புகளைப் படிக்கும்போது, மேடையிலே ஏற்ற வேண்டிய நாடகத்துக்கான ஸ்க்ரிப்ட்தான் இது என்று தெரிகின்றது. 

வரதாராஜன், அவரது மனைவி, மகள் கல்யாணி, கிரி, மதிவதனன், என்று கிட்டத்தட்ட எல்லாப் பாத்திரங்களுமே, நாடகம் தானே இது என்றுப் பேசிப் பேசி அறுக்காமல், சொல்லின் செல்வர்களாக அளவாகப் பேசுகின்றார்கள். எனவே சுஜாதாவின் சிறுகதையினை எப்படி ரசிக்கின்றோமோ அப்படியே, இந்த ஊஞ்சல் நாடகத்தினையும் ரசிக்க முடிகின்றது. வரதராஜன் தற்கால நிலைமையும், முடிவும் படிப்பவர்ககள் மனதை அசைக்கும் என்பது உண்மை. அதுவே சுஜாதாவின் வெற்றி.


தலைப்பு:    ஊஞ்சல்  / உங்களில் ஒரு கணேஷ் 
பதிப்பாண்டு: 1989 
வெளியீடு:   விசா பப்ளிகேஷன்ஸ் 
விலை:      Rs.55

- சிமுலேஷன்
     

Thursday, March 18, 2010

பாலங்கள் - சிவசங்கரி - நூல் விமர்சனம்


சிவசங்கரி அவர்கள் எழுதிய "பாலங்கள்" நாவலுக்கு என் அம்மா கோவை வானொலியில் வாசித்த சிறு நூல் விமர்சனம். (ஒலிபரப்பானது 1984 ஆம் ஆண்டாக இருக்கலாமென்று நினைக்கின்றேன்).

Get this widget | Track details | eSnips Social DNA





பதிவர் "ஆர்வி" கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த ஒலிபரப்பின் ட்ரான்ஸ்க்ரிப்ட்டினையும் இங்கு பதிவிடுகின்றேன்.

- சிமுலேஷன்

Monday, March 15, 2010

யார் எழுத்து? ஒரு புதிர்

தமிழ் எழுத்துக்களை ஆழ்ந்து படிப்பவரா நீங்கள்? உங்களுக்காக ஒரு புதிர். "யார் எழுத்துக்கள் இவை?" என்று கூறுங்கள். ஐந்து விடைகளையும் சரியாகக் கண்டுபிடிக்கிறவர்களே வெற்றி பெற்றவர்கள்.

1. "நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!" என்று மிகச் சிறு வயதிலிருந்தே பிரகடனப்படுத்தத் தொடங்கிவிட்டான் பரசு. அவனுடைய அக்காவும், அண்ணாவும் குழந்தையாயிருந்தபோது சப்பியது கட்டை விரலை; ஆனால் பரசு பாம்பு விரல், மோதிரவிரல் இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக் கொண்டு சப்பினான். அவனுடைய அக்காவும், அண்ணாவும் சற்றே உரக்க அதட்டினால் போதும். விசித்து விசித்து அழத் தொடங்கி விடுவார்கள். ஆனால், பரசு சரியான கல்லுளி மங்கனாக இருந்தான்."

2. "நூறு ரூபாய் முன்பணமும் கொடுத்துவிட்டுச் சென்றார் குமாரவேலுப் பணிக்கர். ஒரு மாத காலத்தில் படத்தை முடித்துத் தந்துவிடவேண்டும் என்பது பேச்சு. சுப்பையா ஆசாரி ஒப்புக் கொண்டார். சரியான சான்ஸ் அடித்துவிட்டது. சீதையின் முழு உருவப் படம். முன்பணம் ஐநூறு ரூபாய் வேறு. திருப்தியாக இருந்தால், மேலும் ஒரேடியாக இருபது படத்துக்கு ஆர்டர். மனசில் குதூகலம் பொங்கி வழிந்தது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் முக்கிய சந்திப்புகளில் தொங்கப் போகின்றது. நாடகத் திரை போல ஒரு படம். கூடிக் கூடிப் பார்க்க மாட்டார்களா ஜனங்கள்? "சீதை மார்க் சீயக்காய் தூள்" என்ற கொட்டை எழுத்துகள் கண்களைக் கவ்வினாலும் படத்தின் அடிப்பக்கம், வலது கோடியில் 'சுப்பையா ஆசாரி' என்ற பெயர் புலப்படாமலா போகிவிடும்?"

3. "அந்த விளக்குக்குப் பக்கத்தில் நிறுத்தடா" என்றார் கந்தசாமிப்பிள்ளை. வண்டி நின்றது, இருவரும் இறங்கினார்கள்.
கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பலபளப்பான் ஒற்றை ரூபாய் நோட்டு  ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.
கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!
"என்னடா, பெரியவரைப் பார்த்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது?" என்று அதட்டினார் கந்தசாமிப்பிள்ளை.
"அப்படி சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?" என்றார் கடவுள்."

4. "மழை பெய்யத் துவங்கியதும் சில ஆண்கள் வேட்டியை மடித்துக் கொண்டு தெருவில் இறங்கி வேண்டுமென்றே அலைவதைப் பார்த்திருக்கிறாள். "மழையிலே நனையிற மாதிரி சுகம் உலகத்துல எதுவும் இல்லை" என்று அவர்கள் உரக்க அழுத்தந்திருத்தமாய்ப் பேசுவதைக் கேட்டு வியந்திருக்கிறாள். அப்படி அலைபவர்களை உற்றுப் பார்த்திருக்கிறாள். அவர்கள் மழையை அனுபவிப்பதாய் சொல்லுகிறார்களே தவிர, ஒரு பொழுதும் மழையை அனுபவிக்கவில்லை என்பது வெகு சீக்கிரம் புரிந்து விட்டது. மழைக்கு எதிரே ஒரு முரட்டுத்தனம் காட்ட அவர்கள் முயல்கிறார்கள். மழை பூமியில் ஒரு முரட்டுத்தனம் காட்ட, பதிலுக்கு மழையை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறார்கள். அதனால்தான் தெருவில் இறங்கி முன்னும் பின்னும் அலைந்து தன் பலத்தைக் காட்டிக் கொள்கிறார்கள். மழையை அப்படி வரவேற்கக் கூடாது. எதிர்த்து உரக்கக் கூச்சலிடக் கூடாது. ராஜா வர, அவரரெதிரே கம்பு சுழற்றலாம். அது வரவேற்புதான். ஆனாலும், இரண்டு புறமும் உப்பரிகையில் நின்றுகொண்டு, அரசர் மீது பூ தூவுவது எத்தனை அழகு." 

5. "அப்பா: ஆமா... நீ பேங்கிலே வேலை பாக்கிறே! இவன் ஐ.ஐ.டியில் இருக்கான். எப்படிக் காதல் உண்டாச்சு? கில்லடிரா நீ!
கிரி: காதல்னு சொல்ல முடியாதுப்பா. இவ பாங்குலே கம்ப்யூட்டரஸேஷன் பண்றாங்க. அதுக்கு ட்ரெயினிங் ஐ.ஐ.டியில் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. என் தலையெழுத்து இவளுக்கு கம்ப்யூட்டர்னா என்னன்னு சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இவ கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே எங்கேயோ சந்தடி சாக்கில் காத்ல் மாதிரி குன்ஸா ஒண்ணு புறப்பட்டுச்சு."

- சிமுலேஷன்

Sunday, March 14, 2010

போலிச் சாமியாரும் வேண்டாம்; நல்ல சாமியாரும் வேண்டாம்

சமீப காலங்களில் வரும் போலிச்சாமியார்களைக் "குறி" வைத்து வரும் செய்திகளைப் படிக்கும் பலரும், இந்த மாதிரி ஆசாமிகளால், நல்ல சாமியார்களுக்கும் கெட்ட பெயர் என்று சொல்லி வருகின்றனர். நல்ல சாமியார் யார்? போலிச் சாமியார் யார்?" என்று கேட்டால், சுலபமாக "மாட்டிக் கொண்டவர் போலிச்சாமியார்", என்றும் "மாட்டிக் கொள்ளாதவர் நல்ல சாமியார்" என்றும் கூறிவிடலாம்.

போலியோ, அசலோ, மக்ககள் எதற்காக இவர்கள் பின்னே போகின்றனர்?  மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு சாமியார்கள், பீடாதிபதிகள், ஸ்வாமிஜிக்கள் தீர்வு தருவார்கள் என்றே செல்கின்றார்கள் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையிலேயே பிரச்னைகளுக்காக இவர்களிடம் செல்லும் மக்களின் விழுக்காடு மிகக் குறைவே என்று எண்ணுகின்றேன். அப்படியானால் பின்னர் பெரும்பான்மை மக்கள் எதற்காக இவர்கள் பின்னே செல்கின்றனர்?

உளவியலாளர் மாஸ்லோவ் அவர்களின் "தேவைகளின் படிநிலை" (Maslow's Hierarchy of Needs) தத்துவத்தின்படி மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்தபடியாக ஆசைப்படுவது, குழுவில் ஒட்டிக் கொள்ளும் குணமாகும். அந்தக் குழு 'லயன்ஸ் கிளப்'பாக இருக்கலாம்; "ரோட்டரி கிளப்'பாக இருக்கலாம்; "ஆசிரியர் கூட்டணி" யாக இருக்கலாம்; "அமைந்த கரை ஆட்டோ ஒட்டுநர் சங்கமா"க இருக்கலாம்; அல்லது கோயம்பேடு அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கமாக இருக்கலாம். அதிலும் அடிப்படை உறுப்பினராக மட்டும் இல்லாமல், ஏதேனும் ஒரு இணை, துணை, பொதுச் செயலாளராகவோ அல்லது செயல் குழு உறுப்பினராகவோ இருத்தல் சிறப்பு. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு அமைப்பிலும் உறுப்பினராக ஒரு தகுதி  வேண்டும். (ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், அழுகும் பொருள் வியாபாரி போன்று). இந்த மாதிரி எந்தத் தகுதியும் இல்லாத மனிதர்களை வரவேற்க இருக்கும் புகலிடங்கள் இரண்டே இரண்டு. ஒன்று அரசியல். மற்றொன்று ஆன்மிகம். நம்மில் பெரும்பாலான காமன் மேன்க்ளுக்கு, ஆசிட் வீச்சு, ஆட்டோ பயம் காரணமாக,  அரசியல் என்றாலே அலர்ஜியாகிவிடுகின்றது. எனவே எளிதான புகலிடம் ஆன்மீகம் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் எனப்படும் சாமியார்கள், ஸ்வாமிஜிக்கள், குருஜிக்கள் மற்றும் பீடாதிபதிகள்.

இந்த மாதிரி "மனிதர்களிடம்" போகப் போக, ஏற்படும் மாற்றங்கள்தான் என்னென்ன?

  • அலுவலகப் பணியில் ஈடுபட்டாலும், மனதில் எப்போது குருவையே நினைத்துக் கொண்டிருத்தல்.
  • தனது முன்னோர்கள் கும்பிட்ட தெய்வங்களைப் புறந்தள்ளிவிட்டு, குருஜி புகைப்படம் பொருந்திய "ஸ்டிக்கரை', க்ளாசட் தவிர, வீட்டு வாசப்படி, அலுவலக மேஜை, கார் கண்ணாடி, பர்ஸ், டெஸ்க் டாப் மானிட்டர் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஒட்டி "நான் இன்னார் சீடன்; நான் இன்ன குழு உறுப்பினன்" என்று பறை சாட்டிக் கொண்டிருத்தல்.
  • "தனது பையன் வெளிநாடு போக வேண்டுமா? எந்தத் தேதியிலே விசா அப்ளிகேஷன் வாங்க வேண்டும்? மகள் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' படிக்க வேண்டுமா" அல்லது 'இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி' படிக்க வேண்டுமா?" என்ற முடிவுகளை, குருஜிதான் எடுப்பார் என்று எண்ணிக் காத்திருத்தல்.
  • தனது குருஜியே, நாக்பூரிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும் ஜூனியர் மோஸ்ட ஊழியன் நவீனுக்கும் குருஜி என்று தெரியவந்தால் மற்ற பழைய  நண்பர்களைக் கத்தரித்து விட்டு, காபி இடைவேளை, உணவு இடைவேளை என்ற எல்லா நேரங்களிலும் அவனுடனே குருஜியின் மகிமை குறித்துப் பேசிப் பேசி புளகாங்கிதப்படுதல். (சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவர், மற்ற நண்பரிடம், முதல் நாள் ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு வந்ததாகச் சொல்ல, மற்ற நண்பர் அழத் தொடங்கிவிட்டார். என்னவென்று கேட்டதில், தான் அப்போதுதான் அந்தக் குருஜி பற்றி நினைத்தாகவும், அந்த சமயத்தில் இவர் ஆசிரமம் சென்று வந்ததாகச் சொன்னது 'என்னே ஒரு பகவத் சங்கல்பம்' என்று சிலாகித்தார்.)
  • அருமை மகளின் பள்ளி ஆண்டு விழாவுக்கு, அலுவலக வேலை காரணமாக வரமுடியாவிட்டாலும், மணநாளன்று, மனைவியுடன் 'கொஞ்ச' நேரம் செலவிட முடியாவிட்டாலும், குருஜியின் பிறந்த நாளுக்கு (80ஆவது அல்லது 90ஆவதாக இருக்கலாம்) வெளிநாட்டில் இருந்தாலும் சொந்த விடுமுறை எடுத்துக் கொண்டு, சொந்தச் செலவில் வருதல். 
  • தாம்பத்ய வாழ்க்கைப் பிரச்னை போன்ற அந்தரங்க பிரச்னைகளுக்குக் கூட, பத்து வயதில் பிரம்மச்சாரியாய் ஆசிரம வாழ்க்கையைத் துவங்கி, கிரகஸ்தாரம் என்றாலே என்னவென்று அறியாத பீடாதிபதியிடம் புத்திமதி கேட்டல்.   
  • சமூக நிகழ்ச்சிகளுக்கும், தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் முடிச்சுப் போட்டுப் பிறகு, மணிக்கணக்காக அந்த முடிச்சின் அழகுக்கு தனது குருவே காரணம் என்று வியந்து கொண்டிருப்பது.
  • வாழ்க்கையில் முடிவெடுக்க வேண்டிய முக்கியத் தருணங்களில், அனைத்தையும் பகவான் பாத்துக் கொள்வான் என்று பஜனை பண்ணிக் கொண்டிருப்பது. (2009ல் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், தங்கள் வேலை எந்நேரம் பறிபோகுமோ என்று அஞ்சி, மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த சமயம், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 'பிசினஸ் அனலிஸ்ட்' நண்பரொவர் (சொந்தக் காசில்) பத்து லட்ச ரூபாய் செலவில் இன்னோவா கார் ஒன்று வாங்கினார். எதற்கு இந்தச் செலவு இந்தச் சமயத்தில் என்று கேட்க அவர் சொன்னது. "எனது குருஜி நாடு முழுதும் பாத யாத்திரை (!) போகப் போகின்றார். அவருக்கு பைலட் கார் ஓட்டிச் செல்பராகத் தன்னைத் தேர்வு செய்திருப்பதாகவும், அதற்கு இந்தக் காரே ஏற்றது என்றும் கூறினார்!)
  • குருஜி ஏடாகூடமாக மாட்டிக் கொண்டுவிட்டாலும், மீசையில் மண் ஒட்டவில்லை ரேஞ்சுக்கு, 'அவர் மனித அவதாரம்தானே! எனவே மனிதக் கர்மாக்கள் படும் கஷ்டங்களையெல்லாம் அவரும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்" என்று சப்பைக் கட்டுக் கட்டுதல். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு. "காய்ச்ச மரம்தானே கல்லடி படும், வெளிநாட்டு சதி", போன்ற கிளிஷேக்கள்.

சாமியார்கள், குருஜிக்கள் நடத்தும் யோகப் பயிற்சி போன்றவைகளினால் உடல் நலம் முன்னேறினாலும், தியானப் பயிற்சி போன்றவைகளினால் மன அமைதி கிட்டினாலும், 'அரிது , அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று புகழப்பட்ட மானிட மூளையக் கழட்டிவிட்டு, நரஸ்துதி செய்யச் சொல்வதால் போலிச் சாமியாரும் வேண்டாம். நல்ல சாமியாரும் வேண்டாம்.

- சிமுலேஷன் 

    Saturday, March 13, 2010

    தேவை: அம்மா

    ஒரு முறை ரெக்கார்டிங்கில் மிக்சிங்கின்போது ஒரு குழந்தை "அம்மா" என்று கத்த வேண்டிய சவுண்ட் எபக்ட் வர வேண்டியிருந்தது. அதுக்காக, ரெக்கர்டிங் ரூமுக்கு வெளியே நின்றிருந்த ஒரு சிறுவனைத் தாஜா பண்ணி, பாடலாம் வா என்று உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார் இசைக் குழுவை சேர்ந்த வைரம்.

    மைக் முன்னாடி அவனை நிற்க வைத்தார். ஸ்க்ரீன் மேலே பாடல் ஓடுகிறது. டேக் ஆரம்பமாகிவிட்டது. குழந்தை கத்தும் காட்சி.

    மைக் முன்னாடி நின்ற சிறுவன் முதுகில் பளாரென்று ஓர் அடி வைத்தார் வைரம். அவன் 'அம்மா; என்று கத்துவான் என்பது அவர் நினைப்பு. ஆனால், அந்தப் பையன் சடாரென்று திரும்பிக் கெட்ட வார்த்தைகளில் அவரைத் திட்டினான்.


    - சிமுலேஷன்

    Friday, March 12, 2010

    வாய்மையே சில சமயம் வெல்லும் - சுஜாதா - நூல் விமர்சனம்


    1984ல் சுஜாதா ஆனந்த விகடனில் "வாய்மையே வெல்லும்" என்று ஒரு தொடர்கதை எழுதினார். அது பின்னர் தூர்தர்ஷனில் சீரியலாக் வரத் தொடங்கியது. யாவரும் நலம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜன் சுஜாதவுக்குப் போன் செய்கிறார் அவசரமாக. அந்தச் சீரியலுக்கு சில மாதர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும், எனவே அவர் உடனே நிலையத்திற்கு வர வேண்டுமென்றும் சொல்கிறார்.


    தொடரை உடனே நிறுத்த வேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதமோ அல்லது சாலை மறியலோ செய்யப்போவதாகச் சொல்கிறார்கள் தூர்தர்ஷன் அலுவலகத்தில் வீற்றிருந்த மாதரசிகள். சுஜாதாவை கண்ணகி பார்வை பார்க்கிறாரகள்.

    "இந்தக் கதை தொடர்கதையாக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்று, அதன்பின் புத்தகமாக நான்கு பதிப்புகள் வந்துவிட்டது. இதுவரை யாருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே! இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது!" சொல்லியிருக்கிறார் வாத்யார். அவர்கள் கவலைப்படவில்லை. கதை நிறுத்தப்பட வேண்டும். இல்லை திருத்தப்பட வேண்டும். அவ்வளவுதான். பீரியட்!

    நடராஜன் ஓர் அரசாங்க அதிகாரியின் சாமர்த்தியத்துடன் தீர்ப்பளித்தார். "இதை நான் டில்லிக்கு ரிப்போர்ட்டாக அனுப்புகின்றேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து தக்க நடவடிக்கை எடுக்கலாம்," என்றார். டில்லிக்குப் போய் திரும்பி வருவதற்குள் அந்த சீரியலின் குறுகிய வாழ் நாளான பதிமூன்று வாரம் முடிந்து விட்டது. அதன்பின் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

    மேற்கண்ட விஷயத்தை சுஜாதாவின் 2ஆம் ஆண்டு நினைவுநாளில் நம்மோடு பகிர்ந்து கொண்டவர், மேற்படி தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜனேதான்.

    இப்படி பல எதிர்ப்புகளை மீறி தூர்தர்ஷனில் வந்தது சுஜாதாவினுடைய எந்தக் கதை என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதுதான் அதே கதையான "வாய்மையே சிலசமயம் வெல்லும்" குறுநாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. (தூர்தர்ஷனில் "மறக்க முடியுமா" என்ற டைட்டிலில்)

    முதல் அத்தியாயத்திலேயே சுஜாதாவின் தீவிர விவரிக்கும் பாணி துவங்கிவிடுகின்றது.

    "கதை ஆரம்பிக்கும் ஜூன் மாதம் பதிமூன்றாம் தேதி கெட்ட காரியங்கள் பண்ணிய சென்னை நகரத்தைப் பவுன் கலர் சூரியன் எழுப்பியது. தூக்கம் நனைந்த கண்களுடன் தொண்ணூறு சதமானம் பதிவிரதா ஸ்தீகள் ப்ளாஸ்டிக் பால் வாங்கப் போனார்கள். தேர்தல் எழுதிய சுவரொட்டிகளை வாக்காளர்கள் நின்றபடி நனைத்துக் கொண்டிருந்தார்கள். கண்ணம்மாப்பேட்டை பெண்கள் இரவில் குடித்த கணவர்களை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். மெயின் ரோடின் விளிம்பில் வயதானவர்கள் நீண்ட ஆயுளை வேண்டி கான்வாஸ் கால்களில் ஓடினார்கள். பிள்ளையார் கோயில் தாண்டி மூசாசேட் தெருவில் நுழைந்து, கேபி பிக்சர்ஸ் போர்டைக் கடந்து மத்தியதர மொட்டை வீடுகள் சிலவற்றில் மஞ்சள் வர்ணம் அடித்த பழைய காலத்து வீடு தெரிகிறதே, அதன் கேட்டுக் கதவைக் திறந்துகொண்டு உள் நுழையுமுன் நாய் குரைக்கிறது. பாதகமில்லை. அந்த நாய் அப்பிராணி. ஏதோ சாஸ்திரத்துக்குக் குரைக்கும்; மோர்க் குழம்பு நக்கும். அப்பளம் தின்னும். பெயர் சீனு. ரங்கசாமி அய்யங்காரின் வீட்டில் ஒரு நாள் வந்து ஒட்டிக்கொண்டு விட்ட நாய். ஒரு ஜம் பிஸ்கட் போட்டால் பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் காட்டிக் கொடுக்கும். பார்த்தீர்களா...! குரைத்துவிட்டு, உடனே பரிபூரண அந்நியரான உங்களைப் பார்த்து வாலாட்டுகிறது. அதைக் கடந்து இடது பக்கம் வந்தால் அறை வாசலில் ஏவி.விஜயகுமார் என்று போர்ட் போட்டிருக்கிரதே. அங்கேதான் நமக்கு ஜோலி. கதவைத் தட்ட வேண்டாம். திறந்தே இருககிறது. ஏவி.வி முகச்சவரம் செய்து முடிக்கும் வரை அறையைப் பார்க்கலாம்."     

    கதாநாயகன் விஜயகுமாரைப் பற்றி அறிமுகம் செய்ய இவ்வளவு விவரங்கள் தருகின்றார். ஆனால் எதுவுமே போரடிக்கவில்லை. கதைச் சுருக்கம் என்னவென்றால் ஏவி.வி குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரரின் பதின்மவயது மகளை ஒரு தடியன் டூரின் போது பொய் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் ஆபாசப் படங்கள் எடுத்துவிடுகின்றான். ஏண்டா எடுத்தான் என்றால் அவனுக்குள் ஒரு 'சிவப்பு ரோஜாக்கள்' கதை. கதாநாயகன் உதவியால் விஷயம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது. ஆனால் சமூக சேவகர்களும், ஊடகங்களும் சும்மா இருக்க மாட்டேங்கிறார்கள், தங்கள் தேவைக்காக விஷயத்தைப் பெரிது பண்ணுகின்றன. நாயகி விஜியின் எதிர்காலம் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. 

    கதையின் ஆரம்பத்தில் ஓரிரு சம்பவங்கள் நகைச்சுவையுடன் துவங்குகின்றது. இந்தப் பத்தியைப் படிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

    ரங்கசாமி அய்யங்கார் தனது மகள் சூர்யாவுக்கு கணக்குப் பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டிருகின்றார். சூர்யா மழலையுடன், "ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரு வேலையை ஒரு மணிநேரத்தில் செய்தால், இரண்டு ஆணும், இரண்டு பெண்ணும் அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்வார்கள்?" என்று அப்பாவைப் பார்த்தாள். அய்யங்கார் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, "ஒரு ஆணும், ஒரு பெண்ணும் செய்யறதை 'எக்ஸ்' னு வெச்சுக்கோ..." என்றார். உள்ளே நுழைந்த மனைவி, "இதெல்லாம்தான் குழந்தைக்குச் சொல்லித் தரதா?" என்றாள். 'என்னடி பண்றது. பொஸ்தகத்தில் போட்டிருக்கே...?"

    மேற்படி நகைச்சுவை சமாச்சாரங்களுக்குப் பிறகு எடுக்கிறது எக்ஸ்பிரஸ் வேகம்.  டூர் போகும் விஜியை வினோத் திட்டம் போட்டு அழைத்துப் போகும் நேரத்தில் படிக்கும் அனைவருக்கும் பதைபதைக்கும். சமூக சேவகர்களும், ஊடகங்களும் எப்படிப் பொறுப்பற்று இயங்கி, விஜியின் கையறு நிலைக்குக் காரணமாகின்றன என்று தெரியும்போது சுஜாதா எப்படி வாசகர்களைப் பாதிக்கிறார் என்று புரிகின்றது.

    சிறுகதை என்றால் மட்டும்தான் நச்சென்ற முடிவு அவசியமா? குறு நாவல்களிலும் இது சாத்தியமே என்று இறுதி அத்தியாயத்தில் சுஜாதா தனது முத்திரையைப் பதித்து  தலைப்பை நியாப்படுத்துகின்றார்.

    பை தி வே, இந்தத் தொடருக்கு மாதர் சங்கங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தன என்று சுஜாதா போலவே நாமும் குழம்பிப் போகின்றோம். ஒரு பெண்ணை ஆபாசப் படம் எடுத்ததற்கா? இல்லை தகாத உறவு வைத்திருக்கும் சில பாத்திரங்களுக்காகவா? புரியவில்லை. புரியாதுதான். ஆசிட் முட்டை, அருவருக்கத்தக்க உறவுகள் இல்லாத டி.வி. சீரியல்களே இல்லை என்னும் இந்தக் காலத்தில் இருக்கும் மக்களுக்கு இருபது வருடங்கள் பின்னோக்கிப் பயணிப்பது கடினம்தான்.

    - சிமுலேஷன்

    Thursday, March 11, 2010

    ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-03 (Allied Ragas) -ஆரபி, தேவகாந்தாரி

    முன்னுரை-01

    முன்னுரை-02

    "ராமகிருஷ்ணன் சார் ஜிலேபி வங்கிண்டு வந்திருக்கார் பாரு. எல்லாருக்கும் டப்பாவை பாஸ் பண்ணுடீ"

    "ஆஹா. இது ஒண்னும் ஜிலேபி இல்லையே. ஜாங்கிரின்னா இது. ஆனா என்ன? ரொம்ப நன்னா தேனாட்டம் இருக்கு."

    "ஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் என்ன வித்தியாசம் மாமா?"


    "ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். நம்ம ஆரபியும், தேவகாந்தாரியும் போல. ஜிலேபி மைதா மாவுலே செய்யறது. ஜாங்கிரி உளுந்து மாவுலே செய்யறது."

    "சாப்பாட்டு ராமன்களா. போதும் ஜிலேபி, ஜாங்கிரி டிஸ்கஷன். அல்லைட் ராகங்களைப்பத்தி எப்பப் பேசப்போறீங்க?"

    "சரிதான். எங்க விட்டேன் டிஸ்கஷனை? ஸ்வரங்களைப் பத்திப் பேசிண்டிருந்தேன். கன்டினியூ பண்ணலாமா?"

    "சார். இலவசக் கொத்தனார் சொல்ற மாதிரி ஸ்வரம், கைசிக நிஷாதம், காகலிக நிஷாதம் அப்படீன்னெல்லாம் சொல்லிப் பயமுறுத்த வேண்டாம். எங்களை மாதிரி பாமர மக்களுக்கும் புரியறா மாதிரி சொல்லணும்."

    "பாமர மக்களாவே இருப்போம். ஆனா ஒசத்தியான விஷயத்தைப் பத்தி மட்டும் சுளுவாத் தெரிஞ்சுக்கணும்னா முடியறா கதையா என்ன? கொஞ்சம் முயற்சி பண்ணி, கொஞ்ச கொஞ்சமா புது விஷயமும் தெரிஞ்சுண்டாத்தான் எதையும் ஆழமாப் புரிஞ்சுக்க முடியும். கொஞ்ச நேரம் முன்னாடி ஜிலேபிக்கும், ஜாங்கிரிக்கும் என்ன வித்தியாசம்ன்னு பாத்தோம். ஒண்ணுதுக்கு மைதா மாவு, இன்னொண்ணுக்கு உளுந்து மாவு அப்படீன்னு சொன்னவுடனே எல்லாருக்கும் புரிஞ்சுது. "எனக்கு மைதா மாவு, உளுந்து மாவு அப்படின்னாப் புரியாது. இன்னமும் கொஞ்சம் சுலபமாப் புரியற மாதிரி சொல்லுங்க"ன்னு இப்ப யாராவது சொன்னா என்னத்தச் சொல்ல முடியும்? அதனாலதான் சொல்லறேன். ராகங்களுக்கிடையே வித்தியாசம், ஒத்துமை எல்லாம் தெரிஞ்சுக்கணும்னா, கொஞ்சம் அடிப்படை விஷயங்களையும் தெரிஞ்சு கொண்டாகணும்."

    "ஓகே. ஓகே. சிமுலேஷன் சார். ரொம்ப நேரமா இன்ட்ரோ அப்படீ, இப்பாடீன்னே பீடிகை பலமா ஓடறது. சீக்கிரம் சப்ஜெக்டுக்கு வாங்கோ. பதிவர்கள் எல்லாம் வேற வெயிட்டிங்"

    "ஒலிகளைப் பலவித ஃப்ரீக்வன்சிகளுக்குத் தகுந்தாற்போல் "ஸ, ரி, க, ம, ப, த, நி" எனப்படும் ஏழு (ஸப்த) ஸ்வரங்களாப் பிரிச்சு வச்சிருக்கோம். இதைத்தான் "ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்" என்று கூறுகிறோம். இந்த சப்த ஸ்வரங்களில் ஸட்ஜம், பஞ்சமம் தவிர மத்ததுக்கெல்லாம் உட்பிரிவுகளும் உண்டு. (சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம் என்பது போல்) ஒரு இந்திய ராகம்னு எடுத்துக் கொண்டால் (ஹிந்துஸ்தானி அல்லது கர்னாடிக்) இந்த ஸ்வரங்களைப் அடிப்படையாகக் கொண்டுதான் அமையும். இந்த ஏழு ஸ்வரங்களையும் ஒரு முறை ஏறு வரிசையிலும், அடுத்தாக இறங்கு வரிசையிலும் பாடினால் ஒரு ஸ்வர வரிசை எனப்படும் ஸ்கேல் கிடைக்கின்றது . ஏறு வரிசயினை ஆரோகணம் என்றூம், இறங்கு வரிசையினை அவரோகணம் என்றும் சொல்லுவோம்."

    "பாலாஜி. என்ன புரிஞ்சுதா? புரிஞ்சுதுன்னா எல்லாருக்கும் ஒரு ரீ-கேப் கொடு பார்க்கலாம்."

    "ஸ,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு ஸ்வரங்களில் மூணோ அல்லது எழு ஸ்வரங்களோ கொண்டு ஏறு வரிசையில் இருப்பது ஆரோகணம், இதுவே இறங்கு வரிசையில் இருந்தால் அவரோகணம். ஒரு ஆரோகணமும் ஒரு அவரோகணமும் கொண்டு அமையப்பட்டுள்ளது ஸ்வரவரிசை அல்லது ஸ்கேல். இந்த ஸ்கேல் எனப்படும் ஸ்வர வரிசைகள்தான் பல்வேறு ராகங்களுக்கும் ஆதாரம்."

     (ஸப்த ஸ்வரங்களின் மொத்த அமைப்பு)

    "க க க போ! ஒரு ஸ்கேல் 7+7=14 ஸ்வரங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். அல்லது மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட ஸ்வரங்களைக் கொண்டாதாவும் இருக்கலாம். மேலும் இந்த ஸ்வரங்களின் வரிசையும் (ஆர்டர்) மாறி வரலாம். இந்த மாதிரி பெர்முடேஷன் மற்றும் காம்பினேஷன்களினால் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ராகங்களுக்கு மேலே கிடைக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ராகத்துக்கும் உண்டான ஸ்வரவரிசைகள் தனித்துமானவைகள் (Unique). ஒரு ராகத்துக்குண்டான ஸ்வரவரிசை வேறே ராகத்துக்கு வரவே வராது. சில ராகங்களுக்கிடையேயான ஸ்வர வரிசை, சிறிய அளவில் மட்டுமே வித்தியாசப்படுவதால் அவற்றை இனம் கண்டுபிடிப்பது கஷ்டம். அவை ஒரே ராகம் போலவே கேட்கின்றன. இந்த ராகங்களைத்தான் ஒத்த ராகங்கள் (allied ragas) என்று சொல்லுகின்றோம்."

    "இப்ப நாம் முதல்ல சங்கராபரணம் ராகத்தை எடுத்துக்கலாம். அதனுடைய ஸ்கேல், ஸட்ஜம், சதுஸ்ரிதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், ஷட்ஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம். இது அப்படியே இறங்கு வரிசையிலும் வரும். இதே மாதிரி கல்யாணி ராகத்துக்குப் பார்த்தால், அதெ ஸ்கேல்ல சுத்த மத்யமத்திற்குப் பதிலா, ப்ரதி மத்யமம் வரும். இந்த மாதிரி ஒரே ஸ்கேலாக இருந்து , சுத்த மத்யமத்திற்குப் பதிலா, ப்ரதி மத்யமம் வந்தால் அந்த ராகங்கள் ஒன்று போலக் கேட்காது. கல்யாணி போன்ற ப்ரதி மத்யமம் வரும் ராகங்களை, ப்ரதி மத்யம ராகங்கள் என்று சொல்லுவோம். இப்பப் படத்தைப் பார்த்தால் இந்த ரெண்டு ராகங்களின் ஸ்வர்ங்களுக்கிடையே எப்படி வித்தியாசம் வரும் என்று சொல்ல முடியும்."

      (சங்கராபரணம் மற்றும் கல்யாணி ராகங்களின் ஸ்வர வரிசை)

    "மனசிலாயி மாமா. ஒரே ஒரு சம்சயம். நான் சொல்றது கரெக்டான்னு சொல்லுங்கோ. பாடகர் மெதுவாக ஆலாபனை பண்ணும்போது, ஸ, ரி, க அப்படீன்னு பாடும்போது அடுத்ததா "ம"வைத் (மத்யமம்) தாண்டும்போது அது சுத்த மத்யமா அல்லது ப்ரதி மத்யமா என்று கண்டுபிடித்து விட்டால், அவர் பாடும் ராகம் சங்கராபரணமா அல்லது கல்யாணியான்னு கண்டுபிடிச்சடலாம்தானே! சரியா?"

    "இல்லடா கோந்தே!. இங்கதான் நம்ம இந்திய சங்கீதத்துக்கும், மேற்கத்திய சங்கீதத்துக்கும் வித்தியாசம் இருக்கு.  "ஸட்ஜம், சதுஸ்ரிதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், ஷட்ஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம்" இந்த ஸ்கேலை நாம சங்கராபரணம்னு சொன்னா, மேற்கத்திய இசையில் இதை மேஜர் ஸ்கேல் அப்படீன்னு சொல்வாங்க. இந்த மாதிரி ஒரு ஸ்வரவரிசை அல்லது ஸ்கேலை ஆதாராமாகக் கொண்ட ராகங்களை swara based ragas என்று சொன்னாலும், நம்ம இந்திய ராகங்கள் தனக்கே தனக்குன்னு இருக்கற ஸ்வரூபத்தைக் காமிக்கறதால இவற்றை swaroopa based ragas என்று சொல்வதுதான் முறையாகும். அதாவது மத்யமத்திற்கு வருவதற்கு முன்னாலேயே ஸட்ஜம், சதுஸ்ரிதி ரிஷபம், அந்தர காந்தாரம், இவற்றில் கமகங்கள் எனப்படும் அசைவுகள் மூலம் வித்தியாசம் காட்டலாம். காட்டலாம் என்ன காட்டலாம்? காட்ட வேண்டும். கண்டிப்பாகக் காட்ட வேண்டும். பாடகர் ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்த பத்தாவது நொடியிலேயே அது சங்கராபரணமா அல்லது கல்யாணியா என்று ரசிகர்களுக்குப் புரிய வேண்டும். புரிய வைக்கிற மாதிரி பாட வேண்டும்."

    "அப்படீன்னா, எனக்குப் பாடகர் என்ன ஸ்வரங்கள் பாடறார்ன்னு புரிஞ்சாலும், அது என்ன ராகம்னு உடனே கண்டுபிடிக்க முடியாதா?"

    "ஒரளவு சரி. ஸ்வரங்கள் கண்டிப்பா உதவி செய்யும். ஆனா உடனே ஒரு ராகத்தை கண்டுபிடிக்கணும்னா, அதனுடைய ஸ்வரூபம் புரியணும்."

    ''அது எப்படீ"
    "அதுக்கு நெறையக் கேட்க வேண்டும், இன்னம் சில டெக்னிக் இங்கே இருக்கு." 

    "இப்ப இவ்வளவு இண்ட்ரோக்கு அப்பறம், மொதல் செட் ஆஃப் அல்லைட் ராகாஸ் பத்திச் சொல்லப் போறேன். அதாவது ஆரபி மற்றும் தேவகாந்தாரி ராகங்கள்"

    "மொதல்ல ரெண்டு ராகத்துக்குமுண்டான ஸ்கேல் சொல்லுங்கோ."  

    (ஆரபி மற்றும் தேவகாந்தாரி ராகங்களின் ஸ்வர வரிசை)

    "அக்ஷயா, ஆரபிக்கும், தேவகாந்தாரிக்கும் என்ன வித்தியாசம்னு மேலே உள்ள படத்தைப் பாத்துச் சொல்ல முடியுமா?

    "ஓயெஸ். இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கு. ஆனா தேவகாந்தாரிலே, அவரோகணத்திலே (இறங்கு வரிசையிலே) ஒரு 'கைசிக நிஷாதம்" கூடுதலா இருக்கு"

    "கரெக்ட். ஆனா மேற்கத்திய இசையாக இருந்தால் இந்த வித்தியாசம் மட்டும் போது. நம்ம ராகங்கள்தான் swaroopa based ragaன்னு சொல்லிட்டேனே. அதனால கூடுதல் வித்தியாசங்கள் உண்டு. ஆக மொத்தம் வித்தியாசங்கள் என்னென்னெவென்றால்:-
    1. தேவகாந்தாரியிலே அவரோகணத்திலே. கூடுதலா ஒரு "கைசிக நிஷாதம்", உண்டு. ஆரபியிலே இது கிடையாது
    2. இந்தக் கைசிக நிஷாதம் தைவதத்திற்கு அப்புறம் வரவேண்டும். அதாவது ஸ,நி2,த,நி1 என்று.
    3. ஆரபியிலே கமகம் எனப்படும் அசைவுகள் அவ்வளவாக வராது. ஸ்வரங்கள் சற்றே flaஆக் வரும். ஆனால், தேவகாந்தாரியிலே அழகழகாக கமகங்கள் வரும். 
    4. ஆரபி, வீர ரசம் நிறைந்த ராகம். தேவகாந்தாரி, கருணை ரசம் நிறைந்த ராகம்."
    "இந்த வித்தியாசங்கள் எல்லாம் மனசிலே நன்னாப் பிடிபடணும்னா நெறையக் கேக்கணும். ஆரம்பத்திலே சொன்னேனே. வருன், கிரண் ரெண்டு பேரும் யார் யார்னு கண்டுபிடிக்கணும்னா அவங்களோட நெறையப் பழகணும்னு சொன்னா மாதிரி."

    "சரி. நான் ரெடி. ஆரபி, தேவகாந்தாரி ராகப் பாடல்களைக் கேட்க. லிஸ்ட் கொடுக்க முடியுமா?"'

    "மொதல்லே கர்னாடிக்லே சொல்றேன். நோட் பண்ணிக்கோங்கோ.

    ஆரபி
    1. சாதிஞ்சனே ஓ மனஸா - தியாகராஜர்
    2. நாத சுதா ரஸா - தியாகராஜர்
    3. ஸ்ரீ சரஸ்வதி - முத்துசாமி தீக்ஷிதர்
    4. துர்கா லக்ஷ்மி சரஸ்வதி - பாபநாசம் சிவன்
    5. ஜூதா முராரே - தியாகராஜர்
    6. ஆரபிமானம் - தரங்கம்பாடி பஞ்சநத ஐயர்
    தேவகாந்தாரி
    1. ஸ்ரீரசாகர சயனா - தியாகராஜர்
    2. கொலுவையுன்னாடெ - தியாகராஜர்
    3. வினராதா ந மனவி - தியாகராஜர்
    4. எந்நேரமும் - கோபாலகிருஷ்ண பாரதி 
    5. ஸ்வாமிக்கிச் சரி - மானம்புச்சாவடி வெங்கடசுப்பையர்
    6. ராம ராம பாஹி - ஸ்வாதித் திருநாள்"
    "சரி. அப்புறம் நம்மைப் போலக் கோஷ்டிகளுக்கு சினிமாப் பாட்டும் சொல்லுங்கோ. விரும்பினாலும் விரும்பவிட்டாலும் அதுதானே காதிலே விழர்றது."

    "ஒகே. சினிமாப் பாட்டு இதோ:-

    ஆரபி
    1. ஏரிக்கரையின் மேலே போறவளே - முதலாளி
    2. கண்ணிலே குடியிருந்து - இமயம்
    3. கண்ணே கண் வளராய் - ஞான சௌந்தரி
    தேவ காந்தாரி

    1. வேதம் நூறுப்ரயம் நூறு மனிதர் - துக்காராம்"
    "சரி. நாளக்கு சாயந்திரம் மத்த அல்லைட் ராகங்களைப் பாப்போமா?"

    - தொடரும்

    - சிமுலேஷன் 


       
       


    அலெக்சாந்தரும் ஆறுமுகனும்

    "அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்பது வழக்கம். அதே போல "அலெக்சாந்தருக்கும் ஆறுமுகனுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டால், 'இருக்கு சம்பந்தம்' என்று சொல்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.  சமீபத்தில் நாரதகான சபா மினி அரங்கில் 'நாட்டியரங்கம்' சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடனமணி ஸ்ரீலதா வினோத், "முருகன்" என்ற தலைப்பில் நாட்டியம் குறித்த லெக்-டெம் நிகழ்த்தினார். அப்போது, அலெக்சாந்தருக்கும் ஆருமுகனுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்துப் பேசினார். ஆறுமுகன் என்றால் ஆரு? சாட்சாத் நம்ம ஊர் முருகனேதான்.



    1937ல் நடைபெற்ற 'ஆல் இன்டியா ஒரியன்டல் கான்ஃபரன்ஸ்'சில் திரு.கோபாலப் பிள்ளை என்பவர் மேற்கண்ட தலைப்பில் விரிவாக பேசியுள்ளாராம். அப்போது கூறப்பட்ட கருத்துக்கள் என்னவென்றால்:-

    1. பெர்சிய மற்றும் அரேபிய மொழிகளில், அலெக்சாந்தர், "இஸ்காந்தர்" என்று அழைக்கப்பட்டார். முருகரோ, இந்தியாவில் "ஸ்கந்தா" என்று தொழப்பட்டார். (பெயர் உச்சரிப்பு ஒற்றுமையைக் கவனிக்கவும்).
    2. அலெக்சாந்தர் ஒரு படைத்தலைவர். முருகப்பெருமானும் "சேனாபதி" என்றழைக்கப்பட்ட படைத்தலைவர் ஆகும்.
    3. அலெக்சாந்தரின் கையில் இருக்கும் ஆயுதம் லான்ஸ் எனப்படும் "வேல்" ஆகும். முருகனின் கையில் உள்ள ஆயுதம் "வேலாயுதம்" என்பது அனைவரும் அறிந்ததே.
    4. அலெக்சாந்தரின் போர் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு "டேரியஸ்" என்ற எதிரியை அழைத்ததாகும். முருகப் பெருமானின் முக்கிய வதம் "தாரகாசுரன்" என்ற அரக்கனை அழித்ததாகும். (பெர்சிய மொழியில் டேரியஸ் என்றாலும், வட மொழியில் தாரகா என்றாலும் "காப்பவன்" என்ற பொருள் ஒன்றே.)
    5. அலெக்சாந்தர் பாக்டீரியா நாட்டு இளவரசியான "ரோக்சேனா"வை மணந்தார். முருகரோ, "தேவசேனா"வை மணந்தார். (பெயர் உச்சரிப்பு ஒற்றுமையைக் கவனிக்கவும்).
    6. இந்தியாவின் மிகப் பெரிய பேரரசரான சந்திர குப்த மௌரியர், அலெக்சாந்தரை, தான் வணங்கும் தெய்வங்களுல் ஒன்றாக வைத்து வழிபட்டார். முருகப் பெருமானது வாகனம் மயில். மயிலின் வடமொழிப் பெயர் "மோர்" அல்லது "மௌர்யா". மௌரியர்களது அரசுச் சின்னங்களில் குறிபிடத் தகுந்தது மயிலாகும்.
    இதனைத் தவிர மேலும் பல ஒற்றுமைகளை, கோபாலப் பிள்ளை தனது ஆராய்ச்சியில் கூறியுள்ளார். எனது சிற்றறிவுக்குப் புரியவில்லை. யாரேனும் மேலதிகத் தகவல்கள் எளிமையாகத் தந்தால் தன்யனாவேன்.




    - சிமுலேஷன்

    Saturday, March 06, 2010

    வா... வா... வாடி பொண்ணே

    இந்தப் பாட்டு எனது குடும்பத்தில் பலரும் பாடும் பாட்டு. குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். குழந்தைகளைத் தூளியில் போட்டுத் தாலாட்டுப் பாடும்போது பயன்படுத்தும் பாடல். புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு, முதன் முதலாக பேருந்து இயக்கப்பட்டபோது யாரோ அதனைப்பற்றிப் பாடிய பாடலாம். இந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் மேலதிக விபரங்கள் தெரிந்தால் தெரிவிக்கலாம். 

    வா...வா...வாடி பொண்ணே
    வந்திடு மோட்டார் வண்டியிலே
    போவோம் நாம் பொன்னுரங்கம்
    போற்றி செய்வாய் எந்தன் கண்ணே
                                வா...வா...
    மோட்டார் வண்டியைப் பாரடியே
    முன்னே நீ போய் ஏறடியே
    மூட்டையடுக்காள் வேறடியோ
    மேட்டிமையாய் உட்காரடியோ
                                வா...வா...
    பாராய் டபுள்சார்ஜ் கொடுத்துவிட்டு
    ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கிவிட்டோம்
    ஜோராய் வண்டியில் ஏறிவிட்டோம்
    சொகுசாய் சேர்ந்து உடகார்ந்துவிட்டோம்
                                வா...வா...
    போகுது பார்...வண்டி போகுது பார்
    புதுமை மோட்ட்டர் போகுது பார்
    அன்னமே வாய்மூடித் திறக்குமுன்னே
    அம்மாசத்திரம் வந்த்துவிட்டோம்
    என்னடி கீரனூர் தாண்டிவிட்டோம்
    இதோ பார் திருச்சியைக் கண்டுவிட்டோம்
                               வா...வா...

    எழுத்து வடிவில் கண்ட பாடலை, ஒலி வடிவிலும் கேளுங்கள்.

    Va Va Vadi Ponne.w...

    - சிமுலேஷன்

    Friday, March 05, 2010

    அவுரங்கசீபும் தமிழ்த்திரட்டிகளும்


    அரசர் அவுரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவராம். இருந்தாலும்  அவருக்கு ஏனோ இசை என்றாலே ஆகாது. இசை, நாட்டியம் போன்ற எல்லாவித நுண்கலைகளையும் அவரது ஆட்சிக் காலத்தில் தடை செய்தாராம்.

     

      

    அதே போல வலைப்பதிவுகளை தங்கள் இணைப்பிலே திரட்டிக் கொள்ளும் தமிழ்திரட்டிகள், இந்தப் பதிவுகளை வகைப்படுத்த நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், சினிமா, தொழில் நுட்பம், கார்ட்டூன், கவிதை, ஆன்மிகம் போன்ற எத்தனை, எத்தனையோ பிரிவுகள் வைத்திருந்தாலும் இசைக்கென்று ஒரு பிரிவு வைக்காததேன்? அவுரங்கசீப் வழித்தோன்றல்களோ இவர்கள்?

    - சிமுலேஷன்

    ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-02 (Allied Ragas)


    "அத்தே, ஜிஞ்சர் டீ சூப்பர்... மாமா.. பாட்டு நல்லா இருந்தா கேக்கறோம். ரசிக்கறோம். எதுக்காக இந்த ஆராய்ச்சியெல்லாம்? எங்க தலைவர் சொன்னா மாதிரி, அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.என்ன நாஞ்சொல்லறது?"

    "டேய் ஆதித்யா நீ சொல்றது வாஸ்தவந்தான். எதுவுமே நல்லதா இருந்தா, அனுபவிச்சா மட்டும் போதும். ஆராயத் தேவையில்லை. ஆனா நம்ம மாதிரி கோஷ்டிங்களுக்கு ஆராய்ச்சி பண்ணினா இன்னமும் அனுபவிக்கலாமேன்னு தோணும்.உதாரணத்தோட சொன்னா நல்லாப் புரியும்னு நினைக்கிறேன்."

    "வசந்தா மாமி,... உங்க வருன், அருண் ரெண்டு பேரும் வந்த்திருக்காங்கல்லியா? அவங்களக் கொஞ்சம் உள்ளே கூப்பிடுங்களேன்."

    "டேய்...வருண்,...அருண்... ஒரு 5 நிமிஷம் உள்ளே வாங்கோ. மாமா கூப்பிடறார்."

    "இங்க பாருங்கோ எல்லாரும். இவங்கதான் வருண் & அருண். வசந்தா மாமியின் twin sons. இவங்களைப் போன மீட்டிங்லேயே பார்த்திருப்பீங்க. இதிலே யாரு வருண்?, யாரு அருண்? அப்படீன்னு யாராவது சொல்லுன்ங்க பாக்கலாம்."

    "ஆஹா. அப்படியே அச்சலா ஒரே மாதிரி இருக்காங்களே! இதிலே ஒரே மாதிரி டிரஸ் வேற. எப்படிக் கண்டுபிடிக்கறது தெரியலையே!"

    "வசந்தா மாமி. உங்களுக்குக் ஒண்ணும் கன்ஃப்யூஷன் இல்லையே? நீங்க கண்டுபிடிச்சிடுவீங்கதானே?"

    "ஆஹா, தாயார்க்காரிக்கு இதுகூட கண்டுபிடிக்க முடியாதா? மத்தவங்காளால முடியுமா?"

    "லலிதா டீச்சர். நீங்க சொல்ல முடியுமா? யாரு வருண்? யாரு அருண்ன்னு?"

    "ஓயெஸ். வலது பக்கம் நிக்கறது வருண். இடது பக்கம் நிக்கறது அருண்."

    "இவ்வளவு பேரால முடியாதது.. லலிதா டீச்சராலே எப்படி முடிஞ்சுது?"

    "அவங்க ரெண்டு பேருமே லலிதா டீச்சரோட ஸ்டூடண்ட்ஸ், போன ரெண்டு வருஷமா."

    "ஓகே டீச்சர். ரெண்டு பேரும் ஒரே உயரம், ஒரே பருமன், ஒரே நிறம், ஒரே ஜாடை. இருந்தாலும் எப்படிக் கண்டுபிடிக்கறீங்க?"

    "ரெண்டு வருஷமா இவங்களோடப் பழகறேன். உருவத்திலே ஒரே மாதிரி இருந்தாலும், நடை, பாவனை இதெல்லாம் வித்தியாசப்படுதே! ரெண்டு நாள் பழகினா உங்களாலையும் கண்டுபிடிக்க முடியும்."

    "இத, இதத்தான் எதிர்பார்த்தேன். இந்த ரெண்டு பேரோடையும் நீங்க நல்லாப் பழகப் பழக, யார் வருண், யார் அருண்ன்னு நல்லாத் தெளிவாத் தெரியும். அதுக்கு நீங்க கூர்ந்து கவனிக்கிற அவங்களோட வித்தியாசமான நடை, பாவனை போன்றவைதான் காரணம். இதே போலத்தான், மாஞ்சியும், பைரவியும் ஒண்ணு போலத் தோணினாலும், கூர்ந்து கவனிச்சா, ரெண்டுக்குமமுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதாவது ரெண்டு ராகத்துக்கும் scale கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், scaleலே உள்ள ஸ்வரங்களுக்கிடையேயான கமகம் வெவ்வேறயா இருக்கறதால, ரெண்டும் வெவ்வேற ராகமாக இருக்கு. இந்த scale மற்றும் கமகம் எப்படி உள்ளது என்பதைப் புரிஞ்சு கொண்டால் ஒரே மாதிரி இருக்கற ராகங்களுக்கிடையேகூட இருக்கற வித்தியாசம் என்னன்னு தெளிவாப் புரிஞ்சுடும். இப்ப ஒரளவு புரிஞ்சுதா? அது சரி. வருண், அருண் உதாரணம் எப்டீ?"

    "சூப்பர்...."

    "சூப்பரா?!"

    "சூப்பர் மொக்கைன்னு சொல்ல வந்தேன்."

    (தொடரும்)

    - சிமுலேஷன்

    ராகசிந்தாமணி கிளப் - ஒத்த ராகங்கள்-01 (Allied Ragas)

    "2010ஆம் ஆண்டு நடக்க இருக்கும் நம்ம 'ராகசிந்தாமணி' கிளப்பின் முதலாவது கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் 'வருக்,வருக'வென வரவேற்கின்றேன்."

    "சிமுலேஷன் அண்ணா. என்னத்துக்கு இப்படியெல்லாம் ஃபார்மலா? வழக்கம் போல இன்ஃபார்மலா நடத்தலாமே?"

    "கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு, எல்லோரும் இன்னிக்கி மீட் பண்ணறோம். அதான் ஃபார்மலா ஆரம்பிச்சா ஒரு 'கெத்'தா இருக்குமேன்னுதான்."

    "கண்ணன் சார். முந்தா நேத்திக்கி எஃப்.எம்.கோல்ட்லே 'மாஞ்சி' ராகத்திலே ஒரு RTP கேட்டேன். இவர் என்னடான்னா அது மாஞ்சியே இல்ல. பைரவிதான் அப்படீங்கறார். நானும் மாஞ்சிதான்னு மாய்ஞ்சி. மாய்ஞ்சி சொல்லிண்டே இருந்தேன். மாஞ்சிக்கும், பைரவிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கிறது?"

    "சார். அதுக்கு முன்னடி எனக்கு ஆரபிக்கும், தேவகாந்தாரிக்கும் என்னன்னு விதியாசம் தெரிஞ்சுக்கணும்."

    "ஹவ் அபௌட் மத்யமாவதி, ச்ரிராகம், மணிரங்கு, ப்ருந்தாவனி. இதுக்கெல்லாம் எப்படி வித்த்தியாசம் கண்டுபிடிக்கிறது?"

    "அமைதி; அமைதி. எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்கோ. இன்னிக்கி நாம் பேசப்போற தீமே இந்த மாதிரி இனம் கண்டுபிடிக்கக் கஷ்டப்படுத்தும் ஒத்த ராகங்கள் பத்தித்தான். இங்கிலீஷ்லே Allied Ragasனு சொல்லப்படற ராகங்களைப் பத்தித்தான் டீடெயிலாப் பேசப்போறோம்."

    "ஒரு நிமிஷம் எல்லாரும் வெயிட்டீஸ். ஜிஞ்சர் டீ வர்றது. அதக் குடிச்சுட்டு அப்பறம் டிஸ்கஷனைக் கன்டிநியூ பண்ணுங்கோ"


    (தொடரும்)

    - சிமுலேஷன்

    Thursday, March 04, 2010

    அபூர்வ ராகங்கள்-06 - சல்லாபம் (aka) சூர்யா (Sallabam or Surya)

    'சல்லாபம்' என்ற ராகம் 'சூர்யா' என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ராகம் 14ஆவது மேளகர்த்தா ராகமான 'வகுளாபரணம்' என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும்.இதன் ஆரோகணம் அவரோகணம் வருமாறு:-

    ஆரோகணம்:     S G3 M1 D1 N2 S

    அவரோகணம்: S N2 D1 M1 G3 S
     
    சல்லாபம் கிட்டத்தட்ட ஹிந்தோளம் என்ற ராகத்தினை ஒத்திருப்பது போலத் தோன்றும். ஆனால் ஹிந்தோளத்தில் சாதாரண காந்தாரம் இடம் பெறுகின்றது. சல்லாபத்திலோ, அந்தர காந்தாரம் இடம் பெறுகின்றது.
     
    முதலாவதாக டாக்டர்.கடம் கார்த்திக் இயற்றிய சல்லாப ராக உருப்படியினைப் பார்ப்போம். கீ போர்ட் சத்யாவும் வாசிக்கின்றார்.



    அடுத்தபடியாக முன்னொரு பதிவில் ரஸிகப்ரியா பாடி, நம் மனதையெல்லாம் கொள்ளைகொண்ட காவலம் ஸ்ரீகுமார் அவர்கள் பாடிய சல்லாபம் ராகத்தில் அமைந்த பஜன் கேட்போம்.



    இப்போது கிஷோர் பல்லே என்ற இளைஞர் இயற்றி, ஸ்ரீநிதி என்ற இளைஞி பாடிய "சுந்தரவதனா சூர்யநயனா" என்ற பாடலைக் கேளுங்கள்.



    தமிழ்த் திரைப்படப்பாடல்களை எடுத்துக் கொண்டால், நினைவுக்குத் தெரிந்து சல்லாப ராகத்தில் முதன்முதலாக பாடல் போட்டது நம்ம இளையராஜா அவர்கள்தான். ஆம். 'தாய் மூகாம்பிகை' என்ற படத்தில் அமைந்த 'இசையரசி என்னாளும்" என்றப் போட்டிப் பாடலாகும். முதன் முதலாகக இந்தப் பாடலைக் கேட்பவாராக இருந்தால் பாடலின் கிளைமேக்ஸினை காணத் தவறாதீர்கள்.



    சமீப காலங்களில் வந்த சல்லாப ராகப் பாடல் வித்யாசாகர் இசையமைத்த சந்திரமுகி படத்தில் வரும் 'ரா ரா சரசுக்கு ரா' என்ற பாடலாகும். கேட்போமா? இடையே வரும் ஸ்வரபேதங்களை கண்டுகொள்ள வேண்டாம்.



    சல்லாப ராகம் இப்போது மனதில் நன்றாக பிடிபட்டதா? அடுத்த பதிவில் சந்திப்போமா?

    - சிமுலேஷன்

    Wednesday, March 03, 2010

    சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?. மேட்டுப்பாளையம், கல்லார்

    "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?" என்ற பாட்டிற்கேற்ப எல்லோரும் சொந்த ஊர் என்றால் உணர்ச்சி வசப்படுவது இயற்கை. அந்த ஊர் எவ்வளவு குப்பையாக இருந்தாலும், ஊர் அபிமானம் வருவதற்குக் காரணம், நினைவலைகள், ஆட்டோகிராப்ஃப், கொசுவத்தி etc...etc.

    மேற்கண்ட வகையில் நான் பிறந்து வளர்ந்த மேட்டுப்பாளையத்தின் மேல் எனக்கு ஒரு பாசம் உண்டு. கல்லூரிப் படிப்புகென்று சென்னைக்கு வந்துவிட்டாலும், பள்ளிக் காலம் முழுவதும் இங்கேதான். பள்ளிக் காலங்களில் வார விடுமுறைகளில் பெரும்பால சமயங்களில் நண்பர்களுடன் சேர்ந்து செல்லுமிடம் 'கல்லார்' ஆகும். ஆத்துப்பாலம், ஓடந்துறை மற்றும் பல பாக்குத் தோப்புக்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். போகும் வழியில் கடலைச் செடி பயிரிடப்பட்டிருந்தால் எடுத்துத் தின்பது. கரும்பு ஆலை ஒடிக் கொண்டிருந்தால் கரும்புச் சாறு வாங்கிக் குடிப்பது. மாந்தோப்பில் மாங்காய் அடித்துத் தின்பது. காலை ஆறு அல்லது ஏழு மணியளவில் துவங்கும் இந்த நடை பயணம், மேற்கண்ட சோலிகளையெல்லாம் முடித்துக் கொண்டு கல்லாரை அடைய ஒன்பது அல்லது பத்து மணிக்கு மேலே ஆகி விடும். அதாவது கல்லாரில் இருக்கும் அரசினர் பழப்பண்ணையை அடைய. அங்கே அனுமதி இலவசம். அங்கே மா, பலா, வாழை எனப்பட்ட உள்நாட்டுச் சரக்குகள் தவிர, மங்குஸ்தான், ரம்பூட்டான், லிச்சிஸ், பிச்சிஸ், பப்ளிமாஸ், துரியன் போன்ற மத்தியதரைக் கடல் மற்றும் கீழை நாட்டு பிரதேசப் பழங்களும் கிடைக்கும். பெரும்பாலான நேரங்களில் இவை விற்பனைக்கு வராது. 'அங்கேயே எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாமாம். ஆனால் காசு கொடுக்காமல் எடுத்து வரக்கூடாதாம்', என்று ஒரு விதி இருப்பதாக எண்ணி அபூர்வமான பழவகைகளை வெளுத்துக் கட்டுவோம்.

    சில மணி நேரம் இப்படி செலவழித்த பின்னர், காட்டாற்றில் குளிப்போம். நீஞ்சவெல்லாம் முடியாது. நல்ல பசியெடுக்கும்போது பாக்கு மட்டையில் கட்டி எடுத்து வந்திருந்த கலவை சாதத்தைச் சாப்பிட்டு முடிப்போம். பிறகு தோட்டத்தை விட்டு வெளியே வந்தால் ஊட்டி மலையடிவாரத்தில் உள்ள ஒரு சின்னப் பொட்டிக்கடையில் நின்று சுக்குக் காப்பி சாப்பிடுவோம். சில சமயம் மலைப்பாதையில் கொஞ்ச நேரம் நடந்து 'பர்லியார்' வருவோம். இங்கு கிராம்பு, ஏலக்காய் முதலான பொருட்களை வாங்குவோம். பலாப்பழம் வாங்கினால் அதனை ஒரு கம்பில் கட்டித் தொங்கவிட்டு இருவராகத் தோளில் தூக்கி வருவோம். ஊருக்குள் நுழையும்போது ஏதோ காட்டுப் புலியினை வேட்டையாடித் தூக்கி வருவது போலப் பெருமையாயிருக்கும். முதலில் நடைப் பயணமாக துவங்கிய இத்தகைய பிக்னிக்குகள், சற்றே வயது வந்த பின்பு "நாள் வாடகை" சைக்கிளில். பின்னர் 'பைக்' வாங்கியபின் ஓரிரு முறை பைக்கில்.

    உறவினர்கள் பெரும்பாலும் ஊட்டி சென்று சுற்றிப் பார்த்துவிட்டுப் பிறகுதான் எங்கல் வீட்டிற்கு வருவது வழக்கம். எங்களுக்கும் ஊட்டி செல்வது அவ்வளவு பிடிக்காது. (ஒரு மூணு மணி நேரத்திலேயெ மலையிறங்க மாட்டோமா என்றுதான் தோணும்.) அதனால் வருகின்ற உறவினரிகளையெல்லாம் தவறாமல் கூட்டிச் செல்லும் இடம் கல்லார்தான். அவர்களும் இந்த இடத்தை பெரிது ரசித்துப் பல நாட்கள் பேசுவதுண்டு.

    கல்லார் ஆற்றிலே யானைகள் குளிப்பது சர்வ சாதாரணம். குளிப்பது இல்லை. குளிப்பாட்டபடுவது. பாகன்கள் யானையப் பக்கவாட்டில்  படுக்கச் செய்து தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். ஒரு முறை அதனைப் பார்த்து ஆசைப்பட்டு நாங்களும் யானனயைக் குளிப்பாட்டலாமாவென்று கேட்க, பாகனும் சம்மதம் கொடுத்து விட்டார். தேங்காய் நாரை எடுத்துக் கொண்டு யானனயின் இடுப்பைத் தேய்க்க அது படக்கென்று எழுந்து நின்றுவிட்டது. பயந்தே போய்விட்டோம். கிச்சுக்கிச்சு மூட்டிவிட்டேன் போலிருக்கு.
    (புகைப்படங்கள் 1982 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எடுக்கப்பட்டவை. படத்தின் மீது கிளிக் செய்து பெரிதுபடுத்திப் பார்க்கவும்)


    மேட்டுப்பாளையத்தைபற்றிப் புதிதாக ஏதாவது விஷயம் இருக்குமா என்று கூகிளிட்டுப் பார்த்ததில் மேட்டுப்பாளையத்திற்கென்றே இணையத்தில் தனியான ஒரு தளம் இயங்குவது ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அன்பர் வினோத்பாபு இதனை நடத்தி வருகின்றார். வெறும் விவரண தளமாக மட்டுமல்லாமல், பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் குழுமங்களும் இருக்கும் தளமாக இருக்கின்றது இது. (உருளைக் கிழங்கு, பாக்கு, பூண்டு ஆகியவற்றின் மார்க்கெட் நிலவரங்கள், நாய்க்கடி வைத்தியம், காரமடை தேர் போன்ற பலதரப்பட்ட விஷயங்கள்).

    ஏப்ரல் மாதத்தில், அக்ரஹாரத் தெருவில் நடைபெற்று வந்த ஸ்ரீராமநவமி கச்சேரிக்கு குடும்பத்தோடு செல்வது வழக்கம் ஸ்ரீராம நவமிக் கச்சேரியினப்ப்பற்றி முன்னமே இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். அப்புறம் பவானி ஆற்றங்கரை அமைந்திருக்கும் சுப்ரமணியசாமி கோயிலுக்கும் அடிக்கடி செல்வது வழக்கம். அங்கு பல்வேறு விழாக்கள நடைபெறும். திருமுருக கிருபானந்த்த வாரியார், புலவர் கீரன் ஆகியோர்களது தொடர் சொற்பொழிவு நடைபெறுவது உண்டு. வாரியார் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் சிறார்களுக்கு 'ஆன் த ஸ்பாட்' பரிசளிப்பார். 

    இந்தக் கோயிலின் பின்னால் மலையிலிருந்து வந்த புது வெள்ளம் பவானி ஆற்றில் சிலு, சிலுவென்று அற்புதமாக ஓடும். பம்பாய் மாமா இங்கு வந்தால் தவறாமல் ஆற்றுக்குக் குளிக்க அழைத்துச் செல்வார். வித விதமான சைஸில் கூழாங்கற்கள் கிடைக்கும். மாரியம்மன் திருவிழா வாணவேடிக்க வெகு விமரிசையாக நடைபெறும். இதெல்லாம் இப்போது நடைபெறுகின்றதா என்று தெரியவில்லை. ஆனால் 20-25 வருடங்கள் கழித்தும் மாறாமலிருப்பது மலஜல நாற்றம். சுற்றுப்புறச் சுகாதாரத்திற்கும், சுத்தத்திற்கும் மேட்டுப்பாளைய மக்களுக்கும்  வெகு தூரம்.

    20-25 வருடங்கலள் கழித்து குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றால், மேட்டுப்பாளையம் வெகுவாக மாறியிருப்பது தெரிந்தது. மாற்றம் என்னவென்றால் நிறையக் கடைகள், கட்டிடங்கள்தான். நாங்கள் குடியிருந்த அண்ணாஜிராவ் ரோடு அடையாளம் தெரியவில்லை.

     
    (ஒரு காலத்தைய KMS தியேட்டர், பின்னர் சிவரஞ்சனியாக)
      
    (சமீபத்திய அண்ணாஜிராவ் ரோடு)
     
    (நாங்கள் குடியிருந்த சுப்பையர் வீடு)

    "எந்த ஊரும் டெவெலப் ஆகிவிட்டது", என்று சொன்னால், எனது கஸின் உடனே, "என்னடா டெவெலப் ஆகிவிட்டது, டெவலப் ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள். கேட்டால் நிறையக் கடை, கண்ணி வந்துட்டுதும்பீங்க. அதைத்தவிர அதே கொசு, அதே சாக்கடை, டிராபிக் ஜாம், ஹாரன் சப்தம் எல்லாமே அப்படியேதானே உள்ளது?'" என்பான். அவன் சொல்வது  மேட்டுப்பாளையத்தைப் பொறுத்தவரையில் நூற்றுக்கு நூறு இன்றும் உண்மையாகவே உள்ளது.

    - சிமுலேஷன்

    Tuesday, March 02, 2010

    பத்திரமா பார்த்துக்கோங்க

    பாலாம்பாள் டீச்சரின் கணவர் பாலு மாமாவுக்கு சூதுவாது தெரியாது. ஒரு முறை டீச்சர் அவரை வீட்டில் விட்டு வெளியே போக வேண்டியிருந்தது. வீட்டு வேலைகள் செய்ய வேண்டிய வேலைக்காரி இன்னமும் வரவில்லை. நல்ல திறமையான வேலை செய்பவளாக இருந்தாலும் கொஞ்சம் கை நீளம். சின்னச் சின்னச் சாமான்களை அவ்வப்போது திருடிக் கொண்டு போய்விடுவாள். டீச்சர் தனது கணவரிடம் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றார். வேலைக்காரியிடம் மறக்காமல் பெட்ரூமையும், ஹாலையும் பெருக்கச் சொல்லுங்கள் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.

    பாலு மாமாவுக்கோ வேலைக்காரி வருவதற்கு முன்னாலேயே பதட்டம். வேலக்காரி வந்தாள். சமையல் அறை சென்று பாத்திரம் தேய்த்தாள். கையில் ஒன்றுமில்லை. பதட்டம் கொஞ்சம் தணிந்தது. கொல்லைக்குச் சென்று காய்ந்த துணிகளை மடித்து வைத்தாள். அப்போதும் அவள் கையில் ஒன்றுமில்லை. இப்போது இன்னம் கொஞ்சம் நிம்மதி. பெட் ரூமையும்,ஹாலையும் பெருக்கும்போது ஒண்ணும் எடுத்து செல்லாமலிருந்தால், பிறகு நிம்மதியாக பேப்பர் படிக்கலாமே என பாலு மாமா எண்ணினார். வேலைக்காரியிடம் சென்று சொன்னார்.

    "மொதல்ல பெட் ரூமிலே திருடிட்டு அப்புறமா ஹால்லே திருடிக்கோ."

    - சிமுலேஷன்

    Monday, March 01, 2010

    துக்ளக் சோவுக்குச் சில கேள்விகள்


    பதின்ம வயதில் பல்வேறு பொழுதுபோக்குகள் இருந்தன. அவற்றில் ஒன்று பத்திரிக்கைகளுக்குக் கேள்விகள், துணுக்குகள் எழுதிப் போடுவது. அதிலும் "துக்ளக்' சோ, குமுதம் அரசு போன்றவர்களுக்கு வில்லங்கமான கேள்விகள் கேட்டு அது பிரசுரம் ஆகின்றதா என்று பார்ப்பது எனக்கும் எனது கஸின் ஹரீஷுக்கும் (தற்போது ஹ்யூஸ்டனில்) ஒரு த்ரில்லான அனுபவம். (அந்தக் காலத்திலும் ஆட்டோ பயம் இருந்தது என்றாலும்). இந்தக் கேள்வி-பதில்கள் படத்துடன் பிரசுரமானால் இரட்டிப்பு சந்தோஷமும் கூட. சில சமயம் இருவரது கேள்விகளும் ஒரே இதழிலும் பிரசுரமாகும்.

    அது அந்தக் காலம்!!! (அந்தக் காலத்து மேட்டரைப்பத்திப் பேசினாலே இப்படி சொல்லாமல் இருக்க முடியுமோ?)
    - சிமுலேஷன்