"ஸார், ஆதித்யா ரொம்ப நன்னா பாடறான். அவனை இந்தவச சக்கரை அம்மன் கோயி¢லே, ஸ்ரீராம நவமிக் கச்சேரியிலே பாட கேட்டிருக்கா. சரின்னு சொல்லிட்டேன்." என்றார் பாட்டு வாத்யார்.
ஸ்ரீராம நவமிக் கச்சேரி என்று காதில் விழுந்தவுடன், நினைவு முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஓடத் தொடங்கியது. அப்பா ஒரு பன்முகத்திறன் கொண்டவர். தமிழ்ச் சங்கம், இஸ்கஸ், ரோட்டரி கிளப் என்று எல்லா ஸோஷியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இருந்தபோதும் அவர் அதிக ஈடுபாடு கொண்டது ஸ்ரீராம நவமிக் கமிட்டியில்தான். அவர்தான் உப தலைவர். எழுபதுகளில் மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீராம நவமிக்...