Wednesday, June 06, 2012

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி - நூல் விமர்சனம்க.நா.சு. அவர்களின் மாப்பிளையான பாரதி மணி, பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் தகப்பனாரான சின்னசாமி ஐயராக நடித்தவர். அவரை ஞானியின் "கேணி" சந்திப்பில் ஒரு முறை சந்தித்தேன். பின்னர் பல பதிவுகளில் அவர் சுவாரசியமான அனுபவத் தகவல்களைப் பின்னூட்டமாக இடுவதையும் பார்த்துள்ளேன். அவர் தனது அனுபவங்களையெல்லாம் தொகுத்து "பல நேரங்களில் பல மனிதர்கள்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றார் என்று தெரிந்த போதே அதனை உடனே படிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தற்போதுதான் கிடைத்தது.

S.K.S மணி எனப்படும் பாரதி மணி நாடக மற்றும் திரைப்படக் கலைஞர் மட்டுமல்ல, அதிகார வர்க்கத்திடம் சென்று அனைத்தயும் முடிக்கும் ஆற்றல் பெற்ற ஒரு பலமான தொடர்பாளர் ஆவார். கார்ப்பொரேட் நிறுவனங்களை பொறுத்த வரையில் ஒரு நினைததை முடிப்பவன். (நாமெல்லாம் நீரா ராடியா டேப் விவகாரங்களை ஊடகத்தில் பார்த்து  அதிர்ச்சி அடைந்த போது, கண்டிப்பாக மணி புன்முவலித்துக் கொண்டிருப்பார்). சுஜாதா, இந்திரா பார்த்த சாரதி, பூரணம் விஸ்வநாதன், கடுகு, சுப்புடு போன்ற டில்லி வாழ் தமிழ் எழுத்தாளர்களுடன் பழகி வந்தவர். கர்நாடக இசை, சமையல் போன்ற கலைகளிலும் அதீத ஈடுபாடு கொண்டவர்.

இப்பேர்ப்பட்டவர் தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதினால் சுவாரசியதிற்குப் பஞ்சம் இருக்குமா என்ன? சும்மா, விறு,விறுவெனறு த்ரில்லர் நாவல் போலச் செல்கின்றது "பல நேரங்களில் பல மனிதர்கள்".  நாஞ்சில் நாடன், ஜெயமோகன், டெல்லி கணேஷ், லால்குடி ஜெயராமன் போன்ற பிரபலங்கள் பலரும் மணியைப் பற்றி எழுதியதிலிருந்தே இவருடைய நட்பு வட்டாரம் எவ்வளவு பெரியது என்று புரிந்து கொள்ளலாம்.

இந்தப் புத்தகத்தில் 18 கட்டுரைகள் உள்ளன. இதில் 'டில்லி திகம்போத் சுடுகாடு' குறித்த கட்டுரை, சுஜாதா உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்ட கட்டுரை. பிரதிபலன் எதிர்பார்க்காது மனித நேயத்துடன் எப்படி அடுதவருக்கு எப்படி உதவியுள்ளார் என்பதனைத்  தம்பட்டம் இல்லாமல் சொன்னது மட்டுமல்லாமல், எத்தனை விஷ்யங்களச் சுவாரசியமாகச் தருகின்றார் இந்த மனுஷன்.  

அடுத்தது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் புதல்வர் காந்தி தேசாயுடனான அனுபவம், ஒரு கிரம் த்ரில்லர் ரேஞ்சுக்குக் செல்கின்றது. 'இப்படிக் கூட இருந்தார்களா இந்தப் பசுத் தோல் போர்த்திய புலிகள்?', என்று பதைக்க வைக்கின்றது. காந்தி தேசாய் பற்றிக் கூறிய மணி, மற்ற பிரபல பிரமுகர்களின் மறுமுகத்தையும் காட்டுவார் என்று ஆவலோடு எதிர்பாரத்தால், உஷாராகப் பதுங்கி விடுகின்றார். அமைச்சர் கமல்நாத் பற்றி ம்ட்டும் ஒரு விஷயம் பேசப்படுகின்றது.

பங்களாதேஷ அகதிகள், இந்தியாவுக்குள் நுழையும் சமபவம், பாஸ்மதி அரிசிக்கான விதை நெல் பாகிஸ்தானிலிருந்து வரவழைக்கப்படுவது, செம்மீன் படத்திற்கு  தேசிய விருது கிடைத்த பின்னணி போன்ற சுவையான விஷயங்கள தவிர, சுஜாதா, சுப்புடு, பூரணம் விஸ்வநாதன் ஆகிய ந்ணபர்களுக்கென்று தனித்தனி அத்தியாயங்களே ஒதுக்கியுள்ளார்.   சுப்புடுவின் மறு பக்கத்தினை நட்புணர்வு குறையாமல் லாகவத்துடன் எழுதியுள்ளார். மேலும் கொசுவர்த்திகளாக தான் வாழ்ந்த திருவிதாங்கூர், சாப்பிட்ட டில்லி ஹோட்டல்கள், பணி புரிந்த பங்களா தேஷ, பயணம் செய்த டில்லி-சென்னை கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ஆகியவை குறித்து எழுதும் போது ஒரு தேர்ந்த எழுத்து தெரிகின்ற்து.

குடிப்பது குறித்து தனக்கு எந்த விதத் தயக்கமும் இருந்ததில்லை என்று ப்ல்வேறு இடங்களிலும் இவர் கூறும் போது பாசாங்கு இல்லாத எழுத்து இவருடையது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  இவ்வளவு தூரம் குடியின் மகிமையப் பற்றிப் பேசினவர் குடியினை விட்டொழித்ததன் காரணம் என்ன? என்றும் எப்படி அப்பழக்கத்தின விட்டார் என்றும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

சினிமா, நாடகம், அதிகாரத் தொடர்பு, கார்ப்பொரேட் பணி என்று பன்முகம் கொண்ட இவர், எழுபது வயதுக்கு மேலேதான் எழுத ஆரம்பித்துள்ளார். நடையில், நகைச்சுவை, அங்கதம், விறுவிறுப்பு, தகவல்கள என்ற பல பரிணாமங்களையும்  அளவான விகிதத்தில் கலந்து கொடுத்து படிப்பவர்களை பர்வசப்படுத்துகின்றார். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் எழுத ஆரம்பித்திருந்தால், க.நா.சுவை, பாரதி மணியின் மாமனார் என்று அறிமுகப்படுத்தியிருப்பார்களோ என்னவோ!

நூல்: பல நேரங்களில் பல மனிதர்கள்
ஆசிரியர்: பாரதி மணி
பதிப்பு: உயிர்மை பதிப்பகம், 2008
பக்கங்கள்: 192
விலை: Rs.100

- சிமுலேஷன்