Thursday, September 25, 2008

செம்மங்குடி மாமாவும் ஏர்போர்ட் கச்சேரியும்

(செம்மங்குடி, லால்குடி மற்றும் திருச்சி சங்கரன்)

"சங்கீதப் பிதாமகர்" என்றழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரை ரசிக்காத பாரம்பரிய கர்நாடக இசையின் இரசிகர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். தனது இடைவிடாத உழைப்பாலும், இசையோடு ஒன்றிப் பாடும் பாவத்தினாலும், எளிமையான வாழ்க்கையாலும் அனைவரின் நன்பதிப்பையும் பெற்றவர் செம்மங்குடி மாமா. குறிப்பாக, ஒரு காலத்தில் இசையுலகில் சிலர் முன்னே, பின்னே இருப்பது சகஜமாக இருந்த போதிலும், தனி மனித ஒழுக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர். தனது தந்தையார் கட்டளையிட்ட ஒரு காரணமாகவே தனது இறுதிநாள் வரை எந்த வெளிநாடுகளுக்கும் சென்றதில்லை அவர். இப்படி எந்த வெளிநாடுகளுக்கும் சென்றிருக்காத செம்மங்குடி அவர்கள் "ஏர்போர்ட் கச்சேரி" என்ற ஒரு கச்சேரி செய்ததாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இரயில் பயணங்களிலோ, இரயில் நிலையங்களிலோ கச்சேரி செய்யும் ஒரு வாய்ப்புள்ளது. அது எப்படி ஏர்போர்ட் கச்சேரி? எனக் குழம்பலாம். மேலும், இந்த ஏர்போர்ட் கச்சேரி எந்த ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? எதற்காக ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? போன்ற குழப்பமான தகவல்கள் உண்டு.

இந்தக் கச்சேரியில் லால்குடி ஜெயராமன் அவர்கள் வயலினும், திருச்சி சங்கரன் அவர்கள் மிருதங்கமும் வாசித்துள்ளதாகத் தெரிகின்றது. சமீபத்தில் 1971ல், மும்பையில் உள்ள ஷண்முகானந்தா ஹாலில் இந்தக் கச்சேரி நடைபெற்றதாகவும், கச்சேரியின்போது, அருகில் பறக்கும் ஆகாய விமானங்களின் சப்தங்கள் கேட்பதாகவும் ஒரு சிலர் சொல்கிறார்கள். இன்னம் சிலரோ, இல்லை இல்லை, இந்தக் கச்சேரி இன்னமும் சமீபத்தில் 1960ல் தாம்பரத்தில்தான் நடைபெற்றது என்றும் கூறுகின்றனர். கடைசியாகக் கிடைத்த தவலின்படி இது தாம்பரத்தில்தான் நடைபெற்றதாகத் திருச்சி சங்கரன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் கச்சேரி நடைபெற்ற இந்த இடத்தருகே ஆகாய விமானங்களின் வரத்து அதிகம் இருந்ததால், செம்மங்குடி மாமா கடுப்பானதாகச் சொல்கிறார்கள். ஒரு சமயத்தில், "வந்துட்டான் அசுரன்"னு அவர் சொல்வதைக் கேட்கும்போது, இது உண்மைதான் என்று புரிகின்றது.


இப்போது ஜெட் ஏர், கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர், கோ ஏர், இண்டிகோ, பாராமவுண்ட் என்று பல விமானக் கம்பெனிக்கள் இருப்பதால் விமானப் போக்குவரத்து அதிகம் இருக்கின்றது. சுமார் 30-40 ஆண்டுகள் முன்னாலே எப்படி விமான போக்குவரத்து அதிகமாக இருந்திருக்க முடியும் என்று சிலர் கேள்வி கேட்டபோது, கிடைத்த விளக்கம் என்னவென்றால், அந்த சமயத்தில் விமான நிலைய அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தக் கச்சேரி நடைபெற்ற நன்னாளில், வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதால், விமானப் போக்குவரத்து அதிகம் இருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த விஷயத்தை செம்மங்குடி மாமாவே இசைக் கல்லுரியில் ஒரு முறை சொன்னாராம்.

இந்தக் கச்சேரியில் கிட்டத்தட்ட 18 உருப்படிகள் பாடியுள்ளார். அருமையான இந்த நிகழ்ச்சியினை அவரே வெகுவாக இரசித்துப் பாடியிருப்பதாகத் தெரிகின்றது. ஏனென்றால் ஒரு இடத்தில், "இன்னிக்கிப் பாடிண்டே இருக்கலாம் போல இருக்கு" என்று சொல்கின்றார். இந்தக் கச்சேரியின் ஒரு சில பாடல்களை தரவேற்றலாம் என்றால், மிகப் பெரிய கோப்பாக உள்ளது. எனவே உண்மையிலேயே ஏர்போர்ட் கச்சேரி கேட்க ஆவலாக உள்ளவர்கள் இங்கே சென்று இரசியுங்கள். முடிந்தால் எந்தப் பாட்டில் "வந்துட்டான் அசுரன்"னு சொல்றார்னு என்பதனையும் சொல்லுங்கள்.

- சிமுலேஷன்

Sunday, September 07, 2008

"ரெகார்ட் ப்ளேயர்" காலம்

"டெலெராட்" என்ற பெயர் கொண்ட வால்வ் ரேடியோ மட்டும் வைத்திருந்த எங்கள் இசை வாழ்வில் வசந்தம் வீசியது ஒரு நாள். உறவினரின் திருமணத்திற்கு கோவை சென்றிருந்த அம்மாவும், அப்பாவும் திரும்பி வரும்போது சர்ப்ரைஸாக "ரெகார்ட் ப்ளேயர்" ஒன்று வாங்கி வந்தது கண்டு நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. ஆனால், அதற்கு எலெக்ட்ரிக் கனெக்ஷன் எப்ப்டிக் கொடுப்பது என்பது மட்டும் புரிபடவில்லை. எந்த இடத்தில் எலெக்ட்ரிக் ப்ளக் இருக்கு என்றே தெரியவில்லை. மறுநாளே, கோவைக்கு ரெகார்ட் ப்ளேயரை எடுத்துச் சென்று கடையில் விசாரித்தபோது, அதன் அடிப்பாகத்தில் உள்ள ஒரு மூடியில் உள்ள ஒரு மரையில் ஒரு நாலணா காசினை வைத்துத் திருக அழகாகத் திறத்து கொண்டது. 210 வோல்டியிருந்து 12 வோல்ட்டுக்குக் குறைக்கும் ஒரு டி.சி. எலிமினேட்டரும் வெளிப்பட்டது. அவர்கள் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் திரும்பி வரும் வரை, வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தோம்.

மின்சார இணைப்பு கொடுத்தவுடன் இசை மேடை சுழலத் தொடங்கியது. இசைத் தட்டினைப் போட்டு இயக்கியவுடன், ஒலியும் வரத் தொடங்கியது. ஆனால், இப்போது வேறு பிரச்னை. இந்த முறை எம்.எஸ் அவர்கள் எம்.டி.ராமனாதன் குரலில் ழ்.ழ்ழ்ழ்ழ் என்று முழங்கினார்கள். எல்லா இசைத்தட்டிலும் இதே பிரச்னை. மீண்டும் ஒரு மணி நேர கோவை பயணம். "என்ன செய்தீர்கள்?" என்று கடைக்காரர் கேட்டு பிறகு விழுந்து விழுந்து சிரித்தார். என்ன கூத்துவென்றால், இசைத்தட்டின் மேல் வைக்கும் முள்ளைப் பாதுகாக்க பித்தளையில் ஒரு கவசம் (protection guard) ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கவசத்தினை எடுக்காமல், அப்படியே இசைத்தட்டின் மேல் வைத்திருந்திருகின்றோம்.

இந்த மாதிரியான கூத்துக்கள் ஒய்ந்த பின் இசைத்தட்டுக்களை ஒவ்வொன்றாக ஓடவிட்டு இரசித்தோம். ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து வந்தபின் இசைத்தட்டுக்களை கேட்பது வாடிக்கையானது. நண்பர்களை அழைத்து வந்து 45 rpm ல் பாடிய பாலமுரளி கிருஷ்ணாவை 78 rpmல் ஒடவிட்டு கீச்சுக்குரலில் பாடவைப்பதும் ஒரே தமாஷாக இருக்கும்

எலெக்ரானிக் யுகத்தில், முன்னேறங்கள் ஏற்பட்டு, கேஸட் ப்ளேயர், சி.டி, டி.வி.டி, ப்ளூ ரே, என்று எத்தனையோ தொழில் நுட்பங்களப் பார்த்தாலும், முதன் முதலாக் ரேடியோ நிகழ்ச்சிகள் போல அல்லாமல் ரெகார்ட் ப்ளேயர் மூலம் எந்தப் பாட்டையும் எவ்வளவு முறையும் கேட்க முடியும் என்றபோது அடைந்த ஆச்சரியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை.

நாங்கள் வைத்திருந்த ரெகார்ட் ப்ளேயர் ரிப்பேராகி, சரி செய்ய ஆளில்லாமல் பின்னர் ஒரு நாள் அதனைத் தூக்கிப் போட்டோம். இசைத் தட்டு நினவலைகளை கேட்டுக் கேட்டு, மனைவிக்கும் அதனைக் கேட்கும் ஆசை வந்துவிட்டது. ஆனால் இசைத்தட்டுக்கள் இருந்ததே ஒழிய, ப்ளேயர் இல்லாத காரணத்தால்,ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.

இத்தனை நாட்கள் கழித்து, நேற்று மூர்மார்க்கெட்டில் ஒரு பழைய HMV Fiesta மாடல் ரெகார்ட் ப்ளேயரை 500 ரூபாய்க்கு வாங்கினேன். சுமார் 35 ஆண்டுகள் கழித்து, இசைத்தட்டுக்களைத் தூசி தட்டி எடுத்து மீண்டும் ஒட விட்டபோது, அடைந்த ஆனந்தம் மட்டற்றது.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்". பதிவர்களே! விரைவில் எதிர்பாருங்கள் எமது இசைத்தட்டு ஒலிபரப்பினை.

- சிமுலேஷன்