அந்தக் காலத்தில், பள்ளிக்கூட இன்ஸ்பெக்ஷன் என்பது மாணவர்களுக்கு தீபாவளிக்கு அடுத்தபடியான ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். ஆசிரியர்களுக்கும் கூட. ஒரே வித்தியாசம் அவர்கள் பிதறலை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். மற்றபடி பள்ளிக்கூடத்தில் உள்ள அனைவரும் எக்சைட் ஆகி, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திமிலோகப்படும் நேரமது.
இன்ஸ்பெக்ஷன் தொடங்க ஒரு வாரம் முன்னரே, பள்ளி களை கட்டி விடும். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடிக்கப்படும். அடுப்புக்கரி, ஊமத்தை இலை கொண்டு அரைக்கப்படும் கரும்பலகைக்குண்டான வர்ணக்கலவை (கரி), கரும்பலகையில் பூசப்படும். இந்த...