“என்னங்க, வண்டியை அந்தக் கடையாண்டை நிறுத்துச் சொன்னா, இங்கே வந்து நிறுத்தறீங்க”
ஆள்வார்ப்பேட்டையிலிருந்த சற்றே சிறிய கண்ணாடிக்கடையினை விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்து, ஒரு பெரிய கடையின் முன்னால் பைக்கை நிறுத்தினான் ராஜேஷ்.
“வா. ரம்யா. இந்தக் கடைக்கே போகலாம்”
“எதுக்குங்க. அந்தக் கடையிலும் ஏற்கெனவே ஒரு முறை கண்ணாடி வாங்கியிருகோம். இந்தக் கடையிலேயும் வாங்கியிருகோம். ஆனா, அந்தக் கடையிலே இருநூறு ரூபாய் கொறச்சுக் கொடுத்தாங்க. அப்புறம் காபி, கூல் ட்ரிங்ஸ் எல்லாம் கூடக் கொடுத்தாங்க. அதை விட்டுட்டு இங்க ஏன் வந்தீங்க?”
“ரம்யா. போனமுறை அந்தக் கடைக்குப் போன போது, நடந்த சம்பவம் மறந்துடுச்சா?”
“ஆமாமா? யாரோ ஒரு எலக்ட்ரீஷியனுக்கு ஷாக் அடிச்சுதுன்னு நினைக்கிறேன்!”
“கரெக்ட். நாம கண்ணாடி வாங்கிட்டிருந்தப்போ எலக்ட்ரீஷியன் ஒருத்தன் சீலிங்லே ட்ரில்லிங் மெஷின் வெச்சுட்டு வேலை செஞ்சுட்டிருந்தான். அவனுக்கு திடீர்னு எலக்ட்ரிக் ஷாக் அடிச்சுடிச்சு. கிட்டத்தட்ட மயக்கம் போடற நெலமைக்கு வேற போயிட்டான். உடனே கடை ஓனர், கடையிலே பரபரப்பு அதிகமாகி, வியாபாரம் பாதிச்சுருமோன்னு எண்ணி, அவனை ‘அப்புறமா வாப்பா’ன்னு சொல்லிட்டாரு. அவனுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கவும் இல்ல. ஒரு வாய்த்தண்ணி கூட கொடுக்கவும் இல்லை. ஆனா அதே சமயத்திலே நமக்கெல்லாம் கூல் ட்ரிங்க்ஸ். காபி எல்லாம் கொடுத்து உபசாரம் பண்ணிட்டிருந்தாரு.
ஒரு பிஸினஸ் செய்பவருக்கு வாடிக்கையாளர்தான் ராஜாவாக இருக்கலாம். வாடிக்கையாளரைக் கவனிப்பது முக்கியமாகவும் இருக்கலாம். ஆனா, அதே சமயம் மனிதாபிமானம் கொஞ்சம் கூட வேண்டாமா? அதனாலதான் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத அந்தக் கடையை எனக்குப் பிடிக்கலே. விலை கம்மியாயிருந்தாலும் சரி”
ராஜேஷைப் பெருமையுடன் பார்த்தாள் ரம்யா.
- சிமுலேஷன்
1 comments:
kathai vegu arumai...story is very good.
Valli Subramanian.
Post a Comment