Thursday, January 01, 2009

மார்கழி ராகம் - விமர்சனம் - Spoiler

எந்த ஆங்கிலப் புத்தாண்டு வருடப் பிறப்பிற்கும் புதிய சபதங்கள் ஏற்பதுவுமில்லை. கோயிலுக்கு செல்வதுவுமில்லை. ஆனால் விடுமுறை தினமாதலால், எதேனும் புதிய நிகழ்ச்சிகள் இருந்தால் தவறாமல் செல்வதுண்டு. இந்த வருடம் புத்தாண்டு விழாவினை முன்னிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, முதலிலும் முடிவிலும் தோன்றியது "மார்கழி ராகம்".

சென்னையில் சத்யம் தியேட்டரில், மார்கழி ராகம் பார்க்க வந்திருந்த மயிலாப்பூர், மாம்பலம் மற்றும் மடிப்பாக்க மாமா, மாமிக்களை, மடியில் குண்டு வைத்திருக்கின்றார்களா என்று சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
அணமையில் மறைந்த ஒலிவித்தகர் எச்.ஸ்ரீதர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து படம் துவங்கியது. முதலில், பாம்பே ஜெயஸ்ரீயின் அமைதியான "ஸர்வ மங்கள மாங்கல்யே" என்ற ஸ்லோகத்தினைத் தொடர்ந்து மாயாமாளவககௌளையில் "மாயாதீத ஸ்வரூபிணி". அடுத்து வந்தது சுகமான நீலாம்பரியில் "அம்பா நீலாயதாஷி". இம்முறை நீல நிறப் புடவையில் வந்தார் ஜெயஸ்ரீ. மூன்றாவதாக ரீதிகௌளையில் "ஜனனீ நின்னுவினா". நல்ல உருக்கம்தான். ஆனால் வரிசையாக எல்லாப் பாடல்களுமே சவுக்க காலத்தில்

பாடியபடியாலும், பி.சி.ஸ்ரீராமின் மங்கிய காமிரா வெளிச்சத்திலும் சற்றே தூக்கம் வந்தது. "ஜனனீ நின்னுவினா"வில், சரணத்தில் நிரவல் செய்து, "ஜனனீ"யில் ஸ்வரம் பாடினார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் செய்யப்பட்ட கைதட்டல்களைக் கேட்டபோது, சத்யம் தியேட்டரில் இருக்கின்றோமா இல்லை நாரத கான சபாவில் இருக்கின்றோமா என்று தோன்றியது. தனி ஆவர்த்தனம் இடம் பெற்றபோது, யாரேனும் எழுந்து போவார்களோ என்று பார்த்தேன். யாரும் எழுத்து போகவில்லை. எம்பார் கண்ணன் வயலின் வழக்கமான சுகத்துடன் வாசித்தார். மிருதங்கம் பட்றி சத்தீஷ் குமார். இவரும் நன்றாகவே வாசித்த போதிலும், சற்றே அதிகப்படியான "கும்கி"யோ என்று தோன்றியது.

தனி ஆவர்த்தனதில் திடீரென்று மிருதங்கத்தில் அருண் பிரகாஷும், கஞ்சிராவில் புருஷோத்தமனும் சேர்ந்து கொண்டு, 'தனி'யினை பரிமளிக்கச் செய்தார்கள். தனி முடிக்கும் போது, பல்லவியினை எடுத்துக் கொண்டு ரஜனி போல் எண்ட்ரி கொடுத்தார் டி.எம்.கிருஷ்ணா. பொதுவாகக் கச்சேரியின் பின் பகுதியில் பாட வேண்டிய "ஸாரமைன மாடலெந்தோ" என்ற பெஹாக் ராக ஜாவளியுடன் துவங்கினார். பின்னர் வராளி ராகத்தில் ராகம்-தானம்-பல்லவி.

சற்றே சிக்கலான வராளி RTPக்கு ஸ்ரீராம் குமாரின் வயலின் அருமையாக ஈடு கொடுத்தார். சாமா மற்றும் காபியில் ராகமாலிகையில் பாடிய ஸ்வரங்களைக் கேட்டுக் கொண்டெயிருக்கலாம் போல இருந்தது.
அடுத்தபடியாக கிருஷ்ணா பாடியது கமாஸ் ராகத்தில் "சீத்தாபதி நாமன சுனா". கமாஸ் ராக உருப்படிக்குப் பின்னர், இம்முறை மீண்டும் ஜெயஸ்ரீ திரையில் தோன்றி, "வடரே சயனம்" என்ற முகுந்தாஷ்டகத்தினை தேஷ், பாகேஸ்ரீ மற்றும் காபி ராகங்களில் பாடினார். பின்னர், கிருஷ்ணா மத்யம ஸ்ருதியில், காபியில் "ஜெகதோதாரணா" பாடினார்.

ஜெயஸ்ரீ சுவானுபூதி என்ற பெயரில் பெரும்பாலான நேரங்களில் கண்ணை மூடிக் கொண்டிருந்தார். ஆனால், கிருஷ்ணாவோ, பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு நல்ல ஊக்கம் தந்து, அவர்களுடன் ஒரு நல்லதொரு interactionம் வைத்திருந்தார். அதனால் அவரை இன்னமும் ரசிக்க முடிந்தது.

ஜெயஸ்ரீ மற்றும் கிருஷ்ணா இருவருமே ஒவ்வொரு பாடலுக்கும் உடை மாற்றம் செய்திருந்தனர். ஆனால் எதுவுமே கண்ணைப் பறிக்காத வகையில் ரம்மியமாக இருந்தது. ஜெயஸ்ரீ செய்திருந்தது அவரின் வழக்கமான எளிமையானதொரு ஒப்பனை. கிருஷ்ணாவின் ராஜ குமாரன் போன்ற பட்டு ஜிப்பாக்களும், ஜரிகை அங்க வஸ்திர உடைகளும் அபாரம். இறுதியாக இருவரும் சேர்த்திசைத்த்து, பாரதியாரின் "வந்தே மாதரம்" அதற்கு அவர்கள் போட்டிருந்த வெண்ணிற உடைகள் மிகப் பொருத்தம்.


சமீபத்தி மறைந்த ஒலி வித்தகர் ஸ்ரீதர் அவர்களுக்கு எதனால் இத்தனை புகழ் என்று யாருக்கேனும் தோன்றினால், மார்கழி ராகம் பார்த்தால் விடை கிடைத்துவிடும். அப்படி ஒரு துல்லியமான ஒலி அமைப்பு. அதே போல், காமிராவைப் பற்றியும் சொல்லி கொண்டேயிருக்கலாம். குறிப்பாக கிருஷ்ணா ஸ்வரங்கள் பாடும்போது, காமிரா கட் செய்து செய்து காட்டுவது அருமையாக இருந்தது.

குறைகள் என்று சொல்ல எதுவும் தோன்றவில்லை. ஆனால் தொன்றிய சில சந்தேகங்கள்.

கஞ்சிராவுக்கு இடம் கொடுத்தவர்கள் கடத்திற்கு இடம் கொடுக்க மறந்ததேனோ?

எப்படியாவது ஒரு தில்லானாவினையும் நுழைத்திருக்கலாமே?

கர்னாடக இசை உலகில் ஒரு முழு நீளக் கச்சேரியை இது போன்று திரை வடிவில் காண்பிப்பது ஒரு புதிய பரிணாமம். இதனை இசை உலகின் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. குறிப்பாக வெளி நாட்டில் வாழும் இசை ரசிகர்கள் இப்படிப்பட்ட முயற்சிகளை வரவேற்பார்கள்.

Pictures Courtesy : http://www.margazhiraagam.com/

- சிமுலேஷன்