Showing posts with label Short story. Show all posts
Showing posts with label Short story. Show all posts

Saturday, December 24, 2016

விமர்சகர்



வெகு நாட்களுக்கப்புறம், கல்யாணராமனுக்கு இன்றைக்குத்தான் கொஞ்சம் டென்ஷன்  இல்லாமல் இருந்தது. இந்த மாதத்தில் மட்டும் நான்கு கச்சேரிகள் செய்து விட்டார். குசும்பனின் விமர்சனங்கள்தான் அவரை இப்போதெல்லாம் டென்ஷன் ஆக்குகின்றன. குசும்பன் போன்ற விமர்சகர்கள் இல்லாத, சாதாரண ரசிகர்கள் இல்லாத பள்ளி மாணவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் கச்சேரி, இன்று அனந்த கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில்.

இந்தக் குசும்பன் பெயருக்கேத்த மாதிரி நிறையாக குசும்ம்பு பிடித்தவர்தான். அவருடைய விமர்சனங்கள் ரொம்பவே காரசாரமாகவும், விவரமாகவும், நக்கலாகவும் இருக்கும். சும்மா மற்றவர்கள் மாதிரி கேண்டீன் எப்படி இருந்தது, பாடகர் என்ன புடவை கட்டிக்க கொண்டு வந்தார், என்றெல்லாம் எழுதி பக்கங்களை நிரப்ப மாட்டார். டெக்கனிகளாகப் பின்னிப் பெடலெடுத்து விடுவார். இந்த மாதிரித்தான் கல்யாணராமனின் கடந்த நான்கு கச்சேரிக்களையும் பின்னிக் கிழித்து விட்டார்.

இந்தக் குசும்பன் யாரென்று தெரிந்து வைத்துக் கொண்டாலாவது கொஞ்சம் மஸ்கா அடித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் புனைபெயரில் எழுதும் குசும்பன் யாரென்று எந்தக் கச்சேரியிலும்  பார்த்துக் கண்டு பிடிக்க முடியவில்லை.

போன முறை, ஆலாபனைகளைப் பாராட்டி எழுதியிருந்தாலும், ஸ்வர பிரயோகங்களில் தவறு செய்து, ஸ்ரீ ராகத்தினை மத்யமாவதியாக மாற்றி விட்டதை சுட்டிக் காட்டியியிருந்தார். அப்புறம் உச்சரிப்புப் பிழையெல்லாம் வேறு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். விமர்சனம் சரியாக இருந்தாலும், அதனை ஜீரணம் செய்யும் பக்குவம் இல்லாத கல்யாணராமனுக்கு இன்று பள்ளி மாணவர்களிடையே கச்சேரி செய்யும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி.

வெகு நாட்கள் கழித்து கல்யாணராமன், நிம்மதியாகக் கல்யாணியில் ஆலாபனையை ஆரம்பிக்க, நோட்டுப் புத்தகத்தை எடுத்து விமர்சனம்  எழுத ஆரம்பித்தான், பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் குசும்பன் என்ற குமரேஷ்.

- சிமுலேஷன்
  
 

Sunday, July 24, 2016

அமானுஷ்யன்



அது ஒரு சனிக்கிழமை மாலை! மனைவியையும், அம்மாவையும் கபாலி கோயில் வாசலில் இறக்கிவிட்டு விட்டு வாகனத்தை நிறுத்த, வாகான இடம் தேடினேன். அதிஷ்டவசமாக, அந்த பிச்சுப்பிள்ளை தெரு எனப்படும் குட்டிச் சந்தில், காரை நிறுத்த இடம் கிடைத்தது. காரை விட்டு இறங்கலாமென நினைக்கையிலேதான் அந்த ஆளைப் பார்த்தேன். பார்த்தேன் என்றால் நேருக்கு நேர் அல்ல…..காரின் ரியர்-வியூ மிர்ரர் வழியாகத்தான் பார்த்தேன். நல்ல ஆறடி உயரம்…. தடியான தேகம்…. இன்சர்ட் செய்யப்பட்ட சட்டை. ஐம்பது வயது இருக்கலாம்.
என்னுடைய காரின் பின்பகுதியில் சந்தேகமான முறையில் சாய்ந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். டாஸ்மாக் கேஸாக இருக்குமோவென நினைத்தேன். எதுவோ, என்னவோ, அவர் அப்படி சாய்ந்து நின்று கொண்டிருந்தது, சற்று சந்தேகமாகவே இருந்தது…. சரி…, இன்னிக்கு ஏதோ பிரச்னையில் மாட்டப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டேன். மொபைல் போனை எடுத்து, ரியர்வியூ மிர்ரர் வழியாகப் பார்த்துக் கொண்டேவாராத ஒரு காலை எடுத்துக் பேசுவது போல பாவலா செய்தேன்.
சில நிமிடங்களில் அந்த ஆசாமி, என் காரை விட்டு அந்தப் பக்கமாகச் சென்று நின்றார். கொஞ்சம் நிம்மதி கிடைத்தது எனக்கு. சரி காரை விட்டு இறங்கலாம் என்று எத்தனிக்கையில், அந்த ஆள் மீண்டும் எனது காரின் கதவருகே வந்தார்....இல்லை. இல்லை…. வந்து கத்த ஆரம்பித்தார்.
"சார்.. ஒங்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கா? நீங்க உண்மையிலேயே மனுஷன்தானா?”
ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
"என்ன சார்? என்ன ப்ராபளம்? எதுக்கு கத்தறீங்க?"
"சார், ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க!.... நான் ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி மயக்கம் போடப் போனேன்…. கீழே விழாம இருக்க, ஒங்க கார் மேலே சாஞ்சு நின்னேன்….ஆனா, நீங்களோ கொஞ்சம் கூடக்  கண்டுக்கல.  உங்களை மாதிரி யாரையும் பாத்ததில்லே
"சார். நானே ஒரு போன் கால்ல பிசியா இருந்தேன். உங்களை எங்க நான் பாத்தேன்?"
அவர் ஒரு நிமிஷம் முறைத்துப் பார்த்தார்.
"இது நல்லதுக்கில்ல…. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்"
கிட்டத்தட்ட சாபமாகவே சொன்னார்.
சரியான கேஸு போலிருக்கு….இந்த ஆளுடன் வாக்குவாதம் பண்ணுவது எந்த வித பிரயோசனமும் இல்லை. சரிதான் கோயிலுக்குப் போகலாமென எண்ணினேன்.
அப்போதுதான் பார்த்தேன். அந்த ஆளுக்கு வேர்வை ஊத்திக் கொண்டிருப்பதை. கொஞ்சம் படபடப்பாக வேறு மூசசு வாங்கிக் கொண்டிருந்தார்…. அவர் ஒரு சர்க்கரை நோயாளியாகவோ, அல்லது இருதய நோயாளியாகவோ இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே திரும்பப் போனேன் அவரிடம்.
"சார்…. ஒங்களுக்கு இப்படி வேர்த்து ஊத்துதுஎன்னமோ கஷ்டப்படறீங்க போலிருக்கு….. தப்பா எடுத்துக்கலேன்னா, ஒங்களை வீட்லே கொண்டு போய் விட்டுர்றேன்…. ஒங்க பேர், அட்ரஸ் கொடுக்க முடியுமா?"
"பரவாயில்ல. என் பேர் பி.க்யூ.எஸ்.எஸ். ஆர். ராவ்!...என்னைக் கூட்டிட்டுப் போக வீட்லேந்து ஆள் வர்றாங்ககவலைப்படாதீங்க"
ஆஹா!....பி.க்யூ.எஸ்.எஸ். ஆர். ராவ்!.... இந்தப் பேரைச் சொல்லிச் சொல்லியே இவருக்கு மயக்கம் வந்திருக்குமோ!
"சரி. போகட்டும்…..நான் ஒங்களுக்கு ஒரு ட்ரிங்க் வாங்கி தர்றேன். சரியா?"  
"தேவையே இல்ல….நீங்க எதுக்க்காக எனக்கு ட்ரிங்க் வாங்கித் தரணும்?"
"சார். நான் எதுவும் பெருசாப் பண்ணறேன்னு சொல்லல. நீங்க மயக்கமா இருக்கீங்க.   ஒரு ட்ரிங்க் குடிச்சாத் தேவலை."
"நான் பாத்துக்கறேன்…. நீங்க போங்க வேலையாய் பாத்துகிட்டு."
"ப்ளீஸ். சொன்னா கேளுங்க.. "
பேசிப் பேசி கிட்டத்தட்ட எனக்கே மயக்கம் வரும் போல இருந்தது. கடைசியாக என் கையில் ஒரு இருபது ரூபாய் நோட்டைத் திணித்தார்.
ஒடம்பு நல்லாட்டாலும், ஜம்பத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லைன்னு நினைத்துக் கொண்டே பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து தெற்குமாட வீதிக்கு ஓடினேன். ஓடிப் போய் ஒரு டெட்ராபேக் ட்ரிங்க் வாங்கினேன். ஐந்து நிமிடத்திற்குள் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தேன்!...ஆனால் அங்கே என் அருமை நண்பர் மாயம்!
எங்கேடா என் நண்பர், என்று பார்த்தால், சந்தின் ஒரு ஓரமாக, ஒரு சிறிய வீட்டின் முன்னால், ஒரு ஈஸிசேரில் கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வீட்டுக்காரர் ஈஸிசேர் கொடுத்து உதவியிருக்கிறார் போல. கண்கள் மூடியிருந்தாலும், அவரது வாய் என்னவோ மூணு,முணுத்துக் கொண்டிருந்தது.
மனுஷர் கண்ணைத் திறப்பதாகத் தெரியவில்லை. கையால் தட்டி எழுப்பினேன். விழித்துப் பார்த்து, "என்ன" என்றார்.
"சார். ட்ரிங்க்.... ஒங்களுக்கு..."
"என்ன ட்ரிங்க்? எனக்கு எதுக்கு?
"சார்… ஞாபகம் இல்லையா? இப்பத்தான் 10 நிமிஷம் முன்னாடி பணம் கொடுத்தீங்க"
அடுத்தது அவர் சொன்னதுதான் தூக்கி வாரிப்போட்டது!
"சார். நான் இப்ப... இன்னும் 30 நிமிஷத்திலே சாகப் போறேன். இப்ப 'விஷ்ணு சஹஸ்ரநாமம்' சொல்லிட்டிருக்கேன்…. ப்ளீஸ். என்னை விடுங்க."
என்னது. முப்பது நிமிஷத்திலே சாகப் போறாரா? இந்த ஆள் என்ன சொல்றார்?
சூரிய அஸ்தமனமாகிக் கொண்டிருந்த அந்த நேரம்விளக்குகள் எரியாத இருள் குவிந்திருந்த அந்த இடம், எல்லாமே எனக்கு ரொம்பக் குழப்பமாக இருந்தது. இந்த மாதிரி, முப்பது நிமிஷத்திலே சாகப் போற ஒரு மனுஷனப் பாக்கறது இதுதான் முதல் முறை. அவருடைய மூளைக்கு ரத்தம் சரியாகப் போகவில்லை போலிருக்கு. அதனால்தானோ இப்படியெல்லாம் ஒளறிக்கிட்டே இருக்காரே என்னமோ? நான் குழப்பத்தில் இருந்தாலும், என்னுடைய மூளை வேலை செய்தது.
"சார் இப்ப நீங்க இந்த இந்த ட்ரிங்கைக் குடிங்க. இதை நான் என் காசுல வாங்கலை. நீங்கதான் பணம் கொடுத்தீங்க!"
தயக்கத்துடன் வாங்கினார் டிரிங்கை. மட,மடவெனக் குடித்தார்.
"சரி…, நீங்க கொடுத்ததை குடிச்ச்சுட்டேன். இப்ப என்னை நிம்மதியா சாக விடுங்க…. நாளைக்கு காலைல என்னோட   போட்டொ பேப்பர்ல வரும்…. பாத்துக்குங்க!"
"சரி…. இப்ப நான் ஒங்கள வீட்லே மட்டும் கொண்டு போய் விட்டுடறேன்."
"சார், என்ன நிம்மதியா சாக விட மாட்டீங்களா? இப்ப ஒங்களுக்கு என்னதான் வேணும்?... என்ன ஏன் இப்படித் தொந்தரவு பண்றீங்க?"
இந்த முறை அவர் உரக்கவே கத்திவிட்டார்….தெருவிலுள்ள அனைவரது பார்வையும் என் மீது.
சரி. இப்ப இடத்தக் காலி பண்ணிவிட்டு கபாலீஸ்வரரைப் பார்க்கப் போலாமென முடிவு செய்தேன். கோயிலுக்குச் சென்று என் நண்பருக்காகவும் பிரார்த்தனை செய்தேன். அன்று இரவு நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டேன்! எப்படா பேப்பர் வருமென்று காத்துக் கொண்டிருந்தேன். பேப்பர் வந்தவுடன் முதலில் ஆபிச்சுரி காலத்தை மேய்ந்தேன். ஒவ்வொரு பேராகப்பார்த்துக் கொண்டே வந்தேன். ரங்கா ராவ்’, ‘ராமா ராவ் என இரண்டு ராவ் பெயர்கள் இருந்ததே தவிர, என் நண்பர் பெயர் இல்லை.
சற்று நிம்மதி அடைந்தவனாக, முதல் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்!... இரண்டாம் பக்கத்தைப் புரட்டினவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. உண்மையில் ஆச்சர்யம் அல்ல!...அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு பெரிய புகைப்படம்! ஆம்! நீங்கள் நினைத்தது சரிதான். அது பி.க்யூ.எஸ்.எஸ்.ஆர்.ராவேதான். அதுவும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்  பக்கத்தில். புகைப்படத்துக்குக் கீழே எழுதியிருந்தது.
"நேற்று மாலை, புது டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்சசி ஒன்றில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இந்தியாவின் தலைசிறந்த பாரா-நார்மல் சயிண்டிஸ்ட் பி.க்யூ.எஸ்.எஸ்.ஆர்.ராவ் அவர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார்.”
அப்ப நேற்று நான் பார்த்தது!


Thursday, July 23, 2015

அவதானிப்பு



"சார்! இது ஒரு புதுமையான ஓவியப் போட்டி. ஒரு போட்டோவை பவர்பாய்ண்ட்லெ போட்டுக்க் காம்பிக்கறோம். அஞ்சு நிமிஷம் மட்டும் அத நல்லாப் பாத்துக்கணும். அதுக்கப்புறம் ஜஸ்ட் ரெண்டு மணி நேரம் மட்டும் தருவோம். அப்புறம் யார் தத்ரூபமாக வரையறாங்கன்னு பாத்துப் பரிசு தர்றோம்"

"சரி. நான் இப்ப என்ன பண்ணனும்?"

"ஒரு பத்து நிமிசம் ரெஸ்ட் எடுங்க சார்? இன்னம் பத்து நிமிஷத்லே வரஞ்சு முடிச்சுருவாங்க."

நகுலன் முதல் போட்டியாளரின் ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தார். நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏதோ குறை தென்பட்டது. ஆமாம் தாடிதான் வித்தியாசம். கிட்டத்தட்ட டி.ஆர் தாடி மாதிரி வரஞ்சுருக்கான் மனுஷன். தாடிய ஒழுங்கா வரஞ்சுருந்தா கொஞ்சமாவது ரியலிஸ்டிக்கா இருந்திருக்கும்.

அடுத்த ஓவியத்தைப் பார்க்க எடுத்துக் கொண்ட நேரம் மொத்தம் மூணு நிமிஷங்கள் மட்டுமே.

"சார்! சார்! அந்த மூணாவது டேபிள்லே போய்ப் பாருங்க சார்! எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார்?"

மூணாவது டேபிள் ஓவியன் அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தான். ஆடிப் போய் விட்டார் நகுலன்.

"மணி, அந்த ப்ரொஜெக்டர ஆன் பண்ணு. ஒரிஜினல் படம் எப்படி இருக்குன்னு பாக்கறேன்."

ப்ரொஜெக்டரை ஆன் செய்த அடுத்த நொடி, அந்தக் கல்லூரி வளாகத்திலிருந்த கிட்டத்தட்ட ஐநூறு பெரும் திரையிலிருந்த புகைப்படத்தையும், ஓவியத்தையும் மாறி, மாறிப் பார்த்து வியந்தனர்.

"மவனே! இது எப்படி? ஒரு வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியலியே!"

"அதுவும் அத்தனை டீடெயில்ஸும் அஞ்சு நிமிஷத்லே அப்சர்வ் பண்ணியிருக்கானே."

நகுலன் ஒரிஜினலுக்கும், நகலுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமா என்று உத்து உத்துப் பார்த்தார். தோல்விதான்!

"தம்பி! ரொம்ப நல்லா வரஞ்சுருக்கீங்க. ஒங்க பேரு....?"


"எம்.எல்.என்.எஸ். ரவி சார்"!

Friday, May 29, 2015

தேவதை வந்தாள்


"சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..."
கேப்டன், ராதிகாவைத் தள்ளி விட்டு மாவாட்டிக் கொண்டிருந்த காட்சியைக் டி.வி.யில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராமசர்மா.

"என்னடி இது? அப்பா போய் சினிமாப் பாட்டெல்லாம் டி.விலே பாத்திண்டிருக்கார்?"

"சித்தப்பா, நான் அப்புறமா சொல்றேன். நீங்க மொதல்லே, உங்க கையாலே அவருக்கு இந்தத் தயிர் சாதத்தை ஊட்டி விடுங்கோ"

கஞ்சனூர்   ராமசர்மான்னா எப்படிக் கூட்டம் அலை மோதும். கும்மோணத்லேந்தும், தஞ்சார்லேந்தும் வண்டி வெச்சுக் கூட்டிண்டு போவாளே! ஆனா, இப்ப மனுஷன் இப்படிப் படுத்த படுக்கையாக் கெடக்கறாரே!

"சரஸா, டாக்டர் என்ன சொல்றாரு?"

"சித்தப்பா, அப்பாக்கு அல்ஷைமெர்ஸ் டிஸீஸ் வந்துடுத்து. என்ன பண்றார்னு அவருக்கே தெரியல. பட்டப் பகல்லே கோயிலுக்குப் கெளம்பிப் போயிடறாரு, நடை சாத்தியிருக்கும்னு கூடத் தெரியாம. கிட்னி எல்லாம் கூட வீக்காயிடுத்தாம். அவருக்குத் தேவையானதைப் பண்ணிக் கொடுத்திடுங்கோன்னு டாக்டர் சொல்லிட்டார். சரின்னு அவருக்குப் பிடிச்ச காசி ஹல்வா, கடுகுப் பச்சடின்னு ஒவ்வொண்ணாப் பண்ணிக் கொடுத்துட்டேன். ஆகஸ்ட் வந்தா தொண்ணூத்தி நாலாகப் போறது. நெறவா வாழ்ந்துட்டார். பிரச்னை இல்லாம எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச் சரி."

"அப்புறம் அன்னிக்குப் போன்லே என்னமோ சொன்னியே, ஹரிஹரன் வரணும்னுட்டு. நாளைக்கிக் கார்த்தால வந்துடுவன். இந்நேரம் மெட்ராஸ்லே வந்து எறங்கியிருப்பன்"

"ஆமாம் சித்தப்பா, “தேவதை எப்ப வருவா", தேவதை எப்ப வருவா?”ன்னு கேக்காத நாளே இல்ல"

ஒரே ஒரு தெருவையே கிராமம்னு சொல்லிக் கொள்ளும் அந்தக் கோட்டூர் கிராமத்தில் ஸ்கார்ப்பியோ வந்து நின்ற போது, அந்த தெருவிலுள்ள இருபது குடும்பங்களும் வந்து எட்டிப் பார்த்தன.

"பாத்து பாத்து அண்ணா! மேலே உத்தரம் இடிக்கப் போறது"

சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்து நிமிர்ந்த ஹரிஹரன் முன்னால் பாய் போடப்பட்டிருந்தது.

"அண்ணா ஸ்ருதி பாக்ஸ்?"

"அதெல்லாம் வேணாம்மா. மொபைல்லேயே ஆப் இருக்கு. அது போதும்."

" ஸ..ரி...க.. . பா.... நீ..ஸா"

ஆரோகணத்தில் கோடி காட்டிவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிஷாதத்தில் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தான் ஹரிஹரன்.

ராமசர்மா கண்ணைத் திறந்து வாஞ்சையுடன் பார்த்தார்.

"ம்..ம்..மேலே பாடுன்னுசொல்வது போல இருந்தது.

"ஸரஸ்வதி...ஸ்ரொதஸ்வனி..."

ஹரிஹரன் பல்லவி எடுக்க ராம சர்மா கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"சரஸா, உனக்குக் கூட ஸ்ரொதஸ்வனின்னுதானேப் பேரு. அப்றம்  எப்படி நீ சரஸாவானே?"

"சித்தப்பா அப்பாக்கு இந்த ராகம்னா உசிரு. கீரவாணியோட ஜன்யம். எனக்கும் அப்பா இந்தப் பேரத்தான் வெச்சார். ஆனா அம்மாதான் கூப்பிட முடியலேன்னு ஸரஸ்வதின்னு மாத்திட்டா. கடேசிலே இப்ப சரஸாவாயிட்டேன். அப்புறம் இந்த "சிந்திய வெண்மணி" ஏன் பாக்கறார்னு கேட்டேளே! அதுவும் இதே ராகம்தான். அப்பா போட்ட பாட்டைப் பாட யாரும்  இல்லைன்னுதான் இந்தப் பாட்டு டி.விலே வந்தா ரொம்ப ஆசையாக் கேப்பார். "           

ஹரிஹரன் அனுபல்லவியிலிருந்து சரணத்துக்கு வருவதற்குள் சித்தப்பவாவிடம் இவ்வளவும் சொல்ல முடிந்தது.  ஆனால் ஹரிஹரனும், ராமசர்மாவுமோ வேறு ஓர் உலகத்திலிருந்தார்கள்.


ஹரிஹரன் சரணம் முடித்து, மறுபடியும், ‘ஸரஸ்வதிஸ்ரொதஸ்வனின்னு பல்லவி எடுக்கும்போது ராமசர்மா அந்த ராக தேவதையுடன் சங்கமமாகியிருந்தார்.

(சிமுலேஷன்)

Tuesday, November 01, 2011

வாடிக்கையாளரே ராஜா

“என்னங்க, வண்டியை அந்தக் கடையாண்டை நிறுத்துச் சொன்னா, இங்கே வந்து நிறுத்தறீங்க”

ஆள்வார்ப்பேட்டையிலிருந்த சற்றே சிறிய கண்ணாடிக்கடையினை விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்து, ஒரு பெரிய கடையின் முன்னால் பைக்கை நிறுத்தினான் ராஜேஷ்.

“வா. ரம்யா. இந்தக் கடைக்கே போகலாம்”

“எதுக்குங்க. அந்தக் கடையிலும் ஏற்கெனவே ஒரு முறை கண்ணாடி வாங்கியிருகோம். இந்தக் கடையிலேயும் வாங்கியிருகோம். ஆனா, அந்தக் கடையிலே இருநூறு ரூபாய்  கொறச்சுக் கொடுத்தாங்க. அப்புறம் காபி, கூல் ட்ரிங்ஸ் எல்லாம் கூடக் கொடுத்தாங்க. அதை விட்டுட்டு இங்க ஏன் வந்தீங்க?”

“ரம்யா. போனமுறை அந்தக் கடைக்குப் போன போது, நடந்த சம்பவம் மறந்துடுச்சா?”

“ஆமாமா? யாரோ ஒரு எலக்ட்ரீஷியனுக்கு ஷாக் அடிச்சுதுன்னு நினைக்கிறேன்!”

“கரெக்ட். நாம கண்ணாடி வாங்கிட்டிருந்தப்போ எலக்ட்ரீஷியன் ஒருத்தன் சீலிங்லே ட்ரில்லிங் மெஷின் வெச்சுட்டு வேலை செஞ்சுட்டிருந்தான். அவனுக்கு திடீர்னு எலக்ட்ரிக் ஷாக் அடிச்சுடிச்சு. கிட்டத்தட்ட மயக்கம் போடற நெலமைக்கு வேற போயிட்டான். உடனே கடை ஓனர், கடையிலே பரபரப்பு அதிகமாகி, வியாபாரம் பாதிச்சுருமோன்னு எண்ணி, அவனை ‘அப்புறமா வாப்பா’ன்னு சொல்லிட்டாரு. அவனுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கவும் இல்ல. ஒரு வாய்த்தண்ணி கூட கொடுக்கவும் இல்லை. ஆனா அதே சமயத்திலே நமக்கெல்லாம் கூல் ட்ரிங்க்ஸ். காபி எல்லாம் கொடுத்து உபசாரம் பண்ணிட்டிருந்தாரு.

ஒரு பிஸினஸ் செய்பவருக்கு வாடிக்கையாளர்தான் ராஜாவாக இருக்கலாம். வாடிக்கையாளரைக் கவனிப்பது முக்கியமாகவும் இருக்கலாம். ஆனா, அதே சமயம் மனிதாபிமானம் கொஞ்சம் கூட வேண்டாமா? அதனாலதான் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத அந்தக் கடையை எனக்குப் பிடிக்கலே. விலை கம்மியாயிருந்தாலும் சரி”

ராஜேஷைப் பெருமையுடன் பார்த்தாள் ரம்யா. 

- சிமுலேஷன்

தேவையா மொபைல்

சுரேஷ், பாரதி பூங்காவில் பத்தாவது சுற்றுச் சுற்றிக் கொண்டிருந்த போதும், அந்தக் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன் மொபைலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அழுக்கான ஒரு டி-ஷர்ட். அரை நிஜார் தெரிய ஒரு லுங்கி.  ஐந்து நாட்களுக்கும் மேலே ஆகியிருக்கும் அவன் குளித்து. வறுமைக்கோட்டைத் தாண்டி வர, அவனுக்குப் பல வருடங்களாகலாம். இப்படிப்பட்ட ஒருவன் மொபல் போனில் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பேசிக் கொண்டிருப்பது சுரேஷுக்கு ஆச்சரியத்தையும் மட்டுமல்ல, எரிச்சலையும்கூடத் தந்தது.

இந்த மாதிரி அவன் பேசிக் கொண்டிருந்தால், நிச்சயம் மாசம் ஆயிரம் ருபாய்க்குக் குறைவாக  பில் வராமலிருக்காது. அவன் சம்பாதிப்பது மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐயாயிரம் ரூபாய் இருக்கலாம். அதில், ஆயிரம் ருபாய்க்கு மொபைலில் பேசினால் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அப்படி என்ன அரட்டை வேண்டிக் கிடக்கு? திருந்தாத ஜென்மங்கள்!” என்றெல்லாம் நினத்தபடி வாக்கிங்கை முடித்த சுரேஷுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அவனுடன் பேசிப் பார்த்தால் என்ன? “இப்படியெல்லாம் காசை வீணாக்காதே அப்பா”, என்று நைசாக எடுத்துரைத்தால்தான் என்னவென்று யோசித்தபடி அந்த லுங்கி வாலாவை நெருங்கினான்.
சுரேஷைப் பார்த்தவுடன் அவன் மையமாகச் சிரித்தான்.

“டெய்லி போன்ல பேசறீங்க போலிருக்கு.”

“ஆமாங்க”

“டெய்லி அரை மணிநேரத்துக்கும் மேலே பேசறீங்களே. நெறையக் காசு ஆவுமே. யார்கூட அப்படிப் பேசறீங்க?”

“என்னோட பொண்ணுகிட்டையும், பையன்கிட்டையும்தாங்க”

“என்னது? பொண்ணு, பையன்கிட்டேயா? அவங்க எங்க இருக்காங்க?”

“அவங்க பெங்களூர்லே படிக்கறாங்க சார். என் சம்சாராம் மூணு மாசம் முன்னாடி தவறிப் போச்சு. அதனால அவங்களைப் பள்ளிக் கூடத்திலேர்ந்து நிறுத்திரலாமான்னு நெனைச்சேன். ஆனா அவங்க அம்மா வேலை செஞ்ச எடத்து மொதலாளி அம்மாவோட மக, என் பசங்கள பெங்களூரு கூட்டிட்டுப் போய்ப் படிக்க வெக்கறேன்னு சொன்னாங்க. என்னாலையும் சரி, என் பசங்களாலையும் சரி. தினமும் ஒருத்தருகொருத்தர் தெனமும் பேசாம இருக்க முடியாது. அதுக்காக அவங்களே எனக்கும் எம் பசங்களுக்கும் மொபைல் போன் வாங்கிக் கொடுத்திருக்காங்க. ஸ்கூலுக்குப் போறத்துக்கு முன்னாடி தெனம் அரை மணிநேரம் என்னோட பேசுவாங்க. ஆனா, அவங்களோட மொபைல் பேசறது இன்னியோடக் கடைசி நாளுங்க.”

“ஏம்ப்பா? என்ன ஆச்சு?”

“மொதலாளியம்மா எனக்கும் பெங்களூர்லே வேலை வாங்கிக் கொடுத்துட்டாங்க. இன்னிக்கி ராத்திரியே நானும் பெங்களூரு போறேன். இனிமே என் பசங்களோடயே நானும் இருப்பேன் சார். போன்ல பேசத் தேவையில்லை”

- சிமுலேஷன்