Sunday, August 21, 2005

இரத்த தானம்

"ஸார். சீக்கிரம் கிளம்புங்க. கேப் ஏற்பாடு பண்ணிருக்காங்க பர்ஸ்ட் எய்ட் சென்டெரிலேர்ந்து."

அவசரமாக உடை மாற்றிக் கொண்டு வந்து ஏறினேன் அந்த அம்பாசடர் காரில். ஏற்கெனவே காரில் மூன்று AB+ உட்கார்ந்திருந்தனர். கார் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிட்டலை நோக்கி விரைந்தது. பவர் பிளான்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசனுக்கு ஆக்சிடெட்டாம். வெல்டிக் செய்து கொண்டிருந்த மணுசன், கால் தவறி கான்டென்சேட் டாங்கில் விழுந்து விட்டானாம். அவனுக்கு இரத்த தானம் செய்யவே இப்போது சென்று கொண்டிருக்கின்றோம்.

இப்போதுதான் வாழ்க்கையில் முதல் முறையாக இரத்த தானம் செய்கின்றேன். என்னுடைய இரத்தம் அந்த மணுசனைக் காப்பற்ற வேண்டுமே என்று வேண்டிக் கொண்டே, நாலாவது மாடியில் இருக்கும் அந்த இரத்த வங்கியில் நுழைகின்றேன். கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விட்டு என் முறை வரும் வரை காத்திருக்கின்றேன். இரத்த அழுத்தம் பரிசோதிக்கப் பட்ட பின், கட்டிலில் படுக்கும்படி பணிக்கப்படுகின்றேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஊசி கையைத் துளைக்கின்றது. ப்ளாஸ்டிக் பையில் சொட்டு சொட்டாக எனது இரத்தம் சேகரிக்கப்படுகின்றது. சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் ஒரு டம்ப்ளர்
க்ளூக்கோஸ் தண்ணீரும், சில பிஸ்கெட்டுகளும் சாப்பிட்டபின், காரிலே வீடு வந்து சேர்ந்தேன்.

சாயங்காலம் மணி ஐந்து இருக்கும். அன்பு சுரேஷிடமிருந்து போன்.

"ஸார். விஷயம் கேள்விப்ப்ட்டீங்களா? முருகேசன் போய்ட்டானாம். ".

"என்னது? போய்ட்டானா? என்னப்பா சொல்றே. கார்த்தாலதானே இரத்தம் கொடுத்துட்டு வந்தேன்."

"என்ன பண்றது ஸார். பாவி கொடுத்து வச்சது அவ்வளவுதான். 80% சிவியரிட்டி இல்லையா? அப்புறம் முக்கியமான விஷயம். நாளைக்கி அந்த இரத்த வங்கியிலே உங்களை வரச் சொல்லியிருக்காங்க ஸார்."

"என்ன அன்பு. எதாவது பிரச்சினையா?"

"ஆமாம். உங்களையே நேரில் வரச் சொல்லியிருக்காங்க"

மறு நாள் எனக்கு ஆப்தான். குழப்பத்துடன் இரத்த வங்கி சென்ற என்னை, இரத்தம் எடுத்த ஸிஸ்டர் புன்முறுவலுடன் வரவேற்றாள்.

"ஸார். பாவம். நேத்திக்கு அட்மிட் ஆன உங்க கம்பெனி எம்ப்ளாயீ இறந்துட்டார். உங்க இரத்தம் அவருக்குக் கொடுக்க முடியலே. உங்க இரத்தம் வேற குரூப் ஸார். பேஷண்ட்டோட குரூப் AB+VE. ஆனா உங்களுது வந்து A-VE. இது ரொம்ப ரேர் குரூப் ஸார். இதை வேற ஒரு பேஷண்ட்டுக்கு கொடுத்துட்டோம். இத சொல்றதுக்குத்தான் நேரிலேயே வரச்சொன்னோம். உங்க சந்தேகத்திற்கு வேணும்னா னீங்க இன்னொரு முறை ப்ளட் டெஸ்ட் பண்ணிக்கோங்க ஸார்"

அதிர்ச்சியாக இருந்தது. முருகேசனைக் காப்பற்ற முடியவில்லையே என்று ஒரு புறம் வருத்தம். மறு புறம் தவறாக எனது இரத்தம் AB+VE என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கின்றேன். ஐந்து வருஷமாக எனது இரத்தம் AB+VE என்றல்லவா ஐடென்டி கார்டை மாட்டிக் கொண்டு அலைந்திருக்கிறேன்.

"ஸிஸ்டர். O+VEவோ AB+VEவோ உள்ளவர்களை நிறை கொடையாளர்கள்னு (Universal Donors)சொல்றாங்களே. அப்புறம் எதுக்கு இந்த க்ரூப் வேணும்; அந்த க்ரூப் வேணும்னு கேக்கறீங்க?"

"ஸார். அதெல்லாம் எனக்குத் தெரியாது. டாக்டரிடம் கேளுங்க" என்றாள்.

சரிதான். கேட்க வேண்டிய இடத்தில் அல்லவா கேட்க வேண்டும்.

தவறாக ப்ள்ட் க்ரூப்பை சொன்ன அந்த அரும்பாக்கம் ஆஸ்பிடல் மீதும், அதை சோதனை செய்யாமல் ஐடென்டிட்டி கார்ட் கொடுத்த பெர்ஸனல் டிபார்ட்மென்ட் மீதும் கோபம் வந்தது. போய்க் கத்தி விடலாமென்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ப்ரொமோஷன் எதிர்பார்க்கும் இந்த நேரத்தில் எதற்கு வம்பு என்று அடக்கியே வாசிக்க முடிவு செய்தேன். அடுத்த விடுமுறையின்போது மீண்டும் இரத்தத்தைப் பரிசோதித்து புதிய ஐடியும் பெற்றேன்.

"ஸார். வணக்கம். வாழ்த்துக்கள். A-VEவாமே. இனிமேல் தான் உங்களுக்கு நிறைய டிமாண்ட்." டிராகுலா தேவராஜ் போன் செய்து வாழ்த்தினான். இருபத்து நாலு மணி நேரமும், இரத்த தானம் பற்றி சிந்தித்து, நாற்பத்தெட்டாவாது முறையாக இரத்த தானம் கொடுத்த ஜீவனுக்கு டிராகுலா என்று பட்டப் பெயர். நம்ம மக்களைத் திருத்தவே முடியாது.

இரண்டே மாதத்தில் மீண்டும் இரத்த தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது தமிழ்நாடு ஆஸ்பிடலில். போய் இரத்தம் கொடுத்து விட்டு அரை மணியில் வந்து விடலாமென்றால், அது நடப்பதாகத் தெரியவில்லை. அடையாறிலிருந்து அவர்களது பஸ்ஸில் கிளம்பி, சோழிங்கனல்லூர் சென்று திரும்ப நான்கு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. இரத்தம் அவ்வளவு முக்கியமென்றால், ஆம்புலன்ஸ் வேனை, வீட்டிற்கே அனுப்பிச் செய்து இரத்தம்
எடுத்துக் கொள்ளச் சொல்லலாமே என்று அடையார் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆசிரியர் கடிதம் எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இரத்தம் பெற்றுக் கொண்ட அகர்வாலின் மகனிடமிருந்து நன்றிக் கடிதம் வந்தது மலேஷியாவிலிருந்து. சில நாட்கள் கழ்¢த்துதான் என்னுடைய இரத்த்ம் சிவப்பு அணுக்கள். வெள்ளை அணுக்கள், ப்ளாஸ்மா என்று பிரிக்கப்பட்டு மூன்று நான்கு பேர் பயனடைந்தார்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன். மற்றபடி வேறு
விசேஷமில்லை.

கிடைப்பதற்கரிய க்ரூப் என்பதால், (AB-VE தான் எல்லாவற்றையும் விட மிக அரியதென்றாலும் எல்லா -VE ப்ளட் க்ரூப்பும் அரிதுதான்.) ஒவ்வொரு நாற்பது நாளைக்கும் ஒரு முறையும் இரத்த தானம் செய்வது வாடிக்கையாயிற்று. ஆனால் ஒரு நாள் என்னுடைய மகனுக்கே நான் இரத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எண்ணியதில்லை.

சாதாரணக் காய்ச்சல் போலத்தான் இருந்தது சின்னவனுக்கு. ஆனால் இரண்டாம் நாள் 101, 102 என்று எறிக் கொண்டேயிருந்தது. இந்திரா நகரிலுள்ள நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தோம். மூன்றாம் நாள் ஹீமோக்ளோபின் சதவிகிதம் கிடுகிடுவென குறைய ஆரம்பித்து விட்டது என்றும், உடனடியாக ரத்தம் கொடுக்க வேண்டும் என்று தலைமை டாக்டர் கூறினார். அப்போதுதான்,
அவன் இரத்தம் என்ன க்ரூப் என்று பரிசோதிக்கப்பட்டது. அது A2-VE என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. நெருங்கிய உறவினர் கொடுப்பதே நல்லது என்று கூறினார்.

"என்னுடையது A1-VEதான். நான் கொடுக்கலாமா?"

"தாராளமா. ஆனா, அதுக்கு முன்னாடி மேட்சிங் பார்க்கச் சொல்லறேன்."

பொருத்தம் பார்க்கப்பட்டு, என்னுடைய இரத்தம் கொடுக்கலாமென்று முடிவு செய்யப்பட்டது.

"நுங்கம்பாக்கத்தில் இருக்கு ப்ளட் பாங்க். அங்கே போய் எடுத்து ப்ளட் எடுத்துட்டு செக் பண்ணிக் கொண்டு வந்து விடுங்க"

அடையாறிலிருந்து கிளம்பி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இரத்த வங்கிக்குச் சென்றேன். அரை மணியில் என்னுடைய இரத்தத்தை எடுத்து அதற்குண்டான பிரத்யேகமான பையில் போட்டுக் கொடுத்தார்கள். என் மகனுக்கு, என் இரத்தத்தை நான் கொடுக்க, ஐனூறு ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. டெஸ்டிங் சார்ஜாம்.

யமஹா பைக்கில், என்னுடைய இரத்தப் பையை எடுத்து கொண்டு நர்ஸிங் ஹோம் நோக்கி விரைந்தேன். வரும் வழியில் கொட்டும் மழை வேறு. என்னுடைய வருகையை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். உடனடியாக இரத்தம் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

"இப்ப கொடுக்க ஆரம்பிச்சுட்டோமே. இனிமேல் கவலையில்லையே டாக்டர்?"

"பார்க்கலாம். நான் மத்தியானம் ரவுண்ட்ஸ் வருவேன். அப்பப் பார்க்கிறேன்."

குழந்தை எப்படி இருக்கிறான் என்று பார்க்கப் போன மனைவிக்கு அதிர்ச்சி.

"ஐயையோ. இங்கே வாங்களேன். இவன் மூஞ்சியிலே பாருங்களேன். சிவப்பு, சிவப்பா. முதுகுலியும் இருக்கு. ஸிஸ்டர். இதப் பாருங்க. ஏன் இப்படி?" திட்டு திட்டாக உடம்பு முழுவதும் சிவப்பு பேட்ச்.

"கொசுக்கடிதான் மேடம். வேற ஒண்ணும் இருக்காது."

அதற்குள் தலைமை டாக்டர் என்னவோ பிரச்சினை என்று ஓடி வந்து பார்த்தார்.

"உடனே, அந்த இரத்தம் கொடுக்கிறதை நிறுத்துங்கம்மா. இரத்தம் மிஸ்மேட்ச் ஆகி ஒத்துக்கலை."

"எப்படி டாக்டர்? மேட்சிங்தானே பார்த்தோமே."

"சொல்ல முடியாது. சில சமயம் இப்படித்தான் ஆகும்."

இப்படியாக இந்த முறை, எனது மகனுக்கு இரத்தம் தேவைப்பட்டும் கொடுக்க முடியாமற் போனது.

புது வீட்டிற்கு குடி வந்த அன்று, எல்லா வேலைகளையும் முடித்து, டிவிக்கும் இணைப்பு கொடுத்துவிட்டு, படுக்கைக்குப் போக எண்ணிய போது டெலிபோன் ஒலித்தது.

"ஸார். எம்பேர் ராம்தாஸ். எப்படியோ உங்களை போனிலே பிடிச்சுட்டேன் ஸார். அக்கா பொண்ணு, இங்க மலர்ல அட்மிட் ஆகியிருக்கா ஸார். கார்த்தால ஆபரேஷன். A1-VE ப்ளட் ஸார். யாருமே கிடைக்கலை. கடைசியா உங்க நம்பரை புடிச்சேன்."

"இப்போ என்னங்க பண்ண முடியும்? கார்த்தாலே 6 மணிக்கு வரேன்."

"இல்லை ஸார். இப்பவே வரணும். ப்ளட் தயாரா இருக்குன்னு சொன்னாத்தான், கார்த்தாலே பெரிய டாக்டர் வருவாராம்"

"சரி. இன்னும் பத்து நிமிஷத்திலே அங்கே வரேன்"

"என்னங்க. மணி பதினொண்ணாகுது. இது ஜெனியூன் கால்தானா? பாத்துக்குங்க."

"எல்லாம் கரெக்டாத்தான் இருக்கும். வேணுன்னா கார்லேயே போறேன்"

மலரில் நான் வந்து இறங்கும் போது மணி பதிணொண்ணரை.

"ஸார். நாந்தான் ராம்தாஸ். போன் பண்ணிப் பேசினது நாந்தாங்க. பாருங்க. அக்கா பொண்ணு. பத்து வயசுதாங்க. தாலசீமியா இருக்குது. இப்ப அப்பெண்டிஸ்ன்னு வேற சொல்றாங்க."

"கலை, ஸாருக்கு வணக்கம் சொல்லு. ஸார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டாக்டர் வந்துகிட்டே இருக்காராம்."

சுமார் 45 னிமிடங்கள் கழித்தே டாக்டர் வந்தார். நாள் பூரா நாய் மாதிரி அல்லாடிவிட்டு, நடு இரவு 12.30 மணிக்கு மலரின் நான்காவது மாடியில் படுத்துக் கொண்டு இரத்த தானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

எதற்காக இப்படி செய்து கொண்டிருக்கின்றேன், தேவையா, என்றெல்லாம் எண்ணியபடியே
உடைகளை சரி செய்து கொண்டு கிளம்பத் தயாரானேன்.

திடீரெனெ ராம்தாஸ் வந்து காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தான். எப்படியும் என்னை விட சுமார் பத்து வயசாவது பெரியவனாக இருப்பான் (ர்). எனக்கு என்னாவோ போலாகி விட்டது. அவனை(ரை) எழுப்பி சமாதானப்படுத்துவதற்குள் போதும் பொதும் என்றாகி விட்டது.

"இல்லை ஸார். நீங்க தெய்வம்....." என்று அவன்(ர்)பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்(ர்).

தானத்தில் சிறந்தது இரத்த தானம் என்பதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன்.

கடைசியாக ஒரு எபிசோட். பையனது பள்ளியில் இரத்த தான முகாமாம்.

"அப்பா, அப்பா, வெள்ளிக் கிழமை எங்க ஸ்கூல்லில் ப்ளட் டொனேஷன் கேம்ப். நீங்க வந்து ப்ள்ட் கொடுங்கோப்பா. யாருமே அவங்க அப்பாவைக் கூட்டிண்டு வர மாட்டாங்க. நான் என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டேயும் சொல்லி விட்டேன், எங்க அப்பா கண்டிப்பா வருவாங்கன்னு."

"கண்டிப்பா வரேண்டா. இண்ணொண்ணு தெரியுமோ. இது வரைக்கும் 24 தடவை கொடுத்து விட்டேன். உங்க ஸ்கூல்ல கொடுத்தா, குவார்ட்டர் செஞ்சுரி."

வெள்ளியன்று பையனுடன் பள்ளி சென்றேன். அவனுக்கு ஒரே பெருமை. எனக்கும் சற்றே.

முதலில் மெடிகல் செக்கப் செய்ய அழைக்கப்பட்டேன்.

"ஸார். 24 முறை இரத்தம் கொடுத்திருக்கிறீங்க போலிருக்கு. கடைசியாக எப்போ கொடுத்தீங்க?" என்றார், அந்த ஹவுஸ் சர்ஜன் போன்றிருந்த இளம் டாக்டர். ஐடி கார்ட், டாக்டர்.பிரேம் என்றது.

"ப்ளட் கொடுத்து, ஒரு வருஷத்திற்க் மேலா ஆச்சு டாக்டர். ஆபீஸ் வேலை டைட்டாக இருக்கு"

"பை தி வே, நீங்க எதாவது மெடிசின்ஸ் சாப்ப்பிடுற்றீங்களா?"

"ஆமாம் டாக்டர். ஒரு சின்ன ப்ராப்ளம். அதுக்காக ஆறு மாசமா, சின்ட்ரோல் சாப்பிடறேன்."

"அதான பார்த்தேன். எனக்கு ஸ்லைட்டா டவுட் இருந்தது. நீங்க இனிமே இரத்தம் கொடுக்க வேண்டாம்."

"னிஜமாகவா?"

"னெறைய கொடுத்துவிட்டீங்களே. இனிமே உங்க ப்ரெண்ட்ஸைக் கொடுக்கச் சொல்லுங்க"

"ஓகே. நோ ப்ராப்ளெம். தாங்ஸ். வருகிறேன்."

பயங்கர ஏமாற்றத்துடன் காரிடாரில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று எதோ தோன்றியது. ப்ள்ட் எடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு ஒடினேன்.

"ஸிஸ்டர். இப் யு டோண்ட் மைண்ட், ஒரே ஒரு ப்ளாஸ்டர் கிடைக்குமா?"

ஸிஸ்டர் கொடுத்த அந்த சிறிய வட்ட ப்ளாஸ்டரை, பையன் பார்ப்பதற்குள் அவசரமாக புஜத்தில் ஒட்டிக் கொண்டேன்.

3 comments:

Tom said...

Books to fall for
NEW YORK - As autumn approaches, the book world is still searching for this year's great American novel.
My wife alternative bladder cancer gall treatment and I saw a alternative bladder cancer gall treatment article in the paper this morning and wanted to search for more alternative bladder cancer gall treatment info. Thats how we found your alternative bladder cancer gall treatment blog. Nice blog! Our alternative bladder cancer gall treatment blog is here alternative bladder cancer gall treatment It isnt anything special but you may still find something of interest.

Anonymous said...

I read u r experencies.Really they r nice. Continue u r writings and experencies. They r very interesting to viewerS.

இலவசக்கொத்தனார் said...

ஏங்க ரத்தம் குடுக்க வேண்டாம் என சொன்னார்கள்? அது பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.