Thursday, November 20, 2008

தமிழ்த் திரையிசையில் ஸ்வராக்ஷரம்

ஸ்வராக்ஷரம் என்பது கர்நாடக இசையின் ஒரு படிமம். ஸ்வராக்ஷரம் என்ற வார்த்தையினைக் கூர்ந்து கவனித்தால் அது ஸ்வரம், அக்ஷரம் என்ற இரு வார்த்தைகளின் கலவை என்பது புரியும்.

ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஏழு ஸ்வரங்களே இராகங்களுக்கு ஆதாரமாகும். அக்ஷரம் என்றால், பாடலில் பொதியப்பட்டுள்ள வார்த்தைகளாகும்.

ஸ்வரங்களைக் கொண்டே அக்ஷரங்களைச் செய்தால் அதுவே ஸ்வராக்ஷரமாகும். இது ஒரு விதமான வார்த்தை விளையாட்டாகும்.

திருவாரூர் ராமசாமிப் பிள்ளை என்பார் எழுதிய மோஹன இராகத்தில் அமையப் பெற்ற "ஜகதீஸ்வரி... கிருபை புரி" என்ற பாடலில், "தாருக்குதவி செய்யும் அடுத்தாருக்குதவி செய்யும் தாய் உனைவிட வேருளதா? தாமதமின்றி வேதபுரி தாசனுக்கருந்த என்பதறிதா, பெரிதா, வரம் தா" என்று தைவதத்தை வைத்து ஜாலம் செய்திருப்பார்.

ஜி.என்.பி அவர்களது 'சதாபாலய", பிறகு,கேதாரத்தில் துவங்கி வலசி என்ற நவராகமலிகை வர்ணத்தில், பதஸரோஜ" என்ற இடம், ஹிந்தொள இராகத்தில் அமைந்த "ஸாமகான லோல", ஆனந்த பைரவியில் அமைந்த மற்றோரு "ஸாமகான" ஆகியவை ஸ்வராக்ஷரங்களுக்கு நல்ல உதாராணங்களாகும்.

திரையிசையில் இவ்வாறு ஸ்வரக்ஷரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாவென்று பார்த்தால், ஒரு சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றது.

அகத்தியர் என்ற படத்தில் வரும், "வென்றிடுவேன்... எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்", என்ற பாடலில் வரும் சில ஸ்வராக்ஷரங்கள்:-

மனிதா மத மனிதா - ம நீ தா... ம த... ம நீ தா
பாதக மனிதா - பா த க... பா நீ தா
சாகசமா - ஸ க ஸ மா

ஸ்வரக்ஷரம் அழகாக அமையப் பெற்ற ஓரிரு தமிழ்த் திரைப் பாடல்களில் ஒன்று, "உன்னால் முடியும் தம்பி" படத்தில் இடம் பெற்ற, "என்ன சமையலோ" என்ற பாடலாகும். இதில் ஸ்வராக்ஷரம் என்பது வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இடம் பெற்றிருப்பது ஒர் சிறப்பம்சமாகும்.




ஸ்வராக்ஷரம் என்றால் என்னவென்று இப்போது பிடிபட்டிருக்கும்.

இப்போது இந்த "என்ன சமையலோ" என்ற பாடலில் வரும் ஸ்வராக்ஷரங்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

- சிமுலேஷன்