Monday, March 20, 2006

பரிமாற்றப் பகுப்பாய்வு-01



பரிமாற்றப் பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கின்றேன் என்று யாராவது சொன்னால் பயந்து விடாதீர்கள். நீங்களும், நானும் கூட செய்யலாம். வழக்கம் போல பரிமாற்றப் பகுப்பாய்வு என்றால் என்ன எண்டு முதலில் விளக்கம் தெரிந்து கொள்வோம்.

பரிமாற்றப் பகுப்பாய்வு என்பது ஆங்கிலத்தில் Transactional Analysis எனப்படுகின்றது. பரிமாற்றப் பகுப்பாய்வு என்பது மானுட நடைமுறைகளை அறிவதன் பொருட்டு, முறைபடுத்தி, வகைப்படுத்தப்பட்ட ஒரு அணுகுமுறையாகும்.

விரைவாகவே விஷயத்திற்கு வந்து விடுகின்றேன். மனித மனம் என்பது எளிதாகப் பிரித்து, பகுத்து அறியக் கூடிய மூன்று பகுதிகளாகக் கொண்டுள்ளது என்கிறனர் அறிவியல் அறிஞர்கள். இந்தப் பகுதிகளை ஆங்கிலத்தில் EGO STATES என்று கூறுகின்றோம். தமிழில் இதனை மனோநிலைகள் அல்லது மனோபாவம் என்று சொல்லலாம். இவை என்னவென்றால்

1. பெற்றோர் மனோபாவம்
2. குழந்தை மனோபாவம்
3. பக்குவ மனோபாவம்

1, பெற்றோர் மனோபாவம்: முதலில் பெற்றோர் மனோபாவம் என்றால் என்னவென்று பார்ப்போம். சிறு வயதில் நம்மை வளர்த்த பெற்றோர், ஆசிரியர்கள், மூத்தவர்கள், உறவினர்கள் ஆகியோர் எப்படிச் செயல்பட்டனரோ, அப்படியே இன்றும் நாம் செயல்படும் தன்மையை பெற்றோர் மனோபாவம் எனலாம். "இது நல்லது", "இது கெட்டது", "இதனைச் செய்யாதே", "அதனைச் செய்யாதே" என்பது அனைத்தும், இதனுள் அடங்கும் சட்ட திட்டங்கள், தர்ம நியாயங்கள், கலாச்சாரப் பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் பொன்றவன்றின் மொத்த வடிவமே பெற்றோர் மனோபவம் என்றும் கூறலாம். இதற்குக் கற்பிக்கப்பட்ட மனோபாவம் என்றும் பெயர் உண்டு.

2. குழந்தை மனோபாவம்: குழந்தைப் பருவத்தில் நாம் எப்படிச் செயல்பட்டோமோ, எண்ணினோமோ, உணர்ந்தோமோ. அப்படியே இன்றும் செயல்படுவதற்கு, குழந்தை மனோபாவம் எனலாம். தேவையின் அடிப்படையில் இயல்பாக இயங்கும் இயக்கங்கள், மற்றும் புறத் தூண்டுதல்களை எதிர்கொள்ளும் விதங்கள் அகியவற்றின் தொகுப்பினை குழந்தை மனோபாவம் என்றூ சொல்லலாம். இதற்கு உணர்ச்சி மனோபாவம் என்றும் பெயர் உண்டு.

3. பக்குவ மனோபாவம்: உணர்ச்சிகளுக்கு இடம் குடுக்காமல், விருப்பு. வெறுப்பின்றி , ஒரு கணிணியைப் போல், உண்மைகளை பகுத்தறிந்து நல்ல முடிவுகளை எடுக்கும் மனோபாவத்தைப் பக்குவ மனோபாவம் என்கின்றோம். இதனச் சிந்திக்கும் மனோபாவம் என்றும் கூறலாம்.

அடுத்த பாகத்தில், இந்த மனோபாவங்களின் உட்பிரிவுகளையும், உதாரணங்களையும், இன்னமுமே சுவாரசியமாகப் பார்க்கலாம்.

- தொடரும்