Sunday, February 26, 2006

பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத (அல்லது) - உரக்கச் சொல்லு



"ஹரி ஓம் விச்வம் விஷ்ணும் - வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:|"

பூஜையறையிலிருந்து கணீரென்று குரல் வந்தது, பார்த்தா என்ற பார்த்தசாரதியிடமிருந்து. அதே நேரம் , "அம்மா போன்; உங்களுக்குத்தான்" என்று மாலினியிடம் கார்ட்லெஸ் போனை நீட்டினாள், சாந்தி.

"போன் அடிச்சது கூடக் காதிலே விழல. உங்க அப்பா வழக்கம் போல சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரா".

இது வழக்கமான பல்லவி. தினமும் நடக்கும் கூத்துதான். பார்த்தா தினமும் சத்தமாக ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்து விடுவார். மாலினியும் உடனே கத்த ஆரம்பித்து விடுவாள். அது என்னவோ, சத்தமாக சொல்வதே அவருக்குத் திருப்தி அளிக்கும் விஷயம். மாலினிக்கோ, "பிரார்த்தனை என்பது மனதுக்குள்ளே சொல்ல வேண்டிய விஷயம்; அதனை எதற்காக இப்படி உரக்கச் சொல்ல வேண்டும்" என்பது அவள் வாதம்.

"இந்த விஷ்ணு ஸகஸ்ரநாம புக்கை யார் எடுத்தது? எதெதுதான் காணமப் போறதுங்குற வெவஸ்தையே இல்லாமப் போச்சு" என்று அலுத்துக் கொண்டார் பார்த்தா.

"கிட்டத்தட்ட இரண்டு வருஷமா, இந்தச் ஸ்லோகத்தை சொல்றேள்; இன்னிக்கி ஒரு நாள்
புக் இல்லாம சொல்ல முடியாதா?"

"ஒன்னால முடிஞ்சா எடுத்துக் கொடு; ப்ரீ அட்வைஸை யாரும் கேட்கலை"

சரி. வேற வழியில்லை. புக் இல்லாமலேயே சொல்லுவோம் என்று ஆரம்பித்தார், பார்த்தா. சரளமாக வாயிலிருந்து தட தடவென்று வந்து விழுந்தது. பரவயில்லையே, கலக்குகிறோமே என்று எண்ணிய அடுத்த வினாடியே, சறுக்கல்.

"பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத...பகவான் பகஜ்ஹாநந்தீ... பகவான்..."

"என்ன ஆச்சு? அடுத்த வரி மனதிற்குள் வர மேட்டேங்கிறதே. என்ன செய்ய? நா¨ளைக்குப் புக் கெடச்ச உடனே இரண்டு தரம் சொல்லிவிட வேண்டியதுதான்" என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதே,

"ஆதித்யோ ஜ்யோத்ரதிய..." என்ற அடுத்த அடி உரக்கக் கேட்டது.

தனது பக்தியை மெச்சி, ஸாட்சாத் பகவானே அசரீரியாய் அடுத்த வரி எடுத்துக் கொடுத்து விட்டாரோ என்று ஆடிப் போய்விட்டார், பார்த்தா.

ஆனால், குரல் எதுவோ பரிச்சயமான குரலாக இருக்கின்றதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மாலினி,

"என்னது, பட்டம்மா; நீயா விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொன்னது" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"ஆமாம்மா. ஐயா தெனைக்கும் பூஜை செய்யும் போது, ஒரக்க இது சொல்றாரில்லையாம்மா. நானும் பாத்திரம் தேய்க்கும்பாது, இத்தெ கேட்டுக்கிகினே இருப்பேன். அப்படியே மனசிலே பதிஞ்சி போயிருச்சு. அம்மா தப்பா எடுத்துக்காதீங்க"

----------0----------